Yarl Forum

Full Version: 'விழிபிதுங்கும் உலக விடுதலை இயக்கங்களுக்கு திசை காட்டும் கரு
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
<b>'விழிபிதுங்கும் உலக விடுதலை இயக்கங்களுக்கு திசை காட்டும் கருவியாக விடுதலைப் புலிகள்' </b>- <i><b>தமிழ்நாட்டுத் தமிழனின் கடிதம்</b> </i>[திங்கட்கிழமை, 12 டிசெம்பர் 2005, 05:38 ஈழம்] [து.சங்கீத்]

உங்களது இணையத்தள வரையறைகளின் படி என் இந்தச் செய்தியை நீங்கள் 'புதினம்' இணையத்தளத்தில் வெளியிடுவதற்கான சாத்தியங்கள் குறைவாக இருக்கும் என்று கருதுகிறேன். இருப்பினும் ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டச் சிந்தனை உள்ளவன் என்கிற முறையில் எழுதுகிற இந்தச் செய்தியை நீங்கள் அவசியம் வெளியிட வேண்டும் என்பது என் விருப்பமாகும்.


முதலில் ஒன்றை நான் தெளிவாகச் சொல்லுகிறேன்.

விடுதலைப் புலிகள் மீது இரசிக மனோபாவத்தோடு-தமிழ்நாட்டிலே நிகழ்த்தப்படாத சாகசங்களை அல்லது தமிழ்நாட்டுத் தமிழன் கண்டிராத-பார்த்திராத-கேட்டிராத சாகசங்களைச் செய்தவர்கள் என்ற காதல் கொண்டு இந்தச் செய்தி எழுதப்படவில்லை.

விடுதலைக்குப் போராடுகிற ஒரு இனம்-அதுவும் எங்களது தொப்புள் கொடி உறவு கொண்ட மக்கள் விடுதலைக் களத்திலே நிற்கிறார்கள் என்ற அடிப்படையிலும்

ஒடுக்குகிற ஒரு தேசிய இனம் எதுவித ஆதரவின்றி அனாதையாக களத்திலே நின்று சதிகளையும் யுத்தங்களையும் சதிராடி வருகிற பிரமிப்பின் பின்புலத்திலுமே இது எழுத வேண்டியவனாக உள்ளேன்.

மிக அண்மைக்காலமாக குறிப்பாக சிறிலங்கா அதிபர் தேர்தல் காலத்துக்கு சிறிது முன்பாக புதினம் இணையத்தளத்தை நான் படிக்க நேர்ந்தது. தொடர்ச்சியாக விடுதலைப் புலிகளின் நிலைப்பாடுகளை இந்த இணைய தளம் ஊடாக என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.

குறிப்பாக விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினராக உள்ள பாலகுமாரன் அவர்களது அரசியல் அரங்க நிகழ்வுகள், விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனது நீண்ட நேர்காணல்கள், உலக நாடுகளின் பிரதிநிதிகள் தங்களைச் சந்திக்கின்ற போது தருகிற மனுக்கள் ஆகியவற்றை உற்றுநோக்கியபோது உண்மையிலே

பாலகுமாரன் ஒரு நிகழ்விலே சொல்லி இருந்தது போல்-

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு

ஈராக் மீதான அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரானப் போருக்குப் பிறகு

உலக விடுதலை இயக்கங்களின் இருப்பு சாத்தியமா என்ற கேள்வி எனக்கும் எழுந்தது உண்டு.

தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டம் இன்னும் தலைமறைவு இயக்கங்களாக இலைமறைகாயாகத்தான் இருக்கிறது. ஈழத்தைப் போல் ஒடுக்கிற தேசிய இனம் என்பது இங்கே வெளிப்படையாக இல்லாமல் இராணுவ ஒடுக்குமுறையாக இல்லாமல் 2 ஆயிரம் ஆண்டுகால கருத்து வன்முறை என்கிற ஆயுதத்தால் ஒரு குறைந்த விழுக்காட்டு இனம் எங்களை அடிமைப்படுத்தி இருக்கிறது.

அந்த மூளையைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் கழற்றி வைக்க இன்னொரு தந்தை பெரியார்தான் வரவேண்டும்.

இப்படியான அவலச் சூழலோடு- அமெரிக்கா போன்ற நாடுகளின் பயங்கரவாதத்துக்கு எதிரான அணியைக் காட்டி இங்கே இனி தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டம் சாத்தியமே இல்லை- உலகில் எங்குமே விடுதலைப் போராட்டம் சாத்தியமே இல்லை என்று தமிழ்நாட்டு மிதவாதத் தமிழ்த் தேசியத் தலைவர்கள், இன விடுதலையில் அக்கறை கொண்டு வரும் இளைஞர்களுக்குக் கற்பிதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஒரு விடுதலை இயக்கம் முழுமையான அர்ப்பணிப்போடு இயங்கினால் எந்த ஒரு வல்லரசையும் வென்றெடுக்க முடியும் என்பதை விடுதலைப் புலிகள் தங்களது இராஜதந்திர செயற்பாடுகளின் மூலம் நிரூபித்து உள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவைத்தான் விடுதலைப் புலிகள் ஆதரிப்பார்கள்- ஆதரிக்க வேண்டும்; அவர் வந்தால் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட்டு விடும் என்று தமிழ்நாட்டுத் தமிழர்களும் நம்பிக் கொண்டிருந்த போது உங்கள் புதினம் மூலமாக பாலகுமாரன் அவர்களது கருத்தைப் படிக்கிற போது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

விடுதலைப் புலிகள் என்ன நிலையினை மேற்கொள்கிறார்கள்? என்ற கேள்வி எழுந்தது.

ரணில் தோற்றபோதும் கூட தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு- தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசிய சக்திகளுக்கு ஏன் விடுதலைப் புலிகள் இப்படிச் செய்துவிட்டார்கள்? என்றுதான் கேள்வி எழுந்தது.

ஆனால் புதினத்தையும் சமீபகாலமாக தமிழ்நாட்டு இதழ்களிலும் வருகின்ற செய்திகளைப் பார்க்கிற போது

ரணிலின் சதித்திட்டத்தை பாலகுமாரன் அனுபவபூவர்மாக முதன் முதலில் அம்பலப்படுத்தினார். அது ஊகமாகவே இருந்திருக்கும்- ரணில் கட்சியினர் இருவர் வாய்திறக்காமல் இருந்திருந்தால்.

ஆனால் ரணிலையும் தமிழர்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று அனுபவத்தின் வாயிலாக பாலகுமாரன் கூறியதன் உண்மையை ரணில் கட்சியினர் இருவர் ஒப்புக்கொண்டதாக வெளியானது.

அதேபோல் இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் திருகோணமலையின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காகத்தான் இந்தியா தலையிடுகிறது என்பதை பிரபாகரன் அப்போதே தெரிவித்திருந்த செய்தியையும் இதே நேரத்தில் புதினம் வாயிலாகப் படிக்க நேர்ந்தது.

இந்த இரண்டு விடயங்களும் உண்மையில் விடுதலைப் புலிகளின் தொலைநோக்குச் சிந்தனையும் கணிப்பும் அவர்களது கடந்த கால வெற்றிகளின் பின்னணியை தெளிவாகச் சொல்லியது.

தேர்தல் முடிந்தது- மகிந்தா ராஜபக்சே வெற்றி பெற்றார்.

மகிந்தா ராஜபக்சே குறித்து தொடர்ந்து பாலகுமாரன் தெரிவித்திருக்கும் விமர்சனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் நிரூபிக்கப்பட்டே வருகின்றன.

நார்வே நாடு தொடர்பாக ராஜபக்சே எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக இரு சிங்களப் பேரினவாத கட்சிகளும் தொடர்ந்து கருத்துகளைக் கூறி வருகின்றன. இந்த முரண்பாடு எங்கே போய் முடியும்? போகிற போக்கைப் பார்த்தால் இந்த முரண்பாடுகள், பாலகுமாரன் கூறியிருந்ததைப் போல் சிங்களவர்களுக்கு இடையே ஒரு உள்நாட்டு யுத்தத்தை ஏற்படுத்திவிடக் கூடும் என்று தெரிகிறது.

இவைகளை உள்நாட்டு அரசியல் தொடர்பான புலிகளின் அனுபவங்கள் என்று ஒருபக்கம் வைத்துக் கொள்ளலாம்.

'தம்பி பிரபாகரன்' அண்ணன் அவர்கள் பேசிய மாவீரர் நாள் பேச்சு உண்மையில் எங்களுக்கு ஈழ விடுதலைப் போராட்டத்தின் கடந்த கால அவல நிலைகளைச் சொன்னது.

மேலும் பயங்கரவாதம் குறித்து அண்ணன் எழுப்பியிருக்கும் கேள்வி மகிழ்ச்சியளித்தது.

எதிர்காலத்தில் போராடுகிற- இப்போது போராடிக் கொண்டிருக்கிற விடுதலைப் போராட்ட அமைப்புகள் மென்று முழுங்கும் புழுங்கிச் சாகும் ஒரு விடயத்தை ஊரறிய அவர் முழங்கியிருப்பது மட்டுமல்ல..சர்வதேச முகத்தில் அறைந்தார் போல் விடுதலைக்குப் போராடுபவனும் பயங்கரவாதியா என்று கேள்வி எழுப்பி இருக்கிற துணிச்சல் ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.

அமெரிக்கப் பூச்சாண்டிகளைக் காட்டி இங்கே தமிழ்நாட்டில் தேசிய இன விடுதலை பேசிய மிதவாதிகள் மூச்சடைக்க முயற்சிக்கும் செயல்களுக்கு செவினி அடி என்று சொல்லலாம் அதை.

மிக ஆழமான கேள்வி அது.

பிரபாகரன் அண்ணனது உரைக்கு விளக்கம் அளித்து ஆண்டன் பாலசிங்கமும் பாலகுமாரனும் தெரிவித்திருந்த கருத்துகள் மேலும் வியப்பூட்டின.

உண்மையைச் சொன்னால், இந்தத் தேர்தல் ஒரு செய்தியை சர்வதேச சமூகத்துக்குச் சொல்லப் போகிறது என்று சொல்லி இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்ட கருத்துகள் புரிபடாமலேயே இருந்தது.

ஆனால் இந்தியத் தலையீடு, நார்வேயின் மீண்டும் வருகை, சீனா தலையிடுமா என்கிற கேள்விகள் அடுத்தடுத்து உங்களது இணையத்தளம் வாயிலாக எழும்பிய போது இந்துமா சமுத்திரத்தினது அரசியலை ஓரளவு அறிந்தவன் என்கிற வகையிலும் சர்வதேச நடப்புகளின் மீது அக்கறை கொண்டவன் என்கிற வகையில் மிரட்சியடைத்தான் முடிந்தது.

நாளைய நகர்வுகளை எப்படித் துல்லியமாக இவர்களால் சொல்ல முடிகிறது?

பாலகுமாரன் கூறியதுபோல் இன்னொன்று நடந்துள்ளதை நான் சுட்டிக்காட்ட எண்ணுகிறேன்.

உலக விடுதலைப் போராட்டங்களை மென்மைப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு இதுவரை அழைத்து வந்த சர்வதேச சமூகம் இப்போது புதிய அனுபவத்தைப் பெறப் போகிறது. பல்வேறு நாட்டுப் புரட்சிகளைப் போல் உலக அரசியலில் ஒரு அதிசயமாக இது இருக்கும் என்றார்.

ஆம். அப்படித்தான் நடக்கிறது.

இங்கே ஐக்கிய இந்தியக் குடியரசின் தலைமை அமைச்சரைச் சந்தித்த நார்வே தலைமை அமைச்சரின் பேட்டியானது சிங்களவர்களுக்கு நிபந்தனைகளை விதிக்கப் போவதாகச் சொன்னார்கள்.

பாலகுமாரன் முன்பு சொன்னது போல் நார்வே நாட்டுக்கு இது இடியாப்பச் சிக்கல்தான். அவர்கள் புதிய அனுபவம் பெறப் போகிறார்கள் என்பது அவர்களது இந்தியப் பயணத்தின் மூலம் உணர்ந்து கொள்ள முடியும்.

இதுவரை இந்தியாவை 'பஞ்சாயத்துக்கு' அழைக்காமல் இருந்த நார்வேக்காரர்கள் இப்போது ஒரு பிராந்திய பெரிய அண்ணனையும் அனுசரித்துப் போக வேண்டிய நிலையில் உள்ளது.

இந்தோனேசியாவின் ஆச்சே விடுதலைப் போராட்டத்திலும் முன்னாள் பாலத்தீன பேச்சுவார்த்தைகளிலும் சட்டையை தூக்கிவிட்டிக் கொண்டு ஏன் ஈழப் பிரச்சனையிலும் ஒரு நிலைவரை நெஞ்சு நிமிர்த்தி நடந்த நோர்வே,

இப்போது

உங்கள் மொழிகளிலேயே சொல்வதாக இருந்தால்

அனுசரணையாளராக உள்ள நோர்வேக்கும் சிறிலங்காவுக்கும் இந்தியா என்கிற ஒரு அனுசரணையாளர் தேவைப்படுகிற விசித்திரம் இப்போது நடந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் இதுநாள் வரையில் ஈழப் புலிகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்த ஏடுகள் அனைத்தும் ஈழத்திலே யுத்தம் என்கிற தலைப்புச் செய்தியைப் போட்டு பிரபாகரனின் காலஅவகாச தந்திரத்தை பாராட்டுகிறார்கள்.

விடுதலைப் புலிகளின் இராஜதந்திரத்தின் வெற்றியாகக் கூட இதை நான் நினைக்கிறேன்.

தமிழ்நாட்டு ஏடுகள் எழுதாத அவதூறுகளும் விமர்சனங்களும் இல்லை. இப்போதும் எழுதிக் கொண்டு இருக்கின்றன. ஈழத்திலே பிரபாகரன் உரை ஆற்றிவிட்டார். யுத்தம் வரப்போவதால் இங்கே இருந்து டீசல் போன்றவற்றை அவர்கள் வாங்கிச் சேமிக்கிறார்கள். அதனால் கடலோரப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருவதாக இப்போதும் எழுதுகிறார்கள்.

ஆனால் அந்த விமர்சனங்களுக்கும் கூட தங்களது செயலினால் பதிலடி கொடுத்து இங்கேயும் தங்களது இராஜதந்திரத்தை ஈழத்து பேச்சுகளின் மூலமே வென்றுகாட்டி இருப்பது குறித்து எப்படி மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியும்?

நான் படித்த வரலாற்றில் குர்து இன விடுதலைத் தலைவர் ஒகாலன் சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டு அந்த விடுதலைப் போராட்டத்தின் கதி கேள்விக்குள்ளாகிவிட்டது. ஒகாலன் தெளிந்த மார்க்சிய-லெனிய சித்தாந்தவாதியாக உருவாகி, காலச் சூழலுக்கு ஏற்ப மத நம்பிக்கையுள்ளோரையும் பகுத்தறிவாளர்களையும் ஒருங்கிணைத்து ஒட்டுமொத்த குர்து இன மக்கள் விடுதலைப் போராட்டமாக அவர் தனது தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தினார். ஆனால் அவர் வெளிநாடு ஒன்றில் கைதான பிறகு அந்த விடுதலை இயக்கத்தின் நிலை முன்னைப்போல் வீச்சோடும் வீரியத்தோடும் இல்லை என்றும் அமெரிக்காவின் அணிசேர்க்கையிலே இணைந்துவிட்டது என்றும் தெரிகிறது.

அதேபோல் ஆச்சே தேசிய இன விடுதலைப் போராட்டம் ஒரு குறைந்தபட்ச தீர்வுத் திட்டத்துடன் அடங்கிப் போய்விட்டதாகத் தெரிகிறது.

இந்தியாவின் நாகாலாந்து தேசிய இனவிடுதலைப் போராட்டமும் பேச்சுவார்த்தை என்கிற அபாயச் சுழலில் சிக்கிக் கொண்டு தத்தளிக்கிறது. இந்தியாவின் சீக்கியர் விடுதலைப் போராட்டம் சிதைக்கப்பட்டுவிட்டது. காசுமீர விடுதலைப் போராட்டம் திசைமாறிப் போய்விட்டது.

இந்த விடுதலை இயக்கங்களுக்கு இணையான காலத்திலே உருவான விடுதலை இயக்கமான விடுதலைப் புலிகளின் இத்தகைய தொலைநோக்குச் சிந்தனை அந்த இயக்கங்களுக்கு இருந்திருந்தால் ஒடுக்கப்பட்டிருக்கிற தேசிய இனங்களது உரிமைக் குரல் குரல்வளையோடு நசுக்கப்பட்டிருக்காது.

உலக வரலாற்றில் ருசியப் புரட்சியானது தேசிய இனங்களுக்கு ஒரு முன்னோடி விடுதலை இயக்கமாகி நூற்றாண்டுகாலம் நெருங்குகிறது.

அடுத்த சகாப்தமாக இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகத்தில் உலகம் ஒரு கிராமமாக சுருங்கிப் போய் அமெரிக்கா என்கிற வல்லரசின் பின்னால் ஒட்டுமொத்த நாடுகளும் அணிதிரள வேண்டிய காலகட்டத்தில் இன்னமும் விடுதலை பெறாத அத்தனை தேசிய இனங்களும் புத்துயிர் பெறவும் குரல்வளையினை நெறித்தவர்களது நெஞ்சில் ஏறி விடுதலை வானில் பறப்பதற்குமான ஒரு மிகவும் சக்திவாய்ந்த வழிகாட்டியாக, தத்தளிக்கிற இனங்களினது விடுதலைக்கான திசைகாட்டியாக விடுதலைப் புலிகளின் அரசியல் நகர்வுகள் உத்வேகத்தை அளிக்கின்றன என்றால் அது மிகையல்ல- இரசிக மனோபாவம் அல்ல. கண்முன் நிகழ்கின்றவைகளின் எதேச்சையான உண்மை.


<i> <b>தகவல் மூலம் - புதினம்</b></i>