Yarl Forum
கடத்தப்பட்ட புளொட் உறுப்பினரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கடத்தப்பட்ட புளொட் உறுப்பினரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் (/showthread.php?tid=2045)



கடத்தப்பட்ட புளொட் உறுப்பினரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் - Vaanampaadi - 12-13-2005

வவுனியாவில் கடத்தப்பட்ட புளொட் உறுப்பினரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்


போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
வவுனியாவில் கடத்திச் செல்லப்பட்ட புளொட் அமைப்பின் உறுப்பினரான பாருக் என்றழைக்கப்படும் சின்னத்தம்பி கணேசலிங்கத்தை விடுதலை செய்யக்கோரி, ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்று இன்று அங்கு நடைபெற்றது.

சமளங்குளம் பாடசாலையில் இருந்து ஆரம்பமாகிய இந்த ஊர்வலம் வவுனியா நகரில் உள்ள போர்நிறுத்த சர்வதேச கண்காணிப்பு குழுவின் அலுவலகத்தை நோக்கிச் சென்றபோது கொரவப்பத்தானை வீதி, இறம்பைக்குளத்தில் வைத்து பொலிசார் தடுத்து நிறுத்தினர்.

அவசரகாலச் சட்டம் அமுலில் இருப்பதனால், ஊர்வலத்தைத் தொடர்ந்து செல்வதற்கு அனுமதிக்க முடியாதென பொலிசார் தெரிவித்தனர்.

ஊர்வலம் வருவதை அறிந்து அவிடத்திற்கு விரைந்த போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் வவுனியா மாவட்டத் தலைவரிடம் புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் திருப்பதி மாஸ்டர் ஊர்வலத்தில் வந்தவர்களின் சார்பிலான மகஜர் ஒன்றைக் கையளித்தார்.

அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு எழுதப்பட்ட மகஜர் ஒன்றும் போர்நிறுத்த கண்காணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.

கடத்திச் செல்லப்பட்டவரை இரண்டு தினங்களுக்குள் பாதுகாப்பாக மீட்டுத் தரவேண்டும் என்ற கோரிக்கையும் அங்கு முன்வைக்கப்பட்டது.


போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்களுடன் பேச்சு
இதன் பின்னணியில் யார் இருக்கின்றனர் என்பதைக் என்பதைக் கூறக்கூடிய நிலையில் நான் இல்லை; எல்லா தரப்பினருடனும்; எமக்குத் தெரிந்த அனைவருடனும் நாங்கள் தொடர்பு கொண்டிருக்கின்றோம்; உண்மையைக் கண்டறிவதற்காக முயற்சிக்கின்றோம்; இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் தரப்புடன் கலந்துரையாடியுள்ளோம்; வன்னியில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினருடனும் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம் என போர்நிறுத்த சர்வதேச கண்காணிப்பு குழுவின் வவுனியா மாவட்டத் தலைவர் அங்கு தெரிவித்தார்.

நேற்றைய கடத்தல் சம்பவத்தையடுத்து நேற்றும் இன்றும் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினர் புளியங்குளத்தில் தம்மைச் சந்தித்துப் பேசியதாகவும், இந்த சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென தாங்கள் தெரிவித்திருப்பதாக விடுதலைப் புலிகளின் வவுனியா மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் ஞானம் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

கடத்தலில் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க வேண்டியது பொலிசாரின் கடமையென்றும் அதற்குத் தாங்கள் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தாகவும் ஞானம் சுறினார்.

இதனிடையில் மன்னார் பேசாலையில் பொலிசார் மீது நேற்றிரவு நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் காயமடைந்த 20 பொலிசாரும் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்றைய சம்பவத்தையடுத்து, பேசாலை நகரில் கடற்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டு தேடுதல் மற்றும் வீதிச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

BBC Tamiloosai