Yarl Forum
புரட்சிப் பாதையில் புத்தெழுச்சி புத்தாண்டுடன் பிறக்கட்டும்! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: புரட்சிப் பாதையில் புத்தெழுச்சி புத்தாண்டுடன் பிறக்கட்டும்! (/showthread.php?tid=220)



புரட்சிப் பாதையில் புத்தெழுச்சி புத்தாண்டுடன் பிறக்கட்டும்! - Nellaiyan - 04-14-2006

தங்கு தடையின்றி - தரிப்பின்றி - காலநதி முன்னோக் கிச் சீராக ஓடிக் கொண்டிருக்கின்றது. எக்கணமும்“ தரியாது நேரச் சக்கரம் உருண்டு கொண்டிருக்கின்றது.
காலதேவனின் இந்த நெறி பிறழா - இடையறா - அசை வியக்கத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் உலக நியதி; தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம்; யதார்த்தம்.
அத்தகைய காலப் பாய்ச்சலில் மீண்டும் ஒரு தடவை பார்த்திப வருடம் நம்மை விட்டுப் பிரிகிறான். வியப்போடு நம்மை அணுகுகின்றான் விய வருடத்தான்.
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழன் வான வியல் சாஸ்திரத்தில் விற்பன்னனாக இருந்தமை ஒன்றும் புதுமையல்ல. காலத்தை அளவீட்டால் நேர்த்தியாக வகுத்த அவனின் விஞ்சிய திறமை கண்டு நவீன விஞ்ஞானமே ஆச் சரியத்தில் மூழ்கி நிற்கின்றது.
சூரியன் காலையில் நேர் கிழக்கே உதித்து, நண்பகலில் சரியாக நேர் உச்சிக்கு வந்து, மாலையில் நேர் மேற்கே அஸ் தமிக்கும் காலம் வருடத்தில் இரண்டு. அவை விஷû என்று சொல்லப்படும். அவற்றுள் இராசிகளில் முதலாவதான மேட இராசிக்குள் சூரியன் பிரவேசிக்கும் மேட விஷû புண்ணிய நாளே தமிழரின் புத்தாண்டுத் தினமாகும்.
காலச் சக்கரத்தை அறுபது வருடங்கள்கொண்ட தொகுதி யாகப் பிரித்தான் தமிழன். அதில் இருபதாவது வருடமாக "விய' பிறக்கிறான்.
ஒவ்வொரு ஆண்டையும் ஆறு ருதுக்களாகவும் இரண்டு அயணங்களாகவும் தமிழன் வகுத்தான். சூரியன் மேட இராசியில் சஞ்சரிக்க - சித்திரை பிறக்கும் - இக்காலம் உத் தராயணம். இது சூரியன் வடக்கே நகரும் காலம். மற்றை யது சூரியன் தெற்கே நகரும் தட்சராயணம். அது ஆண்டின் பிற்பகுதியில் வருவது.
ஆண்டின் ஆறு ருதுக்களில் சித்திரைப் புத்தாண்டுப் பிறப்புடன் உதிப்பது வசந்த ருது. முன்பனி, பின்பனி கழிந்து, இந்த இளவேனில் காலத்தில் மலர்கள் வாரிச் சொரிந்து மணம் பரப்ப இயற்கை பூத்துக் குலுங்கி நிற்கும் ரம்மிய மான வேளை இது.
இயற்கை அன்னையின் சொத்தான தாவர வர்க்கங்கள் விருட்சமாகப் புத்தாடை புனைந்து, புதுமணம் கமழ, தரணி யெங்கும் புதுப் பொலிவும், புதுத்தோற்றமும், புத்தெழுச்சி யும், புத்தூக்கமும் மிளிரக் காட்சி தரும்போது, அது தனது வாழ்வுக்கும் புத்துயிர்ப்பு ஊட்டும் எனக் கருதி புது வாழ் வுக்கான காலமாக - புத்தாண்டாக - இவ்வேளையைத் தமி ழன் வகுத்துக்கொண்டதில் ஆழமும் அர்த்தமும் உண்டல் லவா?
இலங்கைத் தீவைப் பொறுத்தவரை பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்களுக்கும் இதுவே புதுவரு டம். தமிழ்த் தேசியமும், சிங்களத் தேசியமும் சங்கமிக்கும் தேசிய நிகழ்வாக இந்தத் தமிழ் - சிங்களப் புத்தாண்டு அமைகிறது.
இந்தத் தீவில் காலங்காலமாக தனித்துவமான பண் பாட்டுக் கோலங்களோடு - வாழ்வியல் அடையாளங் களோடு- வெவ்வேறான தாயகங்கள் என்று குறிப்பிடக் கூடிய தொடர்ச்சியான பாரம்பரியப் பூர்வீக வாழ்விடப் பிரதேசங்களோடு- தனித்தனியான மொழி, வழக்காறு கள், கலாசார விழுமியங்கள் என்பவற்றோடு வாழும் தமிழினமும், சிங்கள இனமும் ஒரே சமயத்தில் கொண்டாடுவதால் தேசிய ரீதியில் சிறப்புப்பெற்றது இத்திருநாள்.
ஆனால், சிறுபான்மையினரான தமிழர்களைப் பொறுத் தவரை இந்தத் தேசியத் திருநாளை சிங்களத்தோடு சேர்த் துக் கொண்டாட முடியாத அவல நிலை அவர்களுக்கு.
அந்நிய தேசத்தவரின் சுமார் 440 வருட கால ஆக்கிரமிப்பினால் தமிழ்த் தேசியம் இழந்த சுயாதிபத்தியம்- இறைமை - தனியாட்சி - சுதந்திரம் - விடுதலை - எல்லாமே இன்று கைமாறி, கடந்த ஆறு தசாப்தகாலமாக பேரின வாதத்திடம் அடிமைப்பட்டு, சிக்குண்டு கிடக்கின்றன. சுய கௌரவத்துடனும், சுய அடையாளங்களோடும், சுய நிர்ணய உரிமையுடனும் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்ற தமிழ்த் தேசியத்தின் நியாயமான அபிலாஷை நிறை வேறாமல் பகல் கனவாய் - கானல் நீராய் - இழுபடுகின்றது.
உரிமைக்கான வேள்வியில் உயிர்களையும், உடல் களையும், உதிரத்தையும், உடைமைகளையும் உற்றாரையும், உறவினரையும் ஆகுதியாய்ப் படைத்த தமிழினம் தொடர்ந்து அந்த வேதனையில் மூழ்கிக் கிடக்கிறது.
பார்த்திப வருடம் கழியும் இறுதி நாட்களில், தமது தலைநகரம் திருகோணமலையில் தமிழர் பட்ட துன்பம்- பேரினவாதம் இராட்சத உருக்கொண்டு பண்ணிய அட்ட காசம் - விஸ்வரூபம் எடுத்து அது புரிந்த அடாவடித்தனம்- இவை எல்லாம் தமிழர்களின் விடுதலை வேணவாவை மேலும் உறுதிப்படுத்தி நியாயப்படுத்துகின்றன.
போரழிவு, இடம்பெயர் பேரழிவு, ஆழிப்பேரலை அழிவு என்று அவலத்துக்குள் சிக்கி நிற்கும் தமிழினம் இந்த நெருக்கடிகள், இன்னல்களுக்கு மத்தியிலும் தனது தேசியத் திருநாளைக் கொண்டாடாமல் இல்லை. ஆனால், விடுதலைக்கான வேள்வியின் இறுதி அந்தத்தில் நிற்கும் தமிழினத்துக்கு இத்தகைய தேசியத் திருநாள் வெறும் கொண்டாட்டத்துக்குரியது மட்டுமல்ல.
இயற்கை அன்னை புத்தாடை அணிந்து புத்துணர்ச்சி, புத்தூக்கம், புத்தெழுச்சி கொள்வதுபோல தமிழ்த் தேசிய மும் தனது இலக்குக்கான புரட்சிப் பாதையில் புத்தெழுச்சி யும், புத்தூக்கமும், புத்துயிர்ப்பும், புதுவேகமும் கொள்வதற்கு இந்தப் புத்தாண்டு பிறக்கும் வேளையில் தன்னை அதற்காக உறுதிப்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.
இந்த விய வருடப் பிறப்போடு, தமிழர் தம் வாழ்வில் வியப்பான நற்காரியங்கள் நடந்தேறப் பிரார்த்தித்துக்கொள் வோம்.

http://www.uthayan.com/editor.html