![]() |
|
ஹோட்டேல் ருவாண்டா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51) +--- Thread: ஹோட்டேல் ருவாண்டா (/showthread.php?tid=3546) |
ஹோட்டேல் ருவாண்டா - AJeevan - 08-25-2005 <span style='font-size:22pt;line-height:100%'><b>ஹோட்டேல் ருவாண்டா</b> <img src='http://216.65.197.170/theeranadhi/010805/pg6-t.jpg' border='0' alt='user posted image'> 'ஹிரோஷிமா, மான் அமோர்' ஃப்ரெஞ்சுத் திரைப்படத்தில் ஒரு காட்சி : ஹிரோஷிமாவின் அணுவெடிப்புக் காட்சியகத்தில், தான் பார்த்த படங்களையும் பொருள்களையும் விவரிக்கும் ஃப்ரெஞ்சுக்காரியிடம் அவளது ஜப்பானியக் காதலன் சொல்லுகிறான்: \"நீ எதையுமே பார்க்கவில்லை.\" இந்த எளிய வரி சுட்டும் சரித்திரத் தொலைவு எத்தகையது! ஹாலிவுட் வெகுஜனத் திரைப்படமான 'ஹொட்டேல் ருவாண்டா'வைப் பார்க்கையில் இவ்வரி மீண்டும் நினைவுக்கு வருகிறது. மேற்கத்திய உலகத்தால் அலட்சியப்படுத்தப்பட்டு, இன்றுமே கூடப் பரவலாய் உலகுக்குத் தெரியாத ருவாண்டா இனப்படுகொலை பற்றிய படம் இது. ருவாண்டாவின் இனப்படுகொலை நடந்தது 1994_இல்; நூறே நாட்கள், 8 இலட்சம் இனப்படுகொலைகள். ஐ.நா.வின் சிறிய அமைதிப்படை, தன்னால் அமைதியை ஆக்கவோ, காக்கவோ இயலாததை மீண்டும் நிறுவுகிறது. இந்தப் பின்னணியில், 1200 டுட்ஸி இன மக்களைக் காப்பாற்றும் மில் காலின்ஸ் விடுதி நிர்வாகியும், ஹ§ட்டு இனத்தைச் சேர்ந்தவருமான பால் ருஸ்ஸிஸபகீனாவின் கதைதான் 'ஹொட்டேல் ருவாண்டா'. இது ஓர் உண்மைக் கதை. ருஸ்ஸிஸபகீனாவே படத்துக்கு ஆலோசகராய்ப் பணியாற்றியிருக்கிறார். இவருக்கு உதவுவதாய்ப் படத்தில் காண்பிக்கப்படும் ஐ.நா. அமைதிப்படை அதிகாரி கர்னல் ஆலிவரின் பாத்திரமும், ஒரு நிஜ ஆளுமையைத் தழுவியதே.. ருவாண்டாவின் ஆதிக் குடிமக்கள் 'ட்வா' எனப்படும் பிக்மிகள். பிறகு 'ஹ§ட்டு' இனத்தினர் இங்கு குடியேறித் தழைக்கிறார்கள். 15_ஆம் நூற்றாண்டுவாக்கில், வடக்கிலிருந்து படையெடுக்கும் 'டுட்ஸி' இனத்தினர், இந்த நிலப்பரப்பை வெல்கிறார்கள். புதிய 'டுட்ஸி' ஆண்டைகள், 'உபுஹாக்கே' நிலப்பிரபுத்துவ ஜாதியத்தை அமுல்படுத்தி, 'ஹ§ட்டு' இனத்தினரின் சமூகப் பொருளாதார உரிமைகளைப் பறித்து, அவர்களைக் கூலிக்கு உழைக்கும் அடிமை ஜாதியாகப் பிரகடனம் செய்கிறார்கள். 19_ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஜெர்மனியின் காலனியாகிறது ருவாண்டா. முதலாம் உலகப்போர் காலத்தில் பெல்ஜியத்தின் காலனியாக மாறுகிறது. ஜெர்மனியும் பெல்ஜியமும், உள்நாட்டு டுட்ஸி மன்னர்கள் மூலமே தமது காலனீய ஆட்சியை நடத்துகிறார்கள். 'உபுஹாக்கே' ஜாதி முறைமை ஒழிப்பதற்கு, ஹ§ட்டுகளை ஊக்குவிக்கிறார்கள். கிறிஸ்தவ மிஷனரிகள் மூலம் கல்வியையும் மதத்தையும் பரப்புகிறார்கள். இரண்டாவது உலகப்போரின் பின், ருவாண்டாவில் அரசியல் பிரக்ஞை அதிகமாகிறது. அடிமைப்பட்டுக் கிடக்கும் பெரும்பான்மையோரான ஹ§ட்டுகள், தம் சமூக உரிமைகளுக்காகவும் அரசியல் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கிறார்கள். டுட்ஸிகளுக்கும் ஹ§ட்டுகளுக்கும் இடையேயான கசப்பு வன்முறையாகிறது. டுட்ஸி மன்னர் நாட்டை விட்டு ஓடுகிறார். ருவாண்டா குடியரசாகிறது. முதல் தேர்தலில் ஹ§ட்டுகள் வெற்றி பெறுகிறார்கள். பெல்ஜியக் காலனிய ஆதிக்கம் 1962_இல் முடிகிறது. ஆனால், இனக்குழுக்களினிடையே மோதல்கள் தொடருகின்றன. 1994_இல் துவங்கும் 'ஹொட்டேல் ருவாண்டா' 'ஹ§ட்டு', 'டுட்ஸி' என்னும் அர்த்தமற்ற இனப்பிரிவு, பெல்ஜியக் காலனீய ஆதிக்கவாதிகளால் இன்னும் கொஞ்சம் விரிசல்பட்டதை இரண்டொரு வரிகளில் விளக்குகிறது. ஒரு ருவாண்டா சரித்திரவியலாளர், மக்கள் தொகையில் 9 சதவிகிதமான டுட்ஸிகளின் வழியே, காலனீய ஆதிக்கத்தை நடத்தி, அந்த டுட்ஸிகளால் மனித உரிமைகளை இழந்து, பல கொடூரங்களை அனுபவித்த 90 சதவிகித ஹ§ட்டுகளிடம் சுதந்திர ருவாண்டாவை ஒப்படைத்த பெல்ஜியத்தின் முரண் பற்றி விளக்குகிறார். நூற்றாண்டுகளாய்க் குழம்பிப் போன ஒரு வரலாற்றின் வருங்காலம் என்னவாயிருக்கும்? கேள்வி மௌனமாய் அந்தரத்தில் தொங்குகிறது; திரைப்படம், சிக்கலான உணர்வுப் பின்புலத்தையும் அறக் கேள்விகளையும் பார்வையாளர் மனதில் மெலிதாய்த் தூவி விதைக்கிறது. ஹ§ட்டு இனத்தைச் சேர்ந்த ருவாண்டா அதிபர் சந்தேகத்துக்கிடமான விபத்தில் 1994_ல் இறக்கிறார். டுட்ஸித் தீவிரவாதிகள் இதற்குக் காரணமாயிருக்கலாம் என்னும் கருத்து நிலவுகிறது. இராணுவ பலமுள்ள ஹ§ட்டுத் தீவிரவாத அமைப்பு, எல்லா 'டுட்ஸிக் கரப்பான்பூச்சிகளையும்' அழிக்க வேண்டுமென்று குரல் எழுப்புகிறது. கலவரம் மூளுகிறது; வீடுகளும் குடிசைகளும் தீப்பற்றி எரிகின்றன; வெட்டரிவாள்கள் சுழலுகின்றன; உடல்கள் சிதைகின்றன; குடும்பங்கள் சிதறுகின்றன; மேற்கத்திய நாடுகள் தமது குடிமக்களை ருவாண்டாவிலிருந்து உடனே வெளியேற்றுகின்றன; செய்தியாளர்களும் சேர்ந்து வெளியேறுகிறார்கள். ஜெர்மனியும் பெல்ஜியமும் ஃப்ரான்ஸ§ம் பிரிட்டனும் பாராமுகம் காட்டுகின்றன. பாஸ்னியா, ஹெய்ட்டி, ஸோமாலியா ஆகியோரின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டுச் சூடுபட்ட அமெரிக்க உள்நாட்டுத்துறை, இது இனவொழிப்பா இல்லையா என்று வெற்று விவாதம் நடத்துகிறது; ஐ.நா. கைவிரிக்கிறது. ருவாண்டா மக்கள் தன்ஸனீயா, காங்கோ முதலிய அண்டை நாடுகளுக்குத் தப்பிச்செல்ல முயலுகிறார்கள். ஒரு டுட்ஸி பெண்ணைக் கலப்புமணம் செய்திருக்கும் பால் ருஸ்ஸிஸபகீனா நிர்வகிக்கும் மில் காலின்ஸ் விடுதியில், 1200 டுட்ஸிகள் தஞ்சம் புகுகிறார்கள். ருஸ்ஸிஸபகீனா மற்றும் கர்னல் ஆலிவர் உதவியால் இவர்கள் ருவாண்டாவை விட்டுத் தப்பிப் போவதுடன் படம் முடிந்து போகிறது. 'சுபம்' என்று எளிதாய்த் திரை போட இயலாத சரித்திரம். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய பல காட்சிகள் திரைப்படத்தில் உண்டு. இனவொழிப்பு இன்னும் தொடங்கியிராத காலம். விடுதி விருந்துக்காகக் கடல் நண்டு வாங்குவதற்குப் பலசரக்கு இறக்குமதியாளரிடம் போகிறார் ருஸ்ஸிஸபகீனா. உயிரோடிருக்கும் நண்டுகளை நீரில் போட்டு, மரப்பெட்டிகளில் அடைத்து, விமானத்தில் கொண்டு வந்து இறக்கியிருக்கிறார்கள். நண்டுப்பெட்டிகளுக்குப் பதிலாக வேறு சில பெட்டிகள் தவறுதலாக வெளியே கொண்டுவரப்படுகின்றன. பெட்டிகளுள் ஒன்று சரிந்து திறக்கவும், பல வெட்டரிவாள்கள் தரையில் கலகலத்துக் குவிகின்றன; மௌனம். ஒரு வெட்டரிவாளின் கூரான பக்கத்தைத் தடவிக் கொண்டே அமைதியான குரலில் இறக்குமதியாளர் சொல்லுகிறார்: \"சீனாவில் பத்து சென்ட்டுக்கு உற்பத்தி செய்யப்படுபவை இவை. எனக்குக் கொழுத்த லாபம்.\" நண்டு, ஆயுதம் உட்பட எல்லாமும் அவருக்குச் சந்தைச் சரக்குதானே. யார் மூலம், எப்படி லாபம் என்று கேட்காமலேயே நண்டுகளை வாங்கிக் கொண்டு திரும்புகிறார் ருஸ்ஸிஸபகீனா. ஆயுதப் பெட்டிகள் ஃப்ரான்ஸிலிருந்து வந்திருப்பவை என்பதை மட்டும் மனதில் குறித்துக் கொள்ளுகிறார். இந்த உபரித் தகவல், பல உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அவருக்குப் பின்னாளில் உதவுகிறது. ருஸ்ஸிஸபகீனாவுக்குக் கைகொடுப்பவை அவரது அறவுணர்வும் உளத்திடமும் மட்டுமல்ல; மேலாண்மைத் திறமை, அறிவுக் கூர்மை, சமூகப் புரிதல், மேற்கத்தியத் தொடர்புகள், பண்பட்ட பேச்சு ஆகியனவும்கூட. தன்னிடம் தஞ்சம் புகுந்திருக்கும் ஒவ்வொரு டுட்ஸியையும் காப்பாற்ற எவ்வளவு லஞ்சம் வேண்டுமென்று அவரால் பேரம் பேச முடிகிறது; கொலைகார இராணுவ அதிகாரிக்கு விருந்துபச்சாரம் செய்வதன் மூலம், தன் அகதிகளின் பாதுகாப்பை நீட்டிக்க முடிகிறது; \"செயற்கைக்கோள் மூலம் அமெரிக்கர்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள், எல்லாம் முடிந்ததும் உங்களைச் சிறையில் போடுவார்கள், அப்போது உங்களுக்காகப் பரிந்து பேச நான் தேவைப்படுவேன்\" என்று பொய் சொல்லி வன்முறையாளர்களிடமிருந்து தப்ப முடிகிறது (இது பற்றி மனைவியுடன் சேர்ந்து சிரிக்கவும் முடிகிறது); ஐ.நா. கைவிட்டது புரிந்ததும், அகதிகள் தம் வெளிநாட்டு உறவினர்களிடம் புகலிடம் கேட்கும் முயற்சியை ஒருங்கிணைக்க முடிகிறது; பாதையில் குவிந்திருக்கும் பிணங்களின் மேல், தன் வாகனம் ஏறியிறங்குவதை உணர்ந்த தினத்தில், மூடிய கதவுக்குப் பின் குலுங்கி அழுதாலும், ஆழ்மனதில் பயங்கள் நிறைந்திருந்தாலும், நிதானமான வெளித்தோற்றத்துடன் செய்ய வேண்டியதைச் செய்ய முடிகிறது. ஒரு மாபெரும் அழிவுக்கு நடுவே, தன்னிடம் இருப்பவை அனைத்தையும் பணயம் வைத்துப் பிறர் உயிரைக் காப்பதே மேம்பட்ட குறிக்கோளாய்த் தெரிகிறது ருஸ்ஸிஸபகீனாவுக்கு. குடும்பம், வேலை என்றிருக்கும் ஒரு சராசரி மனிதன் உள்ளார்ந்த அற உணர்வால் அதிமனிதனாகும் கதை இது. ருஸ்ஸிஸபகீனாவைத் திரையில் உயிர்க்க வைக்கிறது டான் சீடிலின் ஆழமான, அடக்கமான, மிகையற்ற நடிப்பு. சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்காக இவர் பரிந்துரைக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. திரைப்படத்தில் குழந்தைகள் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும், வன்முறைச்சூழலில் அவர்களின் இருப்புப் பற்றிய அடிப்படைக் கேள்விகளை எழுப்புகின்றன. மேற்கத்தியக் குடிமக்கள் எல்லாரையும் ஏற்றிச் செல்ல பேருந்துகள் காத்திருக்கிறது. அடர்ந்து கொட்டும் மழையினூடே குழந்தைகளின் பாட்டுச் சத்தம் நெருங்குகிறது. அனாதை இல்லக் குழந்தைகளை அழைத்து வருகிறார்கள் பாதிரிமாரும் கன்னிகாஸ்திரீகளும். ஆனால் ருவாண்டாவின் குடிமக்களான அக்குழந்தைகளை ஐரோப்பாவுக்கு அழைத்துச் செல்ல அவர்களுக்கு அனுமதியில்லை. குழந்தைகள் மில் காலின்ஸ் விடுதியில் விடப்படுகிறார்கள். கலவரத்தில் அனாதையான குழந்தைகளை மில் காலின்ஸ் விடுதிக்கும், பிற அகதி முகாம்களுக்கும் அழைத்து வருகிற செஞ்சிலுவைச் சங்கச் சேவையாள ஐரோப்பியப் பெண்மணி கேட்கிறார்: \"பால், இவர்கள் எல்லாருக்கும் இடம் தரக்கூடிய நாடென்று உலகில் எங்காவது இருக்கிறதா?\" இது உரத்து உறுத்தும் காட்சிமொழியிலோ, வசனமொழியிலோ சொல்லப்படவில்லை. ஆனால், நீர்க்காமல் கையாளப்படும் விஷயங்கள்; கனமானவை; ருவாண்டாவுக்கு மட்டுமின்றி உலகச் சரித்திரத்துக்குப் பொதுமைப்படும் கேள்விகள் பொதிந்தவை. வெறும் அதிகார அரசியலுக்கு அப்பாற்பட்டு உயரும் மானுட அறம் பற்றிய கேள்விகளை உள்ளடக்கியவை. ருவாண்டா இனப்படுகொலையின் வீச்சை அளவெடுக்கும் 'செய்தி விவரண நாடகம்' அல்ல இப்படம். உப்பும் உறைப்பும் திரிப்பும் பரபரப்புமாய் வன்முறையைப் பரிமாறும் 'பொழுதுபோக்குப்' படமும் அல்ல. வன்முறையின் ஒவ்வோர் அங்குலத்தையும் விரிவாய்ச் சித்தரித்துப் பார்வையாளரை அதிர வைக்கும் உத்தி இயன்றவரை தவிர்க்கப்படுகிறது. கதை சொல்ல அல்வழியைத் தேர்ந்தெடுக்கவில்லை இயக்குநர் டெர்ரி ஜார்ஜ். இனவெறியையும் வன்முறையையும் கடந்த ஒரு தனிமனிதனின் கோணத்திலிருந்து இனவெறியையும் அறநெறியையும் பன்னாட்டு அரசியலையும் விவாதித்துச் செல்லும் படைப்பு ஹொட்டேல் ருவாண்டா. ஒரு சரித்திரப் படைப்புக் குரலின் தலையாய அம்சம், அது அச்சரித்திரப் பிரச்சினையை அணுகத் தேர்ந்தெடுக்கும் கோணமே. படைப்பாளியின் இந்தத் தேர்ந்தெடுப்பு பிரக்ஞைபூர்வமானது; அழகியல் பார்வையுடன் சம்பந்தப்பட்டது; அறவொழுக்கப் பார்வையிலிருந்து தப்பிக்க இயலாதது நன்றி: குமுதம்</span> - Rasikai - 08-25-2005 தகவலுக்கு நன்றி - Mathan - 08-26-2005 தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அஜீவன் அண்ணா - அனிதா - 08-26-2005 தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா - Mind-Reader - 08-26-2005 ஜீவன் இந்தக் கட்டுரை தீராநதியில் வந்தது. ஹொட்டல் ரூவண்டா பற்றி கடந்த எரிமலையிலும் ஒரு சிறப்பான கட்டுரை வந்திருந்தது. அதை தட்டச்சு செய்துதான் இங்கு இணைக்க முடியும். வேறு வழிகள் இருந்தால் யாராவது முயற்சித்து பாருங்கள். - AJeevan - 08-26-2005 Mind-Reader Wrote:ஜீவன் இந்தக் கட்டுரை தீராநதியில் வந்தது. ஹொட்டல் ரூவண்டா பற்றி கடந்த எரிமலையிலும் ஒரு சிறப்பான கட்டுரை வந்திருந்தது. முடிந்தால் இணையுங்கள் Mind-Reader. பலருக்கு பயனுள்ளதாக இருக்கும். ஸ்கான் பண்ணிக் கூட இணைக்கலாம். பாருங்கள் உங்கள் வசதி எப்படியென்று................... - Mind-Reader - 08-26-2005 என்னிடம் இருந்த எரிமலையை நண்பர் ஒருவர் கொண்டு போய்விட்டார். யாழ்கள நண்பர்களில் ஒருவர் அதை வைத்திருக்க மாட்டார்களா? - Aalavanthan - 08-29-2005 ஏப்ரல் மாத எரிமலையில் வந்த 3 பக்கங்களும் <img src='http://img112.imageshack.us/img112/4695/skann00019so.th.gif' border='0' alt='user posted image'> <img src='http://img85.imageshack.us/img85/5944/skann00021qt.th.gif' border='0' alt='user posted image'> <img src='http://img85.imageshack.us/img85/2852/skann00039ev.th.gif' border='0' alt='user posted image'> - AJeevan - 08-29-2005 Aalavanthan Wrote:ஏப்ரல் மாத எரிமலையில் வந்த 3 பக்கங்களும் நேரடியாக வாசிக்க: http://www.blogomonster.com/jeevan/19863/[size=15]நீண்டதொரு மௌனத்துக்குப் பின் வந்து தலை குனிந்து நிற்கும் தலைமுறையை இணைத்ததற்கு நன்றிகள்............. - Mind-Reader - 09-06-2005 ஆளவந்தான், ஜீவன் இருவருக்கும் நன்றிகள் . காலம் கடந்து வந்த நன்றியாக தயவுசெய்து நினைக்காதீர்கள். கடந்த சில வாரங்களாக சரியான வேலை பழு. செப்டம்பர் தொடங்கினாலே அது இரட்டிப்பாகி விடும். உங்களுக்கு தெரியாததா? |