ஊர்ப்புதினம்

யாழில் இருந்து கொழும்பு வந்தவரை ஆட்டோவில் ஏற்றி பணம், நகைகள் கொள்ளை!

3 days 6 hours ago
யாழில் இருந்து கொழும்பு வந்தவரை ஆட்டோவில் ஏற்றி பணம், நகைகள் கொள்ளை!

யாழ்ப்பாணத்திலிருந்து தனது மனைவியுடன் கொழும்புக்கு வருகைதந்த இளம் வர்த்தகர் ஒருவர் புறக்கோட்டையில் வைத்து ஆட்டோ சாரதியினால் கடத்தப்பட்டு நகைகள், பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவர் தனது மனைவியுடன் கொழும்பு பம்பலப்பிட்டிக்கு வந்திருந்த நிலையில் வர்த்தக நடவடிக்கைக்காக புறக்கோட்டைப் பகுதிக்கு தனியாக சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை இரவு மனைவியுடன் புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு கொழும்பை வந்தடைந்தேன்.மனைவியை பம்பலப்பிட்டியில் உள்ள தனியார் மகப்பேற்று மருத்துவமனையில் அனுமதித்து விட்டு பின்னர் வர்த்தக அலுவல் ஒன்றுக்காக அன்று பிற்பகல் புறக்கோட்டைப்பகுதிக்குக்கு வந்தேன்.அங்கு எனது அலுவல்களை முடித்துப் பின்னர் புதிய ஆடைகளையும் கொள்வனவு செய்து கொண்டு மீண்டும் மனைவியிடம் செல்வதற்கு மாலை 6.45 அளவில் தயாரானேன்.

அப்போது புறக்கோட்டை போஹாவச் சந்தியில் ஓட்டோவில் வந்த ஒருவர் என்னை எங்கு போகப் போகிறீர்கள் என்று கொச்சைத் தமிழில் கேட்டார். பம்பலப்பிட்டிக்குச் செல்ல வேண்டும் என நானும் கூறினேன்.

பதிலுக்கு அந்த ஓட்டோக்காரரும் ‘வாருங்கள் நான் பாணந்துறைக்குத் தான் போகின்றேன். வழியில் பம்பலப்பிட்டியில் இறக்கிவிடுகின்றேன் நீங்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தரலாம்’ என்று சொன்னார்.

நானும் நம்பிக்கையாக அவருடைய ஓட்டோவில் ஏறிப் பயணம் செய்தேன்.அங்கிருந்து மருதானை வரும் வரையும் என்னுடன் மிக நட்பாக உரையாடினார். மருதானைச் சந்தியில் உள்ள மதுபானக் கடை ஒன்றில் நிறுத்திவிட்டுக் ‘கொஞ்சம் இருங்கள் பியர் வேண்டி வருகின்றேன்’ எனக் கூறிவிட்டுச் சென்றவர் சில நிமிடங்களில் பியர் போத்துல் ஒன்றுடன் வந்தார்.

அதற்கிடையில் மேலும் ஒருவர் அங்கு வந்து அந்த ஓட்டோக்காரருடன் மிக நட்பாக உரையாடிவிட்டு அருகில் நின்றார்.
ஓட்டோக்குள் வைத்து பியர் போத்தலை உடைத்து கொஞ்சம் குடியுங்கள் என்று என்னை அந்த ஓட்டோக்காரர் கேட்டார்.

எனக்கு சந்தேகம் வந்தது.அதனால் நான் அதற்கு மறுத்தேன். எனது மனைவி வைத்தியசாலையில் உள்ளார். நான் அங்கு போக வேண்டும். என்னை பம்பலப்பிட்டியில் இறக்கிவிடுங்கள் என அவரிடம் வேண்டினேன். அப்போது அவர் என்னை மிரட்டி அந்த பானத்தை குடிக்க சொன்னார் ஓட்டோவைச் சுற்றி அவரின் கையாட்களான இருவர் அங்கு நின்றதை அவதானித்தேன் .ஆனாலும் நான் மீண்டும் மறுத்தபோது அவர் எனது கழுத்தைப் பிடித்து அந்த பானத்தை பலாத்காரமாகப் பருக்கினார்

அதன் பின்னர் ஓட்டோவை அவர் பொரளையை நோக்கிச் செலுத்தினார். எனக்கு அருகில் இருவர் ஏறி அமர்த்திருந்ததை நான் உணர்ந்தேன்.பொரள்ளை வரையும் எனக்கு சற்று மயக்கமாக இருந்தது. அதன் பின்னர் எனக்கு என்ன நடந்தது என்றே தெரியாது

மயக்க நிலையில் இருந்த என்னை சனிக்கிழமை அதிகாலை கம்பஹா திவுலுப்பிட்டிய பகுதியில உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் வீதி ஓரமாக தள்ளிவிட்டு ஓட்டோக்காரர்கள் சென்று விட்டனர் ,நான் வீதியில் மயக்க நிலையில் கிடந்ததைக்கண்ட சிலர் பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவித்ததாக பின்னர் அறிந்தேன்.
அத்துடன் எனது கையில் இருந்த மோதிரம், கைப் பையில் இருந்த 40 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கொள்வனவு செய்யப்பட்ட பெறுமதியான புதிய ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டதை தெரிந்து கொண்டேன் .ஏரிஎம்மில் இருந்து பணம் எடுக்கப்பட்டதை மனைவி கூறிய பின்னரே அறிந்து கொண்டேன் , கடவுச் சொல்லை எப்படி என்னிடமிருந்து பெற்றார்கள் என்று எனக்கு புரியவில்லை மயக்க நிலையில் இருந்த என்னிடம் ஏதோவெல்லாம் கேட்டார்கள் நான் பிதற்றியதை என்னால் கொஞ்சம் உணர முடிந்தது என்றார்

இச் சம்பவம் தொடர்பாக அவருடைய மனைவி கூறுகையில்,

இரவு எட்டு மணியளவில் வந்துவிடுவேன் என்று கூறிச் சென்ற எனது கணவர் இரவு பத்து மணியாகியும் வரவில்லை. தொலைபேசி அழைப்பை எடுத்தாலும் அதற்கும் பதில் இல்லை.

கணவர் ஒருபோதும் எனது தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்காமல் இருக்கமாட்டார். அதுவும் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் நிச்சயமாக குறித்த நேரத்துக்கு வந்திருக்க வேண்டும்.

ஆகவே அவருக்கு ஏதோ நடந்து விட்டது என்ற அச்சத்துடன் நான் அனுமதிக்கப்பட்டிருந்த பம்பலப்பிட்டி மருத்துவமனை நிர்வாகத்திற்குத் தெரிவித்திருந்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் கொழும்பில் உள்ள எனக்குத் தெரிந்த சில நண்பர்களிடம் உதவி கேட்டேன். நள்ளிரவு என்பதால் பலரும் தயங்கினர்.

பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதென்றாலும் என்னால் மருத்துவ மனையை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.அப்படியிருந்தும் இரவிரவாக விழித்திருந்து எனக்குத் தெரிந்த சிலருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன்.

அதிகாலை மூன்று மணியளவில் கட்டுநாயக்காவில் உள்ள பணம் எடுக்கும் தானியக்க இயந்திர (ATM) நிலையத்தில் இருந்து ஒரு இலட்சம் ரூபா பணமும், பின்னர் இரண்டு தடவைகள் ஐயாயிரம் ரூபாவும் அடுத்தடுத்து எடுக்கப்பட்டமைக்கான குறுஞ் செய்தி எனது தொலைபேசிக்கு வந்தது.இதனால் எனது கணவருக்கு ஏதோ ஆபத்து நடந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டேன்.உடனடியாக வங்கியுடன் தொடர்பு கொண்டு எனது வங்கி அட்டையின் இலக்கத்தைத் இடைநிறுத்தினேன் .

அடுத்த நாள் அதிகாலை நன்கு தெரிந்த ஒருவருடன் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாட்டைப் பதிவு செய்தேன்.கணவரின் தொலைபேசி இலக்கத்தைக் கொண்டு கூகுல் வரைபடத்தைப் பெற்ற பொலிஸார் புறக் கோட்டை போஹா சந்தியில் இருந்து மருதானை பொரளையூடாக கட்டுநாயக்கா மீரிகானைக்குச் சென்றிருப்பதாகக் கூறினர்.மீரிகானையுடன் தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பகல் 10.30மணியளவில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் இருந்து தாதியொருவரின் கையடக்கத் தொலைபேசி மூலம் கணவர் என்னுடன் தொடர்பு கொண்டு தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து விளக்கினார்.அதனையடுத்து வைத்தியாசலைக்குச் சென்று கணவரைப் பார்வையிட்டேன்.பொலிஸாரும் வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டனர் என்றார்.

இதேவேளை கொழும்பில் சமீபகாலமாக இவ்வாறான கடத்தி பணம்பறிக்கும் சம்பங்கள் இடம்பெறுவதாக தெரிவித்த பொலிஸார் கொழும்புக்கு வரும் மக்களை ஆட்டோக்களை வாடகைக்கு அமர்த்துவதில் மிகவும் எக்காரிகையாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
 

http://www.samakalam.com/யாழில்-இருந்து-கொழும்பு-4/

இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் பிரதானி கென்யாவின் பாதுகாப்புத் தலைமையகத்திற்கு விஜயம்

3 days 7 hours ago

Published By: DIGITAL DESK 3   26 MAR, 2024 | 11:03 AM

image

கென்யாவிற்கு நேற்று திங்கட்கிழமை (25) விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நைரோபியிலுள்ள அந்நாட்டு பாதுகாப்புத் தலைமையகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு ஜெனரல் சவேந்திர சில்வாவை கென்யாவின் பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஜெனரல் பிரான்சிஸ் ஒகோல்லா வரவேற்றார்.

சவேந்திர சில்வா கென்ய பாதுகாப்பு படையின் தலைவர், பாதுகாப்புப் படையின் துணைத் தலைவர், சேவைத் தளபதிகள் மற்றும் கென்யா பாதுகாப்புப்  படைகளின் ஜெனரல் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

கென்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு இராணுவ உறவுகளை வலுப்படுத்துதல், கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்துதல், இராணுவத் திறனை மேம்படுத்துதல்  மற்றும் சமாதான ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபாடு போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இரு நாடுகளும் தங்களின் மனித வளத்தை மேம்படுத்துவதில் மட்டும் அல்லாமல், தங்கள் செயல்பாடுகளை நவீனமயமாக்குவதிலும்  நெறிப்படுத்துவதிலும் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்வதில் இரு இராணுவத் தலைவர்களும் தங்கள்  உறுதிப்பாட்டை எடுத்துரைத்தனர்.

சவேந்திர சில்வா உஹுரு கார்டன்ஸ் தேசிய நினைவுச்சின்னம் மற்றும் அருங்காட்சியகத்திற்கு (UGNM&M) விஜயம் செய்தார். அங்கு அவரை பணிப்பாளர் கர்னல் கேத்தரின் லாகட் வரவேற்றார்.

மேலும்,  கென்ய சுற்றுப்பயணத்தின் போது தேசிய பாதுகாப்பு கல்லூரி (NDC) மற்றும் சர்வதேச அமைதி ஆதரவு பயிற்சி மையம் (IPSTC) ஆகியவற்றை பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/179708

தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனை நாளை மக்களிடம் கையளிக்கப்படும்!

3 days 20 hours ago
Maternity-Hospital-696x522-1.jpg தெற்காசியாவின் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலையாக காலி கராப்பிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜேர்மன் – இலங்கை நட்புறவு புதிய மகளிர் வைத்தியசாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை (மார்ச் 27) திறந்து வைக்கப்படவுள்ளது.

ஆறு மாடிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில் அறுநூறு படுக்கைகள் மற்றும் ஆறு அறுவை சிகிச்சை அரங்குகள் கொண்டது , அவசர சிகிச்சைப் பிரிவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், ஆய்வகங்கள், சிசு தீவிர சிகிச்சைப் பிரிவுகள், சிறப்பு குழந்தைகள் பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் உள்ளதாக மருத்துவமனை இயக்குநர் பி. விமலசேன தெரிவித்துள்ளார்.

இதற்காக ஜேர்மன் அரசாங்கம் இருபத்தைந்து மில்லியன் யூரோக்கள். (ரூ. 357 கோடி) வழங்கியுள்ளது.
ஆரம்பத்தில் வைத்தியசாலை நிர்மாணிப்பிற்காக எண்ணூறு பேர்ச்சஸ் பெறப்பட்டதுடன் பின்னர் மேலும் இரண்டு காணிகள் கிடைத்ததால் வைத்தியசாலையின் தற்போதைய அளவு ஆயிரம் பேர்ச்களை அண்மித்துள்ளது.
வைத்தியசாலை திறக்கப்பட்டதன் பின்னர் கராப்பிட்டிய புறநகர் அபிவிருத்தியை ஆரம்பிக்க நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி ஹெல்முட் கோல் 2004 டிசம்பரில் விடுமுறைக்காக இலங்கை வந்தபோது, தென் மாகாணத்தில், சுனாமியில். காலி மஹாமோதர வைத்தியசாலையில் ஏற்பட்ட சேதத்தைப் பார்த்து நன்கொடையாக வழங்கிய 300 கோடி ரூபாயில் இந்த வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி 2007ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இந்த புதிய வைத்தியசாலைக்கு அடிக்கல் நாட்டினார்.

ஆனால் அதனை நிர்மாணிக்கும் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட அரச சார்பற்ற நிறுவனம் அதனை பாதியிலேயே நிறுத்திவிட்டு இலங்கையை விட்டு வெளியேறியதால் அப்பகுதியே பின்னர் நுளம்புகள் உற்பத்தியாகும் இடமாக மாறியதுடன் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் இடமாக மாறியது.

இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் தலையீட்டினால் வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்காக ஜேர்மனியிடம் இருந்து இருபத்தைந்து மில்லியன் யூரோக்களை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தங்கள் 2015ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டன.
புதிய மருத்துவமனை திறக்கப்பட்ட பிறகு, மஹ்மோதரா மகப்பேறு மருத்துவமனை அந்த இடத்திலிருந்து அகற்றப்படும்.

https://thinakkural.lk/article/297022

சாவ. கடலேரி வற்றியதால் தொழில் இழந்த மீனவர்கள்

3 days 22 hours ago

 

யாழ்ப்பாணம் 14 மணி நேரம் முன்

சாவ. கடலேரி வற்றியதால் தொழில் இழந்த மீனவர்கள்

 (ஆதவன்)

சாவகச்சேரி கடலேரி வற்றியுள்ளதால் அந்தப் பகுதில் கடற்றொழிலில் ஈடுபடும் நூற்றுக்கணக்கானோர் தொழில்களை இழந்துள்ளனர்.

கடலேரி வற்றி பல இடங்களில் மணல் திட்டுக்கள் காணப்படுகின்றமையால் படகுகள் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று கடற்றொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். (ஏ)

சாவ. கடலேரி வற்றியதால் தொழில் இழந்த மீனவர்கள் (newuthayan.com)

பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறையில் மாற்றம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துகிறது : ஜனாதிபதி

3 days 23 hours ago

Published By: DIGITAL DESK 3    25 MAR, 2024 | 03:54 PM

image

நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அவர்களுக்கு பாடம்  தொடர்பான  அறிவை வழங்கி  பரீட்சைகளுக்கு தயார்படுத்துவதைப் போன்றே அவர்களின் போசாக்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

அத்துடன் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழிநுட்ப அறிவை பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்கமைவாக பாடசாலை கல்வி மற்றும் பரீட்சை முறைகளில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நாரஹேன்பிட்டி சுஜாதா மகளிர் கல்லூரியில் இன்று (25) முற்பகல் இடம்பெற்ற “2024 பாடசாலை உணவுத் திட்டம்” ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலையில்  போசாக்கு உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் காலை 7.30 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்தக் காலை உணவை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

"ஆரோக்கியமான சுறுசுறுப்பான தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் இது உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான அடிப்படை நோக்கங்களை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

9134 அரச பாடாசலைகளிலும், 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் ஆரம்ப வகுப்புகளில் உள்ள அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த வருட பாடசாலை உணவு வழங்கல்  திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்காவின் விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட ஏனைய அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன.

இந்த போசாக்குத் திட்டத்திற்கு தேவையான உணவு வகைகள், முக்கிய உள்நாட்டு விநியோகஸ்தர்களிடமிருந்து பெறப்படுவதுடன், நேரடி மற்றும் மறைமுகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதன் ஊடாக நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான பங்களிப்பாகவும் உள்ளது.

இந்தப் பாடசாலை உணவுத் திட்டம் தொடர்பான அனைத்து நிதி நிர்வாகங்களையும் வெளிப்படைத்தன்மையுடனும் அறிக்கைகளுடனும் முன்னெனெடுப்பதற்கான பொறிமுறையும் நடைமுறையில் உள்ளது. கொள்கை வகுக்கப்பட்டது முதல் அதன் அனைத்து முக்கிய நிர்வாக மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவு மேற்கொள்கின்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிபர் திருமதி பிரியங்கிகா விஜேசிங்க நினைவுப் பரிசையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது,

பாடசாலை உணவுத் திட்டம் இன்று  ஆரம்பிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளில் ஒன்றை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை நான் பார்க்கிறேன். கல்விச் செயற்பாடு பூரணமடைவதற்கு, மாணவர்களுக்கு பாட அறிவை வழங்கி, பரீட்சைக்குத் தயார் படுத்துவதைப் போன்றே அவர்களின் போசாக்கையும் பாதுகாக்க வேண்டும். உலகில் பல நாடுகள் இந்த பாடசாலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

நமது நாட்டில் போசாக்குக் குறைபாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. 'அஸ்வெசும' திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்படும் நிதி நிவாரணத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளோம்.

பாடசாலை மாணவர்களிடையே போசாக்குக் குறைபாடு அதிகரிப்பதற்கு வருமான அளவு மட்டும் காரணம் அல்ல. சில மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்காக காலை 6.00 மணியளவில் வீட்டை விட்டு வெளியில் வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு காலை உணவு சாப்பிட முடிவதில்லை.

மேலும் பகலுணவையும் சாப்பிட முடிவதில்லை.  எனவே எந்த அந்தஸ்த்தை  கொண்டிருந்தாலும்,எந்த இனத்தை அல்லது மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சகல மாணவர்களும் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர். எனவே, மாணவர்களுக்கு பாடசாலையில் உணவு கிடைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவது மிகவும் அவசியம்.

தற்போது நாட்டில் நவீன கல்வி முறையை உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். 2024 ஆம் ஆண்டுக்கு மாத்திரமன்றி  2030 ஆம் ஆண்டுக்கும் உகந்த கல்வி முறையை உருவாக்க வேண்டும்.அந்தப் பணிகளை இப்போது செய்து வருகிறோம். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், நவீன தொழில்நுட்ப அறிவை வழங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், ஒவ்வொரு பாடசாலையிலும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதலில் பாடசாலைகளில் AI சங்கங்கள் தொடங்கப்பட வேண்டும். மேலும், தேசிய AI மையம் சட்டப்படி நிறுவப்பட உள்ளது.இந்த ஆராய்ச்சி மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது என்பதைக் கூற வேண்டும்.

அதன்படி, அடுத்த சில ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தை ஆரம்பப் பாடசாலைகள் மட்டுமின்றி, உயர்கல்வி கற்பிக்கப்படும் அனைத்துப் பாடசாலைகளிலும் அறிமுகப்படுத்த உள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடன் நாம் முன்னேற வேண்டும். அந்த தொழில்நுட்ப அறிவை பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும். அதன்படி, பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறையை மாற்றியமைப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். இந்த நவீன தொழில்நுட்ப அறிவோடு பிள்ளைகளின் ஆங்கில மொழி அறிவையும் வளர்க்க வேண்டும். அதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளோம் என்றும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த்,

பின்தங்கிய  பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இந்த உணவுத்  திட்டம் முன்பு செயல்படுத்தப்பட்டது.ஆனால் இந்த ஆண்டு முதல் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சராக 16,600 மில்லியன் ரூபாவை இதற்காக ஒதுக்கியுள்ளார்.மேலும், ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டம் மூலமாகவும் உதவி பெறப்படுகிறது.அதன்படி, 17 இலட்சம் ஆரம்ப வகுப்பு  மாணவர்களுக்கும் காலையில் போசாக்குள்ள உணவு வழங்குவது சாத்தியமாகியுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட தரத்தில் போசாக்குள்ள உணவு வழங்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கல்விகற்பிப்பதற்கு முன்னர் அனைத்து மாணவர்களின் வயிற்றையும் நிரப்புவதன் மூலம்,  சிறப்பாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள், இது மாணவர்களின் மன நிலையை சீர்செய்யவும் உதவுகிறது. 

கடந்த மாதம் பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் சீருடைகள் சரியான நேரத்தில் வழங்கப்பட்டன. இன்று முதல் போசாக்குள்ள உணவு வழங்கப்படும்.ஆனால் இதற்கு ஊடகங்கள் மூலம் கிடைத்த பிரசாரம்  மிகவும் குறைவு.பத்திரிகைகளில் போசாக்கு குறைபாடு பற்றிய செய்திகளை பெரிய எழுத்தில் வெளியிடும் ஊடக நிறுவனங்களும் இந்த போசாக்குள்ள உணவு வழங்கல் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெரிவிக்கும் என நம்புகிறேன்.

கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி வசந்தா பெரேரா,

 கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் நீட்சியாக மாணவர்களின் போசாக்கை அதிகரிக்கும் வகையில் இன்று முதல் உணவுத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.கல்வி அமைச்சு என்ற வகையில், புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் எதிர்காலத்துக்கு ஏற்ற மாணவர் சமூகத்தை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.நவீன உலகிற்கு ஏற்ற கல்வி முறையுடன் கூடிய அறிவாற்றல் மிக்க சமுதாயத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும் என்று தெரிவித்தார்.

மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக்க, இராஜாங்க அமைச்சர்களான விஜித பேருகொட, அரவிந்த குமார் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Sujatha_Balika__13_.jpg

Sujatha_Balika__2_.jpg

Sujatha_Balika__1_.jpg

Sujatha_Balika__4_.jpg

Sujatha_Balika__9_.jpg

Sujatha_Balika__10_.jpg

https://www.virakesari.lk/article/179675

அநுராதபுரம் ஜயஸ்ரீ மஹாபோதி பொலிஸாருக்கு புதிய சீருடை

3 days 23 hours ago

Published By: DIGITAL DESK 3    25 MAR, 2024 | 04:08 PM

image

அநுராதபுர வரலாற்று சிறப்பு மிக்க ஜயஸ்ரீ மஹாபோதி விகாரையில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு புதிய சீருடை இன்று திங்கட்கிழமை (25) அறிமுகப்படுத்தப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) காலை புதிய சீருடையில் கடமைகளை பொறுப்பேற்ற அதிகாரிகள் மகாசங்கத்தினரின் ஆசிகளை பெற்றுக்கொண்டனர். அடமஸ்தானதிபதி கலாநிதி அதி வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரரினால் தர்மோபதேச பிரித் ஓதப்பட்டது.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரிடம்  அடமஸ்தானதிபதி கலாநிதி அதி வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரர் விடுத்த வேண்டு கோளுக்கு இணங்க புதிய  சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது.

உடமலுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  டபிள்யூ.சி.எல்.ஆர்.கே.பி. வெத்தேவ உட்பட பல உயர் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/179666

இளநீர் ஏற்றுமதி மூலம் இலங்கை ஒரு மாதத்தில் ஈட்டிய வருமானம் 3,400 மில்லியன்!

4 days ago
25 MAR, 2024 | 05:16 PM
image
 

இலங்கையில் இளநீர் ஏற்றுமதி மூலம், 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் சுமார் 3,439 மில்லியன் ரூபா என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையின் இளநீர் ஏற்றுமதி மூலம்,  கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் 2,705 மில்லியன் ரூபாவாகும்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில், ஈட்டப்பட்ட வருமானம் 734 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/179685

இலங்கையின் 18 மாவட்டங்களில் சிட்டுக்குருவிகள் இல்லை!

4 days 4 hours ago
download-5.jpg

கடந்த நான்கு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் படி நாட்டின் 18 மாவட்டங்களில் சிட்டுக்குருவி அழிந்துள்ளதாக சூழலியல் ஆர்வலர் சட்டத்தரணி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.

உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை இலங்கை பறவையியல் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது .

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 உலக சிட்டுக்குருவி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

சட்டத்தரணி ஜகத் குணவர்தன மேலும் தெரிவிக்கையில், சிட்டுக்குருவியை பாதுகாக்கப்பட்ட பறவையாக அறிவிக்குமாறு 2007ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதன்படி தற்போது சிட்டுக்குருவி பாதுகாக்கப்பட்ட பறவையாக கருதப்படுவதாகவும் தெரிவித்தார்.

மலேரியாவைக் கட்டுப்படுத்த மலத்தியான் என்ற இரசாயனத்தை தெளிக்க ஆரம்பித்ததில் இருந்து சிட்டுக்குருவியின் அழிவு தொடங்கியது, மேலும் 1990 களில் கொசுவர்த்தி சுருள்களின் பயன்பாடு அதிகரித்ததால், ஊவா, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சிட்டுக்குருவிகள் அழிந்தன. இந்த கொசுவர்த்திச் சுருள்களில் உள்ள இரசாயனம் பறவைகளின் பெருக்கத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

இப்போது சிட்டுக்குருவி மிகவும் அருகிவரும் பறவையாக உள்ளதாகவும் சிட்டுக்குருவியின் அழிவு குறித்து முதலில் இலங்கையில் இருந்தும், பின்னர் இந்தியாவில் இருந்தும் பதிவாகியதாகவும் அவர் கூறினார்.

புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லாததும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைவதில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிட்டுக்குருவிகள் தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொண்ட இலங்கை இளம் விலங்கியல் நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினர் நிசாலி தயானந்தா தெரிவித்துள்ளார். இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவையும் சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.

https://thinakkural.lk/article/296962

இலங்கையில் ஏழுமலையான் கோவில் !

4 days 6 hours ago
main-qimg-b51096514c43f1ac30668122c0595f இலங்கையில் ஏழுமலையான் கோவில் !

இலங்கையில் ஏழுமலையான் கோவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் ஏழுமலையான் கோவில்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறன.

இதற்கமைய இலங்கையில் ஏழுமலையான் கோவில் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இலங்கையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அறக்கட்டளை ஒன்று கொழும்பில் பிரமாண்டமான ஏழுமலையான் கோவில் கட்ட உதவி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தின் ஊடாக இந்திய அரசை அனுகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இது குறித்து இந்திய அரசு சார்பில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதனையடுத்து இலங்கையில் ஏழுமலையான் கோவிலை நிர்மாணிப்பதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2024/1374722

சீனாவிற்கு விஜயம் செய்தார் பிரதமர்

4 days 8 hours ago
25 MAR, 2024 | 09:57 AM
image
 

பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (24) கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.

சீன அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் பிரதமர் தினேஷ் குணவர்தன ஐந்து நாட்களுக்கு சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது பிரதமர் சீனா இலங்கைக்கு அளித்த கடனை  மறுசீரமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளார்.

அவர் நேற்று (24) இரவு 08.20 மணியளவில் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சீனாவுக்குப் புறப்பட்டுள்ளார்.

அவருடன் இணைந்து மேலும் 10 தூதுக்குழுவினர் சீனாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

https://www.virakesari.lk/article/179615

கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் பற்றாக்குறை!

4 days 22 hours ago
24 MAR, 2024 | 03:55 PM
image
 

கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க பெண்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் பற்றாக்குறையாக இருப்பதாக தெரிவிக்கப்ட்டுள்ளது . 

சுமார் 8 மாதங்களாக அந்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த வருடம் முதல் தடுப்பூசிப் பணிகள் முடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல மாதங்களாக இந்த நோய் தொடர்பான தடுப்பூசிகளுக்கு உலகளாவிய தட்டுப்பாடு நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இந்த தடுப்பூசிகளை  எதிர்வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கையில் பெற்றுக் கொள்ள முடியுமென அவர் மேலும் தெரிவித்தார் . 

ஒன்றரை வருட காலத்திற்கு தேவையான தடுப்பூசிகள் இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/179586

தமிழ் பொது வேட்பாளருக்கான நிபந்தனை வரைவு தயாராகிறது - சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு

5 days 7 hours ago
23 MAR, 2024 | 10:45 PM
image

ஆர்.ராம் 

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கப்படும்போது அவருடைய நோக்கம் உட்பட தென்னிலங்கை தலைமைகளுடன் பேரம்பேசுவதற்கான நிபந்தனை வரைவொன்று தயாரிக்கப்படவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவதானது வெற்றி பெறுவதற்கு அல்லவெனவும், தேசிய இனப்பிரச்சினையை தென்னிலங்கைத் தலைமைகள் புறக்கணித்தமையாலேயே என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளதோடு தென்னிலங்கைத் தலைவர்களுடன் பேசுவதற்கு தயாராகவுள்ளதாகவும் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான முயற்சிகள் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இந்த மூன்று தலைவர்களும் தமிழ் மக்கள் நீண்டகாலமான நீடித்துவருகின்ற இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினைக் காணவேண்டும் என்று போராடி வருகின்றார்கள் என்பதை நன்கு அறிந்தவர்கள்.

எனினும் அவர்களில் எவருமே தற்போது வரையில் இந்த நாட்டில் இனப்பிரச்சினையொன்று காணப்படுகின்றது. அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை பகிரங்கமாகக் கூறுவதற்கோ தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை முறையாக முன்னெடுப்பதற்கோ தயாராக இல்லை. அவர்கள் தற்போது தமிழ் மக்களுக்கு இனரீதியான பிரச்சினைகள் இல்லை. இந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகளே காணப்படுகின்றன என்பதை மையப்படுத்தியே கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

அத்துடன், தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை மேற்கொள்வதற்கும் தயாராக இல்லை. இவ்வாறான நிலையில் தான் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மும்முனை தேர்தல் காணப்படுவதால் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியைக் கொண்டிருக்கின்றது. 

ஆகவே, சிறுபான்மை மக்களின் வாக்குகள் வெற்றியை தீர்மானிப்பதில் பெரும் செல்வாக்கைச் செலுத்தவுள்ளன. எனவே தான் தென்னிலங்கை தலைவர்களுக்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை வெளிப்படுத்தும் முகமாக அவர்களின் வெற்றியை தீர்மானிக்கும் வாக்குகள் அவர்களுக்கு செல்வதை தடுக்கும் முகமாகவே தமிழர்களின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முயற்சிகளை எடுத்துள்ளோம்.

அவ்வாறு வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதால் எமக்கு தேர்தலில் வெற்றி கிடைக்காது என்பதை நன்கே அறிந்துள்ளோம். ஆனால் தமிழ் மக்கள் அனைவரும் ஏகோபித்து வாக்களிக்கும்போது தென்னிலங்கைத் தலைவர்கள் பெரும்பான்மையை உறுதி செய்வது மிகக் கடினமாக இருக்கும்.

ஆகவே, அவர்கள் தமிழ் மக்களை நோக்கி வரவேண்டிய தேவை ஏற்படும். அப்போது தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உள்ளடக்கிய நிபந்தனைகளை தமிழ் பொதுவேட்பாளர் கொண்டிருப்பார். அதனடிப்படையில்  அதனை மையப்படுத்தி பேச்சுக்களை முன்வரும் வேட்பாளருடன் நடத்துவதற்கு தயாராகவே உள்ளோம். 

அதற்காக, தமிழ் பொதுவேட்பாளர் கொண்டிருக்க வேண்டிய நிபந்தனைகள் சம்பந்தமான வரைவொன்று தயாரிக்கப்படவுள்ளது. அத்துடன் தென்னிலங்கை தலைவர்கள் அல்லது வேட்பாளர்கள் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தயாராகின்றபோது அவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கான உயர்மட்டக் குழுவொன்றும் உருவாக்கப்படவுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/179529

நாட்டில் வேகமாக பரவும் காசநோய்! கொழும்பு, கம்பஹா, களுத்துறையில் அதிகளவானோர் அடையாளம்!

5 days 7 hours ago
23 MAR, 2024 | 10:25 PM
image

நாட்டில் வேகமாக காசநோய் கரவிவருவதாகவும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மத்திய மார்புநோய்களுக்கான சிகிச்சை பிரிவின் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி வைத்தியர் ஆர்.எம்.எம்.சரத் பண்டார தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

காச நோய் என்பது ஒரு வகை பாக்டீரியா நோய்க்கிருமிகளால் ஏற்படும் ஒரு நோயாகும். இந்நோய் வேகமாக பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும். 

உமிழ்நீர், சளி மூலமாக பரவக்கூடிய இந்நோய் தற்போது இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது.

இருப்பினும் மேல் மாகாணத்தில் கொழும்பு ,  கம்பஹா மற்றும் களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு  மாவட்டத்தில் மட்டக்குளி, மோதரை, மாளிகாவத்தை, தெமட்டகொடை, பொரள்ளை மற்றும் வனாத்தமுல்ல உள்ளிட்ட பிரதேசங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நோய் வேகமாக பரவக் கூடியது என்பதால் வீட்டில் உள்ள ஒருவர் பாதிக்கப்பட்டாலும் முழுக் குடும்ப உறுப்பினர்களையும் பரிசோதிப்பது மிகவும் அவசியம்.

2 வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், உணவில் நாட்டமின்மை,  உடல் எடை குறைதல், சளியுடன் இரத்தம் வெளியேறுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியரிடம் பரிசோதனை மேற்கொண்டு நோயை உறுதி செய்ய வேண்டும்.

வைத்தியரின் ஆலோசனைகளின் கீழ் தொடர்ந்து 6 மாதங்களுக்கு தீவிர சிகிச்சை பெற்று வருவதால் இந்த நோயை குணப்படுத்த முடியும்.

இந்த நோயானது பாதிப்பு தன்மை அற்றது என்பதுடன் இந்த நோய் அறிகுறிகளை விரைவில் அறிந்து கொண்டால் இதனை குணப்படுத்துவது மிகவும் எளிது. ஆனால் இந்த நோய் அறிகுறிகளை அறிந்து கொள்ள தாமதமானால் இதனை குணப்படுத்துவது சிரமமாகலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/179539

தமிழக முதல்வருடனான சந்திப்பில் தாமதம் - வடக்கு கடற்றொழிலாளர்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை

5 days 8 hours ago
இந்திய தேர்தல் அறிவிப்பால் தமிழக முதல்வருடனான சந்திப்பில் தாமதம் - வடக்கு கடற்றொழிலாளர்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை
23 MAR, 2024 | 10:44 PM
image

(ஆர்.ராம்)

இலங்கை, இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இடையிலான முறுகல் நிலைமைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டானுக்கும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடத்தப்படுவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்தியப் பொதுத்தேர்தல் அறிவிப்பால் தாமதமடைந்துள்ளது. 

இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் இழுவைமடிப் படகுகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதால் கைது செய்யப்படுவதோடு, அவர்களது உபகரணங்களும் கையகப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் எல்லை தாண்டும் மீனவர்கள் மீது நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும் என்றும் நாட்டின் கடல்வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கோரியும் போராட்டங்கள் பல இடம்பெற்று வந்தன. அதேநேரம், தமிழகத்திலும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

இந்நிலையில், இருநாட்டு கடற்றொழிலார்கள் விவகாரத்திற்கு விரைந்து முற்றுப்புள்ளி வைப்பதற்கு பாண்டிச்சேரி ஜுனியன் பிரதேசத்தின் மீன்பிடி மற்றும் மீனவர் நலன் கே.லக்ஷ்மி நாராயணன்; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

குறித்த கடிததத்தின் பிரகாரம், தமிழக முதல்வர் ,மு..க.ஸ்டாலினுக்கும் அமைச்சர் டக்ளஸ{க்கும் இடையில் சந்திப்பொன்றை நடத்துவதென்றும் அதில் இருதரப்பும் இணக்கப்பாடுகளை எட்டுவதென்றும் கூறப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், அமைச்சர் டக்ளஸ் பாண்டிச்சேரி செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையி இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் டக்ளஸ் உள்ளிட்ட இந்த விவகாரத்துடன் தொடர்புடைய எந்தவொரு தரப்பினரையும் சந்திப்பதாக இருந்தால் இந்திய தேர்தல்கள் ஆணையகத்தின் முன் அனுமதி பெற வேண்டியது அந்நாட்டுச் சட்டமாகவுள்ளது.

அந்தவகையில், இருதரப்பு அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் தாமதமாகியுள்ளது. அத்துடன், விசேடமாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டமாட்டார்கள் என்ற உத்தரவாதக் கடிதத்தினை பாண்டிச்சேரி மற்றும் தமிழக முதலமைச்சர்கள் வழங்குவதற்கு உறுதிய அளித்துள்ளன. 

இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படவுள்ளதாக இந்திய தலைமை தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளதோடு ஏப்ரல் 19ஆம் திகதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/179534

வவுனியாவில் காசநோயால் கடந்த வருடம் மூன்று பேர் இறப்பு; 58 பேர் பாதிப்பு - காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி

5 days 20 hours ago

Published By: DIGITAL DESK 3    23 MAR, 2024 | 04:11 PM

image
 

காசநோயினால் வவுனியாவில் கடந்தவருடம் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 58 பேர் நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதாக வவுனியா காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று சனிக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இம்முறை “ஆம் எங்களால் காசநோயை முடிவுக்கு கொண்டுவர முடியும்” எனும் தொனிப்பொருளில் உலக காசநோய் தினம் மார்ச் 24 ஆம் திகதி நினைவுகூரப்படுகின்றது. 

இலங்கையை பொறுத்தவரை ஒரு இலட்சம் பேரில் 62 பேர் காசநோயாளர்களாக இனம்காணப்படவேண்டும். 

இருப்பினும் 4 ஆயிரம்பேர் வரை இனம் காணப்படாமல் இருக்கின்றனர். நாட்டில் இறப்பிற்கு காரணமானமூன்றாவது நோயாக இது காணப்படுகின்றது.

கடந்தவருடம் வவுனியா மாவட்டத்தில் 58 நோயாளர்கள் இனம்காணப்பட்டனர். அதில் மூன்றுபேர் உயிர் இழந்துள்ளனர். 

தொடர்ச்சியாக இரு வாரங்களிற்கு மேற்ப்பட்ட இருமல் மாலைநேரத்தில் காய்ச்சல், உணவில் நாட்டம்இன்மை, உடல்நிறை குறைவடைதல், சளியுடன் ரெத்தம் வெளியேறல். இப்படியான அறிகுறிகள் தென்பட்டால் அது காசநோயாக இருக்கலாம்.

மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள பொதுவைத்தியசாலைகளுக்கு சென்று சாதாரண சளிப்பரிசோதனையினை இலவசமாக செய்துகொள்வதன் மூலம் இந்த நோயினை இனம் காணலாம். 

எந்தவித அறிகுறியும் இல்லாமலும் இந்த நோய் உடலில் இருக்கலாம். குறிப்பாக ஏற்கனவே நோய் ஏற்ப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், அல்லது நாட்பட்ட நோய் கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், சிறுநீரக நோயாளர்கள், மூட்டுவாதம் போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் வெளிப்படாமல் இந்த நோய்கிருமி தங்ககூடும். 

அப்படியானவர்களுக்கு பரிசோதனையினை செய்வதன் மூலம் அதனை கண்டறியலாம். 

ஒருவருக்கு காசநோய் ஏற்ப்பட்டால் ஆறுமாதத்திற்கு நேரடி கண்காணிப்புடனான சிகிச்சையின் மூலம் மருந்துகளை பெற்றுக்கொண்டால் அதனை முற்றாக குணப்படுத்தலாம். அது தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை. சிகிச்சைகளை எடுக்கத்தவறினால் அது தீவிரமடைந்து இறப்பிற்கு வழிவகுக்கும். என்றார்.

https://www.virakesari.lk/article/179515

திங்கட்கிழமை முதல் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு!

5 days 22 hours ago
susil-premajayantha-300x200.jpg

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள 1,700,000 பாடசாலை மாணவர்களுக்காக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அத்துடன், இந்த வேலைத்திட்டத்திற்காக 26 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/296893

கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று அளித்த பாரிய நன்கொடை

5 days 23 hours ago

ரூ. 470 மில்லியன் பெறுமதியான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுக்கான(ICU) 157 படுக்கைகள் இந்த வாரம் (மார்ச் 21) சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த படுக்கைகள் கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்றினால் சீதுவையில் உள்ள சுபுவத் அரணாவின் இயக்குநரும் நிறுவனருமான அருட்தந்தை டாரல் கூங்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

34 அரசு மருத்துவமனைகளுக்கு

சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, ICU படுக்கைகள் ஒவ்வொன்றும் ரூ. 3 மில்லியன் பெறுமதி வாய்ந்தவை என்பதுடன், 34 அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று அளித்த பாரிய நன்கொடை | A Huge Donation Sri Lankan Family Ln Canada

நீர்கொழும்பு, ராகம போதனா வைத்தியசாலை, சிலாபம், புத்தளம், சீதுவ, கம்பஹா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய மருத்துவமனைகளுக்கு இந்த ICU படுக்கைகள் வழங்கப்பட உள்ளன.

சுகாதார அமைச்சரின் நன்றி

நன்கொடையை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, கனடாவில் வசிக்கும் பட்ரிக் நீல்கமல் பெர்னாண்டோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிகவும் தேவையான நன்கொடைக்காக நன்றி தெரிவித்தார்.

கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று அளித்த பாரிய நன்கொடை | A Huge Donation Sri Lankan Family Ln Canada

https://ibctamil.com/article/a-huge-donation-sri-lankan-family-ln-canada-1711175253

இலங்கையில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தானின் தேசிய தினம்

6 days 3 hours ago
23 MAR, 2024 | 02:04 PM
image
 

பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வு இன்று (23) கொழும்பில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் இலங்கையைச் சார்ந்த பாகிஸ்தான் சமூகத்தினர் கணிசமானோர் கலந்துகொண்டனர். 

ஆகஸ்ட் 14, 1947 அன்று பாகிஸ்தான் உருவாக்கத்தின் அடிப்படையாக அமைந்த வரலாற்று சிறப்புமிக்க 1940 லாகூர் தீர்மானத்தின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 23ஆம் திகதி பாகிஸ்தானின் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது.

இம்முறை தேசிய தின நிகழ்வில் பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம்-உல் அஸீஸ் பாகிஸ்தானின் தேசிய கீதம் இசைக்கப்படும்போது பாகிஸ்தான் தேசியக்கொடியை உயர்த்தி விழாவை ஆரம்பித்தார். 

இந்நிகழ்வில், பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாகிஸ்தானின் தேசிய தினத்தை குறிக்கும் விசேட செய்திகளும் வாசிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் கருத்து தெரிவிக்கையில், பாகிஸ்தான் கொள்கைகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதோடு தமது தாய்நாட்டின் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் மட்டுமல்லாமல், இரு நட்பு நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கையை மேலும் நெருக்கமாக கொண்டுவருவதிலும் பாகிஸ்தான் சமூகம் தங்கள் பங்கை திறம்பட ஆற்றுமாறும் குறிப்பிட்டார். 

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் ஆழமான நட்பையும் உயர்ஸ்தானிகர் இதன்போது நினைவுகூர்ந்தார். எதிர்காலத்திலும் இரு நட்பு நாடுகளும் இரு நாடுகளினதும் நலனுக்காக இந்த உறவினை மேலும் பலப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

fd6551b5-265c-4218-b14a-28a20e89c2b4.jpg

https://www.virakesari.lk/article/179507

பிள்ளைகளை ஞானத்துடன் வளர்க்க வேண்டும் - வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் சமூக மருத்துவ ஆலோசகர்

6 days 4 hours ago
23 MAR, 2024 | 02:17 PM
image

(எம்.நியூட்டன்)

பிள்ளைகளை ஞானத்துடன் வளர்க்க வேண்டும். அதை விடுத்து அவர்களை அடித்து துன்புறுத்தி வளர்க்கின்றபோதுதான் அவர்கள் குடும்பத்தை விட்டுப் பிரிகின்ற நிலை ஏற்படுகிறது என வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் சமூக மருத்துவ ஆலோசகரான மருத்துவர் திருமகள் தெரிவித்தார்.

தேவை நாடும் மகளிர் அமைப்பின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று வியாழக்கிழமை (21) மல்லாகத்திலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இன்றைய சூழலில் பிள்ளைகளை அன்புடனும் அக்கறையுடனும் வளர்க்க வேண்டும். அதை விடுத்து அவர்களை அச்சுறுத்தி, துன்புறுத்தி வளர்ப்பதால் அவர்கள் குடும்பத்தை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படுகின்றது. இதனால் பல சமூக விரோத செயற்பாடுகளுக்கு உள்ளாகிறார்கள். இது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 

எனவே, பிள்ளைகளை வளர்க்கும்போது ஞானத்துடன் வளர்க்க வேண்டும். இந்த விடயத்தில் சிறுவர்கள் மீது பெற்றோர்கள் கூடிய கவனம் செலுத்தும் அதேவேளை சிறுவர்கள் தொடர்பில் செயற்படும் அமைப்புகள் கூடிய அக்கறையுடன் தொடர் கண்காணிப்புடன் செயற்படவேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், மகளிர் அமைப்பின் உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர்களின் உரைகளை தொடர்ந்து சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் பங்கேற்பிலான கண்காட்சியும் இடம்பெற்றது.

https://www.virakesari.lk/article/179505

சீன பல்கலைக்கழக பிரதிநிதிகள் கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு விஜயம் : ஒப்பந்தம் கைச்சாத்து

6 days 7 hours ago
23 MAR, 2024 | 10:44 AM
image

சீனாவின் முன்னணி பல்கலைக்கழகமான யுனான் பல்கலைக்கழக பிரதிநிதிகள் (22) இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து கலாசார மற்றும் மொழி ரீதியான பரிமாற்றங்களை செய்வதற்கான நிலையம் (Confucius Unit) ஸ்தாபிக்கும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டனர். 

இந்நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வந்தாறுமூலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக மூதவை கட்டட தொகுதியில் இடம்பெற்றது.

IMG-20240322-WA0140.jpg

யுனான் பல்கலைக்கழக உப பீடாதிபதி ஹூ ஜின்மிங்க் தலைமையிலான குழுவினர் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், பிரதி உபவேந்தர், பதிவாளர் உட்பட சர்வதேச விவகாரங்கள் திணைக்கள இணைப்பாளர் ஆகியோருடன் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இந்த நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் உபவேந்தர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அத்துடன் சீன பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருக்கும் இடையிலான கூட்டம் சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர், பீடாதிபதிகள், பதிவாளர், நூலகர், நிதியாளர் அத்துடன் சர்வதேச விவகாரங்கள் திணைக்கள இணைப்பாளர் ஆகியோரின் பங்குபற்றலுடன் பல்கலைக்கழக சபா மண்டபத்தில் நடைபெற்றது. 

IMG-20240322-WA0141.jpg

இதன்போது, இந்த நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. 

கிழக்கு பல்கலைக்கழகம் சார்பாக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், யுனான் பல்கலைக்கழகம் சார்பாக அதன் உபபீடாதிபதி ஹூ ஜின்மிங்க் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

அவ்வேளை கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டு அவரது நெறிப்படுத்தலில் இப்பல்கலைக்கழக ஊழியர் மேம்பாட்டு நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட நிருவாக தலைமைத்துவ பயிற்சிநெறிகளை பூர்த்திசெய்த கல்விசார் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது. 

ஊழியர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் சிதம்பரேசன் தலைமையில் நடைபெற்ற இச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ஹூ ஜின்மிங்க் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார். 

இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன், விஜயத்தின் ஓர் அங்கமாக Confucius Unit நிலையத்துக்கான உத்தேச இடம் சீன பிரதிநிதிகளால் பார்வையிடப்பட்டது.

மேற்படி நிலையம் இலங்கை கொழும்பு பல்கலைக்கழகம் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG-20240322-WA0138.jpg

IMG-20240322-WA0142.jpg

IMG-20240322-WA0139.jpg

https://www.virakesari.lk/article/179488

Checked
Fri, 03/29/2024 - 10:27
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr