Yarl Forum
மூச்சுவிட மகிந்தவுக்கு சிலநாட்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மூச்சுவிட மகிந்தவுக்கு சிலநாட்கள் (/showthread.php?tid=1126)



மூச்சுவிட மகிந்தவுக்கு சிலநாட்கள் - வினித் - 01-29-2006

மகிந்தவுக்கு மூச்சுவிட மட்டும் அல்ல- பேசவும் கால அவகாசம் கொடுத்திருக்கும் விடுதலைப் புலிகள்
-அருஸ் (வேல்ஸ்)-

அமைதி முயற்சியில் அடுத்த காய்நகர்த்தலுக்கு தயாராகிவிட்டர்கள் விடுதலைப் புலிகள். திரைமறைவில் யுத்த முனைப்புக்களை தீவிரப்படுத்தி, யுத்தகால அமைச்சரவையை கூட உருவாக்கும் திட்டங்களை வகுத்துக்கொண்டு வெளியே சமாதானத்தின் பிரியர் போல நாடகமாடுகிறது சிறிலங்கா அரசு.

தனது பங்காளியான ஜாதிக ஹெல உறுமயவை தூண்டிவிட்டு அமைதி முயற்சிக்கு முயற்சிப்பவர்களின் ஒரு சாதாரண உலங்குவானூர்தி வசதியைக்கூட பெரிதாக திரிவுபடுத்தி, தான் பெரும் அழுத்தங்களின் மத்தியில் அமைதி முயற்சியில் ஈடுபட்டு இருப்பது போல மகிந்த வெளி உலகிற்கு நாடகத்தை தொடங்கினார்!

அதாவது 'நான் அடிப்பது போல அடிக்கிறேன் நீ அழுவது போல அழு" என்று. ஆனால் பாலசிங்கம் உலங்குவானூர்தியில் வந்து கிளிநொச்சியில் இறங்கிய பின்பு அரசை விட்டு ஹெல உறுமய வெளியேறவில்லை?

அதேபோலவே பேச்சுவார்த்தைக்கான இடப்பிரச்சனையும், இதற்கு ஜே.வி.பி., ஹெல உறுமயவுடன் சேர்ந்து நாடகமாடினார்கள்.

இனப்பிரச்சனையை விட பேச்சுவார்த்தைக்கான இடத்தை பெரிதுபடுத்த முற்பட்டார்கள். இனவாதிகளான இவர்கள் தாங்களாகவே ஒரு எதிர்ப்பை கொண்டுவந்து பின் தாங்களாகவே கரணமடித்தார்கள்.

சுவிற்சலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லையே தவிர அது ஒரு ஐரோப்பிய நாடு. ஆசியாவை ஏன் மறந்தார்கள் இவர்கள்?

இவை அனைத்தும் வெளிஉலகிற்கு தாங்கள் பெரும் அழுத்தத்தில் இருப்பது போன்ற மாயையை உருவாக்கும் திட்டம்.

இதற்கு வழிசமைத்தவர்கள் யார்?

இன்று இனவாத சிங்கள ஆங்கில ஊடகங்களும், சிங்கள புலனாய்வுத்துறையும் தலைகால் புரியாமல் ஆடுவது எதனால்?

1948இல் தமிழ் மக்களுக்கு அநீதியிழைத்த பிரிட்டன்தான் 2005 இலும் ஒரு கொடுமையை இழைத்தது.

தனது கைக்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைமை பொறுப்பு வந்தவுடன் யார் செய்தார்கள் என்று சிறிலங்கா அரசால் கூட தடயங்களை கண்டுபிடிக்க முடியாது போன வெளிநாட்டமைச்சர் கதிர்காமரின் கொலையை, சிறிலங்கா அரசின் போலிப்பிரச்சாரத்தை நம்பி புலிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வரவேற்பதில்லை என்ற புதிய அழுத்தத்தை கொண்டு வந்தார்கள்.

போர் நிறுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை புலிகளை சினமடைய வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இதன் மூலம் குதூகலமடைந்த சிங்கள அரசு இத்தடையை முழுமையான தடையாக மாற்றுவதற்கு தனது புலனாய்வுத்துறையையும் ஒட்டுக்குழுக்களையும் பயன்படுத்தி அப்பாவி மக்களையும் இனப்பற்றாளர்களையும் கொன்று அதை புலிகள் மீது சுமத்தி தனது இனவாத சிங்கள ஆங்கில ஊடகங்களின் மூலம் சர்வதேசத்திற்கு காட்ட முற்படுகிறது.

இதில் மிகக் கேவலமான குற்றச்சாட்டு மாமனிதர் பரராஜசிங்கத்தை புலிகள் கொன்றதாக ஒரு சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டமை. நீங்கள் அவதானித்தீர்களானால் பிரிட்டனின் தடைக்கு பின்பு தான் இக் கொலைகள் உச்சக்கட்டத்திற்கு சென்றுள்ளது. இக்கொலைகளுக்கும், குழப்ப நிலைக்கும் பிரிட்டனின் நடவடிக்கை மறைமுக காரணியாக உள்ளது என்பது மறுப்பதற்கில்லை.

ஒருபுறம் நிழல் யுத்தத்திலும் மறுபுறம் சர்வதேசத்தில் புலிகளுக்கு அழுத்தத்தையும், அரசுக்கு ஆதரவையும் தேடும் மகிந்தரின் முயற்சியில் முதற்படியாக எரிக் சொல்ஹெய்மை வசை பாடியபடி இந்தியாவிற்கு ஓடினார்.
இந்தியா கைவிரித்துவிட தனது வெளிநாட்டமைச்சரை அமெரிக்காவிற்கு அனுப்பினார்.

இவை எல்லாம் ஏன்?

உண்மையிலேயே சமாதானத்தை விரும்பியிருப்பின் சமாதானத்திற்கு உதவ எப்பவும் தயாராக இருந்த நோர்வேயை நாடியிருப்பார்.

ஆனால் அவர் தனது பலவீனமான படைக்கு பலம் சேர்க்கும் முயற்சிக்கே உலகெங்கும் பிச்சை எடுக்கிறார்.

அமெரிக்கா பங்காளியாக விரும்பவில்லை. ஆனால் மக்கள் படையின் தாக்குதலால் நிலை ~குலைந்து போயுள்ள சிறிலங்கா படைகளிற்கு ஆறுதல் வார்த்தை கூற முன்வந்துள்ளது.

அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி லான்ஸ்டெட் சொல்கிறார், வலிமையான இராணுவத்தை புலிகள் சந்திக்க வேண்டி இருக்குமாம். இருக்கட்டும். சோவியத்தின் ஸ்ராலின் கிராட்டை ஆக்கிரமித்த போது ஜேர்மன் இராணுவம் உலகில் வலிமைமிக்க இராணுவம்தான்.

ஆனால் சோவியத்தின் செம்படையும், மக்களும் திருப்பித்தாக்கும் போது ஜேர்மன் இராணுவத்தால் தனது நாட்டு எல்லைகளைக்கூட பாதுகாக்க முடியாமல் போய்விட்டது.

வலிமையான இராணுவம் இருக்க ஏன் உலகெங்கும் உதவிகேட்டு திரிகிறார்கள்?

ஜெப்ரி லான்ஸ்டெட்டின் கருத்து மிகப் பலவீனமான சிறிலங்கா படைகளை மறைமுகமாக இனங்காட்டி நிக்கிறது.

இதே அமெரிக்கர்கள் தான் ஆனையிறவை மிகப்பலம் வாய்ந்த முகாம் என சந்திரிகாவிற்கு அறிக்கை சமர்ப்பித்தவர்கள். அத்துடன விடவில்லை. நடைபெற்ற எல்லா தாக்குதல்களும் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாக கூறுகிறார்!

சரி, அவரிடம் ஆதாரங்கள் இருந்தால் கண்காணிப்புக்குழுவிடம் கொடுக்கலாம். அவர்கள்தான் ஆதாரம் கேட்டுத்திரிகிறார்கள்.

தனது அரசின் மீது சரிந்து போயுள்ள சர்வதேச நிலைப்பாட்டை மீளகட்டியெழுப்பப முயல்கிறார் மகிந்த. மக்கள் படையின் தாக்குதலை அடுத்து புலிகள் ஒரு தலைப்பட்சமாக யுத்தத்தை தொடங்கப்போகிறார்கள் என வழமை போல சிறிலங்கா புலனாய்வுத்துறையின் தவறான கணிப்பீட்டை நம்பி தன்னை சமாதானப் பிரியராக உலகிற்கு காட்ட நாடகமாடுகிறார்.

அதன் வெளிப்பாடே அண்மையில் கூட்டப்பட்ட சர்வகட்சி மகாநாடு, ஐரோப்பிய நாட்டில் பேச்சு நடத்த ஒப்புக்கொண்டவை எல்லாம்.

ஆனால் மகிந்த அரசுத் தலைவராக பதவி ஏற்றதில் இருந்து அமைதிக்காக எந்தவித நல்லெண்ண சமிக்கைகளும் ஏற்படுத்தவில்லை என்பது தான் உண்மை.

இறுதியாக புலிகள் தனக்கு மூச்சு விடக்கூட காலம் தரவில்லை என அனுதாப அலையை ஏற்படுத்த முயன்றார். தமிழ் மக்களையும், விடுதலைப் புலிகளையும் பயன்படுத்தி சிங்கள அரசு உலக ஆதரவைப் பெறுவதை விடுதலைப் புலிகள் அனுமதிக்கப் போவதில்லை. எனவே அரசின் இராஜதந்திரத்தை முறியடிக்க விடுதலைப் புலிகள் மிகச் சாதூர்யமாக காய்நகர்த்தி விட்டார்கள்.

நாளாந்த இராணுவ படுகொலைகளிலும், அக்கிரமத்திலும் சிக்கித்தவித்த தமிழ் மக்களை விடுவிக்க அரசிற்கும் சர்வதேச உலகிற்கும் புலிகளால் கொடுக்கப்பட்ட இறுதிச்சந்தர்ப்பமாக ஒஸ்லோவில் பேச்சு என்ற தங்கள் நிலையை தளர்த்தி ஜெனீவாவில் பேச சம்மதித்திருக்கிறார்கள்.

அதிலும் ஒருபடி மேலே போய் கைதியாக இருந்த சிங்கள அரசின் காவல்துறை உறுப்பினரை விடுதலை செய்து ஒரு நல்லெண்ண சூழலை உருவாக்கியுள்ளனர் புலிகள்.

ஆனால் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னம் அரசு இயல்பு நிலையை உருவாக்க வேண்டும்.

தேசியத் தலைவரின் தொலைநோக்கு சிந்தனையுள்ள இம்முடிவு அரசின் கபட நாடகத்தை இலகுவாக அம்பலப்படுத்திவிடும். இப்போது பந்து அரசினதும் அரசிற்கு முண்டு கொடுக்கும் சில உலக நாடுகளினதும் தலையில். மகிந்த இம்முடிவை எதிர்பார்த்திருக்க மாட்டார். என்ன செய்யப் போகிறார்?

பேச்சுவார்த்தை யுத்தநிறுத்த அமுலாக்கத்தை பற்றியதாகவே இருக்வேண்டும் என புலிகள் உறுதிபட கூறிவிட்டார்கள்.

யுத்த நிறுத்தத்தை பயன்படுத்தி புலிகள் பலமடைகிறார்கள் என கூக்குரலிடும் கூட்டணியில் புதைந்துபோயுள்ள மகிந்தவால் யுத்த நிறுத்தத்தை பலப்படுத்த முடியுமா?

யுத்த நிறுத்த அமுலாக்கத்தில் அரசால் மிகவும் சிக்கலாக்கப்பட்ட சரத்துக்களாவன:

விதி 1.8 இன்படி சிறிலங்கா அரசாங்கம் தமிழ் ஆயுதக்குழுக்களிடம் இருந்து ஆயுதங்களை களைதல், தமிழ் ஆயுதக்குழுக்களை வடக்கு-கிழக்கிற்கு அப்பாற்பட்ட பகுதிகளிற்கு அகற்றுதல வேண்டும். கண்காணிப்புக்குழுவும், இணைத்தலைமை நாடுகளும் இதனை பலமுறை அரசிடம் எடுத்துக் கூறியுள்ளன. எனவே பேச்சின் போது அரசு இதைதட்டிக்கழிப்பது முடியாத காரியம்.

விதி 2.11 இன்படி மீன்பிடி கட்டுப்பாடானது படிப்படியாகத் தளர்த்தப்பட்டு, இரவு-பகல் மீன்பிடி கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இப்போது தான் அதிகப்படியான கட்டுப்பாடுகளை அரசும் இராணுவமும் விதித்துள்ளது.

விதி 2.12 இன்படி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தேடுதல்கள், கைது செய்தல் என்பன நடக்கக்கூடாது. ஆனால் கதிர்காமரின் கொலையை பயன்படுத்தி கொண்டு வரப்பட்ட அவசரகாலச்சட்டம் பாரதூரமான யுத்த நிறுத்த மீறலாகும்.

விதி 2.3, 2.4 இன்படி படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பாடசாலைகள், பொதுக் கட்டடங்கள் விடுவிக்கப்பட வேண்டும். இதை அமுல்படுத்த விடாது உயர் பாதுகாப்பு வலயத்தை பாதுகாப்பு காரணமாகக்காட்டி அறிக்கை சமர்ப்பித்தவர்தான் தற்போதைய இராணுவத்தளபதி. இப்போது இதனை அவர் நிறைவேற்றுவார?

விதி 2.5 இன்படி பாதுகாப்பு நடவடிக்கைகளையும், சோதனைச் சாவடிகளையும் குடிசனங்கள் நெருக்கமாக உள்ள நகரங்களிலும் பட்டணங்களிலும் பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் அகற்றுதல் வேண்டும். தற்போது புதிது புதிதாக காவலரன்கள் அமைப்பதில் தான் இராணுவம் முனைப்புடன் ஈடுபடுகிறது.

மேற்கூறப்பட்ட சரத்துக்களை அமுலாக்குமா அரசு? புலிகளின் இந்த நகர்வு அரசியல் இராணுவ ரீதியாக பலவீனப்பட்டுள்ள அரசை மேலும் பலவீனமாக்கும் என்பதே நிதர்சனம்.

சிறிலங்காவின் யுத்த மேகம் தற்காலிகமாக ஜெனீவா நோக்கி நகர்ந்துள்ளது. அத்துடன் நில்லாமல் மகிந்தவிற்கு மூச்சுவிட அல்ல பேசவே காலம் கொடுத்துள்ளார்கள் புலிகள். ஜெனீவா பேச்சு அரசின் நாடகத்தை அம்பலப்படுத்தும் என்பது மட்டும் உண்மையாவதுடன் மீண்டும் இராஜதந்திரத்தில் தோற்றுப்போனது சிங்கள அரசு.



நன்றி:தமிழ்நாதம்