Yarl Forum
மீண்டும் அமைதிப் பேச்சுக்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மீண்டும் அமைதிப் பேச்சுக்கள் (/showthread.php?tid=1194)

Pages: 1 2 3 4


- Shankarlaal - 02-07-2006

<b>பேச்சு வர்த்தைக்கும் டிரெய்னிங்கா? என்ன சுவிஸில போய் அடிபடவா போகிறார்கள்?</b>


- மேகநாதன் - 02-07-2006

<span style='color:darkred'><b>ஜெனீவாவை சதுரங்க மேடையாக நோக்கக் கூடாது</b>

போர் நிறுத்த உடன்படிக்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்கான பேச்சுவார்த்தையை எந்த நாட்டில் நடத்துவதென்பது குறித்து முன்னர் முரண்பட்ட அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது ஜெனீவாவில் சந்திப்பதற்கு இணங்கிக் கொண்ட போதிலும், இப்போது புதியதொரு சச்சரவு மூண்டிருக்கிறது. பேச்சுவார்த்தைக்கான திகதி தொடர்பானதே அது. பெப்ரவரி 15 இல் ஜெனீவாவில் பேசுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு விடுதலைப் புலிகள் தயாரில்லை என்று கூறப்படுகிறது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் கிழக்கில் கடத்தப்பட்ட சம்பவங்களின் பின்னரான நிலைவரங்கள் காரணமாக பெப்ரவரி நடுப்பகுதியில் ஜெனீவாவுக்கு செல்லக் கூடிய நிலையில் தாங்கள் இல்லை என்று கூறும் விடுதலைப் புலிகள், மாத இறுதியிலேயே பேச்சுவார்த்தை நடத்தப்படுவதை விரும்புவதாகவும் தெரிய வந்திருக்கிறது. இதன் விளைவாக திகதி தொடர்பில் இரு தரப்பினருக்குமிடையே தோன்றக்கூடிய முரண்பாடுகள் பேச்சுவார்த்தையை தாமதிக்கச் செய்து விடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.

இந்நிலையில், பேச்சுவார்த்தை தொடர்பில் கொழும்பு ஊடகங்களில் வெளியாகும் சில தகவல்கள் சுவாரஸ்யமானவையாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ஜெனீவாவுக்கு அரசாங்கத்தினால் அனுப்பப்படவிருக்கும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு அனுபவம் குறைந்ததாக இருப்பதால் அதன் உறுப்பினர்களுக்கு பேச்சுவார்த்தைகளின் அடிப்படைகள் குறித்து விளக்கமளிப்பதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் தலைமையிலான குழுவுடன் ஒப்பிடும்போது, அரசாங்கத் தூதுக் குழு சிக்கலான விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான முதிர்ச்சியைக் கொண்டதாக இல்லை என்றும் அதன் உறுப்பினர்களில் எவருமே விடுதலைப் புலிகளுடன் முன்னர் நடத்தப்பட்ட எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையிலோ அல்லது தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டங்களிலோ பங்குபற்றியவர்கள் அல்ல என்றும் அத்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி செயலகத்தின் அனுசரணையுடன் உள்நாட்டு நிபுணர்களினால் நடத்தப்படவிருக்கும் பயிற்சி வகுப்புகளில் தென்னாபிரிக்கா, வட அயர்லாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச நிபுணர்களின் உதவிகளையும் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்று நேற்று திங்கட்கிழமை அதன் ஆசிரிய தலையங்கத்தில் கலாநிதி பாலசிங்கத்தின் பேச்சுவார்த்தை ஆற்றல்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறது. கொழும்பு அரசாங்கங்களின் பேச்சுவார்த்தைக் குழுக்களில் உறுப்பினர்கள் அடிக்கடி மாற்றப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறார்கள். ஆனால், விடுதலைப் புலிகள் நடத்திய அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் ஆரம்பம் முதலிருந்தே கலாநிதி பாலசிங்கம் பங்கேற்று வந்திருக்கிறார் என்று தெரிவித்திருக்கும் அந்த ஆங்கிலப்பத்திரிகை, அவர் எஸ்கிமோவர்களுக்கே பனியை விற்கக் கூடியவர் என்று வர்ணித்திருக்கிறது.

ஆற்றலும் அனுபவமும் கொண்டவர்களையே பேச்சுவார்த்தைக்கு அனுப்ப வேண்டுமென்பதால், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்க காலத்தில் விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அரசாங்கக் குழுவுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஜி.எல். பீரிஸை தற்போதைய அரசாங்கத்தின் பக்கம் இழுத்தெடுத்து ஜெனீவாவுக்கு அனுப்பிவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஒரு கட்டத்தில் பேசப்பட்டது. ஆனால், அரசாங்கத்தில் இணையப் போவதில்லையென்றும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கொண்டே சமாதான முயற்சிகளை ஆதரிக்கப் போவதாகவும் பேராசிரியர் பீரிஸ் அறிவித்ததையடுத்து அந்த ஊகங்கள் முடிவுக்கு வந்தன.

எது எவ்வாறிருப்பினும், ஜெனீவாவுக்கு அனுப்பப்படவிருக்கும் அரசாங்கத் தூதுக் குழுவுக்கு பேச்சுவார்த்தைகளை எவ்வாறு நடத்துவதென்பது குறித்து விளக்கம் அளிப்பதற்கான பயிற்சி ஏற்பாடுகள் முக்கியமான ஒரு கேள்வியைக் கிளப்புகின்றன. பேச்சுவார்த்தைகளை மதிநுட்பத்துடனும் அனுபவ முதிர்ச்சியுடனும் நடத்தக் கூடிய ஒரு குழுவினால் இலங்கையை அது இன்று எதிர்நோக்கும் பாரிய நெருக்கடியில் இருந்து மீட்டுவிட முடியுமா? சதுரங்க விளையாட்டுப் போட்டிக்கு அனுப்பப்படுவோருக்கு பயிற்சியளிக்கும் பாணியில் அல்லவா இந்த விவகாரத்தை அரசாங்கம் கையாளப்பார்க்கிறது.

அண்மைக்காலத்தில் தீவிரமடைந்த வன்முறைகளினால் சீர்குலைந்து போயிருக்கும் போர் நிறுத்தத்தைக் காப்பாற்றுவதற்கான ஜெனீவா பேச்சுவார்த்தையே நாடு மீண்டும் முற்றுமுழுதான போருக்குள் தள்ளப்படுவதைத் தடுப்பதற்கான இறுதிச் சந்தர்ப்பமாகும். இச் சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்துவதற்கு சூதும் வாதும் தேவையில்லை. சமாதானம் மீது இதயசுத்தியான அக்கறையே போதுமானதாகும்.

மீண்டும் போர் மூளுவதைத் தடுப் பதற்கு செய்யவேண்டியவை எவை என்பதைத் தெரிந் திருந்தும் அவற்றைச் செய்வதற்கு முயற்சிக்காமல் இருப்பதனாலேயே நிலைவரங்களில் மேம்பாட்டைக் கொண்டு வர முடியாமல் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டால், அதுவொன்றே ஜெனீவா பேச்சு வார்த்தைகளில் உருப் படியான விளைபயன்களை ஏற்படுத்தும்.ஜெனீவா பேச்சுவார்த்தை அரங்கை சதுரங்க ேமடையாக நோக்குவது மேலும் ஆபத்தையே கொண்டுவரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.</span>

<i><b>ஆசிரியர் தலையங்கம்-தினக்குரல் (07/02/06)</b></i>


- மேகநாதன் - 02-08-2006

<b>ஜெனீவா பேச்சுக்கள்: இராணுவத்தினருடன் மகிந்த ராஜபக்ச ஆலோசனை</b>

ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் நடத்த உள்ள பேச்சுக்கள் தொடர்பாக சிறிலங்கா இராணுவத்தினருடன் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று ஆலோசனை நடத்தினார்.

முப்படைகளின் தளபதிகள், அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் ஆகியோருடனும் மகிந்த நேற்று செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.

இச்சந்திப்பின் போது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சில முக்கிய சரத்துகள் தொடர்பாக தங்கள் கருத்துகளை இராணுவத் தரப்பினர் விளக்கியுள்ளனர்.

ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி. மற்றும் அமைச்சர்களும் தங்களது நிலைப்பாட்டை மகிந்தவிடம் விரிவாக விவரித்துள்ளனர்.

சிறிலங்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில் சில பாரிய திருத்தங்களை யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இணைத்தல் அவசியம் என்று இந்த சந்திப்பில் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

இருப்பினும் விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களின் போது அதிதீவிர நிலைப்பாட்டை சிறிலங்கா அரசாங்கக் குழு கடைபிடிக்க வேண்டாம் என்றும் ஏனெனில் யுத்த நிறுத்தம் நீடிப்பதற்கு அது அவசியமானது என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

<b><i>தகவல் மூலம் - புதினம்.கொம்</i></b>


- மேகநாதன் - 02-08-2006

<b>ஜெனீவா பேச்சுக்கள் முக்கியத்துவமானவை: கண்காணிப்புக் குழுத் தலைவர்</b>

ஜெனீவாவில் சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான பேச்சுக்கள் மிக முக்கியமானவை என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்ட் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

யுத்த நிறுத்த ஒப்பந்தப் பேச்சுக்களுக்கான நாள் தொடர்பிலான முட்டுக்கட்டைகள் நீங்கி பெப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.

இருதரப்பினருக்கும் இப்பேச்சுக்கள் முக்கியமானதாக இருப்பதால் சாதகமான நிலைமை ஏற்படக் கூடும்.

யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பாக இருதரப்பினரும் விரிவான பேச்சுக்களை நடத்துவர் என்று நான் நம்புகிறேன்.

இப்பேச்சுக்களில் இறுதித் தீர்வு குறித்த விடயங்கள் இடம்பெறாது. யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பாகவே பேச்சுக்கள் நடைபெறும் என்றார் அவர்.

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>


- மேகநாதன் - 02-08-2006

<b>ஜெனீவாவில் பெப். 22 இல் பேச்சுக்கள்: சுவிஸ் வரவேற்பு </b>

ஜெனீவாவில் பெப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையேயான பேச்சுக்கள் நடைபெற உள்ளதை சுவிஸ் அரசாங்கம் வரவேற்றுள்ளது.


சுவிஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சுவிசில் எதிர்வரும் பெப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களை நடத்த சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த முடிவை சுவிஸ் அரசாங்கம் வரவேற்கிறது.

நோர்வே அனுசரணையின் முயற்சியால் கடந்த சனவரி 25 ஆம் நாளன்று யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களை சுவிசில் நடத்த இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இந்தப் பேச்சுக்கள் ஜெனீவாவில் நடைபெற உள்ளது.

இருதரப்பினரும் ஏற்கக் கூடிய தீர்வை உருவாக்குவதற்கான ஏதுவான சூழ்நிலைக்கான இடத்தை சுவிஸ் அரசாங்கம் வழங்கும்.

கடந்த சனவரி 25 ஆம் நாளுக்குப் பின்னர் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதையும் சுவிஸ் அரசாங்கம் வரவேற்கிறது. கடந்த சில நாட்களாக நடைபெற்றும் நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு பேச்சுக்களைத் தொடங்குவதற்கான சூழ்நிலையை இருதரப்பினரும் ஏற்படுத்த வேண்டும் என்று சுவிஸ் அரசாங்கம் அழைப்பு விடுக்கிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>


- மேகநாதன் - 02-08-2006

<b>சிறிலங்கா அரசாங்கக் குழுவுக்கு அமெரிக்கா பயிற்சி </b>

ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்கள் நடத்த உள்ள சிறிலங்கா அரசாங்கக் குழுவுக்கு அமெரிக்கா நிறுவனம் பயிற்சி அளித்து வருகிறது.


விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ள அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இன்று பேச்சுவார்த்தைத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான இத்தகைய பயிற்சிகளில் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஹவார்ட் பேச்சுவார்த்தை திட்டத்தைச் சேர்ந்த சிறப்பு வல்லுனர்களால் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளவுள்ள குழுவினருக்கும் அவர்களின் உபகுழுவிற்கும் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது

இந்தப் பயிற்சி நடவடிக்கைகள் 4 நாட்கள் நடைபெற உள்ளன என்று இந்த நிகழ்வில் பங்கேற்ற பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தியரி, கற்பித்தல், பயிற்சி மற்றும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள், இவற்றிற்கான திறனை அபிவிருத்தி செய்யும் வகையில் 1979 ஆம் ஆண்டு ஹவார்ட் பேச்சுவார்த்தைகள் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

சிறிலங்கா அரசாங்கத் தரப்பிற்குத் தலைமை தாங்கும் சுகாதாரத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவிற்கு பேச்சுவார்த்தைகளின் அடிப்படை விடயங்கள் குறித்து இந்த பயிற்சி நிகழ்ச்சியின் போது விளக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

சமஸ்டி, ஐக்கியம், ஒற்றுமை, ஒருவரைச் சார்ந்திருத்தல் ஆகியவற்றின் அடிப்படைகள் குறித்தும் உரைகள் நிகழ்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் துறையிலிருக்கும் உள்நாட்டு வல்லுனர்களின் உதவியும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் குழுவிற்கு வழங்கப்பட உள்ளது.

விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ள அரசாங்கத் தரப்பினர் பயிற்சிகளைப் பெறும் முதலாவது நிகழ்வு இதுவாகும்.

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>


- மேகநாதன் - 02-08-2006

<b>ஜெனீவா பேச்சில் பங்கேற்போருக்கு ஆலோசனை வழங்க இரு குழுக்கள்: மகிந்த நியமனம் </b>

ஜெனீவாவில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக செல்லும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைச்சர்கள், சில அமைச்சு செயலாளர்கள், சட்டத்தரணிகள் அடங்கிய இரு குழுக்களை நியமிப்பதற்கு மகிந்த தீர்மானித்துள்ளார்.


அமைச்சர்கள் மற்றும் அமைச்சு செயலாளர்கள் அடங்கிய குழுவானது சமாதான நடவடிக்கைகளை முன்கொண்டு செல்லும் வகையில் திட்டங்களை வகுத்து தேவையான ஆலோசனைகளை வழங்கி செயற்படும் பிரதான குழுவாகும்.

அதன் கீழ் செயற்படும் சட்டத்தரணிகளைக் கொண்ட உப குழுவானது இந்த நடவடிக்கைகளுக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்கும்.

பிரதான குழுவிற்கென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, வர்த்தக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் ரோகித போகொல்லாகம, ஊடக அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, அரச வங்கிகளை அபிவிருத்தி செய்யும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, மகிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதியமைச்சின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, திட்ட அமுலாக்கல் அமைச்சின் செயலாளர் அஜித் நவாட் கப்ரால், நீதியமைச்சின் செயலாளர் சுஹந்த கம்லத், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ்.பலியக்கார, பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர யுத்தநிறுத்த ஒப்பந்தத்தைத் திருத்துவது தொடர்பான சட்ட ஆலோசனைகளை வழங்கும் சட்டத்தரணிகளைக் கொண்ட குழுவில் மகிந்தவின் சட்டத்தரணி ஆர்.கே.டபிள்யு.குணசேகர, டி.எஸ்.ஜயசிங்க, எஸ்.எஸ்.விஜேவர்த்தன, பி.பீ.மெண்டிஸ், எஸ்.எல்.குணசேகர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சமாதான நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கான திட்டங்களை வகுத்தல் மற்றும் தேவையான ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவானது கடந்த வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மகிந்தவின் செயலகத்தில் கூடி இது தொடர்பாக ஆராய்ந்துள்ளது.

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>


- மேகநாதன் - 02-08-2006

<b>அரச தரப்பு பேச்சுக்குழுவில் பிரேரிக்கபட்ட உறுப்பினர்கள் தகுதியற்றவர்கள் - ஜாதிக ஹெல உறுமய.</b>

விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைக்கு அரசாங்கத்தினால் பிரேரிக்கப்பட்ட உறுப்பினர்கள் தகுதியற்றவர்கள் என ஜாதிக ஹெலஉறுமய தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் பேச்சாளர் நிஸாந்தசிறீ வர்ணசிங்க,ஜெனிவாப் பேச்சுவார்த்தைக்கு ஜாதிக ஹெல உறுமய ஆரம்பத்தில் இருந்தே தனது எதிர்ப்பைக் காட்டி வந்துள்ளது.

அத்துடன் பேச்சுவார்த்தைக்கு செல்பவர்கள் குறித்து எமக்கு திருப்த்தி இல்லை. காரணம் ஆரம்பகால திம்பு பேச்சில் இருந்து இன்று வரை விடுதலைப் புலிகள் தரப்பில் பேச்சுக்களுக்கு கலாநிதி அன்றன் பாலசிங்கம் தலமை தாங்குகிறார். அவர் பேச்சுவார்த்தை குறித்து சிறந்த அனுபவம் கொண்டவர்.

ஆனால் அரச தரப்பில் அப்படி அனுபவம் உள்ளவர்கள் இல்லை. அது நிஸாந்தசிறீ வர்ணசிங்க தெரிவித்தது. இதேவேளை இது குறித்து இனத்துவ முரண்பாட்டு கற்கை நெறி தொடர்பான ஆலோசகர் செரான் லக்திலக கருத்து தெரிவிக்கையில் இனப்பிரச்சனைத் தீர்வுக்கு அடிப்படையான யுத்த நிறுத்த உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைக்கு மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்படுவது அவசியம்.

இது ஒரு சமூக விஞ்ஞானம் நுட்பமான அணுகுமுறைகள் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். ஆனால் அரசதரப்பு பிரதிநிதிகள் அந்த அறிவை அனுபவத்தை பெற்றிருக்கின்றார்களா என்பது கேள்வியே என அவர் தெரிவித்தார்.

<i><b>தகவல் மூலம் - பதிவு.கொம்</b></i>


- மேகநாதன் - 02-09-2006

<b>பயிற்சி பெறும் அரச குழுவினர் </b>

ஜெனீவாவில் பேச்சுவார்த்தைக்கு செல்கின்ற அரச குழுவினருக்கு இப்போது சிறிலங்காவின் ஜனாதிபதி அவர்கள் பயிற்சி அளிப்பதற்கான தடல்புடல் ஏற்பாடுகளை ஆரம்பித்திருக்கின்றார்.

முழுக்க முழுக்க பேரினவாத சிந்தனையில் மூழ்கி ஒற்றையாட்சி என்ற குறுகிய அரசியல் சித்தாந்தத்துக்குள் மூழ்கியிருக்கும் சிங்கள் தேசம் சர்வதேச அரங்கில் நடைபெறப் போகும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினருடன் பேசுவதற்கான தகுதியற்ற நிலையில் உள்ளதையே இந்த பயிற்சிகள் வெளிப்படுத்துகின்றது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹவார்ட் பேச்சுவார்த்தை திட்டத்தைசேர்ந்த சிறப்பு வல்லுனர்களால் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளும் குழுவினருக்கும், அவர்களது உப குழுவினர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகின்றது. சமஸ்டி, ஐக்கியம், ஒற்றுமை ஒருவரைச் சார்ந்திருத்தல் போன்ற அடிப்படைகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்படவிருக்கின்றன. இதேவேளை சிறிலங்காவின் பேச்சுவார்த்தைக் குழுவினருக்கு ஆலோசனை வழங்குவதற்கு இரு குழுக்கள் மகிந்தரால் நியமிக்கப்பட்டுள்ளது. முக்கிய அமைச்சர்களைக் கொண்ட இக்குழுவில் மகிந்தரின் சகோதரரும் படைத்துறை அமைச்சின் ஆலோசகருமான கோத்தபாய ராஜபக்ச அவர்கள் இடம்பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை போர் நிறுத்த உடன்படிக்கையை மீளாய்வு அல்லது, திருத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கு சட்டத்தரணிகளைக் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் மகிந்தரின் சட்டத்தரணிகளும் அடங்குகின்றனர்.

போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நான்காண்டுகள் நிறைவடையும் இந்த தருணத்தில் இந்தப் பேச்சுக்கான சந்திப்பு ஜெனீவாவில் நடைபெறப் போகின்றன.

எங்கே பேசுவது எப்போது பேசுவது? என்பதற்குத் தீர்வு காணப்பட்டு விட்டது. அடுத்த கட்டமாக எதனைப் பேசுவது என்பதுதான் முக்கிய விடயம். போர் நிறுத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். அதுதான் இப்போது தமிழர் தரப்பால் எதிர்பார்க்கப்படுகின்ற பிரச்சினை.

போர் நிறுத்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் முழுமையாக அரசு அமுல்படுத்துமிடத்து பேச்சுக்கான சூழலில் நம்பிக்கை ஏற்படுவதுடன் போர் சிறிது காலத்துக்கு தள்ளிப் போடப்படலாம். இப்போதைக்கு போர் மூளல் அபாயமில்லை என்றதொரு சூழலை உருவாக்க முடியும். மாறாக ஜெனீவாப் பேச்சுக்களில் நம்பிக்கையீனம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்படுமிடத்து மீண்டும் மீண்டும் பேசுவதால் பயன் ஏற்படமாட்டாது.

முதலாவதாக போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முரணாகவும், போர் இந்தளவு ஆபத்தான கட்டத்திற்கு தள்ளிவிட்டுள்ள நிழல் யுத்தத்திற்கு மூல காரண கர்த்தாக்களாக இருக்கின்ற ஒட்டுப்படை விவகாரத்துக்கு தீர்வு காணும் விடயத்தில் சிறிலங்கா அரசு புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு அவர்கள் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும். அத்துடன் அவர்கள் வடக்குக் கிழக்கிற்கு வெளியே அகற்றப்பட வேண்டும். இந்த விடயத்தில் அரசு பாராமுகமாக இருக்குமாயின் ஜெனீவாப் பேச்சுக்கள் என்பது தொடர்ந்து முன்கொண்டு செல்வது சாத்தியமில்லை.

எனவே போர் நிறுத்த உடன்படிக்கையின் அடிப்படை விடயங்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் இதற்கு அமெரிக்காப் பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற வேண்டிய அவசியம் இருக்காது என்பது பொதுவான கருத்து.

இவை ஒரு புறமிருக்க தென்னிலங்கை இனவாத சக்திகள் இன்னும் சமாதான வழிமுறை தொடர்பாக எவ்வித அடிப்படை விட்டுக் கொடுப்புக்களையும் கொண்டிருக்கவில்லை.

ஹெல உறுமய ஜே.வி.பி போன்ற கட்சிகள் தெரிவித்திருக்கும் கருத்து சிந்திக்க வேண்டியது. ஜெனீவாவில் பேச்சுவார்த்தைக்கு செல்வோர் எதுவித தீர்மானத்தையும் எடுக்கக் கூடாது என இவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனவே இந்த நிலையில் அவதானிக்குமிடத்து ஜெனீவாவாப் பேச்சுக்கான அரச தரப்பு குழுவினர் தீர்மானங்களை அல்லது முடிவுகளை எடுக்கக் கூடியதாக அமையுமா என்பது கேள்விக்குறி.

எனவே பேச்சு வார்த்தை, போர் நிறுத்த உடன்படிக்கையை முழு அளவில் அமுல்படுத்து வதன் மூலமே முன்கொண்டு செல்லலாம் அதற்கான ஒரு சூழல் ஏற்பட வேண்டியது அவசியம் என்பதே இன்றைய எதிர்பார்ப்பாகவுள்ளது.

<i><b>நன்றி- ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு- </b></i>
<b>ஆசிரியர் தலையங்கம்(09/02/06)</b>


- மேகநாதன் - 02-09-2006

[size=18]<b>தாய்லாந்தில் சட்டகிப் பேச்சும்
சுவிஸில் ஜெனிவாப் பேச்சும்</b>

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஜெனிவாப் பேச்சுகளுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கின்றன.
2002 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரணிலின் அரசோடு விடுதலைப் புலிகள் நடத்திய பேச்சுக்கும் இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசோடு நடத்தவிருக்கும் பேச்சுக்குமான களச்சூழலை ஒப்பிட்டு - ஆராய்வது - நோக்குவது இந்தக் காலகட்டத்தில் மிகப் பொருத்தமானதாக இருக்கும்.

ரணிலின் அரசோடு 2002 செப்டம்பர் 16 - 18ஆம் திகதிகளில் தாய்லாந்தின் சட்டகிப் கடற்படைத் தளத்தில் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சும் ஜெனிவாவில் இப்போது 2006 பெப்ரவரி 22 - 23 இல் நடைபெறும் முதல் சுற்றுப் பேச்சும் களநிலவரங்களைப் பொறுத்தவரை பல விடயங்களில் ஒத்திருக்கினறன.
பிரதமர் ரணிலின் அரசுக்கும், புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2002 பெப்ரவரி 22ஆம் திகதி கைச்சாத்தானது. ஆனாலும், அதன் பின் ஏழு மாதங்கள் கழித்தே விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு ரணிலின் அரசினால் கூட்டி வர முடிந்தது.
எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரை அவர் 2005 நவம்பர் 17ஆம் திகதிய தேர்தலில் வென்று, மூன்று நாள்களில் பதவியேற்று, மூன்று மாதங்களுக்குள் விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு இழுத்து வருகின்றார்.
ஆனாலும், இரண்டு சந்தர்ப்பங்களிலும் முதல் சுற்றுப் பேச்சுகளின் போது பேச்சு மேசையில் ஆராயப்பட்ட - அல்லது ஆராயப்படப் போகின்ற - விடயம் ஒன்றுதான்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இணக்கம் காணப்பட்ட யுத்த நிறுத்த ஏற்பாடுகளை இலங்கை அரசுத் தரப்பு சரிவர நடைமுறைப்படுத்தவில்லை என்ற புலிகளின் கடும் குற்றச் சாட்டுக்கு மத்தியிலேயே அது குறித்துப் பேசவே முதல் சுற்றுப் பேச்சுக்கு அப்போதும் சரி. இப்போதும் சரி புலிகள் இணங்கினர்.
போர் நெருக்கடியைத் தணித்து, இயல்பு நிலையைத் தோற்றுவிப்பதற்கு முப்படைகளினது கடுமையான போக்கும், ஒளிவு மறைவாக முன்னெடுக்கப்படும் சதித் திட்ட நடவடிக்கையும் காரணம் என்ற புலிகளின் சீற்றத்துக்கு மத்தியிலேயே இரண்டு சந்தர்ப்பங்களிலும் முதல் சுற்றுப் பேச்சுகள் ஆரம்பமாகின்றன.
ஆனால், அப்போதைக்கும், இப்போதைக்கும் ஒரு வித்தியாசம் இருப்பதை மஹிந்த அரசும் அவரது பேச்சுக் குழுவினரும் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு, தாய்லாந்து சட்டகிப்பில் நடைபெற்ற அப்போதைய பேச்சுக்கான ஏற்பாடு குறித்து புலிகளின் மதியுரைஞர் பாலசிங்கம் தமது நூல் ஒன்றில் தெரிவிக்கும் தலைப்பை நோக்குவது பொருத்தமானது. போர் நிறுத்த ஒப்பந்தக் கடப்பாடுகளைக் கடைப்பிடிக்காது சிங்கள ஆயுதப் படைகள் காட்டும் கடும் போக்குக் குறித்த இவ்வாறு அச்சமயத்தில் அவர் குறிப்பிடுகின்றார்:
""ஆயுதப் படைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ரணில் அரசிடம் இருக்கவில்லை என்பதை அவருக்கு (பிரபாகரனுக்கு) விளக்கினேன். அரசியல் தெளிவுடைய யதார்த்தவாதி என்பதால், ரணிலுக்கும், சந்திரிகாவுக்கும் மத்தியிலான அதிகாரப் போட்டியும் பிணக்குப் பற்றியும் பிரபாகரனால் புரிந்து கொள்ளமுடிந்தது. போர் நிறுத்த உடன்பாட்டு விதிகள் சீரிய முறையில் நடைமுறையாக வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க விரும்பிய போதும் அதற்கான அதிகாரம் அவரிடம் இருக்கவில்லை. சந்திரிகாவுடனான பகையுணர்வு கூர்மையடைந்து இருந்ததால் இராணுவ விவகாரத்தில் ஜனாதிபதியின் ஒத்துழைப்பையும் அவரால்பெறமுடியவில்லை. இந்தச் சிக்கலையும் ரணிலின் இயலாத்தன்மையையும் பிரபாகரன் நன்கு அறிவார்......
""தாய்லாந்தில் சாமாதானப் பேச்சுகளை நடத்துவதற்கு இணக்கம் தெவித்த பிரபாகரன், போர் நிறுத்த உடன்பாட்டின் நடைமுறைப் பிரச்சினைகள் குறித்துப் பேச்சுவார்த்தை மேசையில் பேசலாம் எனவும் தெரிவித்தார்.''
இப்படி கூறுகிறார் மதியுரைஞர் பாலா.
ஆக, அப்போதும், இப்போதும் - இரண்டு சந்தர்ப்பங்களிலும் - போர் நிறுத்த உடன்பாட்டின் அமுலாக்கம் பற்றிய சிக்கல்தான் முதற்சுற்றுப் பேச்சுக்கான தொனிப் பொருளாக அமைகிறது. ஆனாலும், முக்கிய வித்தியாசம் ஒன்று இருக்கிறது.
அப்போது, நிறைவேற்று அதிகாரத்தையும் படைகளைக் கட்டுப்படுத்தும் பதவி நிலையையும் வைத்திருந்த ஜனாதிபதி சந்திரிகாவுடன் முரண்பட்டுக் கொண்டு, அதிகாரமற்ற வெறும் பிரதமர் பதவியிலிருந்து ரணிலோடு பேசுகிறோம் என்ற பிரக்ஞையுடன்தான் புலிகள் அந்தப் பேச்சுகளில் பங்குபற்றினர். போர்நிறுத்த கடப்பாடுகளை அமுலாக்கும் விடயத்தில் ரணிலின் அரசின் இயலாத்தன்மையையும், கையாலாகாத்தனத்தையும் அவர்கள் புரிந்து கொண்டிருந்ததால் அதிகளவு விட்டுக் கொடுப்புக்கு வாய்ப்பிருந்தது. அதனால், அப்போது பேச்சுகள் ஆறாவது சுற்றுவரை நகர்ந்தன.
ஆனால், இப்போது நிலைமை வேறு. அரசும், நிறைவேற்று அதிகாரமும், படைத்தலைமையும் அனைத்துமே ஒருவரிடம் - ஜனாதிபதி மஹிந்தவிடமே - குவிந்து கிடக்கின்றன. போதாக்குறைக்கு "வெற்றுக் காசோலையில் கையெழுத்திட்டுக் கொடுத்தமை போல' அரசின் சமாதான முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்புத் தரத் தயார் என்ற அறிவிப்போடு பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சி காத்திருக்கின்றது.
ஆகவே, முன்னைய ரணிலின் அரசு போல சாக்குப் போக்குச் சொல்லாமல் யுத்த நிறுத்தம் தொடர்பான தனது கடப்பாட்டை முழுமையாக நிறைவு செய்வதற்கு இணங்கும் தயார் நிலையில் பேச்சுக்கு அரசுத் தரப்பு வருவதோடு, அதைச் செயலிலும் காட்ட வேண்டும். தவறுமானால் அடுத்த சுற்றுப் பேச்சு சாத்தியமற்றதாகி விடலாம்; நடைபெறாமலேயே போய்விடலாம்

<i><b>ஆசிரியர் தலையங்கம்-உதயன் (09/02/06)</b></i>


- மேகநாதன் - 02-09-2006

<b>அரசாங்கக் குழுவினருக்கு ஜி.எல்.பீரிஸ், மிலிந்த மொறகொட ஆலோசனை</b>

ஜெனீவா பேச்சுக்களுக்காக செல்லும் சிறிலங்கா அரசாங்கக் குழுவினருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜி.எல்.பீரிஸ், மிலிந்த மொறகொட ஆகியோரை ஆலோசனை வழங்க சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.


மகிந்தவின் வேண்டுகோளை ஏற்று நேற்று புதன்கிழமை அரசாங்கக் குழுவினருக்கு ஜி.எல்.பீரிஸ் தனது அனுபவங்களை விளக்கினார்.

மகிந்த ராஜபக்சவின் இந்த அழைப்பானது வியப்பூட்டுவதாக இருக்கிறது என்று ஐக்கியத் தேசியக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவின் தூதுவராக மிலிந்த மொறகொட இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ளதால் எதிர்வரும் சனிக்கிழமை அரசாங்கக் குழுவினருக்கு அவர் ஆலோசனைகளை வழங்க உள்ளார்.

அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இருவரையும் ஆலோசனை வழங்கச் செல்லுமாறு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>


- மேகநாதன் - 02-09-2006

<b>யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை திருத்தம் செய்ய சிறிலங்கா அரசு வலியுறுத்தும்? </b>

சுவிஸ் ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையேயான பேச்சுக்களின் போது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் திருத்தங்களைச் செய்ய சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தக் கூடும் என்று இந்திய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.


இந்தியாவின் சீ நியூஸ் (Zee News) தொலைக்காட்சி, சிறிலங்கா அரச அதிகாரிகளை மேற்கோள்காட்டி இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

அச்செய்தி விவரம்:

விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களின் போது தனது தேர்தல் அறிக்கையான மகிந்த சிந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் பேச்சுக்களை நடத்துமாறு தனது குழுவினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிகிறது.

மகிந்த சிந்தனையின் அடிப்படையிலேயே ஒவ்வொரு நகர்வுகளும் இருக்கும் என்று அரசாங்கப் பேச்சுக்குழுவினருக்கான பயிலரங்கில் மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாக சிறிலங்கா அரச தொலைக்காட்சி கூறியது.

அதேபோல் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கக் குழு வலியுறுத்தும் என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

மகிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்த ஒரு அரசியல் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில், வன்முறைகளைத் தடுக்க யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்த வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச விரும்புவதாகக் கூறினார்.

சிறிலங்கா அரச தலைவராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற போது அமைதி முயற்சிகளில் புதிய அணுகுமுறையைக் கையாளப் போவதாகத் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களை ஜெனீவாவில் எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் நாட்களில் நடத்த ஒப்புக்கொண்டனர்.

ஆனால் விடுதலைப் புலிகளின் தரப்பில் ஜெனீவாப் பேச்சுக்களில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துகளைச் செயற்படுத்துவதல் தொடர்பாகவே பேச்சுக்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ ஏடான விடுதலைப் புலிகள் சஞ்சிகையில் வெளியாகி இருந்த ஆசிரியர் தலையங்கத்தை புதினம் இணையத் தளம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசுரித்தது.

அந்த ஆசிரியர் தலையங்கத்தை இந்தியாவின் ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளேடுகள் பெரும்பாலானவை வெளியிட்டிருந்தன. இதனடிப்படையில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சீ நியூஸ் (Zee News) தொலைக்காட்சியும் பதிவு செய்திருக்கிறது குறிப்பிடத்தக்கது

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>


- மேகநாதன் - 02-10-2006

<b>ஜெனீவா நகரில் அம்பலப்படுத்துவோம்</b>
<b>ஆசிரியர் தலையங்கம்</b>
துணைக்குழு விடயத்தில் அரசு அசமந்தப்போக்குக் காட்டி வரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு ஏன்இ எதற்காகப் போகவேண்டும் என்ற கேள்வி தமிழ் மக்களிடையே எழுகின்றது. சிங்கள இனவாதம் தமிழினத்தின் உரிமைகளை வழங்கப் போவதில்லை. கடந்த ஐம்பத்து எட்டு வருடங்களாக பேரினவாத அச்சில் தான் அவர்கள் சுழன்று கொண்டிருக்கிறார்கள்.

தமிழினம் நீண்டதொரு விடுதலைப் பயணம். அது களைத்து விடவில்லைஇ சரிந்து விடவில்லை. தமது இலட்சியம் தமிழீழத் தாயகம் என்ற அந்த உறுதி தளரவில்லை. சண்டைக் காலமா? சமாதான சூழலா? பலத்தில் தளர்வில்லை. விடுதலைப் போராட்டம் இன்னும் தேசிய எழுச்சி பெறுகிறதுஇ பலமும் வளர்கிறது. இதனை தென்னிலங்கைப் பேரினவாதம் உணரவில்லை. மகாவீரர்களாகத் தங்களைப் புகழ்ந்து தள்ளிக் கொண்டு வீறாப்பு வார்த்தைகளைக் கொட்டிக்கொண்டு ஒற்றையாட்சி என்ற கோட்பாட்டை இன்னும் கையிலே வைத்துக்கொண்டிருக்கின்றனர். இது சமாதான வழி முறைகளுக்கான பெரும் முட்டுக்கட்டை.

கடந்த நான்கு வருடங்களாக அமுல்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா அரசு முழுமையாக அமுல்ப்படுத்தியிருக்குமானால் ஏதோ அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் சிந்திக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால்இ அவ்வாறு ஏற்படுத்தவில்லை. உடன்படிக்கைக்கு முரண்பாடான செயற்பாடுகளில் அக்கறை செலுத்தி அதனைச் சாகடிப்பதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டனர். ரணில் விக்கிரமசிங்கா சமாதானம் எனக் கூறிக் கொண்டு பிரதமரானதும் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சர்வதேச வலைப் பின்னலில் சிக்க வைத்து சுயலாப அரசியல் இலாபம் தேட முனைந்தார். முயற்சி பயனளிக்கவில்லை. டோக்கியோ மாநாட்டை விடுதலைப் புலிகள் நிராகரித்து ரணிலின் சர்வதேச வலைப் பின்னலை சிதைத்துவிட்டனர்.

சந்திரிகா அம்மையார் தமது ஆட்சியின்போது சமாதானம் எனக் கூறிக்கொண்டு போர்த் திட்டங்களை வகுத்தார். பேச்சுக்கான காய் நகர்த்தலை அவர் கடுகளவேனும் மேற்கொள்ளவில்லை. அவர் ஆட்சி மங்கிப் போக இனவாதிகளின் கூட்டோடு பௌத்த மேலாண்மைவாதியாக முன்னுரிமைப்படுத்திக் கொண்டு வந்த மகிந்தர் இப்போது திணறுகிறார். அவரது ஆட்சி சூட்சுமம் எல்லாம் வீரவன்சஇ சோமவன்ச மற்றும் ஹெலஉறுமய பிக்குகளின் கைகளில்தான் உள்ளது.

கடிவாளமிடப்பட்ட குதிரையாக இவர் இருக்கிறார். இவர்கள் சமாதானத்தை தரப்போறவர்களல்ல. தமிழினத்துக்கு எதிராக போர்ச் சூழலையே இன்னும் இன்னும் அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையே மேற்கொள்கின்றனர். பேச்சுவார்த்தையை எங்கே நடத்துவது என்பதில் ஏற்பட்ட இழுபறித்தனமான நடவடிக்கைக்கு விடுதலைப்புலிகள் பெரும் தன்மையுடன் இணங்கிக் கொண்ட பிற்பாடு. பேச்சுக்கு முன்னரான ஒரு புறச்சூழலை உருவாக்குவதற்குக்கூட சிறிலங்கா அரசு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. ஒட்டுக்குழுக்களை வைத்துக் கொண்டு அவர்களை ஏவி தமிழ் மக்களைக் கொன்றொழிப்பதில் ஈடுபட்டு வந்த சிறிலங்கா அரசு தற்போது மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்ட விடயத்தில் அசமந்தத்தனமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

ஒட்டுப்படைகள் எங்களிடமில்லை என ஒரு காலத்தில் அரசு கூறியது போன்று இனியும் கூறமுடியாது. ஏனெனில்இ அவ்வாறான குழுக்களை அரசு வைத்திருப்பதும் அவர்களது செயற்பாடுகளும்தான் சமாதான முயற்சிகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பது இப்போது சர்வதேச சமூகமே உணர்ந்து கொண்டு விட்டது. இத்தகையதொரு சூழலில்தான் தற்போது பேச்சுக்கான அறிவிப்பினை நோர்வே வெளியிட்டுள்ளது.

போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நான்காண்டுகள் நிறைவாகின்ற நாளில் மீண்டும் இருதரப்பும் சந்திக்கப் போகின்றன. வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறலை மேற்கொண்டு வரும் அரச படைப் புலனாய்வுப் பிரிவும் ஒட்டுக்குழுக்களும் உச்சக் கட்டட நடவடிக்கையாக தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். இன்னும் ஏழு பேரின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகவுள்ளது. இவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகளில் அரசு அசமந்தத்தனம் காட்டி வருகின்றது.

இந்த நிலையில் ஜெனீவாப் பேச்சுவார்த்தை திகதி நிர்ணயமாகி விட்டது. ஜெனீவாப் பேச்சுக்களை சர்வதேச சமூகம் ஆவலோடு உன்னிப்பாக அவதானிக்கப் போகிறது. எனவேஇ சிங்களப் பேரினவாதம் தமிழினத்துக்கு எதிராக மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களை ஜெனீவா நகரில் வைத்து அம்பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இதை பயன்படுத்துவோம்.

<i><b>நன்றி- ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு- </b></i><b>ஆசிரியர் தலையங்கம்(10/02/06)</b>


- மேகநாதன் - 02-10-2006

<b>யுத்தநிறுத்த ஒப்பந்த விதிகள்
அமுலாக்கம் குறித்து மட்டுமே
பேச்சு என்கின்றனர் புலிகள் </b>

""ஜெனீவாவில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடு தலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் பேச்சு களின்போது தற்போதைய யுத்தநிறுத்த உடன்பாட்டு விதிகளை செம்மையாக நடைமுறைப்படுத்துவது பற்றி மட்டுமே பேசப்படும். அதற்கு அப்பால் எந்த விடயமும் பேசப்பட மாட்டாது. ஜெனீவாப் பேச்சுக்கான நிகழ்ச்சி நிரல் அதுதான்.''
- இப்படி திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றனர் விடுதலைப் புலிகள்.

ஜெனீவாப் பேச்சுக்கான நிகழ்ச்சி நிரலை பகிரங்கப்படுத்துமாறு இலங்கை அரசை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கோரியிருப்பது குறித்து கருத்துக் கேட்ட போதே புலிகளின் தலைமையுடன் தொடர் புடைய வட்டாரங்கள், புலிகளின் தலைமையின் நிலைப்பாட்டை இவ்வாறு வெளிப் படுத்தின.
ஜெனீவாப் பேச்சுகளின்போது, "மனித உரிமைகள் நடைமுறைப் படுத்தல்' என்ற அம்சம் பற்றி மேலதிகமாகப் பேசுவது குறித்து சில வட்டாரங்கள் நோர்வே ஊடாக ஒரு யோசனையைப் பிரேரித்த போதிலும், அது வும் நிராகரிக்கப்பட்டுவிட்டாகத் தெரிகிறது.
""இரண்டு நாள் பேச்சிலும் ஆக, யுத்த நிறுத்த அமுலாக்கம் - செம்மையாக நடைமுறைப்படுத்தல் பற்றி மட்டுமே பேசப்படும். அதற்கு அப்பால் பேசப்பட மாட்டாது. யுத்த நிறுத்த ஏற்பாடுகளை உறுதியாக நடை முறைப் படுத்துவது குறித்து இணக்கம் காணப்படு வது மட்டுமல்லாமல், காணப்பட்ட இணக் கம் களத்தில் வேகமாகவும், திறமையாக வும், குழப்பமின்றியும் செயல்படுத்தப்பட வும் வேண்டும். அது செயல்படுத்தப்படுவதில் தான் அமைதி முயற்சிகளின் அடுத்த நகர்வு தங்கியிருக்கின்றது. யுத்த நிறுத்தம் செம்மை யாக செயற்படுத்தப்படாமல் அமைதி முயற்சி கள் தொடரும் என்ற எதிர்பார்ப்புக்கே இடமில்லை.'' - என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
""யுத்தநிறுத்த உடன்பாட்டு விதிகளை செம்மையாக நடைமுறைப்படுத்துவது குறித்து மட்டுமே ஜெனீவாப் பேச்சில் ஆரா யப்படும்'' - என்ற தகவலை நேற்று கிளிநொச்சியில் வைத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வ னும் வலியுறுத்திக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

<i><b>தகவல் மூலம் -உதயன்</b></i>


- மேகநாதன் - 02-10-2006

<b>ஜெனீவாவில் பழைய கோட்டையில் பேச்சு</b>

விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுகள் ஜெனீவா நகரின் மையத்தில் நடைபெறா. அதற்குப் பதிலாக நகரின் மையத்திலிருந்து சுமார் இருபது கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள பழைய கோட்டை ஒன்றுக்குள் உள்ள முற்கால அரண் மனை ஒன்றில்அது நடைபெறும் எனத் தெரிய வருகிறது.
இந்த தொன்மை மிகுந்த கோட்டை நவீன முறையில் அலங்கரிக்கப்பட்டு புதிய வடி வத்தில் சர்வதேச மாநாடுகள், உயர் மட்டச் சந்திப்புகள் போனறவை நடைபெறக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகினறது.
அரசு, புலிகள் ஆகிய இரு தரப்பு பிரதி நிதிகள் குழுவும் ஜெனீவாவின் மையத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டு இரண்டு நாளும் பேச்சுகளுக்கான இந்தப் பழைய கோட்டை அரண்மனைக்குக் கூட்டிச் செல்லப்படும் எனத் தெரியவரு கின்றது.

<i><b>தகவல் மூலம் -உதயன்</b></i>


- மேகநாதன் - 02-10-2006

<b>சிறிலங்கா அரசாங்கக் குழுத் தலைவருடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு </b>

ஜெனீவா பேச்சுக்களில் கலந்து கொள்ளும் சிறிலங்கா அரசாங்கக் குழுவின் தலைவரான சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் ஜெஃப்ரி லான்ஸ்ரெட் நேற்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.


இச்சந்திப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த கால சிறிலங்கா அரசாங்கங்கள் நடத்திய பேச்சுக்களின் அடிப்படையில் அரசாங்கத்தின் எதிர்காலக் கொள்கையை வகுப்பதில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கவனமெடுத்து வருவதாக அமெரிக்க தூதுவரிடம் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அரசாங்கக் குழுவினருக்கான பயிலரங்குகள் தொடர்பாகவும் அவை வெற்றிகரமாக நடந்துள்ளன என்றும் அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவிக்கப்பட்டது.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளார்ந்த ஈடுபாட்டோடு அமைதி முயற்சிகளில் ஈடுபடுவதற்கு அமெரிக்க அரசாங்கம் பாராட்டுத் தெரிவிப்பதாக அமெரிக்கத் தூதுவர் ஜெஃப்ரி லான்ஸ்ரெட் கூறினார்.

சோதனையான காலங்களில் கூட அரசாங்கம் பொறுமையாக இருந்தமை பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறினார் என்று அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>


- malu - 02-10-2006

என்னதான் பயிற்சி அரங்கு நடத்தினாலும் தெரிந்தத்தானே பேசப்போறாங்க.இது என்னமோ உருப்படற மாதிரி தெரியல.


- மேகநாதன் - 02-12-2006

<b>அரசாங்கக் குழுவில் கடற்படை தளபதி, காவல்துறை மா அதிபர்? </b>

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையேயான ஜெனீவா பேச்சுக்களில் சிறிலங்கா கடற்படை தளபதி மற்றும் காவல்துறை மா அதிபர் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.


சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ, கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க, சமாதான செயலகத்தின் பணிப்பாளர் ஜோன் குணரத்ன, திட்ட அமுலாக்கல் அமைச்சின் செயலாளர் அஜித் நிவாட் கப்ரால், சட்டத்தரணி கோமின் தயாசிறி ஆகியோர் அக்குழுவில் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அதிகாரிகள் குழு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் அதிகாரிகள் தொடர்பான விவரங்கள் எதிர்வரும் சில நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>


- மேகநாதன் - 02-12-2006

<b>ஜெனீவாவிலும் '20 க்கு 40' கணக்கிடுவாரோ நிமல் சிறிபால டி சில்வா?: கலக்கத்தில் ஜே.வி.பி.!! </b>

சிறிலங்கா அரசியலில் '20-க்கு 40' என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிற அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை ஜெனீவா பேச்சுக்கான குழுவாக அரசாங்கம் நியமித்திருப்பதால் ஜே.வி.பி. கலக்கமடைந்திருப்பதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


2004 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறிலங்கா நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் சுதந்திரக் கட்சியுடன் ஜே.வி.பி. கூட்டணி அமைத்தது.

சுதந்திரக் கட்சி அணியில் போட்டியிட ஜே.வி.பி. 25 ஆசனங்களைத்தான் கேட்டிருந்தது. ஜே.வி.பி.யுடன் ஆசனப் பகிர்வு பேச்சுக்களை நடத்திக் கொண்டிருந்த நிமல் சிறிபலா டி சில்வா, திருகோணமலை, அம்பாறை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தகுதியான சுதந்திரக் கட்சி வேட்பாளர்கள் இல்லை என்பதால் 19 ஆசனங்களைக் கூடுதலாக ஜே.வி.பி.க்கு அளித்திருக்கிறார்.

ஜே.வி.பி. கேட்டது என்னவோ 20. நிமல் சிறிபால கொடுத்தது என்ன 40. ஆகையால் நிமல் சிறிபால டி சில்வாவை ஜே.வி.பி.யினர் சிங்களத்தில் '20-க்கு 40' என்று புனை பெயரிட்டு அழைத்து வந்தனர்.

தற்போது அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களின் அடிப்படையில் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்கவுக்கு அடுத்திருக்கும் மூத்த அமைச்சர் என்கிற வகையில் நிமல் சிறிபால டி சில்வா ஜெனீவா பேச்சுக்கான அரசாங்கத்தின் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் கூட்டணியைப் போலவே விடுதலைப் புலிகளுடன் நடத்துகிற பேச்சுக்களிலும் '20-க்கு 40' என்ற கணக்கில் விட்டுக்கொடுப்புகளை நிமல் சிறிபால டி சில்வா செய்துவிடுவாரோ என்ற அச்சம் ஜே.வி.பி.யிடம் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தைகளுக்கான குழுவிற்கு அறிவு போதிக்கும் பயிலரங்குக் கூட்டம் கொழும்பில் நடத்தப்பட்ட போது நிமல் சிறிபால டி சில்வாவின் செயற்பாடுகள் ஜே.வி.பி.யினரை மேலும் கலக்கமடையச் செய்திருப்பதாகவும் தெரிகிறது.

அமெரிக்கா வழங்கிய 'அறிவு'ப் பயிலரங்கில் எதுவித அக்கறையுமின்றி நிமல் சிறிபால டி சில்வா மந்தமான நிலையில் இருந்ததைக் கண்ட சிலர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளனர். மகிந்தவும் நிமல் சிறிபால டி சில்வாவின் பெயரைக் குறிப்பிடாமலேயே, தூக்கத்தைக் கலைத்துவிட்டு அனைவரும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கக் குழுவினர் ஜெனீவா சென்று பேச்சு நடத்தி முடித்துவிட்டு வரும் வரையில் 'நெருப்பை' மடியில் கட்டிக் கொண்டு இருப்பதைத் தவிர எங்கள் கட்சிக்கு வேறு வழியில்லை என்கின்றனர் ஜே.வி.பி.யினர்.

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>


- MUGATHTHAR - 02-12-2006

<b>ஜெனிவா பேச்சின்போது ஒட்டுப்படைகளின் ஆயுதக்களைவிற்கு அரசு இணங்கக் கூடாது - ஹெல உறுமய </b>

ஜெனிவாவில் நடைபெறவுள்ள பேச்சுக்களின்போது சிறீலங்கா படைகளுடன் சேர்ந்தியங்கும் துணைப்படைகளின் ஆயுதங்களை களைவதற்கான இணக்கத்தை சிறீலங்கா அரசு வழங்கக் கூடாதென ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
கடந்த 7ம், 8ம் நாட்களில் நடைபெற்ற அரச பேச்சுக் குழுவிற்கான கருத்தரங்கில் கலந்து கொண்ட ஹெல உறுமய பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

ஜெனிவா பேச்சுக்களின்போது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்பது தொடர்பாக மாத்திரமே ஆராயப்படவேண்டும். தற்போதைய சூழ்நிலையில் அரசு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவற்கு இணங்கக் கூடாது என ஹெல உறுமயவும் ஜேவிபியும் கூட்டாகத் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறீலங்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை திருந்வதே அவசியம் எனத் தெரிவித்துள்ள ஹெல உறுமய அவ்வாறு அரசு செய்ய மறுக்குக்கும் பட்சத்தில் அரசிற்கெதிரான போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.

sankathi.com

<i>ஆயுத கலாச்சாரத்தில் எவ்வளவு நம்பிக்கை வைச்சிருக்குதுகள் இந்த மொட்டையள் சாந்தி சமாதானம் என்று சொல்லிக் கொண்டு புத்தரின் பாதையில் போதனையை செய்ய வந்திட்டு. :evil: :evil: ............. இப்பிடியே போனா நாடு விளங்கிடும்</i>