Yarl Forum

Full Version: என் சோக கதைய கேளுங்க...
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
எனக்கு ஒவ்வொரு விடியலும் சோகமாக இருக்கிறது. யாராவது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தால் நான் துடித்துப்போய் அழுது விடுகிறேன். ஏன்என்றால் எனக்கு இப்போது அப்பா இல்லை. அம்மா இல்லை. அண்ணன் இல்லை. அனைவருமே தற்கொலை செய்து கொண்டார்கள். நான் மட்டும் இப்போது தனியே... தன்னந்தனியே...!

என் குடும்பமே தற்கொலை செய்யவேண்டிய காரணம் என்ன? என்ன நடந்தது எங்கள் குடும்பத்தில்? நான் மட்டும் எப்படி தப்பிப்பிழைத்து- எப்படி இருக்கிறேன்?... எல்லாவற்றையும் நானே சொல்கிறேன்..

என் அப்பா பெயர் வினோத். அம்மா சியாமளா. எனக்கு அகில் என்ற அண்ணனும் இருந்தான். அவன் ஐந்தாம் வகுப்பிலும், நான் இரண்டாம் வகுப்பிலும் படித்துக்கொண்டிருந்தோம். என் அப்பா ஆட்டோ டிரைவர். அவருக்கு ஒரு பைக்கும் இருந்தது. தினமும் எங்களை அப்பாதான் பைக்கில் வைத்து ஸ்கூலுக்கு அழைத்துச் செல்வார். நான் என் அப்பாவை கட்டிப்பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன். நான் அப்பா செல்லம். என் அம்மா தையல் வேலைக்கு செல்வார். அம்மா எனக்கு அழகழகான துணிகள் தைத்து தருவார். தினமும் அப்பா ஆட்டோ ஓட்டி முடிந்து வீடு திரும்பும்போது எங்களுக்கு மிக்சர் எல்லாம் வாங்கிவருவார்.

எங்கள் சந்தோஷ வாழ்க்கை முழுவதையும் அந்த ஒரு நாள் அடியோடு மண்ணில் போட்டு புதைத்துவிட்டது.

பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் என் அம்மாவுக்கும் ஏதோ தகராறு. அந்த பிரச்சினையில் என் அம்மாவுக்கும் அவர்களுக்கும் அவ்வப்போது மோதல் வந்துகொண்டே இருக்கும். அந்த பிரச்சினையில் என் அம்மா மட்டும் தனிமைப்படுத்தப்பட்டார். அருகில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாகிவிட்டார்கள். மோதல் தொடர்ந்ததால் நாங்களும் அவர்களும் மாறிமாறி போலீசில் புகார் செய்தோம். போலீசார் வந்து என் அம்மாவிடம் நிறைய கேள்விகள் கேட்டார்கள். அம்மாவை குற்றஞ்சாட்டினார்கள். அம்மா அழுதார்.

போலீஸ் வந்தது, விசாரித்தது எல்லாவற்றையும் அப்பா தெரிந்திருக்கவேண்டும். அவர் பைக்கில் திரும்பிவரவில்லை. பைக்கை விற்றுவிட்டதாகச் சொன்னார். அவருடைய கையில் பிரியாணி பொட்டலமும், குளிர் பானமும் இருந்தது.

அம்மா எங்களை குளிப்பாட்டினார். தலை துவட்டிவிட்டு நல்ல உடைகளை உடுத்தினார். அப்போது அழுதுகொண்டே இருந்தார். நான் "அம்மா நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?''-என்று கேட்டேன். அதற்கு அம்மா எந்த பதிலும் சொல்லாமல் என்னையும், அண்ணனையும் சேர்த்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடியே அழுதார். எப்போதும் நாங்கள் நான்கு பேரும் சேர்ந்துதான் உணவு சாப்பிடுவோம். அப்பா ஏதாவது தமாஷ் செய்துகொண்டே எங்களோடு சாப்பிடுவார். அன்று எந்த தமாசும் இல்லை. இறுகிய முகத்தோடு அவர் எங்களுக்கு பிரியாணி பரிமாறினார். என்னிடமும், அண்ணனிடமும் போதுமா இன்னும் கொஞ்சம் சாப்பிடுகிறீர்களா என்று கேட்டுகேட்டு கொடுத்தார். நாங்கள் வயிறு நிறைய சாப்பிட்ட பின்பு, குளிர்பானத்தை உடைத்து நான்கு கப்களில் ஊற்றினார்கள். `எதற்காக குளிர்பானம் தருகிறீர்கள்?'-என்று நான் கேட்டேன். அதற்கு அப்பா, அம்மா இருவருமே எந்த பதிலும் சொல்லவில்லை. முதல் இரண்டு கப்களில் இருந்ததை அப்பாவும், அம்மாவும் குடித்தார்கள். அடுத்து அண்ணன் குடித்தான். அவன் குடித்ததும் நான் பருகியதை தட்டிவிட்டு விட்டு, "தங்கச்சி குடித்திடாதே அது விஷம்..''-என்றான். அதற்குள் நான் சிறிதளவு குடித்துவிட்டேன். அடுத்த நிமிடத்திலே எனக்கு தலைசுற்றியது. அப்போது அம்மா மெதுவாக தவழ்ந்து சென்று எல்லோரும் விஷம் குடித்துவிட்டோம் என்ற தகவலை அம்மாவின் நெருங்கிய தோழி ஒருவருக்கு சொல்லி விட்டு அப்படியே நிலை குலைந்து விழுந்தார்.

அம்மாவின் தோழி சிறிது நேரத்திலே காருடன் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்றார்கள். 2002-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது. அப்பா, அம்மா, அண்ணன் ஆகியோருக்கும் எனக்கும் எவ்வளவோ சிகிச்சைகள் தரப்பட்டன. ஆனால் ஒருவர் பின் ஒருவராக மூன்று பேரும் இறந்துவிட்டார்கள். நான் மட்டும் இப்போது தனிமரமாக நிற்கிறேன். ஒரு சில உறவினர்கள் வீடுகளில் அங்கும் இங்குமாகத் தங்கிவிட்டு இப்போது என் பாட்டி ஒமனாவுடன் இருக்கிறேன்.''-என்று அழுகையோடு சொல்லும் அகிலா, பெற்றோரின் சமாதிக்குச் சென்று கண்ணீர் விடுகிறாள். அந்த சமாதியில் அவர்கள் மூன்றுபேரும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அகிலா அம்மாவின் புடவை ஒன்றையும், அப்பாவின் காக்கி சட்டை ஒன்றையும், அண்ணனின் கால்சட்டையையும் தன்னோடு நினைவாக வைத்திருக்கிறாள்.

"எங்கள் வீடு இப்போது கடனில் இருக்கிறது. அங்குதான் என் குடும்பத்தினரின் சமாதி உள்ளது. அந்த வீட்டை நான் சொந்தமாக்க வேண்டும். நிறைய படித்து வேலை பார்த்து சம்பாதித்து தான் அந்த கடனை என்னால் தீர்க்கமுடியும். இப்போதும் என் பெற்றோரை நினைத்தால் எனக்கு அழுகையாக வருகிறது. ஏன் இந்த தற்கொலை நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. எந்த பிரச்சினை என்றாலும் அதை பேசி தீர்த்து, சமாளித்திருக்க முடியுமே. பிரச்சினைகளுக்கு தற்கொலையாத் தீர்வு. நான் அனாதையாகி என் குடும்பத்தினரை நினைத்து அழுதுகொண்டிருப்பது போலத்தானே, என்னை நினைத்து என் குடும்பத்தினரின் ஆத்மாவும் அழுது கொண்டிருக்கும்...''- இந்த சிறுமி சொல்வது சரிதான். இனியார் அழுது என்ன பயன்? போன உயிரும் பாசமும் திரும்பிவரவாப் போகிறது. தேவைதானா இப்படிப்பட்ட தற்கொலைகள்...?
Thanks:http://www.dailythanthi.com/magazines/nyayiru_article_E.htm
[size=18]இச்சம்பவம் உண்மையாக இருந்தாலும் இதில் சிறு கற்பனையும் சேர்க்கப்பட்டுள்ளது.....