Yarl Forum
உசார் நிலையில் தமிழீழத்தின் முப்படை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: உசார் நிலையில் தமிழீழத்தின் முப்படை (/showthread.php?tid=2271)



உசார் நிலையில் தமிழீழத்தின் முப்படை - cannon - 11-26-2005

தமிழீழத்தின் முப்படைகளும் உசார் நிலையில் உள்ளன என்று வடபோர் முனைக் கட்டளைப் பணியகத்தைச் சேர்ந்த தளபதி லோறன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


பளையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற மாவீரர் பெற்றோர் சிறப்பிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய சிறப்புரை:

சிங்கள தேசம் எம்மீது திணிக்கின்ற போரைத் துணிவுடன் எதிர்கொள்வதற்காக தமிழீழத்தின் முப்படைகளும் எந்நேரமும் உசார் நிலையில் உள்ளன.

கடந்த காலங்களில் எமது மண் மீதும் மக்கள் மீதும் குண்டுகளைப் போட்டு அழித்தவர்கள், பாடசாலைகள் மீது குண்டுகளை வீசி மாணவர்களை சின்னாபின்னமாக்கியவர்கள் இலட்சக்கணக்கான மக்களை யாழ்ப்பாணத்திலிருந்து அகதிகளாக வெளியேற்றியவர்கள் எமது மண்ணிலிருந்து வெளியேறப் போகும் காலம் நெருங்கிவிட்டது.

ஆகவே எம்மண் சுதந்திரம் பெறும்வரை எமது தேசியக் கொடி ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெற்று அங்கு பறக்கும் காலம்வரை எமது தேசம் விடுதலை அடையும் காலம் வரை நாம் துணிவுடன் எந்தவகையிலும் போராடத் தயாராகவே உள்ளோம் என்றார் அவர்.

தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வை முன்னிட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்கள் சிறப்பிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனொரு கட்டமாக நேற்று முன்தினம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திலுள்ள 130 மாவீரர்களின் பெற்றோர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வானது பளை மத்திய கல்லூரி மண்டபத்தில் பச்சிலைப் பள்ளி பிரதேச மாவீரர் செயற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் காலை 10 மணியளவில் பளை கோட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சந்தனா தலைமையில் தொடங்கியது.

தொடக்க நிகழ்வாக பொதுச் சுடரினை யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதி ஏற்றிவைத்தார்.

தமிழீழத் தேசியக் கொடியினை வடபோர் முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன் ஏற்றிவைத்தார்.

பொது மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கான மலர் மாலையினை கிளிநொச்சி மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன், பச்சிலைப்பள்ளி உதவி அரசாங்க அதிபர் ஆகியோர் அணிவித்தனர்.

மாவீரர் செயற்பாட்டுக்குழுப் பொறுப்பாளர் நகுலன் வரவேற்புரையினை நிகழ்த்தினார். வர்த்தக சங்கத் தலைவர் அமீர் நினைவுரையினை நிகழ்த்தினார்.

அரசியல்துறையைச் சேர்ந்த தமிழ்விழி, லோறன்ஸ், யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

பெற்றோர்கள் சிறப்பிப்பு நிகழ்வில் பளை மத்திய கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொறுப்பாளர்கள், போராளிகள் எனப் பலரும கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

http://www.eelampage.com/?cn=22040