கவிதைக் களம்

"குழலூதும் இவனை பார்த்து"

22 hours 12 minutes ago
"குழலூதும் இவனை பார்த்து"
 
 
"மழலையின் மொழி கேட்டு
நான்பேசும் மொழி மறந்தேன்
மழலையின் மொழி பேசி
என்னையே நான் மறந்தேன்!"
 
"மழலையின் குறும்பு கண்டு
துன்பங்கள் ஓடி மறைந்தன
மழலையின் புன்னகை பார்த்து
இதயமே வானில் பறந்தன!"
 
"குழலூதும் இவனை பார்த்து
குறும்பு கண்ணனை மறந்தேன்
குழந்தை காட்டும் நளினத்தில்
குமரி ஊர்வசியை மறந்தேன்!"
 
"குழவி தளர்நடை கண்டு
குதூகலித்து நான் மகிழ்ந்தேன்
குழவியின் கொஞ்சிக் குலாவுதலில்
குரத்தி வள்ளியை மறந்தேன்!"
 
"தரணியில் ஓர்நிலவு கண்டேன்
மழலையில் பலநிலவு கண்டேன்
தரணியில் இவள் ஆடுகையில்
மயிலும் மலைத்து நிற்கக்கண்டேன்!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available.Abp nadu krishna jayanthi contest baby photos in Krishna costume | குழலூதும்  குட்டி கிருஷ்ணர்களின் ஸ்வீட் போட்டோஸ்!
 
 
 

"முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"

2 days 1 hour ago
"முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"
 
 
"இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில்
இரவு மெல்ல கீழே இறங்க
இனிய விடியலில் நானும் எழும்ப
இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"
 
"சிறிய கால்களின் காலடி ஓசை
சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க
சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி,
சித்தம் குளிர என்னைத் தழுவுது!"
 
"கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன்
கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம்
கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை
கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"
 
"அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி
பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா'
பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து
எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"
 
"அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி
குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான்
என் மடியில் படுத்து சிரிக்கிறான்
ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"
 
"சில கிசுகிசு, பின்னர் மௌனம்
சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து
சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள்
சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"
 
"படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து
பதுங்கி இரண்டு கதவால் வந்து
பகலோன் நேரே வந்தது போல
பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"
 
"மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு
மற்றவர் நாற்காலியின் கையில் எற
மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை
மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"
 
"முத்தங்களால் என்னை விழுங்கி விட
முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள
முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க
முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
May be an illustration of 2 people and child May be an image of 1 person, baby and indoor May be an image of 2 people, child, people standing, grass and sky
 
 

"நீராடும் நிலா"

2 days 14 hours ago
"நீராடும் நிலா"
 
 
"வானத்து மதியாய் என்னுடைய காதலியாய்
கானத்து குயிலாய் இனிமையின் ஒலியாய்
மோனமாய் இருந்து நெஞ்சில் நிறைந்தவளே!
ஆனந்தம் எதுவென உன்னில் அறிந்தேன்
அனலாய் இதயம் இன்னும் கொத்திக்குதே!"
 
"கிராமத்து மண்ணின் வாசனை தெரியுது
கூரான கண்ணனும் என்னைத் துளைக்குது
சீரான அழகோ ஆசையைத் தூண்டாதே!
நேரான பாதையிலே தலைநிமிர்ந்து போறவளே
நீராடும் நிலா நீதானோ என்னவளே!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
May be an image of temple and text that says 'V நீராடும் நிலா' May be an illustration of 1 person
 

"திமிராய் நீ நடப்பாய் தினமும் உன்னைக் காண்போம்"

2 days 22 hours ago
"திமிராய் நீ நடப்பாய் தினமும் உன்னைக் காண்போம்"
 
 
"திமிராய் நீ நடப்பாய் தினமும் உன்னைக் காண்போம்
இல்லை எனக்கூறாய் இருப்பதை எமக்கு அளித்தாய்
வாழ்வின் பொருளை உன்னில் நாம் கண்டோம்
வில்லங்கத்தில் இருப்பவனுக்கு நீ ஒரு கடவுள்
நாவிற்கு இனிய சுவையுடன் தினமும் உணவு தந்தாய்
யகத்தில் வித்தாகி, மலராகி, காயாகி, கனியாகி, விதையானாய்
கண்டதையும் கற்று பண்டிதையாகிய ஒரு பல்கலைக்கழகமே
லிங்கவழிபாடு பின் விநாயகர் முருகன் என்றும் முடிவில்லை
இங்கிதமாய் பழகிடுவாய் இன்று உன்னை எங்கு காண்போம்
கண்டதும் கவர்ந்திடுவாய் கலகலப்பாய் பழகிடுவாய்
ஒரு பெரு முற்றுப்புள்ளியை இன்று பொட்டாய் வைத்துவிட்டாய்
இருளிற்கு ஒளிவிளக்காய் இருண்டாருக்கு மகா காளியாய்,
ராகத்தில் மோகனமாய் ராமனின் சீதையாய்
சாதனையில் வெற்றி மகளாய் சாந்தோர்க்கு உறுதுணையாய்
இத்தனைக்கும் ஒரு வளாய் இறுமாப்பாய் இருந்தாயே
திருடியது உன்னை யாரோ? தீயில் சங்கமித்தது ஏனோ?"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. No photo description available.
 
 
 

"நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை" [ஜலாலுத்தீன் முகம்மது ரூமியின் கவிதையின் தமிழாக்கம்]

3 days 22 hours ago
"நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை"
 
 
[ஏழு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த, ஜலாலுத்தீன் முகம்மது ரூமி அல்லது மௌலானா ரூமி என அழைக்கப்படும் பாரசீக கவிஞரும், நீதிமானும், இறையியலாளருமான இவரின் புகழ் பெற்ற கவிதை "I choose to love you in silence" யின் தமிழாக்கம் இதுவாகும்.]
 
 
"நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை
மௌனத்தில் நிராகரிக்க முடியாது என்பதால்
 
நான் தனிமையில் காதலிக்கிறேன் உன்னை
தனிமையில் நான்மட்டுமே சொந்தம் என்பதால்
 
நான் தூரஇருந்து மெச்சுகிறேன் உன்னை
தூரம் அன்புவலிக்கு கவசம் என்பதால்
 
நான் காற்றில் முத்தமிடுகிறேன் உன்னை
காற்று உதடைவிட மென்மை என்பதால்
 
நான் கனவில் அணைக்கிறேன் உன்னை
கனவில் உனக்கு முடிவேயில்லை என்பதால்"
 
"I choose to love you in silence…
For in silence I find no rejection
I choose to love you in loneliness…
For in loneliness no one owns you but me,
I choose to adore you from a distance…
For distance will shield me from pain,
I choose to kiss you in the wind…
For the wind is gentler than my lips,
I choose to hold you in my dreams…
For in my dreams, you have no end".”
 
 
[தமிழாக்கம் :
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available.
 
 
 

"போனால் போகட்டும் போடா"

4 days 19 hours ago

"போனால் போகட்டும் போடா"

 

"போனால் போகட்டும் போடா மனிதா
போதை போனதும் தெரியுது உலகமடா 
ஆசை கொண்டு துள்ளித் திரிந்தேனே   
ஆரவாரம் செய்யாமல் அடங்கிப் போனேனே!"


"ஈன இரக்கமின்றி அகந்தை கொண்டேனே 
ஈரக்கண் பலருக்கு என்னால் நனைந்ததே 
ஈன்ற பிள்ளைகளையும் மறந்து வாழ்ந்தேனே  
இன்று பாடை தூக்கவும் யாருமில்லையே!" 


"ஊடல் கொண்டு சென்ற மனைவியை 
கூடல் கொண்டு அள்ளி அணைக்காமல் 
தேடி ஒருவளுடன் துய்த்து மகிழ்ந்தேனே
ஊமையாய் இன்று உறங்கிக் கிடக்கிறேனே!"


"உண்மை இல்லா பற்றில் பாசத்தில் 
உணர்ச்சி மட்டும் வாழ்வென நம்பி 
உள்ளதையும் இழந்து நோயையும் பிடித்து 
ஒதுங்கி தனித்து சுடுகாட்டில் படுக்கிறேனே!" 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

India Reports Shortage of Wood Needed for Funeral Pyres as COVID Deaths  Surpass 234K

 

 

 

"எந்தை அவள் ..........." [ எந்தை அவள் சிரித்து, சிந்தித்து  திருந்த ஒரு நையாண்டி பாடல்] 

5 days 2 hours ago

"எந்தை அவள் ..........." [ எந்தை அவள் சிரித்து, சிந்தித்து  திருந்த ஒரு நையாண்டி பாடல்] 


காலை:


"கந்தப்பு வண்டியில் பால் விற்கிறான் 
முந்தைய கடனை பேசி வாங்கிறான்
சந்தானம் கிணற்றில் முகம் கழுவுறான் 
சிந்திய தண்ணீரை வாழைக்கு விடுறான்
செந்தணல் சூரியன் மேலே எழுகிறான் 
பந்தி பந்தியாய் பறவை பறக்குது
மந்த வெயில்  மெல்ல சுடுகுது  
எந்தன் கண்ணகி போர்வை விலத்துகிறாள்!"


நண்பகல் [மத்தியானம்]:


"சந்தியில் சத்தமிட்டு கந்தப்பு வாறான் 
கந்தை துணியுடன் சுந்தரி சமைக்கிறாள்  
சந்தனப் பொட்டு பள பளக்குது    
சந்தானம் நந்திக்கு தீபம் காட்டுறான்
செந்தாமரை கண்ணாடியில் அழகு தேடுறாள்  
வெந்திய குளம்பு  அடுப்பில் கொதிக்குது 
சிந்திய முத்துகள்  பொறுக்கி எடுத்து   
எந்தன் ஊர்வசி அரட்டை அடிக்கிறாள்!!" 


மாலை:


"தொந்தி பிள்ளையாரை விழுந்து கும்பிட்டு 
வந்தனம் கூறி வசந்தி போறாள் 
பிந்திய பகலில் சூரியன் மறைகிறான் 
சுந்தரி பிள்ளைக்கு நிலவு காட்டுறாள் 
பந்து பிடித்து செந்தாமரை துள்ளுறாள் 
சந்து பொந்துக்குள் குஞ்சுகள் போகினம் 
உந்தி ஊஞ்சலை விரைவா ஆட்டி  
எந்தன் சிந்து, பைரவி பாடுறாள்!!!" 


இரவு:


"சுந்தரி பிள்ளையை தொட்டிலில் ஆட்டுறாள் 
கந்தப்பு விராந்தையில்  பாய் விரிக்கிறான் 
வந்தோரை வசந்தி அன்பாய் கவனிக்கிறாள் 
சந்தானம் அவளுக்கு ஒத்தாசை புரிகிறான்  
செந்தாமரை மாடியில் சரித்திரம் படிக்கிறாள் 
அந்தபுரத்து ரகசியங்கள் அலசி பார்க்கிறாள்  
தந்தன தந்தன  தாளம் போட்டு 
எந்தன் மாதவி அபிநயம் பிடிக்கிறாள்!!!!"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]   

குறிப்பு: நான் விளங்கிக்கொண்ட நையாண்டி இதுதான்!! 

"கிள்ளை மொழி பேசும் பிள்ளைக்கு ஒரு தாலாட்டு"

6 days 1 hour ago
"கிள்ளை மொழி பேசும் பிள்ளைக்கு ஒரு தாலாட்டு"
 
 
"கிள்ளை மொழி பேசும் மரகதமே
கிளியே எங்கள் குலக் கொடியே
கிண்கிணி யோடு சிலம்பு கலந்தாட
கிருத்திகை நன்னாளில் கண் உறங்காயோ?"
 
"மஞ்சள் முகத்தாளே குதலை மொழியாளே
மடியில் தவழ்ந்து தள்ளாடி சத்தமிட்டு
மல்லிகை பந்தலில் ஓடி விளையாடி
மகரிகை தொங்கும் மஞ்சத்தில் உறங்காயோ?"
 
"சின்ன பூவே சிங்கார பூவே
சிஞ்சிதம் காதில் தேனாய் விழ
சித்திரம் பேசும் கண்ணும் ஓய
சிந்தைநிறுத்தி இமைகள் மூடாயோ ?"
 
"வடந்தை உன்னை தழுவாது இருக்க
வண்ண மலர்களால் தூளி கட்டி
வஞ்சகர் கண் படாது இருக்க
வட்ட பொட்டிட்டு விழிகள் மூடாயோ ?"
 
"பச்சை இலுப்பை அளவாய் வெட்டி
பவளக்கால் தொட்டில் அழகாய் கட்டி
படுக்க இதமாய் கம்பளி விரித்து
பல்லாண்டு வாழ்வாய் நீ உறங்காயோ ?"
 
"யாழ் எடுத்து ராவணன் இசைமீட்க
யாவரும் ஒன்றுகூடி கானம் கேட்க
யானை துதிக்கையால் ஏணை ஆட்ட
யாழ் மொழியாளே கண் உறங்காயோ?"
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
[கிருத்திகை - கார்த்திகை,
குதலை - மழலைச் சொல்,
சிஞ்சிதம் - அணிகலவொலி,
தூளி - ஏணை,
வடந்தை - வாடை]

"கார்த்திக் கார்த்திக் காகம் பறக்குது"

6 days 19 hours ago
"கார்த்திக் கார்த்திக் காகம் பறக்குது"
[ஒரு குழந்தை பாட்டு]
 
 
"கார்த்திக் கார்த்திக் காகம் பறக்குது
காலை வேளையில் வடை சுடுறாள்
காத்து இருக்குது பூவரசம் வேலியில்
கானா பாட்டு பாடி ஆடுறாள் !"
 
"கார்த்திக் கார்த்திக் பூனை பாயுது
காரிருளில் இரு கண்கள் மிளுருது
காரை கொஞ்சம் விரைவா செலுத்து
காத தூரம் போக வேண்டும் !"
 
"கார்த்திக் கார்த்திக் பட்டம் மிதக்குது
காடை கோழி எட்டி பார்க்குது
காளான் பூஞ்சையை கொத்தி சாப்பிடுது
காட்டுப் பக்கம் அறுந்து போகுது !"
 
"கார்த்திக் கார்த்திக் அம்புலி தெரியுது
காங்கேயம் காளை துள்ளி வருகுது
காவற் கடவுளை கூவி கூப்பிடு
கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் !"
 
"கார்த்திக் கார்த்திக் பிறந்தநாள் இன்று
காலம் போனது எமக்கு புரியலை ?
காய் பழங்கள் துள்ளி பிடுங்கிறாய்
காலால் பாய்ந்து ஒலிம்பிக் பார்க்கிறாய் !"
 
"கார்த்திக் கார்த்திக் தாத்தாவின் பாராட்டு
காதோரம் சொல்லும் அகவை வாழ்த்து
காற்று வெளியில் பறந்து வருவேன்
கார்த்திக் குட்டியை தூக்க வருவேன் !"
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"எதில் நாம் வல்லுநர் வஞ்சகி ?" / "What are we masters of, cunning woman?"

1 week ago
"எதில் நாம் வல்லுநர் வஞ்சகி ?" / "What are we masters of, cunning woman?"
 
 
"பூமியில் வந்ததில் இருந்து போகும் வரை, வஞ்சகி
உனக்கு ஏனடி பாசாங்கு, ஏதுக்கடி போலி வாழ்வு?
மனிதனின் உண்மை தேவையை, பாசாங்கு உணராது வஞ்சகி
பொய் நம்பிக்கை விதைத்து இன்பத்தை கெடுக்கும், பெண்ணே!"
 
"அறிவியலா? ஆன்மிகமா? எதில் மனிதன் அதிபதி, வஞ்சகி?
விஞ்ஞானத்தால் விரக்தியை உண்டாக்கவா, பேரழிவை உண்டாக்கவா
மனித நேயமற்ற நீர்க்குமிழி விவகாரங்களை கட்டுப்படுத்தவா, வஞ்சகி?
கட்டாயம் அது நிரந்தர நித்திய ஆன்மாவை அல்ல, பெண்ணே!"
 
"உண்மையில் மனிதன் பெரும் கடலல்ல, ஒரு துளியே, வஞ்சகி ?
கற்றது கையளவு ஆனால் நீயோ உலகளவு தெரியும் என்கிறாய்
உன்செயலே மனிதனின் குறுகிய மனப்பான்மையை காட்டுது, வஞ்சகி?
உன் அறியாமை, நீ உண்மையில் குருடியே என்கிறது, பெண்ணே!"
 
"மனிதனின் இறுதித் தீர்ப்பு, நிலையற்ற இறப்பே, வஞ்சகி ?
நீ நீர்க்குமிழி வாழ்வை விட்டு அங்கையே போகிறாய்
நீ முடிகின்ற ஒன்றில் வல்லுநராகி, எதைசாதிப்பாய், வஞ்சகி ?
உனக்கு மரணம் காத்திருக்கிறது என்பதை அறியாயோ, பெண்ணே!"
 
"From the moment of advent till the moment we go,
Why pretence Why false show, cunning woman?
Pretence make us ignore things that really matter, cunning woman
False hopes grow, Shattering real joys, dear woman!"
 
"What are human beings master of, cunning woman?
whether to give despair or disaster by finding devices
Whether to control fleeting affairs of our lives, cunning woman?
But not what is permanent & eternal: our soul, dear woman!"
 
"We are not so big, truly we are so small, cunning woman?
you learn a bit, yet you feel you know it all
your action show you are so small minded, cunning woman?
your ignorance show you are truly blinded, Dear woman!"
 
"Final frontier of human is mortal death, cunning woman?
We reach 'there., bursting this bubble life 'here'
What you achieve, by becoming masters of them, cunning woman?
Don't you know that death is awaiting, Dear woman!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
 
Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

"நெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள்"

1 week 2 days ago
"நெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள்"
 
"நெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள்
தஞ்சம் கொடுத்தேன் ஆறுதல் அளித்தேன்
வஞ்சனை இல்லாமல் அன்பை கொட்டினாள்
கொஞ்சம் மயங்கி சந்தோசம் கண்டேன்!"
 
"மஞ்சள் நிலாவில் குளிர் காய்ந்தோம்
மஞ்சத்தில் நெருங்கி அருகில் இருந்தோம்
அஞ்சா நெஞ்சத்தாள் எதோ உளறினாள்
நஞ்சு கலந்து காதல் வீசினாள்!"
 
"கொஞ்சி வஞ்சி இன்பத்தில் பூத்தாள்
வஞ்சனை இதழால் முத்தங்கள் தந்தாள்
நெஞ்சத்தை விஞ்சும் கதைகள் சொன்னாள்
வஞ்சிவீரி மஞ்ஞை வீராப்பு பேசினாள்!"
 
"நஞ்சு தந்த போதை மயக்கத்திலும்
காஞ்சி வீரனாய் அவளை தடுத்தேன்
செஞ்ச தெல்லாம் செய்தது போதும்
கொஞ்சம் தனியாய் விடு என்றேன்!"
 
"துஞ்சிய கண்கள் அகல விரிந்தன
பஞ்சாய் மிதந்து மறைந்து விடடாள்
வஞ்சியென நஞ்சமென வந்த கள்ளியை
எஞ்சிய நேரத்தில் கனவில் கூடுகிறேன்!"
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
 

சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..

1 week 2 days ago

சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..

 

திங்க ள்  வேலைக்கு லீவு வேணும்..

சாட்டேதும் சொன்னால் மனிசி நோண்டுவா..

அடிச்சது லக்கு…

சூரிய கிரகணம்

சனிதோசம்…உள்ளவை

கட்டாயம் பார்க்க  வேணும்..இது

செல்வகணபதி ..அய்யர்

கண்மூடி மூன்று நிமிசம் பார்த்தால்…

கண்ட தோசமும் ஓடிடும்..இது

அம்மன் கோயில் அய்யர்….

அடிசக்கை…ஆரும் இதை விடாதையுங்கோ

பாருங்கோ..பெரும்பேறு கிடைக்கும்

அய்யப்பன் அய்யர்..

 

சனியனை

சாட்டுச்  சா ட்டாக சொல்லி

சமாளிச்சு …லீவு எடுத்தாச்சு..

எனி பிளான் இரண்டு…

மச்சுமுடிய இரண்டு மணியாகும்

கிரகணம் மூன்று மணிக்கு…

காலை பத்துமணிவரை காவல் இருக்கோணுமே..

பிளான் மூன்றும் ரெடி…

நடைபயிற்சி பொய்சொல்லி..

தமிழ் கடையில்..

கொடுவாமீனும்…காரல்மீனும்

கீரையும் மாங்காயும் வாங்கிவந்தாச்சு…

முழுகிவிட்டு…

முழுச்சமையல்..நான்..

மனுசி வடக்கு சமையல் என்றால் இன்று

நான் தெற்கு சமையல்

அம்மணியும் பச்சைக்கொடி..காட்டியாச்சு.

 

மச்சும் தொடங்கியிட்டுது…

தோனிவர..கைதட்டி

மரியாதை செய்துவிட்டு

மனம் விட்டு

மச்சை  ரசித்தால்

நேரமோ வட்டுக்கிள்ளை போட்டுது..

கிரகணம் வரப் போகுது..

கிங்சும் வெண்டுட்டுது..

சந்தோசத்தில்  சமையல்

நாலு அடுப்பிலும்

நடக்குது..

 

கிரகணத்தை பார்க்க

பின்புற காணியில்..

பொடியன் கமராவுடன்

மனிசி போனுடன்..

நானும் இரண்டு கறுப்பு கண்ணடியுடன் ரெடி..

குழம்பு,காரல் தீயல்

கீரைக்கறி அடுப்பில் கொதித்தபடி..

பொடியன்

அப்பா வாங்கோ வாங்கோ..

கண்ணடி போட்டு

கிரகணம் காண

புல்லரித்த உடம்பு…நேரம் மறந்தது..

கைகூப்பி கண்மூடி

மனுசியையும் மூடவைத்து

கும்பிட்டவுடன்

என்னை மறந்தவுடன்..

 

வித்தியாசமான வாசனை

அடுப்படில் இருந்து

அடித்துப் பிடித்து

ஓடிப்போய் பார்த்தால்..

கீரையும் அடிப்பிடித்து

காரல் தீயலும் தண்ணியின்றி

என்னைப் பார்த்து சிரிக்குது..

அய்டியா ஆறுமுகம் எனக்கு..

அடுக்களை வேலயென்ன கொக்கா..

தீயலக்கு…புளியும்

கீரைக்கு பாலும் விட்டு..

சமையல் முடித்தாயிற்று..

 

கிரகணம் பார்த்த

கிரகங்கள் இரண்டும்

குசினிக்குள்  வர

எனக்கு..

கிரகமாற்றம் ஆரம்பிச்சிட்டுது

பொடியன்…மக்டொனால்ட்ஸ் போட்டான்..

தெற்குச் சமையலை

சாப்பிட்ட மனுசியின்

முகம்பார்க்க..அஞ்சி

நானும் ரிம்கோட்டனுக்கு ..

பறந்திட்டன்…

 

இனி

இந்த கிரகணப்பலன் வேலை செய்யும்..

சுப்பர் கிங்க்ஸ்  மச் பார்க்கு மட்டும்

தோனி தலைவா

என்னை நீயே காப்பாற்று..

 

(சொற்பிழை..பொருட்பிழை இருப்பின் மன்னிக்கவும்...இது எனது..இன்றைய நாள்..அல்வையன்..08 04 2024)

"கண்ணீரில் நனையும் பூக்கள்"

1 week 2 days ago

"கண்ணீரில் நனையும் பூக்கள்"


"கண்ணீரில் நனையும் பூக்கள் இவளோ 
ஊண் உறக்கம் மறந்த மங்கைதானோ 
அண்டத்தில் அழகாய் பிறந்த விதியோ 
கண்ட ஆண்களையும் நம்பிய கதியோ 
கொண்ட கோலம் உண்மையை மறைத்ததோ?" 


"உள்ளங்கள் இரண்டும் உண்மையில் இணைந்தால் 
உயிர்கள் கலந்து காதல் மலர்ந்தால் 
உலகம் என்றும் இன்பச் சோலையே!
உணர்ச்சியை மட்டும் கொண்ட நட்பு
உனக்கு ஈவது  விழிநீர் மட்டுமே!"

 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"கடவுள் கேட்கிறார்"

1 week 2 days ago
"கடவுள் கேட்கிறார்"
 
"பாலை ஊற்றி என்னை குளிப்பாட்டுகிறாய்
காலை மாலை எனக்கு படைக்கிறாய்
சாலை ஓரத்தில் என் மகன்
மாலை வரை இருக்க தவிக்கிறான் !"
 
"பட்டும் பகட்டும் எனக்கு எதற்கடா?
தட்டும் படையலும் எனக்கு எதற்கடா?
கொட்டும் பாலை அவன் குடிக்கட்டும்
சொட்டும் தேன் வயிற்றை நிரப்பட்டும்!"
 
"தடல் புடலாக என்னை பூசிக்கிறாய்
கடல் கடந்து யாத்திரை போகிறாய்
குடல் வற்றி அவன் சாகிறான்
உடல் சிதறி அவன் வாடுகிறான்!"
 
"எங்கும் என்னை தேடி அலையாதே
இங்கு கொட்டும் கறந்த பாலை
அங்கு வறியவன் வாயில் கொட்டு
அங்கு அவன் சிரிப்பில் நானே !"
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா?"

1 week 3 days ago

"மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா?"


"என்னை மறக்கத் தெரிந்த மனமே
உனக்கு நினைக்கத் தெரியாதா பெண்ணே? 
விண்ணில் மறைந்த வெண்ணிலாப் போல 
கண்ணில் படாமல் ஒழித்தது எனோ?"


"இரக்கம் அற்று பிரிந்து போனவளே 
உருக்கமாக உன்னைக் நான் கேட்கிறேன்? 
மயக்கும் நளினத்தால் கொள்ளை அடித்தவளே 
தயக்கம் இல்லையோ மற்றவன் கைப்பிடிக்க ?"  


"தேடி வந்தாய் தேனாய் கதைத்தாயே
தேவை முடிந்தது தள்ளி விட்டாயே?
தேவதையே ஒருதரம் திரும்பி பார்க்காயோ 
தேய்ந்து இவன் படும்பாட்டை  காணாயோ?"  
 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"தந்தை எனும் தாய்" [உண்மைக் கதை]

1 week 4 days ago

"தந்தை எனும் தாய்" [உண்மைக் கதை]


தாயுமானவர் பாடல்கள் எளிமையாக இருப்பதற்கு முக்கிய  காரணமாக அமைவது அவர் கையாளும் உவமைகளும், அதிலும் குறிப்பாக  தாய் சேய் உறவுநிலை அவரது பாடல்களில் பேரிடம் வகிப்பதும் ஆகும். உதாரணமாக, 


“அன்னை இலாச் சேய்போல் அலக்கண் உற்றேன் கண்ணார 
என் அகத்தில் தாய்போல இருக்கும் பராபரமே“ 

“எத்தன்மைக் குற்றம் இயற்றிடினும் தாய் பொறுக்கும் 
அத்தன்மை நின் அருளும் அன்றோ பராபரமே“  


மனக்கண்ணில் தாயின் இருப்பு தெரியினும் [தந்தையில் தாய் இருப்பினும்]  அன்றாடச் சிக்கல்கள் அவரைத் [பிள்ளைகளை] தாயற்ற குழந்தை போலத் துன்புற வைத்த சூழலை தவிர்க்க, குழந்தை செய்யும் குற்றம் எத்தன்மைத்தாயினும் பெற்றவள் பொறுத்துக் கொள்வாள். அவளைப் போலவே இறைவனும் [நானும்] அடியவர்க்கு [பிள்ளைக்கு] அவரது பிழை பொறுத்து வாழும் ஒரு சூழ்நிலைக்கு தள்ளப் பட்டேன் 08 / 06 / 2007 திகதி அன்று. ஆமாம் திடீரென மனைவிக்கு தோன்றிய தண்டு மூளைச் சவ்வுக் காய்ச்சல் [meningitis], பதினாறு மணித்தியாலத்துக்குள், நானோ, பிள்ளைகளோ எதிர்பாராதவிதமாக காலை ஐந்து மணிக்கு அவரின் உயிரை பறித்துவிட்டது. 


"ஆந்தை அலறவில்லை?- சுடர் ஒளி அணையவில்லை? 
எந்தை அவள்- தன் ஒளி அணைத்துவிட்டாள்!
சிந்தை ஓடவில்லை?- எம் மனம் ஆறவில்லை? 
எந்தை அவள்-கண்  மூடி  உறங்கிவிட்டாள்!!"


தாயற்ற குழந்தை போலத் என் குழந்தைகளை துன்புற வைத்துவிட்டான். இப்ப  நான் தந்தையும் தாயாக இரு வேறு நிலையில், ஆனால் ஒருவனாக செயல் பட வேண்டிய கட்டாயம் உணர்ந்தேன். 


“நீயே நான் என்று நினைப்பும் மறப்பும் அறத்
தாயே அனைய அருள் தந்தாய் பராபரமே“ 

 
ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்று எனும் அத்துவிதக் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ள பாடல் இது. அது போலத்தான் நானும் தந்தையாகவும் தாயாகவும் இனி கவனமாக வாழ்வை நகர்த்தவேண்டும் என்று தாயுமானவரின் இந்த வரி எனக்கு உறுதியையும் வலுவையும் கொடுத்ததை நான் மறுக்கவில்லை.
படித்துக்கொண்டு இருக்கும் இளம் அகவையில், தாயை இழப்பது மிகப்பெரிய மோசமான இக்கட்டான சூழ்நிலை என்றாலும், அவர் மிகவும் கடுமையாக குடும்பத்துக்காக, பிள்ளைகளுக்காக நல்ல பாடசாலை, நல்ல வாழ்விட சூழல், வருங்காலத்தில் திறமையான தொழில் வாய்ப்பு பெற நல்ல படிப்புகள் எவை, எந்த பல்கலைக்கழகம் முழுமையாக இவ்வற்றை எல்லாம் வழங்குகிறது என்றெல்லாம் ஏற்கனவே தேடி தேடி வைத்தவை எனக்கு ஆறுதல் அளித்தன. அவர் என்னுள் இருந்து இயக்குவது போல் இருந்தது. அர்த்தநாரீசுவரர் போல், தாயும் தந்தையாக வாழ்வு அன்றில் இருந்து ஆரம்பித்தது.
பெண் உருவை ஒரு பாகத்திலே அறியக்காட்டியும், தன்னுள் அதனை அடக்கி ஒளித்துத் தானாகத் தனித்தும் அவன் விளங்குகின்றான் என்று புறநானூறு: 


"பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;"


கூறுவது போலத்தான் நானும் தாய்மையை ஒரு நேரத்தில் வெளிக்காட்டியும், ஆனால், அதேநேரத்தில், அதை மறைத்து தந்தையாக  தனித்தும் இயங்க தொடங்கினேன்! ஆனால், எனோ தெரியாது, என் மனம் அவர்கள் தாயில்லா பிள்ளை என்று கொஞ்சம் அதிகப்படியாக வசதியை அவர்கள் எப்பவும் கவலைப்படக்கூடாது என்று கொடுத்துவிட்டேன் என்று இன்று எண்ணுகிறேன்! என்னுள் தாயும் இருந்து இயக்குகிறாள் என்பதை எப்படி மறந்தேனோ, நான் அறியேன் பராபரமே! 


"நீலமேனி வாலிழை பாகத்து 
ஒருவன் இருதாள் நிழற்கீழ்"


என்று ஐங்குறுநூறு- நீலத் திருமேனியும் தூய ஆபரணங்களும் கொண்ட அம்பிகையை ஒரு பாதியிலே கொண்ட சிவபெருமானுடைய இரண்டு திருவடி நிழலின் கீழே - அதாவது "தந்தை எனும் தாய்" யாக என் நிழலில் அவர்கள் இன்று என்பதை ஏன் நான் நினைக்கவில்லை? அது தான் எனக்கு புரியவில்லை??


என்றாலும் தாய் ஏற்கனவே வரிசைப்படுத்தி இருந்த வழிகாட்டி என்னுள் இருந்து இயங்க, அதே வழியில் அவர்கள் பல்கலைக்கழக பட்டங்கள் பெற்று இன்று நல்ல நிலைக்கு வாழ்வில் வந்து, திருமணமும் செய்து மகிழ்வாக இருக்கிறார்கள் . எப்படியாகினும் தாயுமானவர் அறிவுரை வழங்கியது போல:


“என்றும் அடைந்தோர்கட்கு இரங்கார் குறிப்பனைத்தும் 
கன்றை உதை காலி கதை காண் பராபரமே“ 


பசுவிற்குக் கன்றின் மேல் உள்ள தாய்ப்பாசத்தில் குறை ஏதும் இல்லை எனினும்; போதுமான காலம் கழிந்தபின், தன் கன்றின் நலன் நோக்கி, தானாக மேய்ந்து பழக ஏதுவாக அதை உதைத்துத் தள்ளுவது போல, ஒருவேளை கொஞ்சம் அவர்களுக்கு பொறுப்பு ஏற்படுத்தி இருந்தால் இன்னும் மேலாக அவர்களின் வாழ்வு அமைந்து இருக்கலாம்?


நம்மைப் பற்றி நமக்கும் மட்டுமே தெரியும் ஒரு ரகசியம் தான் ‘நான்'!  இனம்புரியா எண்ணங்களோடு ஒழிந்து கிடக்கும் ஆழ்மன ‘நான்' தான் அது!  இதன் வெளிப்பாடு நம்மையறியாமல் அப்பப்ப சூசகமாக பேச்சிலோ எழுத்திலோ உடல் மொழியிலோ  நடந்துக் கொண்டு தான் இருக்கும். அப்படி தந்தை என்ற 'நான்', 'தந்தை எனும் தாய்' என்பதை மறந்ததே இதற்கு காரணம். ஆனால் பேரப்பிள்ளைகள் பிறக்க, அவர்கள் இப்ப மெல்ல மெல்ல ஒவ்வொரு பொறுப்பாக தாங்களே உணர்ந்து கடமையாற்றுவது, கட்டாயம் தாயின் நிழல், அவர்களை வெளிப்படையாக நகர்த்துவதை மகிழ்வாக நான் காண்கிறேன்!


'தந்தை எனும் தாய்' ஆகிய நானும் இனி கவலைப்பட ஒன்றுமே இல்லை. எல்லாம் அவளின் - தாயின் - செயலே!!


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"எரிச்சலை ஊட்டுகிறது"

1 week 4 days ago

"எரிச்சலை ஊட்டுகிறது"


"எனக்கு மேல்- ஒரு சக்தி
     உண்டு- அதை நம்புகிறேன்
மணக்கும் வாசனையில்- ஒரு கவர்ச்சி
     உண்டு- அதை நம்புகிறேன்
அணங்கு மேல்- ஒரு மோகம் 
     உண்டு - அதை நம்புகிறேன்
பிணக்கும் பிரச்சனைக்கும் - ஒரு தீர்வு
     உண்டு- அதை நம்புகிறேன்"


"நந்தியை விலத்தி- ஒரு அருள் 
     காட்டியவனை- எனக்குப் புரியவில்லை
மந்தியின் துணைக்காக- ஒரு வாலியை
     வெட்டியவனை- எனக்குப் புரியவில்லை 
அந்தியில் வாடும்- ஒரு மலரை
     மாட்டியவளை- எனக்குப் புரியவில்லை
இந்திரலோககத்தில் இருந்து- ஒரு கலகம்
     மூட்டியவனை- எனக்குப் புரியவில்லை"


"வருணத்தை காப்பாற்ற- ஒரு பக்தனை
     நீ அழைக்காதது- எரிச்சலை ஊட்டுகிறது
கருணைக்கு அகலிகை- ஒரு சீதைக்கு
     நீ தீக்குளிப்பு- எரிச்சலை ஊட்டுகிறது
ஒருவனுக்கு ஒருத்தி- பஞ்சபாண்டவருக்கும்
    நீ ஒருத்தி- எரிச்சலை ஊட்டுகிறது
எருமையில் ஏறி- ஒரு சாவித்திரியை 
   நீ கலக்கியது- எரிச்சலை ஊட்டுகிறது"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"மூன்று அந்தாதிக் கவிதைகள்" 

1 week 4 days ago

"மூன்று அந்தாதிக் கவிதைகள்" 


"விமானம்" 


"விமானம் பறந்தது இராவணன் வீற்றிருக்க 
வீற்றிருந்த கோலம் வீரத்தை செப்பியது  
செப்பிய வார்த்தைகள் உண்மை பேசின  
பேசிய திசையில் பறந்தது விமானம்!"

..............................................

"அறுவடை"


"அறுவடை கொடுத்த விளைச்சல் பணமாக 
பணம் சேர்ந்து திருமணம் கைகூட 
கைகூடிய நன்னாள் கொட்டிய மகிழ்ச்சியில் 
மகிழ்ந்த வாழ்வில் குழந்தையே அறுவடை!"

..............................................     

"அன்பு"


"அன்பு கொண்டு மழலைகள் ஒன்றாய் 
ஒன்று கூடி இன்பம் பொழிய 
பொழிந்த மகிழ்வு உள்ளத்தை நிரப்புதே!


நிரப்பிய மதுவை கிண்ணத்தில் ஏந்தி 
ஏந்திய காதலை அவளில் கொட்டி  
கொட்டிய ஆசையில் தெரிந்ததே அன்பு!"    


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

"மூன்று அந்தாதிக் கவிதைகள்" 

1 week 4 days ago

"மூன்று அந்தாதிக் கவிதைகள்" 

"விமானம்" 


"விமானம் பறந்தது இராவணன் வீற்றிருக்க 
வீற்றிருந்த கோலம் வீரத்தை செப்பியது  
செப்பிய வார்த்தைகள் உண்மை பேசின  
பேசிய திசையில் பறந்தது விமானம்!"

..............................................

"அறுவடை"


"அறுவடை கொடுத்த விளைச்சல் பணமாக 
பணம் சேர்ந்து திருமணம் கைகூட 
கைகூடிய நன்னாள் கொட்டிய மகிழ்ச்சியில் 
மகிழ்ந்த வாழ்வில் குழந்தையே அறுவடை!"

..............................................     

"அன்பு"


"அன்பு கொண்டு மழலைகள் ஒன்றாய் 
ஒன்று கூடி இன்பம் பொழிய 
பொழிந்த மகிழ்வு உள்ளத்தை நிரப்புதே!


நிரப்பிய மதுவை கிண்ணத்தில் ஏந்தி 
ஏந்திய காதலை அவளில் கொட்டி  
கொட்டிய ஆசையில் தெரிந்ததே அன்பு!"    


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

"காந்தி மடியில் சரணம் அடைந்தேன் ....."

1 week 4 days ago

"காந்தி மடியில் சரணம் அடைந்தேன் ....."


"உறங்கிக் கிடந்த மனது ஒன்று
உறக்கம் இன்றி தவிப்பது எனோ?
உறவு தந்து உள்ளம் கவர்ந்து
உலகம் துறந்து போனது எனோ?"


"கண்கள் மூடி கனவு கண்டால்
கலங்கிய ஒளியில் மிதப்பது எனோ?
கருத்த வெள்ளை உருவம் தோன்றி
கண்ணீர் துடைத்து மறைவது எனோ?"


"காற்றில் விண்ணில் குரல் கேட்க
காத்திருந்து விழித்திருந்து ஏங்குவது எனோ?
காலம் போனாலும் கோலம் மாறினாலும்
காமாட்சி நினைவு வருத்துவது எனோ?"


"காந்தி மடியில் சரணம் அடைந்தேன்
காந்தமாய் என்னை இழுப்பது எனோ?
காமம் துறந்த காதல் அவன்
காதில் கீதை ஓதியது எனோ?"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

Checked
Thu, 04/18/2024 - 14:33
கவிதைக் களம் Latest Topics
Subscribe to கவிதைக் களம் feed
texte-feed
https://www.yarl.com/forum3/forum/214-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/