Yarl Forum
புலிகள்- உலக நிதி நிறுவனங்கள் சந்திப்பு ஒத்திவைப்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: புலிகள்- உலக நிதி நிறுவனங்கள் சந்திப்பு ஒத்திவைப்பு (/showthread.php?tid=1045)



புலிகள்- உலக நிதி நிறுவனங்கள் சந்திப்பு ஒத்திவைப்பு - Mathan - 02-04-2006

புலிகளுடனான சந்திப்பை உலக நிதி நிறுவனங்கள் ஒத்திப்போட்டன

சுனாமி மற்றும் மோதலுக்கு பின்னரான மீள்கட்டமைப்புப் பணிகள் எதிர்நோக்கும் தடைகள் குறித்து மறுபரிசீலனை செய்யுமுகமாக, கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வனுடன் தாம் நடத்தவிருந்த பேச்சுவார்த்தையை சர்வதேச நிதி நிறுவனங்களான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன ஒத்திப்போட்டுள்ளன.

அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பு ஆகியவற்றுடனான கலந்தாலோசனையை அடுத்து கிளிநொச்சிக்கான இந்த சர்வதேச நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பயணம் ஒத்திப்போடப்பட்டுள்ளது.

இந்த மாதம் பிற்பகுதியில் ஜெனிவாவில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், இந்த சந்திப்பு மீண்டும் தீர்மானிக்கப்படும் என்று உலக வங்கியின் வெளியுறவு அலுவலகம் இன்று கொழும்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

ஜெனிவா பேச்சுவார்த்தைக்கு முன்னதாக விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஒரு போலியான அங்கீகாரத்தை கொடுக்கும் நோக்கில் சர்வதேச அமைப்புகளுடனான புலிகளின் இந்த சந்திப்பு பிரபலப்படுத்தப்படலாம் என்று கூறி, இலங்கை ஆளும் கட்சியின் ஆதரவு கடும்போக்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த சூழ்நிலையில் இந்த அறிக்கை வந்துள்ளது.

சுனாமிக்குப் பின்னரான எந்தவிதமான புனர்வாழ்வுத் திட்டம் குறித்தும் இந்த சர்வதேச அமைப்புகள் ஜனாதிபதியுடன் பேசவேண்டுமே தவிர, அவை புலிகள் அமைப்புடன் பேசக்கூடாது என்று கூறி, இந்த சர்வதேச நிறுவன பிரதிநிதிகளின் வன்னிக்கான விஜயம் தடுத்து நிறுத்தப்படவேண்டுமென்று ஆளுங்கட்சியின் ஆதரவு கடும்போக்கு அமைப்புகள் கோரியிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஜெனிவா பேச்சுவார்த்தைகளின் வெற்றியிலேயே அதிக எதிர்பார்ப்புகள் தங்கியுள்ளதாகவும், பாதகமான விளைவுகள் எதனையும் ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகள் எதனையும் தமது நிறுவனம் எடுக்காது என்றும் உலகவங்கியின் அறிக்கை கூறுகிறது.

ஆயினும் சுனாமி மறுகட்டமைப்பு நடவடிக்கைகளின் அமுலாக்கம் குறித்து ஆராய தமது அமைப்புகளின் தொழில்நுட்பக் குழுக்கள் கிளிநொச்சிக்கு செல்லும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

இலங்கையில் வறுமை ஒழிப்புக்கு அங்கு சமாதானம் உருவாவது மிகவும் முக்கியம் என்ற வகையில், இலங்கை சமாதான முயற்சிகளுக்கு தாம் செய்யக்கூடிய பொருத்தமான பங்களிப்பை இந்த நிதிநிறுவனங்கள் வழங்கும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக இலங்கையில் மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனித வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கும், மனித நேய உதவிகளுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி ஆகியன தமது பங்கை செய்யும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

BBC தமிழ்


- மேகநாதன் - 02-07-2006

[size=18]<b>கிளிநொச்சி பயணம் இரத்து அல்ல- ஒத்திவைப்புதான்: உலக வங்கி வதிவிடப் பிரதிநிதி </b>
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளுடன் தாங்கள் நடத்த இருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர இரத்துச் செய்யப்படவில்லை என்று உலக வங்கி வதிவிடப் பிரதிநிதி பீற்றர் ஹெரால்ட் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டின்போது பீற்றர் ஹெரால்ட் இதைத் தெரிவித்தார்.

ஜே.வி.பி. மட்டுமல்லாது மேலும் சிலர் தங்களின் கிளிநொச்சி பயணம் குறித்து அதிருப்தி எழுப்பியதால் இந்தப் பயணத்தை ஒத்திவைத்ததாக அவர் கூறினார்.

திட்டமிட்டபடி கிளிநொச்சிக்கான பயணம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் சாதகமான நிலை ஏற்பட்டிருக்குமல்லவா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உலக வங்கி வதிவிடப் பிரதிநிதி,

நாங்கள் அங்கு சென்று பேச்சுவார்த்தைகளை நடத்தியவுடன் இவர்கள் பேச்சுவார்த்தைக்கு இணங்கி வருவார்கள் எனக் கூறமுடியாது என்றும் அப்படி அங்கு பயணம் செய்து உடனடியாக அவர்களை பேச்சுவார்த்தைக்குக் கொண்டு வரும் வகையில் நாங்கள் மந்திரவாதிகள் அல்ல என்றும் கூறினார்.

கிளிநொச்சிக்குப் பயணம் செய்யாததால் சாதகமான நிலையோ பாதகமான நிலையோ ஏற்பட்டதாகக் கூற முடியாது என்றும் கொழும்பில் வெளியாகியுள்ள ஆங்கில பத்திரிகையொன்றில் தாங்கள் ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளவுள்ளதாக விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டர் தெரிவித்திருப்பதாகவும் அது மகிழ்ச்சியளிக்கும் விடயம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுடனான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதேயன்றி இரத்துச் செய்யப்படவில்லை என்று தெரிவித்த உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி,

ஜெனீவா பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றார்.

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>