![]() |
|
மேலும் தாமதமோ மழுப்பலோ வேண்டாம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மேலும் தாமதமோ மழுப்பலோ வேண்டாம் (/showthread.php?tid=1914) |
மேலும் தாமதமோ மழுப்பலோ வேண்டாம் - Vaanampaadi - 12-21-2005 மேலும் தாமதமோ மழுப்பலோ வேண்டாம் உடனடியாக பேச்சை ஆரம்பிக்க வேண்டும் டோக்கியோ மகாநாட்டு கூட்டுத் தலைமை நாடுகள் அரசிடமும் புலிகளிடமும் அவசர வேண்டுகோள் சமாதான நடவடிக்கைகளில் பற்றுறுதியுடன் ஈடுபடுமாறும் வட,கிழக்கில் அதிகரித்துச் செல்லும் வன்செயல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உதவுமாறும் விடுதலைப் புலிகளை வலியுறுத்தியுள்ள இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள், அமைப்புகளின் கூட்டுத்தலைமை நிலைமை சீர்குலைவதற்கு துணைப் படைகளின் செயற்பாடுகளும் காரணம் என்பதை தாங்கள் அடையாளம் கண்டிருப்பதாகவும் அவற்றைக் கட்டுப்படுத்துவதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் அபிவிருத்தி, புனர் நிர்மாணத்திற்கான 2003 டோக்கியோ மாநாட்டில் இணைத்தலைமை தாங்கிய ஐரோப்பிய ஒன்றியம் நோர்வே ஜப்பான் அமெரிக்கா ஆகிய நாடுகள்,அமைப்புகளே பிரசல்ஸில் நேற்று முன்தினம் ஒன்று கூடிய போது இலங்கையின் சமாதான நடவடிக்கைகளில் துணைப்படைகளை கொழும்பு அரசாங்கம் கையாளும் விதமும் விடுதலைப் புலிகளின் வன்முறைகளும் முக்கியமான விடயங்களாக இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளன. வன்முறைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு விடுதலைப் புலிகளை வலியுறுத்தியிருக்கும் இணைத் தலைமைகள், யுத்த நிறுத்த உடன்படிக்கை, சமாதான நடவடிக்கைகளில் தமது ஈடுபாட்டை வெளிப்படுத்துமாறும் இது தொடர்பான தமது மாற்றத்தை வெளிப்படுத்தத் தவறினால் பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுமெனவும் எச்சரித்துள்ளன. பிரசல்ஸ் மாநாட்டினைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையின் விபரம் வருமாறு; இலங்யைின் நிலவரத்தை மீளாய்வு செய்வதற்காக 2005 டிசம்பர் 19 இல் பிரசல்ஸில் டோக்கியோ மாநாட்டின் இணைத்தலைமைகள் சந்தித்தன. அதேசமயம் இந்த இணைத்தலைமைகளை இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதியொருவரும் தனியாக சந்தித்து கருத்துகளை பரிமாறியுள்ளார். சமாதான நடவடிக்கைகளுக்கு மீள உயிரோட்டமளிப்பதற்கும் அதிகரித்துச் செல்லும் வன்செயல்களுக்குமிடையிலான முக்கியமான தேர்வை இலங்கை எதிர் நோக்குவதாக கூட்டுத் தலைமைகள் அவதானித்துள்ளன. நீடித்த சமாதானமானது இலங்கை அரசாங்கத்தினதும் விடுதலைப் புலிகளினதும் கரங்களிலேயே தங்கியுள்ளது. இலங்கை மக்கள் சமாதானத்தையே விரும்புகின்றனர். இந்த விருப்பத்தை நிறைவேற்றத் தவறினால் துன்பகரமான பின்னடைவே ஏற்படும். நியாய பூர்வமான அரசியல் கூட்டமைப்பு தொடர்பான புலிகளின் அண்மைய கோரிக்கையையும் இணைத் தலைமைகள் கவனத்தில் எடுத்துள்ளன. ஆயினும் வட, கிழக்குப் பகுதிகளில் ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு பலவந்தப்படுத்தியமை தமிழ் வாக்காளரின் வாக்குரிமையைப் பறிக்கும் செயலென புலிகள் மீது கூட்டுத் தலைமைகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அத்துடன் வட, கிழக்கில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் வன்செயல்களையும் கூட்டுத் தலைமைகள் கடுமையான தொனியில் கண்டித்துள்ளன. வன்முறைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு புலிகளுக்கு கோரிக்கை விடுத்திருப்பதுடன் யுத்த நிறுத்த உடன்பாடு, சமாதான நடவடிக்கைகளில் தமக்கிருக்கும் ஈடுபாட்டை வெளிப்படுத்துமாறும், தவறினால் பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுமெனவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. நிலமை சீர்குலைவதற்கு துணைப் படையினர் நடவடிக்கைகளும் மற்றொரு காரணமென இணைத்தலைமை அடையாளம் கண்டுள்ளது.அத்தகைய குழுக்களின் செயற்பாட்டை நிறுத்துவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் சமாதான முன்னெடுப்புகளில் தனக்கிருக்கும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்த துணைப் படைகளின் நடவடிக்கைகளை நிறுத்துவது அவசியமென்றும் இணைத்தலைமைகள் வலியுறுத்தியுள்ளன. அதேவேளை, யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுலாக்கத்தை மீளாய்வு செய்வது தொடர்பாக இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் உடனடிப் பேச்சுவார்த்தையை நடத்த இணங்கியுள்ளமையையும் தனது நாட்டில் பேச்சுவார்த்தையை நடத்த ஜப்பான் உதவ முன்வந்தமையையும் கூட்டுத் தலைமைகள் வரவேற்றுள்ளன. அத்துடன், அந்தப் பேச்சுகளை மேலும் தாமதிக்காமல் இரு தரப்பும் உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமெனவும் நழுவல் பேச்சுகளைக் கைவிட்டு பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறும் இரு தரப்பிடமும் வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்க தென்னிலங்கையில் அரசியல் கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் நோக்கத்தையும் இணைத்தலைமைகள் வரவேற்றுள்ளதுடன் தெற்கிலுள்ள பிரதான அரசியல் கட்சிகள் உள்ளடங்கலாக சகல கட்சிகளும் ஜனாதிபதியின் இந்த முயற்சிக்கு காத்திரமானதும் நெகிழ்வுத் தன்மையுடையதுமான பங்களிப்பை வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளன. சகல சமூகங்களினதும் அபிலாஷைகளை கவனத்தில் கொண்டதாகவும் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண்பதை அடிப்படையாகக் கொண்டதாகவும் பேச்சுவார்த்தை அமைய வேண்டுமென நம்புவதாக இணைத்தலைமைகள் தெரிவித்துள்ளன. அத்துடன், அண்மைய சம்பவங்களின் போது முஸ்லிம் சமூகம் பொறுமைகாத்ததையும் இணைத்தலைமைகள் பாராட்டியுள்ளன. மேலும், நோர்வேயின் அனுசரணையில் தனது நம்பிக்கையை உறுதிப்படுத்தியதற்காக இலங்கை அரசாங்கத்தினதும் புலிகளினதும் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நோர்வேயின் அனுசரணைக்கு முழுமையான ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதையும் இணைத் தலைமைகள் உறுதியளித்துள்ளன. இலங்கைப் போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் பதற்றமான சூழ்நிலையிலும் ஆற்றிவரும் பணிக்காக பாராட்டியிருப்பதுடன் அவர்கள் தமது கடமையை மேற்கொள்வதற்கான சூழலையும் அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. யுத்த நிறுத்த உடன்படிக்கையின் 4 ஆவது வருட நிறைவை அண்மித்த காலப்பகுதியில் தமது அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு தயாராக இருக்கும் விருப்பத்தையும் இணைத்தலைமைகள் வெளிப்படுத்தியுள்ளன. thinakural http://www.thinakural.com/New%20web%20site...Lead%20News.htm |