சமூகவலை உலகம்

“ கப்பு முக்கியம் “ - T. கோபிசங்கர்

2 months ago

“ கப்பு முக்கியம் “ 

“வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருக்கும் தாழமுக்கம் ரெண்டு நாளில் வலுப்பெற்று கொட்டும் மழையோடு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்” எண்டு வானிலை அறிக்கையை radio வில சொல்லிக் கொண்டிருந்திச்சினம். இதைக் கேட்ட மனிசி “சூறாவளி வந்தாலும் வரும் கொஞ்ச நாளைக்கு வள்ளம் போகாது இண்டைக்காவது மீன் வாங்கித்தரலாம் தானே“ எண்டு கேக்க, சரியெண்டு வெளிக்கிட்டன். 

எங்க மீன் வாங்கினாலும் பாசையூர் மீன் மாதிரி ருசி இருக்காது. அதோட சந்தைக்குப் போய் விடுப்புப் பாத்த படி, வள்ளம் வாறதை, மீன் இறக்கிறதை , அதைக் கூறிறதை எல்லாம் ரசிச்ச படி, wholesale விலை வாசியை தெரிஞ்சு கொண்டு அப்பிடியே சந்தையில சில்லறை வியாபாரத்தில மீனை வாங்கி வெட்டிக்கொண்டும் வரலாம். மாரிகாலத்தில பிடிக்கிற மீன் ருசி கூட , அதிலேம் மழைவெள்ளம் கடலில கலக்கிற நேரம் வாற குதிப்பு மீன் தனி taste. 

கைபிடீல மூண்டு shopping bag உள்ள வைச்சு கொழுவின படி இருந்த plastic கூடையோட சைக்கிளை உழக்கினன். 

மெல்லப் போய் அந்தோனியாரைத் தாண்டி கடற்கரைப் பக்கம் திரும்பின உடனேயே ஒரு காலநிலை மாற்றம் வந்த மாதிரி இருந்திச்சுது. கடற்கரை ரோட்டில திரும்பக் கடல் எங்க முடியுது மேகம் எங்க தொடங்குது எண்டு விளிம்பு தெரியாம இருந்த கடலுக்குள்ள மழை பெய்யிறது மட்டும் தெரிஞ்சுது.

மழை பெய்யிறதை ரசிக்கிற மாதிரி மழை இந்தா பெய்யப் போறன் எண்டு மேகம் மூடிக்கொண்டு வரேக்கேம் ர(ரு)சிக்கலாம் . காலமை கருமையாகி காகம் பறக்கிறது தெரியாமல் கொக்கு மட்டும் வெள்ளை வெளேர் எண்டு தெரியிற மேகம். இன்னும் கொஞ்சம் உழக்க அடிக்கிற குளிரில காது மட்டும் சூடாக, முகத்தில படுற குளிர் காத்து காதில படேக்க சுள்ளெண்டு குத்திற இன்பமான வேதனை, முயற்சி செய்தும் நிறுத்தேலாமல் கிடுகிடுக்கிற பல்லு , இழுத்த மூச்சு சுவாசப்பையோட நிக்க அடிவயித்தால காலுக்குள்ள இறங்கி காலை மட்டும் நடுங்கப் பண்ணிற குளிர், ஒடிற எங்களை விட்டிக் கலைச்சுக்கொண்டு சடசடவெண்டு சத்தத்தோட கலைச்சுக்கொண்டு வாற மழை எண்டு ரசிச்சுக்கொண்டு போக , அதை ரசிக்கவிடாம ஒண்டுரெண்டு மழைத்துளி தலையில விழ இன்னும் கொஞ்சம் இறுக்கி உழக்கினன். 

திரும்பிப் பாக்க கடலுக்க மட்டும் பெஞ்ச கன மழை அலையோட கரைப்பக்கம் வாறது தெரிஞ்சுது. காத்தோட மழை பெய்யிறதையும் அந்த இருட்டுக்குள்ள இருந்து வாற அலையில வள்ளங்கள் எழும்பி விழுந்து வாறதைப்பாக்க, “மெழுகுவர்த்தி ஏத்தி , மண்டியிட்டு “ மாதாவே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மகனை நீ தான் இந்தப் புயலில இருந்து காப்பாற்ற வேண்டும் என்று தாய் மன்றாடினாள் “ எண்டு ஐஞ்சாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில வாசிச்ச ஞாபகம் வந்திச்சுது. 

கடற்கரை ரோட்டால அப்பிடியே போக , MGR சிலைக்கு போன கிழமை நடந்த விழாவுக்குப் போட்ட மாலை காத்துக்குப் பறந்து கொண்டிருந்திச்சுது. முன்னால இருக்கிற தேத்தண்ணிக்கடையில “ தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான் “ எண்டு situationக்கு ஏத்ததாய் TMS பாடினார். சந்தையடியில மழைக்குளிர் எண்டால் என்ன எண்டு கேக்கிற சமூகம் , மற்றச் சனத்தின்டை சாப்பாட்டுக்காய் ஓடிஓடி வேலை செய்து கொண்டிருந்தது.

இந்த மழைக்கேம் நாலு பேர் காத்துப் போன பந்தைப் போட்டு அடிச்சுக்கொண்டு இருந்தாங்கள். பேருக்கு மட்டும் அது கடற்கரை ஆனாலும் முள்ளோ கல்லோ குத்தாம மண்ணில நடக்கவும் ஏலாது , முக்கிக் கடல்ல குளிக்கவும் ஏலாது . ஆனாலும் அலைக்கு கூட அரிக்காத கடற்கரை கல்லெல்லாம் கால் மிதிப்பில கரையிற அளவுக்கு அங்க விளயாட்டு நடக்கும் . இருட்டுக்க கடல்ல இருக்கிற மீனே தெரியிறவன் கண்ணுக்கு பந்து எப்பவும் தெரியும் எண்டதால விளையாட்டுக்கு நேரம் காலம் கிடையாது. 

என்னதான் கிரிக்கட் நல்ல விளையாட்டா இருந்தாலும் அது நெச்ச உடன எல்லா இடத்திலேம் விளயாடேலாது. அதோட Cricketஐப் பற்றி அதை விளயாடினவங்கள் மட்டும் தான் கதைப்பாங்கள். ஆனால் football அப்பிடியில்லை விளையாடின ஆக்களிலும் பாக்க விளையாட்டைப் பாக்கிற ஆக்கள் கதைக்கிறது கூட . யாழ்ப்பாணத்தில கூடுதலா விளையாடிறதும் விரும்பிப் பாக்கிறதும் football தான். விளையாட்டுத் தொடங்க முதல் இருந்து முடிஞ்சு வீட்டை போனாப்பிறகு கூட பரபரப்பா பாக்கிறதும் கதைக்கிறதும் football தான். 

இந்த ஊரில வீட்டில என்ன தான் வசதி் இல்லாட்டியும் ஒவ்வொரு வீட்டிலேம் ஒரு Maradona, Baggio, Ronaldo கனவோட ஒருத்தனாவது இருப்பாங்கள் . சாப்பாடே அவங்களுக்கு பந்தடிக்கிறது தான். நாவாந்துறையில இருந்து பருத்தித்துறை வரை இது தான் நிலமை . அவை இல்லாமல் யாழ்ப்பாணத்தில football இல்லை. 

செல்லடி, துவக்குச்சூடு, மழை எண்டும் பாக்காம ஒவ்வொரு நாளும் தொழிலுக்குப் போறவங்கள் ஆனாலும் தங்கடை ஊர் club விளையாடிற match எண்டா தொழிலுக்கும் போகாம வந்திடுவாங்கள். வந்தவனும் சும்மா நிக்கமாட்டாங்கள். உள்ள போட்டிருக்கிற shorts தெரிய சாரத்தை மடிச்சுக்கட்டீட்டு பந்து போற இடமெல்லாம் தானும் ஓடித்திரிவாங்கள் . coach க்கும் மேலால “ நல்ல தமிழில”சத்தம் போடுவாங்கள். ஆனாலும் தப்பித்தவறி தோத்திட்டால் referee, எதிரணி , தங்கடை அணி எண்டு எல்லாருக்கும் விழும் , பேச்சு மட்டுமில்லை சிலநேரம் அடியும் தான். இப்பிடியான match முடிஞ்ச உடனயே பாஞ்சு வீட்டை ஓடிப் போறது referee மாரும் tournament வைச்சவையும் தான். சிலவேளை பரிசளிப்பு விழா கூட நடக்குறேல்லை, பேப்பரில பாத்துத்தான் முடிவு தெரிய வரும். இயக்கம் இருக்கேக்க சண்டைபிடிச்சா விளையாடத் தடை எண்டு தொடங்கினாப்பிறகு தான் கொஞ்சம் குறைஞ்சுது.

இப்பிடி இருக்கேக்க தான் ஊரில போன கிழமை சமாசத்தின்டை வருசக் கூட்டம் வாசிகசாலையிலை நடந்தது. வரவு செலவுக் கணக்கு முடிய, இந்த முறை சேத்த காசில என்ன செயவம் எண்டு கதை்தொடங்கிச்சுது. 

“ ஒரு வருசம் தடைக்குப் பிறகு போனகிழமை தான் விளையாட விட்டவங்கள் இவங்களை , பெரிய ரோயும் சின்ன ரோயும் என்ன விளயாட்டு , உவன் கெவின் அடிச்ச அடி விண் கூவிச்சுது எண்டாலும் கடைசீல ஒரு goal அடிச்சு அவங்கள் வெண்டிட்டாங்கள், இவங்ககளுக்கு நல்ல சப்பாத்தும் சாப்பாடும் தேவை ,நாங்கள் தான் இந்த முறை சமசத்தால வாங்கிக் குடுக்கோணும்” எண்டு மதி சொன்னதுக்கு கொஞ்சப் பேர் ஒமெண்ட, கனக்கப் பேர் புறுபுறுக்க சமாசத்தின்டை தலைவர் கையைத்தூக்கினார் . அந்தச் சலசலப்பு அடங்க முதல், “ ரெண்டு வருசமா ஊரில நிறையப் பிரச்சினை நான் எத்தினை தரம் சொன்னான் உந்தக் கோயிலை திருத்துங்கோ எண்டு” ஒரு ஆச்சி சொல்ல இளசுகள் கூக்காட்டத் தொடங்கிச்சுதுகள். 

“ கருவாடு காய வைக்க , வலை தைக்க இடம் வேணும்” எண்டு மகளிர் வேண்டுகோளும் வர முடிவெடுக்கேலாமல் கடைசியாய் ஓரமா இருந்த மாஸ்டரைக் கேட்டச்சினம். மாஸ்டர் ஊரில மரியாதைக்கு உரியவர் பழைய football விளையாட்டுக்காரன். “ பிள்ளைகளுக்குப் பிராக்கில்லை, விட்டால் கெட்டுப் போடுவங்கள் இப்பத்தை நிலமையில விளையாட்டுக்குச் செலவு செய்யிறது நல்லம்” எண்டார் மாஸ்டர் . 

விளையாடிறதில்லை விளையாடி வெண்டாத்தான் ஊருக்கு மரியாதை எண்டு முடிவோட, இந்த மூண்டு மாதத்துக்கு சமாகத்துக்கும் , ஐக்கிய விளையாட்டுக் கழகத்துக்கு ஒண்டு காணாது ரெண்டு மீனாத் தாங்கோ , கழகத்துக்கு காசைக்குடுப்பம் ஆனா “ கப்பு “ முக்கியம் எண்ட condition ஓட meeting முடிஞ்சுது. 

வலையை பாறையில காய வைக்க , ரோட்டோரமா மீனைக் காயப்போட , மாதா கோயில் கூரைக்கு ஆரோ பழைய தகரம் ரெண்டைக் கொண்டந்து போட சம்மதிக்க, சமரசம் வந்திச்சுது கூட்டத்தில. 

வள்ளம் கிட்டவர முதலே இஞ்சின் சத்தத்திலையே உசாரான மதி ,“இந்தா வருது “ எண்டு சொல்லி கூற ஆய்த்தமானான். பாத்துக்கொண்டிருந்த வியாபாரிமார் கிட்ட வந்திச்சினம். வள்ளத்தை கரைக்கு கொண்டு வந்து நிப்பாட்டீட்டு வாயை மட்டும் வெட்டின பிளாஸ்டிக் bucket க்கு கட்டி இருந்த நைலோன் நூலைப் பிடிச்சு இறக்கிக் கொண்டு வந்திச்சினம் வள்ளக்காரர்.

கொண்டு வந்த பெட்டியோட கவிட்டுக் கொட்டின கும்பலில ரெண்டு மீன் சமாசத்துக்கும் ஒண்டு கூறிற ஆளுக்கும் எண்டு எடுத்து வைச்சிட்டு கூறத்தொடங்கினான் மதி. குவிச்ச மீன் கும்பலை பரவி விட , கண்ணால நிறை பாத்து , கலந்திருக்கிற மீன் பாத்து , அடிப்படை விலை பாத்து கையில இருக்கிற காசைப்பாத்து வியாபாரிமார் விலை கேட்டு காசைக் குடுத்துக் கணக்கை முடிச்சிட்டு சைக்கிளில இருந்த பெட்டீல கொட்டீட்டு விக்கிறதுக்கு வெளிக்கிட அடுத்த கூறல் தொடங்கிச்சுது. 

இதைப் பாத்த படி, தாண்டிப் போய் சில்லறை வியாபாரீட்டை என்ன மீன் வாங்கிறது எண்டு குழம்பி கடைசீல “சீலையை வித்தாவது சீலா வாங்கோணும்” எண்டு முந்தி ஆச்சி சொன்ன ஞாபகத்தில, சீலாவும், விளையும் வாங்கி, அதோட கூனிறால் கூறும் , நூறு ரூவாய்க்கு காரலும் பொரிக்க எண்டு வாங்கிக் கொண்டு வீட்டை போக மனிசி மண் சட்டியை கழுவி அடுப்பை மூட்டீட்டு பாத்துக் கொண்டிருந்திச்சுது. 

அம்மீல கூட்டரைச்சு சீலாத் துண்டைப் போட்டு வைச்ச மீன் குழம்பும், றால் வறையும், விளைமீன் பொரியலும் சோத்தோட மழைக் குளிருக்க சாப்பிட, அடுத்த நாளும் பாசையூருக்கு சைக்கிள் தன்டபாட்டை போகும். 

Dr. T. கோபிசங்கர்

யாழப்பாணம்.

அறம் வெல்லும்..?

2 months 2 weeks ago
அறம் வெல்லும்..?
 
'BigBOSS' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் விக்ரமன் அடிக்கடி உச்சரித்த ‘அறம் வெல்லும்’ என்ற வார்த்தைகள் மக்களிடத்தில் இப்பொழுது அதிகம் பரீட்சயமான வார்த்தைகளாகியுள்ளன. ஆனால், போட்டியின் முடிவு ரசிகர்கள் பலருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
உண்மையில் 'அறம்' தோற்பதில்லை. அது தோற்கடிக்கப்படுகிறது என்று மக்களுக்கு புரியவைப்பதற்கே ஒரு ‘விடுப்பு’ நிகழ்ச்சி தேவைப்படுகிறது. இது தான் இன்றைய நிதர்சனம். புதிய ஒழுங்கு.
'அறம்' தோற்றல் என்பது புது விடயம் அல்ல. இது அரசியல், வணிகம், சட்டம், சமூகம், ஊடகம் என எல்லா மட்டங்களுக்கும் பொருந்தும். அடிப்படியில் அறத்தைத் தோற்கடிக்கும் தந்திரம் ஆதிக்க சக்திகளின் மூலோபாயம் என்றாலும், அதனை நிறைவேற்றும் கருவிகளாக மக்களே (சமூகமே) விளங்குகின்றனர்.
'BigBOSS' இல் விக்ரமன் தோற்றதால் 'அறம்' தோற்றதா? அல்லது தோற்கடிக்கப்பட்டதா..? என்று விவாதிப்பதற்கான பதிவு இல்லை இது. அல்லது விக்கிரமன் அறத்தின் காவலனா? இல்லையா ? என்று பகுப்பாய்வதும் இப்பதிவின் நோக்கமல்ல.
ஆனால், ‘அறம்’ மக்கள் பலத்தால் தோற்கடிக்கப்படுகிறது என்பதே சமகால பொது விதி. இந்நிலையில், ‘அறம்’ பற்றிய சொல்லாடலின் குறியீட்டு அடையாளமாக ‘விக்கிரமன்’ பெயர் புழக்கத்தில் உள்ளதால், சமூகப் பிறழ்வுகள் குறித்து மக்கள் மனங்களில் ஒரு சிந்தனைத் தூண்டலைச் செய்வதற்கான தருணமாக இது அமையலாம் என்ற ஒரு புள்ளியான நம்பிக்கையின் வெளிப்பாடே இப்பதிவு.
கணிசமானவர்கள், BigBOSS என்ற கள்ளுக்கொட்டிலுக்குள் கூடியிருந்து கள்ளடிச்ச போதையில், 'ஊடக அறம்' எது? என்று வகுப்பெடுத்துக்கொண்டு இருப்பீர்கள். ஆகவே, நானும் கள்ளுக்கொட்டிலுக்கு வெளியில் நின்று கள்ளடிச்சுப்போட்டு வந்திருக்கிறன். போதை உள்ளவர்களோடு போதையில் தானே உரையாடவேண்டும்.
அறத்தைக் காக்கும் கடமையும், பொறுப்பும் கொண்டு செயற்படவேண்டிய வெகுஜன ஊடகங்கள் (Mass Media), மக்களை எப்பொழுதும் ஒரு போதை மயக்கத்தில் வைத்துக்கொள்ளும் வித்தையில் கைதேர்ந்தவர்களாக உள்ளன. இவ்வித்தையில் தமிழக ஊடகங்களைப் பொறுத்தமட்டில் நான் முந்தி.. நீ முந்தி.. என்று ஒரு பிரகடனப்படுத்தப்படாத ஊடகப் போர் நடை பெற்றுவருகிறது. அது எப்படியோ போகட்டும். ஆனால், “…அதி உச்சமான ரசனை மிக்கவர்கள் ஈழத்தமிழர்கள், எச்சங்களுக்கு எல்லாம் கைதட்டமாட்டார்கள்..” என்ற ஒரு காலத்து நிலை மாற்றம் கண்டு, இன்று எச்சங்களை மட்டுமே தலையில் தூக்கிக் கொண்டாடும் இனமாக ஈழத்தமிழினமும் மாறியிருக்கிறது.
எனது கணிப்புச் சரி என்றால், அடுத்த நிகழ்ச்சிக்கு (Season க்கு) கனடாவில் இருந்தும் ஒரு போட்டியாளர் உள்வாங்கப்படலாம். நாமும் Facebook ஐக் கதறவிட்டு வாக்கு வேட்டையில் இறங்கக்கூடும். அதன் பின்னர் Pearson விமான நிலையத்தில் மாலை, பொன்னாடை, தாரை-தப்பட்டைகளோடு அப்போட்டியாளரை விழா எடுத்து வரவேற்போம்.
கழுதையாக இருந்தாலும், தமிழகத் தொலைக்காட்சியின் வாசம் பட்டால் குதிரையாகிவிடும் என்ற நம்மவர்களின் ‘அக்கரை’ மோகம், நம்மத்தியில் உள்ள திறமையாளர்களை தரக்குறைவாக இழிவு செய்யும் நிலைக்குத் தள்ளியுள்ளது. எனினும், திறமையாளர்களுக்கு பெரிய தளங்களில் அங்கீகாரம் கிடைப்பதை இப்பதிவு குறை கூறவில்லை. ஆனால், தமிழ்நாட்டு மண்ணில் அங்கீகரிக்கப்பட்டாலே, நாம் நம்மவர்களின் திறமைகளை அங்கீகரிப்போம் என்ற நிலையைத்தான் குறைகூறக் கடமைப்பட்டுள்ளோம்.
இந்நிலையில், கேளிக்கை விநோதங்களின் மைய்யமாக, மக்களை வசியம் செய்யும் பெருச்சாளிகளாக, ஊடகங்கள் பெருவளர்ச்சி காண்பதில் மக்களே பங்காளிகளாக விளங்குகின்றனர் என்பதை மக்கள் உணர்வதில்லை. எனவே, விடுப்பு, விறுவிறுப்பு, விசித்திரம் என்று நாடுகிற மக்கள் கூட்டத்துக்கு தேவைப்படும் தீனியை அள்ளிக் கொடுக்கும் ஊட்டிகளாக, இவ்வூடகங்கள் விஸ்வரூபம் பெற்றுள்ளன. மாறாக சமூகத்துக்கு உண்மையைச் சொல்கிற, விழிப்புணர்வை ஊட்டுகிற ஊடகங்களையும் / ஊடகர்களையும் புறக்கணிக்கும் பழக்கத்தையும் இது போன்ற கேளிக்கை மைய்யங்களே உருவாக்கி வைத்துள்ளன.
ஆனால், சமூகத்தில் மாற்றங்களை உருவாக்க விரும்பி ஊடகக் கற்கையை பயின்றும், பயிற்சியைப் பெற்றும், அதற்குரிய மதிப்பும் மரியாதையும், வெகுமதியும் கிடைக்காமல், அரச - தனியார் நிறுவனங்களில் கிடைத்த தொழிலைச்செய்கிற வழக்கமும் பழக்கமாகிவிட்டது.
ஒரு நுகர்வோனின் பலவீனமே, வியாபாரியின் பெரும்பலம். இந்த சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே சந்தைப்படுத்தலின் மூலோபாயம் (Marketing Strategy) வகுக்கப்படுகிறது. அதனை தமிழகத்து தொலைக்காட்சிகள் செவ்வனே செய்து வருகின்றன. ஆனால், பார்வையாளர்களும், பங்காளிகளும் இங்கு மக்களே என்பதே அடிப்படை. தாம் நிர்ணயம் செய்கிற இலக்கை, தமக்கு சேதாரம் இல்லாமல், மக்கள் எனும் கருவிக்கொண்டு இயக்குபவனே இங்கு ஆட்ட நாயகன். இது தெரியாமல் தன் பணத்தை, நேரத்தை, வாழ்வை விரயம் செய்கிறவனே ரசிகன் என்ற பங்காளி.
உண்மையில், இங்கே முற்றுமுழுதாகப் பாதிக்கபடுகிற (Vulnerable) தரப்பு, பங்காளியாகவுள்ள பொதுமகனே. ஆனால், அதனை அவன் உணர்வதில்லை. காரணம், ஒரு சாமானியப் பொதுமகனுக்கு பொழுதுபோக்கே முக்கியம். அவனுடைய அன்றாடத் தேவைகளின் பட்டியல் என்பது கேளிக்கை, வேடிக்கை, விடுப்பு என்ற ஆதாயங்களைத் தேடியே அலைகிறது. இதற்கு படித்தவர் /பாமரர் என்ற வேறுபாடு கிடையாது.
எனவே, இவ்வாறான மனோநிலையில் மக்களை வைத்துக்கொண்டாலே போதும், வணிக மூலோபாயமும், அரசியல் மூலோபாயமும் கட்டுக்குள் வந்துவிடும். இது போன்ற பிறழ்வுகள் தமிழகம்/ இந்தியாவில் நெடுங்காலப் பழக்கம் என்றாலும், அண்மைக்காலமாக நம்மவர்கள் மத்தியில் புகுத்தப்பட்டுள்ள சினிமா/ சின்னத்திரை / விடுப்பு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளின் திணிப்பும், அவை நம் சமூகத்தின் மீது செலுத்தும் தாக்கத்தின் அளவும், ஒரு பெரும் சமூகக் கட்டுமானச் சீரழிவையே ஏற்படுத்திவருகின்றன.
இன்று நம்மவர்கள் மத்தியில் ஊடகம் தொடர்பான புரிதலும், அது சார்ந்த செயல்களும் மலினப்பட்டுவருகின்றன. அதன் அடுத்த பரிணாமமாகவே சமகால சமூக ஊடகங்களின் பெருக்கமும், அவை தாங்கி வருகின்ற விடுப்புகளும் மக்களைக் கவர்ந்து வருகின்றன. அவற்றின் அடிப்படை என்பது, மக்களை வசியம் செய்யும் நோக்கமும். அதனூடாகப் பணம் ஈட்டும் வெறியும் கொண்ட செயல்களாக அமைந்துள்ளன. (ஒரு சில விதிவிலக்குகள் உண்டு)
சமூக ஒன்று கூடல்களே இவ்வூடகங்களின் அதிகபட்ச செய்தி மைய்யம் (coverage). கனடாவில் 4 லட்சம் பேர் இருப்பதாக மார்தட்டுகிற நம்மவர் நிகழ்வுகளின் பதிவுகளில் 40 பிரபல தம்பதிகளும்.. 40 வணிகர்களும்... 40 தமிழ் பெண்பிள்ளைகளும் மட்டுமே திரும்பத்திரும்ப 360 கோணத்தில் பதியப்படுகின்றனர் (படம் எடுக்கப்படுகின்றனர்).
உதாரணமாக கனடாவிலும் பெருகியுள்ள சமூக ஊடகங்களில் கணிசமானவை சமூகப்பிரபலங்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நேரலை செய்வதிலும், ஒளிப்படம் எடுப்பதிலும், செய்தியாக்குவதிலும் மும்முரமாக இயங்கி வருகின்றன. அவர்களுக்குள் ஒரு நீயா? நானா? போட்டியும் நடைபெற்று வருகிறது. அத்தோடு கலியாணம், செத்தவீடு என்று முன்பந்தியில் அமர்ந்து நேரலை செய்யும் அளவுக்கு ஊடகங்கள் மலினப்பட்டுள்ளன.
ஆனால், இவ்வாறான ஊடகப் பிறழ்வுகள் தொடர்பிலோ.. ஊடக அறம் பிழைத்ததாகவோ.. யாரும் கவலையோ.. கரிசனையோ ..கொள்ளவில்லை. எனவே, இதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.. அதனை நாம் கொடுக்கிறோம் என்று குறித்த ஊடகங்களும்.. நியாயம் சொல்ல வசதியாகிவிட்டது.
மறுபுறத்தில் தமிழர்களுக்கு உரிமையும், இனப்படுகொலைக்கு நீதியும் வேண்டி நின்ற அமைப்புக்கள், GTA நகரங்களை குத்தகை எடுத்து விழா நடத்துகின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அழைக்கப்படும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கையைக் கொண்டு தமது பலத்தை குறித்த அமைப்புகள் பறைசாற்றுகின்றன.
தமிழ் இருக்கைக்காக 3 மில்லையன் டொலர்களை திரட்டும் திறன்கொண்ட சமூகத்தால், போரால் பாதிக்கப்பட்ட சில ஆயிரம் பேருக்கு தீனிபோட வழிபிறக்கவில்லை. திருவிழாவும், தெருவிழாவும் செய்து ஒரு வணிகமயப்பட்ட கட்டமைப்புக்களாக உருமாறியுள்ள அமைப்புக்களின் அறப்பிறழ்வுகள் குறித்து யாருக்கும் கவலை இல்லை.
காரணம், நீங்கள் கண்ணைமூடிக்கொண்டு கேள்வி கேட்காமல் இருப்பதற்கான மேடைகள் வழங்கப்படுவதோடு, உங்கள் கவனம் அவர்கள் மீது திரும்பாமல் வேடிக்கையும் காண்பிக்கப்படுகிறது. முன்வரிசையில் அமர்ந்து படம் எடுக்க கிடைத்த வாய்ப்புக்காக, சம்பந்தப்பட்ட தரப்புக்களின் விளம்பர முகவர்களாக சமூக ஊடகர்கள் தமது ஒளிப்படக்கருவிகளை காணிக்கையாக்கிவிட்டனர்.
ஆக, நம்மைச் சுற்றி எத்தனை அறப்பிறழ்வுகள் உண்டு?. அத்தனை அறப்பிறழ்வுகளின் பின்னால் பங்காளிகளாக யார் உண்டு.? என்ற கேள்விகளை நம் சமூகம் சிந்திக்க வேண்டும். மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தைகள் போல, சுயம் இழந்த சமூகமாக நாம் மாறிவருவது குறித்து நம்மவர்கள் வாய் திறப்பதில்லை. அப்படிக் குரல் கொடுப்போருக்குப் பக்க பலமாகவும் நிற்பதில்லை.
ஆக, இத்தனை அறப்பிறழ்வுகளையும் கண்டுகொள்ளாத சமூகம், கூத்தாடிகள் கூடாரத்தில் அநீதி நடப்பதாக முணுமுணுப்பது வேடிக்கையானது.
எனவே, BigBoss விடயத்தில் தோற்றது விக்ரமன் என்றாலும், வென்றது விஜய் தொலைக்காட்சியே. இனிமேல், தமது நிகழ்ச்சிகளில், செயல்களில், எவ்வித அறத்தையும் பேணவேண்டிய அவசியம் இல்லை என்பதை, மக்களே சொன்னார்கள் அல்லது சொன்னதாகக் காட்டினார்கள் என்ற நியாயம் கற்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் இனி அனைத்து ஊடகங்கள் மத்தியில் வீரியம் பெறும். சமூகமும் அதனை ஏற்றுக்கொண்டு பயணிக்கும். சமூகம் வெறும் குப்பைகளைக் கொட்டும் குப்பை மேடு என்பதை ஊடகங்கள் உறுதியாகப் புரிந்துகொள்ளும். ஆனால், வணிகமும், வணிகனும் வெல்வர்.
எனவே, அறம் தோற்பதில்லை... தோற்கடிக்கப்படுகிறது.. கண்ணை மூடிக்கொண்டிருக்கும் சமூகத்தால்...
(இப்பதிவை இறுதிவரை பொறுமையாகப் படித்தோருக்கு நன்றி🙏. ஏனையோர் அடுத்த விடுப்பைத் தேடிக்கொண்டிருக்கக்கூடும்..🥲)
 

பிரி(யா)விடை -T. கோபிசங்கர்

2 months 2 weeks ago

பிரி(யா)விடை 

9 ஜூலை 1995

காலமை ஆசுபத்திரீ;

காலமை கணேசரட்ணம் சேர் ward round இல படிப்பிக்கேக்க patient ஐ விபரங்கள் சரியாக் கேட்டு வைக்கேல்லை எண்டு senior group இல எல்லாரையும் wardக்கு வெளீல கலைச்சு விட்டிட்டார். ஆர்டை நோயாளி எண்டு சேர் கேக்கேக்க ஒற்றுமையா காட்டிக் குடுக்காம விட்டிட்டு பிறகு “எல்லாம் அரவிந்தனால” எண்டு பெட்டைகள் விரலை நீட்ட, நான் canteen இல சாப்பிட்டிட்டு வாறன் எண்டு அரோ போனான். 

படிப்பை மட்டுமே மூச்சாயும் மூலதனமாயும் நினைச்சு வந்திருந்த எல்லாப் பொம்பிளைப் பிள்ளைகளும் சில பெடியளும் “சேர் இனிமே இப்பிடி நடக்காது” எண்டு சொல்லிக் காலில விழ, “சரி , இண்டைக்கு இரவும் நிண்டு எல்லாரும் full history யும் கேட்டு வையுங்கோ” எண்டு கணேசர் சொல்ல, “ஓம் சேர்” எண்டு சொன்னது நல்லூர் முருகனுக்கே கேட்டிச்சுது. 

பின்னேரம் போல “அடேய் இண்டைக்கு கணேசர் medicos nite க்கு chief guest ஆப் போறாராம் நாங்கள் பின்னேரம் வரத்தேவேல்லை” எண்டு சிலர் வெளிக்கிட “சேர் சொன்னாக் கட்டாயம் வருவார்” எண்டு பெட்டைகள் வெருட்ட வெளிக்கிட்ட பெடியள் திருப்பி நிண்டிச்சினம். 

ஆர்வக்கோளாறுக்காரர் எல்லாம்

அண்டைக்கு வயித்துநோ , கட்டி வெண்டு வந்த ஆளை வைச்சு கட்டி கரைஞ்சு போற அளவுக்கு அமத்திப் பாக்க சிலர் மட்டும் Nursing பழக வந்த பிள்ளைகளோட “சள்” அடிச்சுக்கொண்டு இருந்திச்சனம். புத்தகத்தைப் படிச்சு ஏறாத அறிவை தலைக்கு கீழ படுக்க வைச்சு ஏத்திக் கொண்டு சிலர் இருந்திச்சினம். பாவம் இந்த குறூப் அண்ணாமாரும் அக்காமாரும் மட்டும் இரவிரவா ஆஸ்பத்திரீல நிக்க மருத்துவபீடம் களைகட்டி இருந்திச்சுது.

பின்னேரம் medical faculty;

Ragging நேரத்தில பாத்தோண்ணயே பிடிச்சதும் சரிவராம , “பழகப் பழகப் பிடிச்சிடும் எண்டு ஒண்டாப் படிச்சதும் சரிவராம கடைசி நாள் வரை முயற்சியைக் கைவிடாம தன்டை காதல் அம்புகளை இசை ரொக்கற்றில விட்டுக் கொண்டிருந்தார் ஒரு அண்ணா. மருத்துவ பீட farewell நிகழ்வில இது எப்பவுமே நடக்கிறது. இவர் விட்ட இசைத்தூதுக்கு இணை அனுசரணை வழங்கின பிரதாபன் organன்டை எந்தப்பக்கமும் எட்டா( வது ) சுரக்கட்டையை தேடித்தேடி வாசிக்க, எங்கடை பீலிங்குக்கு ஏத்த மாதிரி மழை மட்டும் பெய்யத் தொடங்கிச்சுது. முதலாவது வருசத்தில கம்பஸில நடக்கிற ஒவ்வொரு நிகழ்வுக்கும் புதுசா வாறாக்கள் தான் எடுபிடி , ஆனாலும் எங்களுக்கும் எல்லாத்திலேம் பங்கு கிடைக்கும் 

கட்டி முடிக்காத இப்பத்தைய Hoover Auditorium சுவருக்கு பாயைக் கட்டி வைச்சதால பேர் வந்த “பாய்க்கடை” . இந்தப் பாய்க்கடைப் பக்கம் காத்து வாங்கிறதுக்காக போன கூட்டம் நல்ல “கணகணப்போட” திருப்பி வந்திச்சுது. வந்த குறூப் சும்மா நிக்காமல் சுதியோட வந்து சோகப்பாட்டுக்கும் லயத்தோட ஆடத் தொடங்கிச்சுது. இந்த ஜோதீல பலர் சேர நல்ல பிள்ளைக்கு நடிச்சுக் கொண்டிருந்த சிலர் மட்டும் “வாங்கோ சேந்து குறூப்பா படம் எடுப்பம்” எண்டு சொல்லீட்டு இரகசியமா ரெண்டு பேரா போச்சினம் .

படம் எடுக்கிறதை எட்டிப் பாப்பம் எண்டு போய்ப் பாத்தா இந்த ஊர்க்காரர் இந்தப் பள்ளிக்கூட காரர் எண்டு தேடிக் கூப்பிட்டும் தங்கடை சோடிகளோட இணைஞ்சும் படம் எடுத்துக்கொண்டு இருந்திச்சினம் கொஞ்சப் பேர். சோடிகளோட இணையாத பல பேர் இசையோட இணைஞ்சு இருத்திச்சினம்.

பெய்த மழையில கேட்ட பெரிய இடி உள்ளயா வெளியையா எண்டு தெரியாத அளவு உச்சம் தொட்டிருந்தது பிரியாவிடைப் party. மேடைக்குப் பக்கத்தில கொஞ்சப்பேர் “ குரங்குகள் போலே மரங்களின் மேலே“ எண்டு பாட்டை கும்பலா பாடமாக்கிக் கொண்டு இருந்திச்சினம், கடைசியாப் பாடிறதுக்கு. பிரியிற சோகம் பெரிசாக ஆடிற இடத்தை தாண்டி ஆக்கள் இருக்கிற இடத்தையும் ஆக்கிரமிக்கத் தொடங்கிச்சினம் . 

நாசூக்கா , நாகரீகமா “ நாங்கள் வெளிக்கிடிறம்“ எண்டு கொஞ்சக் காஞ்சிபுரம் கட்டினவையும், டை கட்டினவையும் வெளிக்கிடத் தொடங்கிச்சினம். உடுக்கேறியும் கலை வராத ஆக்களுக்கு கலவைப் பானம் குடுத்து ஆட வைக்க முயற்சிகள் தீவிரமா நடந்து கொண்டிருந்திச்சுது. 

இரவு ஆசுபத்திரி:

வெளீல பெய்த மழையையும் இடிச்ச இடியையும் தாண்டி அங்க எங்களை விட்டிட்டு party போடிறவங்களைத் திட்டிக்கொண்டிருந்த studentsக்கு ஆசுபத்திரீல இருந்து “கணேசரட்ணம் சேருக்கு“ அம்புலன்ஸ் போகத் தான் ஆசுபத்திரி எல்லாம் தெரிய வந்திச்சுது ஒருக்கா மட்டும் கேட்ட இடி இறங்கினது நவாலி church க்க எண்டு. 

பள்ளிக்கூடக் காலத்தில ஆனந்தராஜா சேரை சுட்டிட்டாங்களாம் எண்டு கேட்ட உடன எப்பிடி கிரவுண்ட் வெறிச்சோடி ஆசுபத்திரி நிரம்பிச்சுதோ அப்பிடித்தான் இண்டைக்கும் நடந்திச்சுது மருத்துவபீடம் வெறிச்சோடி ஆஸ்பத்திரி நிரம்பிச்சுது.

ஆசுபத்திரில இருக்கிற ஓரு அம்புலன்ஸை அனுப்பி என்ன செய்யிறது , எத்தினை வாகனம் தேவை எண்டு நிர்வாகம் யோசிக்க ஓட்டோ, மோட்டசைக்கிள் , land master எண்டு நிண்ட எல்லா வாகனத்திலேம் காயக்காரர் வந்திறங்கிச்சனம். வந்தவனுக்குப் பதிவு ஒண்டும் போடாமல் நேர வாட்டில விட்டிட்டு, பெரிய காயக்காரரை theatre க்கு கொண்டு போகத் தொடங்கிச்சினம். ஒப்பிரேசன் தியட்டருக்க போய்ப் பாத்தா ஒரு trolley இல ரெண்டு மூண்டு பேராக் கிடத்தி இருச்சினம். Theatre வாசலிலியே ஒப்பிரேசனுக்கு எடுக்க முதலே ஒவ்வொரு உயிராப் பிரியத் தொடங்கிச்சுது. 

வீம்பா அறிக்கை விட்டு நான் டொக்டரா வாறது தான் நோக்கம் எண்டு பாலர் வகுப்பிலயே சொல்லிப் படிச்சு வந்த வெள்ளைக் கோட்டுக் கார senior அக்கா மார் இறந்ததுக்கெல்லாம் உயிர் கொடுக்க முயற்சிச்சு சரிவராதெண்டு அறிஞ்சு விக்கி விக்கி அழுது கொண்டு நிண்டிச்சினம்.

கடைசியா OPD யில வந்திறங்கின tractor ஆல இறங்கக்கூடிய ஆக்கள் இறங்கி வர, இறங்க ஏலாததுகளை தூக்குவம் எண்டு போய் கையைப்பிடிச்சுத் தூக்கினவனுக்கு கைமட்டும் , காலைப் பிடிச்சவனுக்கு கால் மட்டும் கிடைச்சுது . முழுசா ஒண்டு கூட இருக்கேல்லை . எல்லாத் துண்டையும் இறக்கீட்டு அண்டிரவு முழுக்க கையெது காலெது எண்டு பாத்த jig saw puzzle மாதிரி பொருத்தீட்டு அடையாளம் கண்டு பிடிச்சாக்களை அப்பிடியே கட்டிக் குடுத்து விட்டிச்சினம் death certificate கூட இல்லாமல்.

அடுத்தநாள் விடியாத பொழுதில்

செத்தவை ஆரார் எண்டு பேப்பர்காரான் தான் கண்டுபிடிச்சுப் போட்டிருந்தான். பொறுக்காத பொருந்தாத துண்டுகளின் கணக்கு எத்தினை எண்டு இப்பவரை தெரியாது. 

இந்த சோகத்தை ஊர் அழுது முடியமுதல் அடுத்தடுத்த ஊரிலேம் இடம் பெயர்வு வர எட்டுச் செலவு எட்டாமலும் , அந்திரட்டி அந்தரிச்சும் போனது . 

இடம்பெயர்வு 30/101995

“ பல்கலைக் கழகம் அகதி முகாமானது” எண்ட தலைப்போட ஒரு நாள் உதயன் வர அதோட சனம் ஒதுங்கின இடம் எல்லாம் அகதி முகாமாக மாற, அண்டின சனத்துக்கு அண்டைக்கு சமைச்சதை பிரிச்சுக் குடுத்துச் சாப்பிட்டிட்டு அடுத்த வேளை கூட சமைக்கலாமா இல்லையா எண்டு சனம் யோசிச்சுக் கொண்டு இருந்திச்சுது.

ஸ்பீக்கர் வைச்சு ரோடு ரோடாப் போய் வெளிக்கிடச் சொன்னதை கேக்காம ரெண்டு நாள் பொறுத்துப் பாப்பம் எண்ட சனம் , துவக்குச்சூட்டுக்கும் அசையாத சனம், குண்டு விழுந்தாலும் வரமாட்டேன் எண்ட சனம் எல்லாம் கடைசீல வீம்பைக் கைவிட, உலக வரலாற்றில் முதன் முதலாக ஒரு இனமே மரதன் ஓடியது. உயிரற்றதை எல்லாம் அப்பிடியே விட்டிட்டு, மனமில்லாமல் அடை வைச்ச முட்டையைக் கூட அரை உயிரோட கொண்டு போச்சுது. 

படிப்புமில்லை இனி ஓடிப் பயனுமில்லை எண்ட சிலர் மட்டும் திருப்பி அடிப்பம் எண்டு அண்ணை வழி போக வழமை போல மற்றவர் எல்லாம் மந்தைகளாய் பிரிந்தனர்.

நான் தான் முன்னுக்கு ஓடிறன் எண்டு வந்தவனெல்லாம் நிண்ட இடத்திலேயே ஓடிக் கொண்டிருந்தான் . யாழ்ப்பாணத்தில இருந்த நாவக்குளிப் பாலத்துக்கால சனம் எல்லாம் தென்மராட்சிக்கு, பிரசவிச்சு வெளீல வரக் கஸ்டப்படிற பிள்ளை மாதிரி முக்கி ,மூச்சு முட்டி, இஞ்சி இஞ்சியாய் அசைஞ்சு கொஞ்சம் கொஞ்சமாய் வந்துது. “அறுந்து போவாங்கள் இப்பிடி செய்யிறதுக்கு ஒரேடியா குண்டைப் போட்டு எல்லாரையும் சாக்காட்டி விடலாம்” எண்டு ஒரு கிழவி சொன்னது ஆருக்கு கேட்டிச்சோ தெரியேல்லை அவனடிச்ச செல் நீர்வேலி தரவை வரைக்கும் வந்து விழ 

குடும்பமா, குறூப் குறூப்பா ஓடத் தொடங்கினவை எல்லாம் , கூட்டத்தில தாங்கள் எங்க நிக்கிறம் எண்டும் தெரியாம தங்களைச் சுத்தி ஆர் நிக்கினம் எண்டும் தெரியாம தேடிறதையும் கை விட்டிட்டு தனித்துப் போக , வாழக்கைச் சங்கிலிகள் கனக்க அறுந்து போய் தனி வளையங்களாகியது. 

விடை பெறாமலே பிரிஞ்ச கம்பஸ் பிரியாவிடையும் , சொல்ல முடியாமலே போன இடம் பெயர்வுகளும் கன பேரை பிறகு சேர்க்கவே முடியாத பிரிவிடையாப் போனது தான் சோகம். 

ஒண்டு மட்டும் உண்மை இடம் பெயர முதல் இருந்த யாழப்பாணம் இப்ப வரை இல்லை, இனிமேலும்……

Dr. T. கோபிசங்கர்

யாழ்ப்பாணம்

மிஸ்டர் பீஸ்ட்: எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஒரே வீடியோவில் 2.7 கோடி ரூபாய் வருமானம் பெற்றது எப்படி?

2 months 3 weeks ago
மிஸ்டர்.பீஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஒரே வீடியோ மூலம் 2.79கோடி ரூபாய் வருமானம் பெற்றுள்ள யூடியூபர்

4 மணி நேரங்களுக்கு முன்னர்

உலகின் மிகவும் பிரபலமான யூட்யூபரான மிஸ்டர்.பீஸ்ட் எக்ஸ்(ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட ஒரே வீடியோ மூலம் 2.79கோடி ரூபாய் வருமானம் பெற்றிருப்பதாக கூறி உலகை ஆச்சரிய பட வைத்துள்ளார்.

முன்னதாக எக்ஸ் நிறுவனம் தங்களது விளம்பர வருமானத்தில் இருந்து சிறிய பகுதியையே பகிர்ந்து கொள்வதால் அந்த தளத்தில் வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் எந்த பலனும் இல்லை என்று கூறியிருந்தார் அவர்.

ஆனால், கடந்த வாரம் எக்ஸ் குறித்த தனது கருத்தை மாற்றி கொண்டார். காரணம் எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பழைய வீடியோ ஒன்று இது வரை 16 கோடி பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டுள்ளது.

2022 அக்டோபரில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து அந்நிறுவனத்தை லாபமீட்டும் நிறுவனமாக மாற்ற பல்வேறு உத்திகளை செயல்படுத்தி வருகிறார் எலான் மஸ்க்.

அதில் உயர்நிலையில் உள்ள க்ரியேட்டர்ஸ்களுடன் விளம்பர வருவாயை பகிர்ந்து கொள்ளும் திட்டமும் அடங்கும். யூட்யூப் போன்ற இதர தளங்களும் இதை ஏற்கனவே செய்து வருகின்றன.

ஆனால், எக்ஸ் தளத்தின் பயனாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் மஸ்க் இந்த திட்டத்தை செயல்படும் ஒன்றாக பார்க்கவில்லை.

போலி செய்திகள் மற்றும் வெறுப்பு பேச்சு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக தொடர்ந்து விளம்பரதாரர்களிடம் மஸ்க் உரசல் போக்கை கடைப்பிடித்து வருவதால் தொடர்ந்து எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாயும் வீழ்ச்சி நிலையில்தான் இருக்கிறது.

 
மிஸ்டர்.பீஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

யூட்யூப் சேனலான ‘மிஸ்டர் பீஸ்ட்’ - க்கு 23 கோடியே 40 லட்சம் பின்தொடர்பவர்கள் (Subscribers) உள்ளனர்.

யார் இந்த மிஸ்டர் பீஸ்ட்?

மிஸ்டர் பீஸ்ட்டின் உண்மையான பெயர் ஜிம்மி டொனால்ட்சன். இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இவர் யூட்யூப் வழியாக மில்லியன்கணக்கான டாலர்களை சம்பாதித்து வருகிறார். அதே சமயம் அதில் ஒரு பகுதியை நன்கொடையாகவும் தருகிறார்.

இவரது பிரதான யூட்யூப் சேனலான ‘மிஸ்டர் பீஸ்ட்’ - க்கு 23 கோடியே 40 லட்சம் பின்தொடர்பவர்கள் (Subscribers) உள்ளனர். இவருக்கு மேலும் நான்கு சேனல்களும் உள்ளது.

அதில் ‘மிஸ்டர் பீஸ்ட்’-க்கு 3 கோடியே 63 லட்சம், ‘பீஸ்ட் ரியாக்ட்ஸ்’ - க்கு ஒரு கோடியே 19 லட்சம், ‘மிஸ்டர் பீஸ்ட் கேமிங்’ சேனலுக்கு 4 கோடியே 14 லட்சம் மற்றும் ‘பீஸ்ட் பிலான்த்ரோபி’-க்கு 2 கோடியே 12 லட்சம் பின்தொடர்பவர்கள் வீதம் உள்ளனர்.

மேலும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் 4 கோடியே 93 லட்சம் மற்றும் எக்ஸ் தளத்தில் 2 கோடியே 71 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

 

எக்ஸ் தளத்தில் இவரது பதிவுகளை 100 கோடி பார்வையாளர்கள் பார்த்தாலும் , அவருக்கு சரியாக வருமானம் கிடைப்பதில்லை என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார் அவர்.

ஆனால் பின்னதாக அவரது வீடியோக்களில் ஒன்று எக்ஸ் தளத்தில் எவ்வளவு சம்பாதிக்கும் என்று பார்க்க ஆர்வமாக உள்ளதாக கூறி ஒரு வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.

அதன் பின்பு அந்த வீடியோவின் பார்வையாளர்கள் மற்றும் வருவாய் குறித்து பதிவிடப் போவதாக தெரிவித்திருந்தார் அவர். அப்படி அவர் வெளியிட்ட உண்மைதான் உலகையே உலுக்கியுள்ளது. அந்த வீடியோவால் தனக்கு எவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது என்பதை அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

அவரின் பதிவில். “விளம்பரதாரர்கள் இந்த வீடியோ மக்களின் கவனத்தை ஈர்ப்பதை பார்த்திருக்க வேண்டும். அதற்கு பின் இதில் முதலீடு செய்துள்ளார்கள். அதனாலேயே நான் இவ்வளவு சம்பாதித்திருக்கலாம்” என்றும் எழுதியுள்ளார்.

மேலும் அவர் ஏற்கெனவே செய்தது போல, இந்த வருவாயையும் 10 அறிமுகமில்லாத நபர்களுக்கு பிரித்து கொடுப்பதாக கூறியுள்ளார்.

மிஸ்டர்.பீஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இன்ஃப்ளியுன்ஸர்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இணைய பிரபலங்கள் இணையம் வழியாக அதிக பணம் சம்பாதிக்கின்றனர்.

இதுவே மிஸ்டர் பீஸ்ட்டாக இல்லாமல், வேறு யாராவதாக இருந்திருந்தால் இவ்வளவு வருவாய் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை நிபுணர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.

“2.79 கோடி வருவாய் பெற்றுள்ளதாக அவர் கூறுகிறார். வீடியோவுக்கு இந்த வருவாய் நல்லதுதான். ஆனால், இந்தளவுக்கு வருவாய் பெறுவதற்கு, உங்கள் பதிவுக்கு பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களைக் (Traffic) கொண்டிருக்க வேண்டும்” என்று கூறுகிறார் W மீடியாவின் கார்ஸ்டென் வைட்.

இன்ஃப்ளூயன்ஸர்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இணைய பிரபலங்கள் இணையம் வழியாக அதிக பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால், அது அவர்களின் பிரபலத்தன்மையை பொறுத்தது. அனைவராலும் இந்தளவு பணத்தை சம்பாதிக்க முடியாது.

அவர்களின் வருவாய் குறித்த தகவல் பொதுவெளியிலும் கூட கிடைப்பதில்லை. இணைய நிறுவனங்களும் தனித்துவமான கன்டன்டுகளுக்காக இவர்களுக்கு சிறப்பு கட்டணம் வழங்குவதாக நம்பப்படுகிறது.

 
மிஸ்டர்.பீஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

வீடியோக்களை உருவாக்க கோடிகளில் பணம் செலவழிப்பதாக கூறுகிறார் அவர்.

இந்த வருவாயால் ஏற்படும் தாக்கம் என்ன?

மிஸ்டர் பீஸ்ட் ஓர் ஆண்டில் 54 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 440 கோடி ரூபாய்) வருவாய் ஈட்டியுள்ளதாக நவம்பர் 2022இல் செய்தி வெளியிட்டது போர்ப்ஸ் இதழ்.

அதிலிருந்து மிஸ்டர் பீஸ்ட்டை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பெருவாரியாக அதிகரித்துள்ளது. தற்போது அவரது ஆண்டு வருமானம் 233 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

இவர் மிகவும் பிரபலமாக இருப்பதால் பல நிறுவனங்களும் இவருடன் இணைந்து பணியாற்றுகின்றன. தான் வீடியோக்களை உருவாக்க கோடிகளில் பணம் செலவழிப்பதாக கூறுகிறார் அவர்.

இவர் இந்த முறை அவர் பெரிய ஸ்ட்ரீமிங் தளத்தோடு முக்கியமான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட போவதாகவும் கூறப்படுகிறது.

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ, செப்டம்பர் 2023-லேயே யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் வெவ்வேறு கார்களின் விலை குறித்து அவர் பேசியுள்ளார்.

தற்போது வரை, அந்த வீடியோவை யூட்யூபில் 22 கோடி பேர் பார்த்துள்ளனர். இவரது பெரும் பகுதி வருமானம் இது போன்ற யூட்யூப் வீடியோக்கள் வழியாகவே வருகின்றன.

 
மிஸ்டர்.பீஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

புதிய கன்டென்ட்டுகள் மட்டுமே எக்ஸ் தளத்தில் வருவாய் ஈட்ட முடியும்.

இது போன்ற இன்ஃப்ளியுன்ஸர்களின் வருமானத்தை மதிப்பிடும் தளமான Vierism, யூடியூபில் பதிவிடப்படும் மிஸ்டர் பீஸ்ட்டின் ஒரு வீடியோ ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வரை வருவாய் ஈட்டுவதாக மதிப்பிட்டுள்ளது.

ஆனால், புதிய கன்டென்ட்டுகள் மட்டுமே எக்ஸ் தளத்தில் வருவாய் ஈட்ட முடியும்.

"எதிர்காலத்தில் எக்ஸ் தளத்தின் வருவாய் எங்கு செல்கிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமானது" என்று கூறுகிறார் Vierism தளத்தின் நிறுவனர் ஜென்னி சாய்.

தற்போது வரையில் எக்ஸ் தளத்தில் உள்ள 'இம்ப்ரெஷன்' என்றால் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறுகிறார் நெபுலாவின் தலைமை நிர்வாகி டேவ் விஸ்குல். நெபுலா என்பது உலகின் பிரீமியம் ஸ்ட்ரீமிங் தளமாகும்.

ஆனால், தற்போது இன்ஃப்ளியுன்ஸர்கள் எக்ஸ் தளத்தையும் முக்கியமானதாக எடுத்து கொள்ள முடியும் என்கிறார் அவர்.

“நீங்கள் ஏற்கனவே யூட்யூபுக்காக வீடியோக்களை உருவாக்குகிறீர்கள் என்றால், தற்போது அதை எக்ஸ் தளத்திலும் பதிவேற்ற முடியும். அதில் என்ன ஆகி விடப்போகிறது?” என்று கேட்கிறார் டேவ் விஸ்குல்.

ஆனால், இணையத்தில் பிரபலமாக இல்லாதவர்கள் பெரும்பணம் ஈட்டுவது எளிதல்ல என்றும் கூறுகின்றார் அவர்.

 
மிஸ்டர்.பீஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

எலான் மஸ்க் ஆஷ்விட்ஸ் முகாமுக்கு பயணம் சென்றுள்ளார்.

பிபிசி தொழில்நுட்ப ஆசிரியர் ஜோய் க்ளீன்மேன் கூறுவது என்ன?

இணையத்தில் உள்ள பெரும்பான்மையான க்ரியேட்டர்களால் மிஸ்டர் பீஸ்ட்டின் வருவாய்க்கு அருகில் கூட வர முடியாது. அவரை போல் உலகளவிலான ஊடகங்களின் வெளிச்சத்தையும் பெற முடியாது.

தனது வருமானத்திற்கும் எக்ஸ் தளத்தில் உள்ள பயனர்களின் அனுபவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மிஸ்டர் பீஸ்ட்டே கூறுகிறார்.

ஆனால் இந்த எண்ணிக்கை எக்ஸ் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான லிண்டா யாச்சரினோவை நிச்சயம் மகிழ்விக்கும். விளம்பர வணிக உலகில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக பயணித்த பிறகு கடந்த வருடம் எக்ஸ் தளத்தில் இணைந்தார் அவர்.

தனிப்பட்ட முறையில் எக்ஸ் தளத்தின் மீதான பிம்பத்துடன் அவர் போராட வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த தளத்திலும் விளம்பரங்கள் சிறப்பாக செயலாற்ற தொடங்கியதன் பிறகு அவர் உற்சாகமடைந்திருப்பார்.

யூத மக்களுக்கு எதிரான கன்டன்டுகளை எக்ஸ் தளம் எவ்வாறு கையாள்கிறது என்று உலகமே உற்றுநோக்கி கொண்டிருக்கும் சமயத்தில், கடந்த வாரம் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் ஆஷ்விட்ஸ் முகாமுக்கு பயணம் சென்றுள்ளார்.

இதுவே எக்ஸ் தளத்தின் முக்கியமான விளம்பரதாரர்கள் பலரும் கவலைப்படும் விஷயம். மேலும் மஸ்க் உடனடியாக சரி செய்ய வேண்டிய பிரச்னையும் கூட.

சமீப காலமாகவே ஒரு பெரிய ஸ்ட்ரீமிங் நிறுவனத்துடன் தனது நிகழ்ச்சிக்காக மிஸ்டர் பீஸ்ட் பேச்சுவார்த்தையில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அது மட்டும் உண்மையென்றால், தற்போது எக்ஸ் தளத்தில் அவர் செய்திருக்கும் இந்த சோதனை, அவருக்கு அதிகமான வருவாயை பெற்றுத்தர வாய்ப்புள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c51v9v0270ro

வெத்து இலை - T. கோபிசங்கர்

3 months 1 week ago

வெத்து இலை 

 

அம்மா செய்த மைசூர்ப்பாகை களவெடுத்து பள்ளிக்கூடம் கொண்டு போக ஒளிச்சு வைச்சதை எறும்பு காட்டிக் குடுக்க, அம்மா அடிக்கத் தடி தேடி ஆச்சீன்டை பொயிலைக் காம்பைக் கொண்டந்தா. அப்ப அடிக்கிறதுக்கு வசதியா கனக்க இருந்திச்சுது. ஏப்பைக் காம்பு, பூவரசந்தடீ, முருக்கஞ் செத்தல் , பொயிலைக்காம்பு எண்டு கன சாமாங்கள் வீட்டிலயோ வேலீலயோ ready made ஆ இருந்தது. இப்ப வீட்டை அடிக்க கடையில போய் பிரம்பை வாங்கி வைக்க பிள்ளைகள் எடுத்து உடைச்சுப் போடும்.

 

வழமையான கடைக்குப் போற வேலைக்கு extra வா சில நேரம் வெத்திலை வாங்கிற வேலை வரும். சைக்கிள் பழகின புதுசில அதை ஓடிறதுக்காகவே சைக்கிளில போக விட்டா வாங்கித்தாறன் எண்டு deal போட்டு , ஓம் எண்டா ஓடிப் போய் வாங்கிறது. மாமா வீட்டை வந்தா வெத்திலை வாங்கு எண்டு சொல்லி கொஞ்சம் கூடக் காசு தருவார் எனக்கும் ஏதும் வாங்க எண்டு. “ வெத்திலை வாங்கேக்க உமா ஸ்ரோர்ஸில வாச வெத்திலை எண்டு கேட்டு வாங்கு” எண்டு மாமா சொன்னார், வெளிக்கிட்டு வர ஆச்சி எனக்கு வெறு வெத்திலை எண்டு சொல்லி காசும் தந்தா. வண்ணார்பண்ணை சிவன் கோயிலுக்கு முன்னால இருக்கிற உமா ஸ்ரோர்ஸ் எண்ட கடை இப்பவும் இருக்கு. வாழைப்பழமும் வெத்திலையும் மட்டும் தான் அப்ப விக்கிறது. வாச வெத்திலை ஒரு கூறு எண்டு கேக்க, “ஒரு வெத்திலையா மூண்டு வெத்திலையா “ எண்டு கேட்டதுக்கு பதில் சொல்ல மூண்டு வெத்திலையை பாத்து எடுத்து வாளித்தண்ணீல கழுவி உதறி மேசையில வைச்சிட்டு மேல் வெத்திலையில பாக்கை வைச்சு, ரெண்டாவதில அசோகாப் பாக்கு வைச்சி, பிறகு மூண்டாவதில மூண்டு சீவல் நாறல் பாக்கை வைச்சிட்டு கிழிச்ச பேப்பர்த் துண்டில சுண்ணாம்பை வைச்சு மடிச்சு வெத்திலைக்கு அடீல வைச்சிட்டு ,பழைய கொப்பிப் பேப்பரில மூலைப் பக்கமாச் சுத்தி நிமித்தி் சுருளின்டை அடியை ரெண்டு தரம் மேசையில தட்டீட்டு வெத்திலை நுனியோட பேப்பரையையும் சேத்து மடிச்சுத்தாற ஸ்டைலுக்காக ரெண்டு வெத்திலைக் கூறு வாங்கலாம்.

யாழ்ப்பாணத்தில அப்ப வெத்திலை போடாதவன் இல்லை எண்டு சொல்லலாம் . சாப்பிட்டாப்பிறகு வெத்திலை பாக்கு கட்டாயம் போடிற பழக்கம் இருந்தது அதோட பழைய laxpray பைக்குள்ள எல்லாம் வைச்ச ஒரு வெத்திலைப் பையும், பாக்கு வெட்டியும், பொக்கை வாய்க்கிழவிக்கு உரலும், இடிக்குறதுக்கு தண்டவாளத்தில சிலிப்பர்கட்டை இறுக்கிற ஆணியோ இல்லாட்டி ஒரு இரும்போ இருக்கும். 

 

வீடுகளில பத்து மணிப் பிளேன்ரீயோட ஒருக்கா, மத்தியானம் சாப்பாட்டுக்குப் பிறகு ஒருக்கா, அப்பிடியே பின்னேரம் தேத்தண்ணிக்குப் பிறகு ஒருக்கா எண்டு சாப்பாட்டுக்கு நிறை குறை நிரப்பியா வெத்திலை இருக்கும். வீடுகளில மூத்திரம் பெய்ய ஒரு மூலை மாதிரி வெத்திலை துப்பிற வேலியும் இருக்கும். வீட்டில ஆரும் வந்தாலும் தேத்தண்ணி குடிச்சிட்டு வெத்திலை போடுவினம். அதே போல வெத்திலை ஒரு அத்தியாவசிய உப உணவாக கன கூலி வேலைக்காரருக்கு இருந்திச்சுது. 

எண்பதில யாழப்பாணம் townக்க “ வாளிக்குள் துப்பவும் “ எண்ட போட்டோட பழைய மண்ணெண்ணை பரலை நிமித்தி வைச்சு வெள்ளைப் பெயின்ற்றும் அடிச்சு வைச்சிருந்தவை . அதோட நல்லூர் வீதியிலையும் திருவிழாக் காலத்தில துப்பிறதுக்கு வாளிகள் வைச்சிருந்தது. ஊரில ஏனோ தெரியேல்லை துப்பிற பழக்கம் பொதுவா இருந்திச்சுது. பயணங்கள் போறவை ஒண்டுக்குப் போகமால் மூத்திரத்தை அடக்கினாலும் வெத்திலை போட்ட எச்சிலை உடனயே துப்பீடுவினம் . ஆனபடியாத்தான் பரலை வெட்டி கக்கூஸ் கட்டாமல் முழுசா நிமித்தி துப்பிறதுக்கு வைச்சாங்கள். முனிசிப்பல் காரங்கள் இடைக்கிடை குப்பை பரலை எடுக்கிறவங்கள் ஆனால் துப்பல் பரலை ஒருநாளும் எடுக்கிறேல்லை . குப்பை எடுக்க வரேக்க பரலுக்குள்ள நெருப்புத் தண்ணி ( Lysol) மாதிரி ஊத்துவாங்கள் அது துப்பலோட சேந்து வெய்யிலுக்கு காஞ்சு போடும். 

பழைய காலத்தில கசம் கனபேருக்கு இருந்ததால கண்ட இடத்திலேம் துப்பி எச்சிலில இருந்து கிருமி பரவாமத் தடுக்க அப்பிடிச் செய்தாங்களோ தெரியேல்லை. ஆனாலும் அதுக்கு வெத்திலை போடிற ஆக்களுக்கு அது வசதியா இருந்திச்சுது. 

வெத்திலை வெறும் விசேசத்துக்கும் கோயிலுக்கு கொண்டு போறதுக்கும் மட்டும் இல்லை அதை பரியாரிமார் மருந்துக்கும் பாவிக்கிறவை. தம்பிக்கு ஒரு நாள் சளி இழுக்க வெத்திலையில எண்ணை பூசி தணலில வாட்டி “ அது சளியை உறிஞ்சுமாம் எண்டு” நெஞ்சில வைச்சவ ஆச்சி. குழந்தைப் பிள்ளைகளுக்கு எண்டால் தலையில வைக்கிறதாம் .

“சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பிச்சுவைக்கும் நிஜாம் பாக்கு “ எண்டு ஆல் இந்தியா ரேடியோவில அடிக்கடி விளம்பரங்கள் போகும். பாலர் வகுப்புப் படிக்கேக்க பள்ளிக்கூடத்துக்கு முன்னால இருந்த முரளீன்டை தாத்தான்டை கடையில சுருட்டின பாதி வெத்திலைக்கு கலர் தேங்காய்பூவும் , முறிச்சு உடைச்சுத் தூவின கறுவாவும் எண்டு 10 சதத்துக்கு வித்தது.

சந்தைக்கு விசேசத்துக்கு மரக்கறி சாமான் வாங்கப் போய் கடைசீல வெத்திலைக் கடைக்கும் போறது. தேவைக்கு ஏத்த மாதிரி ரெண்டோ , மூண்டோ கும்பம் வெத்திலை , கிலோவில சீவல் , கொட்டைப்பாக்கு , சுண்ணாம்பு ரின், சுருட்டுக்கட்டு எல்லாம் வாங்கீட்டு , பொயிலைக்காம்பு எண்டு கேட்டுப் பொயிலை எடுத்து விரிச்சு மணந்து பாத்துக் குடுக்க, விரிச்சதை திருப்பிச் சுருட்டி இலையை மடக்கி முடிச்சுப் போட்டுத் தருவாங்கள். 

ஊரில நல்லது கெட்டது எல்லாத்திலேம் வெத்திலைத் தட்டு இருக்கும். தட்டில ஒரு பக்கமா வெத்திலையை அடுக்கி பாக்குச் சீவலை அள்ளிப் போட்டு பழைய ரின்பால் பேணீல வாங்கின சுண்ணாம்பை அள்ளி வைச்சிட்டு, சுருட்டுக் கட்டொண்டையும் வைச்சுக் குடுப்பினம். அதோட பொயிலைக் காம்பில இருந்து இலையை வெட்டீட்டு காம்பை எடுத்து வைப்பினம், அடிக்கிறதுக்கும், மூக்கில விட்டுத் தும்மிறதுக்கும். அதோட மலச்சிக்கல் காரருக்கு மல வாசலில வைச்சா சிக்கல் இல்லாமல் போகும். 

ஆய கலைகளில சேக்க மறந்ததில இந்த வெத்திலை போடிறது ஒரு கலையும் ஒண்டு . நல்லது கெட்டதில வைக்கிற வெத்திலைத் தட்டத்தை எடுத்து மடீல வைச்சபடி பழசுகள் வெத்திலை போடும். வெத்திலைத் தட்டில அடுக்கின வெத்திலைக்கு நடுவில ஆகலும் முத்தலும் இல்லாத வெளிறின பச்சையாப் பிஞ்சும் இல்லாத வெத்திலை ஒண்டை எடுத்து ரெண்டு பக்கத்தையும் கையால ( சில வேளை வேட்டியிலே) வடிவாத் துடைச்சிட்டு காம்பை முறிச்சு அப்பிடியே நடு நரம்போட இழுத்து எறிஞ்சிட்டு சுண்ணாம்பை சுண்டு விரலால எடுத்து வெத்திலையின் வெளிப்பக்கத்தில் மெதுவாகப் பூசோணும். அதோட நல்ல மெல்லிசாச் சீவின, காஞ்ச சீவலா பாத்து எடுத்து சாடையாக் கசக்கீட்டு மெல்ல ஊதி தூசை பறக்கவிட்டிட்டு அப்பிடியே ஒரு பக்கக் கொடுப்புக்குள் வைத்து மெல்லச் சப்பத் தொடங்க வாய்க்குள்ள இருக்கிற பாக்கில எச்சில் ஊறும். பிறகு வெத்திலையை மடிச்சு மற்றப் பக்க கொடுப்புக்குள்ள வைச்சிட்டு இரண்டையும் சமமான அளவில் சப்பினபடி நாக்கினால் பிரட்டிக் கலக்க வாற வெத்திலைச்சாறை சுண்டு விரலையும் நடு விரலையும் வாயில வைச்சு தெறிக்காம எட்டித் துப்போணும். காரத்துக்கும் tasteக்கும் தேவையான அளவுக்கு ஏத்த மாதிரி விரலில் இருக்கும் சுண்ணாம்பை நுனி நாக்கில் இடைக்கிடை தடவிக் கொள்ளலாம். அப்பப்ப சின்னத்துண்டா வெட்டியிருக்கிற பொயிலையை எடுத்து விரித்துப் பாத்து நல்லா மணக்கிற பொயிலைத் துண்டை எடுத்து வெறுமையாக இருக்கும் கொடுப்புப் பகுதிக்குள் தள்ளி் அடக்கி வைத்திருக்க வேண்டும். எச்சில் ஊறிய பொயிலைச்சாற்றை வெத்திலையுடன் கலந்து அசைபோட்டுக் கொண்டு இருக்கேக்க வாற எச்சில் கடைவாயின் பக்கம் வழிய முதல் எச்சிலைத் துப்பிப் போடோணும். போட்ட வெத்திலையை ஒரு நாளும் அப்பிடியே விழுங்கக்கூடாது, அசை போட்டு சாறை உறிஞ்சீட்டு எழும்பி்ப் போய் வேலிப்பக்கம் எல்லாத்தையும் துப்பிப் போட்டு, விரலில மிஞ்சி்இருக்கிற சுண்ணாம்பை மரத்திலயோ சிவத்திலயோ பூசீட்டை வாயைக் கொப்பிளிச்சிட்டு வரோணும். இல்லாட்டி எல்லாத்தையும் சேத்துப் போட்டு மாடு மாதிரி அசையும் போடலாம். 

( பி.கு . இதனால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு கம்பனி பொறுப்பேற்காது.) 

இப்ப ஏன் எண்டு தெரியாம வாங்கி வைக்கிற வெத்திலையை போடிறதுக்கு ஆக்களும் இல்லாமல் , அதை போடிறதை ரசிக்கிற ஆக்களும் இல்லாமல் வெத்திலை இப்ப எல்லாம் பெயருக்கு ஏத்த மாதிரி வெத்து இலையாகவே இருக்கு. 

 

Dr. T. கோபிசங்கர் 

யாழப்பாணம்

மீண்டும் சக்திமான் -shaktimaan

3 months 2 weeks ago
sakthimaan.jpg


 

 

தூர்தர்ஷனில் சக்திமான் பார்த்த நினைவிருக்கிறதா?டாக்டர் ஜாகல், தம்ராஜ் கில்விஸன்,கீதாவிஸ்வாஸ்?கங்காதரர் வித்தியாதரர் மாயாதரர் ஓம்காரசாஸ்திரி? வாருங்கள் நினைவை மீட்டுவோம் 

சக்திமான் எமது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் ஒரே ஒரு சானல்தான் யாழ்ப்பாணத்தில் வேலைசெய்தது அது  தூர்தர்ஸன் தான்.சன் டி.வி எல்லாம் அப்போது அறிமுகமில்லை.தூரதர்ஸனில் ஜேய் ஹனுமான்,நிகழ்வுகள் அதோடு சக்திமானையும் பார்ப்பது வழக்கம். அதில் நிகழ்வுகள் என்ற தொடர் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படும் அது ஆவிகள் தம் சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்கும் கதை ஆகையால் இரவில் வீட்டிற்கு வெளியில் செல்லப்பயந்து யன்னலினூடாகவே சிறுனீர் கழித்த சம்பவங்களும் நடந்தன .
 
அவ்வளவு பீதி.சக்திமான் தொடர் ஒவ்வொரு சனி 11 மணிக்கு ஒளிபரப்பப்படும்.தனியார்நிலையத்தில் கல்விகற்ற போது தனியார்கல்வினிலையம் காலை 7.30 ற்கு ஆரம்பமாகி 11 மணிக்கு முடிப்பார்கள்.பெரும்பான்மையான எனது சகபாடிகளுக்கும் சரி எனக்கும் சரி 10 மணிக்கு மேல் படிப்பு மண்டைக்குள் ஏறுவது சற்றுக்கடினமாகத்தான் இருந்தது.காரணம் 11 மணிக்கு சக்திமான் இருப்பதுதான்.1997 இல் யாழ்ப்பாணத்தில் இணையமோ கணணிவசதிகளோ ஒரிரு இடங்களில்தான் இருந்தன இதன் காரணமாக சக்திமானின் புகைப்படங்களோ..அல்லது கார்ட்கள் போன்ற எதுவும் எம்மிடம் இருந்ததில்லை.ஆனால் ஒரு சகபாடி எங்கிருந்தோ ஒரு படத்தைக்கொண்டுவந்துவிட்டான்.அந்த ஒரே ஒரு படத்தால் ஒரே நாளில் ஹீரோ ஆகிவிட்டான் அவன்.
 
backdrop-640x360.jpg
11 மணிக்கு வகுப்பு முடிவடைந்ததும் விழுந்தடித்து வீடுநோக்கி ஓடிதொலைக்காட்சிக்கு முன்னால் ஓட்டம் நிறைவடையும்.சக்திமான் தொடக்கப்பாடல் முடிவடைந்த பின்னர்தான் பெரும்பாலான நேரங்களில் வீடுவரமுடிந்தது.சக்திமான் தொடரின் இடைவேளையின் போதுதான் போய் மதிய சாப்பாட்டை எடுத்துவருவேன்.பின்னர் சாப்பாடு முடிந்ததோ இல்லையோ தட்டுடன் தொடர் முடியும்வரை இருப்பது வழக்கம்.எனது நண்பர்களுக்கும் இதே நிலைதான். நாம் பல நேரங்களில் சக்திமான் கில்விஸனிடம் தோற்பாரா? கீதாவிஸ்வாஸை காப்பாற்ற வருவாரா?கங்காதரர் அகப்படுவாரா? என்று நண்பர்களிடம் வாக்குவாதம் செய்துமிருக்கிறோம்.
 
ஏதோ நாம் மட்டும் இதற்கு அடிமையாகவில்லை இந்தியாவில் இருக்கும் அனைத்து சிறுவர்களுக்கும் ஏகோபித்த ஒரே ஹீரோவாக சகலரையும் அடிமையாக்கியவர் சக்திமான்.பல சிறுவர்கள் சக்திமான் வந்து காப்பாற்றுவார்,அவரைபோல் சாகசம் செய்யலாம் என்று உயரமான கட்டடங்களில் இருந்து குதித்து இறந்தமை இதற்கு நல்ல ஆதாரம்.இதனால் பெற்றோர் மிகுந்த சங்கடத்திற்குள்ளானார்கள் இவ்வாறான சம்பவங்களின் பின்னர் வெளிவந்த தொடர்களில் இவை கற்பனையே இவற்றை செய்து பார்க்க முயற்சிக்காதீர்கள் என்று எச்சரிக்கை விடப்பட்டதுடன் எவ்வாறு சூட்டிங்க் எடுக்கப்படுகின்றது என்பதையும் ஒளிபரப்பினார்கள்.
 
டைட்டிள் சோங்க்
 
video_object.png
 
சக்திமான் என்றகற்பனைக்கதாப்பாத்திரத்தை உருவாக்கியவர்கள் டிங்கெர் ஜானி மற்றும் முகேஸ் கண்ணா.முகேஸ்கண்ணா என்பவர்தான் சக்திமானாக அசத்தியவர்.1997 செப்டெம்பர் 13 இல் சக்திமானின் முதலாவது எபிசோட் ஒளிபரப்பப்பட்டது.
கதை இதுதான் தீய சக்திகளுக்கு எதிராக போராடும் வீரனாக சக்திமான் தெரிவு செய்யப்படுகின்றார். சக்திமானுக்கான சக்திகள் 7 யோகிகளால் வழங்கப்படுகின்றன.இதற்காக இவருக்கு குண்டலினி யோகா பயிற்சியளிக்கப்படுகின்றது.இதனால் அசாத்திய சக்திகளை பெற்றுவிடுகிறார் நம்ம தல.மரணத்தை வெல்வதற்கான சடங்கை செய்தார்கள் ஆனால் அது ஈடேறவில்லை பதிலாக சாதாரண மனிதனை விட அதிகாஅயுள்மட்டும் கிடைக்கின்றது.இறுதியில் அக்கினி குண்டத்தில் இறங்கியதும் பஞ்சபூதங்களின் சக்தி கிடைக்கிறது.இவ்வாறு சக்திமான் உருவாகினார்.
சக்திமானுக்கு பல எதிரிகள் அவர்களுள் முக்கிமான எதிரி தம்ராஜ்கில்விஸன்.இவனை அழிக்கும் நோக்கத்திற்காகவே சக்திமான் படைக்கப்பட்டாரென்றும் கூறலாம்.அத்துடன் கில்விஸனுடன் இலவச இணைப்பாக பல சிறிய வில்லன்களும் இருக்கிறார்கள்.சலாம் அலைக்கும்...அலைக்கும் சலாம் என்பதுபோல் கில்விஸன்  வரும்போதும் ஒரு வார்த்தை பிரயோகிக்கப்படும்  நினைவுக்கு வந்துவிட்டதா அதே தான் க.க.க.போ  "இருள் நீடிக்கிறது".
http://2.bp.blogspot.com/-TsIESzQE6HE/UAFsjR7Kn9I/AAAAAAAAHqg/qcRgLh3Hn5M/s320/311507_372570069474306_1403959557_n.jpgசக்திமான் என்னேரமும் அதே உடையில் உலாவர முடியாதல்லவா? அதனால் மாறுவேடத்தில் மக்களோடு மக்களாக சுற்றுவதற்காக பற்கள் சொண்டைக்கிளித்துக்கொண்டிருக்கும் கெங்காதரர் ஆனார்.அதில் தன்னை யார் என்று கேட்பவர்களுக்கு இவர் கூறும் விளக்கம்தான் ஹைலைட்.."என் பெயர் கங்காதரர் வித்யாதரர் மாயாதர் ஓம்காரர் சாஸ்திரி" இதோடு கேட்பவர்களின் நட்டு கழன்றுவிடும்.
 
http://1.bp.blogspot.com/-dYa0cfksRiM/UAFtQcLvXbI/AAAAAAAAHrY/n-tdW68y6ws/s1600/48978_100001641115134_9902_n.jpg கீதா விஸ்வாஸ்
அத்தோடு வேலையும் வேண்டுமல்லவா இதனால் ஒரு பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிகிறார் கெங்காதரர்.இந்த இடத்தில்தான் அடுத்த முக்கிய கதாப்பாத்திரம் அறிமுகம் கீதா விஸ்வாஸ் இவர் சக்திமானை காதலிப்பவர்.கீதா விஸ்வாஸாக நடித்தவர் வைஸ்ணவி.ஹீரோயின் வந்துவிட்டாலே புரிந்திருக்கும் இதனால் வில்லன்களிடம் ஹீரோ படும் அத்தனை அவஸ்தைகளையும் சக்திமானும் பட்டார்.
 
இத்தொடர் மொத்தமாக  461 எபிசோட்களாக வெளிவந்தது.அனைத்து எபிசோட்களையும் இலவசமாக பார்வையிட.1998 இல் 
MDb ரேட்டிங்கில் 10 ற்கு 6.9 ஐ பெற்றுள்ளது. எபிசோட் முடிவில் சக்திமான் கருத்துக்கள் கூறுவார். சின்ன சின்ன விடயங்கள் பெரிய பெரிய கருத்துக்கள்.
 
 
உண்மையில் சக்திமான் தொடர் சுப்பர்மான் திரைப்படத்தை சார்ந்து எடுக்கப்பட்டதுதான்.ஆனால் அத்துடன் நிற்கவில்லை எக்ஸ்மான் என்று பல திரைப்படங்களும் உள்ளே தலைகாட்டியிருந்தன.ஆரம்பகாலங்களில் ஹொலிவூட் எமக்கு அறிமுகமில்லாத காரணங்களால் இவை நமக்கு புலப்படவில்லை.சக்திமான் முடிவடைந்த பின்னர் ஆரியமான் என்ற தொடரை அறிமுகப்படுத்தியிருந்தார்கள் முகேஸ் கண்ணாதான் அதிலும் ஹேரோ ஆனால் அது ஆரம்பிக்கும் பொழுது நான் ஸ்டார்வேர்ஸ் பார்த்துவிட்டிருந்தேன்.சோ பருப்பு வேகல.
 
எது எப்படியிருந்தாலும் நமது சிறியவயது ஹீரோ சக்திமான் தான் அத்துடன் இந்தியாவின் முதலாவது சூப்பர் ஹீரோவும் இவர்தான்.இதன் பின்னர் முகேஸ்கண்ணா வேறுதொலைக்காட்சித்தொடர்களில் நடித்தாலும் எதிர்ப்பட்டவர்கள் இவரை சக்திமான் என்றுதான் அழைத்தார்கள்.
பல சக்திமான் கொமிக்ஸ்களும் வெளிவந்த்துள்ளன.
 
 
 
 
 
 
 
 
 
2012 ல் சக்திமானை 3டி திரைப்படமாக எடுக்க முடிவு செய்தார்கள் .2012 மார்ச் 24 இல் இதை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்கள் .சக்திமான் சீரிஸ்ஸில் நடித்த அதே முகேஸ்கண்ணாதான் இத்திரைப்படத்திலும் ஹேரோவாக நடிப்பதாக இருந்தார்,2012  ல் இதைப்பற்றி முகேஸ் கூறும்பொழுது"இப்பொழுது நான் திரைப்படத்தில் மட்டுமே எனது கவனத்தை செலுத்துகின்றென்.சக்திமான்தான் இந்தியாவின் முதலாவது சூப்பர் ஹீரோ கிரிஸ்ஸோ ராவன்னோ ஜி வன்னோ அல்ல.சக்திமான் திரைப்படத்தை விரைவில் வெளியிடுவோம்" என கூறினார் ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றுவரை இது நிறைவேறவேல்லை 
போதாததற்கு கொரோனா காரணமாக முகேஸ்கண்ணா மரணமடைந்துவிட்டார் என்றும் அண்மையில் நெட்டிசன்கள் வதந்தியை பரப்பியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 

யாழ்ப்பாணத்திற்கு_ஒரு_ஆறு

3 months 2 weeks ago
May be an image of beach, ocean, horizon and twilight
 
 
 
 
யாழ் குடாநாடானது மிகவும் குறைந்தளவான 30' மழைவீழ்ச்சியினை பெறுகின்ற அதே வேளை வட மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் 60' இற்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது.
குடாநாட்டின் வேளாண்மையை அபிவிருத்தி செய்வதற்கு ஏனைய பகுதிகளில் பெறப்படும் செல்வமாகிய மேலதிக மழை நீரை இப்பகுதிக்கு பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு நியாய பூர்வமான விருப்பமாகும்.
1930ம் தசாப்த ஆரம்பத்தில் குடாநாட்டில் பரந்திருந்த உவர் நீர் ஏரிகளை பயன்படுத்தும் முகமாக அவற்றை நன்னீராக்க வேண்டும் என்ற கருத்தை காலஞ் சென்ற சட்டவாக்க சபை உறுப்பினரான மு.பாலசிங்கம் அவர்கள் தனது மனதில் உருவாக்கினார்.
மாமன்னர் பராக்கிரமபாகுவின் சிந்தனையின் ரூபமான மிகவும் பரவலாக பேசப்பட்ட கருத்தானது 'வானத்திலிருந்து விழும் ஒரு மழைத்துளியும் மண்ணுக்கு பயன்படாமல் கடலை சென்றடைய விடக்கூடாது' என்ற சித்தாந்தமே மதிப்புக்குரிய மு.பாலசிங்கம் அவர்களது கருத்தாகும்.
இந்தச் சிந்தனையே வட மாகாணத்தின் முக்கிய ஆதாரமான கனகராயன் ஆற்றின் வெள்ள நீரை முற்று முழுதாக பயன்படுத்துவது என்ற எண்ணக்கரு உருவாக வழி கோலியது. இந்த ஆறு வவுனியாவில் உருவாகி புளியங்குளம் மாங்குளம் ஊடாக இரணைமடுக் குளத்தை நிரப்புகின்றது.
இதன் மேலதிக நீர் ஆனையிறவு ஏரியை அடைகின்றது. இது ஆனையிறவு பாலத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கடலுடன் இம் மேலதிக நீரானது வீணாக இப் பாலத்தினுடாக பெருங்கடலை சென்றடைகிறது.
1949 மாசியில் ஓர் நாளில் இத் தெரு ஊடாக சுற்றுலாவிற்கு சென்ற குடும்பத்தினர் ஆனையிறவு பாலத்தின் அண்மையில் நண்பகல் உணவிற்காக இளைப்பாறினர். அவரின் சிறிய மகன் இவ் ஏரியில் கை கழுவும் பொழுது ஏரியின் மேற்குப்பகுதி கடலுடன் தெடர்புடையதாக இருந்தாலும் கிழக்குப் பகுதியில் நன்னீர் இருப்பது எவ்வாறு? என்று கேட்ட வினாவிற்கு அன்பான தந்தை அதன் காரணத்தை விளக்கினார்.
அந்தச் சிறுவன் உடனடியாக 'நாங்கள் கொஞ்ச மண்ணை காரில் கொண்டுவந்து இந்தப் பாலத்தை நிரப்புவோம், இதனால் நன்னீர் ஏரி உருவாகும் என்று பதிலளித்தான்.
அந்த வருடம் கனகராயன் ஆற்றில் வெள்ளம் பாய்ந்தது. இரணைமடுக் குளம் நிரம்பி வான் பாய்ந்தது. மேலதிக நீர் தெருவின் கிழக்கில் உள்ள ஆனையிறவு ஏரியை நிரப்பியது.
இரணைமடுக் குளம் தை மாதத்தில் வான் பாயவிடப்பட்டாலும் மாசி மாதத்தில் கூட கிழக்கு ஏரி நன்னீராகவே காணப்பட்டது. எனினும் இப்பாலத்தினை மண் கொண்டுவந்து நிரப்பினாலொழிய இந்நீர் பாலத்தினூடாக கலக்கும் கடல்நீரால் விரைவாக உவர்நீராக மாறிவிடும்.
தற்போது நடைமுறைப்படுத்தும் ஆனையிறவு ஏரியை நன்னீராக்கும் திட்டத்தின் அடிப்படையானது கிழக்கு ஏரி வருடம் முழுவதும் நன்னீராகவே இருக்க வேண்டும்.
ஆனையிறவு ஏரி ஆனையிறவு தொடக்கம் சுண்டிக்குளம் வரையுள்ள சுமார் 11,400 ஏக்கர் பரப்பை கொண்டது. இவ் ஏரி கனகராயன் ஆறு, நெத்தலி ஆறு, பிரமந்தலாறு, தேராவில் ஆறு மற்றும் சிற்றாறுகளிலிருந்து வரும் நீரை பெறுகின்றது.
இதன் வடக்கே வானைக் குளமும் தெற்கே கரைச்சி காணிகளையும் கொண்டுள்ளது. பாலத்திற்கு அருகில் ஓர் தடுப்பை ஏற்படுத்தி சுண்டிக்குளத்திற்கு அண்மையில் பொருத்தமான வான்கட்டை அமைப்பதனுாடாக இவ் ஏரிக்குள் உட்புகும் நன்னீரானது ஆனையிறவு நன்னீர் தேக்கமாக உருவாகும்.
முள்ளியான் பகுதியூடாக வடக்கில் அமைந்த வாய்க்கால்கள் இந்நீர் தேக்கத்தை யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஏரியாகிய வடமராட்சியைத் தொடும்.
நீண்ட நீர்ப்பரப்பை உடைய வடமராட்சி ஏரியானது பச்சிலைப்பள்ளியில் அமைந்த முள்ளியானில் இருந்து செம்பியன்பற்று, எழுதுமட்டுவாள், வரணி, கரவெட்டி, வல்லைவெளி, ஊடாக பரந்து சென்று வல்வெட்டித்துறைக்கு அண்மையில் உள்ள தொண்டமானாற்றினூடாக கடலுடன் தொடுக்கிறது. இதன் கிளையானது சரசாலையில் தொடங்கி யாழ்ப்பாணப் பட்டினம் நோக்கி பரந்து செம்மணிக்கு அண்மையில் உள்ள அரியாலைக் கடலை அடைகின்றது.
இது கிட்டத்தட்ட ஒரு மைல் அகலமாக குடாநாட்டில் இருதயப் பகுதியில் கூடுதலாகவோ குறைவாகவோ முழுமையாக பரந்து காணப்படுகின்றது. இது குடாநாட்டின் வாழ்க்கையிலே தாக்கத்தை செலுத்தும் முழுமையான வைப்பகமாக இருக்கிறது.
தொண்டமானாற்றில் பூர்த்தியாக்கப்பட்ட 600 அடி நீளமான தடுப்பணை ஊடாக கடல் நீர் உட்புகுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆனையிறவில் செய்யப்பட வேண்டிய வேலைத்திட்டம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
ஆனையிறவு பாலத்திற்கு அருகிலே உள்ள தடுப்பணை கனகராயன் ஆற்றிலிருந்து வரும் வெள்ள நீரை சேமித்து பாதுகாத்து மேற்குப் பகுதியில் உள்ள கடல் நீர் ஊடுருவாமல் தடுக்கும்.
இதன் கிழக்கு எல்லையில் சுண்டிக்குளத்தில் அமைந்த ஒன்றேகால் (1.25) மைல் நீளமான பாதையோடு இணைத்து கட்டப்பட்ட தடுப்பணையும், வானும் மேலதிக வெள்ள நீரை பாதுகாப்பாக கடலுக்குள் செலுத்துவதற்கும், கடல் நீர் கிழக்கிலுள்ள ஏரியினுள் உட்புகாலும் உறுதிப்படுத்தும், இவ்வாறு கிழக்கிலும் மேற்கிலும் அமைக்கப்பட்ட கட்டமைப்புக்கள் மேலதிக வெள்ள நீரை பெற்று பாதுகாப்பாக சேமித்து வைக்கும்.
அதே நேரத்தில் இதன் மூன்றாவது அங்கமான இணைப்புக் கால்வாய் தேங்கிய நீரை யாழ்ப்பாண குடாநாட்டின் இருதயப்பகுதிக்கு கொண்டு செல்லும், இவ் வேலைத்திட்டத்தின் முடிவில் கனகராயன் ஆற்றின் வெள்ள நீர் ஆனையிறவு ஏரி மற்றும் வடமராட்சி ஏரிகளின் உவர் நீர் தன்மையை படிப்படியாக நீக்குவதற்கு பயன்படும்.
வண்டல் படுக்கை அமைந்த இரண்டாம் நிலை தேக்கத்திலும் பார்க்க உவர் நீர் வெளியேறி களிமண் படுக்கையுள்ள முதன்மை நீர்த்தேக்கம் அமைவதற்கு விரைவுபடுத்தும். குறுகிய காலத்தில் உவர்த்தன்மை குறைப்பானது உடனடியாக முடிவுக்கு கொன்டுவரப்பட முடியாத போதிலும் இதனால் ஏற்படும் நன்மைகளைப் பெறுவதற்கு அதிக காலம் காத்திருக்கத் தேவையில்லை.
இதன் பயன்கள் உடனடியாக வந்தடையாமல் ஒவ்வொரு மழைக்காலத்தின் பின்பும் மேலும் மேலும் விருத்தியடையும். மேலும் பகுதியான உவர் நீரானது பயன்படுத்த முடியாவிட்டாலும் வேளாண்மைக்கு உகந்ததாக காணப்படும் அதேவேளை இந்நிலை குடா நாட்டின் கரையோரப் பகுதிகளில் உள்ள பல கிணறுகள் மூலமாக செய்யப்படும் வேளாண்மையினால் இது புலப்படும்.
நாட்கள் செல்லச் செல்ல மாசி பங்குனி சித்திரை மாதங்களில் உள்ள கூடிய வெப்பத்தினால் குறிப்பிடத்தக்க ஆவியாதல் நிகழும் இரண்டாம் நிலை நீர்த்தேக்கத்தின் கூடிய அளவான நீர் இழப்பை ஆனையிறவு நீர் தேக்கத்திலிருந்து நீரை கால்வாயினுடாக செலுத்தி இரண்டாம் நிலை தேக்கத்தை தொடர்ந்தும் நிரம்பல் நிலையில் வைத்திருக்கலாம்.
இவ்வாறான நிரப்பு நிலையானது தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக் காலமான ஆனி, ஆடி மாதங்களில் ஏற்படும் பாரியளவு ஆவியாதலின் விளைவாக இச் செயற்பாடு சாத்தியமற்றதாக இருக்கும்.
இதன் விளைவாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஏரி அமையும் பாரிய நன்னீPரேரியைக் கொண்டிருப்பதன் விளைவாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள நிலங்கள் விருத்தியடைந்து பன்மடங்கு நன்மையடையும்.
இதன் மூலம் நிலக்கீழ் நீர் தாராளமாக அமைவதோடு நீர் மட்டமும் உயர்வடையும் வருடங்கள் செல்லச் செல்ல கிணற்று நீர் மட்டமும் உயர்வடையும்.
இந்நிலத்தின் கீழுள்ள மண்ணின் ஈரப்பதன் அதிகரிக்கும். தாவர வளர்ச்சி பல்கிப் பெருகும். தென்னைகளுக்கும் ஏனைய மரங்களுக்கும் கோடையில் ஏற்படும் உற்பத்தி வீழ்ச்சி நிலைமை இல்லாமல் போகும். இத் திட்டம் அமைந்துள்ள ஏரியின் அண்மையில் உள்ள 15,000 ஏக்கரிலும் மேலான காணிகள் வேளாண்மை விருத்திக்கு உதவும். மேலும் வவுனியா மாவட்டத்தில் உற்பத்தியாகும் கனகராயன் ஆற்றின் நீரை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கொண்டுவந்து தொண்டமானாறு மற்றும் யாழ்ப்பாணப் பட்டிணத்தின் எல்லையில் அமைந்துள்ள அரியாலையில் உள்ள வானூடாக பாயச் செய்யும். இதுவே யாழ்ப்பாணத்துக்கான நீர்த் தேவையை பூர்த்தி செய்ய சரியான தீர்வு.
(இலங்கை எந்திரிமார் சங்கத்தின் ஞாபகார்த்த வெளியீட்டில் கௌரவிக்கப்பட்ட மிகச் சிலரில் ஒருவரானவரும் முன்னாள் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக கடமையாற்றிய எந்திரி.எஸ் ஆறுமுகத்தின் தூரநோக்கை விளங்குவதற்கு அடிப்படையாக 1954 இல் முதன் முறையாக வெளியிடப்பட்ட இக் கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.
தமிழாக்கம்
ஏந்திரி.ஏ.ரகுநாதன், இளைப்பாறிய நீர்ப்பாசனப் பணிப்பாளர்,
ஏற்பாட்டுக்குழு
எந்திரி.எஸ்.ஆறுமுகம் நினைவுப் பேருரை
யாழ்ப்பாணம் 11.01.2012)
 
 
Checked
Thu, 04/18/2024 - 02:29
சமூகவலை உலகம் Latest Topics
Subscribe to சமூகவலை உலகம் feed