நாவூற வாயூற

ஆரோக்கியமான சமையல் எண்ணெய் எது? மருத்துவர்கள் கூறுவது என்ன?

16 hours 32 minutes ago
  • சமையல் எண்ணெய்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    கட்டுரை தகவல்
    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்
    • 27 மார்ச் 2024, 02:42 GMT

    இந்திய சமையலில் எண்ணெய் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுகு எண்ணெயும், தென் பகுதியில் கடலை மற்றும் நல்லெண்ணெயும், கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில் தேங்காய் எண்ணெயும் பல வருடங்களாக பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தந்த பகுதிகளின் புவியியல் அமைப்பு, சீதோஷண நிலை, கலாச்சாரம், உணவு மற்றும் சமைக்கும் முறை போன்ற அம்சங்களின் அடிப்படையில் மக்கள் இந்த எண்ணெய்களுக்கு பழகி விட்டனர்.

இவை தவிர்த்து, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தியாவிற்குள் அறிமுகம் செய்யப்பட்ட சூரிய காந்தி எண்ணெய், செம்பனை எண்ணெய் (Palm oil), ஆலிவ் எண்ணெய் போன்றவையும் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.

உணவின் சுவையை தீர்மானிப்பதே எண்ணெய் தான் என சொல்லப்பட்டாலும் கூட, பெரும்பாலானோருக்கு கொழுப்பு என்றவுடன் உணவில் சேர்க்கப்படும் எண்ணெய் தான் நினைவுக்கு வருகிறது. அதிலும் நாற்பது வயதுக்கு மேற்பட்டோர் பலர் எண்ணெய் கலந்த உணவு என்றாலே சற்று விலகி நிற்கிறார்கள்.

எண்ணெய் பயன்படுத்தாத உணவு என்பது வேகவைத்த உணவு மட்டுமே, ஆனால் அவை தினமும் எடுத்துக்கொள்வதற்கு ஏற்றதாகவும், அனைத்து வகையான சத்துக்களும் நிறைந்ததாக இருக்குமா என்றால் இல்லை என்று தான் ஆய்வுகள் சொல்கின்றன.

சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்துவது நல்லது? எண்ணெய் என்றால் கொழுப்பு மட்டும் தானா? ரீஃபைண்டு எண்ணெயை விட செக்கு எண்ணெய் உடலுக்கு நல்லதா? எண்ணெய் கலந்த உணவுகளைப் பார்த்து அச்சம் கொள்வது அவசியமா? போன்ற கேள்விகளுக்கான விடையை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

 
ஆரோக்கியமான சமையல் எண்ணெய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரைஸ் பிரான் எண்ணெய் (Rice bran) போன்றவற்றில் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளன

எண்ணெயில் உள்ள கொழுப்புகள் உடலுக்கு என்னென்ன?

தென்னிந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் என எடுத்துக்கொண்டால், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் பாமாயில் ஆகியவற்றை சொல்லலாம். இந்த மூன்று எண்ணெய்களிலும் என்னென்ன கொழுப்புகள் உள்ளன, அவை உடலுக்கு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என பார்க்கலாம்.

எண்ணெய்களில் உள்ள கொழுப்பை மூன்று வகைகளாக பிரிக்கலாம், சாச்சுரேட்டட் (Saturated), மோனோ அன்சாச்சுரேட்டட் (monounsaturated), பாலி அன்சாச்சுரேட்டட் (Poly unsaturated). தேங்காய் எண்ணெய், பாமாயில், நெய், வெண்ணையில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம். மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் ஆலிவ் எண்ணெய், சோயாபீன் எண்ணெய், கடலை எண்ணெயில் அதிகம் உள்ளது.

நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரைஸ் பிரான் எண்ணெய் (Rice bran) போன்றவற்றில் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளன.

1. தேங்காய் எண்ணெயில் சாச்சுரேட்டட் கொழுப்பு மிக அதிகம் (82%), மோனோ அன்சாச்சுரேட்டட் மிகக் குறைவு (6%), பாலி அன்சாச்சுரேட்டட் இன்னும் குறைவு (2%).

தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் அதிகளவில் உள்ளது, இது HDL எனப்படும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். உயர்- வெப்ப சமையலுக்கு இந்த எண்ணெய் உகந்ததாக இருக்கும்.

அதே வேளை, தேங்காய் எண்ணெயில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புகளால், அதை அதிகம் எடுத்துக் கொண்டால் கெட்ட கொழுப்பு உருவாகி, இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. தேங்காய் எண்ணெயில் கலோரிகளும் மிக அதிகம்.

 
ஆரோக்கியமான சமையல் எண்ணெய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் அதிகளவில் உள்ளது, இது HDL எனப்படும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

2. நல்லெண்ணெயில் சாச்சுரேட்டட் கொழுப்பு மிகக் குறைவு (14%), மோனோ அன்சாச்சுரேட்டட் மிதமான அளவு (42%), பாலி அன்சாச்சுரேட்டட் மிதமான அளவு (40%).

எள் விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெயில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளும் நிறைந்துள்ளன, இது உடலின் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.

3. பாமாயிலில் சாச்சுரேட்டட் சற்று அதிகம் (49%), மோனோ அன்சாச்சுரேட்டட் மிதமான அளவு (37%), பாலி அன்சாச்சுரேட்டட் மிகக் குறைவு (9%)

பொதுவாக பாமாயிலை எடுத்துக்கொண்டால், அது மலிவானது என்றும், ஆரோக்கியமற்றது என்ற எண்ணமும் உள்ளது. ஆனால் இதில் வைட்டமின் இ எனப்படும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இந்த எண்ணெய் ஆரோக்கியமற்றது, கெடுதலானது என்பதற்கு போதிய மருத்துவச் சான்றுகள் இல்லை.

சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் ரீஃபைண்டு எண்ணெயாக பாமாயில் பெறப்படுவதால் அதற்குரிய சில சிக்கல்கள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. எனவே பாமாயிலை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ரீஃபைண்டு எண்ணெய் என்றால் என்னென்ன சிக்கல்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.

பாமாயில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் ரீஃபைண்டு எண்ணெயாக பாமாயில் பெறப்படுவதால் அதற்குரிய சில சிக்கல்கள் உள்ளன

செக்கு எண்ணெய் Vs ரீஃபைண்டு எண்ணெய்.

செக்கு எண்ணெய் என்பது மிகவும் பழமையான முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய். பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்படும் முறைப்படி, மாடுகள் கொண்டு இழுக்கப்படும் ஒரு செக்கில், எண்ணெய் விதைகள் அரைக்கப்பட்டு, எண்ணெய் எடுக்கப்படும். சில நாடுகளில் குதிரைகளும், ஒட்டகங்களும் கூட செக்கிழுக்க பயன்படுகின்றன.

இவ்வாறு செக்கில் அரைக்கப்பட்டு கிடைக்கும் எண்ணெய் கோல்ட் பிரஸ்டு ஆயில் (Cold pressed oil) என்று அழைக்கப்படுகிறது. அதாவது செக்கில் அரைக்கப்படும் போது, உள்ளிருக்கும் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு மேல் செல்லாது.

குறைவான வெப்பநிலையில் செக்கில் விதைகள் அரைக்கப்படுவதால், அதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயில் இயற்கையான வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்சிடன்டுகள் (Anti oxidants) என எல்லாம் அதன் அசல் வடிவில் இருக்கும். இதனால் எண்ணெயில் மனம் மற்றும் சுவை அதிகமாக இருக்கும்.

இதனால் தான் செக்கு எண்ணெய் உடலுக்கு நல்லது என்று பல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த எண்ணெயின் தயாரிப்பு செலவு அதிகம். காரணம், செக்கின் மூலமாக விதைகளில் இருக்கும் 30 முதல் 40% எண்ணெயை மட்டுமே பிரித்தெடுக்க முடியும். இதனால் கழிவு அதிகமாக இருக்கும்.

செக்கு எண்ணெய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

செக்கு எண்ணெய் உடலுக்கு நல்லது என்று பல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதுவே இயந்திரத்தால் அரைக்கப்பட்டு எண்ணெய் தயாரிக்கும் போது (Expeller pressed oil), 80 முதல் 90% எண்ணெயை பிரித்தெடுக்க முடியும். ஆனால் உள்ளிருக்கும் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை விட அதிகமாக இருக்கும் என்பதால் எண்ணெயின் இயற்கை தன்மை மாறிவிடும்.

இதற்கு பிறகு வந்த முறைதான், சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு. விதைகளை நன்றாக அரைத்து, பின்னர் அதனுடன் எக்சேன் (Hexane) எனப்படும் வேதியியல் பொருளைக் கலக்கப்படும். விதைகளில் உள்ள 100% எண்ணெயை இந்த எக்சேன் எடுத்துவிடும். பின்னர் அடுத்த கட்டத்தில் எண்ணையில் கலந்துள்ள எக்சேன் பிரிக்கப்படும்.

பின்னர் பல்வேறு வேதியியல் முறைகள் மூலமாக அந்த எண்ணெய் சுத்திகரிக்கப்படும். இறுதியாக மனமும் சுவையும் அதிகம் இல்லாமல், சுத்தமாக, தண்ணீர் போல நமக்கு கிடைப்பதே ரீஃபைண்டு எண்ணெய்.

கடந்த சில வருடங்களாக மக்களால் பயன்படுத்தப்படும் சூரியகாந்தி எண்ணெய், ரைஸ் பிரான் எண்ணெய் (Rice bran oil) போன்றவை எக்சேன் பயன்படுத்தி எடுக்கப்படும் ரீஃபைண்டு எண்ணெய்களே.

 
ஆரோக்கியமான சமையல் எண்ணெய்
படக்குறிப்பு,

ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறையின் தலைவருமான எஸ்.சந்திரசேகர்.

செக்கு எண்ணெய் தான் நல்லதா?

“சந்தேகமே வேண்டாம், செக்கு எண்ணெய் தான் நல்லது. அறிவியல் ஆய்வுகள் மூலம் நமக்கு தெரியவருவது அதுதான்” என்கிறார் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறையின் தலைவருமான எஸ்.சந்திரசேகர்.

தொடர்ந்து பேசிய அவர், “பொதுவாகவே சீதோஷண நிலை, வாழ்வாதார நிலை, உணவுப் பொருட்களுக்கு ஏற்றவாறு எண்ணெய் வகை மற்றும் அளவு மாறும். எல்லா வகை எண்ணெய்களிலும் நல்ல கொழுப்பும் உள்ளது, அது உடலுக்கு கண்டிப்பாக தேவை." என்றார்.

"தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நமது சீதோஷண நிலைக்கு ஏற்ற எண்ணெய் என்றால் அது நல்லெண்ணெய் தான். ஆனால் எவ்வளவு எண்ணெய் சேர்க்கிறோம் என்பது முக்கியம். ஒருவருக்கு இதய நோய், கொழுப்பு பிரச்னை, உயர்ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் இருந்தால் எண்ணெய் அளவு மாறுபடும்” எனக் கூறுகிறார் சந்திரசேகர்.

“நல்லெண்ணெய் தவிர்த்து ஆலிவ் எண்ணெய் சிறிதளவு பயன்படுத்தலாம். பொரிப்பதற்கு ரைஸ் பிரான் எண்ணெய் பயன்படுத்தலாம், வறுப்பதற்கு கடலை எண்ணெய் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவற்றை குறைவாக எடுத்துக்கொள்ளலாம்."

"எனவே ஒரு எண்ணெய் மட்டுமில்லாமல் எல்லா எண்ணெய்களையும் குறிப்பிட்ட அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. உதாரணமாக ஒரு நாளுக்கு ஒருவருக்கு 15 மில்லிலிட்டர் எண்ணெய் போதுமானது. ஒரு மாதத்திற்கு 450 முதல் 500 மில்லிலிட்டர் என்பது உகந்தது” என்கிறார்.

“எண்ணெய்யை அறவே தவிர்ப்பது என்பது நல்லதல்ல. அவ்வாறு தவிர்த்துவிட்டு வெறும் வேகவைத்த உணவுகளை சாப்பிடுவதால், உடலில் பல மாற்றங்களும் சத்துக்குறைபாடும் ஏற்படும். எனவே எண்ணெய் மனித உடலுக்கு என்பது மிகவும் அவசியம், ஆனால் எவ்வளவு எண்ணெய்யை எந்த உணவுப் பொருளுடன் எடுத்துக்கொள்கிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறினார் மருத்துவர் எஸ்.சந்திரசேகர்.

 
ஆரோக்கியமான சமையல் எண்ணெய்
படக்குறிப்பு,

ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.

எந்த சமையல் எண்ணெய் உடலுக்கு நல்லது?

இது குறித்து பேசிய ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன், “தென்னிந்தியாவைப் பொறுத்தவரை நல்லெண்ணெய் தான் சிறந்த எண்ணெய், ஏனென்றால் அதில் தான் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளது. அதிகம் எடுத்துக்கொண்டால் நல்லதல்ல என்பதைத் தாண்டி, நல்லெண்ணெயில் ஆபத்துகள் பெரிதாக இல்லை. பெயருக்கு ஏற்றாற்போல இது நல்ல எண்ணெய் தான்” என்கிறார் அவர்.

தொடர்ந்து பேசிய அவர், “அதோடு சேர்த்து கடலை எண்ணெய் மற்றும் ரைஸ் பிரான் எண்ணெய்யையும் நான் பரிந்துரை செய்வேன். பாமாயிலையும் பயன்படுத்தலாம், ஆனால் நல்லெண்ணெய் அளவுக்கு நல்லதல்ல” என்கிறார்.

ஆனால் எந்த எண்ணெயாக இருந்தாலும், ஒரே எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் என்னவாகும் என்பதையும் அவர் விளக்கினார்.

“ஒரே எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தினால் அது நிறைவுறாக் கொழுப்புகளாக மாறும். இதனால் இதய நோய்கள், புற்றுநோயை ஏற்படுத்தும். ஒருநாளைக்கு 3 ஸ்பூன் அளவிலான எண்ணெய் என்ற அளவைத் தாண்டி அதிகமான எண்ணெய்யை தொடர்ந்து எடுத்துக்கொண்டால், நாம் எடுத்துக்கொள்ளும் கலோரிகள் அதிகரித்துவிடும். உடல் எடை கூடுவதில் தொடங்கி பல்வேறு பிரச்னைகளுக்கு அது வழிவகுத்துவிடும்” என எச்சரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.

https://www.bbc.com/tamil/articles/c8v3lqd5j2eo

அடுப்பே இல்லாமல் சோறு, சாம்பார், பொறியல் செய்வது எப்படி? உடலுக்கு நல்லதா?

3 weeks 4 days ago
நோ ஆயில், நோ பாயில்: அடுப்பே இல்லாமல் சோறு, சாம்பார், பொறியல் செய்வது எப்படி? உடலுக்கு நல்லதா?
உடல்நலம்: ‘நோ ஆயில், நோ பாயில்’ - சமைக்காமல் சாப்பிடலாமா? உடலுக்கு நல்லதா?

பட மூலாதாரம்,NO BOIL NO OIL/INSTAGRAM

2 மார்ச் 2024

முருங்கை கீரையை வைத்து வடை, வாழைக்காயை வைத்து கட்லெட் தொடங்கி, அரிசியே இல்லாமல் சோறு, எண்ணெய் இல்லாத ஃபிரைட் ரைஸ், மைதா இல்லாமல் நூடுல்ஸ் என, ‘நோ ஆயில், நோ பாயில்’ என்ற கான்செப்ட் தான் இப்போது சமூக ஊடகங்களில் டிரெண்டாக உள்ளது.

அடுப்பு தேவையில்லை, ஒரு சொட்டு எண்ணெய் இல்லை. ஆனால் எல்லாவற்றையும் சமைக்காமலேயே சில முறைகளைப் பயன்படுத்தி, பதப்படுத்தி இந்த வகை உணவுகள் தயாரிக்கப்படும் வீடியோக்கள் சமீப நாட்களாக வைரலாகி வருகின்றன.

அரிசிக்குப் பதிலாக ஊறவைத்த அவல்தான் சோறு. இதனால், அடுப்பில் வைக்காமலேயே சோறு தயாராகிவிடும். தவிர, அடுப்பில் வைக்காமலேயே சாம்பார், ரசம், புளிக்குழம்பு, பொறியல், தயிர் இல்லாத மோர்க்குழம்பு, இனிப்பு வகைகள் என ஒரு ‘முழு சாப்பாடு’ இந்த முறையில் சமைக்கப்படுகிறது.

’ஆதிகாலத்தில் இப்படித்தான் சாப்பிட்டோம்’, ‘இந்த முறையில் சாப்பிட்டால் உடலுக்கு உணவின் முழு சத்தும் கிடைக்கும்’ என்பதே இம்முறை சமையலின் ஆதரவாளர்கள் கூறும் கருத்தாக உள்ளது.

இந்த முறை உணவுகள் எப்படி தயார் செய்யப்படுகின்றன, சமைக்காமலேயே காய்கறிகளைச் சாப்பிடலாமா, அவை எல்லோருக்கும் ஏற்றதா? இவ்வகை உணவுகளால் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா என்பது குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

எப்படி தயார் செய்யப்படுகின்றது?
உடல்நலம்: பயர் வகைகள், காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் பயன்களும் விளைவுகளும்

பட மூலாதாரம்,NO BOIL NO OIL/INSTAGRAM

கோயம்புத்தூரில் உள்ள ‘படையல்’ உணவகத்தை நடத்தி வரும் சிவக்குமார், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, சுமார் 2,500 உணவு வகைகளை உருவாக்கியுள்ளதாக பிபிசியிடம் கூறுகிறார்.

அவர் கடந்த 3 ஆண்டுகளாக இந்த உணவகத்தை நடத்தி வருகிறார். முழுக்க காய்கறி சார்ந்த ‘வீகன்’ உணவுகள்தான் இங்கு கிடைக்கும். பால், தயிர் உள்ளிட்டவையும் தாவர அடிப்படையிலானதே. இங்கு ’மயோனீஸ்’ முந்திரியால் செய்யப்படுகிறது. இதே முறையில் உணவு வழங்கும் சில உணவகங்கள் சென்னை உட்பட தமிழகத்தின் சில பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

’நறுக்குதல், ஊற வைத்தல், கலத்தல்’ - இந்த சமையல் முறையின் மூன்று அடிப்படை செயல்முறைகள் இவைதான். ஒவ்வொரு காய்கறியையும் என்ன உணவு வகையோ அதற்கேற்ப நறுக்கிக் கொள்கிறார்கள். பின்னர், காய்கறிகளின் தன்மைக்கேற்ப தண்ணீர், இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, தேங்காய் பால், இளநீர் உள்ளிட்டவற்றில் ஊற வைக்கின்றனர். "இப்படி 12 ஊற வைக்கும் முறைகள் உள்ளன” என்கிறார், சிவகுமார். பின்னர்தான் இந்த உணவு வகைகள் தயாரிக்கப்படுவதாகக் கூறுகிறார் அவர்.

அரிசியைப் பொறுத்தவரை பாரம்பரிய அரிசி வகைகளை அவலாக மாற்றி, பின் ஊறவைத்து சோறு தயாரிக்கின்றனர். “இவ்வகை உணவுகளால் சத்துகள் அப்படியே கிடைக்கும். நம் குடல் நுண்ணுயிரிகளுக்கு நல்லது” என்கிறார் சிவகுமார். இவ்வகை உணவுகள் அனைவருக்கும் ஏற்றது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

ஆனால், சென்னையைச் சேர்ந்த சத்துணவு நிபுணர் தரணி கிருஷ்ணன் அனைத்து உணவுகளையும் இப்படியாக சமைக்காமல் சாப்பிட முடியாது என்கிறார்.

 
சமைக்காமல் சாப்பிடலாமா? உடலுக்கு நல்லதா?
உடல்நலம்: ‘நோ ஆயில், நோ பாயில்’ - சமைக்காமல் சாப்பிடலாமா? உடலுக்கு நல்லதா?

பட மூலாதாரம்,NO BOIL NO OIL/INSTAGRAM

சென்னையைச் சேர்ந்த சத்துணவு நிபுணர் தரணி கிருஷ்ணன் பிபிசியிடம் இதுகுறித்துப் பேசினார். அவர் சொன்ன தகவல்கள்:

  • நீரில் கரையக்கூடிய வைட்டமின்களான வைட்டமின் சி (நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவை) மற்றும் வைட்டமின் பி (கீரை வகைகள், பச்சைப் பட்டாணி) ஆகியவை மற்றும் காய்கறிகளைச் சமைக்கும்போது நிச்சயமாக சத்துகள் சிறிதளவு குறையத்தான் செய்யும். ஆனால், எவற்றையெல்லாம் சமைக்காமல் சாப்பிடுகிறோம் என்பது முக்கியம்.
  • புரதம், கொழுப்புச் சத்து, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்களை வேக வைப்பதால் எந்த பிரச்னையும் வராது.
  • எல்லாவற்றையும் சமைக்காமல் சாப்பிட்டால் செரிமான பிரச்னைகள் ஏற்படும். வயிற்றுப்போக்கு, சிலவகை சத்துக் குறைபாடு உள்ளிட்டவை ஏற்படலாம்.
  • ஹீமோகுளோபின் குறைபாடு வரலாம். ஏனெனில், ஹீமோகுளோபினில் ‘ஹீம்’ என்பது இரும்புச்சத்து, ’குளோபின்’ என்பது புரதச் சத்து. உணவுப் பொருட்கள் சரியாகச் செரிக்காமல் போனால் இந்த சத்து குறைபாடுகள் ஏற்படலாம்.
  • நார்ச்சத்து மிகுதியான சிறுதானியங்களை எடுத்துக்கொண்டால், கேழ்வரகை மட்டும்தான் முளைக்கட்ட வைத்துச் சாப்பிட முடியும். கம்பு முளைகட்டினாலும் நம்மால் சாப்பிட முடியாது. சாப்பிட முடிந்தாலும் அதனால் பயனில்லை. நாள்போக்கில் உணவு மீது வெறுப்பு ஏற்படும்.
 
சமைக்காமல் சாப்பிடுவது தவறா?
உடல்நலம்: ‘நோ ஆயில், நோ பாயில்’ - சமைக்காமல் சாப்பிடலாமா? உடலுக்கு நல்லதா?

பட மூலாதாரம்,NO BOIL NO OIL/INSTAGRAM

படக்குறிப்பு,

’படையல்’ சிவகுமார்

இந்தக் கேள்விக்கு மற்றொரு ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி பதிலளித்தார். அவரது கூற்றின்படி, சமைக்காமல் சாப்பிடுவது தவறல்ல. நிச்சயமாக சில வகை காய்கறிகளைச் சமைக்காமல் சாப்பிடுவதால் நன்மைகள் உண்டு. அதேநேரம், சமைத்தாலும் காய்கறிகளில் உள்ள நார்ச்சத்து கிடைக்கும் வகையிலான காய்களும் உண்டு.

"மாவுச்சத்து இருக்கும் பொருட்களைச் சமைத்துச் சாப்பிட்டால் நன்றாக அதில் அச்சத்து இறங்கியிருக்கும். அரிசி வகைகளை அவலாக்கிப் பின் ஊறவைத்து சாப்பிடலாம். முழு பருப்பு வகைகளை ஊறவைத்து பின் சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம்."

ஆனால், எல்லோராலும் எல்லாவற்றையும் சமைக்காமல் சாப்பிட முடியும் என்பது தவறு. அது ஒவ்வொருவரின் செரிமான அமைப்பைப் பொறுத்தது என்கிறார் புவனேஸ்வரி.

காய்கறிகளை நறுக்கியபின் சிறிது நேரம் ஆகிவிட்டாலோ, கைப்பட்டாலோ கிருமிகள் வர வாய்ப்புண்டு, பாக்டீரியா தொற்று ஏற்படலாம் எனக் கூறும் அவர், காலிஃபிளவர், பிரக்கோலி, முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகளைச் சமைக்காமல் சாப்பிடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

 
'டிரெண்டிங் பின்னால் செல்லக்கூடாது'
கு.சிவராமன்
படக்குறிப்பு,

கு.சிவராமன்

எண்ணெய் இல்லாமல் சமைக்கப்படும் இவ்வகை உணவுகளால் பல நன்மைகள் உண்டு எனக் கூறுகிறார், சித்த மருத்துவர் கு.சிவராமன்.

”எண்ணெய் இல்லாமல் சாப்பிடுவதில் நிறைய நன்மைகள் உண்டு. கொழுப்பு என்பது எண்ணெய் இல்லாமலேயே கிடைக்கும். ஆனாலும் சில வைட்டமின்கள் எண்ணெயில் மட்டும்தான் உறிஞ்சப்படும். வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்றவை எண்ணெயில்தான் இருக்கும். தாளிப்பதற்கு எண்ணெய் சேர்ப்பதால் பெரிய பிரச்னைகள் இல்லை. சுத்தமாக எண்ணெயே இல்லையென்றால் இந்த வைட்டமின் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது,” என்றார்.

மேலும், ”எந்தவொரு உணவுத் திட்டமும் பொதுவானது அல்ல. ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப மாறுபடும். டிரெண்டிங்கின் பின்னால் செல்லக்கூடாது. உடலுக்கு என்ன தேவை என்பதை அறிந்து சாப்பிட வேண்டும்,” என்றார்.

"என்றைக்கு நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டதோ அப்போதிருந்து சமைத்தல் என்பது உண்டு." அவித்தல், இட்டல், தாளித்தல், பொறித்தல் ஆகியவை தமிழர் உணவு முறையில் பலகாலமாக இருந்திருப்பதாகக் கூறுகிறார் கு.சிவராமன். உடலுக்கு உள்ளேயும் அதே சூடுதான் உணவுப் பொருட்களைப் பக்குவப்படுத்துகிறது என்றும் அவர் கூறுகிறார்.

இவ்வகை உணவுகளை ஒரு கலவையாக எடுத்துக்கொண்டு வாரம் ஒருமுறை, இருமுறை சாப்பிடலாம் எனக் கூறும் அவர், எல்லா வேளையிலும் அதையே எடுப்பது நல்லதல்ல எனத் தெரிவித்தார்.

இந்த உணவுமுறையில் இருக்கும் இத்தகைய பிரச்னைகளுக்கு விளக்கமளித்த ‘படையல்’ சிவகுமார், “இவ்வகை உணவுகளில் எதுவுமே பச்சையானது அல்ல. காய்கறிகளோ, அரிசியோ எதுவாக இருந்தாலும் அதற்கென குறிப்பிட்ட முறையில் பதப்படுத்தித்தான் கொடுப்போம். ஆனால், இவை சமைக்காத உணவுகள். கேரட், பீட்ரூட், வெங்காயம், தக்காளி, வெண்டை உள்ளிட்ட பலவகை காய்களை நாம் சமைக்காமலேயே உண்ண முடியும். சில வகை கிழங்குகள், காய்கறிகளை அப்படியே உண்ண முடியாது. அவற்றை மிருதுவாக்கவும் அதிலுள்ள கிருமிகளை நீக்கவும் சில முறைகளை நாங்கள் பயன்படுத்துகிறோம்,” என்றார்.

உணவுப் பொருட்களைக் கைகளாலேயே கலக்கும்போது நம் உடலின் சூட்டால் அவை பதப்படுத்தப்படுவதாகக் கூறுகிறார் கு.சிவகுமார். கலவைகளில் சேர்க்கப்படும் கடலை வகைகள், நட்ஸ்கள் போன்றவை அந்தச் சூட்டால் எண்ணெயைப் பிரிப்பதால் வடை, கட்லெட் பதம்கூட கிடைப்பதாக அவர் கூறுகிறார். எண்ணெயை நேரடியாகப் பயன்படுத்தாமல் வேர்க்கடலை, எள், தேங்காய் உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களாக இவ்வகை உணவுகளில் பயன்படுத்தப்படுவதாக சிவகுமார் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c88xlvz2n95o

இன்றைய ஸ்பெசல்

1 month 2 weeks ago

சன்பிரான்ஸ்சிஸ்கோவில் 3 மாத.   த்துக்கொரு தடவை தான் நண்டு பிடிக்க விடுவார்களாம்.

நேற்றைய தினம் கடலுக்கு போய் காவல் நின்று 4 நண்டுகள் ஒன்று 10$ படி வாங்கி வந்தோம்.

பேரனுக்கு நண்டு என்றால் அவரை நண்டுப்பிரியன் என்றே சொல்லலாம்.

இரவே அப்பப்பா கில் பண்ணு கறியைக் காச்சு என்று நின்றான்.பொறடா நாளைக்கு என்றேன்.

காலையில் எழும்பி இதே வேலையாகவே நின்றான்.

https://postimg.cc/gallery/zBh4N83

IMG-0278.jpg

IMG-0277.jpg

IMG-0281.jpg

சித்த மருத்துவர் சிவராமன் வீட்டு கல்யாண விருந்து குறித்து நம்மோடு பகிர்ந்து கொள்ளும் சிவராமன் & மாதம்பட்டி ரங்கராஜ் பேட்டி

1 month 2 weeks ago
Doctor சிவராமன் சார் வீட்டு கல்யாணம் எப்படி இருக்கு பாருங்க! அசத்தல் MENU! வாயடைத்து போன சம்பவம்

 

Checked
Thu, 03/28/2024 - 07:24
நாவூற வாயூற Latest Topics
Subscribe to நாவூற வாயூற feed