Yarl Forum
சமாதானக் கிழவனின் சாவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: சமாதானக் கிழவனின் சாவு (/showthread.php?tid=3996)



சமாதானக் கிழவனின் சாவு - narathar - 07-02-2005

வேலிச் சண்டை விசாரணை அல்லது சமாதானக் கிழவனின் சாவு

போச்சுவார்த்தை சுமந்து சுமந்து களைத்த
சாமாதானக் கிழவனின் உயிர்போய்
இந்தோ விறைத்துக் கிடக்கிறான்.
இருந்த இறுதிமூச்சையும் வெளியிலெறிந்து
நேற்றுத்தான் விழிபிதுங்கி
மூச்சுத்திணறிச் சரிந்தான்.
எந்த உரிமைக்காரரும் அருகின்றி
எடுத்துப் பால்வார்க்க எவருமின்றி
வேண்டியவர்களுக்கு
வார்த்தையொன்றும் கூறாமல்
பொதுக்கெனப்போனது உயிர்.
உயிர்கொண்டுலவிய நாளில்
ஓடியோடி வந்த பலரைக் காணவில்லை
ஒதுங்கிக்கொண்டனர் எல்லோரும்.
தனித்துக் கிடக்கிறது சடலாம்.
மூக்கில் நீர்வழிய
கண்களில் பீளைசாறி
ஈமொய்க்கக் கிடக்கிறது இளைத்த உடல்.
இழவுசொல்லிகளுக்காகக் காத்திருக்கிறது
உறுதிப்படுத்துவதற்காக உலகம்.
எவ்வண்ணம் இறப்பு நிகழ்ந்தது?
மூச்சுத்திணறியதா?
கொலையா?
தற்கொலையா?
இனிப் பிரேதபரிசோதனை நடத்துபவர்
மத்தியஸ்தமருத்துவர்.
பாவம் சாமாதானக் கிழவன்
எத்தனை நம்பிக்கையுடன் இருந்தான்.
தன் பிள்ளைகளிருவருக்கும் ஒன்றாயமர்ந்து
பேசித் தீர்த்து
தாயுறுதியிலுள்ள எல்லைகளை ஏற்கும்
நாளொன்று சாத்தியமாகுமென
புன்னகைவீசித் திரிந்தான்
பொக்கைவாய்க்கிழவன்.
தன் அந்திமத்துக்கு முன்னம்
மகளும்
மகனும்
பகைமறந்து ஒருவருக்கொருவர் உருகுவரெனும்
எதிர்பாபர்ப்பில் இடிவிழுந்துபோக
நின்றபடி சரிந்தான் நிகழ்ந்தது மரணம்.
ஏனோ தெரியாது
சமாதானக் கிழவனை
பிறந்த நாளிருந்தே மகளுக்குப் பிடிக்காது.
ஊராரின் பழிச்சொல்லுக்கு அஞ்சி
இடைக்கிடை வருவாள்
ஏதேனும் பேசுவாள்
சந்தர்ப்பம் பார்த்திருந்து
தகப்பன் துரோகமிழைப்பதாய்ச் சொல்லி
நிமிர்ந்து தம்பிமுகம் பாராது போய்விவாள.
சாதுரியமாய் ஊரை வசப்படுத்துவதில்
மகள் மகாசூரி.
சண்டையை வலிந்திழுத்துவிட்டு
அடியாட்களை ஏவி
எல்லைகளை முன்னகர்த்துவாள்.
தனக்கே
காணிமுழும் சொந்தமெனும் நினைப்பில்
தம்பி வளவுக்கான தண்ணீர்ப்பங்கைக்கூட
தரமறுப்பாள்.

ஒவ்வொரு தடவையும்
ஊர்பழிப்பது தம்பியைத்தான்.
அக்காக்காரியின் ஆட்டமறியாமல்
அவளையே நம்பும் அயல்.
கிழவன் பாவம்.
உள்ளே அழுதபடி உறங்கிப்போவான்.
திரும்பவும் எழுவான்.
பிள்ளைகளை ஒன்றாக்க முயன்று
தோற்றுச் சுருள்வான்.
எத்தனைமுறை தோற்று
எத்தனைமுறை தோற்று
மீண்டும் மீண்டும் எத்தனித்தகிழவன்
இம்முறை செத்தேபோனான்.
சடலஒப்படைப்பு யாரிடம்
எடுத்துப்போகவும் வருமா உலங்கு வானூர்தி?
மரணச்செய்தி விளம்பரத்துக்காக
காத்திருக்கின்றன எல்லா மக்கள் தினசரிகளும்.
பாவம் கிழவன்
இனியாவது உறங்கட்டுமே எரியும் வரை.


- புதுவை இரத்தினதுரை.
http://www.erimalai.info/2005/april/poems/...veli_sandai.htm


- Eswar - 07-02-2005

ஊருக்கு உகந்த கவிதையை எடுத்து வந்து போட்ட நாரதருக்கு நன்றி. நாரதரே எழுத்துப்பிழையைக் கொஞ்சம் திருத்தமாட்டிங்களா.


- kavithan - 07-02-2005

நன்றி நாரதர் ..


- KULAKADDAN - 07-02-2005

நன்றி நாரதர்


- வெண்ணிலா - 07-03-2005

புதுவையின் கவிதையை தந்தமைக்கு நன்றி நாரதரே