![]() |
|
புதனுக்கு ஒரு தூதன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: புதனுக்கு ஒரு தூதன் (/showthread.php?tid=1212) |
புதனுக்கு ஒரு தூதன் - adsharan - 01-24-2006 2004 ஆவணி 3 ஆம் திகதியன்று அமெரிக்காவிலுள்ள கென்னடி முனையிலிருந்து மெசஞ்சர் என்ற விண்வெளிக்கலம் புதன் கோளை நோக்கிப் பயணம் செய்யத் தொடங்கியது. புதன் சூரிய மண்டலத்தின் முதல் கோள். அது சூரியனை மிக நெருக்கமாக வலம் வருகிறது. மெசஞ்சர் கிட்டத்தட்ட எட்டு பில்லியன் கிலோ மீற்றர் (ஐந்து பில்லியன் மைல்கள்) பயணம் செய்ய வேண்டியிருக்கும். அதற்கு ஆறரை ஆண்டுகள் பிடிக்கும். 2011, மார்ச் 18 ஆம் திகதி வாக்கில் மெசஞ்சர் புதனைப் போய் சேரும் என எதிர்பார்க்கிறார்கள். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் பத்தாவது மாரினர் என்ற விண்கலம் புதனுக்கு மேலாக மூன்று முறை சுற்றிப் பறந்தது. அதையடுத்து இப்போதுதான் மெசஞ்சர் விண்கலம் புதனை நெருக்கமாகப் பார்ப்பதற்காக அனுப்பப்பட்டிருக்கிறது. எல்லாம் நல்லபடியாக நடந்தால் அது 2011 ஆம் ஆண்டில் புதனை அடைந்து விடலாம். ஏனெனில் இந்தப் பயணம் இலகுவான ஒன்றல்ல. அதற்கு இடையூறு செய்ய எண்ணற்ற சிக்கல்களும், பிரச்சினைகளும் காத்திருக்கின்றன. முதலாவதாகப் புதனை அடைவது என்று சொல்லும்போது அதில் போயிறங்குவது என்று அர்த்தமாகாது. இரண்டுக்குமிடையில் மலையளவு வித்தியாசமுண்டு. புதனுக்கு அருகில் போவது வேறு, அதில் தரையிறங்குவது வேறு. முதல் சிக்கல் என்னவெனில் புதனில் தரையிறங்குவதற்குத் தேவையான அளவுக்கு எரிபொருளை நிரப்ப அந்த விண்கலத்தில் போதுமான இடமில்லை. அது பூமியைச் சுற்றி ஒரு முறையும் வெள்ளியைச் சுற்றி இரண்டு முறைகளும் புதனைச் சுற்றி மூன்று முறைகளும் வட்டமடிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. அந்த விண்கலத்தின் நீண்ட பயணத்தில் எரிபொருளைச் சிக்கனப்படுத்துவதற்காக அது கோள் சுழலும் திசையிலேயே கோளைச் சுற்றி வருமாறு செய்யப்படுகிறது. அப்போது கவண்கல்லைப் போல் விண்கலமும் உந்தப்பட்டு அதன் வேகம் அதிகமாகும். கோளின் கோண உந்தம் விண்கலத்துக்குக் கை மாற்றப்படுவதாக அறிவியல் பரிபாஷையில் இதைச் சொல்லுவார்கள். கடைசியாக விண்கலம் சூரியனை 15 முறை சுற்றி வருமாறு செய்யப்படும். ஆனால், இந்த முறை அது சூரியனின் சுழல் திசைக்கு எதிரான திசையில் சுற்றி வரும். அப்போது அதன் வேகம் படிப்படியாகக் குறையும். அதன் பிறகு அது புதனைச் சுற்றிவரத் தொடங்கும். கிட்டத்தட்ட ஓராண்டு காலத்துக்கு அது புதனை வலம் வரும். அந்த விண்கலத்தில் ஏழு வகையான அறிவியல் ஆய்வுக் கருவிகள் உள்ளன. அவை புதனைப் பற்றிப் பல விதமான தகவல்களைத் திரட்டிப் பூமிக்கு அனுப்பும். புதன் ஒரு சிறிய சூடான கோள். அது சராசரியாக 36 பில்லியன் மைல் தொலைவில் சூரியனைச் சுற்றிவருகிறது. சூரியனை அடுத்து இருக்கிற கோள் அதுதான். புதனை விட இரண்டரை மடங்கு அதிகமான தொலைவில் பூமி அமைந்துள்ளது. சூரியனுக்கு அவ்வளவு நெருக்காமகப் புதன் இருப்பது விஞ்ஞானிகளுக்குப் பல சவால்களை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள உயர் வெப்ப நிலையை விண்கலம் தாங்கியாக வேண்டும். அந்த விண்கலம் கிட்டத்தட்ட 700 செல்சியஸ் டிகிரி வரையான வெப்பநிலைகளை எதிர்கொள்ள நேரிடலாம். பூமியை 11 சூரியன்கள் தாக்குமானால் ஏற்படுவதற்குச் சமமான வெப்பநிலை இது. விசேடமாக வடிவமைக்கப்பட்டதும் கால் அங்குலத் தடிமனுள்ளதும், பீங்கான் மற்றும் செயற்கை இழைகளாலானதுமான ஓர் உறை அந்த விண்கலத்தைச் சுற்றிப் பொருத்தப்பட்டுள்ளது. அது விண்வெளிக் கலத்திற்குள்ளிருக்கிற வெப்பநிலையை 20-30 செல்சியஸ் டிகிரி அளவுக்குக் குறைத்துவிடும். இந்த விசேடமான உறையை உருவாக்குவதற்கே கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் பிடித்தன. மெசஞ்சரின் பயணம் இவ்வளவு காலம் தள்ளிப் போனதற்கு அது ஒரு முக்கியமான காரணம். மெசஞ்சர் விண்கலத்தைச் செலுத்துகிற திட்டத்தை உருவாக்கிச் செயல்படுத்துகிற ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் அதற்காக 427 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவழிக்கிறது. மாரினர் 10 புதன் கோளைச் சுற்றி வராமல் அதன் மேலாகப் பறந்து சென்றது. அதனால் புதனின் ஒரு பக்கத்தின் ஒரு குறைந்த பரப்பை மட்டுமே பார்வையிட முடிந்தது. இந்த முறை மெசஞ்சர், புதனைச் சுற்றி வலம் வந்து அதன் எல்லாப் பகுதிகளையும் பார்வையிடும். ஆனால், அது புதனில் தரையிறங்கப் போவதில்லை. அதற்கு மாறாக அது புதனைச் சுற்றி ஒரு நிரந்தரமான பாதையில் நிலைகொள்ள முயலும். அதற்கு மேல் எதையும் செய்யத் தேவையான எரிபொருளை நிரப்ப அதில் இடமில்லை. அது வெள்ளியின் மேலாகப் பறந்து செல்கிறபோது அதிலுள்ள கருவிகள் சரியாக அளவெடுக்கின்றனவா என்று சோதிக்கிற வாய்ப்புக் கிடைக்கும். அதற்கு முன்பாக வெள்ளியைக் கடந்து சென்ற விண்கலங்கள் அதன் மேகப்படலங்களுக்கு மேலாகப் பறந்து கண்ணுக்குப் புலனாகும். ஒளிக்கதிர்களையும் கீழ்ச்சிவப்புக் கதிர்களையும் பயன்படுத்தி அந்த மேகப் படலங்களின் மேற்பரப்பைப் படமெடுத்து அனுப்பியிருக்கின்றன. மெசஞ்சரும் வெள்ளிக்கு மேலாகப் பறந்து செல்லும்போது தன் பங்குக்கு அதே விதமான படங்களை எடுத்து அனுப்பும். பழைய படங்களுடன் மெசஞ்சர் அனுப்பும் படங்களை ஒப்பிட்டுப் பார்த்து மெசஞ்சரின் கருவிகள் சரியாக வேலை செய்கின்றனவா என்று சோதித்துப் பார்க்கலாம். மெசஞ்சர் வெள்ளியின் சூரிய ஒளிபடாத பாதியில் உருவாகும் மின்னல்களையும், வெள்ளிப்பரப்பின் எக்ஸ் கதிர் பிம்பங்களையும் பதிவு செய்ய உதவும் கருவிகளைக் கொண்டிருக்கிறது. புதனைச் சுற்றி வரும்போது மெசஞ்சர் அதிகத் தெளிவுடன் கூடிய பிம்பங்களை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் மாரினர் 10 மூன்று முறை புதனுக்கு மேலாகப் பறந்து சென்றபோதும் ஒவ்வொரு முறையும் அது புதனின் இரவுப் பகுதியின் மேலாகவே பறக்கும்படியாகிவிட்டது. இந்த முறை மெசஞ்சர் புதனைச் சுற்றி வருவதால் அதன் எல்லாப் பகுதிகளையும் படமெடுத்து அனுப்ப முடியும். புதனின் வண்ணப் படங்களின் மூலம் அதன் மேல் பரப்பின் கூட்டமைப்பு அதன் வளிமண்டலம், காந்த மண்டலம் போன்றவற்றைப் பற்றிப் பல தகவல்களை அறிந்துகொள்ள முடியும். வருங்காலத்தில் புதனை நிரந்தரமாக வலம் வருகிற வகையில் ஒரு விண்கலத்தை வடிவமைத்து அனுப்ப அவை உதவும். புதனை நெருங்குகிறபோது எதிர்ப்படுகிற உயர் வெப்ப நிலைகளையும் பேராற்றல் கதிர்களையும் தாக்குப் பிடிக்கிற வகையில் மெசஞ்சர் விண்கலத்தை வடிவமைக்க வேண்டியிருந்தது. அதற்குத் தேவையான விடயஞானமும் தொழில்நுட்பத் திறமைகளும் கை வரப்பட்டு விட்டதையே மெசஞ்சரின் பயணம் அடையாளம் காட்டுகிறது. புதனின் மேலாகப் பறந்து செல்ல வைப்பதைவிட விண்கலம் அதைச் சுற்றிய ஓடுபாதையில் நிலைகொள்ளும்படி செய்வது அதிகச் சிக்கலானது. அதற்கு மேலும் பல அம்சங்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. விண்கலத்தின் பயணத் திட்டத்தை வகுக்கின்றபோது பணச் செலவுகளையும், தொழில்நுட்பட வரம்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். பூமியை விட்டு நீங்குகிறபோது விண்கலத்துக்கு அளிக்க வேண்டிய திசைவேகம், வெள்ளி, புதன் ஆகியவற்றைக் கடந்து செல்கிறபோது அவற்றின் மூலம் கிட்டக்கூடிய கூடுதல் வேகம், விண்கலத்திற்கேற்ற எரிபொருளின் தகுதிகள், பயணத்தை நிறைவு செய்வதற்கான காலக்கெடு போன்ற பல விடயங்களைத் துல்லியமாகத் தீர்மானித்தாக வேண்டும். விண்கலத்தை ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாகப் புறப்படவைப்பதே பெரிய சவாலான காரியம். அது ஒரு கோளைச் சரியான திசையிலும், வேகத்திலும் தொலைவிலும் பறந்து கடக்கச் செய்வது, அதைவிடக் கஷ்டமான காரியம். அது பறக்கிறபோதே அதன் ஓடுபாதையின் வடிவத்திலும், அளவிலும் சாய்விலும் கணிசமான மாற்றங்களை அவ்வப்போது செய்துகொண்டேயிருக்க வேண்டியிருக்கும். புதனை நெருங்கியதும் அதன் வேகத்தைப் புதன் சூரியனைச் சுற்றிவருகிற வேகத்துக்குச் சமமாகும்படி குறைக்க வேண்டும். அதன் பிறகு அது புதனின் நிறையீர்ப்பில் கட்டுண்டு அதைச் சுற்றி வரும்படி செய்யவேண்டும். http://www.thinakural.com/New%20web%20site...4/Article-2.htm - Rasikai - 01-24-2006 தகவலுக்கு நன்றி - வர்ணன் - 01-25-2006 பயனுள்ள தகவல்கள்- இணைப்புக்கு நன்றி அட்சரன் -! தொடர்ந்தும் பகிருங்கள்! 8) - RaMa - 01-25-2006 நன்றி தகவல்களுக்கு அட்சரன் |