Yarl Forum
புலிகளின் இராஜதந்திர நகர்வு; இக்கட்டான நிலையில் அரசு! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: புலிகளின் இராஜதந்திர நகர்வு; இக்கட்டான நிலையில் அரசு! (/showthread.php?tid=1105)



புலிகளின் இராஜதந்திர நகர்வு; இக்கட்டான நிலையில் அரசு! - Aravinthan - 01-31-2006

ஜெனீவா பேச்சு!

புலிகளின் இராஜதந்திர நகர்வு; இக்கட்டான நிலையில் அரசு!

* போர் நிறுத்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் அரசின் இயலாமையை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்த புலிகள் உபாயம்

நாட்டில் எவ்வேளையிலும் பெரும்போர் வெடிக்கலாமென்ற சூழ்நிலை சற்றுத் தணிந்துள்ளது. நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்மின் வருகை, பேச்சுக்கான திகதியை நிர்ணயிக்குமா? அல்லது யுத்தத்திற்கான நாள் குறிக்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் சொல்ஹெய்ம் பேச்சுக்கான நாளை குறித்துள்ளார்.

புதிய அரசு பதவியேற்றவுடனேயே வடக்கு - கிழக்கில் மோசமான சூழ்நிலை உருவானது. பெரும்போர் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. சமாதான முறையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதை விட சண்டை மூலம் தீர்வொன்றை எட்டிவிடலாமென நினைப்போரே ஜனாதிபதி மகிந்தவைச் சூழ இருக்கின்றனர்.

ஆனாலும், புலிகளின் பலம் குறித்த அச்சம், யுத்தம் மூலமான தீர்வுக்கு இந்த அரசுக்கு பெரும் தடையாக இருப்பதால் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தும் அதேநேரம், தீர்வொன்றை நோக்கி முன்நகர்வதற்கு முன்னர் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்று புலிகளுக்கு கடும் அழுத்தங்களைக் கொடுத்து அரைகுறைத் தீர்வை திணித்து விடலாமெனவும் புதிய அரசு கருதுகிறது.

முன்னாள் வெளிவிகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரைப் போன்றே தற்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் செயற்பட முனைகின்றார். சர்வதேச ரீதியில் புலிகளைத் தடை செய்வதன் மூலம் அவர்களது கருத்துக்களை வெளியுலகுக்குக் கேட்கச் செய்யாது, இந்தத் தடை மூலம் சர்வதேச ரீதியில் கிடைக்கும் ஆதரவுகளைப் பெற்று ஈழவிடுதலைப் போராட்டத்தை அடக்கி விடலாமெனவும் இந்த அரசு கருதுகிறது.

ஆனாலும், புலிகளின் பலம் குறித்த அச்சம், மக்கள் மத்தியில் அவர்களுக்குள்ள மிகப்பெரும் செல்வாக்கு சர்வதேச ரீதியில் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு கிடைத்துவரும் அங்கீகாரங்களெல்லாம், சாணேற அரசுக்கும் முழம் சறுக்கும் நிலையை உருவாக்கி வருகிறது.

ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் கிழக்கில் தொடங்கிய நிழல் யுத்தம் இன்று வடக்கு வரை வந்துவிட்டது. இது பெரும் போர்ச் சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. இந்த நிலைமையை தணிக்கக் கிடைத்த இறுதிச் சந்தர்ப்பமே, போர்நிறுத்த உடன்பாட்டை அமுலாக்குவது தொடர்பாக ஜெனிவாவில் அடுத்த மாதம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள பேச்சுக்களாகும்.

இந்தப் பேச்சுக்கான இடத் தெரிவிலும் இந்த அரசு ஒரு அரசியலை நடத்த முயன்றது. இலங்கையில் அல்லது, ஆசியாவில் எங்காவது ஒரு நாட்டிலேயே பேசுவோமென உறுதிபடக் கூறியது. ஒஸ்லோவில் பேசலாமென்ற புலிகளின் கோரிக்கையையும் நிராகரித்து வந்தது.

புலிகள் மீது கடந்த வருடம் பிற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் பயணத்தடை விதித்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் மூலம் புலிகளுக்கு தடை விதித்துவிட வேண்டுமென இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன், சர்வதேச மயப்பட்டிருந்த இலங்கை இனப்பிரச்சினையை ஆசிய மயப்படுத்துவதற்கு புலிகள் மீதான ஐரோப்பியத் தடையும் இலங்கை அரசுக்கு அவசியம் தேவை. இதனாலேயே புலிகளுடனான பேச்சுக்களை ஐரோப்பிய நாடொன்றில் நடத்தாது ஆசியாவில் எங்காவது ஓரிடத்தில் நடத்திவிடவேண்டுமென இலங்கை அரசு பெரும் முனைப்புக் காட்டி வந்தது.

ஐரோப்பிய நாடுகளில் அல்லது ஸ்கண்டிநேவிய நாடுகளில் பேச்சுக்களை நடத்தும்போது, ஐரோப்பிய ஒன்றியத்தால் புலிகளைத் தடைசெய்ய முடியாததொரு நிலை ஏற்படலாம். அத்துடன், ஐரோப்பிய நாடுகளில் பேச்சுக்கள் நடைபெறுவதன் மூலம் இந்தப் பிரச்சினை மேலும் மேலும் சர்வதேச மயப்படுத்தப்படுவதையும் இலங்கை அரசு விரும்பவில்லை.

புலிகள் மீது ஐரோப்பா தடை விதித்துவிட்டால் அங்கு புலிகளின் செயற்பாடுகள் முற்றுமுழுதாக நிறுத்தப்படுவதுடன், அவர்களது நிதி சேகரிப்பு மற்று பிரசார நடவடிக்கைகளையும் முழுமையாக முடக்கிவிடவும் இலங்கை அரசு திட்டமிட்ட அதேநேரம், சர்வதேசமயப்படுத்தப்பட்டிருக்கும் இந்தப் பிரச்சினையை ஆசிய மயப்படுத்தவேண்டிய அவசரமும் இலங்கைக்குள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா போன்று ஐரோப்பிய நாடுகளில் மகிந்தவுக்கு செல்வாக்கில்லை. அதேநேரம், ஐரோப்பிய தலைவர்களை தம்வசப்படுத்திய ஆற்றல் அப்போதைய அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருக்கும், ஜனாதிபதி சந்திரிகாவுக்குமிருந்தது. ஆனால், தற்போது மகிந்த ராஜபக்‌ஷவுக்கோ, ஐரோப்பிய தலைவர்களை நெருங்கும் ஆற்றல் மிகமிகக் குறைவு. புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினதும் நிலைமை அதுதான்.

அமைச்சர் கதிர்காமரை புலிகள்தான் கொன்றார்களெனக் கூறுவோர், கதிர்காமரைக் கொல்வதற்கு புலிகள் சிந்தித்தபோதே ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடித்து மகிந்த ராஜபக்‌ஷவை வெற்றபெறச் செய்யவேண்டுமெனவும் புலிகள் திட்டமிட்டு விட்டதாகக் கூறுகின்றனர்.

இந்த நிலையில் மகிந்தவின் தொடர்புகளெல்லாம் இந்தியா, பாகிஸ்தான், சீனா என்று ஆசியாவுக்குள்ளேயே இருப்பதால், சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கும் இலங்கை இனப்பிரச்சினையை ஆசிய மயப்படுத்துவதன் மூலம் ஆசியத் தலைவர்களின் உதவிகளைப் பெற்று புலிகளை மடக்கிவிடலாமெனவும் மகிந்த சிந்திப்பதாக பலரும் கருதுகின்றனர். இதனால்தான் ஐரோப்பாவிலோ அல்லது நோர்வேயிலோ பேச்சுக்களை நடத்தப்போவதில்லையென மகிந்தவும் அவரைச் சார்ந்தவர்களும் அடித்துக்கூறி வந்தனர்.

ஆனாலும், ஐரோப்பிய நாடுகளில் எங்காவது பேச்சுக்களை நடத்துவோமெனக் கூறுமளவிற்கு புலிகள் மகிந்தவுக்கு ராஜதந்திரமாக அழுத்தம் கொடுத்துவிட்டனர். இதற்கெல்லாம் அவர்கள் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில்தான் பேச்சு இல்லையேல், பேச்சே இல்லையெனத் திரும்பத் திரும்ப கூறிவந்தனர்.

வடக்கு - கிழக்கில் தங்கள் மீதான நிழல் யுத்தத்திற்கு கடுமையாகப் பதிலடி கொடுத்து, படைத்தரப்புக்கு பெரும் அச்சமூட்டி வந்த அதேநேரம், ஒஸ்லோவில்தான் பேச்சு என புலிகள் மறுபுறம் கூறிவந்தபோது, புலிகளின் இந்தக் கோரிக்கைக்கு அடிபணியக்கூடாதென ஜே.வி.பி.யும், ஜாதிக ஹெல உறுமயவும் அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். அரசும், புலிகளின் இந்தக் கோரிக்கையை ஏற்கப்போவதில்லையென அடித்துக் கூறிவந்தது.

நோர்வேயை அனுசரணையாளராக ஏற்க முடியுமென்றால், ஏன் நோர்வேயில் பேசமுடியாதெனவும் புலிகள் கேள்வி எழுப்பியபோது, நோர்வேயில் பேச்சுக்கள் என்ற பேச்சுக்கே இடமில்லையெனக் கூறி, ஐரோப்பாவில் எங்காவது பேசலாமென ஜனாதிபதி மகிந்த ஐந்து ஐரோப்பிய நாடுகளின் பெயரையும் சிபார்சு செய்திருந்தார். அத்துடன், இந்த ஐந்து நாடுகளில் ஒன்றைத் தவிர, வேறெங்கும் பேசப்போவதில்லையெனவும் அடித்துக் கூறியிருந்தார்.

ஆனால், புலிகளை எரிக் சொல்ஹெய்ம் சந்தித்தபோது எவ்விதத்திலும் அலட்டிக் கொள்ளாது சுவிற்சர்லாந்தில் பேச புலிகள் இணக்கம் தெரிவித்தனர். இதன்மூலம், ஒஸ்லோவில்தான் பேச வேண்டுமென்ற புலிகளின் கோரிக்கையை நிராகரித்து, தான் கூறிய ஐந்து ஐரோப்பிய நாடுகளில் ஒன்றிலேயே பேச்சை நடத்த ஜனாதிபதி மகிந்த வைத்துவிட்டாரென அவரை சார்ந்தவர்கள் மார்த்தட்டினர்.

ஆனால், எந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் புலிகளைத் தடைசெய்து ஐரோப்பிய நாடுகளில் பேச்சுக்களை நடத்தாது இந்தப் பிரச்சினையையும் சர்வதேச மயப்படுத்துவதை தடுக்கப் போவதாக ஜனாதிபதி மகிந்தவும் அவரைச் சார்ந்தோரும் கங்கணம் கட்டினார்களோ, அதே மகிந்த மூலமே ஐரோப்பிய நாடொன்றில்தான் பேசுவோம் வேறு எங்கும் (ஒஸ்லோவில்) பேசமாட்டோமெனக் கூறச் செய்தது மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடொன்றில் பேச்சுக்களுக்கான திகதியையும் நிர்ணயித்ததன் மூலம் இந்த விவகாரத்தில் புலிகள் ராஜதந்திர ரீதியில் பெருவெற்றி பெற்றுவிட்டனர்.

நிழல் யுத்தம் வடக்கிலும் பரவி நிஜ யுத்தம் பாரிய அளவில் வெடிக்கப் போகின்றது என்ற அச்சம் எழுந்தபோது, போர் நிறுத்த உடன்படிக்கையை முழுமையாகக் கடைப்பிடித்து போரைத் தவிர்க்குமாறு உலக நாடுகளெல்லாம் வற்புறுத்தின. போர் நிறுத்த உடன்பாடு முறிவதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாதெனவும் போர் நிறுத்த உடன்பாட்டை உடனடியாக முற்று முழுதாக அமுல்படுத்துவதன் மூலமே பெரும் போரை தவிர்க்க முடியுமெனவும் இந்த உலக நாடுகள் மீண்டும் மீண்டும் வற்புறுத்தின.

இதில், அமெரிக்கா ஒரு படிமேல் சென்று புலிகளை மிகக் கடுமையாக எச்சரித்தது. போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகி புலிகள் மீண்டும் போருக்குச் சென்றால், அதற்காக அவர்கள் மிகப் பெரும் விலையைச் செலுத்த வேண்டி வருமெனவும் அவ்வாறு போர் தொடங்கினால் மிகவும் வலிமை மிக்க இலங்கை இராணுவத்தையே சந்திக்க வேண்டியிருக்குமெனவும் அதற்கேற்ப இலங்கை படைகளுக்கு அமெரிக்கா உதவி வழங்குமெனவும் அமெரிக்கா எச்சரித்திருந்தது.

இந்த எச்சரிக்கையும் சர்வதேச நாடுகளின் கரிசனையும், போர் நிறுத்த உடன்பாட்டை முழுமையாக அமுலாக்குங்கள் என்பதற்காகவேயாகும். 2002 இல் செய்யப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டை மீற வேண்டாமெனவும் வற்புறுத்துகின்றன.

புலிகளும் ஆரம்பம் முதல் இதனைத்தான் வற்புறுத்தி வருகின்றனர். 2002 இல் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட நாள் முதல் கடந்த நான்கு வருடங்களாக அதனைத்தான் அவர்கள் கூறுகின்றனர். ஆனால், இதனைப் புலிகள் இவ்வளவு காலமும் கூறியபோது கேட்காத சர்வதேச சமூகம், இதனை இப்போது புலிகளுக்கு திருப்பி கூறுவதுதான் வேடிக்கையானது.

வடக்கு - கிழக்கில் இயல்பு நிலையை உருவாக்கி சமாதானச் சூழ்நிலையை ஏற்படுத்தி, பேச்சுக்களை மீள ஆரம்பிக்க வேண்டுமாயின் போர் நிறுத்த உடன்பாட்டின் முழுமையான அமுலாக்கம் மிகவும் இன்றியமையாதது. ஆனாலும், இந்த உடன்பாட்டை முழுமையாக அமுலாக்குவதாகக் கூறி உடன்பாட்டில் கைச்சாத்திட்ட அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது அதன் பின் ஆட்சியைக் கைப்பற்றிய ஜனாதிபதி சந்திரிகாவோ இந்த உடன்பாட்டைக் கடைப்பிடிக்கவில்லை.

இன்று புதிய ஜனாதிபதி மகிந்தவும் இதனைக் கடைப்பிடிக்காத அதேநேரம் அவரது ஆட்சியில்தான் உடன்பாடு முழுமையாக மீறப்பட்டு நிழல் யுத்தம் உச்சக்கட்டத்திற்குச் சென்று பெரும் போர் வெடிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. இதனைத் தடுக்கவே போர் நிறுத்தம் முழுமையாக அமுலாக்கப்படுவது குறித்து ஜெனிவாவில் பேச்சுகள் நடைபெறவுள்ளன.

இந்தப் பேச்சுகளுக்கு இணங்கியதற்காக இரு தரப்பையும் முழு உலகமும் பாராட்டுகின்றன. போர் நிறுத்த உடன்பாட்டிலுள்ள அம்சங்களை முழுமையாக அமுல்படுத்தி இயல்பு நிலையை விரைவாக உருவாக்கி இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சமாதானப் பேச்சுகளை ஆரம்பியுங்களெனவும் சர்வதேச சமூகம் கூறியுள்ளது.

இதன் மூலம், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்களைவிட போர்நிறுத்த உடன்பாட்டை அமுலாக்குவது தொடர்பான பேச்சுகள் முக்கியத்துவமடைந்துள்ளன. உடன்பாட்டை முழுமையாக அமுலாக்குவதற்காக முழு உலகமும் இரு தரப்பையும் கடுமையாக வற்புறுத்தியுள்ளதால் இந்த உடன்பாட்டை அமுலாக்கத் தவறும் தரப்புக்கு எதிராக சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் இந்த உடன்பாட்டை இலங்கை அரசு ஒரு போதும் முழுமையாக அமுலாக்கமாட்டாதென்ற உண்மையை வெளியுலகுக்கு அம்பலப்படுத்துவதற்கான மிகப் பெரும் வாய்ப்பு புலிகளுக்கு கிடைத்துள்ளது.

இயல்பு நிலையை உருவாக்கி யுத்த நிலைமையை தவிர்ப்பதற்கு மிக முக்கியமான மூன்று அம்சங்கள் இந்த உடன்பாட்டிலுள்ளன. அவற்றை அமுல்படுத்தும் பட்சத்தில் யுத்த சூழ்நிலை இல்லாது போய் விடும். ஆனாலும், அந்த மூன்று முக்கிய அம்சங்களையும் அமுல்படுத்த கடந்த நான்கு வருடங்களாக மறுத்து வரும் அரசுக்கு ஜெனிவா பேச்சுகளின் மூலம் அவற்றை அமுல்படுத்த புலிகள் குறுகிய கால அவகாசம் கொடுப்பார்களெனக் கருதப்படுகிறது.

அதாவது, *அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை இல்லாது செய்து அந்தப் பகுதிகளை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.*மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து படையினர் விலக வேண்டும். *தமிழ் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு அவர்கள் வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்கு வெளியே அப்புறப்படுத்தப்பட வேண்டுமென்பதே முக்கிய மூன்று அம்சங்களாகும்.

இந்த மூன்று அம்சங்களையும் அமுல்படுத்த இலங்கை அரசு சம்மதிக்காவிடின், போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வரலாம். புலிகளும் போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகவும் கூடும்.

ஏனெனில், இந்த மூன்று அம்சங்களையும் அமுல்படுத்த அரசு தவறுமானால், அவர்கள் வடக்கு-கிழக்கில் இயல்பு நிலையை உருவாக்கத் தயாரில்லையென்பதும் யுத்த சூழ்நிலையை தவிர்க்க அரசு விரும்பவில்லை என்பதுமே அர்த்தமாகும்.

போர் நிறுத்த உடன்பாட்டின் முழுமையான அமுலாக்கலை வற்புறுத்தி வரும் சர்வதேச சமூகம், இவ்வாறான தொரு நிலையில் என்ன செய்யப்போகிறது. கடந்த நான்கு வருடங்களாக இந்த உடன்பாடு அமுல் படுத்தப்படாது அது ஒரு தரப்பால் கடுமையாக மீறப் பட்டதாலேயே நாட்டில் இன்று பெரும் போர்ச் சூழல் ஏற்பட்டதை ஏன் இது வரை உலக நாடுகள் உணரத் தவறின என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த நிலையில் ஜெனிவா பேச்சுகள் மிக மிக முக்கியமானது. போர் நிறுத்த உடன்பாட்டை அமுல்படுத்த தடையாக இருப்பவர்கள் யார்? இயல்பு நிலை உருவாகுவதை தடை செய்பவர்கள் யார்? பேச்சுகள் நடைபெறுவதற்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் யார்? என்பது தெளிவாகத் தெரிய வருவது மட்டுமல்லாது, இதற்கெல்லாம் தடையாக இருக்கும் தரப்பிற்கு எதிராக இந்த சர்வதேச சமூகம் என்ன செய்யப் போகிறது என்பது தெரிந்து விடும்.

- தினக்குரல்