Yarl Forum
ஆயுதக்குழுக்களை களைந்திடுக - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஆயுதக்குழுக்களை களைந்திடுக (/showthread.php?tid=3248)



ஆயுதக்குழுக்களை களைந்திடுக - வினித் - 09-20-2005

ஆயுதக்குழுக்களை களைந்திடுக: சிறிலங்கா அரசுக்கு உதவி வழங்கும் நாடுகள் வலியுறுத்தல்!!
[செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2005, 15:16 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்]
இலங்கையின் வடகிழக்கில் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஆயுதக்குழுக்களிடமிருந்து சிறிலங்கா அரசாங்கம் ஆயுதங்களைக் களைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் தலைவர்களினால் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நியூயோர்க்கில் நேற்று திங்கட்கிழம கூடிய இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தின் இறுதியில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

இலங்கையின் சமாதான நடவடிக்கைகள், இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் படுகொலை, அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் யுத்த நிறுத்த உடன்படிக்கை என்பன உட்பட பல்வேறு விடயங்கள் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டன.

யுத்த நிறுத்தத்தைப் தொடர இருதரப்பினரும் பல விடயங்களை அமுல்படுத்த வேண்டும் என்று உதவி வழங்கும் நாடுகள் வலியுறுத்தியுள்ளனர்.

அந்த அறிக்கையில்,

2002 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை பாதுகாப்பதிலேயே சமாதான முயற்சிகள் தங்கியுள்ளன.

தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைகளே யுத்த நிறுத்தத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளன.

யுத்த நிறுத்த உடன்படிக்கையை சரியான வகையில் அமுல்படுத்துவது அரசாங்கத்தினதும் விடுதலைப் புலிகளினதும் கடமையாகும். சமாதான நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் அக்கறையுடன் பங்களிப்பு வழங்குவதை வெளிப்படுத்தக்கூடிய வகையில் செயற்பட வேண்டும்.

அரசியல் படுகொலைகள் உட்பட அனைத்து படுகொலைகளையும் அவர்கள் நிறுத்த வேண்டும். சிறுவர்களைப் படையில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும்.

அத்துடன் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு அமைய வடக்கு கிழக்கில் இயங்கும் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களைக் களைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையின் சமாதான நடவடிக்கைகளை தொடர்வதற்காக முன்னாள் யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுத் தலைவர் ட்ரொன்ட் ப்றூஹொவ்டே நோர்வேயின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


- வினித் - 09-20-2005

துணைப்படைகளின் ஆயுதங்களை களைவது அல்லது வடகிழக்கில் இருந்து வெளியேற்றுவது அரசின் கடமை
இணைத்தலைமை நாடுகள் வலியுறுத்து; உடன்படிக்கையை சீராக அமுல்படுத்தவும் கோரிக்கை

(நமது நிருபர்)

யுத்த நிறுத்த உடன்படிக்கையைச் சீராக அமுல்படுத்தும் வகையில் நடைமுறை சாத்தியக் கூறுகள் தொடர்பாக ஆராயுமாறு அரசாங்கத்தையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் இலங்கைக்கு உதவி வழங்கும் டோக்கியோ மாநாட்டில் பங்கு பற்றிய இணைத் தலைமை நாடுகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன

.இராணுவத்துடன் இணைந்து செயற்படும் துணைப் படை யினரின் நடவடிக்கைகள் தொடர்ச்சியான வன்முறைகளுக்கும், அமைதியீனங்களுக்கும் தூபமிடும் வகையில் அமைந்திருப்பது மிகவும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள மேற்படி நாடுகள், அவர்களின் ஆயுதங்களைக் களையச் செய்வது அல்லது வடக்கு கிழக்கிலிருந்து அவர்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது யுத்த நிறுத்த உடன்படிக்கையின் படி அரசாங்கத்தின் கடமை என்றும் தெரிவித்துள்ளன.

அத்துடன், அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் தற்பொழுது மிகுந்த சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக தாங்கள் கருதுவதாகவும் இணைத் தலைமை நாடுகள் தெரிவித்துள்ளன


- kuruvikal - 09-20-2005

[b]ராணுவத்தை

செப்டம்பர் 20, 2005

கொழும்பு:

தமிழர்கள் அதிகம் வசிக்கும் வட கிழக்குப் பிராந்தியத்திலிருந்து ராணுவத்தை உடனடியாக விலக்கிக் கொள்ளுமாறு, இலங்கை அரசுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், நார்வே, ஜப்பான் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கை அமைதித் தீர்வுக்காக இலங்கை அரசுடன் இணைந்து நார்வே சமரச முயற்சியில் இறங்கியுள்ளது. இலங்கை ராணுவம் மற்றும் அரசால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பகுதிகளுக்கு நிதியுதவி செய்ய பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், நார்வே மற்றும் ஜப்பான் ஆகியவை இடம் பெற்றுள்ள அந்த நாடுகளின் கூட்டம் நியூயார்க் நகரில் நடந்தது. அப்போது இலங்கை வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமரின் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அமைதித் தீர்வுக்கான முயற்சிகளில் காணப்படும் சுணக்கம் குறித்து இக்கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அமெரிக்கா மற்றும் நார்வே நாட்டு தூதரகங்கள் கொழும்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் இலங்கை ராணுவம் நிறுத்தி வைத்திருக்கும் ராணுவம் மற்றும் துணை ராணுவப் பிரிவுகள் தொடர்ந்து நிலைகொண்டிருப்பதால், அப்பகுதியில் அசாதாரண நிலை காணப்படுகிறது.

அதிக அளவில் வன்முறைகள் ஏற்படுவதற்கும், நிம்மதியின்மை காணப்படுவதற்கும் இதுவே காரணம் எனக் கருதுகிறோம். எனவே இந்த படையினரை இலங்கை அரசு விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது இவர்களிடம் உள்ள ஆயுதங்களையாவது குறைக்க வேண்டும்.

இலங்கையில் அரசியல் படுகொலைகள் தொடரக் கூடாது. இதை இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் கூட்டாக உறுதி செய்ய வேண்டும். சிறுவர்களை படையில் சேர்ப்பதை விடுதலைப் புலிகள் நிறுத்த வேண்டும். அமைதித் தீர்வை நோக்கி நாம் அனைவரும் அடியெடுத்து வைக்க அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்.

வன்முறைகளும், படுகொலைகளும் தொடர்ந்து நடந்தால், அமைதித் தீர்வுக்காக முயற்சிக்கும் அனைவருக்குமே அது சோர்வையும், தோல்வியையும் கொடுக்கும். அமைதி ஒப்பந்தத்தை மதித்து நடக்க வேண்டிய பொறுப்பும், கடமையும், இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தற்ஸ்தமிழில் இப்படி போட்டிருக்கிறார்களே...!