ஊர்ப்புதினம்

சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் மாயம்!

2 hours 48 minutes ago
sajith-650x375.jpg சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் மாயம்!

”சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் காணாமற்போன விடயம் தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 157 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சுகாதாரத்துறையில் இடம்பெற்ற மருந்துப் பொருள் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இலஞ்ச மோசடிகள் தொடர்பில் வெளியான அம்பலத்தினால் நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் பல சவால்களுக்கு நாம் முகம் கொடுத்தோம்.
ஐக்கிய மக்கள் சக்தி பெரும் போராட்டங்களை இன்று நடத்தி திருடர்களை நீதிமன்றில் முன் நிறுத்தியுள்ளது.

மருந்துப்பொருள் மோசடி குறித்து பலர் பேசுகிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 240 வாகனங்கள் குறித்த சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆனால் சுகாதார அமைச்சு மேலதிக தகவல்களை கணக்காய்வு அலுவலகத்திற்கு ஒப்படைக்கவில்லை.
மேலும் 439 வாகனங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டில்இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

அரச நிறுவனங்களில் இவ்வாறான பல முறைகேடுகள் காணப்படுவதால், இந்த மோசடிகள் மற்றும் திருட்டுகள் ஒவ்வொன்றும் தெளிவாக விசாரிக்கப்படும். இதுதொடர்பாக நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை எமது ஆட்சியில் முன்னெடுப்போம்” இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1378433

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

3 hours 41 minutes ago

Published By: VISHNU

16 APR, 2024 | 07:48 PM
image
 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தேவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்ட அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார்.

பாலித தேவரப்பெரும ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை  மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வனவிலங்கு இராஜாங்க அமைச்சரும் ஆவார்.

https://www.virakesari.lk/article/181258

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு

9 hours 34 minutes ago

Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM

image

யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார். 

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார். 

முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார். 

ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார். 

அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். 

அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார். 

அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

https://www.virakesari.lk/article/181215

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின் தெளிவுபடுத்தல் !

9 hours 53 minutes ago

Published By: DIGITAL DESK 3

16 APR, 2024 | 11:19 AM
image
 

கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது.

1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும். 

(பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.)

2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை.

3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.

4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும்.

6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை.

7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

https://www.virakesari.lk/article/181205

ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி

13 hours 15 minutes ago

ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி 11-9.jpg

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய இராணுவம்

சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையர்கள் பலி

ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.

 

https://akkinikkunchu.com/?p=273802

மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது!

13 hours 23 minutes ago

மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது!
adminApril 15, 2024

 

பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர்.

அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார்

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

 

https://globaltamilnews.net/2024/201801/

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

14 hours 18 minutes ago

Published By: DIGITAL DESK 3

16 APR, 2024 | 10:39 AM
image
 

பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். 

இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன.

உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

https://www.virakesari.lk/article/181192

கல்முனை வடக்கு பிரதேச செயலகம்

14 hours 19 minutes ago
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம்
15 APR, 2024 | 04:09 PM
image

ஆர்.ராம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது.

கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது.

இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/181136

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன் சுவாமிகள்

14 hours 22 minutes ago

Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM

image

ஆர்.ராம்

ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.

எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார்.

இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார்.

https://www.virakesari.lk/article/181134

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : மட்டக்களப்பு உறுப்பினர்கள் பங்கேற்பதில் சந்தேகம் ?

14 hours 33 minutes ago
15 APR, 2024 | 03:58 PM
image

ஆர்.ராம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கட்சி முகங்கொடுத்துள்ள வழக்குகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளால் முன்மொழியப்பட்டுள்ள பொதுவேட்பாளர் விடயம் சம்பந்தமாகவும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு மீதான விசரணை எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக வழக்கு விடயங்களை கையாள்வது தொடர்பில் ஏகோபித்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு முனைவதாக கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதேநேரம், கட்சியின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன் மற்றும் வட மாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் இதுவரை தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பில் எதிர்மறையாக கருத்து வெளியிட்டுள்ளனர்.

அதேநேரம், சிவஞானம் சிறீதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுவேட்பாளர் விடயத்தினை சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், கட்சியின் தலைவரோ செயலாளரோ இதுதொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

மேலும், எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அம்மாவட்டத்தினைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்பதில் சந்தேகமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/181135

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day ago

அண்மைய நாட்களில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, போக்குவரத்து மற்றும் உணவுப் பெற்றுக்கொள்ளுதல் போன்றவற்றில் பாரிய சிரமங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் முகம்கொடுத்து வருகின்றனர்.

 

 

குறுந்தூர பயணங்களுக்கு வாகன சாரதிகள் அதிக பணம் அறவிடுதல், உடமைகளைக் கொள்ளையடித்தல் சேவைக் கட்டணங்கள் மற்றும் விலைகளை அதிகரித்தல் போன்ற முகம் சுழிக்க வைக்கும் செயற்பாடுகளை சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்கின்றனர்.

அண்மையில், சைவ உணவகம் ஒன்றுக்குச் சென்ற ஜேர்மனிய பிரஜைக்கு ஒரு வடை 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இது தொடர்பில் குறித்த பயணி காணொளி மூலமாக தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இது போன்ற மீண்டும் ஒரு இது போன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள ஒரு பயணி உணவு உண்பதற்காக வீதியோரக் கடை ஒன்றில் விலை விசாரித்த போது அங்கு சொல்லப்பட்ட விலையைக் கேட்டு அதே இடத்தில் வெளிப்படையாகவே தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.

ஒரு கொத்து ரொட்டியின் விலை 1900 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி விலையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நிலையில், குறித்த கடையின் உரிமையாளர் விரும்பினால் வாங்குங்கள் இல்லை என்றால் சென்று விடுங்கள் என்று கடும் தொணியில் தெரிவித்துள்ளார்.

இவற்றை காணொளியாக பதிவு செய்துள்ள அந்த பயணி தன்னுடைய ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

 

 

 

குறிப்பாக, பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்த இலங்கை மீளெழுவதற்கான பிரதான இலக்கு அண்ணியசெலாவணியை ஈட்டுவதாகும்.

சுற்றுலாப் பயணிகள் மூலமாக அதிகமான வெளிநாட்டு வருமானம் கிடைக்கின்ற நிலையில், இவ்வாறான முகம் சுழிக்க வைக்கும், சுற்றுலாப் பயணிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் விடயங்கள் எமது நாட்டின் வருமானத்தையும் பாதிக்கின்றது.

அத்துடன், இப்போதைய டிஜிட்டல் மயமான காலத்தில் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது சமூக வலைத்தளங்களில் தங்களது சுற்றுலா அனுபவங்களை நேரலையாக பகிர்ந்து கொள்ளும் போது இது போன்ற மோசடி நடவடிக்கைகள் நம் நாட்டின் மீதான நன் மதிப்பையும் பாதிக்கின்றன.

சுற்றுலாவுக்காக நமது நாட்டை நோக்கி வருகின்றவர்கள், எமது கலாசாரத்தையும், உணவு பழக்க வழக்கங்களையும், எமது பண்பாடையும் கற்றுக் கொள்ளவும், அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளவும் வருகின்றார்களேத் தவிர இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளை அல்ல...  

https://tamilwin.com/article/sri-lanka-tourism-1713179824?itm_source=parsely-detail

யாழில் போதையில் குழப்பங்களை ஏற்படுத்திய 7 இளைஞர்கள் கைது

1 day 5 hours ago
15 APR, 2024 | 03:50 PM
யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) போதையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு , யாழ்.பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இசைநிகழ்வில் போதையில் , குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் வன்முறை கும்பலைச் சேர்ந்த 7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் விசாரணைகளின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

யாழில் போதையில் குழப்பங்களை ஏற்படுத்திய 7 இளைஞர்கள் கைது | Virakesari.lk

இ.போ.ச - தனியார் இணைந்த நீண்ட தூர பேருந்து சேவை விவகாரம் - டக்ளஸின் தலையீட்டையடுத்து சுமுகமான தீர்வு

1 day 5 hours ago
15 APR, 2024 | 04:46 PM
image
 

இ.போ.ச மற்றும் தனியார் இணைந்த பேருந்து சேவையை முன்னெடுப்பதில் இருந்துவரும் இழுபறி நிலையையடுத்து, யாழ். நீண்ட தூர தனியார் பேருந்து சேவையில் ஈடுபட்டுவரும் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கான முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையால் எழுந்த பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டை அடுத்து பரீட்சார்த்த அடிப்படையில் சேவைகளை நடத்துவது என சுமுகமான தீர்வு காணப்பட்டுள்ளது. 

FB_IMG_1713169072131.jpg

முன்பாக முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூர் மற்றும் நீண்ட தூர தனியார் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் யாழ். மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடி, தீர்வு வழங்கப்படும் என வட மாகாண ஆளுநர் உறுதி வழங்கியிருந்தார்.

இதையடுத்து இவ்விடயம் தொடர்பில் ஆளுநரால் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அரச மற்றும் தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும் தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டது. 

இதன்போது சுமுகமான தீர்வு எட்டப்படாமையால் அன்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடயம் தொடர்பில் வட மாகாண ஆளுநர் தலைமையில் 5 பேர் அடங்கிய விசேட குழு ஒன்றை நியமித்து, பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பொறிமுறைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி கோரியிருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் (15) அந்த பிரச்சினைக்கான தீர்வினை வழங்கும் வகையில் ஆளுநர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.

இக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் பரீட்சார்த்தமான முறையில் அரச மற்றும் தனியார் பேருந்துகள் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகாமையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் இருந்து இணைந்த சேவை பரீட்சார்த்த அடிப்படையில் நெடுந்தூர சேவைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இ.போ.ச - தனியார் இணைந்த நீண்ட தூர பேருந்து சேவை விவகாரம் - டக்ளஸின் தலையீட்டையடுத்து சுமுகமான தீர்வு | Virakesari.lk

கொழும்பு கோட்டை ரயில் நிலைய பயண மேடையை உடைத்துக் கொண்டு சென்ற ரயில்!

1 day 5 hours ago
15 APR, 2024 | 05:32 PM
image
 

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து சிலாபம் நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில்,  கோட்டை ரயில் நிலையத்தின் முதலாவது மேடையில் நிறுத்த முயற்சித்தபோது அங்கிருந்த தடுப்பையும் ரயில் மேடையையும் உடைத்துக் கொண்டு சென்று நின்றதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

k_l_ui.gif

இந்த  சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் முதலாம் பயண மேடையின் ஒரு பகுதியும் தடுப்பும் ரயில் எஞ்ஜினின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

nmbm.gif

இருப்பினும் ரயில் சேவைகளில் பாதிப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 

யாழில் விபத்து : இரு பேரப் பிள்ளைகளும் தாத்தாவும் படுகாயம்

1 day 12 hours ago
15 APR, 2024 | 11:47 AM
image
 

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கச்சாய் வீதியில் அமைந்துள்ள மகிழங்கேணி சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்களும் அவர்களது தாத்தாவும் காயமடைந்துள்ளனர்.

புதுவருட தினமான நேற்றைய தினம் (14) இரவு சாவகச்சேரி பகுதியிலிருந்து தனது இரண்டு பேரப் பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற தாத்தா, மகிழங்கேணி பகுதியில் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்டபோது, பின்பக்கமாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த இரு குழந்தைகள் மற்றும் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற அவர்களது தாத்தா என மூன்று பேரும் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் சிறுமியொருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

https://www.virakesari.lk/article/181101

யாழில் மீண்டும் கொரோனா! ஒருவர் உயிரிழப்பு

1 day 14 hours ago
http://athavannews.com/wp-content/uploads/2024/01/1572229620-dead-body-2-650x375.jpg யாழில் மீண்டும் கொரோனா! ஒருவர் உயிரிழப்பு.

யாழ் மாவட்டத்தில் நீண்ட நாட்களின் பின்னர் கொரோனாத் தொற்றுக் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆயுர்வேத சிகிச்சையைப் பெறுவதற்காக வருகை வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக இரண்டு நாட்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே  சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பின் பின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1378123

புதுவருட தினத்தில் காணாமல்போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

2 days 4 hours ago

Published By: VISHNU   14 APR, 2024 | 05:45 PM

image
 

சித்திரை புதுவருடத்தினமான ஞாயிற்றுக்கிழமை (14) வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டுவரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது கருத்து தெரிவிக்கையில்….

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்ற, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறுவதற்காக 2611வது நாளாக நாம் போராடிவருகின்றோம். 

IMG_4428.jpg

அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் குழு ஒன்று அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இது எமக்கு

மகிழ்ச்சியான விடயம். இவர்கள் சேர்ந்து, தமிழர்கள் மீதான அமெரிக்கக் கொள்கையில் ஒரு மாற்றத்தை வலியுறுத்தி, செயலாளர் பிளிங்கனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.

இலங்கையில் நடந்ததும் நடப்பதும் இனப்படுகொலை என்பதை அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.அத்துடன்தமிழர்கள் அரசியல் எதிர்காலத்தை தாமே  தீர்மானிக்கும் உரிமை உள்ளது. அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு தகுதியானவர்கள். இதன் மூலம் தமிழர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.

அமெரிக்காவில் உள்ள நமது தமிழர்களின் ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் மற்றும்  10 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

எனவே தமிழ் அரசியல்வாதிகள் மாறிவரும் உலக ஒழுங்கிற்கு ஏற்றவாறு தம்மை மாற்றியமைக்க வேண்டும். அவர்கள் அரசியலில் இருந்து பின்வாங்கி, புதிதாக நிறுவப்பட்ட இறையாண்மை நாடுகளான மொண்டினீக்ரோ, தெற்கு சூடான், கொசோவோ, கிழக்கு திமோர் போன்ற நாடுகளின் முன்மாதிரியைப் பின்பற்றி, தமிழ் இறையாண்மையை மீட்டெடுக்க புதிய தலைமுறையை அனுமதிக்க வேண்டும் என்றனர்.

https://www.virakesari.lk/article/181072

தமிழ் – சிங்கள புத்தாண்டு : அமெரிக்க ஜனாதிபதியின் வாழ்த்து!

2 days 12 hours ago
jeo-750x375.jpg தமிழ் – சிங்கள புத்தாண்டு : அமெரிக்க ஜனாதிபதியின் வாழ்த்து!

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது X தளத்தில் அவர் இந்த, வாழ்த்தினை வௌியிட்டுள்ளார்.

இந்தச் சிறப்பான நிகழ்வைக் கொண்டாடும் உலகில் உள்ள அனைவருக்கும் தானும் தன் மனைவியும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1378019

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

2 days 13 hours ago

srilanka-ruppe-750x375.jpg

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது.

இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7மூ க்கும் அதிகமான வளர்ச்சியென Bloomberg சந்தை தரவு குறிகாட்டிகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2024/1377990

யாழ். நகரின் தூய்மை குறித்து அவதானம் : கள விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ்

2 days 13 hours ago
யாழ். நகரின் தூய்மை குறித்து அவதானம் : கள விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் யாழ். நகரின் தூய்மை குறித்து அவதானம் : கள விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ்.

யாழ். நகரத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவற்றை தூய்மையாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளார்.

புது வருடப் பிறப்பு தினமான இன்று காலை யாழ். நகரத்தில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, யாழ். நகரின் மையப்பகுதி மற்றும் புதிய மாநகரசபை கட்டட வளாகம் அதனை அண்டிய சுற்றுவட்டத்தின் நீர் வடிந்தோடும் வடிகால்கள் உள்ளிட்டவற்றை அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.

இதனையடுத்து, அவற்றை தூய்மையாக்குவது குறித்து அமைச்சர் அவதானம் செலுத்தியதாக குறிப்பிடத்தக்கது.

யாழ். நகரின் தூய்மை பராமரிப்பு தொடர்பில் பல்வேறு குற்றச்சாடுக்களும் விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையிலேயே, அது தொடர்பில் ஆராய்வதற்காகவே அமைச்சர் இந்த கள விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG-20240414-WA0033-1-600x450.jpg

IMG-20240414-WA0039-600x322.jpg

IMG-20240414-WA0037-600x450.jpg

IMG-20240414-WA0035-600x450.jpg

https://athavannews.com/2024/1378007

Checked
Tue, 04/16/2024 - 17:18
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr