![]() |
|
ரணில் தோற்றது எதனால்?: க.வே. பாலகுமாரன் விளக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ரணில் தோற்றது எதனால்?: க.வே. பாலகுமாரன் விளக்கம் (/showthread.php?tid=2380) |
ரணில் தோற்றது எதனால்?: க.வே. பாலகுமாரன் விளக்கம் - thiru - 11-19-2005 சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழர்கள் தண்டனை அளித்திருக்கிறார்கள் என்றும் மேற்குலகம் மீதான சிங்களத்தின் இரட்டை வேடம் அம்லப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சீறிப் பாய்கிற சிங்களத் தேசியத்தினால்தான் ரணிலால் வெற்றி பெறமுடியவில்லை என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் விளக்கம் அளித்துள்ளார். புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பாகிய அரசியல் அரங்கம் நிகழ்ச்சியில் க.வே.பாலகுமாரன் கூறியதாவது: சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் முடிவுகள் குறித்து சிறிலங்கா தமிழீழ தேசங்களில் மட்டுமல்ல உலகம் முழுவதும் மெளனம் தோன்றியுள்ளது. ஏனெனில் இந்தத் தீர்ப்பு அத்தகைய தீர்ப்பு. இந்தத் தீர்ப்பினது விளைவுகள் மிக நீண்டகாலகத்துக்குப் பேசப்படுகிற ஆராயப்படுகிறதாக விடயமாக மாறும். இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து எல்லோரும் மிக ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒரு கட்டத்துக்கு உலகத்தில் உள்ள அனைவரையும் தமிழ் மக்கள் தள்ளிவிட்டிருக்கிறார்கள். இந்தத் தேர்தல் முடிவுகளில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் எதுவும் இல்லை. இந்தத் தேர்தலில் வென்றவர் தோல்வியடைந்திருக்கிறார். இது தேர்தல் முடிவு அல்ல. ஒரு தேசியத்தின் தீர்ப்பு. உலகை உலுக்கியிருக்கும் தமிழ்த் தேசியத்தின் தீர்ப்பு. தமிழர்கள் வரலாற்றில் மேற்கொண்டிருக்கும் மற்றுமொரு முக்கிய தீர்ப்பு இது. 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னால் எடுக்கப்பட்ட மிக முக்கியமான தீர்ப்பு. தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் முதிர்ச்சியை தங்களுக்கு எது தேவை எதனை நிராகரிக்கிறோம் என்பதை சுயாதீனமாக நீதியாக நடத்தப்பட்டதாக அமைப்புகள் கூறுகிற தேர்தலில் எவ்விதத் தலையீடும் இல்லாமல் தெளிவாக குழப்பம் ஏதுமில்லாமல் கூறியிருக்கிறார்கள். இந்தத் தேர்தலின் முடிவானது சிங்களத் தேசியத்துக்கான வெற்றி என்றும் கூறலாம். சிங்களத் தேசியத்தால் தமிழ்த் தேசியத்தை அவரணைக்க முடியாவிட்டால் தமிழர்களுடைய அபிலாசைகளை அவர்களால் உள்ளடக்க முடியாவிட்டால் ஏன் சிங்கள தேசியத்துக்குள் தமிழ்த் தேசியம் கரைய வேண்டும் என்ற கேள்வியை இன்று தமிழ் மக்கள் எழுப்பியிருக்கிறார்கள். இது எந்த ஒரு சர்வதேச சட்டவாளளராலும் சட்டப்புத்தகத்தாலும் புறந்தள்ள முடியாத தர்க்க ரீதியான ஒரு கேள்வி. இந்தக் கேள்வியானது தேர்தல் முடிவுகளினூடாக உலக அரங்கில் எழுப்பப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் முடிவானது ஜனநாயக விரோதமல்ல. உண்மையான ஜனநாயகம் இது. மக்களினது கருத்து. <b>மகிந்தவின் வெற்றி- பிரபாகரனின் வெற்றியின் தொடக்கம்</b> இந்தத் தீர்ப்பை ஆழமாகப் பார்த்தால் வெற்றி பெற்றவருக்கும் தோல்வியடைந்தவருக்குமான இடைவெளி மிக நுண்ணியதாக இருக்கிறது. கடந்த 4 தேர்தல்களிலும் சிங்கள மக்கள் ஓரளவுக்குத் தெளிவான இடைவெளியையே காட்டியிருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் இரண்டு வேட்பாளர்களிடத்தில் சிங்கள மக்கள் என்ன வேறுபாடுகளை காண்கிறார்கள் என்பது கேள்வியாக இருக்கிறது. புறந்தள்ளப்பட்ட ஒடுக்கப்பட்ட சிங்கள கிராம மக்களின் வாக்குகளைத்தான் மகிந்தர் பெற்றுள்ளார். அனேகமான பின்தங்கிய மாவட்டங்களில் மகிந்தர் வென்றுள்ளார். ஆகவே இது மகிந்தரின் வெற்றியா? ஜே.வி.பி.யின் வெற்றியா? சந்திரிகா ரணிலுக்குத் தோல்வியா? என்றால் எவருமே வெல்லவில்லை. இவர்கள் அனைவருமே தமிழ் மக்கள் முன்னால் தோற்றுவிட்டார்கள். இந்தத் தேர்தல் எங்களுக்கு ஒரு நினைவினை மீட்டுக் கொண்டு வருகிறது. குறிப்பாக மகிந்தரே தனது வெற்றி ஏற்பட்ட பிறகு தேர்தல் ஆணையாளரால் வெற்றி அறிவிக்கப்பட்ட பின்னர் கூறிய செய்தி என்னவெனில் 1956 ஆம் ஆண்டை நினைவுபடுத்துகிறது. அன்று பண்டா வென்றதைப் போன்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். உண்மையிலேயே நாங்கள் தமிழ் பேசும் மக்களும் இதைத் தான் கூறுகிறோம். அதாவது இந்தத் தேர்தல் என்பது 1956 ஆம் ஆண்டு சம்பவம் போல் தொடர்புபடுகிறது. இன்னொரு பண்டா சகாப்தம் என்று மகிந்தரே கூறியிருக்கிறார். 1956 ஆம் ஆண்டுக்கு முன்னர் பின்னர் என்று பார்த்தீர்கள் எனில் 1956 ஆம் ஆண்டின் விளைவாகத்தான் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் கருக்கள் விதைக்கப்பட்டன. எங்களுடைய தேசியத் தலைவர் அவர்களே 1958 ஆம் ஆண்டு கலவரம் பற்றியெல்லாம் கூறியிருக்கிறார். பண்டாவினது செயற்பாடு காரணமாக- சிங்கள தேசியத்தை ஒன்றிணைத்து-பௌத்த பிக்குகளை ஒன்றிணைத்து-கட்சிகளை ஒன்றிணைத்து இப்பொழுது மகிந்த செய்ததைப் போல அதே மாதிரியாக ஒன்றிணைத்து மிக முக்கியமான மொழிச்சிக்கலை தேசியவாத இனவெறியாக மாற்றியபோது எங்களுடைய தேசியத் தலைமை உருவாகக் காரணமாக அமைந்தது. அதாவது பிரபாகரன் அவர்கள் உருவாகுவதற்கு பண்டா அவர்கள் காரணமாக இருந்தது உண்மை. அதுபோலவே மகிந்தரின் வெற்றியானது பிரபாகரனின் வெற்றிக்கான வாய்ப்பாக அமையப் போகிறது. தொடங்கப்பட்டது அந்த பண்டாவால்...முடிக்கப்பட உள்ளது இந்த மகிந்த பண்டாவால். ஆகவே பண்டா சகாப்தம் என்று மகிந்தரும் பொருத்தமாகத்தான் கூறியிருக்கிறார். சிங்கள மக்களுக்கு இவர் என்ன செய்யப் போகிறார் என்பதை எதிர்காலம் கூறப்போகிறது. பலபேர் கூறுவது போல் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் சிங்கள மக்களுக்கும் உள்ள முரண்பாடு மிகக் கூர்மையாக முற்றிஇ இன்னொரு மிகப்பெரிய கிளர்ச்சி அல்லது கலகம் அல்லது ஊழிவிபத்தாக மாறப்போகிற ஆபத்தை நோக்கி சிங்களம் செல்கிறது என்பதில் எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த வகையில் தமிழ் மக்கள் தங்களுடைய பாதுகாப்பை எந்த வகையில் உருவாக்கிக் கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதெல்லாம் மிக ஆழமாகவும் நுணுக்கமாகவும் சிந்திக்க வேண்டிய கட்டத்தில் எங்கள் மக்கள் வாழ்கிறார்கள். ஆகவே இந்த அரசியலை கூர்மையாகப் பார்க்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. <b>ஐ.தே.க.வுக்கு தமிழர்கள் கொடுத்திருக்கும் தண்டனை</b> இந்தத் தேர்தலின் தொடக்கத்தில் மகிந்தர் ஜே.வி.பி. ஹெல உறுமயவினது பிரச்சாரம் எப்படி இருந்தது எனில் ரணிலும் புலியும் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள் கள்ள ஓட்டுப் போடுவதற்கான எல்லா ஆயத்தங்களையும் செய்கிறார்கள் என்று மிக மும்முரமாக பரப்புரை செய்தனர். அந்த சமயத்திலே ரணில் எதுவும் பேசாமல் இருந்தார். ரணிலுக்கு தமிழ் மக்கள் ஏதோ கடமைப்பட்டவர்கள் போலவும் தமிழ் மக்களினது வாக்குகள் கட்டாயம் ரணிலுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது போலவும் கொழும்பிலே சில கருத்துகள் இருப்பதை நாங்கள் கவனித்துப் பார்த்தோம். ஆனால் தமிழ் மக்கள் எதற்காக ரணிலுக்கு நன்றியாக இருக்க வேண்டும் என்ற கேள்வி இருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் அநீதிகளுக்கு என்ன நன்றி என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். இந்தத் தேர்தலினூடாக மக்கள் ஒரு மிகப் பெரிய வரலாற்றுத் தீர்ப்பை- ஐக்கிய தேசியக் கட்சி மீதான கோபத்தின் தீர்பாக இந்தத் தீர்ப்பு அமைந்துவிட்டது. இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ரணிலும் மிகப் பெரிய தண்டனையைப் பெற்றிருக்கிறார். எதற்கெனில் தமிழ் மக்களைக் ஐக்கிய தேசியக் கட்சியினர் கொன்றழித்தமைக்கு 83 ஆம் ஆண்டு கலவரத்துக்காக வெலிக்கடை வீதிகளின் படுகொலைக்காக கொத்து கொத்தாக தமிழர்களைக் கொன்றமைக்காக இந்திய அமைதிப் படையை இங்கே வரவழைத்து வேடிக்கை பார்த்தமைக்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ் மக்கள் வழங்க வேண்டிய தண்டனைகள் அனைத்தையும் இந்தத் தேர்தலினூடாக வழங்கிவிட்டார்கள். <b>சீறிப்பாயும் சிங்களப் பெருந்தேசியவாதமும் ரணிலின் தோல்வியும்</b> ரணிலினது வெற்றி வாய்ப்பானது புலிகளுடன் சேர்ந்து இருப்பதால் குறைந்துவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்களிலே கூறினார்கள். பி.பி.சி. போன்ற ஊடகங்களில் புலிகளுடன் ரணில் மென்மைப் போக்கைக் கடைபிடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் நாங்கள் புலிகள் அப்படியான போக்கிலே இல்லை என்பது வெளிப்பட்டிருக்கிறது. எங்கள் மக்களை ரணிலுக்கு வாக்களிக்குமாறு கூறி எந்த அழுத்தத்தையும் நாங்கள் கொடுக்கவில்லை. இந்தத் தேர்தலில் பங்குபற்றப் போவதில்லை என்று தமிழ் மக்கள் மேற்கொண்ட முடிவுக்கு தலை வணங்கி புலிகள் அதை ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே இத்தகைய பரப்புரைகளை புலிகளும் மக்களும் நிராகரித்துவிட்டார்கள். அப்படியானால் தெற்கில் ரணில் வெற்றி பெறுவதற்கு என்ன தடையாக இருந்திருக்கும்? ரணில் ஏன் தோற்க வேண்டும்? மகிந்தருக்கு மாற்றாக மிலிந்த மொறகொடவும் நவீன் திசநாயக்கவும் தெரிவித்திருந்த கருத்துகளை சிங்கள மக்கள் உள்வாங்கியிருந்தால் ரணில் தோற்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே ரணிலின் தோல்வி அல்லது வெற்றி என்பது தமிழ்பேசும் மக்களின் வாக்குகளினூடானது என்பதை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். தமிழ் மக்கள் எந்த நிலையிலும் எவருக்கும் கடமைப்பட்டவர்கள் அல்லர். மகிந்தரின் வெற்றியை சிறிலங்காவின் சுதந்திரக் கட்சிக்குள் பெரும்பான்மையோர் விரும்பவில்லை. குறிப்பாக சந்திரிகா அனுரா போன்றவர்கள் விரும்பவில்லை. வெளிப்படையாக அந்தக் கட்சி பிளவுண்டிருந்தது. மகிந்தர் தோல்வியடைவதற்கு இந்தப் பிளவு காரணமாக இருக்கும் என்று பலரும் நம்பினார்கள். இந்த வாய்ப்பைக் கூட ரணிலினால் பயன்படுத்த முடியவில்லை. மகிந்தரின் வெற்றியாது தென்னிலங்கைச் சிங்கள மக்களினது வெற்றியாகப் பார்க்க முடியும். சிங்களப் பெருந்தேசியவாதத்தின் அடிப்படையில் வளர்த்தெடுக்கப்பட்ட தேசியத்தின் வெற்றி இது. சிங்களத் தேசியத்தின் ஊற்றுக்கண் மிக ஆழமாக சீறிப்பாய்வதால்தான் இத்தனை வாய்ப்புகள் இருந்தும் ரணிலினால் வெற்றி பெறவில்லை. <b>மேற்குலகம் தொடர்பான சிங்களத்தின் இரண்டகம் அம்பலம்</b> இந்தத் தேர்தல் முடிவானது இலங்கையின் வரலாற்றில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும். இப்போது வென்றுள்ள மகிந்தர் தனது செயற்பாடுகளை விரைவில் வெளிப்படுத்துவார். மேற்குலகம் சாராத மேற்குலகை முற்றிலுமாக எதிர்த்து சிங்கள மக்களின் பொருண்மிய கொள்கைகள் போர் நிறுத்த உடன்பாட்டை மீளாய்வு செய்தல் இந்தியத் தரப்பு போன்றவற்றை உள்நுழைய வைத்தல் ஆகியவற்றை நிச்சயமாக மகிந்தரால் செய்ய முடியாது. இந்தச் செயற்பாடுகளைத் தொடங்கும்போதே ஏற்படப் போகும் உள்முரண்களின் விளைவுகளை இப்போதே அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. மேற்குலகத்தின் மீதான சிங்களத்தின் இரண்டக வேடத்தை இந்தத் தேர்தலினூடாக நாம் அம்பலப்படுத்தி இருக்கிறோம். மேற்குலகம் வேண்டாம்... எந்த நேரத்தில் வேண்டாம்? மேற்குல பொருண்மியம் வேண்டாம் மேற்குலகத் தலையீடு வேண்டாம் சிங்கள மக்களின் வாழ்க்கை நலன்களுக்கு மேற்குல செயற்பாடுகள் தடையாக இருப்பதால் மேற்குலம் வேண்டாம் என்கிறது சிங்களம். ஆனால் மேற்குலம் வேண்டும் என்றும் சொல்கிறது எந்த நேரத்தில் சொல்கிறது? தமிழ் மக்களை கொன்றழிக்க தமிழ் மக்கள் மீது போர் செய்வதற்கு தமிழ் மக்கள் மீது நிழல் போர் நடத்த சிங்களத்துக்கு மேற்குலகம் வேண்டும். இந்த இரண்டகத்தினது வெளிப்பாடாகத்தான் தேர்தல் முடிவு அமைந்திருக்கிறது. இதைத்தான் நாம் முன்பே சொன்னேம்...இந்தத் தேர்தல் முடிவானது ஒரு பெரிய செய்தியைச் கூறப்போகிறது என்று. இந்தத் தேர்தல் மூலமாக என்ன வெளிப்பட்டு இருக்கிறது. ஒற்றையாட்சி மூலம் தீர்வு- புலிகளோடு பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை- போர் நிறுத்த ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்பட வேண்டும். மிக முக்கியமாக மேற்குலகத் தலையீடு இல்லாது செய்யப்பட வேண்டும் என்ற கருத்துகளினூடே இந்தத் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. சர்வதே சமூகத்தால் புறந்தள்ளப்பட முடியாத தர்க்க ரீதியாக மாறியிருக்கிற இந்த முடிவுக்கு தமிழ் பேசும் மக்களினது முடிவுதான் காரணமாக அமைகிறது. இலங்கையினது கட்சிகள் அனைத்தும் எதிர்வரும் காலங்களில் எந்த வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ளப்போகிறார்கள் என்பதை நிரூபிக்கிற காலமாக- குறிப்பாக முஸ்லிம் மலையக கட்சிகள் எல்லாம் மக்கள் நலன்களுக்குத்தான் செயற்படுகிறார்களா? அல்லது தம் நலன்களுக்காகச் செயற்படுகிறார்களா? என்பதை மக்கள் முன்னிலையே நிரூபிக்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இப்படியாக பல்வேறு வகையான அழுத்தங்களுக்கும் மாற்றங்களுக்கும் இந்தத் தேர்தல் முடிவு பயன்படப் போகிறது. ஒடுக்கப்படுகிற மக்களினது எந்த செயற்பாடும் ஒடுக்குவதற்குக் காரணமாக இருக்கிற இனத்தினது மக்களுக்குக் கூட நன்மையைப் பயககும். இது ஒரு தேர்தல் முடிவல்ல- வரலாற்றுத் தீர்ப்பு வரலாற்றுப் பேரொளி என்ற நூலில் அருட்திரு. ஜெகத் கஸ்பாரின் கட்டுரையின் தலைப்பான எங்கள் கனவையும் இல்லாது போனவர்களது உயிர்க் கனவையும் சுமந்தவர் என்று தலைவர் அவர்களைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள். அந்தக் கனவுகளைச் சுமந்தெடுத்த முடிவுகளுக்கு ஊடாக இன்றைக்கு உலக அரங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறோம் என்றார் க.வே.பாலகுமாரன். <b>நன்றி: புதினம் </b> - Mathan - 11-19-2005 புலிகளின் குரலில் வெளியாகிய இந்த பாலகுமாரனின் பேட்டியை மேற்கோள் காட்டி ரொயிட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. http://in.today.reuters.com/news/newsArtic...ia-224215-1.xml |