![]() |
|
தலைநகர் மர்மக் கொலைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தலைநகர் மர்மக் கொலைகள் (/showthread.php?tid=4090) |
தலைநகர் மர்மக் கொலைகள் - hari - 06-13-2005 <b>தலைநகர் மர்மக் கொலைகள் உருவாக்கியுள்ள அச்ச நிலைமை!</b> கொழும்புக்கு வந்த அப்பாவி இளைஞர்கள் இலக்கு வைக்கப்பட்டதன் பின்னணி... கொழும்பில் இராணுவ புலனாய்வு அதிகாரியான லெப்.கேணல் ரி.என்.முத்தலிப்பின் கொலையின் பின்னரான சம்பவங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்த இரு அப்பாவித் தமிழ் இளைஞர்கள் கொட்டாஞ்சேனையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட அதேநேரம் வெள்ளவத்தை பகுதியிலும், கிளிநொச்சியிலிருந்து வந்த இளைஞரொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகளின் புலனாய்வாளர்களெனக் காண்பிக்க படைத்தரப்பும் பொலிஸாரும் முயற்சித்த போதும் உண்மை தெரிய வரவே அப்படியே விட்டுவிட்டனர். ஆனாலும், இக்கொலைகளானது தமிழ் மக்களை அச்சுறுத்தும் செயலாகவே கருதப்படுகிறது. முத்தலிப்பின் கொலைக்கான பழிவாங்கலாக அப்பாவிகளைத் தாக்கி அச்சமடையச் செய்வதும் இதன் நோக்கமாயிருக்கலாம். கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி அதிகாலை விடுதலைப் புலிகளின் முக்கிய புலனாய்வாளரான நியூட்டன், வேறு இருவருடன் காணாமல்போன பின்னர் கொழும்பில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நியூட்டனை கண்டுபிடித்து மீட்டுவிட புலிகள் பலத்த முயற்சிகளை மேற்கொண்டும் அது கைகூடவில்லை. நியூட்டனை இராணுவ புலனாய்வுப் பிரிவே கடத்தியுள்ளதாக புலிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். நியூட்டனை மீட்பதற்காக தங்கள் பிடியிலிருக்கும் எவரையாவது விடுவிக்கவும் புலிகள் தயாராயிருந்தனர். ஆனாலும், அவர்களது முயற்சி கைகூடவில்லை. நியூட்டன் எவ்வாறு காணாமல் போனாரென்பது மர்மமாக இருக்கின்ற போதும் அவர், திடீர் வீதிச் சோதனை நிலையமொன்றில் வைத்து தந்திரமாகக் கடத்தப்பட்டிருக்கலாமெனப் புலிகள் கருதுகின்றனர். அவருடன் கூடச் சென்ற நேருமாஸ்டர் என்பவரும், அவர்கள் சென்ற காரும் காணாமல் போயுள்ளன. சுமார் ஒன்றரை மாதத்திற்குப் பின்னர், நேருமாஸ்டர் பற்றிய விபரம் தெரிந்தவர்கள் தங்களுக்கு தெரியப்படுத்துமாறு கோரி பொலிஸ் தலைமையகத்தால் பத்திரிகைச் செய்திக்குறிப்பு கடந்த வாரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. நியூட்டனுடன் சென்ற நேருமாஸ்டர் காணாமல்போனது பற்றி அவரது மனைவி மறுநாளே வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். ஆனாலும் தனது கணவன் நியூட்டனுடனா சென்றார் என்பது பற்றி அவருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. நியூட்டனுடன் சென்றதால் தான் இவரும், இவர்கள் சென்ற கார்ச்சாரதியும் கடத்தப்பட்டுள்ளனர். நியூட்டன் கடத்தப்பட்ட விடயம் தெரியக் கூடாதென்பதற்காக இவர்களும் காணாமல் போயுள்ளனர். நியூட்டனை விடுவிக்கும் புலிகளின் முயற்சி தோல்வியடைந்த நிலையில் தான் இராணுவ புலனாய்வாளர் முத்தலிப் கொலை செய்யப்பட்டுள்ளார். புலிகள்தான் இக் கொலையைச் செய்ததாக படைத்தரப்பு கூறுகின்றது. சில வேளைகளில், நியூட்டனுக்கு உயிராபத்து ஏதாவது ஏற்பட்டிருக்கலாமெனப் புலிகள் அறிந்து கொண்டதால் தான் முத்தலிப்பை அவர்கள் கொலை செய்ய முடிவு செய்ததாகவும் சிலர் கருதுகின்றனர். தங்கள் பிடியிலிருக்கும் எவரையாவது விடுவித்து நியூட்டனை மீட்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்ட புலிகள், நியூட்டன் இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் பிடியிலிருக்கையில் இராணுவ தரப்புக்கு எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தமாட்டார்களென்பது சாதாரண விடயம். ஆனாலும், இராணுவமும் அரசியல் தலைவர்களும், விலைமதிப்பற்றவரெனக் குறிப்பிடும் முத்தலிப்பை கொல்ல புலிகள் தீர்மானித்ததன் மூலம், நியூட்டனுக்கு உயிராபத்து எதுவும் ஏற்பட்டிருக்கலாமென புலிகள் உறுதியாக நம்பியிருக்கக் கூடுமெனவும் கருதப்படுகிறது. தனது கணவன் காணாமல் போனது பற்றி நேருமாஸ்டரின் மனைவி முறைப்பாடு செய்து ஒன்றரை மாதங்களுக்குப் பின்பே, நேருமாஸ்டர் பற்றி தகவல் தெரிந்தால் தருமாறு கோரி பொலிஸ் திணைக்களம் பத்திரிகை அறிவித்தல் விடுத்துள்ளது. இதுவரை நாட்களும் இதுபற்றி அறிவிக்காது இந்தளவு நாட்களின் பின்னர் ஏன் பத்திரிகை அறிவிப்பு விடுக்கிறார்களென்ற கேள்வியும் எழுகிறது. நியூட்டன் காணாமல் போனது பற்றியோ அவரது வாகனச் சாரதி பற்றியோ பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்படாததால் அவர்களைப் பற்றிய தகவல்களை பொலிஸார் கோரவில்லை. அதேநேரம் நியூட்டன் கடத்தப்பட்டது வெளியுலகத்திற்கு தெரியக் கூடாதென்பதற்காகவே அவருடன் ஏனைய இருவரும் கடத்தப்பட்டு காணாமல் போனார்களென்றால், நியூட்டனுக்கு உயிராபத்து ஏதும் ஏற்படுமானால் மற்ற இருவருக்கும் உயிராபத்து ஏற்படலாமென்றும் கருதப்படுகிறது. இவற்றின் பின்னணியிலும் கிழக்கில் இடம்பெறும் நிழல் யுத்தத்தின் பின்னணியிலும் தான் லெப்.கேணல் முத்தலிப் கொல்லப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறன. அதேநேரம் நியூட்டன் காணாமல் போனதும் அதன் பின்னர் கொழும்பில் மூன்று தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டதும் பல்வேறு ஊகங்களையும் எழுப்பியுள்ளன. வவுனியா ஓமந்தை சோதனை நிலைய மூடாக கொழும்பு வந்த பின்பே நியூட்டன் கடத்தப்பட்டார். நியூட்டனின் கடத்தல் மூலம், கொழும்பு வரும் விடுதலைப் புலிகளுக்கு மறைமுகமாக கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னைய காலங்களில் புலி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவர் நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டு பின் தடுத்து வைக்கப்பட்டு, பாரதூரமான குற்றமிழைத்திருக்காவிட்டால் விரைவில் விடுதலை செய்யப்படுவார் அல்லது எப்போதாவது கைதிகள் பரிமாற்றத்தின் போதாவது விடுவிக்கப்பட்டு விடுவார். ஆனால் நியூட்டனின் கடத்தல் மூலம், புலி உறுப்பினரென அடையாளம் காணப்படும் ஒருவரை கைது செய்து பின் எப்போதாவது அவரை விடுதலை செய்வதை விட, அவர்களை கடத்தும் போது தேவையான தகவல்களைப் பெற்றுவிட்டு பின் அவர்களை காணாமல் செய்து (கொன்று)விடலாமென்ற புதுத்திட்டமும் கையாளப்படுவதாக புலிகள் கருதுகின்றனர். அதேநேரம் கொழும்புக்கு அல்லது தென்பகுதிக்கு வரும் புலிகளை மனோ ரீதியில் மிரட்டவும், நியூட்டனின் கடத்தல் சம்பந்தப்பட்டவர்களுக்கு பயன்படக் கூடும். இதனால் அச்சம் காரணமாகவும் முக்கிய உறுப்பினர்களது பாதுகாப்பு காரணமாகவும் புலிகள் கொழும்புக்கோ அல்லது தென்பகுதிக்கோ வருவதை தடுத்துவிட முடியுமெனவும் கருதக் கூடும். ஆனால், கொழும்புக்கு வந்த அப்பாவி இளைஞர்கள் ஏன் கொல்லப்பட்டார்களென்ற கேள்வி எழுகிறது. வடபகுதியிலிருந்து ஓமந்தை சோதனை நிலையமூடாக வந்தவர்களே கொழும்பு வந்தவுடனும் மறு நாளும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களைக் கொன்றது யார்? ஏன் கொல்லப்பட்டார்கள்? என்ற கேள்வி தமிழ் மக்களை பெரிதும் அச்சமடையச் செய்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் வடபகுதியைச் சேர்ந்தவர்களென்பதால் சுலபமாக அந்தப் பழியை கருணா குழு மேல் சுமத்தி விடுகிறார்கள். அதேநேரம் அந்த அப்பாவிகளை புலிகளின் புலனாய்வாளர்களென்றும் கூறிவிடுகிறார்கள். இதன் மூலம் தமிழ் மக்களை அச்சமுறச் செய்வதற்கு கொலையாளிகள் இலகுவான நடைமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேசர் கோவில் பஸ் நிலையத்தில், பஸ்ஸிலிருந்து இறங்கிய இரு குருநகர் இளைஞர்கள் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களைப் பின்தொடர்ந்து ஆட்டோ ஒன்றில் வந்தவர்களே இவர்களைச் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். கொழும்பு துறைமுக வாசலில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து ஒரு புறம், சுமார் 20 மீற்றர் தூரத்தில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் கோவில் முன்பாக பல பொலிஸார் நின்றிருந்தனர். மறு புறம் சுமார் நூறு மீற்றர் தூரத்தில் கரையோரப் பொலிஸ் நிலையமுள்ளது. இதை விட சம்பவம் நடைபெற்ற இடம் துறை முக அதிஉயர் பாதுகாப்பு வலய பாதுகாப்புச் சுவருக்கு முன்னாலாகும். அந்தப் பகுதியில் கடற்படையினரின் பாதுகாப்பு கோபுரமும் அதில் அதிசக்தி வாய்ந்த புகைப்படக் கருவிகளுடன் 24 மணிநேர கடற்படைப் பாதுகாப்புமிருக்கும். இவ்வளவு பாதுகாப்புமிருந்தும், ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இரு இளைஞர்களையும் சாரமாரியாக சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்றுள்ளனர். ஆட்டோவில் அப்பகுதிகளுடாகத் தப்பிச் செல்வது சிரமம். விரைந்து செயற்பட்டிருந்தால் கொலையாளிகளை மிகச் சுலபமாகப பிடித்திருக்க முடியும். ஆனால் அதற்கான முயற்சி எதுவுமே நடைபெறவில்லை. அதேநேரம், அவ்விருவரையும் விடுதலைப் புலிகளென்றும் கொழும்பில் பெரியதொரு தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்தவர்களெனவும் அவர்களைக் கருணா குழுவே சுட்டுக் கொன்றுள்ளதாகவும் அடுத்த நிமிடமே, அங்கு விரைந்த செய்தியாளரிடம் பொலிஸார் கூறியிருந்தனர். ஆனால், சில மணி நேரத்தில் அவர்களிருவரும் அப்பாவிகளென்ற உண்மை தெரிய வந்தது. இந்த நிலையிலேயே வெள்ளவத்தை பகுதியில் மறு நாள் அதிகாலை மற்றொரு தமிழ் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் பூநகரியை சேர்ந்தவர். இவரும் வவுனியா ஓமந்தை சோதனை நிலையமூடாகவே கொழும்பு வந்தவர். ஆனாலும், இவரை உடனடியாக புலியெனக் கூற பொலிஸார் தயங்கினர். எனினும் இவரையும் புலியென்றே சிங்கள ஆங்கில ஊடகங்கள் தெரிவித்தன. அடுத்தடுத்து நடைபெற்ற இந்தக் கொலைகள் தமிழ் மக்களை பெரிதும் அச்சுறுத்திய அதேநேரம் செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பில் இரகசிய பொலிஸாரெனக் கூறி சிவிலுடையில் சென்றவர்கள் வெள்ளவத்தை, தெஹிவளைப் பகுதியில் குறிப்பிட்ட வீடுகளில் இருப்போரின் விபரங்களை சேகரித்தனர். சிலர் கைது செய்யப்பட்டனர். இது அச்சத்தை மேலும் அதிகரித்தது. ஓமந்தை சோதனை நிலையமூடாக வந்த மூவரே அடுத்தடுத்து கொல்லப்பட்டதால், அங்கிருந்து இவர்கள் பின் தொடரப்பட்டார்களா என்ற கேள்வி எழும் அதேநேரம், அப்படியாயின் கொழும்பில் வைத்து ஏன் இவர்கள் கொல்லப்பட்டார்களென்ற கேள்வியும் எழுகிறது. அதேநேரம் அப்பாவி இளைஞர்களை கொல்வதன் மூலம் யாரை அச்சுறுத்த இவர்கள் முனைகிறார்களென்ற கேள்வியும் எழுகிறது. புலிகளென நினைத்து இவர்கள் தவறுதலாகச் சுடப்பட்டிருக்கலாமெனக் கூறினால், புலிகளென்றாலும் உடனடியாக அவர்களை ஏன் சுட்டுக்கொல்ல வேண்டும்? கொல்லப்பட்ட மூவரும் சிங்களவரோ, முஸ்லிமோ அல்ல. வடபகுதியிலிருந்து வந்த தமிழ் இளைஞர்களென்பதால், கொலையாளிகள் இவர்களை வேண்டுமென்றே சுட்டதும் உறுதியாகிறது. வழமை போல், புலிகள் இயக்கத்திற்கு ஏற்பட்ட உள்முரண்பாடே இதுவென பொலிஸாரும் படைத்தரப்பும் அரசும் கூறுகின்றன. அப்பாவிகள் எப்படி புலிகள் - கருணாகுழு மோதலுக்காக கொல்லப்படலாம்? வடக்கிலிருந்து தெற்கே வருபவர்களை கருணா குழுவுக்காக உளவு பார்ப்பவர்கள் யார்? கருணா குழுவென்ற பெயரில் நிழல் யுத்தத்தை நடத்துவோர் தான் இவ் இளைஞர்களையும் கொன்றார்களென்றால் அதற்கான காரணமென்ன? கொழும்பில் நிலைமை இவ்வாறிருக்கையில் கிழக்கில் புலிகளின் மீதான தாக்குதல் தொடர்கிறது. அதே நேரம் இராணுவ உளவாளிகள் மீதான தாக்குதலும் தொடர்கிறது. அம்பாறை சங்கமம்கண்டி காட்டுப் பகுதியில் கடந்த புதன்கிழமை இரு புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கஞ்சிகுடிச்சாறிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்தோரே கொல்லப்பட்டனர். புலிகளின் பகுதிகளுக்குள், இராணுவ முகாம்களுக்கு சமீபமாக இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறும் அதே நேரம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளும் தாக்குதல்கள் தொடர்கின்றன. மிகச் சிலரைக் கொண்ட கருணா குழுவுக்கு, இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகளின் நடமாட்டம் எவ்வாறு தெரிகிறது. மிகப்பெரும் படையணியையும், புலனாய்வுப் பிரிவையும், நவீன தொலைத் தொடர்பு வசதிகளையும் கொண்ட இலங்கைப் படையினரால், கிழக்கிலும் தலைநகரிலும் நடைபெறும் எந்தவொரு சம்பவத்தையுமே கண்டறிய முடியாதிருக்கையில் மிகச் சிலரைக் கொண்ட கருணா குழுவால், புலிகளின் நடமாட்டங்களை எப்படி அறிய முடிகிறது. முத்தலிப்பின் இழப்பு இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கும். கருணா குழு எப்படியெல்லாம் புலனாய்வுத் தகவல்களைப் பெறுகின்றதென்பது இரகசியமான தொரு விடயமல்ல. நிழல் யுத்தத்திற்காக பயன்படுத்தப்படும் பகடைக் காய்களில் அவர்களும் அடங்குவர். ஆனால், காய்களை நகர்த்துவோர் யாரென்பது `உலகமறிந்த உண்மை.' இந்த நிலையில் தலைநகரிலும் தற்போது தமிழ் மக்களை மிரட்டும் நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன. அரசியல் நடவடிக்கைகள் தோல்விகளைத் தழுவுவதால் யுத்த நடவடிக்கைகள் முனைப்புப் பெறுகின்றன. யுத்தம் தான் முடிவென்றதொரு நிலை ஏற்பட்டு விட்டதோ என்ற அச்சம் தற்போது முழு நாட்டிற்கும் பரவி விட்டது. தினக்குரல் - Sooriyakumar - 06-13-2005 தலைநகரில் செய்யப்படும் கொலைகளுக்கு நாமேன் கவலைப்படவேண்டும்? யாரும் யாரையும் கொலைசெய்ய கவலை எதற்கு? அடையாளம்தெரியாத நபர்கள்தானே கொலைசெய்கிறார்கள். கொலைசெய்துவிட்டுப்போகட்டுமே. நமக்கென்ன? |