Yarl Forum
தமிழ் மக்கள் மீதான சந்தேகப்பார்வை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தமிழ் மக்கள் மீதான சந்தேகப்பார்வை (/showthread.php?tid=3553)



தமிழ் மக்கள் மீதான சந்தேகப்பார்வை - வினித் - 08-24-2005

தமிழ் மக்கள் மீதான சந்தேகப்பார்வை

தேடுதல் நடவடிக்கை என்ற பெயரில் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கைதுகள், விசாரணைகள் யாவும் வெறுமனே தமிழ் மக்களை இம்சைப்படுத்துவதாகவும், அநாவசியமான தொந்தரவுகளுக்கு ஆளாக்குவதாகவும் இருப்பதாக தமிழ் மக்கள் மிகுந்த விசனம் தெரிவிக்கின்றனர்.

சாதாரணமாக கொழும்பிலுள்ள தமிழ் இளைஞர்கள், யுவதிகள் தங்கள் தேவைகளுக்காக வெளியில்கூட நடமாட முடியாத வகையில் பொலிஸாராலும் இதர பேரினவாதக் குழுக்களாலும் ஆக்கிரமிப்புக்கும், தாக்குதல்களுக்கும் இலக்காவதாகக் கூறப்படுகின்றது.

அது மாத்திரமன்றி, செய்தி சேகரிப்பு பணிகளுக்கு செல்லும் தமிழ் ஊடகவியலாளர்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுவதுடன், அவர்கள் தாக்கப்படும் காட்டுமிராண்டித்தனங்களும் இலங்கையில் தொடர்ந்து வருகின்றன.

மனிதனை மனிதன் வேட்டையாடும் இழிவான கலாசாரம் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவதனாலேயே இலங்கை சர்வதேச அரங்கில் பல்வேறு தடவைகள் தலைகுனிவைச் சந்திக்க நேர்ந்தது. அதனை எந்த வகையிலும் கருத்தில் கொள்ளாது தொடரும் அநாகரிகங்கள் இந்த நாட்டை மோசமான நிலைமைக்கே இட்டுச் செல்வதாக இருக்கும்.

நாட்டின் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்கும் பொறுப்பு பொலி­ஸாரிடமும், பாதுகாப்புப் படையினரிடமுமேயுள்ளது. அதனை அரசியல்வாதிகளோ, அரசியல் கட்சிகளோ தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வார்களேயானால் நாடு பேரழிவை நோக்கி அடியெடுத்து வைப்பதாகவே கொள்ள வேண்டும்.

தற்பொழுது நாட்டில் இடம்பெறும் அனைத்து விடயங்களும் தமிழ் மக்களை புறந்தள்ளுவதாகவும், சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதாகவுமே அமைந்திருப்பதாக தமிழ் மக்கள் பலரும் மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர்.

இன ஒருமைப்பாட்டையும், புரிந்துணர்வையும் வளர்க்க வேண்டிய நிலையில் ஒரு சில பேரினவாத அரசியல் கட்சிகள் இன ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையிலான காரியங்களிலேயே தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

சாதாரண மக்களாக இருப்பினும் சரி, ஊடகவியலாளர்களாக இருப்பினும் சரி ஒருவரது கடமையை தடுத்து நிறுத்த முனைவதோ, அன்றேல் தாக்க முற்படுவதோ அடிப்படை உரிமை மீறல் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர முன்வர வேண்டும்.

போகும் போக்கில் கொழும்பிலோ, அல்லது வடக்கு கிழக்கு தவிர்ந்த இதர இடங்களிலோ தமிழ் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாதவாறு "கால் கட்டுப் போடும்' முயற்சிகள் தொடருகின்றனவோ என்ற சந்தேகமே மேலோங்கியுள்ளது.

பெரும்பான்மை சிங்கள மக்கள் பலர் அமைதியையும், சமாதானத்தையும், இன நல்லுறவையுமே விரும்புபவர்களாகவுள்ளனர். எனினும், ஒருசில பேரினவாதக் கட்சிகள், சரிந்து போகும் தங்கள் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் முனைப்பாக ஈடுபட்டு வருகின்றன.

இவற்றுக்கு சில சிங்கள, ஆங்கில ஊடகங்களும் ஊதுகுழல்களாக செயற்பட்டு வருவது கவலை தருவதாகும். இவ்வாறான போக்குகள் நாட்டின் உண்மை நிலையை பெரும்பான்மை மக்கள் சரியாக அறிந்து கொள்ள முடியாது, அவர்களை தவறாக வழி நடத்துவதாக இருக்கும் என்பதே யதார்த்தம்.

இதேவேளை, அண்மைக் காலமாக திடீரென மேலோங்கி வரும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான போக்குகளை மேலும், வளர விடாது பார்த்துக் கொள்ள வேண்டியது அரசாங்கத்தினதும். ஜனாதிபதியினதும் கடப்பாடாகும். அன்றேல் நாட்டில் மீண்டும் மோசமான சூழ்நிலை உருவாகவே வழிவகுப்பதாக இருக்கும்.

அத்துடன், இவ்வாறானதோர் சூழலில் நாட்டின் இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண எந்தவொரு பிரதான அரசியற் கட்சியாலும் முடியாது போகும் என்ற நிலைமையே மிஞ்சுவதாக இருக்கும். அவ்வாறு இனப்பிரச்சினை இழுத்தடிக்கப்படுமானால் அதன் பின்னணியில் நாடு மோசமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதை தவிர்க்க முடியாது என்பதே உண்மை நிலையாகும்.

முதலில் அரசாங்கம், இனவாதிகளின் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தால் மாத்திரமே எந்தவொரு கட்சியும் இனப்பிரச்சினைக்­கான தீர்வை முன் வைக்க முடியும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

எது எவ்வாறிருப்பினும் பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலான அழுத்தங்களை சர்வதேச நாடுகள் கொடுப்பது இன்றியமையாதது. அதன் வாயிலாகவே இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதுடன் நாட்டில் நீடித்த அமைதியையும் நிலை நாட்ட முடியும் என்பதே யதார்த்தம்.


- கீதா - 08-24-2005

உங்கள் தகவலுக்கு நன்றி அண்ணா

.........jothika
-------------------------------------------------
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்