Yarl Forum
நவீனப் புதுக்கவிக் கானா! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: நவீனப் புதுக்கவிக் கானா! (/showthread.php?tid=2363)



நவீனப் புதுக்கவிக் கானா! - SUNDHAL - 11-20-2005

பின் நவீனப் புதுக்கவிக் கானா!

கற்பனை: முகில்

கடற்கரை. பொட்டலத்தில் இருந்த கடைசி கடலையையும் சாப்பிட்டு விட்டு, அந்த வெள்ளைக் காகிதத்தைப் பறக்க விட்டு விட்டு, கடலலையை நோக்கி ஓடுகிறான் அந்தச் சிறுவன்.

காகிதம் பறக்கிறது...பறக்கிறது... தரையை அடையப் போகுது.

அந்த வெள்ளைக் காகிதம் மண்ணை முத்தமிடப் போகும் வேளையில் மூன்று கரங்கள் அதைப் பிடிக்கின்றன.

அந்தக் கைகளுக்குச் சொந்தக்காரர்கள் (காங்கிரஸ்காரர்கள் அல்ல) குருதிப்ரியன், மன்மதபிரபு, கானா கதிரு !

கதிரு: இன்னா மாமூ, நாம கை வெச்ச பொருள் மேலேயே கைய வெக்கிரியா?

மன்மதன் : ஹே..நான்தான் முதல்ல பிடிச்சேன். எனக்குத்தான் இந்தப் பேப்பரு.

குருதி : கொத்துச் சிறகில் ஒற்றை இறகாய் பிரிந்து, பறந்து வந்திருந்தால் என் கண்கள் எதிர்ப்புறம் நோக்கியிருக்கும். அதுவல்லவே இது! என் நெஞ்சக் குழியில் குமிழ் பரப்பும் நெருப்பின் ஜுவாலைகளை இட்டு நிரப்ப வேண்டுகிறேன் இக்காகிதம்!

கதிரு : நெருப்போ, பருப்போ மவனே! டாப்பு டோப்பு வாங்கிக்கும். மருவாதியா பேப்பரை வுடுறியா இல்லியா?

மன்மதன் : என்ன மேன், உனக்கு காது குடையறதுக்குத்தான் இந்தப் பேப்பரைக் கேக்கறீயா? அதுக்கு வேற பேப்பர் எடுத்துக்கோ மேன். நான் இதுல காதல் கவிதை எழுதப் போறேன்.

கதிரு : இன்னா கவிதயா... நம்ம கானா முன்னால உங் கவித கவுந்தடிச்சு கதறும்டி! நான் சூப்பரா கானா கட்டப் போறேன் . பிரச்ன பண்ணாம பேப்பரை இங்க தள்ளு.

குருதி : அற்பம் உமிழ்ந்த எச்சில் கரை ஒதுங்கிய பித்தர்களே! என்போல் பின் நவீனத்துவம் உங்களால் படைக்க முடியுமா? என் எழுத்துக்கள் பிரளயங்களின் நிழல் தேடா அணுக்கதிர்கள்!

கதிரு : மவனே நீ பேசறது தமில்தானா ...அத முதல்ல சொல்லு..சும்மா சாமியாடாத!

மன்மதன்: சரி, ஒரு போட்டி வைச்சுக்குவோம். பேப்பரை நடுவுல வைச்சிருவோம். மூணு பேருமே கவிதை சொல்லுவோம் . நல்லா சொல்லுறவங்களுக்கு மத்த ரெண்டு பேருமே பேப்பரை விட்டுக் கொடுத்துரணும். ஓ.கே.வா?

கதிரு : ஆஹாங்...இது மருவாத! நா ரெடி கண்ணு!

குருதி : வெளிச்சம் தேடிக் கழிந்த பறவை, விரகத் தீயில் விழித்தது போல் மாட்டிக் கொண்டேன்.

கதிரு : இப்ப இன்னாங்கிற.. ஒத்துக்கிறேங்கிறியா... ஒத்துக்கலையா?

குருதி : ம்...

மன்மதன் : என் பெயர் மன்மதன் பிரபு . கவிதைகளைச் சுவாசிப்பது, அவள் காலடிகளை மட்டும் வாசிப்பது , கனவுகளில் மூழ்கி யோசிப்பது , காதலைத் திணற திணற நேசிப்பது என் பொழுதுபோக்கு.

கதிரு : நாதான் கானா கதிரு. மச்சான் கானா கட்ட ஆரம்பிச்சேன்னா , சைதாப்பேட்டை சங்கூதும். கண்ணம்மாபேட்டை மோளம் அடிக்கும். கொசப்பேட்டை குத்து டான்ஸ் ஆடும். ஆல் பேட்டைஸ், அய்யா கானாவுக்கு சலாம் போட்டு ஆடும்.

குருதி : மீட்சிகளின் வழி கசிந்த உதிரங்களின் இடுக்குகளில் பிறந்த எனக்கு பெற்றோர் வைத்த பெயர் நகம் போல காலத்தின் சீழ் வடியும் விரல்களிலிருந்து வெட்டப்பட்டு விட்டது. பின் ஆழ்மனம் அலற, என் ஆத்மா உலர எனக்கு நானே வைத்துக் கொண்ட அடையாளம் குருதிப்ரியன் .

கதிரு : அதுக்கு இன்னாபா அர்த்தம்?

மன்மதன் : குருதின்னா இரத்தம். "ப்ரியன்'னா நேசிப்பவன்.

கதிரு : அடப்பாவி அப்படின்னா நீ ரத்தக் காட்டேரியா. உன் பேச்சு ஒரு தினுசா இருக்கையிலே நெனைச்சேன். நீ சாதாரண மனுச சென்மம் இல்லேன்னு.

மன்மதன் : அது அவரு வைச்சுக்கிட்ட புனைப்பெயர்ப்பா!

கதிரு : புனப் பேரோ! பூனைப் பேரோ! யாராவது வெரசா கவித கட்டுங்கப்பா!

மன்மதன் : தலைப்பு: காதல்...

எல்லா ரோஜாக்களும்
என் கன்னங்கள் தேடி
தங்கள் இதழ்கள் உதிர்க்க
காத்திருக்கின்றன...ஆனால்
என் கன்னங்கள் காத்திருப்பது
உன் செவ்விதழ் வழியே
வழியும் காதலைச் சுமக்கத்தான்!

கதிரு : ரோசாப்பூ செவப்புன்னு என்னென்னமோ சொன்ன கண்ணு..ஒரு எழவும் பச்சக்குன்னு நெஞ்சுல பதியல..இப்ப நம்ம கானாவைக் கேளு மாமூ!

வடபழனிக்கு போக டொவல் பி பஸ்சு!
45 பி போகும் ஆழ்வார்பேட்டை லஸ்சு!
ரெண்டு பஸ்சுலயும் நான் எடுக்கமாட்டேன் டிக்கெட்டு!
ஏன்னா -அதுல தான வருது என்னோட "டிக்கெட்டு'!

மன்மதன் : எப்பா ராசா..கவித சொல்லச் சொன்னா, நீ பஸ் ரூட்டைச் சொல்லுற! அய்யா பின் நவீனத்துவம்...நீங்க ஆரம்பிங்க!

குருதி : மீளாக் கனவின் ரெüத்திரத்தில்
தீராப் புரிதலின் பூதாகரத்தில்
தொக்கி நிற்கும் பூக்குட்டிக் கிளையில்
தேங்கித் தவிக்கும் குடைக்கம்பிச் சாரலில்
ஈரமின்றி ஒழுகும் வியர்வைப் பச்சோந்தியின்
உறவற்ற உருவமே காதல்!

கதிரு : அடங்க மாட்டியா நீ! பச்சோந்தி பரதேசின்னு! புரியறாப்ல பேசக்கூடாதுன்னே கௌம்பி வந்திருக்கான்யா இவன் . இப்ப நான் வுடுறேன் கேளு.

இங்க் போட்டா எழுதும் பேனா!
இங்க வந்து நீயா பேசு தானா!
மங்கி கேப் போட்ட உங்கப்பன் வேணாம்!
கடல முட்டாய் தின்னாப் பித்தம் வீணா!
உன்னக் கண்ணடிச்சுக் கூப்பிடுது என் கானா!

குருதி : (மனதிற்குள்) குதறிக் கிழித்து, வார்த்தைகளைப் புதைத்து, அழுகிய மொழியில் அமிலம் ஊற்றும் அறிவிலிகள்.

மன்மதன் : என்னப்பா இது கானான்னு சொல்லி கவித குரல்வளைய நெறிக்கிற! இவர் என்னன்னா அவருக்கே புரியாத மாதிரி, யாருக்கும் புரியக் கூடாதுன்னு, வேற்றுக் கிரக பாஷை பேசுறாரு. என்ன மாதிரி ஜனரஞ்சக தமிழ்ல கவிதை சொல்லப் பழகிக்கோங்கப்பா...இதைக் கேளுங்க . காதல் மென்மையா ஒரு வலியோட , ஒரு புன்னகையோட, ஒரு எதிர்பார்ப்போடா, ஒரு ஏக்கத்தோட எட்டிப் பார்க்கும்.

உன் கூந்தல் உதிர்த்த
ஒற்றைப் பூ..
உன் விரல்கள் இழந்த
பிறை நிலா நகங்கள்
உன் இதழ்கள் உறிஞ்சிய
புரூட்டி பாட்டில்
உன் சுடிதார் இழந்த
ஒரு ஊதா நூல்...
இவைகளிடம் கேள்
அவை சொல்லும் என் காதலின் வாசத்தை!

கதிரு : கலீஜா இருக்குப்பா... காதலு பத்தி சொல்லச் சொன்னா, குப்பத் தொட்டியில என்னலாம் கெடக்கும்னு லிஸ்ட் வுடுற! இன்னாக் கவிதயோ, கண்றாவியோ! எப்பா இரத்தக் காட்டேரி, பேயடிச்சவன் பினாத்துற மாதிரி பேசுவியே, அதைச் சொல்லு.

குருதி : ஒலியில்லா இருள் வெளியில் பிம்பங்களுக்கு புரிவதில்லை நிழல்களின் ஓசை! பிழைத்துப் போங்கள்!

மனப் பிரபஞ்சத்தின் ஊடாக
பிணம் தேடும் ஒற்றை மேகம்!
வலி கீறும் வன்மத்தின் மொட்டுகளில்
சோம்பல் முறிக்கும் தட்டாம் பூச்சி!

சடலத் தீயின் குளிர் ஜுரத்தில்
சருகு பொறுக்கும் ஒவ்வாமை ஓநாய்!
மலர்களின் குரோதப் பின் குறிப்பில்
வெளிறிக் கிடக்கும் பிளாஸ்டிக் -காதல்!

கதிரு : சூப்பரு..இன்னாமா பேசறான்பா! சோக்காக்கீது! அப்டி எதுனா உசரத்துல ஏறிக் கூவிக்கின்னே தொபுக்கடீர்னு நீ குதிச்சேட்டேன்னா, நாடு உருப்பட்டுரும்!

குருதி : சிறகசைத்துச் சிதறும் கழிவுகளின் மேல் முட்டையிட்டு முகம் பார்க்கும் பெட்டைக் கோழி ஜென்மங்கள் என் பேனா பற்றி பேச வேண்டாம்.

கதிரு : (மன்மதனைப் பார்த்து) இன்னாபா சொல்லுறாரு?

மன்மதன் : அதெல்லாம் எனக்கும் புரியல, உன்னை ஏதோ "கப்பு 'அடிக்கிற மாதிரி திட்டுறாருன்னு மட்டும் புரியுது.

கதிரு : ஏய்.. தேனாப் பாயுற எங் கானாவை திட்டுறியா நீ..உன் மூஞ்சியில என் லெஃப்ட் ஹேண்டை வைக்க..ஏய்..

குருதி : சூட்சுமத்தின் எரி குழம்பில் வழியும் திராவகத்தை நக்கிச் செல்லும் கொடுக்கில்லா நாய்ப் பல்லில்..

கதிரு : யாரை பாத்து நாய்ன்னு சொல்லுற..

(கதிரு வீடு கட்டி, தன் பேனாக் கத்தியை உருவ அவர்கள் அங்கிருந்து ஓட ஆரம்பிக்கின்றனர். கேட்பாரற்றுக் கிடக்கும் அந்த வெள்ளைக் காகிதத்தை எடுத்த ஒரு சிறுவன் தன் மேல் விழுந்த பறவை எச்சத்தை துடைத்துப் போட்டுவிட்டுப் போகிறான். அங்கே வரும் குறுந்தாடி வைத்த ஒரு ஓவியர், தன் மாணவனிடம் , அந்தக் காகிதத்தை எடுத்து ஆச்சரியத்துடன்)

ஓவியர்: வாவ்.. வாட் எ மாடர்ன் ஆர்ட் ...இட்ஸ் அமேசிங்