Yarl Forum
மகளுக்கு விசா கோரி நளினி வழக்கு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மகளுக்கு விசா கோரி நளினி வழக்கு (/showthread.php?tid=4025)



மகளுக்கு விசா கோரி நளினி வழக்கு - Mathan - 06-29-2005

மகளுக்கு விசா கோரி நளினி வழக்கு

சென்னை:

இலங்கையில் உள்ள தனது மகள் ஆருத்ரா தன்னையும், தனது கணவரையும் பார்க்க வருவதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விசா வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார். கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி எப்போது விடுதலை ஆவார் என்பது தெளிவாக தெரியாத நிலை உள்ளது.

இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 1991ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி எனக்கும் ஸ்ரீதரன் என்ற முருகனுக்கும் திருப்பதியில் திருமணம் நடந்தது. அதன் பின்னர் நானும், எனது கணவரும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோம். அந்த சமயத்தில் நான் கருவுற்றிருந்தேன்.

கடந்த 1992ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. சென்னையில் இக்குழந்தை பிறந்ததால் இது இந்தியப் பிரஜையாகும். எனது குழந்தையின் பெயர் மெகரா என்ற ஆரூத்ரா.

கடந்த 1998ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி எனக்கும், எனது கணவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் கருணை மனுவையடுத்து எனது தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறையில் இருந்து வருகிறேன்.

எனது மகள் ஆரூத்ரா 6 வயதாகும் வரை என்னுடன் தான் இருந்தாள். அதன் பின்னர் எனது மாமியார் கடந்த 1997ம் ஆண்டு ஆரூத்ராவை இலங்கைக்கு அழைத்துச் சென்று விட்டார்.

தற்போது ஆரூத்ரா பூப்பெய்தி உள்ளார். எனவே என்னையும், எனது கணவரையும் பார்க்க விரும்புகிறார். இதற்காக இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் விசா கோரி மனு செய்துள்ளார். கடந்த2004ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதியே அவர் விண்ணப்பம் கொடுத்தும் இன்னும் விசா கொடுக்கப்படவில்லை.

ஆரூத்ரா இந்தியா வருவதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. அவர் இந்தியப் பிரஜை. எனவே உடனடியாக அவருக்கு விசா கொடுப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்று நளினி தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி பி.டி.தினகரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக 4 வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி மத்திய வெளியுறவுத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

தட்ஸ் தமிழ்