![]() |
|
ஒளிப்பதிவு செய்த பி.பி.சி. செய்தியாளருக்கு காடையர் மிரட்டல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஒளிப்பதிவு செய்த பி.பி.சி. செய்தியாளருக்கு காடையர் மிரட்டல் (/showthread.php?tid=1431) |
ஒளிப்பதிவு செய்த பி.பி.சி. செய்தியாளருக்கு காடையர் மிரட்டல் - Vaanampaadi - 01-13-2006 <b>திருமலை நிலவரத்தை ஒளிப்பதிவு செய்த பி.பி.சி. செய்தியாளருக்கு காடையர் மிரட்டல்</b> திருகோணமலையின் தற்போதைய நிலவரத்தை வீடியோ படமெடுத்த பி.பி.சி. செய்தியாளர்கள் காடையர்களினால் நேற்று வியாழக்கிழமை கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளனர். உப்புவெளி சந்தியில் வைத்தே நேற்றுக் காலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பான விவரணச் சித்திரமொன்றை தயாரிக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக திருகோணமலையில் தகவல் சேகரிக்க சென்றிருக்கும் பி.பி.சி. செய்தியாளர்கள் அப்பகுதி ஏற்கனவே ஸ்தம்பிதமடைந்திருக்கும் நிலையில், சிங்கள அமைப்பொன்றும் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு ஹர்த்தால் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருப்பதால் திருகோணமலை பகுதிகளில் நடைமுறை சூழ்நிலைகளை வீடியோ படமெடுக்க சென்றுள்ளனர். இவர்கள் முதலில் உப்புவெளியில் இருந்து திருகோணலை - கொழும்பு பிரதான வீதியில் வானில் இருந்தவாறே படமெடுத்து சென்று கொண்டிருக்கையில், பின்னாலேயே மோட்டார் சைக்கிளொன்றில் துரத்தி வந்த பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த ஒருவர் அநுராதபுர சந்தியில் வைத்து இவர்களை யாரென்று கேட்டுள்ளார். இதன் போது தாங்கள் ஊடகவியலாளர்களென பலமுறை எடுத்துக் கூறியும் குறித்த நபர் மீண்டும் மீண்டும் யாரென்று வற்புறுத்தியுள்ளதுடன் அடையாள அட்டையை தருமாறு கேட்டுள்ளார். எனினும் வானில் இருந்த ஒருவர் அவரிடம் கொடுக்காது அடையாள அட்டையை கண்ணாடி வழியாக காண்பித்ததும் மோட்டார் சைக்கிளில் வந்தவர் சரியென கூறிவிட்டு சென்றுள்ளார். இதன் பின்னர் பி.பி.சி. ஊடகவியலாளர்கள் மீண்டும் உப்புவெளியை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கையில் உப்புவெளி சந்தியில் வைத்து சுமார் 50 பேர் கொண்ட காடையர் குழுவொன்று இவர்கள் சென்ற வானை மறித்துள்ளது. வானைச் சுற்றி வளைத்த காடையர்கள் உள்ளிருந்த ஊடகவியலாளர்களை கீழிறங்கும் படி வற்புறுத்தியுள்ளதுடன், படமெடுத்ததை தங்களுக்கு காண்பிக்குமாறும் இல்லாவிட்டால் வானை செல்ல அனுமதிக்க முடியாதெனவும் மிரட்டியுள்ளனர். எனினும், வானில் இருந்து இறங்க மறுத்த ஊடகவியலாளர்கள் வான் கதவையும் தாழ்ப்பாள் இட்டுள்ளனர். இதனையடுத்து, அடிப்போமென மிரட்டியிருக்கும் காடையர்கள், வானின் சாவியையும் பறித்தெடுத்ததோடு, பிடித்த வீடியோ படத்தை தங்களுக்கு போட்டு காண்பிக்குமாறு தொடர்ந்து பலவந்தப்படுத்தியுள்ளனர். இச் சந்தர்ப்பத்தில் மூன்று வெளிநாட்டு ஊடகவியலாளர்களும், அதே நிறுவனத்தின் உள்நாட்டு பெண் ஊடகவியலாளர் ஒருவரும், வான் சாரதியும் மட்டுமே வானில் இருந்துள்ளனர். இதில் வான் சாரதி சிங்களவர் என்பதோடு, குறித்த பெண் ஊடகவியலாளர் சிங்களம் பேசக் கூடிய தமிழராவார். இந்த சூழ்நிலையில், மொத்தமாக ஐவர் மட்டுமே வானில் இருந்ததால் எதுவும் செய்ய முடியாமல், வீடியோ படத்தை போட்டுக் காண்பிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் அங்கிருந்த ஆங்கிலம் தெரிந்த ஒருவரை மட்டும் வானிற்குள் அழைத்து தாங்கள் எடுத்த வீடியோ படங்களை பி.பி.சி. ஊடகவியலாளர்கள் போட்டுக் காண்பித்துள்ளனர். இதன் போது, தங்கள் வானை மறித்ததை படம்பிடிக்கப் பட்டிருக்கும் பகுதியை அழித்து விடுமாறு காடையர்கள் மிரட்டியுள்ளனர். அதற்கும் ஊடகவியலாளர்கள் சம்மதம் தெரிவித்து செயற்பட்டுள்ளனர். சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக இடம் பெற்ற இந்த மிரட்டல் நாடகத்தை பொலிஸாரும் படையினரும் அவதானித்துக் கொண்டிருந்த போதும் அவர்கள் எதுவித நடவடிக்கையையும் எடுக்க முயற்சிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, ஊடகவியலாளர் தாங்கள் வெளிநாட்டு ஊடகத்தைச் சேர்ந்தவர்களென சிங்களத்தில் எடுத்துக் கூறியும் ஏனைய பல வழிகளிலும் தங்களை அடையாளம் காண்பித்த போதும் காடையர்கள் அடாவடித்தனமாக நடந்து கொண்டு இறுதியில் மன்னிப்புக் கோரி செல்ல அனுமதித்துள்ளனர். இதேவேளை, அங்கிருந்த அனைத்து நபர்களின் கைகளிலும் கையடக்கத் தொலைபேசிகள் இருந்ததெனவும் கூறப்பட்டது. இதனையடுத்து, திருகோணமலை நகரில் இருக்கும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலைக்கருகிலுள்ள பிரதேசங்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த அதே பி.பி.சி. ஊடகவியலாளர்களை அங்கிருந்த சில சிங்களவர்கள் படமெடுக்க வேண்டாமென எச்சரித்துள்ளனர். தாங்கள் புத்தர் சிலையை படமெடுக்கவில்லையென ஊடகவியலாளர்கள் எடுத்துக் கூறிய போது, உடனடியாக இங்கிருந்து அகன்று செல்ல வில்லையெனின் என்ன நடக்குமென தெரியாதெனவும் கடுமையாக மிரட்டியுள்ளனர். http://www.thinakural.com/New%20web%20site...Important-8.htm |