Yarl Forum
ரணிலா? மகிந்தவா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: ரணிலா? மகிந்தவா? (/showthread.php?tid=2718)



ரணிலா? மகிந்தவா? - வதனா - 10-28-2005

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக விடுதலைப் புலிகள் எவ்வித நிபந்தனையையும் தமிழ் மக்களுக்கு விடுக்கவில்லை.

வாக்களிப்பது, அல்லது வாக்களிக்காது விடுவது அல்லது ஒரு வேட்பாளரை ஆதரிப்பது என்பது தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் என்ற கருத்து தற்போது விடுதலைப் புலிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழினம் சிங்களத் தலைமைத்துவங்களால் மிகமோசமான முறையில் ஏமாற்றப்பட்டது. தற்போதும் ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் இன்னுமொரு முறை சிங்களப் பேரினவாதத்தினால் ஏமாற்றப்படுவற்கு தமிழர் தரப்பு தயாராகவில்லை.

தற்போது தேர்தலில் போட்டியிடுகின்ற இரு பிரதான கட்சி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் தமிழ் மக்களுக்கு சுயாட்சியையோ அல்லது சுயநிர்ணய உரிமையையோ வழங்கக் கூடிய வகையிலில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி சமாதானத்தைக் கொண்டு வருவதாக தற்போது பிரசாரக்களத்தில் ஈடுபட்டுள்ளது. தற்போது பலவீனப்பட்டு இருக்கும் போர் நிறுத்த உடன்படிக்கையைப் பலப்படுத்துவது, விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த் தைகளை மீள ஆரம்பிப்பது, மற்றும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு போன்றன ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதனை அடிப்படையாக வைத்து தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை நம்பி வாக்களித்தால் மட்டும் சமாதானம் வந்துவிடப்போவதில்லை. ஏனெனில் எந்தவொரு சமாதானத் தீர்வும் மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அமுல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார் இது முக்கிய பிரச்சினை.

ஏனெனில் மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படும் போது நிச்சயம் அது பேரினவாதிகளினால் தோற்கடிக்கப்படும் என்பது உறுதி. அதேவேளை பிரதான கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இணக்கப்பாட்டுடன் தான் சமாதான முயற்சி மேற்கொள்ளப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

இதுவும் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கான சூழலை ஒருபோதும் ஏற்படுத்தாது. ஏனெனில் இனவாதக் கூட்டுடன் இணைந்திருக்கும் சுதந்திரக்கட்சி தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிக்கு ஒத்துழைக்குமா? என்றால் அது சாத்தியமற்றதே. இதேவேளை இன்று சமாதான சூழல் பலவீனப்பட்டுப் போவதற்கும் காரணம் போர் நிறுத்த சூழலில் தமிழ் மக்கள் மீது திணித்திருக்கின்ற நிழல் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

எனவே நிழல் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாயின் ஒட்டுப் படைகளின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும். இது போர் நிறுத்த உடன்படிக்கையில் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இவ்விவகாரம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி மக்கள் நிகழ்ச்சி நிரல்"என்ற தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதனையும் தெளிவுபடுத்தவில்லை. பின்னர்கூட தேர்தல் பிரசார மேடைகளில் கூட இவ்விடயம் தெளிவுபடுத்தப்படாதுள்ளது.

உண்மையில் இவ்விவகாரமே சமாதானச் சூழலை மிக ஆபத்தான நிலைக்குள் தள்ளி விட்டுள்ளது. அண்மையில் திருமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவை விடுத்திருந்த அறிக்கையில் ஒட்டுப்படைகள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தமிழ் மக்கள் பேரவையின் இந்த வேண்டுகோள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் எவ்வித பதிலுமளிக்கவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும். மீண்டும் போர் மூளக்கூடாது எனும் இதய சுத்தியுடனான எண்ணங்கள் ஐ.தே.கட்சிக்கு இருக்குமானால் இதற்கான பதிலைத் தெளிவுபடுத்தியிருக்க முடியும். ஆனால் அவ்வாறான எண்ணம் இல்லாத நிலை தெளிவாகத் தெரிகிறது.

இதேவேளை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலையையடுத்து அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் தற்போது மூன்றாவது தடவையாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

முதலாவது தடவை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பன எதிரும் புதிருமாக நிற்கின்ற சூழலில் நிச்சயம் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்காது என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பார்ப்புக்கு எதிர்மறையாக ஐ.தே.கட்சி அவசரகாலச் சட்டம் ஒரு மாதம் அமுல்படுவதற்கு ஆதரவளித்தது. அதேவேளை ஒரு மாதத்திற்கு மட்டும் தான் ஆதரவு வழங்குவோம். அதன் பின்னர் எந்தவித காரணம் கொண்டும் ஆதரவளிக்க மாட்டோம் எனத் தெரிவித்த ஐ.தே.கட்சி மூன்றாவது முறையாக அவசரகாலச் சட்டம் அமுலாக்குவதற்கு தமது ஆதரவை வழங்கியுள்ளது.

இதன் மூலம் தமிழ் மக்களின் முகத்தில் கரிபூசியுள்ளது என்றே கூறலாம். ஏனெனில் தற்போது அவசரகாலச் சட்டம் தேர்தல் பாதுகாப்பு என்ற போர்வையில் சிறிலங்கா படைத்தரப்பின் சோதனைக் கெடுபிடிகள் அதிகரித்துச் செல்கின்றது.

தமிழ் மக்கள் பல்வேறு அச்சுறுத்தலுக்கும் முகம் கொடுத்து நிற்கின்றனர். இந்த நிலையில் இதய சுத்தியுடன் சமாதான முன்னெடுப்புக்களில் பங்கு கொள்கின்ற கட்சியாகவிருந்தால் அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருக்கக்கூடாது.

இதேவேளை கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இரு தரப்பும் தேர்தலில் கடும் போட்டியில் குதித்திருக்கும் நிலையில் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதியும் ஜனாதிபதி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியிருப்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு என்னதான் பேசியிருப்பார்கள் என ஆராய்ந்த போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் இரு தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்படப் போவதாகத் தீர்மானித்துள்ளார்களாம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதியானால் அவருக்குப் பக்க வாத்தியம் பாடும் ஒருவராக அம்மையார் செயற்படலாம்.

ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி நிர்ணயம், வேட்பு மனுத் தாக்கல் என்ற நிலையிலிருந்து காலம் தேர்தலை அண்மித்துக் கொண்டிருக்கும் போது அவரது அதிகாரங்களும் வலுவிழந்து போகின்ற நிலையை அவதானிக்க முடியும். பல்லுப் போனால் சொல்லுப் போச்சு"என்று கூறுவது போன்று பதவி துறந்த பின்பு ரணிலுடன் சந்திரிகா இணைந்து செயற்படுவது என்பது தீர்வு குறித்த நகர்வுகளுக்கு எந்தளவுக்குப் பயன்பாட்டை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறி.

ஒருவேளை மகிந்த ஜனாதிபதியானால் மகிந்தவின் அதிருப்தியாளர்களை உள்ளடக்கி சுதந்திரக்கட்சியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து உடைத்தெடுத்து ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைத்து மகிந்தவுக்குச் சவால்விடும் சக்தியாக உருவாகலாம். அவ்வாறான எண்ணம் இருந்திருந்தால் ரணில் - சந்திரிகா கூட்டுப் பயன்படுவதற்கு வாய்ப்புண்டு. இதேவேளை மகிந்தவின் சிந்தனைகளை ஆராய்வோம்.

அது மீண்டும் போரை விரைவாக ஆரம்பிப்பதற்கான சூழலைக் கொண்டிருக்கின்றது. சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான எத்தகைய விபரத்தையும் அது கொண்டிருக்கவில்லை.

தாம் ஆட்சியமைத்தவுடன் போர் நிறுத்த உடன்படிக்கையில் மாற்றம் கொண்டுவருதல், சமஷ்டி ஆட்சி முறையை நிராகரித்தல், சுனாமிக் கட்டமைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை, ஒற்றையாட்சி முறைக்குள் தீர்வு குறித்த பேச்சுவார்த்தை, இந்தியாவை மீண்டும் உள்நுழைப்பது போன்ற விடயங்கள் மகிந்தவின் சிந்தனைகளாக உள்ளன.

குறிப்பாக இது தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்கின்ற எந்த அடிப்படை அம்சங்களையும் கொண்டிருக்கவில்லை. பொதுவாக பேரினவாத சக்திகளைத் திருப்திப்படுத்தும் வகையில் இந்தச் சிந்தனை வடிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நோக்கும் போது மகிந்த ஜனாதிபதியானால் போர் மீண்டும் மூழ்வது உறுதியாகிவிடும். ஏனெனில் போர் நிறுத்த உடன்படிக்கையை இரு தரப்பும் சமபலத்தின் அடிப்படையில் கையொப்பமிட்டனர்.

உடன்படிக்கையில் மாற்றம் கொண்டு வருவதானால் இரு தரப்பும் கலந்தாலோசித்தே அதில் மாற்றம் கொண்டு வரவேண்டும். ஒரு தரப்பு தன்னிச்சையாக மாற்றம் கொண்டுவர முடியாது.

இதனடிப்படையில் சிறிலங்கா அரசு அல்லது ஜனாதிபதி மாற்றங்களைக் கொண்டுவர விரும்பினால் அது மீண்டும் போர் மூழ்வதற்கான சூழலையே உருவாக்கும் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மகிந்த ஜனாதிபதியாகும் பட்சத்தில் போர் மூளும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

இதனைவிட ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் நோக்கி ஒன்றையாட்சி முறையை மீண்டும் நினைவுபடுத்துகிறார். இதன்மூலம் ஒரு போதும் தீர்வு காணமுடியாது. தமிழ் மக்களின் இறைமை, சுய நிர்ணயம், மரபுவழித் தாயகம் என்பன அங்கீகரிக்கப்பட்டு அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு வழங்கப்பட வேண்டும்.

இவை இல்லாது ஒற்றையாட்சி முறைமையைத் தேர்தல் பிரசாரத்தில் ஆயுதமாகப் பாவித்து தென்னிலங்கை மக்களிடையே வாக்கு அறுவடையைப் பெறமுடியுமே தவிர சமாதானத்தைக் கொண்டுவர முடியாது.

ஒட்டு மொத்தத்தில் நோக்குமிடத்து மகிந்தவின் சிந்தனைகள்" தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அபிலாசைகளையும் நிராகரித்து மீண்டும் போரை உருவாக்குவதற்கான விடயங்களையே வலியுறுத்துகின்றன. இந்நிலையில் இரு பிரதான கட்சி வேட்பாளர்களையும் நோக்குமிடத்து சமாதானத்தைக் கொண்டு வருவதற்கான தெளிவான கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை.

எனவே தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதில் அவர்கள் சுயமாகத் தீர்மானித்து முடிவெடுப்பர் என்பது உறுதி.

பிரவீனா

நன்றி
http://www.battieezhanatham.com


- RaMa - 10-29-2005

தகவலை இங்கு இனைத்தமைக்கு நன்றி வதனா