![]() |
|
போர் நிறுத்தம் அமுலில் இருக்கிறதா:புலிகள் கேள்வி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: போர் நிறுத்தம் அமுலில் இருக்கிறதா:புலிகள் கேள்வி (/showthread.php?tid=1662) |
போர் நிறுத்தம் அமுலில் இருக்கிறதா:புலிகள் கேள்வி - வினித் - 01-02-2006 <b>போர் நிறுத்தம் அமுலில் இருக்கிறதா கண்காணிப்புக் குழுவிடம் புலிகள் கேள்வி</b> போர்நிறுத்த உடன்பாடு அமுலிலுள்ளதா என போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் விடுதலைப்புலிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலனை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில், மாவட்ட கண்காணிப்புக் குழுத் தலைவர் ஆதர் சந்தித்த போதே எழிலன் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். இது குறித்து எழிலன் அங்கு கூறுகையில்; அரசும் புலிகளும் இணக்கம் தெரிவித்தே போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. அதனை முழுமையாக அமுல்படுத்த வேண்டியது இரு தரப்பினதும் கடமை. ஆனால், இன்றோ படைத்தரப்பு அதனை முற்றுமுழுதாக மீறி வருகின்றது. ஒப்பந்தத்திற்கு மாறாகவே அனைத்தையும் செய்கிறது. உடன்பாட்டிலுள்ள அனைத்தும் மீறப்பட்டுள்ளன. கைதுகள், சுற்றிவளைப்புகள், தேடுதல்கள், புதிய முகாம்கள், காவலரண்கள் அமைக்கப்படுவதுடன் அப்பாவி மக்களையும் சுட்டுக்கொல்கிறது. சுற்றிவளைப்புகள், தேடுதல்கள், கைதுகளெல்லாம் தமிழ் மக்களை மட்டுமே இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகிறது. வேறு எந்தச் சமூகத்தையும் விட தமிழ் மக்கள் இந்த உடன்பாட்டின் பேரில் மிக மோசமாகத் துன்புறுத்தப்படுகின்றனர். படையினரின் யுத்தநிறுத்த மீறல்கள் நாளுக்கு நாள் மிக மோசமாக அதிகரித்து வருகிறது. நிழல் யுத்தத்தால் கிழக்கில் தினமும் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். அவசரகாலச் சட்டத்தின் கீழ் இவற்றையெல்லாம் செய்ய முடியுமென்றால் போர்நிறுத்த உடன்பாடு எதற்காக? ஒரு தரப்பின் கைகளைக் கட்டிவிட்டு மற்றத் தரப்பு செய்யும் அட்டகாசங்களுக்கு அளவேயில்லாது போய்விட்டது. போர்நிறுத்த உடன்பாடு அமுலிலில்லையென்றால் கூறுங்கள் நாம் எமது வழியைப் பார்த்துக் கொள்வோம். இதைவிட, தற்போது ஊர்காவல் படையென்ற பெயரில் திருகோணமலையில் தமிழ் - முஸ்லிம்களிடையே மோதல்களை உருவாக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. கந்தளாய் பொலிஸ் அத்தியட்சர் பிரிவில் மூதூர் மற்றும் தோப்பூர் பகுதிகளை மையமாக வைத்து முஸ்லிம் ஊர்காவல் படைகளை உருவாக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. இருவார ஆயுதப் பயிற்சியின் பின்னர் இந்த ஊர்காவல் படைக்கு ஆயுதங்களைக் கையளிப்பதன் மூலம் தமிழ் - முஸ்லிம்களிடையே மோதல்களை ஏற்படுத்தும் கபட நோக்கமுள்ளது. இது குறித்து உடன் கவனம் செலுத்துமாறும் எழிலன் கண்காணிப்புக் குழுவினரைக் கேட்டுள்ளார். நன்றி:தினக்குரல் |