Yarl Forum
விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை :கூறுவது ஜே.வி.பி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை :கூறுவது ஜே.வி.பி (/showthread.php?tid=1127)



விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை :கூறுவது ஜே.வி.பி - வினித் - 01-29-2006

விட்டுக்கொடுப்பு!

<b>சுவிற்சர்லாந்தில் ஜெனீவா நகரில் சமாதானப் பேச்சுவார்த்தை நடாத்துவதை ஜே.வி.பி எதிர்க்கவில்லை. ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றிலோ அன்றி ஒஸ்லோவிலோ நடத்தக்கூடாது என்பதே ஜே.வி.பியின் நிலைப்பாடாகும். இந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத சுவிற்;சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடைபெறுவதை ஜே.வி.பி எதிர்க்காது என்பதே ஜெனீவா பேச்சுவார்த்தை குறித்து ஜே.வி.பி.யின் தற்போதைய நிலைப்பாடாகும்.</b>

வேறொரு விதத்தில் கூறுவதனால் விடுதலைப் புலிகள் இயக்கம் அரசாங்கம் போட்ட நிர்ப்பந்தத்திற்குப் பணிந்துள்ளது போன்றும் அரசாங்கத்திற்கு இவ் வெற்றியானது ஜே.வி.பி அரசாங்கத்தின் மீது போட்ட அழுத்தத்தின் விளைவாக ஏற்பட்டது என்பது போன்றதுமே ஜே.வி.பி.யின் நிலையாகக் கொள்ளத்தக்கது.

விடுதலைப் புலிகள் இயக்கம் ஒஸ்லோவில் இருந்து ஜெனீவாவில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஒப்புக் கொண்டமைக்குப் பலர் தாமே காரணம் என திருப்திப்பட்டும் கொள்ளலாம். பெருமைப்பட்டும் கொள்ளலாம். அதாவது விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தவர்கள்; ஒருவகையில் மிரட்டும் தொனியில் பேசியவர்கள் தமது நடவடிக்கைகளே காரணம் எதையும் கூறிக்கொள்ளவும், திருப்திப்பட்டுக் கொள்ளக்கூடும்.

இதேவேளை சிறிலங்கா ஆட்சியாளர்கள் ஒஸ்லோவிற்கு வரப்போவதில்லை எனப்பிடிவாதமான போக்கைக் கடைப்பிடித்ததன் காரணமாக விடுதலைப் புலிகள் இணங்கி வரவேண்டியதாயிற்று என்றும் ஜே.வி.பி போன்ற பௌத்த-சிங்கள பேரினவாத சக்திகள் விடுதலைப் புலிகள் பணிந்து போய்விட்டதாகவும் கூறிக்கொள்ள முடியும்.

ஆனால் அடிப்படையில் நிகழ்ந்ததென்னவெனில் சிறிலங்கா அயுதப் படைத்தரப்பு அப்பாவித் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட இனப்படுகொலை காரணமாகவும் சமாதானத்தின் மீது விடுதலைப் புலிகள் கொண்டிருந்த பற்றுறுதியை வெளிப்படுத்தும் வகையிலுமே புலிகள் ஜெனீவா நகரில் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்தனர் என்பதே உண்மையாகும்.

இதனைத் தவிர சர்வதேச சமூகம் சமாதான முயற்சிகளில் முன்னேற்றம் காண வேண்டும் எனக் கொண்டிருந்த அபிப்பிராயம்- குறிப்பாக சமாதான முயற்சிகளில் நோர்வே அரசு எடுத்துக் கொண்டிருந்த கரிசனை என்பனவற்றிற்கு மதிப்பளிக்கும் வகையிலேயே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த உடன்பட்டனர் என்பதே நிதர்சனமானதாகும்.

இதனைவிடுத்து ஜே.வி.பி.யினரோ அன்றி சில பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளோ பெருமைப்பட்டுக்கொள்ளும் வகையில் சிறிலங்கா ஆயுதப் படையினருக்குப் பயந்தோ அன்றி சிறிலங்கா இராணுவத்திற்கு கிடைக்கக்கூடியதான இராணுவ உதவிகள் குறித்து கலக்கமடைந்தோ புலிகள் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை.

விடுதலைப் புலிகளின் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பவர்கள் எவருமே விடுதலைப் புலிகள் அச்சத்தின் காரணமாக விட்டுக் கொடுப்புக்கள் எதையும் செய்யும் இயக்கம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடந்த கால வரலாறானது அச்சமூட்டிப் புலிகளைப் பணிய வைக்க முடியாது என்பதை எவருக்குமே தெளிவுபடுத்தத்தக்;கதாகும்.

இது ஒருபுறம் இருக்க ஜே.வி.பி கூறுவது போன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்துவதையே தாம் எதிர்த்ததாகக் கூறுவது எல்லாம் சிறுபிள்ளைத்தனமானது. அதாவது ஆசியாவில் பேச்சுவார்த்தை நடத்தப்படுதல் வேண்டும் என்றே அது வலியுறுத்தி வந்தது. தற்பொழுது அதனை ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் பெறாத நாடொன்றில் பேசுவதற்குத் தாம் எதிர்ப்பில்லை எனக் கூற ஆரம்பித்துள்ளனர். அதாவது விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பது போல் உள்ளது ஜே.வி.பி.யின் விளக்கம்.

ஆனால் ஜே.வி.பி.க்கு ஒன்று தெரியாது போல் உள்ளது. ஐரோப்பாவில் இலங்கைத் தமிழ் மக்கள் அதிகமுள்ள நாடுகளில் சுவிற்;சர்லாந்தும்; ஒன்று என்பது. சிறப்பாகக் கூறுவதானால் நோர்வேயை விட சுவிற்;சர்லாந்திலேயே அதிக இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர் என்பது.

இதனைத் தவிர ஜே.வி.பி.யின் மற்றொரு சிறுபிள்ளைத்தனமான பேச்சும் உள்ளது. அதாவது ஜெனீவா செல்லும் புலிகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்குமாறு அது கோருகிறது. அதாவது சுவிஸ் செல்லும், விடுதலைப் புலிகள் அங்குள்ள தொண்டர் அமைப்புக்களுடன் இணைந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதே ஜே.வி.பி.யினரின் கோரிக்கை ஆகும். இது அவர்களின் விளங்காத்தனத்தைக் காட்டுகின்றது என்பதைத் தவிர வேறு எதையும், கூறி விட முடியாது. ஏனெனில் சுவிஸ் செல்லும் விடுதலைப் புலிகள் யாருடன் பேசுகின்றார்கள், கதைக்கின்றார்கள் என்பதை சிறிலங்கா அரசாங்;கத்தால் தீர்மானிக்க முடியும் எனக் கோருவது அரசியலில் அரிச்சுவடி புரியாதவர்களின் பேச்சாகும்.

இந்த ரீதியில், ஜே.வி.பி கூறுவது போன்று ஜெனீவா செல்ல விடுதலைப் புலிகள் உடன்பட்டமையானது ஜே.வி.பி. போன்ற அமைப்புகளுக்குக் கிடைத்த வெற்றியல்ல. சமாதானத்தில் விடுதலைப் புலிகள் கொண்டுள்ள பற்றுறுதியை வெளிப்படுத்தும் ஒன்றே ஆகும். அது மாத்திரமன்றி ஒஸ்லோவில் இருந்து ஜெனீவாவில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஒப்புக் கொண்டமை விட்டுக்கொடுப்பே ஒழிய இறங்கி வந்தமையல்ல. இதனை உணர்த்தத்தக்கதே ஆரம்பப் பேச்சுவார்த்தைகள்; யுத்த நிறுத்த அமுலாக்கம் பற்றியதாக இருக்கும் என்பது. நன்றி: தமிழ்நாதம்