Yarl Forum
தட்டிவான் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: தட்டிவான் (/showthread.php?tid=3113)

Pages: 1 2


தட்டிவான் - Mathan - 09-29-2005

Thatti Van (தட்டிவான்)


கொடிகாமம், யாழ்ப்பாணத்திலுள்ள முக்கியமான சிறிய நகரங்களில் ஒன்று. அதன் கேந்திர நிலையமும், யாழ்ப்பாணத்தின் தேங்காய் தேவைகளைப்பூர்த்தி செய்யும் தென்னந்தோட்டங்களும் கொடிகாமத்தின் முக்கியத்துவத்திற்கான காரணங்கள். புகையிரதம் ஓடிய காலத்தில் வடமராட்சியில் இருந்தவர்களுக்கு கொடிகாமந்தான் போக்குவரத்திற்கு வசதியான புகையிரத நிலையம். ஆக தென்பகுதிகளுக்கு பிரயாணம் செய்பவர்கள், தேங்காய் வியாபாரிகள், ஏனையோர் என்று பலரும் பயணிக்கும் பருத்தித்துறை- கொடிகாமம் வீதி முக்கியமான ஒரு வீதி. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் தார் ஊற்றப்பட்டு, பின்னர் ஒரு சில சமயங்களில் மட்டும் குழிகள் நிரவப்பட்டு மழையில் அரித்துச் செல்லப்பட்டு, அந்த வீதி சந்திரமண்டலத்தை ஞாபகப்படுத்தும். உயரங்குறைந்த ஜப்பானிய தயாரிப்பு வாகனங்கள் அந்த வீதியால் செல்லமுடியாதோ என்று சந்தேகப்படும் ஒரு நிலை.

விண்வெளிக்கு முதலில் ராக்கெட் அனுப்பிய, முதலில் மனிதனை அனுப்பிய ரஷ்யா ஏன் முதலில் மனிதனை சந்திரனுக்கு அனுப்பவில்லை என்பதற்கு இப்படியும் ஒரு கதை உண்டு (உண்மையில் நீல் ஆம்ஸ்ரோங் நிலவில் இறங்கினாரா என்று சந்தேகப்படுவது வேறு கதை). சந்திரனுக்கு அமெரிக்கர்களுக்கு சிலநாட்கள் முன்னரேயே புறப்பட்ட ரஷ்யர்கள் பருத்தித்துறை-கொடிகாமம் வீதியைப்பார்த்துவிட்டு விண்கலத்தை திசைதிருப்பி மணற்காட்டில போய் இறங்கிவிட்டார்களாம். மரங்களில்லாத மணற்கும்பிகளுக்கு நடுவில் இருந்துகொண்டு அங்கிருந்த மணலை ஆராய்ச்சி செய்தார்களாம் (அதில்தான் மணற்காட்டு மணலில் சிலிக்கா செறிவு மிகவும் அதிகமாகவுள்ளது என்பதைக் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை). யாரோ பெர்மிட் இல்லாமல் முகமூடியெல்லாம் போட்டுக்கொண்டுவந்து வந்து களவாக மணல் அள்ளுறாங்கள் என்று நினைத்த பொலிஸ், ரஷ்யர்களைப் பிடித்து உள்ளே போட்டுவிட்டதாம். அந்த இடைவெளியில் அமெரிக்கர்கள் சந்திரனுக்குப் போய்விட்டார்களாம்.

இப்படிப்பட்ட பருத்தித்துறை- கொடிகாமம் வீதியில் பொதுமக்கள் போக்குவரத்துச் சேவையை பல தசாப்தங்களாக வழங்கிவரும் தட்டிவான்கள் தனித்துவமானவை. ஐம்பது வருடங்களிற்கு மேற்பட்ட வயது, இரும்பினாலான துருத்திக்கொண்டிருக்கும் முகப்பு, மரப்பலகைளால் செய்யப்பட்டு இரும்புச்சட்டங்களால் பிணைக்கப்பட்ட உடற்பகுதி, மரப்பலகைகளாலான ஆசனங்கள், 4 அடிக்கு மேற்பட்ட உயரமுடையவர்கள் எழுந்து நிமிர்ந்து நிற்க இயலாத தாழ்ந்த கூரை, எந்தக்கிடங்கையும் தாண்டக்கூடிய பெரியசிற்கள், கூரையில் வைக்கப்பட்டிருக்கும் மேலதிக சில்லு, கண்ணாடிகளற்ற திறந்த யன்னல்கள், காற்றினை அழுத்தி இயங்கும் ஒலியெழுப்பி (horn), அதனுடைய தனித்துவமான "பாம் பாம்" ஒலி, இயந்திர ஒலியும் மரத்தாலான உடலின் அதிர்வும் சேர்வதால் ஏற்படும் விசித்திர ஒலி என்று தட்டிவானின் தனித்துவ அடையாளங்கள் பல.

சிலதசாப்தங்களுக்கு முன்பு பல பாதைகளிலும் போக்குவரத்துச் சேவையிலீடுபட்ட தட்டிவான்கள் வசதியான பேருந்து (பஸ்) மற்றும் சிற்றூர்தி (மினிபஸ்) சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதும் பொதுமக்களால் கைவிடப்பட்டன. புதிய வசதிகளுடன் போட்டிபோட முடியாத தட்டிவான்களின் உரிமையாளர்கள் பலரும் அவற்றைக் கைவிடத்தொடங்கினர். இந்நிலையில் பருத்தித்துறை- கொடிகாமம் வீதியின் நிலை காரணமாக போக்குவரத்துச் சேவையிலீடுபட பேருந்து மற்றும் சிற்றூர்தி உரிமையாளர்கள் ஆரம்பத்தில் தயங்கியதால் அந்த வீதியின் போக்குவரத்துச் சேவையை தட்டிவான்களின் உரிமையாளர்கள் கெட்டியாகப் பற்றிக்கொண்டனர். சிறிதுகாலத்தின் பின் போக்குவரத்துச் சேவையிலீடுபட முயன்ற சில சிற்றூர்திகளும் தட்டிவான் உரிமையாளர்களின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டன. ஆக அரிதான அரசுப் பேருந்து சேவையைத் தவிர (பல காலங்களிலும் இயங்காத), பருத்தித்துறை- கொடிகாமம் வீதியின் பொதுமக்கள் போக்குவரத்துச் சேவை என்பது, இன்றுவரை தட்டிவான்களின் ஏகபோகத்திலேயேயுள்ளது. போர்க்காலத்தில் டீசலுக்கு தடைவிதிக்கப்பட்ட போதும் கூட மண்ணெண்ணெய்யும் நல்லெண்ணெய்யும் கலந்த கலவையில் எந்தவிதப் பிரச்சனைகளுமின்றி ஓட தட்டிவானின் எதையும் தாங்கும் இயந்திரம் ஒத்துழைத்தது.

அதிகாலை நேரத்தில் பருத்தித்துறை பேருந்து நிலயத்திற்கு மந்திகை, துன்னாலை, நெல்லியடி போன்ற இடங்களிருந்து வரும் தட்டிவான்கள் அங்கிருந்தே தமது சேவையை ஆரம்பிக்கும். பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் மட்டுமே அநேகமாக வாகனத்துள் உட்கார்ந்து பயணஞ்செய்வார்கள். "இளந்தாரிகள் (இளைஞர்கள்) எல்லாரும் பின்னால ஏறுங்கோ", "சாமான்களையெல்லாம் மேல போடுங்கோ", "அப்பு வந்து டிரைவருக்குப் பக்கத்தில இருங்கோவன்" என்று கொண்டக்டர் சத்தம்போட்டு பயணிகளை பொருத்தமான இடங்களில் இருத்துவார். கொண்டக்டர் "அண்ணை றைற்" சொல்ல, தட்டிவான் புறப்படும். தட்டிவான் மந்திகைச்சந்தியில் சிறிதுநேரம் நிறுத்தப்பட மந்திகை ஆசுப்பத்திரியில் (வைத்தியசாலையில்) தங்கியிருந்து சிகிச்சை பெற்றவர்களும், பிள்ளைப்பேற்றிற்கு வந்து கைக்குழந்தைகளுடன் திரும்புபவர்களும், அவர்களின் உறவினர்களும் தலையணை, கூடைகள், பைகளுடன் ஏறிக்கொள்வார்கள். அவர்களுக்கு இருக்கைகளைக் கொடுத்துவிட்டு மற்றவர்கள் எழுந்துகொள்வார்கள். இளைஞர்கள் வாகனத்தில் பின்புறம் சங்கிலியில் தொங்கும் தட்டில் நின்று கூரையிலுள்ள இரும்புச்சட்டத்தைப் பிடித்தபடி புழுதியில் குளித்து வெயிலில் காய்ந்தபடி பயணிப்பார்கள். ஆனாலும் காற்றோட்டத்தால் வெய்யில் உறைப்பதில்லை. தட்டிவானிற்கு shock-absorber இருப்பதாகவே தெரிவதில்லை (உணர முடிவதில்லை). ஒவ்வொரு கிடங்கையும் வேகம் குறையாது துள்ளிக்குலுங்கி தட்டிவான் கடக்கும்போது பயணிகள் எல்லாரும் பிடைத்தெடுக்கப்படுவார்கள். ஆனாலும் யாருமே டிரைவரில் கோபப்படுவதில்லை. "டிறைவரண்ணை! அந்த சிவத்த கேற்றடியில கொஞ்சம் நிற்பாட்டிறியளே?" என்றால் அந்த வீட்டுவாசலில்கூட பயணியை இறக்கிவிடுவார்கள். வாடிக்கையாக பயணப்படும் தேங்காய் வியாபாரிகளும், நாவல்பழம் விற்கும் ஆச்சிகளும் வாகனத்தின் சத்தத்திற்கு மேலாக சத்தமாக குடும்பக்கதைகளை, ஊர்ப்புதினங்களை அலசிக்கொண்டிருக்க மற்றவர்கள் சுவாரசியமாக கேட்டுக்கொண்டிருப்பார்கள். வழியில் சுட்டிபுரம் அம்மன் கோவில் வாசலில் தட்டிவான் நிறுத்தப்பட்டதும் கொண்டக்டர் ஓடிச்சென்று கற்பூரம் கொழுத்தி உண்டியலில் காசுபோட்டுவிட்டு வருவார். பயணிகள் சிலரும் இறங்கிப்போய் கும்பிட்டுவிட்டு வருவார்கள். இறங்க முடியாத சிலர் செல்பவர்களிடம் உண்டியலில் போடக் காசு அல்லது கற்பூரம் கொடுத்துவிடுவார்கள். கோயிலுக்கு போனவர்கள் வரும்போது கையில் திருநீறு கொண்டுவந்து எல்லோருக்கும் நீட்டுவார்கள். எல்லோரும் மனதாரக்கும்பிட்டு திருநீறு பூசியதும் தட்டிவான் புறப்படும். கொடிகாமத்தைத் தட்டிவான் அடைந்ததும் பயணிகள் இறங்கிக்கொள்ள, சிலர் டிரைவருக்கும் கொண்டக்டருக்கும் "போயிட்டு வாறன்" சொல்லிவிட்டுப் போவார்கள். தட்டிவானை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு டிரைவரும் கொண்டக்டரும் தேத்தண்ணிக்கடையிற்குப் (தேநீர்க்கடை) போய்விடுவார்கள்.

கொடிகாமத்தில், பருத்தித்துறை செல்லும் பயணிகள் வந்து ஏறிக்கொள்ள, தேங்காய் வியாபாரிகள் மூட்டைகளைக் கொண்டுவந்து கூரையில் ஏற்றுவார்கள். வெற்றிலை சப்பியபடி டிரைவர் வந்து ஏறிக்கொள்வார். கொண்டக்ரர் "அண்ணை றைற்" சொன்னதும் மீண்டும் தட்டிவான் உறுமலுடன் பயணத்தை ஆரம்பிக்கும். அதே கலகலப்பு, துள்ளல் குலுக்கல்களுடன் பயணம் தொடரும்.

எத்தனையோ வசதிகள் கொண்ட குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேரூந்துகளில் பயணஞ்செய்பவர்கள் கூட அந்தளவு சுவாரசியமான மகிழ்ச்சியான உயிரோட்டமான பயணத்தை மனதார அநுபவிப்பார்களா என்பது சந்தேகமே.

நன்றி - விஜயாலயன்


- Mathan - 09-29-2005

இந்த விஜயாலயனின் தட்டிவான் கட்டுரையை முன்பு எங்கோ யாழில் இணைத்த ஞாபகம் ஆனால் இணைப்பை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது முகத்தார் ஆரம்பித்த நண்பர்களிடையே உபயோகிக்கும் சொற்கள் தலைப்பில் தட்டிவான் குறித்து பேசப்படுவதால் இதனை மீண்டும் இணைத்திருக்கின்றேன். தட்டிவானின் படங்கள் போடலாம் என்று தேடினேன் கிடைக்கவில்லை, யாரிடமாவது படங்கள் இருந்தால் இணையுங்கள்.

எனக்கு இந்த தட்டிவான் குறித்து தெரிந்தது சிறுவயதில் யாழ்பாணத்தில் இருந்து நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோயில் செல்லும் போதுதான். தென்மராட்சி பகுதிக்கு அதிகம் செல்லவோ பழகவோ வாய்ப்பு கிடைக்காததால் அந்த பகுதி அனுபவங்கள் குறித்து சொல்ல முடியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லுங்கள். குளத்திற்கு இது பற்றி தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். குளம் படங்கள் ஏதாவது இருக்கா?


- narathar - 09-29-2005

அப்ப முகத்தார் சொன்ன தட்டிவான் இதோ மதன்?


- ANUMANTHAN - 09-29-2005

தட்டிவானுக்கு(shock absober) இல்லை! அதற்குப் பதிலாக வில்லுத்தகடுதான் உண்டு!


- ANUMANTHAN - 09-29-2005

தட்டிவானில் பலமுறை பயணம் செய்த அனுபவமுண்டு!
அதை மீள நினைவுபடுத்தியதற்கு மிக்க நன்றிகள்!


- Mathan - 09-29-2005

narathar Wrote:அப்ப முகத்தார் சொன்ன தட்டிவான் இதோ மதன்?

அது எனக்கு தெரியாது


- inthirajith - 09-29-2005

முதலில் மூளாய் அச்சுவேலி மார்க்கதில் ஓடியது அம்மா மடியில் போன ஞாபகம் சந்நதிக்கு பக்கங்களில் கண்ணாடி இல்லை தார்ப்பால் தான் மழைக்கு மறைப்பு பின்னால் தூங்கும் தட்டியில் பயணம் செய்வது சந்தோசம் ஏ.சி இல்லாமல் குளிரும் பண்டதரிப்பு தெல்லிப்பழையில் விவசாயபொருட்கள் ஏற்றுவினம் அது ஓர் இனிமையான அனுபவம் கியர் மாற்றும் போதுகாது கிழியும்


- KULAKADDAN - 09-29-2005

மதன் படம் கைவசம் இல்லை. ஆனால் இணையத்தில் பாத்த ஞபகம்


- narathar - 09-29-2005

<img src='http://img152.imageshack.us/img152/364/tvan8pt.jpg' border='0' alt='user posted image'>


http://www.senthoor.com/


- Mathan - 09-29-2005

தட்டிவான் படத்திற்கு நன்றி நாரதர்

இந்த தட்டிவானை யாழ்பாணம் தவிர தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் பார்த்திருக்கின்றேன். குறிப்பாக தாய்லாந்து தலைநகரம் பாங்கொக்கில் இருந்து மணிநேர தொலைவில் உள்ள பத்தையா கடற்கரை (Pattaya Beach) பகுதிகளில் இந்த தட்டிவான் உல்லாச பிரயாணிகளிடையே பிரபல்யமானது. ஒரு குழுவாக சுற்றுலா செல்லும் போது இந்த தட்டிவானை வாடகைக்கு எடுத்து சிறிய தூரங்களுக்கு சுற்றி திரியலாம். இதற்கு வாடகையும் மிக மிக குறைவு என்பதுடன் தாய்லாந்தின் வெப்பமான காலநிலைக்கு மிக பொருத்தமாக இருக்கும்.


- kurukaalapoovan - 09-29-2005

பார ஊர்தியை பயணிகள் காவியா மாத்திப் பாவிக்கிறதால் தான் பயணிகள் வில்லுத்தகட்டின்ரை வில்லங்கத்தை அனுபவிக்க வேணும்.

இருந்தாலும் சாதாராண மாட்டு வண்டில விட பறவாயில்லை. <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->

யாரும் வில்லு வண்டியில போய்யிருக்கிறயளே? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sathiri - 09-29-2005

ஓஓஓஓ மதன் பத்தையாக்கு போனனீரோ அங்கை மோட்டார் சைக்கிளை பாதியா வெட்டி ஓட்டோ செய்து வைச்சிருப்பாங்கள்


- Mathan - 09-29-2005

<img src='http://www.thaiworldview.com/travel/jpg/travel03.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.thaiworldview.com/travel/jpg/travel07.jpg' border='0' alt='user posted image'>

நீங்கள் இதையா சொல்றீங்க? இதூ <b>டுக் டுக் (Tuk-Tuk). </b>கொழும்பில் திரீ வீலர் போல் தாய்லாந்தில் டுக் டுக் பிரபல்யம்.


- sathiri - 09-29-2005

இரண்டாவது படம் தான் நான் சொன்னது. இப்ப பாங் கொக்கிலை உது இல்லை தடை ஆனாலும் கிராம புறங்களிலை ஓடி திரியிது நாங்கள் 6 7 பெர் உதிலை ஏறி போறனாங்கள்


- narathar - 09-29-2005

மதன் பட்டயாவில வேற என்ன பாத்தீங்க?


- Mathan - 09-29-2005

narathar Wrote:மதன் பட்டயாவில வேற என்ன பாத்தீங்க?

பட்டயா (அல்லது பத்தையா) தாய்லாந்தில் பிரசித்தி பெற்ற கடற்கரைகளில் ஒன்று. வெளிஉலக தொந்தரவுகள், போன் அழைப்புக்கள், டெட்லைன்கள் இன்றி அமைதியாக விடுமுறையை அனுபவிக்கலாம். அவர்களில் தாய் பாத் என்று அழைக்கப்படும் பணமும் மதிப்பு குறைவு, அத்துடன் பொருட்களும் நல்ல கொள்ளை மலிவு. அதுதவிர கடற்கரையும் மிக பிடித்திருந்தது. அந்த இடத்தில் இருந்து படகு ஒன்றை வாடகைக்கு எடுத்து சென்றால் இன்னொரு அத்துவான தீவுக்கு போகலாம். அந்தமாதிரி அமைதியாக இருக்கும். அந்த தீவில் ஆட்கள் யாருமே இல்லை. அனைத்து பொருட்களையும் கொண்டு சென்று காம்பிங் மாதிரி இருக்கலாம். Barbecue போடலாம். அதுதவிர இன்னொரு இடம் இருக்கின்றது .... அங்கு நமக்கு பிடித்தமான Watersports அதிகம் செலவில்லாமல் செய்யலாம்.


- narathar - 09-29-2005

நானும் பல வருடங்களுக்கு முன்னர் அங்கே போயிருந்தேன் அது தான் கேட்டேன்,சில நண்பர்கள் AIT இல் படித்துக் கொன்டிருந்த போது போனேன்.அதனால் நீங்கள் சொன்ன இடங்களுக்குப் போகவில்லை.


- MUGATHTHAR - 09-29-2005

ஜயோ நான் என்ன தட்டிவானை சொல்ல இங்கை அதுக் கொருதலைப்பே வந்திட்டுது ம்..ம்...அதுவும் நல்லதுதான் வானைப் பற்றி தெரிஞ்சு கொண்டியளே அது போதும்
sathiri Wrote:ஓஓஓஓ மதன் பத்தையாக்கு போனனீரோ அங்கை மோட்டார் சைக்கிளை பாதியா வெட்டி ஓட்டோ செய்து வைச்சிருப்பாங்கள்
எங்கை சாத்திரி மந்திகை ஆசுபத்திரியிலையோ அது வந்து அந்த ஓட்டோவிலை நேரா போய் இருந்தா வருத்தம் மாறியிட்டுது எண்டு செக் பண்ண டாக்குத்தர் வைச்சிருக்கிறார் போல...


- இவோன் - 09-30-2005

தட்டிவான் பற்றின விஜயபாலனின் ஆக்கத்தை நான் மரத்தடியில் பார்த்திருக்கிறேன். நல்ல சுவையான பதிவு. ஏதோவோர் அச்சிதழிலும் இப்பதிவு வந்திருந்தது.
இப்போதும் தட்டிவான் பாவனையில்தான் இருக்கிறது. போனவருடம் வரை முகமாலையிலிருந்து பருத்தித்துறைக்கான சேவையைச் செய்ததாக ஞாபகம்.
அதில புழுதி குடிச்சுக்கொண்டு போற சுகம் வருமே?

யாழ்ப்பாணமாவது பரவாயில்லை. ஆனா வன்னியில முழுக்க முழுக்க புழுதிதான். அதுக்கால தட்டிவானில போய் வாறது சொர்க்கத்துக்குப் போய் வாறமாதிரியிருக்கும்.


- inthirajith - 09-30-2005

ம்ம் இதை விட வேறு எதோ நாரதர் கேட்கிறார் ம்ம் நீங்கள் கழுவுற மீனில் நழுவுர மீன்