Yarl Forum
குமுதம்.com - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: குமுதம்.com (/showthread.php?tid=331)



குமுதம்.com - Nellaiyan - 04-05-2006

வணக்கம் நண்பர்களே,

நலமாக இருக்கிறீர்களா!

குமுதம் டாட் காம் (குமுதம்.com) இணையப்பக்கங்கள் வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

1978 ஆம் ஆண்டிலிருந்து உங்களில் பலரோடு நான் உரையாடி இருக்கிறேன். என் தந்தையார் திரு.எம்.ஏ. சுவாமி மணிலா நகரில் ஆரம்பித்த "ரேடியோ வெரித்தாஸ்" என்ற வெரித்தாஸ் வானொலியில் 1978 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை பணியாற்றினேன். ஒவ்வொரு நாளும் செய்திகள், அரசியல் விமர்சனங்கள், பேட்டிகள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் வழியாக உங்களில் பலரோடு உறவாடும் வாய்ப்பு பெற்றேன். சிறப்பாக, ஈழத்திலிருந்து இன்று உலகெங்கும் பரவி வாழும் தமிழ்மக்கள், இளம் பிள்ளைகளாக, ஈழமண்ணிலிருந்து எங்களுக்கு (என் தந்தையாருக்கும், எனக்கும், என் சகோதரி ப்ளோரா ராணிக்கும்) எழுதிய இலட்சக்கணக்கான கடிதங்களை இன்றும் மறக்கவில்லை. உங்களில் பலரை ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சந்தித்த போது எல்லாம் வெரித்தாஸ் நாட்களை எண்ணி, மனதில் அசைபோட்டு அளவளாவியது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

1993 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முதன்முறையாக சாட்டிலைட் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. "ரபிபெர்னார்ட்" ஆக தொலைக்காட்சியில் நான் முகம்காட்டி பணியாற்றத் தொடங்கிய நேரத்தில், மிகவும் தொடக்க நிலையிலேயே என் மீது பரிவும், அன்பும் கொண்டவர்களாக தமிழக மக்கள் என்னை ஆதரித்தீர்கள். தொலைக்காட்சியில் என் முதல் நிகழ்ச்சியிலிருந்தே உங்களில் பலர் என் மீது மிகுந்த அன்பு கொண்டீர்கள்.

இப்பொழுது, தாயகத்திலிருந்து பல ஆயிரம் கல் தொலைவில் வாழும் உங்களையெல்லாம் குமுதம் இணையப்பக்கங்கள் வழியாக சந்திக்க வந்துள்ளேன்.

குமுதம் எப்பொழுதுமே தமிழர்களின் ரசனைக்கு ஏற்ற இதழாக இருந்து வந்திருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் பிலிப்பின்ஸ் நாட்டில் குடியேறி வாழ்ந்த எங்கள் குடும்பத்தினர் "குமுதம் எப்போது வருமோ?" என்று அஞ்சல் பெட்டியை ஆவலாய் பார்த்துக் கொண்டிருந்தது ஒரு காலம். இன்று "இணையம்" என்ற இணையற்ற தொழில் நுட்பம் வந்துவிட்டது. எப்போதும் குமுதம், எல்லோருக்கும், எங்கிருந்த போதும் குமுதம். இந்த குமுதம் இணைய இதழுக்கு நிர்வாக ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கிறேன்.

இறை அருளால், எண்ணற்றோரின் உழைப்பால் வளர்ந்து நிற்கும் குமுதம் இதழின் இணையப் பக்கங்கள் வழியாக இனி ஒவ்வொரு நாளும் உங்களை சந்திப்பேன்.

குமுதம் குழுமத்தின் இதழ்கள் அனைத்தையும் கொண்டதாக இதுநாள்வரை இருந்துவரும் குமுதம்.com இனி, மேலும் கூடுதலான பல அம்சங்களைக் கொண்டிருக்கும்.

உங்கள் கணிணி இனி ஒரு தமிழ் தொலைக்காட்சித் திரையாகவும் மாறிவிடும். ஆம், தொலைக்காட்சி நிகழ்ச்சிவடிவத்தில் குமுதம்.com பல நிகழ்ச்சிகளை வழங்கப்போகிறது.

1. செய்திகள் _ தமிழக மற்றும் இந்திய செய்திகளை, சூடான விமர்சனங்களோடு நான் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வழங்குவேன். உங்களுக்கு வசதிப்படும்போதெல்லாம், நினைக்கும் நேரமெல்லாம் தாயகச் செய்திகளை கேட்டு மகிழுங்கள்.

2. உலகத் தமிழர் உரையாடல் _ உலகெங்கும் வெற்றிக்கொடிகட்டி உலாவரும் சாதனைத் தமிழர்களை நான் சந்தித்து எடுக்கும் பேட்டிகள். இந்த நிகழ்ச்சியில் தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள தமிழர் அல்லாத தலைவர்களின் பேட்டியும் உண்டு.

3. உங்கள் ஊர் செய்திகள் _ தமிழகத்தின் எந்த மாவட்டத்திலிருந்து நீங்கள் சென்றிருந்தாலும் உங்கள் மாவட்டம் பற்றிய அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களை வந்து சேரும்.

4. தமிழ் சினிமா _ தமிழ் திரை உலகம் நம்மை பரவசப்படுத்தும் மந்திர புரி. கவலைமறக்க, களிப்புற தமிழ் சினிமா என்றும் வற்றாத இன்பவெள்ளம். பல வடிவங்களில், பாடல்களாக, காட்சிகளாக, நடிகர், நடிகைகள், தொழில் நுட்பத்துறையினர் பேட்டிகளாக தமிழ் திரைஉலகம் உங்களை இணையத்தில் வரவேற்கும்.

5. ஜோதிடக்கணிப்புகள் _ வானசாஸ்த்திரம் என்பது நம் முன்னோரின் அறிவாற்றலுக்கு ஓர் எடுத்துக்காட்டு. அதனை எந்த அளவு அன்றாட வாழ்வில் பயன்படுத்திக் கொள்வது என்பதையும், நாம் வருமுன்காத்து செயல்பட நம் ஜாதகங்களை கணித்து தெரியவும் புகழ்பெற்ற ஜோதிட ஆசான் ஏ.எம்.ஆர். குமுதம்.comல் நமக்கு உதவுவார்.

இப்படி தொலைக்காட்சி வடிவில் நிகழ்ச்சிகளையும், குமுதம், குமுதம் ரிப்போர்ட்டர், குமுதம் சிநேகிதி, குமுதம் ஜோதிடம், குமுதம் பக்தி, குமுதம் தீராநதி ஆகிய இதழ்களையும் இனி நீங்கள் குமுதம்.com இணையப் பக்கங்களில் பெறலாம்.

காலமும், எல்லையும் இல்லா அண்டப் பெருவெளியில் மலரும் புதுமலராக குமுதம்.com புதிய பொருளடக்கத்துடன் உங்களை நாடி வருகிறது. வாஞ்சையுடன் வரவேற்பீர்கள் என்பதில் ஐயமில்லை.

மீண்டும் சந்திப்போம்,


நன்றி, வணக்கம்,

அன்பன்,

ரபி பெர்னார்ட்
குமுதம்.com

http://www.kumudam.com/Special/dotcom.php