சமூகவலை உலகம்

சிறுகதை 'மகிழ்' - சோம.அழகு

3 days 14 hours ago

மகள் சோம. அழகு 'திண்ணை' இணையத்தில் எழுதிய, 'மகிழ்' என்று தலைப்பிட்ட சிறுகதையை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.

                  மகிழ் !    

                                  -------சோம. அழகு

 

 

OIG2-2.jpeg

உவன் பணிக்குச் சென்ற பின் சுடச்சுட போர்ன்விட்டாவுடன்(உவள் ஒரு ‘tea’totaller! ஏன்? தேநீர் என்று எழுதினால்தான் எழுத்துக்குரிய இலக்கணமும் உணர்வும் பெறுமா? தேநீரின் ஒவ்வொரு மிடறுக்கும் சற்றும் சளைத்ததல்ல இது!) வந்து மெத்திருக்கையில் கால் நீட்டி அமர்ந்தாள் உவனது உவள். தரையில் விரவியும் சிதறியும் கிடந்த சாமான்களுக்கு நடுவில் உவர்களது இரண்டரை வயதுக் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.

குழந்தையைப் பார்த்துக் கொண்டே தனது கோப்பையைக் காலி செய்தாள். முந்தைய நாள் உவனுக்கும் தனக்கும் இடையில் துவங்கிய வேகத்தில் மின்னலென முடிந்த உரையாடல் நினைவிற்கு வந்தது. அதன் விதை விழுந்தது மூன்று மாதங்களுக்கு முன்.

மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் திடீரென விளையாட்டாக உவன் கேட்டான்,
“நாம இன்னொரு கொழந்த பெத்துக்கலாமா?”
“என் உடம்பு ஒத்துழைக்கணுமே” என்றவள் சட்டென கேட்டாள் “நாம ஏன் ஒரு குழந்தைய தத்தெடுக்கக் கூடாது?”

உவள் விளையாட்டாக அல்லாமல் நிஜமாகத்தான் கேட்கிறாள் என்பதை உணராமல் “ஹாஹா… எனக்கு என் பிள்ளைதான் வேணும்” என்று சிரித்தவாறே சொல்லிச் சென்றான். உவளையும் அறியாமல் ரொம்ப மெனக்கெடாமல் அவ்வளவு பெரிய விஷயம் மிகச் சாதாரணமாக வெளிப்பட்டது முதலே அவ்வெண்ணம் உவளைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதன் பிறகு அது குறித்து உவன் கூற சாத்தியமுள்ள எல்லா வகையான காரணங்களையும் மனதினுள் போட்டு அலசி ஆராய்ந்து அதற்கெதிரான சரியான வாதத்தை முன்வைத்து உவனை சம்மதிக்க வைக்கும் வழிமுறைகளை ஆராயத் துவங்கினாள்.

“என்னதான் இருந்தாலும் சொந்தப் பிள்ளை மாதிரி வராது” – “இதெல்லாம் மனசு சம்பந்தப்பட்டது. ஒரு குழந்தையின் மீது ஊற்றெடுக்கும் அன்புக்கு வரைவிலக்கணம் ஏது? பெற்றோர்களாவதற்குக் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. அதனால் தத்தெடுக்கலாம். குழந்தை பெற்றுக் கொள்வதாலேயே பெற்றோர்கள் என்பதும் இல்லை. ஆம் எனில் அநாதை இல்லங்களே இருக்காதே.”

“ஏன் தத்தெடுக்கணும்னு எண்ணம் வந்துச்சு உனக்கு?” – “இன்னொரு குழந்தை வேணும்னு முடிவு பண்ணிட்டோம். அதை அர்த்தமுள்ளதா ஆக்கலாம்னு… யாருமே இல்லாம போன சக உயிருக்கு ஒரு அழகான குடும்பத்தைக் குடுக்கலாமே… இது சமூகத்துல பெரிய மாற்றத்தை ஒண்ணும் கொண்டு வரப் போறதில்லதான். Just one less orphan in the world is all we can do”
இப்படியாகப் பல பல தருக்கங்களை மனதளவில் தயார் செய்து வைத்திருந்தவள் முந்தைய நாள் மெதுவாக உவனிடம், “ப்பா… ஒரு குழந்தைய தத்தெடுத்துக்கலாம்னு எனக்கு தோணீட்டே இருக்கு” என்றதற்கு “எனக்குத் தோணல” என்று ‘எனக்கு’ல் அழுத்தம் வைத்துத் திருத்தமாக உடனே வந்து விழுந்தது மறுமொழி. “அதான் ஏன்?” என்று கேட்கும் முன்னரே வலுக்கட்டாயமாக ஒரு அலைபேசி அழைப்பில் தன்னை இணைத்துக் கொண்டான் உவன். அனைத்துத் தயாரிப்புகளும் தவிடுபொடியாயின. கற்பனையில் நிகழ்ந்த ஒத்திகை உரையாடல்கள் யாவும் ஒரு வாய்ப்பு கூட பெறாததால் பாவம்போல் உவளையே பார்த்துக் கொண்டிருந்தன. அதைப் பற்றித்தான் இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறாள்.

பேச்சுவார்த்தைக்கு வந்தால்தானே ஒப்புக்கொள்ள வைக்க முடியும். முதல் அடியே சறுக்குகிறதே! இன்று எப்படியும் விடுவதாயில்லை. பிடித்து வைத்தாவது கேட்டு விடுவது என உறுதி பூண்டவாறே மீண்டும் எல்லாவற்றையும் தன் மனதில் ஓட்டியபடி ஆயத்தமானாள்.

உவன் உவளைப் போல அப்படி ஒன்றும் பிடிவாதக்காரன் இல்லை. அதனால் எப்படியும் உவனை சம்மதிக்க வைத்து விடுவோம் என்ற நம்பிக்கையில் கனவு காணத் துவங்கினாள். இப்போது உவள் கண்களுக்குத் தன் மகளுடன் இன்னொரு குழந்தையும் சேர்ந்து அங்கே விளையாடிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது கண்டு பூரித்துப் போனாள். இரண்டு செல்வங்களையும் அள்ளிக் கொஞ்சிக் கொண்டாள். காலியாக இருக்கும் ஒரு கை சீக்கிரமே நிரம்பப் போகும் உவகை உவளை ஆட்கொண்டது. அப்போதிருந்த மகிழ்ச்சியான மனநிலையில் அக்குழந்தைக்குப் பெயர் கூட வைத்துவிட்டாள் – ‘மகிழ்’.

எவ்விதத் தயக்கமும் இன்றி எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள, தனது நியாயங்களை முழுதாகப் புரிந்து கொள்ள, ஒரே விஷயத்திற்கு ஆயிரம் முறை உடைந்து போய் புலம்பித் தீர்த்தாலும் கொஞ்சமும் சலிக்காமல் ஒவ்வொரு முறையும் முதுகில் தட்டிக் கொடுத்து ஆறுதலளிக்க தானும் தங்கையும் எப்படி ஒருவருக்கொருவர் இருக்கிறோமோ அதே போல் தன் மகளுக்கும் ஒரு சகோதரனோ சகோதரியோ வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? வரத்தான் போகிறார்கள்.

அப்பாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அன்னாரது முற்போக்கான கொள்கைகளையும் சிந்தனையோட்டத்தையும் வைத்து எளிதில் சொல்லலாம் – தத்தெடுக்கும் முடிவை மனமுவந்து வரவேற்பார்கள். அவர்களின் ஆளுமை அப்படி. அம்மா எதையுமே பெரிதாக எதிர்க்க மாட்டாள். ‘இது சரியா வருமா?’ என அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே குழந்தையைக் கொண்டு போய்க் காண்பித்தால் போதும்.

எல்லாவற்றையும் மறந்து அப்படியே உச்சி முகர்ந்து கொஞ்சித் தீர்த்து அன்பைப் பொழிவாள்.

தங்கையிடம் ஏற்கெனவே இதைப் பற்றிச் சொன்ன போது, “செம டா… Can’t wait to meet my next niece/nephew” என்று குதூகலித்தாள். இவ்வாறாக நிஜமாகவே ஒரு குழந்தையைத் தத்தெடுத்துவிட்ட உணர்வில் மிதந்தாள் உவள்.

மாலை வீடு திரும்பிய உவனுக்கு நல்ல இஞ்சித் தேநீர் இட்டுத் தந்தாள். வாழ்க்கையில் ஏதாவது ஒரு கெட்ட பழக்கமேனும் வேண்டுமல்லவா? அதன் பொருட்டு டீ, காபி பழக்கத்தைக் கைவசம் வைத்திருந்தான். ஓய்வான அமைதியான மனநிலையில் உவன் இருப்பதை உறுதிப் படுத்திக் கொண்டு மெல்ல அருகில் சென்று சம்மணமிட்டு அமர்ந்தாள்.

“ப்பா…”

“ம்ம்..?” – அலைபேசியில் இருந்து கண்களை அகற்றாமலேயே உவளிடம் கேட்டான். நெளிய வைக்கும் அமைதியைச் சுற்றிலும் படர விட்டு உவனது கைகள் காலியாகி கண்களில் தன் பிம்பம் நிறையும் வரை காத்திருந்தாள். உவளது இந்த மௌனம் இடும் ஆணை உவனுக்கு ரொம்பவே பரிச்சயம் ஆதலால் அலைபேசியைக் கீழே வைத்து விட்டு உவளைப் பார்த்து கேட்டான்… “சொல்லுடா மா…”

“கொஞ்சம் பொறுமையா நான் சொல்லுறத முழுசா கேளுங்களேன்… உங்க காரணத்தையும் தெரிஞ்சுக்க விரும்புறேன். உங்களுக்கு ஏன் தத்தெடுக்க வேண்டாம்ணு தோணுது?” தொடர்ந்து தான் யோசித்து வைத்தவற்றையெல்லாம் கூறினாள்.

சிறிது நேரம் ஆழமாக உவளை உற்று நோக்கி பின்பு கூறினான்.

“என்னோட எண்ணம் சரின்னு சொல்லமாட்டேன். ஆனா எதார்த்தத்துக்குப் பக்கத்துல நின்னு சொல்றேன். புதுசா வர்ற குழந்தையையும் நம்ம பாப்பாவையும் ஒரே மாதிரி நினைக்க முடியுமான்னு தெரியல…”

“ஒருவேளை நமக்கு பாப்பா பொறக்காம போயிருந்தா…?”

“கண்டிப்பா தத்தெடுத்துருப்போம். அப்போ ஒப்பீடுங்குற பேச்சுக்கே இடம் இல்லையே! அப்போ நம்ம உலகமே அந்த குழந்தைதான்னு ஆகும்போது மொத்த அன்பையும் அதுகிட்ட தான் காமிப்போம்.”

“அது இப்போ அப்பிடிதான் பா இருக்கும். கொழந்தைன்னு வந்து நம்மளோடதுன்னு ஆன பிறகு எல்லாமே மாறிடும்”

“ஒருவேளை மாறலன்னா…. எப்பவும் ஒரு சின்ன வித்தியாசம் ஆழ் மனசுல நம்மளையும் அறியாம இருந்துட்டே இருக்குமோன்னு பயமா இருக்கு. ஏதோ ஒரு சூழல்ல அது லேசா எட்டிப் பார்த்தா கூட என்னை என்னாலயே மன்னிக்க முடியாது. பாவம் அந்தப் பிஞ்சு என்ன பாடு படும்? நம்மள விடு… சுத்தி இருக்கவங்க எப்படி அணுகுவாங்கன்னு நெனச்சு பாத்தியா?”
“அப்பா அம்மால்லாம் சந்தோஷமா….” – உவள் முடிக்கும் முன்னரே குறுக்கிட்டான்.

“அத்தை மாமா எவ்ளோ பரந்துபட்ட பார்வை உள்ளவங்கன்னு எனக்குத் தெரியும். என்ன பிரச்சனைனா நம்மள சுத்தி இருக்குறது அவங்க மட்டும் இல்ல”
“ஊருக்காக வாழ முடியுமா?”
“கொழந்தைய வீட்டுக்குள்ளயேவா வச்சு வளர்க்க முடியும்? வெளிய எங்கயாவது… உதாரணமா ஒரு விசேஷ வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகும் போது எல்லாரும் பாப்பாவைப் பாக்குற மாதிரியே அந்தக் குழந்தையையும் பார்ப்பாங்கன்னு சொல்ல முடியாது. பாப்பாவை மட்டும் தூக்கிக் கொஞ்சி அந்தக் குழந்தைய ரெண்டாந்தரமா நடத்துனா அந்தக் குழந்தை பரிதவிச்சுப் போய்டாதா? பாவம்… அதுக்கு என்ன நடக்குதுன்னு கூடப் புரியாது. ஊருக்குப் பாடமா எடுக்க முடியும்? இதுல வேற சில சில்லரைங்க நேரிடையாவோ நாசூக்காவோ அந்தக் குழந்தைக்கு அரைகுறையா விவரம் தெரிய ஆரம்பிக்குற வயசுல ‘தத்துப்பிள்ளை’ அது இதுன்னு உளறி வச்சா…? அப்படிப்பட்ட ஜென்மங்களும் நம்மளச் சுத்தி இருக்குல்ல?”

“அதுக்கு அப்புறம் நாம உரிமையா நல்லதுக்குக் கண்டிச்சாலும் குழந்தைக்கும் நம்மளுக்கும் வித்தியாசமாதான் தெரியும், இல்ல?”

“அதுக்குதான் சொல்றேன். நீயே யோசிச்சுப் பாரு மா…” என்றபடி உவள் கரங்களைப் பற்றினான்.

குழந்தை ஏதோ கேட்டு அழ ஆரம்பிக்கவும் “நீ உட்காரு… நான் பாத்துக்குறேன்” என்றபடி எழுந்து சென்றான்.

தன்னுள் எழ வாய்ப்பிருக்கும் பாரபட்சம் குறித்துப் பொய் சொல்கிறான், மனதறிந்து அல்ல. அக்குழந்தையையும் தன்னுயிராகவே சீராட்டுவான். பிறரைச் சார்ந்து உவனுள் எழும் மனத்தடையைப் பற்றி உவள் யோசிக்கவே இல்லை. இது இன்னொரு மனமும் அதன் உணர்வுகளும் சம்பந்தப்பட்டது. விட்டால் எதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு ஆதரவற்ற அவ்வாழ்க்கைக்குப் பழகி அதன் போக்கில் வளர இருக்கும் ஒரு குழந்தையைக் கூட்டி வந்து புண்படும் சூழலுக்கு ஆளாக்கிவிடக் கூடாது. இந்தக் கரிசனமும் அக்கறையும் புரிந்தாலும் சமாதானமளிப்பதாக இல்லை உவளுக்கு.

முன்பின் பார்த்திராத அந்தக் குழந்தைக்காகவும் உலகையே எதிர்க்கத் துணிவும் முனிவும் கொண்டாள். ஆனால் உவனது நியாயங்களில் தானாக விளங்கி நின்ற நிலைப்பாட்டில் உவளது பகற்கனவில் உவளை நோக்கி ஓடி வந்த அக்குழந்தை இப்போது அப்படியே பின்னோக்கிச் சென்றது. ஒளியாகத் தெரிந்த அதன் முகத்தை உவள் சரியாகக் கூடப் பார்த்திருக்கவில்லை. ஏனோ அழுகை வருவது போல் நெஞ்சம் இறுகித் தொண்டை கட்ட ஆரம்பித்தது.

“மகிழ்…” என ஆசையாக ஒரு முறை விளித்தாள். “அம்மா” என்று கேட்டது உவளுக்கு மட்டும், உலகின் ஏதோ ஒரு மூலையிலிருந்து. இரண்டாம் முறையாகச் சிலிர்த்தாள்.

 

நன்றி 'திண்ணை' இணைய தளம்.

லௌ(வ்)கீகம் - T. கோபிசங்கர்

6 days 19 hours ago

லௌ(வ்)கீகம் 

இப்பவுமே “ லவ் மரீஜ்” எண்டு சொல்லிறதை செய்யக்கூடாத ஒரு பாவமாத்தான் ஊர் பாக்கிறது .சாதி, மதம் தாண்டி “ லவ்” எண்டாலே ஒரு தீண்டாமையான விசயமா இருந்திச்சுது . 

பள்ளிக்கூடத்தில படிக்கேக்க பெடியளுக்கு லவ் ஏன், எப்பிடி வாறதெண்டு தெரியாது, பிரண்ட் ஒருத்தன் “அநேமா மச்சான் அவள் உன்னைத்தான் பாக்கிறாள்”எண்டு உசுப்பேத்திவிட வாற காதல் தான் கூட. Friend உசுப்பேத்திறதோட மட்டுமில்லை ஊரெல்லாம் பரப்பியும் விடுவான். “ ஏன்டா எண்டு கேட்டா“ ஏற்கனவே ஒருத்தன் பாக்கிறான் எண்டு தெரிஞ்சா வேற ஒருத்தனும் பாக்க மாட்டான்டா” எண்டு விளக்கம் சொல்லுவான். 

பழகிப்பாத்து பாத்து வாறதில்லை பெடியளின்டை லவ். பாத்தோன்னயே வரும் , எதைப்பாத்து பிடிக்குது எண்டு தெரியாது. “மச்சான் ஏன்டா அவளை லவ் பண்ணிறாய்” எண்டு கேட்டா விளக்கம் சொல்லத் தெரியாது. பாக்கத் தொடங்கேக்க சிலவேளை தானாப் பாத்தாலும் இன்னொருத்தன்டை தயவில்லாமல் ஒப்பேத்த முடியாது. பாக்கிற மட்டும் தான் அவன்டை வேலை, மிச்சம் எல்லாத்தையும் பக்கத்தில இருக்குறவன் பாத்துக்கொள்ளுவான். தனக்கு ஏலாததை இன்னொருத்தன் செய்யிறான் எண்டோ, இல்லாட்டி இதோட இவன் அழிஞ்சு போகட்டும் எண்டோ தெரியேல்லை. என்னொருத்தன்டை “லவ்வுக்கு” உதவிறதெண்டால் பெடியள் எல்லாம் ஒற்றுமையாச் செய்வாங்கள்.

சில வேளை மற்றவன் எல்லாம் பாக்கிறான் எண்டு போட்டு ஒருத்தன் தானும் ஒண்டைப் பாப்பம் எண்டு போட்டு கோயில்லயோ, ரியூசனிலயோ கண்ட பெட்டையை சைக்கிளில விட்டுக்க கலைக்கிறாக்கள் கனபேர். அநேமா அது சைக்கிளில போகேக்க நாய் கலைக்கிற மாதிரி கொஞ்சத் தூரத்தில நிண்டிடும். சிலர் மட்டும் sincere love பண்ணிற எண்டு சொல்லித் திரிவினம். 

ஆனால் serous ஆ love பண்ணிற ஆக்கள் மட்டும பிள்ளைகளை விட்டுக் கலைச்சுப் பின்னால போய் எந்த ஊர், எங்க வீடு எண்டு கண்டு பிடிக்கிறது முதல் வேலை. அதுக்குப் பிறகு அந்நபர் பிள்ளை வீட்டால வெளிக்கிட்டு பள்ளிக்கூடம் இல்லாட்டி ரியூசன் போய்த் திருப்பி வாற வரை முன்னுக்கும் பின்னுக்குத் திரிய வேணும். இப்பிடித் திரியேக்க சந்தேகப்பட்டு ஆரும் மறிச்சுக்க கேட்டா சொல்லக்கூடிய மாதிரி அடுத்த வீடு, பக்கத்து ரோட்டில இருக்கிற ரெண்டு பேரின்டை பேரைத் தேடி அறிஞ்சு வைக்க வேணும். 

ஒருக்கா ஒருத்தன் சொன்னதைக் கேட்டு நட்புக்காக இப்பிடி ஒரு காதல் தூது போகேக்க மறிச்சுக் கேட்டவனுக்கு சேட்டை வெளீல இழுத்து விட்டிட்டு இயக்கம் மாதிரி காட்ட, அவன் கொஞ்சம் எங்களை முறைக்க பாத்தா மறிச்சவன் அந்தப் பெட்டையின்டை தமையன், அதோட உண்மையில இயக்கம். ஒரு மாதிரிக் காலில விழாக் குறையா கெஞ்சித் தப்பி ஓடினதோட அந்தக்காதல் முடிஞ்சு போனது. 

இதையும் எல்லாம் தாண்டிப் போய் love பண்ணிற எண்டால், கடைசி வரை பின்னால போய் எங்கடை லவ் strong எண்டு காட்ட வேணும்.முதல்ல தனியப் போனவளவை நாங்கள் பின்னால போறது தெரிய வர ரெண்டு body guards friend எண்டு கூட்டிக்கொண்டு போவினம். அநேமா எரிச்சலில அந்த ரெண்டு friend இல ஒண்டாவது குட்டையைக் குளப்பும். 

அதை சமளிச்சு, வேறயாரும் போட்டியாப் பாத்தா அவனை ஒரு மாதிரிக் வெருட்டி பாக்கிறதை விடப் பண்ணி அப்பன் காரனிலும் மோசமான bodyguard வேலை பாக்கோணும். அதுக்குப் பிறகு வாயைத் துறந்து கதைக்காம அவை கண்ணால வாயால குடுக்கிற soft signalஐ கண்டு பிடிக்க வேணும். 

இதை எல்லாம் கவனிச்சுக் கடைசீல என்னைப் பாத்துச் சிரிக்கிறாள் எண்டு நம்பிப் போய்க் கேட்டா வாற பதில் இருக்குதே; 

“நான் இப்ப படிக்கோணும் , ஐயோ இங்க ஆரும் கண்டாப் பிரச்சனை, நான் டொக்டரா வரோணும், அப்பா அம்மாக்குப் பிடிக்காது, அதில வாறது தெரிஞ்ச ஆக்கள் “ , எண்டு அவளவை சொல்லிற மறுமொழி ஓமா இல்லையா எண்டு தெரியாம குழம்பித்திரிய, அடுத்த நாள் friends இல்லாமத் தனிய வரத்தான் விளங்கும் அது green signal தான் எண்டு. அவள் சொன்னது என்ன எண்டு விளங்காமல் இண்டைக்கும் தேவதாஸாக இருக்கிறாக்களும் இருக்கினம். 

இது பள்ளிக்கூட காலத்தில ஆனால் கம்பஸ் போற நேரத்தில எல்லாம் மாறீடும்.

“ கம்பஸுக்குப் போறாய் , படிப்பில மட்டும் கவனமாய் இரு அவன் இவனைப் பாத்து காதல் கீதல் எண்டு வந்தால் “ எண்டு அம்மா சொல்ல முதல் ,“ வந்தால் என்ன எண்டு “ மகள் கேக்க ,

“ வந்து பார் தெரியும் “ எண்டு அம்மா சொல்ல , அதுக்கு அம்மம்மா ஒத்து ஊத, அப்பர் ஒண்டும் கேக்காத மாதிரி இருக்க”, 

இந்தச் சம்பாசணை அநேமா எல்லா வீட்டையும் கம்பஸ்ஸுக்கு போற முதல் நாள் இருக்கும்.

அப்பாடா இயக்கத்திக்குப் போகாமல் பெடி ஒருமாதிரி கம்பஸ் போட்டான் எண்டு சந்தோசப்பட்ட அம்மாமாருக்கு கம்பஸுக்கு பிள்ளைய அனுப்பேக்க வாற அடுத்த கவலை பிள்ளை அங்க ஆரையும் பாத்திடுமோ எண்டு. அது பெடியனோ பெட்டையோ அம்மாமருக்கு படிப்பிலும் பாக்க இது தான் பெரும் கவலை.

அம்மான்டை கதையால கம்பஸ் போறது ஏதோ love visa கிடைச்ச மாதிரி எண்டு நெச்சு உசுப்பேறிற பெடியள் கம்பஸு்ககுள்ள எப்பிடியும் ஒண்டு சரிவரும் எண்டு நம்பி வந்து கடைசிவரை கரைசேராமல் போன கதை கனக்க இருக்கு.

கடுவன் பள்ளிக்கூடத்தில படிச்சவனுக்கு கம்பஸுக்க போன காஞ்ச மாடு கம்பில விழுந்த மாதிரி இருக்கும் , ஆனால் போனாப்பிறகு தான் தெரியும் அங்க இருக்கிற கஸ்டம். 

கல்வியே கண்ணாய் வாறதுகள் கண்ணெடுத்துப் பாக்காதுகள். அதுகும் medical faculty எண்டால் அது எட்டாக் கனி தான். அதால தான் கனபெடியள் stethoscope ஐ வெளீல விட்டபடி திரிஞ்சு பத்தாம் வகுப்பு படிக்கிறதில வெள்ளைப் பிள்ளையாப் பாத்துச் சுத்தித் திரிவாங்கள். பாக்கிற பெட்டை மட்டும் பாக்காது மாதிரி திரியப் பக்கத்தில போறது உதவிக்கு வரும் கேக்காமலே. “அவர் doctor ஆம்” எண்டு தூது செல்ல, செலவில்லாமல் கரைசேருது எண்டு அம்மாமார் ஓம் சொல்ல, படிச்சு முடிச்சுப் பட்டத்தோட போகேக்க கட்டிக்கொண்டு போயிடுவாங்கள். 

ஆனாலும் கம்பஸில வந்த நாள் முதல் கடைசீல போற நாள் வரை போராடி விக்கிரமாதித்தன் மார் வேதாளத்தை பிடிக்கேலாமல் போன கதைகள் இருக்கு. அதே போல படிக்கேக்க தம்பதிகளாய் திரிஞ்சிட்டு தம் பாதைகளை பாத்துப் போன கதையும் இருக்கு . கடைசிவரை இவனுக்கு இந்தப் பெட்டை சரிவராதெண்டவன் கடைசிக்காலத்தில சேந்த கதை எண்டு நிறையக் கதை இருக்கு. 

வெளீல இருந்து பாக்கிறாக்களுக்கு சனம் வாகனம் ஓட license கிடைச்ச மாதிரித்தான் கம்பஸுக்கு வந்தால் love பண்ண license கிடைச்சிடும் எண்டு நெக்கிறது. ஆனால் அதுக்குள்ளயும் love பண்ணி ஒப்பேத்திறது arrears முடிக்கிறதலும் பாக்கக் கஸ்டம்.

ஒருத்தருக்கும் தெரியாமத்தான் love பண்ணிறம் எண்டு love பண்ணிறவை மட்டும் நெச்சுக் கொண்டிருக்க, FB profile, what’s app status எண்டு ஒண்டும் இல்லாத காலத்திலேம் love பண்ணினனாம் எண்ட கதை ஊரில பரவீடும். “ என்ன என்னமோ கேள்விப்பட்டன் , ஆர் பெட்டை” எண்ட விடுப்புக் கேள்விகளில இருந்து தப்பிறது பெரிய பிரச்சினை. பெட்டைகள் தாங்களாகவே friendsக்கு ஒருத்தருக்கும் சொல்லவேணாம் எண்டு சொல்லியே எல்லாருக்கும் சொல்லிப்போடுங்கள். 

வீட்டை தெரியாம love பண்ணேக்க முதல் தெரிய வாறது அநேமா பெட்டைகள் வீட்டில அம்மாவா இருக்கும். பொறாமை பிடிச்ச ஒருத்தனோ இல்லாட்டி ஒருத்தியா தெரியாம செய்யிற உதவி இது. பிறகு மெல்ல அம்மா அப்பாவுக்குச் சொல்ல எண்டு வட்டம் விரியும்.

ஆனால் பெடியள் வீட்டில அம்மாமார் தெரிஞ்சாலும் தெரியாத மாதிரியே இருப்பினம். 

என்னதான் இருந்தாலும் love பண்ண முடிவெடுத்து , அலைஞ்சு திரிஞ்சு, ஒமா எண்டு கேட்டு Visa apply பண்ணீட்டு முடிவுக்காக wait பண்ணிற மாதிரி பாத்துக் கொண்டிருந்து, முடிவு தெரியாம அலைஞ்சு, ஓம் எண்டு சொன்னாப் பிறகு ஒழுங்கை வழிய ஒளிஞ்சு கதைச்சுத் திரிஞ்சு , அப்பப்ப வாற சண்டைப் பிரச்சினைகளுக்கு எல்லாம் முகம் குடுத்து, பிறகு கட்டும் வரை வேற ஆரும் பா(தூ)க்காமப் பாத்து , கட்டிற நிலைமை வர வீட்டில விசயத்தை சொல்லி , அந்தப் பூகம்பத்தையும் ஒரு மாதிரி சமாளிச்சு கலியாணம் எண்டு முடிவாக கையில இருக்கிறதை வைச்சு ஒருமாதிரிக் கலியாணமும் கட்டீட்டு முதல் நாள் கட்டில படுத்துக் கொண்டு யோசிக்க …

Dr .T. கோபிசங்கர்

யாழப்பாணம்

1950களில் வீரகேசரி நாளிதழின் அலுவலகம்.

2 weeks 2 days ago

spacer.png

1950களில் வீரகேசரி நாளிதழின் அலுவலகம். 
இந்தப் புகைப்படம் தொடர்பாக ஒரு அன்பரின் கருத்து இதோ...
வீரகேசரி நிறுவனம் 1930 ஆம் ஆண்டு சுப்ரமணிய செட்டியாரால் செட்டியார் தெருவில் ஆரம்பிக்கப்பட்டது. வீரகேசரி என்பது அவரது மகனின் பெயர். சில மாதங்களே செட்டியார் தெரு அலுவலகம் செயற்பட்டது. பின்னர் சில காலங்கள் மருதானையில் செயற்பட்டது. பின்னரே கிராண்ட்பாஸ் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு இன்று வரையும் இயங்கி வருகின்றது. மருதானையில் அலுவலகம் செயற்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட படமே இது. இப்படத்தில் தோளில் கருப்பு துண்டுடன் நிற்பவர் இலங்கை திராவிட கழகச் செயலாளராகவும் இந்திய இலங்கை தொடர்பாளராகவும் விளங்கிய ஏ.எஸ்.மணவைத் தம்பி ஆவார். இந்த படம் அவரிடமே இருந்தது. தற்போது இலங்கை இந்திய தொடர்பாளராகவும் சிறந்த பண்பாளராகவும் விளங்கும் நண்பர் Manavai Asokan மணவை அசோகன், மணவைத் தம்பியின் மகனாவார். அவரே இந்த படத்தை எமது நிறுவன முகாமைத்துவ இயக்குநருக்கு வழங்கினார். இப்போது அந்த படம் எமது நிறுவனத்திலேயே உள்ளது. அலுவலகத்துக்கு வெளியே நிற்கும் கார் அவருடையது. காரில் திராவிட கழக கொடி இருப்பதை காணலாம்.

சாண் ஏற பப்பா சறுக்கும் - T. கோபிசங்கர்

2 weeks 3 days ago

சாண் ஏற பப்பா சறுக்கும் 

நேற்றைக்கு விட்டதை எப்பிடியாவது இண்டைக்குப் பிடிக்கோணும் எண்ட எண்ணம் இரவு நித்திரையைக் குழப்பிச்சுது. நித்திரையால காலமை எழும்பி வீட்டில ஒருத்தரும் பாக்காத நேரம் அலுமாரிப் பெட்டீக்க பயந்து பயந்து வைச்ச கைக்கு அம்பிட்டதோட போனன் , “ எப்பிடியும் விட்டதை இண்டைக்கு பிடிக்கிறதெண்டு “ . 

காலமை முழுக்க கவனம் சிதறினபடி இருக்க மத்தியானம் சாப்பாட்டு மணி அடிச்ச உடனயே ஓடிப்போய் ரகசியமா விக்கிறவனைக் கண்டு பிடிச்சு கையில இருக்கிற காசை குடுத்தா மூண்டு தந்தான்.

புளியமரத்தடீல போய் நிண்ட ஆக்களோட சேர மூண்டு இருந்தால் சேக்கேலாது , குறைஞ்சது நாலாவது வேணும் எண்டு சொல்லி திருப்பி அனுப்பினாங்கள். 

என்னை மாதிரி மூண்டோட நிண்ட ஒருத்தனைக் கண்டு பிடிச்சுக் “ வெற்றிக்கு விளையாடவாறியா” எண்டு கேக்க அவன் சொன்னான் “ ஓம் ஆனால் குறட்ஸ்க்குத்தான் விளையாடலாம்” எண்டு. வாங்கி குறட்ஸின்டை தரம் பாத்து , சாண் விளையாடக் கூப்பிட்டுக் கொண்டு போனன். 

முதல் கட்டுக் கட்டினவன்டை மாபிளைஅடிச்சிட்டு சாண் கட்ட அது வெளீல போட்டுது. பிறகு அவன் கட்ட ரெண்டு மாபிளும் முட்டிக்கொண்டு நிக்க பெரு விரலில எச்சிலைத் துப்பி சுட்டு விரலோட சேத்து பிசுக்க மற்ற மாபிள் அசையாமல் நிக்க பிதுக்கினது தள்ளிப் போய் விழ ஒரு மாதிரி 

அவனை வெண்டு போய் கடைசீல main குறூப்போட சேந்தன். 

கண்ணாடி மாபிளில உள்ளுக்க மூண்டு நிறங்களில பூப் போல design ல தான் முதலில மாபிள் வந்தது அதில பாத்து விருப்பமான கலரைத் தேடித் தேடி வாங்கிறது. பிறகு அதில ஐஞ்சு கலர் உள்ள மாபிளும் வந்திச்சுது. பிறகு ஒரே கலரில உள்ளுக்க bubbles இருக்கிற மாதிரி வந்திச்சுது.  

ஆறாம் வகுப்பில ஒருத்தன் தனி வெள்ளைக் கலரில வெளீல கலர்க் கோடு அடிச்ச மாபிள் கொண்டர , அதுக்கு கிக்கிரி போளை எண்டு பேர் வைச்சம். போளை எண்டு பேர் ஏன் வந்தது எண்டு தெரியாது , ஊரில போளையடி எண்டு தான் சொல்லிறது. 

காற்சட்டையின்ட ஒரு பொக்கற்றுக்க நியூசும் மற்றப் பக்கம் குறட்ஸ்ஸுமாய்த்தான் பள்ளிக்கூடம் போறது. இது அநேமா சோட்ஸ் போட்டவன்டை விளையாட்டாத் தான் இருந்தது.

ஊருக்குள்ள விளையாடிற மாதிரி குழி வெட்டிக் குழிக்குள்ள உருட்டி விட்டிட்டு விழுந்ததை எடுக்கிற விளையாட்டு பள்ளிக்கூடத்தில விளையாடிறேல்லை. இந்தக் குழி விளையாட்டுத்தான் இப்பத்தை “ bowling“ விளையாட்டுக்கு முன்னோடியோ தெரியல்லை. 

பள்ளிக்கூடத்தில புளியமரத்தடீல பப்பா கீறீட்டு யார் முதல் விடிறதெண்ட சண்டை முடிவுக்கு வர ஒவ்வொருத்தரா கட்டத் தொடங்கினாங்கள். விளையாட்டு Expert காரர் விழுந்திருக்கிற புளியமிலையைத் தள்ளிவிட்டிட்டு பப்பா கீறின இடம் மண் எப்பிடி இறுக்கமா எண்டு பாத்து, மேடு பள்ளம் பாத்து, காத்துப் பாத்திட்டு பெருவிரலாலேம் சுண்டு விரலாலேம் பிடிச்ச மாபிளை விரலின்டை கீழ்ப்பக்கமா சுருட்டி விட கோட்டைத்தாண்டிப் போன மாபிள் திரும்பி வந்து பக்கத்தில நிண்டதை தட்டிப் போட்டு கோட்டோட நிண்டிச்சுது. 

நான் கட்டினது side கோடுக்கு வெளீல போய் கடலுக்க போச்சுது. சரி எண்டு திருப்பிக்கட்டினது கோட்டுக்கு கிட்டப் போனாலும் கடைசி தான் எண்டாங்கள். 

முதல் round ல ஒருத்தன் அடிச்சது ரெண்டு மாபிளில படக் குட்டி எண்டு சொல்ல பரவாயில்லை அடிச்ச மாபிளையும் கட்டில விடுறன் எண்டு சொல்லீட்டு திருப்பி அடிச்சவனுக்குப் படாமப் போக கடைசீல என்டை turn வந்திச்சுது. 

கை நீட்டுத் தானே எட்டி அடி எண்டு ஒராள் சொல்ல, இல்லை நீ சுருட்டி spin பண்ணுவாதானே அப்பிடி அடி எண்டு இன்னொருத்தன் சொல்ல , இங்க பார் நேரா அடி, இது தான் கோடு எண்டு கீறி ஒண்டில்லாட்டி மற்றதிலயாவது படும் எண்டு சொல்லி அங்கால நிண்டு காட்டின விரலுக்கு உருட்டி விட்ட மாபிள் ஒண்டிலேம் அடி படாமலே போச்சுது. ரெண்டு ரவுண்டில எல்லா மாபிளும் குறைய , கணக்குக்கு நாலு வேணும் எண்டு போட்டு , இனி அடிச்சு வெல்லேலாது எண்டு போட்டு , வேறொருத்தன் அடிச்ச மாபிளை கால் விரலுக்க அமத்தி வைச்சு நைசா எடுத்துப் பொக்கற்றுக்க கவனமா வைச்சன் நாளைக்கு விளையாட எண்டு . 

ரெண்டு நேரப் பள்ளிக்கூடக் காலத்தில வீட்டை போகாம நிக்கிறாக்களுக்கு ஏதாவது ஒரு விளையாட்டு set ஆகும். கிரிக்கட் எப்பவுமே இருந்தாலும் மற்றவிளையாட்டும் மாறி மாறி வரும். கொஞ்ச நாள் பறக்கும் தட்டு எண்டு விளையாடினம் , பிறகு கிளிபூர், இல்லாட்டி போளையடி எண்டு ஏதாவது இருக்கும். என்ன மாபிளில spin பண்ணினவன் சிலர் கிரிக்கட்டிலேம் spin bowler ஆக, வழமை போல நாங்கள் கொஞ்சப் பேர் வெளீல நிண்டு பந்து பொறுக்கிக் குடுத்தம் மாபிளைப் போல. 

ஒரு நாள் விளையாடிக்கொண்டு நிண்ட ஒருத்தனை கூடப் படிச்ச prefects எண்ட உளவுப்படை காட்டிக் குடுக்க , அடி வாங்க முதலே அவன் எல்லார்டை பேரையும் சொல்ல, முழுப்பேரையும் office க்கு கொண்டு போய் வைச்சு சாத்தீட்டூ மாபிள்களையும் பறிச்சு வைச்சார் துரைச்சாமி சேர். 

பூசை குடுத்திட்டுப் Primary school காரரை மட்டும் நிப்பாட்டி “எங்கால மாபிள் எண்டு” கேட்டிட்டு , “அம்மா/ அப்பாவைக் கூட்டிக் கொண்டா” எண்டு சொல்லி அனுப்பினார்.

“உதுகும் சூது மாதிரித்தான் சும்மா விளையாடாமல் போட்டி எண்டு விளையாடினால் விட்ட மாபிளைப் பிடிக்க வீட்டை களவெடுக்கிறதில தொடங்கி , மற்றவனை ஏமாத்தி மாபிளைப் புடுங்கிறதெண்டு எல்லாக் கெட்ட பழக்கமும் வரும் எண்டு சொல்லித் துரைச்சாமியரும் சொல்ல “ , வந்த அம்மாவும் இவன் குளப்படி தான் எண்டு என்னை இன்னும் போட்டுக் குடுக்க எனக்கெண்டே ஒரு பிரம்பு வாங்கி வைச்சுது அந்தாள். 

அதுக்குப் பிறகு காலமை பள்ளிக்கூடத்தில துரைச்சாமியரும் பின்னேரம் வீட்டை வரேக்க அம்மாவும் பொக்கற்றையும் bagஐயும் check பண்ணித் தான் உள்ள விட்டிச்சினம். 

காச்சட்டை போட்ட பள்ளிக்கூட காலம் எப்பவுமே ஏதாவது ஒண்டு பொக்கற்றுக்க இருக்கும்; ஒண்டு சாப்பிட இல்லாட்டி விளையாட. 

Dr. T. கோபிசங்கர்

யாழப்பாணம்

இரண்டும் முரண்பட்டுக் கொண்டன. 

2 weeks 5 days ago

zx.jpg

இரண்டும் முரண்பட்டுக் கொண்டன. 
கடுமையாக முட்டி மோதிக் கொண்டன. 
முடிவில் இரண்டுமே செத்து மடிந்து விட்டன.
நடந்த சண்டையில் இரண்டில் ஒன்றும் வெற்றிபெறவில்லை. 
மாறாக ஓநாய்க்கு எவ்வித சிரமமுமின்றி இரண்டும் உணவாகி விட்டன.
இதற்கு இரண்டுமே ஒரே பரம்பரை, ஒரே இனம்; ஒரே வீட்டைச் சேர்ந்தவை.
இது போன்றுதான் சிலவேளை நமது குடும்பத்தினுள் நிகழும் சண்டைகளும் கூட 
நமக்கு மத்தியில் பிரிவையும் பகையையும் தவிர வேறு எதுவும் மிஞ்சப் போவதில்லை.
நமது சகோதரனுடன் நாம் சண்டையிட்டு வெற்றியீட்டினால் 
அதன்மூலம் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று அர்த்தமல்ல.
மாறாக நமது சண்டையினால் மூன்றாம் நபரான எதிரியின் சந்தோஷத்திற்கு 
நாம் இரையாகி/விடுவதோடு பேரிழப்புகளுக்கும் ஆளாகி விடுகின்றோம்.
உலகில் குறைகள், பிரச்சினைகள் இல்லாத மனிதர்களில்லை.
உறவுகள்,நட்புகள் நிலைக்க அவர்களது குறைகளையும் சற்று சகித்து வாழ பழகுவோம்
மகிழ்ச்சியுடன் வாழ விரும்பினால்.
எல்லாவற்றிலும் குறை காண வேண்டாம் 
அனைத்திலும் நுட்பம் பார்க்கவேண்டாம்
விட்டுக்கொடுத்து வாழ்வோம் 
உறவு செழிக்கும் அன்பு தழைக்கும். 🙏

முகநூலிருந்து......

சங்கீத கலாநிதி

3 weeks 4 days ago

         சங்கீத கலாநிதி 

'சங்கீத கலாநிதி' விருது பெற்ற திரு.டி.எம்.கிருஷ்ணா அவர்களை வாழ்த்துவோம். அவர் பார்ப்பன சமூகத்தில் தோன்றிய முற்போக்குச் சிந்தனையாளர் என்பது அவருக்கான கூடுதல் தகுதி, சிறப்பு; நமக்கான கூடுதல் மகிழ்ச்சி.

         தமிழ்நாட்டு மக்கள் தொகையில் சுமார் மூன்று சதவீதம் உள்ள பார்ப்பனர்கள்,  'மெட்ராஸ் மியூசிக் அகாடமி' யை நிரப்பிக் கொண்டு திரு. டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராகப் பிற்போக்குத்தனமாகக் கொதிக்கிறார்கள், குதிக்கிறார்கள் என்றால் ஒரு காலத்தில் அவர்கள் என்னவெல்லாம் ஆட்டம் போட்டிருப்பார்கள் என்பதை இன்றைய இளைய தலைமுறையினரின் கற்பனைக்கு விட்டு விடுவோம். சுமார் ஐம்பது வருட காலம் அடங்கி இருந்தவர்கள் இப்போது ஒன்றியத்தில் ஒரு மதவாத, பார்ப்பனிய, பாசிச அரசு அமைந்ததும் பண்ணுகிற அலப்பறைகள் எண்ணிலடங்கா. அவர்கள் மொழியில் சொல்வதாக இருந்தால், "வினாஷ் காலே விபரீத புத்தி".
         இசைத்துறையில் 
அவர் அந்த விருதுக்கு முழுத் தகுதியுடையவர் என்பது யாவரும் அறிந்ததே. அவர்களது வாழ்வியலுக்கு எதிரான கருத்தியல் கொண்டவர் என்பதே சுருக்கமாக அவர்களது குற்றச்சாட்டு. 'மகா பெரியவா'ளைப் பாடும் பிற்போக்காளர்கள் மத்தியில் தந்தை பெரியாரைப் பாடும் முற்போக்காளர் திரு. டி.எம்.கிருஷ்ணா என்பதே அவர்களது ஆற்றாமை. அதிலும் சில பிரகஸ்பதிகள் 'மெட்ராஸ் மியூசிக் அகாடமி' யில் தாங்கள் பெற்ற விருதுகளைத் திருப்பிக் கொடுப்பார்களாம்; திரு.டி.எம்.கிருஷ்ணா தலைமையில் நடைபெறும் இசை நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார்களாம். *உயிரே போச்சு* என்று அவரோ, இசையுலகமோ *தலை*யில் கைவைத்து உட்காரப் போகிறதா, என்ன ?
         பார்ப்பனராயிருக்கும் திரு. டி.எம்.கிருஷ்ணாவுக்கே இன்று இந்த நிலைமையென்றால், அன்று மற்றவர்கள் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். இவர் பெரியாரைப் போற்றிய பாடல்களில் ஒன்று கீழே காணொளியில் உள்ளது. இவர் போற்றிய பெரியார் பார்ப்பனர்களை மட்டுமா எதிர்கொண்டார் ? பார்ப்பனியத்தைத் தூக்கிப் பிடித்த மகாத்மா காந்தி போன்ற ஆளுமைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மகாத்மாவின் மரியாதைக்கு எந்தக் குந்தகமும் விளைவிக்காமல் அவரை எதிர்த்து நின்றது பெரியாரின் மகாத்மியம். வைக்கம் கோயில் நுழைவுப் போராட்டத்தில் இறுதி வரை உறுதியாக நின்று வென்றெடுத்தவர் தந்தை பெரியார். அதனால்தான் செத்து ஐம்பது வருடங்கள் ஆன பிறகும் அவாளை மிரட்டுகிறார் பெரியார்.
           சரி, இவ்வளவு பேசியாயிற்று. எந்த மகாத்மாவைப் பெரியார் எதிர்த்தார் என்பதையும் பார்ப்போமா ? அதற்கு வர்ணாசிரமத்தில் எவ்வளவு மூழ்கித் திளைத்தவர் காந்தியார் என்பது தெரிய வேண்டுமே ! 

          1921 - 22 காலகட்டத்தில் குஜராத்தி பத்திரிக்கையான நவஜீவனில் காந்தியார் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்டவை :

"(1) பிறப்பை அடிப்படையாகக் கொண்ட வருணாசிரமப் பிரிவுகளில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. 
(2) வர்ணம் என்பது பிறப்பதற்கு முன்னாலேயே மனிதனுடைய தொழிலை நிர்ணயிப்பதாகும். 
(3) வர்ணாசிரம முறையில் எந்த மனிதனுக்கும் அவன் விரும்பும் தொழிலை தேர்ந்தெடுத்துக்கொள்ள சுதந்திரம் கிடையாது.
(4) ஆரம்பப் படிப்பைப் பரப்ப ஜாதி ஒரு வசதியான அமைப்பாகும். ஒவ்வொரு ஜாதியும் அதனுடைய வகுப்பாரின் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ளக் கூடும். ஜாதிக்கு ஒரு அரசியல் அடிப்படையும் உண்டு. ஜாதியானது சில முறைகளால் நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்கள் அந்த ஜாதியினருக்குள் உண்டாகும் பூசல்களைத் தீர்த்து வைக்க உதவும். ஜாதியின் உதவியால் ஒவ்வொரு ஜாதியும் ஒரு படையைத் திரட்டுவது சுலபமானதாகும்.
(5) சமபந்தி போஜனமும் கலப்பு மணமும் சமூகத்தின் ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்குத் தேவையில்லை என நான் நம்புகிறேன். சமபந்தி போஜனம் நட்பை வளர்க்கிறது என்பது அனுபவத்திற்கு மாறானதாகும். இது உண்மையாக இருக்குமானால் ஐரோப்பாவில் ஒரு சண்டை கூட நிகழ்ந்திருக்காது. மலம் கழிப்பதைப் போலவே உண்பதும் ஒரு மட்டமான செய்கையாகும். மலம் கழித்தவுடன் நமக்கு அமைதி ஏற்படுகிறது. ஆனால் சாப்பிட்டவுடன் நமக்குத் தொந்தரவு ஏற்படுகிறது என்பதே இந்த இரண்டுக்கும் உள்ள ஒரே வேறுபாடு ஆகும். மலம் கழிப்பதை நாம் எப்படி ஒதுங்கித் தனித்து செய்கிறோமோ அதேபோல சாப்பிடுவதும் ஒதுங்கித் தனித்தே நடத்தப்பட வேண்டும்.
(6) இந்தியாவில் சகோதரர் குழந்தைகள் ஒன்றை ஒன்று திருமணம் செய்து கொள்வதில்லை. அதனால் அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காமலா இருந்து விடுகிறார்கள் ? வைஷ்ணவரிடையே பல தாய்மார்கள் மற்ற குடும்பத்தாருடன் கூடி சாப்பிடுவதோ அல்லது பொதுவான ஒரு தண்ணீர்ப் பானையிலிருந்து தண்ணீர் குடிப்பதோ கூட இல்லாத அந்த அளவுக்கு வைதீக உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பில்லாமலா இருக்கிறார்கள் ? சமபந்தி போஜனத்தையும் கலப்பு மணத்தையும் ஜாதி அனுப்புமதிப்பதில்லை என்பதால் ஜாதி கேடானது என்று சொல்லிவிட முடியாது.
(7) கட்டுப்பாட்டிற்கு மற்றொரு பெயர்தான் ஜாதி என்பது. அளவு மீறி அனுபவிப்பதற்கு ஒரு எல்லையை உண்டாக்குவது தான் ஜாதி. வசதிகளை அனுபவிக்கும் முயற்சியில் தனது எல்லையைத் தாண்ட ஜாதி ஒருபோதும் அனுமதிப்பதில்லை. சமபந்தி போஜனம், கலப்பு மணம் ஆகியவற்றிற்கு ஜாதி முறை தடை போடுவதன் முக்கியமான கருத்து இதுதான்.
(8) ஜாதி முறையை ஒழித்து மேற்கு ஐரோப்பிய சமுதாய முறையை கடைப்பிடிப்பதற்கு ஜாதி முறையின் உயிர் நிலையான பரம்பரை ஜாதித் தொழிலைக் கைவிட்டாக வேண்டும். பரம்பரை ஜாதித் தொழில் என்பது எப்போதும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு கொள்கையாகும். அதை மாற்றுவதன் மூலம் குழப்பம்தான் உண்டாகும். என் வாழ்வில் ஒரு பிராமணனை பிராமணன் என்று அழைக்க முடியாவிட்டால் அந்த பிராமணனால் எனக்கு எந்த விதமான பயனும் இல்லையே ! ஒரு பிராமணன் சூத்திரன் ஆகவும் ஒரு சூத்திரன் பிராமணனாகவும் மாற்றப்பட்டால் அது பெரும் குழப்பமாகத்தானே இருக்கும் ?
(9) ஜாதி முறை சமுதாயத்தில் இயற்கையான ஒரு அமைப்பாகும். இந்தியாவில் அதற்கு ஒரு மதப்பூச்சு கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற நாடுகள் ஜாதி முறையின் பயனைச் சரியானபடி புரிந்து கொள்ளாத காரணத்தால் அந்த நாடுகள் இந்தியா அடைந்த அளவுக்கு ஜாதியால் பல நன்மைகள் அடைய முடியவில்லை.
               மேற்கூறியவை என்னுடைய கருத்துக்களாக இருக்கின்றமையால் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பவர்களை நான் எதிர்க்கிறவனாக இருக்கிறேன்".

             இவற்றின் அடிப்படையில் "Beware of Gandhi" என்று அண்ணல் அம்பேத்கரே எழுதினார் என்றால், காந்தியாரை எதிர்த்து நின்ற பெரியார் பெரியார்தானே ! பின்னே சும்மாவா டி.எம்.கிருஷ்ணா பெரியாரைப் போற்றினார் ! 

பின் குறிப்பு : அவாள்லாம் டி.எம்.கிருஷ்ணாவைத் தாக்க, நாம் பதிலுக்கு அவாளைத் தாக்க crossfire ல் காந்தியார் மாட்டிக் கொண்டாரோ ? சரி, விடுங்க தோழர் ! போர்க்களம்னா அப்படிதான் ரணகளம் ஆகும் !

 

https://www.facebook.com/share/p/ma32NPCiZiRCgGh4/?mibextid=oFDknk

காதல் கடை - T. கோபிசங்கர்

1 month ago

காதல் கடை

மண்ணெண்ணை, பெற்றோல் வித்தவனும் , சைக்கிள் வித்தவனும் முதலாளியா மாறின காலம் அது, அதே பவுசு மோட்டச் சைக்கிள் சைக்கிள் திருத்திற ஆக்களுக்கும் வந்திச்சுது. 

பவுண் வித்து பாண் வாங்கின நிலமை அப்ப . ஆசுபத்திரிக்கு போறதை கூட அடுத்த மாசம் தள்ளிப்போட்டிட்டு ஓடிறதுக்கு ரெடியா உடுப்பெல்லாம் கட்டி வைச்சிருந்த காலம். எல்லாருக்கும் அடிக்கடி அவசரத்துக்கு இடம்பெயர்ந்து ஓடிப்போக ஒரே போக்குவரத்து சைக்கிள் எண்ட படியால் மருந்துக்கடையிலும் பாக்க இருக்கிற ஒரே வாகனமான சைக்கிள் கடைக்கு உடன ஓடிப் போய் காட்டின நிலமை இருந்த நாட்கள் அவை. மோட்டச் சைக்கிள் பேருக்கு ஏத்த மாதிரி மோட்டுச் சைக்கிளாத்தான் இருக்கும்; ஒரு நாள் ஓடினா ஒரு கிழமை கராஜ்ஜில இருக்கும். 

ஆட்டிறைச்சிக்கடையில ஒண்டும் மிச்சம் இல்லாமல் காலில இருந்து தொங்கிற வால் வரை வித்து முடிக்கிற மாதிரி, சைக்கிள் கடையிலேம் கிழிஞ்ச ரயர் , நசிஞ்ச rim, அறுந்த chain எண்டு எல்லாம் சொல்லிற விலைக்கு “ விருப்பம் எண்டால் வாங்கு“ எண்டு வித்த நிலமை இருந்திச்சுது. 

திடீர் திடீரெண்டு இந்தா வெளிக்கிடிறன் எண்டு கோட்டையில இருந்து அடிக்கிற செல்லுக்கு ஆக்கள் கொஞ்சம் முதல் ஓட , பிறகு ஆசுபத்திரியும் இடம் பெயர , இனி இருக்ககேலாது எண்டு அதுக்குப் பின்னால நாங்களும் ஓடிப் போக வேண்டி இருந்தது. இதால சைக்கிள் கட்டாயம் தேவை எண்டதால ஆக்களிலும் பாக்க அதைக் கழுவித் துடைச்சு கவனமாப் பாக்க வேண்டி இருந்திச்சுது. அடிக்கடி அடிக்கிற செல்லுக்கு இப்பிடியே போக்கும் வரவுமாய் இருந்த படியா எப்பவும் ஓட ரெடியா சைக்கிளை வைச்சிருக்கிறனாங்கள். 

ஒயில் ஓடிக்காஞ்சு போன கறுத்த மண், எண்ணையில வழுக்கிற உடைஞ்சும் உடையாத சீமெந்து தரை, ஆண்டாண்டு காலமா தடீல தொங்கிற பழயை ரயர்கள், குமிச்சு அடுக்கின கறள் கட்டின rims, ஆணிகள் அடிச்ச பக்கீஸ்பெட்டீல தொங்கிற ஆறாம், எட்டாம் , பத்தாம் , பன்ரெண்டாம் சாவி , பழைய மரப் பெட்டீக்க குறடு ,சுத்தியல் ,ஸ்பனர் எண்டு கையால தொட்டாலே ஏற்பூசி போட வேண்டிய நிலைமையில கறள் கட்டின சாமாங்கள் , குறுக்கால வெட்டின பழைய பரல் ஒரு மாதமா மாத்தாத தண்ணியோட , ஓட்டு தீராந்தீல இருந்து தொங்கிற ரெட்டைப்பட்டுச் சைக்கிள் செயின் நுனியில வளைஞ்ச ரெண்டு கம்பி அதில முன்காலைத் தூக்கின குதிரை மாதிரி ஏத்தி விட்ட சைக்கிள், நிலத்தில விரிச்ச சாக்கில ; வால் பிளேட், கத்திரிக்கோல் , பாதி தேஞ்ச அரம், வடிவா வெட்டின வெவ்வேறு சைஸ் சதுர ரியூப் துண்டு , பினாட்டு மாதிரி கறுப்பா உருட்டின கொம்பவுண்ட் , பிங் கலர் சொலூசன் , ஒட்டுப் போட்டாப் பிறகு வல்கனைஸ் பண்ண (அவிக்கிறதுக்கு ) ஒரு செட்டப் இவ்வளவும் இருந்தால் இது சைக்கிள் கடை. கடையில ஒரு பெரிய bossம் மற்றது வேலை பழகிற சின்ன boss எண்டு ரெண்டு பேர் தான் இருப்பினம். 

கடை இப்பிடி இருக்கிறதால கடைக்காரரை சில்லறை ஆள் எண்டு நெக்கக்கூடாது. சில Senior citizens ன்டை கடைகள் இருக்கும் அவைகளுக்காக, என்ன அவை திறந்திருக்கிறதிலும் பாக்க பூட்டி இருக்கிறது தான் கூட. 

எங்களுக்க ஏத்த மாதிரி கடையைத் தான் தேடிப் போறது. எங்கடை வயதுக்காரர் ஆனால் அவை boss. நாங்கள்சைக்கிளை உருட்டிக் கொண்டு போய் கடையில விட எங்களைக் கண்டாலும் busy மாதிரி கவிட்டு வைச்ச பழைய wheel spoke க்குள்ள சில்லை வைச்சு பக்கிள் எடுக்கிறவங்கள் , காத்தடிக்கப் பொம்பிளைப் பிள்ளைகள் வந்தால் எழும்பி ஓடிப்போய் உடனயே கவனிப்பாங்கள் . 

கவனிப்பு சைக்கிளுக்கும் ஆளுக்கும் பலமாய் இருக்கும் . அடிக்கடி இந்த கதை நடக்கும்; 

“ என்ன கனநாளா காணேல்லை “

“ ஏன் சும்மா சும்மா வாறதே “

“அண்டைக்கு ஆரோ பெடியன் பின்னால வந்தான்” 

“ எனக்கு அப்பிடி ஒருத்தரும் இல்லை“ ( confirmation)

காத்தடிச்சிட்டு ,பக்கத்தில நிண்ட சைக்கிளில இருந்து வால்கட்டையின்டை capபைக் கழற்றி பூட்டீட்டு “ இது இல்லாட்டி மண் போய் அடைச்சிடும் “ எண்டு சொல்லி, அதோட பிறேக்கையும் சரிபாத்திட்டு விட;

“ எவ்வளவு” 

“சீ காசு வேணாம் , அடுத்த முறை பாப்பம் “ 

சொல்லாத thank you சிரிப்பை வாங்கிக் கொண்டு வந்து எங்களைக் கவனிக்காமல் திருப்பியும் buckle எடுக்கத் தொடங்குவாங்கள்.

இதை கவனிச்சும் இல்லாத மாதிரி, “ கழுவிப் பூட்டேக்க எதையும் மாத்திப் போடுவான்“ எண்டு அம்மா சொன்னதால, நாள் முழுக்க கடையிலயே இருந்து; லாபம் பாத்து சாமாங்களை வேண்டித் தாறம் எண்டு சொல்லி , ஒரு போத்தில் மண்ணெண்ணை , இருவது ரூவாக்கு கிறீஸ், ரெண்டு சைசில ஐம்பது சைக்கிள் போள்ஸ் எல்லாம் வாங்கிக் குடுத்து , கழட்டி வைக்கிறதை கவனமாப் பாத்துக் கொண்டிருந்து, கழுவிப்பூட்டிறவருக்கு கேக்காமலே ஒத்தாசையும் செய்தாத் தான் சைக்கிள் கெதியாக் கிடைக்கும். 

புதுசா வாங்கின சைக்கிள் ஆருக்கு நேந்ததோ தெரியேல்லை வாங்கி ஒரு வருசத்திலயே காணாமல் போக , ரெண்டு வருசமா பஸ்ஸில அலையவிட்டு வாங்கித்தந்தது தான் கழுவிப் பூட்டக் கொண்டந்த இந்தப் பழசு. இதாலயே பட்டப்பேரும் பழசு எண்டு வந்திச்சுது. 

நிண்டு கால் நோக இருக்க இடமில்லாமல் பெரிய கரியர் ஓட நிண்ட சைக்கிளை central ஸ்டாண்டில விட்டிட்டு அதில இருந்தபடி சாடயா கண்ணயர்ந்து விழப்பாக்க , “ தம்பி போய்ச்சாப்பிட்டிட்டு வாரும்” எண்டு சைக்கிள் கடைக்காரர் சொன்னார். ,“ இல்லை பரவாயில்லை இருந்து எடுத்துக்கொண்டே போறன்” எண்டு நம்பிக்கையில்லாமல் சொல்ல , அப்ப கொஞ்ச நேரம் இரும் நான் சாப்பிட்டிட்டு வாறன் எண்டு ஒரு மணிக்குப் போனவர் திருப்பி வர மூண்டு மணி ஆச்சிது. 

என்னை வைச்சு அடிக்கடி சின்னச்சின்ன வேலையும் வாங்கீட்டு பின்னேரம் வரை விடாக்கண்டனா என்னை சைக்கிள்கடைக் கொடாக்கண்டன் “ஆறு மணியாயீட்டுது இருட்டீட்டுது நாளைக்குப் பாப்பம் “ எண்டு சொல்லீட்டு சாமாங்களை உள்ள எடுத்து அடுக்க வேற வழியில்லாமல் வீட்டை போனன். ஒருமாதிரி அடுத்த நாள் சைக்கிளை எடுத்து உழக்கிக் கொண்டு போக செயின் கவரோட முட்டிற சத்தம் கேக்க ஒரு தட்டுத் தட்ட நிண்டிட்டுது சத்தம்.

எத்தினை சைக்கிள் ரோட்டில போனாலும் எங்கடை வேண்டிய ஆரும் சைக்கிளி்ல வாறதை தூரத்தில வரேக்கையே கண்டு பிடிக்கலாம். ஒவ்வொருத்தன்டை சைக்கிளுக்கும் ஒரு சத்தம் இருக்கும் வாறதை கண்டு பிடிக்க , மணி அடிக்கிற சத்தம் , பிரேக் பிடிக்கேக்க வாற சத்தம் , செயின் உரஞ்சிற சத்தம் எண்டு எல்லாச் சத்தங்களும் உதவி செய்யும் அதோட அவன் அரைக்குண்டீல ஓடிறானா, சீட் நுனீல இருந்து ஓடிறானா, காலை அகட்டி ஓடிறானா எண்டு ஓடிற ஸ்டைலிலேம் கண்டு பிடிக்கலாம். 

ரியூசன் வகுப்புகள் முடிஞ்சு பின்னேரம் எண்டால் பிரவுண் ரோட்டில குமரன் வீட்டு ஒழுங்கை முடக்கில சாத்தீட்டு நிக்க ஒவ்வொருத்தரா வருவாங்கள். வந்து வழமை போல அரட்டை தொடங்கும் . கடைசீல் நேற்றைக்க அடிச்ச செல் விண் கூவினதையும், யாரை யார் பாக்கிறாங்கள் எண்ட update ஓட கூட்டம் கலையும். ஒருநாள் இப்பிடித்தான் தேடிப்போனா குமரனைக் காணேல்லை. அவன் உங்களோட தானே வந்தவன் எண்டு அம்மா சொல்ல, “டேய் அவன் நேற்றைக்கு சேகரோட ஒளிஞ்சு ஒளிஞ்சு கதைச்சவன் ஒரு வேளை இயக்கத்துக்குப் போட்டானோ” எண்டு பிரகாஸ் கேக்க “விசரே உனக்கு இவனாவது போறதாவது , வா கபிலன் வீட்டை போய்ப் பாப்பம்” எண்டு நவாஸ் சொல்ல போய்ப்பாத்தால் அங்கையும் இல்லை. காணேல்லை எண்டு ரோடு ரோடாத் தேட, கலட்டீக்க புதுசாத் திறந்த சைக்கிள் கடையில காத்துப் போகாத tyreக்கு காத்து அடிச்சும் வந்தவனுக்கெல்லாம் அடிச்சு விட்டு சமூக சேவை செய்து கொண்டு நிண்டான். ஏனெண்டு கேக்க அண்டைக்கு ரோட்டால போகேக்க பாத்துச் சிரிச்ச பிள்ளை இந்த இடத்தில தான் எங்கேயோ இருக்குதாம் எண்டான். கடைசீல இண்டைக்கு காணேல்லை நாளைக்கு ஒருக்கா வந்து பாப்பம் எண்டு எங்களோட வந்தான்.

இவனுக்கு அவனுக்கு மட்டும் இல்லை எங்கள் எல்லாருக்கும் சுழற்றித் திரிஞ்ச காலத்தில ஒண்டிறதுக்கு எண்டு ஒரு சைக்கிள் கடை இருந்தது. முதலில அந்தப் பிள்ளை இருக்கிற ஏரியாவில ஒருத்தனை friend பிடிச்சு , அவனோட போய் அவளின்டை வீட்டிக்கு கிட்ட இருக்கிற சைக்கிள் கடைக்காரனை friend பிடிச்சு , பிறகு ரியூசன் கொப்பியோட வெளிக்கிட்டு நேராச் சைக்கிள் கடையில போய் இறங்கினதும் உண்டு. தப்பித்தவறி தெரிஞ்ச ஆக்கள் வந்து கேட்டால், சைக்கிள் காத்துப் போட்டுது எண்ட பொய்யோட சமாளிக்கலாம். கடைக்காரனிற்கும் காத்தடிச்சு விட , சாவியை எடுத்துத் தர எண்டு காசில்லாமல் உதவி செய்ய ஒருத்தன் கிடைக்கிறதால பேசாம இருந்திடுவான். 

அப்ப சைக்கிள் கடை தான் கன பேரின்டை காதலை develop பண்ண உதவி செய்யிற கடையா இருந்திச்சுது. இப்ப சைக்கிளும் குறைஞ்சு , சைக்கிள் கடையும் குறைஞ்ச படியால் இப்பத்தைப் பெடியள் என்ன செய்யிறாங்களோ தெரியேல்லை. 

Dr. T. கோபிசங்கர்

யாழ்ப்பாணம்.

மணி(யம்)வீடு

1 month ago

மணி(யம்)வீடு
———————

வந்து வரைபடம் கீறி
வடிவாய்க் கட்டிய 
வசதியான வீடு

ஹோலின் நடுவே குசினி
குசினிக்கடுத்து குளியலறை
பேசிய படியே பெரியறை
எங்கோ சின்னறையானது

நீரும் நெருப்பும்
மேலும் கீழும்
பாரும் இது பழுதாகலாம்
யாருமொரு சாத்திரி
பார்த்தால் பறவாயில்லை
பக்கத்து வீட்டவர்
பலமுறை சொன்னார்

மூன்று கோடி 
முழுதாய் முடிந்ததாம்

கடைசிமகன் பிரான்சும்
கனடா மகளும்
கடைமணியத்தார்க்கு
கட்டிக்கொடுத்த வீடு

குடிபூரல் என்று
குடும்பத்தோடு வந்து 
கூத்தும் கும்மாளம்

ஆறறை மேலே
ஐந்தறை கீழே
வேறறையிரண்டு வெளியில்
போறறையெல்லாம்
போக்கிடம் தொடுப்பு
விளக்குகள் பற்றி
விளக்கவே வேண்டாம்
ஏறினால் எரியும்
இறங்கினால் அணையும்
கூறினால் என்ன? 
குழப்படி வீடு

மாதங்கள் மூன்றாய்
மகனும் மகளும்
கீதங்கள் போட்டு
கிடாயையும் போட்டு
விருந்துகள் வைத்து
மகிழ்ந்தது வீடு

கழிந்தன நாட்கள்
கடனைக்கட்ட
கனடாவும் பிரான்சும்
பறந்தன மீண்டும்

விளக்குமில்லை விழாவுமில்லை
மனையில் மணியம்
தனியாய்ப்போனார்

கூட்டித்துடைக்க 
ஆளில்லாமல்
கூடைக்கதிரை 
ஒன்றுக்குள்ளே
குசினி லைற்றின் 
சுவிச்சைத் தேடி
களைத்து மனிசன் 
சோர்ந்து போனார்

மூன்று கோடி 
முடிந்த வீடு
முனிவீடாய்
மாறிப் போச்சு

மணியத்தாரின் 
தனிமைப்பரப்பு
அறைகள் கணக்கில்
அகலமாய்ப் போச்சு
மணியம் உணர்ந்தார்
Money யில் இல்லை
மகிழ்ச்சியென்று.  

வாட்ஸ் அப்பில் வந்தது.

தமிழ் தேசியத்தை எங்களை விட தெளிவாக

1 month ago

எங்களை விட தெளிவாக இருக்கினம் தாயக சிறுவர்கள் ..வரும் கால இளைஞர்கள் ....
தமிழ் தேசியத்தை அவர்கள் புரிந்து வைத்திருக்கும் அளவுக்கு எங்களுக்கு புரிதல் இல்லை...
 

பேஸ்புக்கில் அதிகரிக்கும் ஏமாற்று வித்தை! அவதானம்!

1 month 1 week ago

Published By: PRIYATHARSHAN   09 MAR, 2024 | 10:36 AM

image
 

நாளுக்கு நாள் சமூக ஊடகங்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில், அவற்றில் ஏமாற்றுப் பேர்வழிகளின் செயல்களும் அதிகரித்துக்கொண்டே காணப்படுகின்றது.

அண்மைக்காலமாக பேஸ்புக்கின் மேசஞ்சரில் (Messenger) தொடர்புகொள்ளும் சில ஹக்கர்களின் ஏமாற்று வித்தை அரங்கேறி வருகின்றது.

இவ்வாறான ஹக்கர்கள் பேஸ்புக் கணக்குகளுக்குள் நுழைந்து மேசஞ்சர் ஊடாக குறித்து நபரின் மேசஞ்சருக்கு தொடர்புகொள்கின்றார்.

பேஸ்புக்கை ஹக்செய்து அவர்களுக்குப் பரீட்சயமான நண்பர்களின் போலி கணக்குகள் ஊடாக    மேசஞ்சரில் தொடர்புகொண்டு அவர்களை ஒரு குழுவில் இணைக்க விரும்புவதாகவும் அதற்கு அவர்கள் தொலைபேசி எண் வேண்டும் எனவும் கேட்கிறார்கள். அதைத் தொடர்ந்து குழுவில் இணைக்க ஒரு OTP வந்திருக்கும் என்று கேட்பார்கள். அதைக் கொடுத்துவிட்டால் உங்கள் தனிப்பட்ட தரவுகள் அனைத்தையும் திருடிவிடுவார்கள்.

இவ்வாறு தான் மெசஞ்சர் மூலம் தொடர்பு கொள்கின்றனர், 

“ Hello I’m contesting for an ambassadorship spot at an online Facebook access program can you pls vote for me ” இவ்வாறு தொடர்புகளை ஏற்படுத்துகின்றனர்.

நாம் பதில்களை வழங்கும் போது பின்னர் 

“ You have to send me your number so I can add you to the voting group” இவ்வாறு பதிலனுப்புகின்றனர்.

facebook.JPG

இவ்வாறான கேள்விகளுக்கு நீங்கள் பதிலனுப்பும் போது உங்களது வங்கிக்கணக்கு உள்ளிட்ட ஏனைய தனிப்பட்ட தரவுகள் ஹக் செய்யப்பட்டுவிடும். 

பின்னர் ஹக்செய்யப்படும் பேஸ்புக் கணக்குகள் அவர்களுக்கு ஏற்றாற்போல் மாற்றப்பட்டு ஏனையவர்களை நம்பும் படி இவ்வாறு இணைத்துவிடுவார்கள்.

fb.jpg

எனவே இணையத்தில் எப்போதும் எல்லாவற்றையும் சந்தேகப்படுங்கள். அத்துடன் உடனடியாக தீர்மானம் எடுத்து உங்களது தனிப்பட்ட தரவுகளை வழங்கி விடாதீர்கள். முதலில் தீவிரமாக சிந்தித்து செயலாற்றுங்கள்.

இவ்வாறான ஹக்கர்கள் தொடர்பில் பேஸ்புக்கில் முறையிடுவதற்கான வழிகள் உள்ளன. முறையிட்டு Block செய்யுங்கள். 

419715897_760547906107542_77636340892499

https://www.virakesari.lk/article/178299

நான் கண்ட யாழ்ப்பாணம்!!

1 month 1 week ago

spacer.png

spacer.png

spacer.png

நான் கண்ட யாழ்ப்பாணம்!!

40 வருடங்களின் பின்பு ஒரு மாத சுற்றுலாவாக இலங்கை சென்றேன். நான் 75, 80ளில் பார்த்த அதே கோலத்தில் தான் யாழ்ப்பாணம் இன்றும் இருக்கின்றது. கார்பெட் ரோட்டுக்களையும் வீடுகளின் வாசல் கேட்டுக்களையும் தவிர பெரிய மாற்றம் ஒன்றும் நடந்து விடவில்லை.

உலக நகர வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது யாழ்ப்பாணம் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இருக்கின்றது. அங்கே  இருப்பவர்களுக்கு அதன் தாக்கம் தெரியாது உலக நகரங்களை பார்த்த ஒருவருக்கு இதன் தாக்கம் நன்கு தெரியும்.

யாழ்ப்பாண நகரத்து கடைகளில் முன்னால் உள்ள குப்பைகளும் அசுத்தமும் யாழ் மாநகர சபையின் செயல் திறன் எப்படி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியது. மட்டக்களப்பு நகரம் யாழ்ப்பாண நகரத்தை விட சுத்தம் சுகாதாரத்தில் மேலோங்கி இருந்ததை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிட அழகும் தனியார் பேருந்துகளின் அழகும் அலங்கோலமாக இருந்தது. ஆபிரிக்க நாடுகளைத் தவிர மற்றய நாடுகளில் தனியார் பஸ்களும் அரசு பஸ்க்களும் போட்டி போட்டு வீதிகளில் ஓடுவதை பார்க்க முடிவதில்லை.

அரசு பேருந்துகளும் டிப்பர் வாகனங்களும் ரோட்டில் வரும்பொழுது எமன் எதிரே வருவது போல எண்ணம் தோன்றுகிறது. அவ்வளவு ஆபத்து நிறைந்ததாக வீதிகளில் ஓடுவதை நான் நேரடியாக பார்த்தேன். அரசு பேருந்துகள் போதையில் ஓட்டுபவர்களை விட மிகவும் ஆபத்தான முறையில் ஓட்டுகிறார்கள் என்பதை எல்லா இடங்களிலும் அவதானிக்க முடிந்தது.

ராணுவ முகாங்கள் எல்லா இடங்களிலும் அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. பூங்காக்கள் போல ராணுவ முகாங்கள் இருப்பது மிகவும் அழகாக இருக்கிறது. ஆனாலும் இவ்வளவு ராணுவ முகாங்கள் வட பகுதிக்கு தேவையா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.

பலாலியில் ஒரு வீதி நேரடியாக ராணுவமுகாமுக்கே சென்றுவிட்டது. பின்பு நான் சுதாஹரித்துக் கொண்டு பாதையை மாற்றினேன். வீதி பிரியும் இடத்தில் எந்தவித அடையாளமும் இல்லாததால் நான் ராணுவ முகாமுக்குள் சென்று விட்டேன். ஆனாலும் அங்கே காவலுக்கு நின்றவர்கள் எந்தவித பதட்டப்படவும் இல்லை. புண்முகத்துடன் நின்றார்கள். நானும் அவர்களுக்கு கைகாட்டி விட்டு திரும்பி வேறு பாதையால் சென்றுவிட்டேன். அவர்கள் எல்லோரும் தங்கள் பாட்டில் தங்கள் கடமையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களுடன் எந்தவித பிரச்சனையோ அல்லது சோதனைகளோ நடைபெறுவதாக தெரியவில்லை. ஆனாலும் ராணுவ முகாங்கள் அதிகமாகத்தான் இருக்கின்றது.

வன்னியில் காடுகள் சார்ந்த பல பகுதிகளில் ராணுவ முகாங்கள் மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த சிறிய நாட்டுக்கு இவ்வளவு ராணுவ முகாங்கள் தேவையா என்று எனது மனதுக்குள் கேள்வி எழுந்தது.

உலகம் மாறிவிட்டது, உணவு வழங்கும் முறைகள் உணவு உண்ணும் முறைகள் எல்லாம் மாறிவிட்டது. ஆனாலும் யாழ்ப்பானத்தில் உள்ள எந்த ஒரு உணவகத்திலும் அல்லது டீக்கடையிலோ பேப்பர் கப்பில் ஒரு காப்பியையோ அல்லது டீயையோ ( Take away ) பெற்றுக் கொள்ள முடியவில்லை. இது  நல்ல சுகாதார தரத்துக்கு இன்னும் இவர்கள் முன்னேறவில்லை என்பதை காட்டியது. அதனால் நான் எந்த ஒரு கடையிலும் டீயோ காப்பியோ குடிக்கவில்லை. காரணம் சாதாரண கடைகளில் டீ கப்பை சுத்தம் செய்யும் முறை சுகாதாரத்துக்கு ஏற்ற முறையல்ல.

யாழ்ப்பாணத்தில் யாரும் முகம் பார்த்து புன்னகைத்துக் கொள்வதில்லை. ஒருவரை ஒருவர் முறைத்து பார்ப்பது போலத்தான் பார்த்துக் கொள்கிறார்கள். காரணம் ஒருவரை ஒருவர் தெரியாததாகவும் இருக்கலாம் அல்லது பயமாகவும் இருக்கலாம் அல்லது இவரை பார்த்தால் தனக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்றும் எண்ணலாம் எப்படி இருந்தாலும் மகிழ்ச்சி இல்லாதவர்களாகவும் மற்றையவர்களை பார்த்து புன்னகைக்க தெரியாதவர்களாகவும் இருப்பது கவலையாக இருந்தது.

உண்மை உரைகல்

நிஜ சாந்தன் இவரில்லையா ?

1 month 2 weeks ago

பின்வரும் இணைப்பின் காணொளியில் உள்ள தகவலின் உண்மைத்தன்மை யானறியேன். இதுபோன்ற செய்திகள் பலவற்றை யாழ் சொந்தங்கள் எதிர்கொண்டிருக்கலாம். ஈழத்தை வைத்து தமிழ்நாட்டில் ஆடப்படும் சிறிய, பெரிய அரசியல் முழுவதும் எனக்கு இன்னும் புரியவில்லையோ, என்னவோ ! இந்தியச் சிறைக் கொட்டடியில் தமது வாழ்வின் பெரும்பான்மையைக் கழித்து விடுதலையான சாந்தன் சமீபத்தில் மறைந்த இத்தருணத்தில் முகநூலில் வலம் வந்த காணொளி என் கவனத்தை ஈர்த்தது. யாழில் பதிவேற்றியதன் காரணம், இதுபற்றி யாழ் சொந்தங்களிடம் கூடுதல் தகவல் இருக்கலாம் என்ற எண்ணமே :

https://www.facebook.com/share/v/uRFMDyavpfJAd1zH/?mibextid=oFDknk

 சிறப்பு முகாமிலிருந்து ஓர் திறந்த மடல் -இராபர்ட் பயஸ், சிறப்பு முகாம், கொட்டப்பட்டு, திருச்சி. 29/2/ 2024

1 month 2 weeks ago

 

சிறப்பு முகாமிலிருந்து ஓர் திறந்த மடல்

-இராபர்ட் பயஸ், சிறப்பு முகாம், கொட்டப்பட்டு, திருச்சி.

29/2/ 2024

உலகத் தமிழர்களுக்கு....

வணக்கம். நான் இராபர்ட் பயஸ் பேசுகிறேன். உங்களை உங்களோடு உங்களில் ஒருவனாக சுதந்திர மனிதனாக இல்லாமல் எங்களில் ஒருவரான சாந்தனை இழந்து இதோ இந்த கம்பிகளுக்கு பின்னால் இருந்து இப்படி உங்களை சந்திக்க நேர்ந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. 32 வருட நீண்ட சிறைக் கொட்டடிக்கு பிறகு கடந்த 11-11- 2022 அன்று உச்சநீதிமன்றம் விடுதலை செய்த ஆறுபேரில் நானும் ஒருவன். அந்த ஆறுபேரில் நான், ஜெயக்குமார், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய நால்வரையும் இலங்கைத் தமிழர் எனக் காரணம் கூறி இந்திய வெளியுறத்துறை நாட்டைவிட்டு வெளியே அனுப்பும் வரை சிறப்பு முகாமில் அடைத்து வைக்க உத்தரவிட்டது.

தொலைந்து போன வாழ்க்கையை எதிர்நோக்கி 32 வருட நீண்ட காத்திருப்பு முற்றுபெறும் தருவாயில் கூட விடுதலையை ருசிக்க முடியாமல், சிறிது நேரம் கூட விடுதலைக் காற்றை சுவாசிக்க முடியாமல் புழல் சிறையிலிருந்து நானும் ஜெயக்குமாரும் வேலூர் சிறையிலிருந்து சாந்தனும் முருகனும் திருச்சி சிறப்பு முகாமிற்கு கொண்டு வந்து அடைக்கப்பட்டோம். இதோ முடியப்போகுது 32 ஆண்டுக்கால சிறைக் காத்திருப்பு என்று எண்ணிய எங்களுக்கு அப்பொழுது விளங்கவில்லை நாங்கள் சிறை மாற்றப்படுகிறோம் என்று. ஆம், அன்று நடந்தேறியது அப்பட்டமான சிறை மாறுதல் தான் என்பதை எங்களுக்கு காலம் தான் விளக்கியது. இது சிறையல்ல சிறப்பு முகாம் தானே என்று எண்ணிய எங்களுக்கு இது சிறையல்ல சிறையை விட கொடுஞ்சிறை என்பதும் எங்களுக்கு போகப்போகத் தான் விளங்கியது.

நாட்டைவிட்டு அனுப்பும்வரை எங்களை சிறப்பு முகாமில் வைக்கிறோம் என்றவர்கள் இன்றைய தேதிவரை நாட்டைவிட்டு அனுப்புவதற்கு எடுத்த முன்னெடுப்புகள் என்னவென்று கேட்டால் மிகப்பெரிய கேள்விக்குறியும் ஆச்சரியக்குறியும் தான் மிஞ்சும். "சிறப்பு முகாமா..? அது ஜெயில் மாதிரிலாம் இல்லைங்க சார். எல்லா வசதிகளும் செய்து கொடுப்போம்" என்று பேசி சமாளிக்கும் அரசும் நிர்வாகமும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. கடந்த ஜனவரி 28 ஆம் தேதி ஒரு வார காலமாக மருந்து மாத்திரை கிடைக்காமல் ஒருவர் இறந்து போனார். இப்பொழுது சாந்தன் கல்லீரல் முழுவதும் செயலிழந்து, எழுந்து நிற்கக் கூட முடியாமல் மிக மோசமடைந்து பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் ஏதும் பலனளிக்காத நிலையில் இறந்து போயிருக்கிறார். இந்த மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது..? யாரை நாங்கள் நொந்துக்கொள்வது..?

அனைத்து அடிப்படை உரிமைகளையும் மறுத்து, உடல்நலன் குன்றி 'விடுதலை

ஆகிவிடுவோம். விடுதலை ஆகிவிடுவோம்.' என்று கனவு கண்டு விடுதலை ஆகிவிட்டோம் என்று பூரிப்பு கிடைத்த தருவாயில் மீண்டும் ஏமாற்றப்பட்டு சிறைமாற்றப்பட்டு இதனால் மனநலனும் பாதிக்கப்பட்டு இறந்து போன சாந்தனுக்கு சிறை வாழ்வு முடிந்தது. இன்னும் மீதம் மூன்று பேர் இருக்கிறோம். நாங்கள் மீண்டும் காத்திருக்க தொடங்குகிறோம் இந்த சிறப்பு முகாமில்.

சிறையில் கூட சிறை நிர்வாகத்திற்கு சிறை விதிகள் கையேடு இருக்கிறது. அதன்படி கைதிகளுக்கு இருக்கக்கூடிய மற்றும் இல்லாத உரிமைகள் கடமைகள் வரையறுக்கப்பட்டு இருக்கும். ஆனால் சிறப்பு முகாமோ சிறையை விட கொடுமையானது, இங்கு எந்த சட்டத்திட்டங்களோ வரையறைகளோ கிடையாது. அரசும், மாவட்ட ஆட்சியரும், முகாம் நிர்வாகமும் என்ன நினைக்கிறதோ அவையெல்லாம் விதிமுறைகளாகவும் சட்டத்திட்டங்களாகவும் ஆகின்றன. மருத்துவம் கிடையாது என்று இவர்கள் முடிவெடுத்தால் முகாம்வாசிகளுக்கு மருத்துவம் கிடையாது. தனிமைச் சிறை என்று இவர்கள் முடிவெடுத்தால் தனிமைச் சிறை யாரும் மனு பார்க்கக்கூடாது என்று இவர்கள் முடிவெடுத்தால் யாரும் மனுப்பார்க்க முடியாது. இப்படியான நிர்வாகம் தான் நாட்டைவிட்டு வெளியில் அனுப்புவதற்காக என்று காரணம் கூறி சிறப்பு முகாமில் அடைக்கப்படுபவர்கள் அதற்கான எவ்வித முயற்சிகளும் எடுக்கப்படாமல் வருடக்கணக்கில் அப்படியே கிடப்பில் போடப்பட்டு இன்னொரு சிறைவாசத்தை அனுபவித்து வருகின்றனர். நாங்கள் சிறு சிறு அடிப்படைத் தேவைகளையும் மற்றும் அடிப்படை உரிமைகளையும் கூட போராடி, உயிரைக் கொடுத்து பெறவேண்டிய சூழலே இருக்கிறது.

எங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியான 32 வருடங்கள் ராஜீவ்காந்தி பெயரைச் சொல்லியே சிறையில் கடத்தப்பட்டது. இறுதியில் உச்சநீதிமன்றத்தின் விடுதலை ஆணைக்கு பின்னும் எங்களை எங்கள் குடும்பங்களோடு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்காமல் காலங்கடத்தி காலங்கடத்தி இறுதியில் சாந்தனை இழந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மீதமுள்ள நாங்களும் எங்களுக்கான ஒவ்வொரு அடிப்படை உரிமையையும் பெறுவதற்கு இதுவரை எண்ணற்ற மனுக்களையும், வழக்குகளையும், உண்ணாநிலை போராட்டங்களையும் மேற்கொண்டே பெற்று வருகின்றோம். அதில் பெரும்பான்மையான வாக்குறுதிகள் காற்றிலே போகும். மீதி, கேட்கப்படாமலே மக்கிப் போகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், இந்த மாத தொடக்கத்தில் இலங்கை துணைத் தூதரகம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நானும் முருகனும் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட பொழுது ஒரு வாரத்தில் அழைத்துச் செல்கிறோம் என்று எங்களுக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டு 20 நாட்களை கடந்தும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இவ்வாறில்லாமல் உரிய அரசுப் பொறிமுறைகள் அவர்கள் கடமையை முறையே செய்திருந்தால் இன்று சாந்தன் உயிருடன் அவருடைய தாயாருடனும் குடும்பத்தினருடனும் மகிழ்ச்சியாக இன்னும் ஓரிரு வருடங்களாவது இருந்திருப்பார்.

33 வருடங்களாக தனது மகனை பிரிந்து கண்பார்வை குன்றி வயது
முதிர்ச்சியடைந்து கடைசியாக ஒருமுறையாவது தனது மகனை பார்த்துவிடவேண்டும் என்று ஏங்கிய ஒரு தாயின் கையில் அந்த மகனின் உயிரற்ற உடலைத்தான் கொண்டுபோய் சேர்க்கப் போகிறோம். கடைசியாக தனது கையால் தன்மகனுக்கு ஒருபிடி உணவு கொடுக்க மாட்டோமா என்று ஏங்கிய அந்த தாய் அந்தமகனுக்கு கடைசியாகக் வாய்க்கரிசி கொடுக்கத்தான் வாய்க்கப்பட்டிருக்கிறார். இதோ இன்று தன் மகன் வந்துவிடுவான், என்று எதிர்பார்த்து காத்திருந்த அந்தத் தாயிடம் 'உன் மகன் வரவில்லை. அவனின் உயிரற்ற உடல்தான் வருகிறது' என்கிற செய்தியை அந்தத் தாயிடம் யாரால் சொல்லியிருக்க முடியும். அத்தகைய கல்நெஞ்சம் படைத்த மனிதர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்களா என்ன.!? 33 வருடங்கள் கழித்து தன் மகனின் வருகைக்காக மகிழ்ச்சியாக காத்திருந்திருக்கும் அந்த வீட்டில் இந்த செய்தி ஏற்படுத்திய மயான அமைதியின் பேரிரைச்சலை தாங்கிக் கொள்ளும் கனத்த இதயம் கொண்ட மனிதர்களும் இவ்வுலகில் இருக்கிறார்களா என்ன?!

இதோ கடந்த மாதம் என்னுடன் நடந்து மருத்துவ பரிசோதனைக்கு வந்த சாந்தன் இன்று எங்களோடு இல்லை. ஒரு மாதத்தில், எங்களோடு உறவாடி, பேசி உலாவிய சாந்தன் இன்று உயிரோடு இல்லை.

மீதமிருக்கிற, ஜெயக்குமாரும் முருகனும் 33 வருடங்களாக தங்கள் குடும்பங்களை பிரிந்து வாடும் நிலையில் நானோ, மனைவி ஒரு நாட்டில் மகன் ஒரு நாட்டில் தாய், சகோதர சகோதரிகள் வேறு நாட்டில் என சிதறுண்டுக் சிதைந்துக் கிடக்கும் குடும்பத்தை ஒன்றுசேர்த்து ஒரு நாளேனும் வாழ்ந்து விட மாட்டோமா?! பச்சிளம் பாலகனாக பார்ந்த எனது மகன் எவ்வளவு உயரம் இருப்பான்? அவன் என்னைவிட உயரமா? அல்ல உயரம் குறைவா? அவனுக்கு திருமணம் ஆகி எனக்கு பேரன் பிறந்திருக்கிறானாம்.! நான் எந்த வயதில் என் மகனை பிரிந்தேனோ அந்த வயதில் எனக்கு இப்பொழுது பேரன் இருக்கிறான். அவனதுப் பஞ்சு பாதங்களை அள்ளியெடுத்து ஒருமுறையேனும் என் முத்தங்களை காணிக்கையாக்கிவிட மாட்டேனா..?!

அன்பார்ந்த உலகத் தமிழ் சமூகமே இன்னும் நாங்கள் மூன்று பேர் மிச்சம் இருக்கிறோம். எங்கள் நிலைமை?

நீண்டகால சிறைவாசமும், குடும்பங்களை பிரிந்த துயரமும் எங்களை முழுமையான நோயாளிகளாக்கியுள்ளது. சாந்தனைப் போலல்லாமல் எங்களையாவது எங்கள் கடைசி காலத்தில் மிஞ்சியிருக்கிற கொஞ்ச காலம் எங்கள் தாயார், மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகளுடன் வாழ்ந்து விட்டுப் போக இந்த அரசு இனியாவது நடவடிக்கை எடுக்குமா..?

எங்கள் குடும்பங்களை பிரிந்து வாழ்க்கையை இழந்து வாடும் இப்பெருந்துன்பங்கள் முடிவுக்கு வருமா..?

இப்படிக்கு 

இராபர்ட் பயஸ்

 

https://www.facebook.com/share/p/aZ7vRzda99wrq7mL/

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன்: கணக்கில் 'கில்லாடி' இந்த வியப்பூட்டும் சிறுவன் யார்?

1 month 3 weeks ago
Autism Child: கணக்கில் 'கில்லாடி' Google-க்கே சவால்விடும் திறமை? இந்த வியப்பூட்டும் சிறுவன் யார்?

திருப்பூரைச் சேர்ந்த சாய் சர்வேஷ் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன். ஆனால், இவரது காலண்டர் நினைவாற்றலோ அபாரம். கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் வரும் எந்த தேதியையும், மாதத்தையும் கூறினாலும், அது என்ன கிழமையில் வரும் என சரியாகச் சொல்லிவிடுகிறார்.

ஸ்ரீலங்காவில் 11 பௌத்த மத வழிபாட்டிடங்கள் தேசிய புனித இடங்களாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.

2 months ago
 
 
May be an image of ocean, beach and horizon
 
 
 
Checked
Thu, 04/18/2024 - 17:34
சமூகவலை உலகம் Latest Topics
Subscribe to சமூகவலை உலகம் feed