அரசியல் அலசல்

"என் பார்வையில் ஏன் பொது வேட்பாளர் அவசியம் இன்று" [வெளிப்படையாக செய்த தவறுகளை ஏற்று மன்னிப்பு கேட்க்காத ஜனாதிபதி வேட்ப்பாளர் இருக்கும் பட்சத்தில்]

5 days 2 hours ago

"என் பார்வையில் ஏன் பொது வேட்பாளர் அவசியம் இன்று" [வெளிப்படையாக செய்த தவறுகளை ஏற்று மன்னிப்பு கேட்க்காத ஜனாதிபதி வேட்ப்பாளர் இருக்கும் பட்சத்தில்] 

 

1915 ஆம் ஆண்டில், டி.பி. ஜயதிலக, டி.எஸ். சேனநாயக்க மற்றும் பல செல்வந்தர்கள் சிங்களவர்கள் தமிழ் பேசும் முஸ்லீமிற்கு  எதிராக இனக்கலவரத்தை ஏற்படுத்திய குற்றம் பாரிய குற்றம் என்றபோதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரசை எதிர்த்து, சிங்கள அரச தலைவர்களின் உயிரைக் காப்பாற்றும் முகமாக மீட்பு போராட்டம் செய்து, அவர்களை மீட்டவர் என்பது இலங்கை அரசியல் வரலாற்று நிகழ்வாகும்.

பொன்னம்பலம் இராமநாதனின் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும். 

இவ்வாறு பொன்னம்பலம் இரமாநாதன் சிங்கள அரசியல் தலைவர்களை மீட்டிருக்காவிட்டால் டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்திருக்கவும் முடியாது என்பது மட்டும்  அல்ல, தமிழர்க்கு எதிராக துவேசம் கூட பரப்பப் படாமல் கூட இருந்து இருக்கும். தமிழரின் இன்றைய பிரச்னைக்கு முக்கிய காரணம் அல்லது தொடக்கம் இவர்களே!

இது தான் நாம் படித்த பாடம் . ஏன் அன்றே ராமநாதன் படித்த பாடம் 

'டோனமோர் என்றால் இனி தமிழர்கள் இல்லை’. அவருடைய வார்த்தைகள் தீர்க்கதரிசனமாக இருந்தன; அதன் பின் உயர்சாதி பௌத்த சிங்களவர்களும் கரவ சாதி சிங்களவர்களும் சேர்ந்து சேர் பொன்னம்பலம் இராமநாதனை 1920களின் பிற்பகுதியில் இருந்து தீபவம்சத்திலும், மகாவம்சத்திலும், இறுதியில் ராஜாவலியிலும் எப்படி எல்லாளனை படிப்படியாக ஒரு இனவாதியாக மாற்றி சாடினார்களோ அப்படியே ராமநாதனையும் ஒரு இனவாதி என்று சாடினார்கள் என்பது வரலாறு 

ஆகவே எந்த சிங்கள தலைவர்களையும் ஆதரித்தோ அல்லது ஆதாரிக்காமலோ ஒன்றும் நடை பெற போவதில்லை. அது இதுவரை கண்ட காட்சி. காரணம் ராமநாதனின் 1915 இல் இருந்தே வரலாறு கூறும் 

ஆகவே தமிழ் பேசும் முழு சமூகமும் ஒரு குடையின் கீழ், வெற்றி தோல்வியை ஒரு புறம் தள்ளிவிட்டு, தமக்கு என ஒருவரை நிறுத்தி, தம் கொள்கை விளக்கத்தை தெரியப்படுத்துதல், வேறு ஒரு வழியிலாவது வெற்றி தரும் 

ஒற்றுமை
உலகத்துக்கு உண்மை உரைத்தலும் எடுத்து காட்டுதலும்  


அதற்கு இது ஒரு முதல் படியாக கூட இருக்கலாம் ?

என்றாலும் இவை எல்லாம் 

தமிழர்களின், தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையிலேயே தங்கி உள்ளது. அது தான் எம்மை என்றும் ஏமாற்றும் ஒன்று ??

உதாரணமாக,

 "ஒன்றுபட்டால்உண்டுவாழ்வு என்றவாழ்வைஇன்னும்காணோம்!"
தமிழர் சரித்திரத்தில் ஒரு முறை கண்டோம். அது 300BC அளவில். அதன் பின்பு இன்று வரை நாம் ஒன்றுபடவில்லை.

வட இந்தியாவை ஆண்ட நந்த வம்சம் [Nandhas] தென் இந்தியாவை ஆண்ட மூன்று பேரரசுகளுடனும் சகோதரரைப் போன்ற ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருந்தனர். என்றாலும் அவர்களை தொடர்ந்து வந்த மௌரியப் பேரரசு [Mauryas] (322–185 கிமு) தென் இந்தியா மேல் படையெடுத்தது.சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயம் வரை படை நடத்திச் சென்றவன். வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன். அது மௌரியர்களை சேர நாட்டின் மேல் பலி வாங்கும் தாக்குதலுக்கு தூண்டியது .என்றாலும் மௌரியப் பேரரசால் சோழ எல்லைக்குள் நுழைய முடியவில்லை. இந்த படை எடுப்பு மூவேந்தர்களுக்கும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியது. இதனால் 313 B.C, யில் இவ் மூவேந்தர்களும் ஒரு ஒற்றுமைக்கான உடன்படிக்கை ஒன்றில் ஒப்பம் இட்டார்கள் என Dr.மதிவாணன் [author Dr.Mathivanan] கூறுகிறார்.

"பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள்,
முரசு முழங்கு தானை மூவருங்கூடி,
அரசவை இருந்த தோற்றம் போலப்"

(பொரு. ஆற். படை: 53-54) போரொழுக்கத்தில் வெற்றிகளைச் சாதித்த மூவேந்தர்களை அப்பாடல்களில் சந்திக்கின்றோம். 

இன்னும் ஒரு சமயம், 

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர். அதைக் கண்ட புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பெருமகிழ்ச்சி அடைந்தார். சோழனும் பாண்டியனும் ஒருங்கே இருந்ததைப் பலராமனும் திருமாலும் ஒருங்கே இருப்பதற்கு ஒப்பிட்டு, “அவர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்தால் இவ்வுலகம் அவர்கள் கையகப்படுவது உறுதி" என்று  பாடினார். 

"நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே,
முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்
......................................................
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் 
உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப்
பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே;
..........................................................
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே."

ஆனால் இவை எல்லாம் இலக்கியத்துடன் நின்றுவிட்டன . அது தான் எம் இனத்தின் பெரும் குறை.  ஒற்றுமையை குழப்பவென்றே ஒரு கூட்டம் காரணம் எதாவது ஒன்றைக்  கூறிக்கொண்டே இருக்கும். அது நாம் கண்ட வரலாறு!  

நன்றி 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

'சமாதானம்' நிலவ வேண்டும் என்றால் அங்கு 'மன்னிப்பு' முக்கிய பங்கு

5 days 2 hours ago

['சமாதானம்' நிலவ வேண்டும் என்றால் அங்கு 'மன்னிப்பு' முக்கிய பங்கை வகுக்கிறது. 'மன்னிப்பு' என்ற கட்டுரையை, 'மன்னிப்பு' என்ற கவிதையுடன் சமாதான விரும்பிகளின் கருத்துக்கு சமர்ப்பிக்கிறேன். நன்றி, உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!]


"இருஇனம் வாழும் ஒரு நாட்டில் 
இருக்கையை தனதாக்கி பெரும்பான்மை அதிகாரத்தில் 
இறுமாப்புடன் வரலாற்றை திருத்தி எழுதி
இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? " 

"இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி 
இணக்கம் கண்டு இதயம் பரிமாறி 
இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு 
இனியாவது மன்னிப்புகேள் நாடு முன்னேறும்! "    

இரக்கமின்றி சுடும் காட்டுமிராண்டிகள் அவர்களல்ல 
இந்தநாட்டின் பூர்வீககுடிகளில் அவர்களும் ஒருவர் 
இணைந்து வாழ்ந்த குடிமக்கள் அவர்கள் 
இன்பமாகவாழ இருவரும் மன்னித்து மறவுங்கள்! "  

"இடித்து அழித்து எரித்து சாம்பலாக்கி 
இழிவு செய்த வெட்கமற்ற மனமே 
இன்று உன்னையறிந்து உண்மை அறிந்து 
இதயம் திறந்து கேட்காயோ  'மன்னிப்பை?' "

"இருளை இன்னுமொரு இருள் அகற்றமுடியாது
இமைகாக்கும் கண்ணுக்குக்கண் பகையும் கூடாது 
இன்முகத்துடன் மன்னித்தல் இயலாமையும் அல்ல 
இதயம்திறந்து மன்னிப்பது மனித மாண்பே! " 

"இன்பபுகழை அழியாது கொடுக்கும் அடக்கத்தை 
இருஅடி திருக்குறள் கூறியவாறு ஏற்று 
இருளாக்கி விடும் அடங்காமையை துறந்து
இருகைகூப்பி மன்னிப்புகேள் உலகம் போற்றும்! " 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]


"மன்னிப்பு"


மன்னிப்பு என்பதை ஆங்கிலத்தில் pardon, forgiveness, exemption or apology என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது செய்த தவறு, குற்றம் போன்றவற்றுக்காக ஒருவர்மீது கோபம் கொள்ளாமல் அல்லது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடிவெடுத்து அதை அவருக்கு உணர்த்தும் செயல் என்றும் கூறலாம். இதற்கு எதிர்மாறான சொல்லாக மன்றுதல் அல்லது ஒறுத்தல் [தண்டஞ்செய்தல்,To fine, punish] காணப்படுகிறது. 

மன்னித்தல் [Forgiveness] என்பது உண்மையில் ஒரு உளவியல் [psychological] செயல்முறை, ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டதாக உணர்ந்த ஒருவர், அந்த குற்றச்செயல் [offense] தொடர்பான உணர்வுகள் மற்றும் அணுகுமுறையில் மாற்றத்திற்கு உள்ளாகி அதில் இருந்து விடுபட வழிவகுக்கிறது எனலாம். அதாவது மனக்கசப்பு மற்றும் பழிவாங்குதல் போன்ற எண்ணங்களில் [ negative emotions such as resentment and vengeance ] இருந்து இதனால் அவர் விடுபடுகிறார் எனலாம். எனினும் ஆழமாக சிந்திக்கும் பொழுது மன்னிப்பு என்பது உணர்வு மட்டும் அல்ல அது ஒரு செயல் என்பது தெரியவரும். 

நாம் மனக்கசப்பை விட்டுவிட்டு, நாம் அனுபவித்த காயம் அல்லது இழப்புக்கு ஈடுசெய்யப்பட வேண்டும் என்ற எந்தவொரு கோரிக்கையையும் கைவிடும்போது மற்றவர்களை நாமாகவே மன்னித்து விடுகிறோம் எனலாம். அதே போல எமக்கு கொடுமை இழைத்தவர்கள் தங்கள் கொடுமையை உணர்ந்து, தமது தவறை மறைக்காமல், இனி அப்படி ஒன்று நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுத்து, தாம் செய்த அநியாயங்களை  வெளிப்படையாக கூறி, மன்னிப்பு கேட்பது இரு சாராரையும் ஒற்றுமையாக்கும். 

மன்னித்தல் எப்படி மாண்பு மிகுந்ததோ, அப்படித்தான் மன்னிப்பு கேட்பதும். மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு பேருள்ளம்வேண்டும் பெருந்தன்மை வேண்டும். கூடுதலாக ஆண்மையும் வேண்டும். மேலும் ஒரு  குற்றத்தை ஒப்புக் கொள்வதே அதைத் தவறென்று உணர்ந்திருப்பதை வெளிப்படுத்தும். மன்னிப்பு கேட்பதே குற்றத்திற்கான பாதிதண்டனையை பெற்றுவிட்டதற்கு சமம். 
மன்னிப்பு கேட்பவனை விட மன்னிக்கத் தெரிந்தவன் தான் மனிதன் என்பார்கள். அந்த மன்னிக்கத் தெரிந்த குணம் எப்போது வரும் என்றால் தவறு செய்தவன் தவறை உணரும் போதுதான். ஆனால் அந்த தவறையும் உணராமல் மன்னிப்பும் கேட்காமல் அவன் இருந்தால் ? இது தான் இன்று பெரும்பான்மை ஆட்சியாளரிடம் சிக்கி தவிக்கும் சிறுபான்மை இனத்தின் கதி ?  

எனவே தான் உண்மையை கண்டறிந்து,  கொடூரத்தின் வெளிப்பாட்டை  அவனுக்கு உணர்த்தி, அதன் மூலம் அவனை மன்னிப்பு கேட்க வைக்க, இலங்கையில் காணாமல் போன பெற்றோர் இன்னும் அறவழியில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். 

பொதுவாக கூறுமிடத்து, நம்மை நாம் முதலாவதாக மன்னிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தலாம். அதாவது இந்த தவறை செய்ய மாட்டேன் என முடிவெடுத்து நம்மை நாம் மன்னிக்கும் போது, நாம்  அடுத்த நல்ல நிலைமைக்கு நம்மை எடுத்து செல்கிறோம் என்றாகிறது. மற்றவர்களை காட்டிலும் நாம் யாரை மன்னித்தோமோ அவர்களே நம் மீது அதிக அன்பு கூறுவார்கள் என்பது உண்மை. ஒருவர் நமக்கு தீமை செய்கிறார். நமக்கு அவர் மேல் கோபம் கொப்பளிக்கிறது. பின் அவர் தனது தவறை உணர்ந்து நம்மிடம் மன்னிப்பு கேட்கிறார். நாமும் மன்னித்தோம் என்று கூறி விடுகிறோம். இதனால் இருவருக்கும் இடையில் சமாதானம் ஏற்படுகிறது. இது தான் நாம் பெரும் பெரிய முதல் பரிசு ஆகும். 

எது எப்படியாகினும், நாம் உண்மையில் மன்னித்தோமா அல்லது மன்னிக்கப் பட்டோமா என்பது முக்கியம். அது கட்டாயம் உறுதிப்படுத்தப் படவேண்டும். அப்ப தான் சந்தேகம் அற்ற சமாதானம் நிலவும். 

இன்றைய உலகில் 'மன்னிப்பு' என்ற செயல் கொஞ்சம் வித்தியாசமாக மட்டும் அல்ல. பைத்தியக்காரத்தனமாகக் கூடத் தோன்றும். மன்னிப்பார்கள் என்று நம்பி வெள்ளைக்கொடியுடன் சென்று மாண்டவர்கள் எத்தனை ?. 

எது எவ்வாறாகினும், நாளும் பிறர்க்குதவும் நல்லெண்ணம் மட்டும் இருப்பதாலோ அல்லது  பாசமும் பரிவும் காட்டும் உள்ளங்கள் இருப்பதாலோ நாம் எல்லாவற்றையும் சாதிக்க முடியாது. ஆனால் மன்னிக்கிற மாண்பு மாபெரும் வெற்றிகளை நிகழ்த்துகிறது. ஆமாம், மன்னிப்பு மானுடத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது! தண்டனையால் முடியாத மாற்றத்தை மன்னிப்பு நிகழ்த்தி விடுகிறது. 

“இருளை இருள் அகற்ற முடியாது என்பதைப்போல பகையை பகை அகற்ற முடியாது. அன்புதான் பகையை அகற்றும்”  என்றார் மார்ட்டின் லுாதர் கிங் [Darkness cannot drive out darkness; only light can do that. Hate cannot drive out hate; only love can do that - Martin Luther King] ஆமாம், அந்த அன்பு தான் மன்னிப்பு ஆகும். எனவே, மன்னித்தல் என்பது இயலாமையோ,கோழைத்தனமோ அல்ல. 

முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி சொல்லியது போல, “மன்னித்தல் என்பது பலசாலிகளின் பண்பு” ஆகும். “கண்ணுக்குக்கண் என்ற பகையுணர்வு இருந்தால் உலகில் எல்லோருமே குருடர்களாகத்தான் திரிந்து கொண்டிருப்பார்கள்” என்று ஒரு முறை மகாத்மா காந்தி கூறியதை நினைவு படுத்துங்கள்.

"மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டால், உங்கள் பரலோகத் தகப்பன் உங்களுக்கு மன்னிப்பார் [For If You Forgive Men When They Sin Against You, Your Heavenly Father Will Also Forgive You]. நீங்கள் மற்றவர்களுடைய பாவங்களை மன்னிக்காவிட்டால், உங்கள் பிதா உங்கள் பாவங்களை மன்னிக்கமாட்டார் [But If You Do Not Forgive Men Their Sins, Your Father Will Not Forgive Your Sins]." என்று கிறிஸ்தவம் தனது மத்தேயு 6: 14-15 வில் மனிதர்களுக்கு ஒரு பயமுறுத்தலுடன் போதிக்கிறது. 

அதே போல "மன்னித்தல் அல்லாஹ் தனது நபிக்கும் அடியார்களுக்கும் ஏவிய நற்பண்புகளில் ஒன்று" என இஸ்லாத்தில் கூறப்படுகிறது. 
உதாரணமாக, 'இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.' [whoever pardons and makes reconciliation – his reward is [due] from Allah]. (அல்குர்ஆன் 42:39-43)  

இந்து மதத்தின் ஒரு காப்பியமான மகாபாரதத்தில், வனபர்வம் பகுதி 29 இல் [Mahabharata, Book 3, Vana Parva, Section XXIX,] மன்னிப்பு பற்றிய நீண்ட உரையாடல் காணப்படுகிறது. அதில் 

"உண்மையில், நேர்மையானவனும் மன்னிக்கும் குணமுள்ளவனும் எப்போதும் வெற்றி பெறுவான் என்பதே அறம்சார்ந்தவர்கள் கருத்து. உண்மையே பொய்மையைவிட நன்மை; மென்மையான நடத்தையே கடுமையான நடத்தையைவிட நன்மை. கோபம், மக்களின் அழிவுக்கும் துயரத்திற்கும் காரணமாகும். மன்னிக்கும் தன்மையுடன் பூமியைப் போன்ற பொறுமை கொண்ட மனிதர்கள் உலகத்தில் இருப்பதாலேயே உயிர்கள் செழிப்பையும் வாழ்வையும் பெறுகின்றன. ஓ அழகானவளே, என்ன காயம் ஏற்பட்டாலும் ஒருவன் மன்னிக்க வேண்டும். மனிதன் மன்னிக்கும் தன்மையுடன் இருப்பதாலேயே உயிர்களின் தொடர்ச்சி ஏற்படுகிறது. கோபத்தை வெல்பவனே, ஞானி. அவனே பலவான். 

எப்போதும் மன்னிக்கும் தன்மை கொண்ட பொறுமையானவர்களுக்காக சிறப்பு மிகுந்த மன்னிக்கும் தன்மை கொண்ட காசியபர் இந்த வரிகளைப் பாடியிருக்கிறார். 

"மன்னிப்பதே {பொறுமையே} அறம்; மன்னிப்பதே வேள்வி, மன்னிப்பே வேதம், மன்னிப்பே சுருதி. இதை அறிந்த மனிதன் எதையும் மன்னிக்கும் ஆற்றல் பெற்றவனாக இருப்பான். பொறுமையே பிரம்மம், பொறுமையே உண்மை, மன்னிப்பே பாதுகாக்கப்பட்ட ஆன்மத்தகுதி, எதிர்கால ஆன்மத்தகுதியைக் காப்பது பொறுமையே. பொறுமையே தவம், பொறுமையே புனிதம், பொறுமையாலேயே இந்த அண்ட ம் தாங்கப்படுகிறது. 

[For, O thou of handsome face, know that the birth of creatures is due to peace! If the kings also, O Draupadi, giveth way to wrath, his subjects soon meet with destruction. Wrath, therefore, hath for its consequence the destruction and the distress of the people. And because it is seen that there are in the world men who are forgiving like the Earth, it is therefore that creatures derive their life and prosperity. O beautiful one, one should forgive under every injury. It hath been said that the continuation of species is due to man being forgiving. He, indeed, is a wise and excellent person who hath conquered his wrath and who showeth forgiveness even when insulted, oppressed, and angered by a strong person. The man of power who controleth his wrath, hath (for his enjoyment) numerous everlasting regions; while he that is angry, is called foolish, and meeteth with destruction both in this and the other world. O Krishna, the illustrious and forgiving Kashyapa hath, in this respect, sung the following verses in honour of men that are ever forgiving, Forgiveness is virtue; forgiveness is sacrifice; forgiveness is the Vedas; forgiveness is the Shruti. Forgiveness protecteth the ascetic merit of the future; forgiveness is asceticism; forgiveness is holiness; and by forgiveness is it that the universe is held together.]" என்று கூறி உள்ளதை கவனிக்க. 

"பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று."
[குறள் 152]

தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் [மன்னித்துக்] கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் [மன்னித்தலையும்] விட நல்லது என்கிறது திருவள்ளுவர் தந்த திருக்குறள். அதாவது, நாம் வாழ்வில் பல மனிதர்களை சந்திக்கிறோம். பெரும்பாலானோரிடம் நல்லவையும் உண்டு குறைகளும் உண்டு என்பதை அறிவோம். சிலரிடம் அதிக குறைகள் உண்டு. அவர்கள் அத்தவறுகளை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள், திருத்துத்திக்கொள்ளவும் மாட்டார்கள். மறுபுறம் சிலர் தங்கள் தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்பார்கள். அது அவர்களின் நல்லுள்ளத்திற்கான சான்று. அவர்களின் முன்னேற்றத்திற்கான சான்று.


ஆகவே  மன்னிப்பு கேட்பவரை மன்னித்து செல்வது சிறப்பாகும். 

அப்படியான தலைவர்களில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பெரும்பான்மையினரில், யாரும் இருக்கிறார்களா ?

அது தான் முதலில் வெளிப்படையாக தெரியவேண்டும் 

இல்லாவிட்டால் 

குறைந்தது நாம் ஆவாது எமது ஒற்றுமையையும் கோரிக்கையையும் ஒரு புள்ளியில் காரணங்களுடன் எடுத்துக் காட்டி உலகத்துக்காவது எம் நிலையை சொல்ல, அதனால் உலகத்தின் அழுத்தத்தை அவர்கள் சந்திக்க வழி சமைக்கக் கூடிய 

தமிழ் பேசும் எல்லோரும் அல்லது தமிழர் எல்லோரும் ஏற்கக்கூடிய பொது  வேட்ப்பாளரை நிறுத்துவது காலத்தின் கட்டாயம் என்று எண்ணுகிறேன் 
  
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

ஜனாதிபதித் தேர்தல் : தமிழ் நிலைப்பாடு என்ன?  - நிலாந்தன். -

5 days 4 hours ago
Presidential_election-Candidates-2024-75 ஜனாதிபதித் தேர்தல் : தமிழ் நிலைப்பாடு என்ன?  - நிலாந்தன். -

நாடு ஒரு தேர்தலை நோக்கி போய்க்கொண்டிருக்கும் பொழுது தமிழரசுக் கட்சியானது தொடர்ந்து முடிவெடுக்க முடியாத ஒரு நிலையில் காணப்படுகின்றது. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி அது. அதன் செயற்பாடுகள் காரணமாக அது படிப்படியாக உடைந்து உடைந்து அதன் ஏகபோகத்தை இழந்து விட்டது என்பது உண்மைதான்.என்றாலும் அதுதான் இப்பொழுது உள்ளத்தில் பெரிய கட்சி. அக்கட்சி ஒரு தேர்தல் ஆண்டில் முடிவெடுக்க முடியாதபடி உடைந்து காணப்படுவது,தென் இலங்கைக்குச் சாதகமானது.

நீதிமன்றம் கட்சியை முடக்கவில்லை. ஆனால் அண்மையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர் செயல்பட முடியாத ஒரு நிலை. அதனால் முன்னைய தலைவராகிய மாவை சேனாதிராஜாவே இப்பொழுதும் தலைவராக உள்ளார். மாவை ஒரு திறமையான தலைவராக இருந்திருந்தால் கட்சி இப்படி ஒரு சீரழிவுக்கு வந்திருக்காது என்ற கருத்து கட்சிக்கு உள்ளேயும் கட்சிக்கு வெளியேயும் உண்டு. அவருடைய தலைமையின் கீழ் தான் கட்சிக்குள் இரண்டு அணிகள் விருத்தியடைந்தன. தேர்தல் மூலம் ஒரு தலைவரை தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.அது ஜனநாயகமானது தான்.ஆனால் அதனால் கட்சி இரண்டாக உடைந்து நிற்கின்றது.

யாருடைய தலைமையின் கீழ் தமிழரசு கட்சி இரண்டாக உடையும் வளர்ச்சிகள் ஏற்பட்டனவோ அதே தலைவர் தான் தொடர்ந்து அக்கட்சிக்கு தலைமை தாங்குகிறார். எனவே ஜனாதிபதி தேர்தலில் உடைந்த அணிகள் ஒன்றிணைந்து ஒரு பொது முடிவை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டா? அதை நோக்கி கட்சியை ஐக்கியப்படுத்த மாவையால் முடியுமா?அவருக்கு வயதாகிவிட்டது. உடலாலும் மனதாலும் தளர்ந்து விட்டார்.

கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முடிவுகளிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துகின்றது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சி இரு வேறு நிலைப்பாடுகளோடு காணப்படுவதாகத் தெரிகிறது.

இதில் சுமந்திரன் அணி தான் முதலிலேயே தன் நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவித்தது. சுமந்திரன் அணியானது தென்னிலங்கையில் உள்ள எந்த வேட்பாளரை தான் ஆதரிக்க போகிறேன் என்பதனை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளரை அவர்கள் தொடக்கத்திலிருந்தே எதிர்க்கிறார்கள்.பொது வேட்பாளரை கொண்டுவரும் தரப்புக்கள் ராஜபக்சக்களை அதாவது ரணிலை வெற்றி பெற வைக்க முயற்சிக்கின்றனர் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஏனெனில் தமிழ் மக்களின் வாக்குகள் இயல்பாக சஜித்துக்கு போவதை தடுத்து அவற்றை பொது வேட்பாளர் பெற்றுக் கொள்வார். அதன்மூலம் சஜித்தின் வெற்றி வாய்ப்புகள் குறையும். அது அதன் தக்கபூர்வ விளைவாக ரணிலே வெல்ல வைக்கும் என்று ஒரு வாதம் உண்டு.

இன்னொரு வாதம், தமிழ் பொது வேட்பாளர் எனப்படுகிறவர் சிங்கள மக்கள் மத்தியில் இன விரோதத்தைத் தூண்டுவதற்கு வாய்ப்பாக அமைவார். அதன் மூலம் ராஜபக்சக்கள் மீண்டும் தமது வாக்கு வங்கியைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று கூறப்படுவது.

மேற்கண்ட இரண்டு காரணங்களையும் முன்வைத்து தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்ப்பவர்கள் யார் யார் என்று பார்த்தால், அவர்கள் அனேகமாக சுமந்திரன் அணியை சேர்ந்தவர்கள்,அல்லது சிறீதரன் அணிக்கு எதிரானவர்கள் என்ற ஒரு தொகுக்கப்பட்ட படத்தைப் பெறலாம்.

தமிழரசுக் கட்சிக்குள் தேர்தல் நடப்பதற்கு முன்னரே சாணக்கியன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தன் கருத்தை வெளிப்படுத்தி விட்டார். அதில் அவர் தமிழ்ப் பொது வேட்பாளர் என்று தெரிவை நிராகரித்திருந்தார். அதன் பின் சுமந்திரன் அணிக்கு நெருக்கமானவர்கள்,சார்பானவர்கள் அல்லது மறைமுகமாக அந்த அணியை ஆதரிப்பவர்கள் அல்லது எதிர்காலத்தில் அந்த அணியோடு கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று காத்திருப்பவர்கள் போன்ற பல்வேறு வகைப்பட்டவர்களும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராக அபிப்பிராயம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த விடயத்தில் சுமந்திரன் அணி தெளிவாகவும் தீர்மானகரமாகவும் காணப்படுகின்றது. கட்சி ஒரு முடிவை எடுத்ததோ இல்லையோ அந்த அணி தன் முடிவை பகிரங்கமாகத் துணிச்சலாகக் கூறி வருகின்றது.

ஆனால் அதற்கு எதிரணியாக காணப்படுகின்ற சிறீதரன் அணியோ தன் முடிவை வெளிப்படையாகத் தெரிவிக்க தயங்குவதாக தெரிகிறது. சிறீதரன் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கருத்தரங்குகளில் காணப்படுகின்றார்.குறிப்பாக “மக்கள் மனு” என்று அழைக்கப்படும் கருத்தரங்கு தந்தை செல்வா கலையரங்கில் நடந்த பொழுது அதில் அவர் உரையாற்றியிருக்கிறார்.அவருடைய உரை தமிழ் பொது வேட்பாளருக்கு சாதகமாகக் காணப்பட்டது. அவர் கொள்கை அளவில் தமிழ் பொது வேட்பாளர் என்ற தெரிவை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அது தொடர்பான இறுதி முடிவை கட்சி கூடி முடிவெடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.

அவருடைய அணியை சேர்ந்தவராகக் கருதப்படும் தவராசாவும் அவ்வாறான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். மேலும் கிளிநொச்சியில் சிறீதரனின் வலது கை போல காணப்படும் முன்னாள் பிரதேச சபை தவிசாளரும் முகநூலில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக எழுதியிருக்கிறார்.அதை அவர் தன்னுடைய தனிப்பட்ட முடிவு என்றும் ஆனால் கட்சி என்ன முடிவு எடுக்கின்றதோ அதற்குத் தான் கீழ்படிவேன் என்றும் தெரிவித்துள்ளார். எனவே சிறீதரன் அணியானது பொது வேட்பாளர் தெரிவிக்குக் கிட்டவாக நிற்கிறது.

சுமந்திரன் அண்மையில் அனுர குமார யாழ்ப்பாணம் வந்திருந்த பொழுது அந்தக் கூட்டத்தில் முன் வரிசையில் காணப்பட்டார். ஆனால் அதற்காக அவர் ஜேவிபிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பார் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

சஜித்,தமிழரசு கட்சியின் சுமந்திரன் அணி தன்னை நோக்கி தமிழ் வாக்குகளைத் திருப்பும் என்று எதிர்பார்க்கக் கூடும். ஆனால் அது தொடர்பான உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகளோ இணக்கங்களோ இதுவரையிலும் ஏற்படவில்லை.

அதாவது ஜனாதிபதி தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கும் குறையாத காலமே இருக்கும் ஒரு பின்னணியில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சி முடிவெடுக்காத ஒரு நிலை.

அதே சமயம் குத்து விளக்குக் கூட்டணியும் அது தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவில்லை என்று தெரிகிறது. கடைசியாக வவுனியாவில் நடந்த கூட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஏனைய கட்சிகளோடு உரையாடுவது என்று அவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.அதாவது அந்தக் கூட்டணியின் முடிவு என்ன என்பது உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை.

அக்கூட்டுக்குள் காணப்படும் ஈபிஆர்எல்எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் பொது வேட்பாளரை குறித்து அதிகளவு பேசியிருக்கிறார். அறிக்கைகள் விட்டிருக்கிறார் ஊடகச் சந்திப்புக்களையும் நடத்தியிருக்கிறார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலையொட்டி தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற கோரிக்கையை முதலிலேயே முன் வைத்தவர் அவர்தான். ஆனால் அவர் இணைந்திருக்கும் கூட்டின் முடிவும் அதுவா என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

குத்துவிளக்கு கூட்டுக்குள் காணப்படும் கட்சிகளில் இரண்டு கட்சிகள் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தளம்புவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாக அவர்கள் முடிவெடுப்பதை பெருமளவுக்கு தாமதித்து வருவதாகவும் தெரிகின்றது.தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தில் தமிழரசுக் கட்சி இணையவில்லை என்றால் அது வெற்றி பெறாது என்று இந்த இரண்டு கட்சியை சேர்ந்தவர்களும் தங்களுக்கு நெருக்கமானவர்களோடு கதைத்திருக்கிறார்கள். எனவே குத்து விளக்குக் கூட்டுக்குள்ளும் தமிழ் பொது வேட்பாளர் என்ற தெரிவில் உறுதியான ஒருமித்த முடிவு இல்லை.

இந்த விவாதப் பரப்புக்குள் வராத கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான். அது கடந்த 15 ஆண்டுகளில் நடந்த எல்லா ஜனாதிபதி தேர்தல்களின் போதும் தேர்தலை புறக்கணிக்கும் முடிவைத்தான் எடுத்தது. இந்த முறையும் அக்கட்சி அதே முடிவோடு காணப்படுகின்றது. ஆனால் அந்த முடிவை மக்களுடைய விருப்பமாக மாற்ற அவர்கள் முயற்சிக்க மாட்டார்கள் என்று தெரிகிறது. அப்படி என்றால் தேர்தலில் மக்கள் என்ன முடிவெடுப்பார்கள்? மக்களைத் தாமாக முடிவெடுக்குமாறு விடுவதோ அல்லது ஏனைய கட்சிகள் மக்களை வழிநடத்தட்டும் என்று முடிவெடுப்பதோ கட்சி அரசியலில் பொருத்தமான ஒழுக்கம் அல்ல. ஒரு கட்சி தான் எடுத்த முடிவை மக்கள் மயப்படுத்த வேண்டும். அதற்கு மக்கள் ஆதரவைத் திரட்ட வேண்டும். ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதை நோக்கி உழைப்பதாகத் தெரியவில்லை.

எனவே தேர்தல் களத்தில் தமிழ்த் தரப்பு மூன்று விதமான நிலைப்பாடுகளோடு காணப்படுகின்றது. இதில் பகிஸ்கரிப்புக்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உழைக்காது என்று பார்த்தால்,நடைமுறையில் இரண்டு விதமான நிலைப்பாடுகள் தான் தமிழ்மக்கள் மத்தியில் செயலுருப்பெறும். ஒன்று ராஜபக்சங்களுக்கு எதிராக வாக்களிப்பது.இரண்டு தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது.

கடந்த 15 ஆண்டுகளில் நடந்த எல்லா ஜனாதிபதி தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக நின்ற விடயங்களில் ஒன்று ராஜபக்சங்களுக்கு எதிராக வாக்களித்தமைதான். இந்த விடயத்தில் தமிழ் மக்கள் போரை வழிநடத்திய தளபதியாகிய சரத் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கிறார்கள். இறுதிக்கட்ட போரில் தற்காலிகமாக பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனாவுக்கும் வாக்களித்திருக்கிறார்கள்.எனவே ராஜபக்சங்களுக்கு எதிராக என்ற தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்ச்சியானது. எனினும்,இம்முறை அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இருக்குமா ?

மேற்கு நாடுகள்,பன்னாட்டு நாணய நிதியம் போன்றன ரணில் விக்கிரமசிங்கவை முதன்மைப்படுத்துவதாகத் தெரிகிறது.ஆனால் அவர் ராஜபக்சக்களின் பதிலியாகத்தான் தேர்தலில் இறக்கப்படுவாரா என்ற கேள்விக்கு விடை முக்கியம். அப்படி ஒரு நிலைமை வந்தால், மேற்கு நாடுகள் தமிழ்க் கட்சிகளிடம் எப்படிப் பட்ட ஒரு முடிவை எடுக்குமாறு வலியுறுத்தும்?

சஜித் பிரேமதாச தன் தலைமைத்துவத்தை இனிமேல் தான் நிரூபிக்க வேண்டும். மேலும் வெற்றியை நோக்கிக் கூட்டுகளை உருவாக்க முடியாதவராகவும் அவர் காணப்படுகின்றார். அது மட்டுமல்ல ஓய்வு பெற்ற படைத் தளபதிகள் அவரை நோக்கிச் செல்கிறார்கள்.ராஜபக்சங்களுக்கு எதிராக வாக்களிக்கும் தமிழ் மக்கள் அந்த ராஜபக்சக்களின் உத்தரவைப் போர்க்களத்தில் அமல்படுத்திய தளபதிகள் அதிகமாக இணையும் ஒரு கூட்டுக்கு வாக்களிப்பார்களா?சரத் பொன்சேகாவுக்கும் மைத்திரிபால சிறிசேனலுக்கும் வாக்களித்ததை போலவா இதுவும்?

அல்லது தமிழரசுக் கட்சிக்குள் சிறீதரன் அணி தெளிவான நிலைப்பாட்டை எடுத்து, துணிச்சலாகத் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்தால், குத்து விளக்குக் கூட்டணியும் உட்பட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அல்லாத ஏனைய கட்சிகள் ஓர் அணிக்குள் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டா ?

இது விடயத்தில் சிவில் சமூகங்களின் தலையீடு கட்சிகளை ஒருங்கிணைக்க உதவுமா ?அல்லது கட்சிகள் தனிப்பட்ட ரீதியில் தென்னிலங்கைக் கட்சிகளோடு டீலுக்குப் போகக்கூடுமா ?

https://athavannews.com/2024/1378029

அனுர குமாரவிடம் சில கேள்விகள் – நிலாந்தன்!

5 days 4 hours ago

அனுர குமாரவிடம் சில கேள்விகள் – நிலாந்தன்!
adminApril 14, 2024
anura5.jpg

ஓரு நண்பர், அவர் ஒரு இலக்கியவாதி, தொலைபேசியில் அழைத்தார். தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அவரைப் பதட்டமடையச் செய்திருப்பதாகத் தெரிந்தது. பொது வேட்பாளர் என்ற தெரிவை அவர் கடுமையாக விமர்சித்தார். இனங்களுக்கு இடையே அது முரண்பாட்டைப் பெருப்பிக்கும் என்ற பொருள்படவும் அவர் கதைத்தார். அதாவது சம்பந்தன், சுமந்திரன் மற்றும் சில விமர்சகர்கள் கூறுவதை அவர் பிரதிபலித்தார். அதைவிட முக்கியமாக கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தான் ஜேவிபிக்கு வாக்களித்ததாகவும் கூறினார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஜேவிபிக்கு இருந்த கவர்ச்சியை விடவும் இப்பொழுது குறிப்பாக 2021 இல் நிகழ்ந்த தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னர் ஜேவிபியின் கவர்ச்சி அதிகரித்திருக்கிறது என்பது உண்மை. எனவே அந்த இலக்கிய நண்பர் இந்த முறையும் ஜேவிபிக்குத்தான் வாக்களிக்க போகின்றார் என்று தெரிகிறது. அவரைப் போன்றவர்களை மயக்கக்கூடிய பேச்சாற்றலும் ஜனவசியமும் அனுரகுமாரடவிம் உண்டுதான்.

யாழ்ப்பாணத்திலும் கனடாவிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் இன முரண்பாடுகள் தொடர்பிலும் இன நல்லிணக்கம் தொடர்பிலும் அனுரகுமார ஆற்றிய உரைகள் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக லிபரல் ஜனநாயக வாதிகள் மத்தியில் அதிகம் கவனிப்பை பெற்றிருக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, சிவில் சமூக செயற்பாட்டாளரும் சட்டச் செயற்பாட்டாளரும் ஆகிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார், ஜேவிபியை ஆதரிப்பதன் மூலம் தென்னிலங்கை அரசியலில் தாக்கம் செலுத்த முடியுமா என்று.

அப்பொழுது இருந்ததைவிடவும் இப்பொழுது, ஜேவிபியின் மவுசு கூடிவிட்டது. இரண்டு பிரதான கட்சிகளையும் விட ஜேவிபி பரவாயில்லை என்று சிங்கள மக்கள் மத்தியில் படித்த நகர்ப்புற நடுத்தர வர்க்கம் கருதுகிறது. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் அவ்வாறான எதிர்பார்ப்பு உண்டா ?

உண்டாயின், அவ்வாறான எதிர்பார்ப்பு உள்ளவர்கள் பின்வரும் கேள்விகளுக்கு ஜேவிபி என்ன பதில் கூறுகிறது என்பதைக் கேட்டுத் தமிழ் மக்களுக்குக் கூறுவார்களா?

முதலாவது கேள்வி, இலங்கை இனப் பிரச்சினை என்பது இலங்கைத் தீவின் பல் வகைமையை ஏற்றுக் கொள்ள மறுத்ததில் இருந்துதான் தொடங்கியது. இலங்கைத் தீவின் பல்வகைமை எனப்படுவது இச்சிறிய தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட மதங்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் உண்டு என்பதுதான். இந்த பல்வகைமையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிங்கள பௌத்த பெருந் தேசிய வாதம் அதாவது பெரிய இனம் ஏனைய சிறிய இனங்களின் தேசிய இருப்பை அழிக்க முற்பட்டமைதான் இனப் பிரச்சினையாகும். எனவே இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஜேவிபி ஏற்றுக் கொள்கின்றதா? ஆயின் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதனை ஜேவிபி ஏற்றுக் கொள்கின்றதா? ஆயின் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதனை ஜேவிபி ஏற்றுக் கொள்கின்றதா? இது முதலாவது தொகுதிக் கேள்விகள்.

அனுரகுமார கூறுகிறார் தமிழ் மக்களுக்கு மொழிப் பிரச்சினை, வழிபாட்டுப் பிரச்சினை, பாதுகாப்புப் பிரச்சினைகள் போன்ற பல பிரச்சனைகள் உண்டு என்று. உண்டுதான். ஆனால் அவையனைத்தும் தமிழ் மக்களின் கூட்டு உரிமைக்குள் அடங்கும். தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டு அவர்களுடைய கூட்டுரிமையைப் பாதுகாக்கும் ஒரு தீர்வை முன் வைத்தால் பிரச்சனை தீர்ந்து விடும். எனவே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்பது இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்வதுதான். இந்த அடிப்படையில் இரண்டாவது தொகுதிக் கேள்விகளைக் கேட்கலாம்.

இனப் பிரச்சினைக்கு ஜேவிபி முன் வைக்கும் தீர்வு என்ன? தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்கின்றார்களோ இல்லையோ மஹிந்த கூறுகிறார் 13 பிளஸ் என்று. ரணில் கூறுகிறார் 13 என்று. சஜித் கூறுகிறார் 13 பிளஸ் என்று. இந்த விடயத்தில் ஜேவிபி தமிழ் மக்களுக்கு முன் வைக்கும் தீர்வு என்ன?

ஏனைய பெரிய காட்சிகளை விடத் தன் கை சுத்தம் என்று ஜேவிபி கூறுகின்றது. ஊழலற்ற, முறைகேடுகளற்ற, குடும்ப ஆதிக்கம் அற்ற ஒரு ஆட்சியைத் தன்னால் தர முடியும் என்று வாக்குறுதி அளிக்கின்றது. ஆனால் ஊழலும் முறைகேடும் குடும்ப ஆட்சியும் எங்கிருந்து வந்தன? இலங்கைத் தீவின் ஜனநாயக இதயம் எங்கே தோல்வி அடைந்தது? இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ள மறுத்த போதுதான். அதாவது இனப்பிரச்சினைதான் நாட்டின் எல்லாப் பிரச்சினைகளுக்குமான தாய்ப் பிரச்சனை. அதை ஜேவிபி ஏற்றுக் கொள்கிறதா? ஆயின் அதற்கு அவர்கள் முன்வைக்கும் தீர்வு என்ன? ஏனைய கட்சிகளை விட வித்தியாசமான ஒரு தீர்வை அவர்கள் முன்வைப்பார்களா? அதைப் பகிரங்கமாக சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துக் கூற ஜேவிபி தயாரா?

தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் அவர்களுடைய பாரம்பரியத் தாயகம் ஆகிய வடக்கு கிழக்கு இணைப்பை ஜேவிபி ஏற்று கொள்கின்றதா? ஏற்கனவே வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக வழக்கு போட்டு சட்டரீதியாக அந்த இணைப்பை பிரித்தது ஜேவிபிதான். அதற்காக ஜேவிபி தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்குமா? அல்லது தான் செய்தது சரி என்றால் அதற்குரிய விளக்கத்தை ஜேவிபி பகிரங்கமாகக் கூறுமா? அதாவது ஜே விபி பகிரங்கமாக பொறுப்புக் கூறுமா?

இவை இரண்டாவது தொகுதி கேள்விகள். மூன்றாவது தொகுதி கேள்விகள் வருமாறு… யுத்த காலத்தில் ஜேவிபி படைத்தரப்புக்கு ஆட்சேர்த்துக் கொடுத்தது. போர் வெற்றிகளைக் கொண்டாடியது. ஆனால் தமிழ் மக்கள் அந்த வெற்றிகளை இனப்படுகொலை என்று வர்ணிக்கின்றார்கள். இது தொடர்பாக ஜேவிபியின் நிலைப்பாடு என்ன? அவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்புக் கூற வைக்கும் பொறி முறை ஒன்று ஐநாவில் செயற்பட்டு வருகின்றது. போரை ஆதரித்த, போரை வழிநடத்திய அனைவரும் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். ஜேவிபி பொறுப்பு கூறுமா ?

நான்காவது கேள்வி, ஜேவிபியானது அதன் முதலாவது ஆயுதப் போராட்டத்தின்போது புதிதாக இணைக்கும் அங்கத்தவர்களுக்கு நடத்திய அரசியல் வகுப்புகளில் ஐந்தாவது வகுப்பில் மலையகத் தமிழர்களை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவிகள் என்று விவரித்தது. ஜேவிபி இப்பொழுதும் அதே நிலைப்பாட்டோடு தான் காணப்படுகின்றதா? இந்த விடயத்தில் மலையக மக்களுக்கு எதிரான தனது முன்னைய நிலைப்பாட்டுக்காக ஜேவிபி பகிரங்கமாக மன்னிப்பு கேட்குமா?

மேற்படி கேள்விகளுக்கு ஜேவிபியும் ஜேவிபிக்கு வாக்களித்தால் என்ன என்று கேட்கும் தமிழர்களும் பதில் சொல்ல வேண்டும்.

கனடாவிலும் யாழ்ப்பாணத்திலும் அனுரகுமார ஆற்றிய உரைகளில் காணப்படும் கவர்ச்சியான மனித நேய வார்த்தைகளைக் கண்டு மயங்கும் தமிழர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். இனப்பிரச்சினை ஒரு மனிதாபிமான பிரச்சினை அல்ல. மொழி பிரச்சினை வழிபாட்டுப் பிரச்சினை போன்றனவும் உதிரிப் பிரச்சினைகள் அல்ல. அவை யாவும் தமிழ் மக்களின் கூட்டு உரிமைகள் சம்பந்தப்பட்டவை. கூட்டு உரிமை என்று எப்பொழுது கேட்கலாம் என்றால் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டால்தான். ஆனால் ஜேவிபியும் அதற்கு வாக்களித்தால் என்ன என்று கேட்கும் தமிழர்களும் அரசியல் அடர்த்தி மிக்க விடையங்களை மேலோட்டமாகவும் மனிதாபிமான வார்த்தைகளிலும் கதைத்து விட்டுப் போகப் பார்க்கின்றார்கள். அரசியல் விவகாரங்களை அவற்றுக்குரிய அரசியல் அடர்த்தி மிக்க சொற்களின் ஊடாகத்தான் உரையாடலாம். அடர்த்தி குறைந்த சொற்களுக்கு ஊடாக உரையாடுவதே ஓர் அரசியல் தான்; தந்திரம் தான்.

ஜேவிபி வெளிப்படையான அரசியல் அடர்த்தி மிக்க வார்த்தைகளில் இனப் பிரச்சினை தொடர்பில் உரையாட வேண்டும். அவ்வாறு உரையாடினால் தென்னிலங்கையில் உள்ள சிங்கள பௌத்த வாக்குகளை அவர்கள் இழக்க வேண்டி வரலாம். எனவே இனப் பிரச்சினை தொடர்பில் ஜெவிபி தெளிவாகப் பேசாமல் ஆனால் கவர்ச்சியாக மனிதாபிமான நோக்கு நிலையில் இருந்து பேசி வருகிறது. ஜேவிபியில் முன்பு உறுப்பினராக இருந்து அதிலிருந்து விலகிய ஒருவர் எழுதிய நினைவுக் குறிப்பு ஒன்றில் அவர் பின்வரும் பொருள் பட கூறுகிறார். “ராஜபக்சக்கள் வெளிப்படையாகத் தெரியும் இனவாதிகள்.ஆனால் ஜேவிபி சமூக நீதியின் பின் பதுங்கும் ஓர் இனவாதி “ என்று. இக்கூற்று உண்மையா இல்லையா என்பதனை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு ஜேவிபிக்கு மட்டுமல்ல ஜேவிபிக்கு வாக்களித்தால் என்ன என்று கேட்கும் தமிழர்களுக்கும் உண்டு.
 

https://globaltamilnews.net/2024/201781/

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? 

5 days 11 hours ago

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? 

நேற்று நண்பர் ஒருவரின் வீட்டிற்கு பிறந்தநாள் ஒன்றிற்காகச் சென்றிருந்தேன். சுமார் 8 - 9 ஆண்களும், அதேயளவு பெண்களும், பெருமளவு சிறுவர்களும் இருந்தார்கள். வழமைபோல ஆண்கள் வட்டமாக அமர்ந்துகொண்டு பேச, பெண்களும் அவ்வாறே செய்தார்கள். நடுவில் சிறுவர்கள் தமது விளையாட்டுத் துப்பாக்கிகளோடு ஓடித்திரிய வீடு அமர்க்களமாகியிருந்தது.


இளையராஜா பாடல்கள், அக்காலத்தில் எமக்குத் தெரியாமலிருந்த இன்னும் சில இசையமைப்பாளர்கள் , அநிருத்தின் சிட்னி இசை நிகழ்ச்சி என்று ஆரம்பித்து சில படங்கள் குறித்த விமர்சனம் என்று நீண்டு, அரசியலுக்குள் நுழைந்தது சம்பாஷணை. 

அங்கிருந்தவர்களில் பல தரப்பினர் இருந்தனர். புலிகளை ஆதரிப்பவர்கள், நடுநிலையாளர்கள், விமர்சிப்பவர்கள் என்று மூன்று வகையினர். நடுநிலைவாதிகள் அநேகமான வேளைகளில் அரசியலைப் பேச ஆரம்பிப்பார்கள். அங்கும் இன்றி, இங்கும் இன்றி அவர்களின் பேச்சுக்கள் இருக்கும். புலிகளை ஆதரிப்பவர்கள் அதிகம் பேசுவதில்லை. விமர்சிப்பவர்கள் எப்போதாவது சம்பாஷணையில் தமக்கான தருணங்கள் வரும்போது கலந்துகொள்வார்கள். 

நேற்றும் அதுதான் நடந்தது. கருணாவின் பிளவு குறித்து ஆரம்பித்த சம்பாஷணை, டி.பி.எஸ்.ஜெயராஜ் குறித்து நீண்டபோது, அவர் அணமையில் கொழும்பு டெயிலி மிரர் பத்திரிக்கையில் எழுதிய "கிழக்கை இழந்த கருணாவும், ஈழத்தைப் பறிகொடுத்த பிரபாகரனும்" என்கிற கட்டுரை குறித்து பேசப்பட்டபோது, நான் தலைப்பைப் பார்த்துவிட்டு கடந்து சென்றுவிட்டேன் என்று கூறவும் நடுநிலைவாதியான ஒருவர், "அது எப்படி கடந்து செல்வீர்கள்? உள்ளே என்ன இருக்கிறது என்று படிக்காமலேயே விமர்சிப்பீர்களா? தலைவர் கூட இறுதிவரை அவரது கட்டுரைகளை இன்னொருவர் மொழிபெயர்க்க அறிந்துகொண்டுதான் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். நானோ, "அவர் புலிகள் குறித்து அவதூறாகவே எழுதிவருகிறார், அவரின் வாசகர்கள் பெரும்பாலும் சிங்களவர்களே, அவர்களை மகிழ்விக்கவே அவர் இவ்வாறான கருத்துக்களைத் தொடர்ந்து எழுதுகிறார்" என்று கூறினேன். இதில் மெதுவாக சம்பாஷணை சூடேறத் தொடங்கியிருந்தது. இடையிடையே சிலர் இதுகுறித்த தமது கருத்துக்களை கூறினார்கள்.

இடையில் யாழ்ப்பாணம் சென்று வந்த ஒருவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்தபோது, நாவற்குழியில் கட்டப்பட்டிருக்கும் விகாரை பற்றியும் பேசினார். யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது என்ற வளைவிற்குப் பின்னால் தெரிவது பெளத்தர்களின் விகாரை என்று அவர் கூறி வேதனைப்படும்போது, உண்மைதான், அங்கு கிட்டத்தட்ட 148 சிங்களக் குடும்பங்களும் குடியேறியிருக்கிறார்கள் என்றுய் கேள்விப்பட்டேன் என்று கூறினேன். இங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. 

டி.பி.எஸ்.ஜெயராஜின் அபிமானியான அவர், "சிங்களவர்கள் 83 இற்கு முன்னரும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருக்கிறார்கள், அரச வேலைகள், தனியார் வேலைகள், வியாபாரங்கள் என்று வாழ்ந்தவர்கள், அவர்கள் மீள யாழ்ப்பாணத்திற்கு வருவதில் ஒரு பிரச்சினையுமில்லை. சண்டை ஆரம்பித்ததால் விட்டுச் சென்றவர்கள், தற்போது வருகிறார்கள். நீங்கள் கொழும்பில் சென்று வாழ்வதில்லையா? அதுபோலத்தான் அவர்களும் வடக்குக் கிழக்கில் வாழ்கிறார்கள்" என்று கூறினார். எனக்கு அது சரியென்று படவில்லை. 

"கொழும்பில் சிங்களவர்கள் கூறும் விலைக்கு அதிகமாகக் கொடுத்து, காணிகளை வாங்கி வீடுகளை  கட்டுவதும், வாங்குவதும், வடக்குக் கிழக்கில் அரச இராணுவத்தின் உதவியுடன் தமிழர்களைக் கொன்றுவிட்டோ, அடித்துத் துரத்திவிட்டோ அடாத்தாகக் காணிகளைக் கைப்பற்றிக் குடியேறுவதும் ஒன்றா? சிங்களக் குடியேற்றவாதிகளை ஆயுதமயப்படுத்தி, கூடவே பாதுகாப்பிற்கென்று இராணுவ முகாம்களையும் அமைத்து, சிறுகச் சிறுக தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதும், தமிழர்கள் கொழும்பில் வாழ்வதும் ஒன்றா? கொழும்பில் புலிகள் முகாம் அமைத்துத் தமிழர்களை ஆயுததாரிகளாக்கி, சிங்களவர்களை கொன்றோ அல்லது விரட்டியோ ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறார்களா? என்று சற்றுச் சூடாகவே கேட்டுவிட்டேன். அவர் மெளனமாகிவிட்டார். எதுவும் பேசவில்லை. "நான் கூறவந்ததைக் கேட்காமலேயே நீங்கள் டென்ஷன் ஆகிவிட்டீர்கள்" என்று மட்டும் கூறினார். ஆத்திரப்பட்டதற்காக வருந்தினேன்.

ஆனால், இக்கேள்வி அடிக்கடி நடுநிலைவாதிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. 

இவ்வாறு இவர்கள் கேட்பது தமிழர் தாயகத்தில் சிங்கள ஆக்கிரமிப்பினை நியாயப்படுத்திவிடுவதாக எனக்குப் படுகிறது. இந்த வேறுபாட்டினை இவர்களால் புரிந்துகொள்ள முடியாமற்போனது எங்கணம்?  இதுபற்றிய உங்கள் கருத்தென்ன?

தமிழ் ஜனாதிபதி வேட்பாளர்: ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை

6 days 2 hours ago

 

தமிழ் ஜனாதிபதி வேட்பாளர்: ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை
தமிழ் ஜனாதிபதி வேட்பாளர்: ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை

— கருணாகரன் —

2024 இல் ஜனாதிபதித் தேர்தல் நடக்குமா? பாராளுமன்றத் தேர்தல் நடக்குமா? என்று இன்னும் உறுதியாகச் சொல்ல  முடியாத நிலையே உள்ளது. ஜனாதிபதித் தேர்தல்தான் முதலில் நடக்கும் என சில இடங்களில் சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பு பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது நல்லது என்று பொதுஜன பெரமுன உள்ளிட்ட சில தரப்புகள் வலியுறுத்துகின்றன. எதையும் தீர்மானிக்கின்ற ஒரே மனிதராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார்.

இலங்கை அரசியல் யாப்பின்படி ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை உச்சமாகப் பயன்படுத்தியவர் ஜே.ஆர். ஜெயவர்த்தன. அவரே ஜனாதிபதிக்கான அதிகாரங்களை உருவாக்கியவர். அவருக்கு அடுத்தபடியாக அதனுடைய சுவையறிந்து செயற்பட்டுக் கொண்டிருப்பவர் ரணில் விக்கிரமசிங்க. இருவரும் உறவினர்கள் மட்டுமல்ல, ஒரே மாதிரிச் சிந்திப்பவர்களும் செயற்படுகின்றவர்களும். இதனால் இருவரையும் தந்திரமிக்கவர்கள் (நரித்தனமுள்ளவர்கள்) எனச் சொல்லப்படுவதுண்டு. இருவருக்கும் ஒரேயொரு வித்தியாசம். ஜே.ஆர், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி நடத்தியவர். அந்தப் பலத்தைப் பயன்படுத்தி எதிர்த்தரப்புகளின் முதுகெலும்பை உடைத்தவர். தன்னுடைய கட்சிக்காரர்களின் ராஜினாமாக் கடிதத்தை வாங்கிப் பொக்கற்றுக்குள் வைத்துக் கொண்டு முழுமையான நிறைவேற்று அதிகாரத்துக்கு அப்பாலும்  செயற்பட்டவர்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிறிய – சாதாரண பெரும்பான்மை கூட ஆட்சியில் இல்லை. அவர் ஜனாதிபதியாகிய விதமே – விந்தையே வேறுவிதமானது. யானை மாலை போட்டதால் ராணியாகியதைப்போல, ராஜபக்ஸவினரின் கூட்டுத் தவறுகளின் விளைவாகவும் ஏனைய அரசியல் தலைவர்களின் பலவீனங்களுக்குள்ளாலும் மேலெழுந்து ஜனாதிபதியானவர். இதனால் கேள்விக்கிடமற்று முழுமையான நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தும் ஆளாக மாறியிருக்கிறார் ரணில்.

ஆகவே இப்பொழுது ரணில் மிக வலுவான யானையாக உள்ளார். ஆனால், தேர்தலில் இந்த யானைப் பலம் அவருக்கு இருக்குமா? இல்லையா என்பது கேள்வியே. என்பதால்தான் எந்தத் தேர்தல் முதலில் வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாதுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் தேர்வு எதுவோ அதுவே நடக்கப்போகிறது.

எப்படியிருந்தாலும் 2024 தேர்தல் ஆண்டாக அமையும் என்று நம்பிக்கையாகச் சொல்ல முடியும். இலங்கைத் தேர்தல் ஆணையகமும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் – அதாவது ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானம் எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பொறுத்துள்ள சூழலில்தான் – இலங்கையின் அரசியற் செல்வழி அமையப்போகிறது. அதை மீறிச் செயற்படக் கூடிய நிகராற்றல் வேறெவரிடத்திலும் இல்லை. இதுதான் உண்மை நிலவரம். கவலையும் கூட.

இதற்குள் அவரவர் தமக்கேற்ற விதத்தில் தம்மைத் தயார்ப்படுத்தத் தொடங்கியுள்ளனர். “எந்தத் தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு பொதுஜன பெரமுன தயார்” என்று முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜனபெரமுனவின் தலைமைச் சக்தியுமாகிய மகிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

இருந்தாலும் கடுமையான குழப்பத்தில் இருப்பது, ராஜபக்ஸக்களின் பொதுஜன பெரமுனவாகும். முதலில் பாராளுமன்றத் தேர்தலையா அல்லது ஜனாதிபதித் தேர்தலையா எதிர்கொள்வது என்ற பதட்டத்தில் உள்ளது பெரமுன. ஜனாதிபதித் தேர்தல் என்றால் அதற்கு யாரை நிறுத்தலாம் என்ற குழப்பம் அதற்குள் நீடிக்கிறது. ராஜபக்ஸக்களின் கனவு நாயகன் நாமல் ராஜபக்ஸவை நிறுத்தலாம் என ஆரம்பத்தில் பேச்சடிபட்டது. பிறகு பஸில் ராஜபக்ஸவின் பெயரடிபட்டது. இப்போது அவர்கள் ரணிலையே நிறுத்தினால் என்ன என்று யோசிப்பாகச் சொல்லப்படுகிறது.

அடுத்ததாக உள்ள ஐ.தே.கவின் ஒரே தெரிவு ரணில் விக்கிரமசிங்கதான். அதற்குள் வேறு கவர்ச்சிகரமான ஆட்களில்லை. ஆனால் அதற்கு ரணில் தயாரா என்று தெரியவில்லை இன்னும். தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வதற்கு இன்னும் ஒரு நீண்ட கால அவகாசம் தேவைப்படுவதால் பெரமுனவினரும் (ராஜபக்கஸவினரும்) ரணிலையே விரும்புவதால் சிலவேளை இரு தரப்பின் வேட்பாளராக ரணில் போட்டியிடக் கூடும் – நிறுத்தப்படக் கூடும்.

இதற்குள் (இலங்கையின் தற்போதைய கையறு நிலையில்) தம்மை நிலை நிறுத்திக் கொள்ளலாம் என்று சிந்திக்கிறது தேசிய மக்கள் சக்தி என்கிற (மக்கள் விடுதலை முன்னணி) ஜே.வி.பி. அதற்காக அது தமிழ்ப்பரப்பிலும் தன்னுடைய செல்வாக்கு மண்டலத்தை விரிக்கப்பார்க்கிறது. கிளிநொச்சி தொடக்கம் கனடா வரையில் நிகழ்ந்துள்ள அநுர குமாரவின் பயணம் இதற்குச் சான்று.

ராாஜபக்ஸவினரின் மீதான கசப்புணர்வு, நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி, நிறுத்தப்படாத ஊழல், மர்மமாக மேற்கொள்ளப்படும் ரணில் விக்கிரமசிங்கவின் அதிகார அரசியல் போன்றவற்றுக்கு மாற்றாகத் தம்மை நிறுத்தி விடலாம் என்று ஜே.வி.பி சிந்திக்கிறது. இதற்கு அதனுடைய கவர்ச்சிகரமான தலைவரான அநுர குமார திஸநாயக்கவை நிறுத்தப் பார்க்கிறது.

இதற்கெல்லாம் அப்பால் ஐக்கிய மக்கள் சக்தி என்ற சஜித் பிரேமதாசவின் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணி சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்குத் தயாராகியுள்ளது. இதற்கான உடன்படிக்கைகள் கூடச் செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைக்கின்றன.

இந்த நான்கு தரப்பின் மூன்று வேட்பாளர்களும் புதியனவற்றை இலங்கைத்தீவுக்குத் தருவார்கள் என்று நம்புவதற்கொன்றுமில்லை. ஜே.வி.பியிடமிருந்து சிறிய அளவில் மாற்றங்கள் ஏதும் நிகழலாம். அதுகூட இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நிகழச் சாத்தியமில்லை. ஏனென்றால் அதற்கான இடம் ஜே.வி.பியின் இதயத்திலும் இல்லை. மூளையிலும் இல்லை. அதனுடைய கற்பனை வேறு விதமானது. இனவாதத்திலிருந்து மீண்டு விடாத சீர்திருத்தத்தையே அது கொண்டுள்ளது. மெய்யான மாற்றத்தை அல்ல. மாற்றம் போன்ற தோற்றத்தை.

ஆனால், சஜித், ரணில், ராஜபக்ஸவினரை விட வரலாறு அநுரகுமார விடம் அதிகமாக எதிர்பார்க்கிறது. வரலாற்றுச் சூழலும் அவருக்கு (தேசிய மக்கள் சக்திக்கு) வாய்ப்பாக உள்ளது. ஆனால் அதைப் புரிந்து கொண்டு சரியாகச் செயற்படுவதற்கு (துணிவாக முடிவெடுப்பதற்கு) அநுரகுமாரவும் தயாரில்லை. அவருடைய தேசிய மக்கள் சக்தியும் தயாராக இல்லை.

சஜித் பிரேமதாச தன்னை மிகத் தெளிவாகவே நிரூபித்து விட்டார். இனப்பிரச்சினைக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் எந்தப் பெரிய நன்மைகளையும் அளிக்கக் கூடிய வல்லமை எதுவும் தன்னிடமில்லை என. அவர் முல்லைத்தீவு – முருகண்டிப் பகுதியில் அமைத்த முழுமையடையாத  வீடுகள் இதற்குச் சாட்சியம். எந்தத் தீர்மானத்தையும்

ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஆனால் அவர்தான் மீட்பரைப்போலத் தோற்றம் காட்டிக் கொண்டிருப்பவர். அவரைக் கடந்து சிந்திக்கக் கூடிய – செயற்படக் கூடியவர் யாராவது வந்தால்தான் இலங்கையில் மாற்றம் நிகழும். அது அரசியல், பொருளாதாரம் எனச் சகல தளங்களிலுமாக இருக்கும்.

ஆனால் அப்படியான மூளையும் நல்லிதயமும் உள்ள எவரையும் அண்மையில் காண முடியவில்லை.

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதைப்போல, யாரும் எங்கிருந்தும் களமிறங்கலாம். அல்லது களமிறக்கப்படலாம். அப்படித்தான் முன்னர் எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் சந்திரிகா குமாரதுங்க களமிறக்கப்பட்டார். 2010 இல் யாருமே எதிர்பாராத வகையில் சரத் பொன்சேகா நிறுத்தப்பட்டார். ஒரு இராணுவத்தளபதி ஜனாதிபதி வேட்பாளரா என்று பலரும் புருவத்தை உயர்த்தி, முகத்தைச் சுழித்தனர். ஆனால், சரத் பொன்சேகா ஐம்பது லட்சம் வாக்குகளைப் பெற்றார்.

அதற்குப் பிறகு 2015 இல் கோட்டபாய ராஜபக்ஸ கூட அப்படியான ஒரு தெரிவினால் நிறுத்தப்பட்டவரே. உண்மையில் தான் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவேன், அதில் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவேன், அந்த வெற்றியின் ருசியை அனுபவிக்க முன்பு பதவியிலிருந்து அவ்வளவு விரைவாக விரட்டப்படுவேன் என்று கோட்டபாய சிந்தித்திருக்கவே மாட்டார். அவ்வளவும் நடந்து முடிந்தன.

ஆகவே இவற்றைப்போல எதிர்பாராத விதமாக நம்முடைய அவதானத்துக்கு வெளியிலிருந்து வேறு யாரும் கூடப் புதிதாக களமிறக்கப்படலாம். அதற்கான வாய்ப்புகளும் உண்டு.

ஏனென்றால் இலங்கை அரசியல், அண்மைய ஆண்டுகளில் இலங்கையர்களால் தீர்மானிக்கப்படும் நிலையிலிருந்து விலகிப் பிற சக்திகளால் தீர்மானிக்கப்படுவதாக மாறியுள்ளது.  குறிப்பாக, இந்தியா, சீனா, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் ஆகியன இதில் முழுதாக ஈடுபடுகின்றன. இவற்றின் சதுரங்க ஆட்டத்தின் விளைவுகளே இன்றைய இலங்கை, இன்றையை ஆட்சி, இன்றைய ஜனாதிபதி, இலங்கையில் உலக வங்கி உள்பட அனைத்தும்.

இதனுடைய தொடர்ச்சியாகவே இனிவரும் இலங்கையும் இருக்கும். அதற்கமைவாகவே ஆட்சியும் ஆட்சித் தலைவர்களும் தெரிவு செய்யப்படுவர். இந்தத் தரப்புகளின் விருப்பத்துக்கு மாறான தலைமைகள் அதிகாரத்துக்கு வந்தால் ராஜபக்ஸக்கள் எப்படி தூர விலக்கப்பட்டனரோ அவ்விதம் விலக்கப்படுவர். ஆகவே இங்கே தேர்தல், ஜனநாயகத் தெரிவு என்பதெல்லாம் வெறும் கனவே!

இந்த யதார்த்தத்தை உணராமல், யதார்த்தத்துக்கு வெகு தொலைவில் நிற்கிறது தமிழ்த் தேசியத் தரப்பு. அது எப்போதையும்போல ஜனாதிபதித் தேர்தலிலும் தவறைச் செய்யவே முனைகிறது. கடந்த 11.03.2024 இல் தமிழ்த் தேசியத் தரப்பினர் யாழ்ப்பாணத்தில் கூடி ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த்தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதைப் பற்றி யோசித்திருக்கின்றனர். இதன் காணொளியும் Yu tupe காணக்கிடைக்கிறது. அதைப் பார்த்தபோது “ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது” என்ற தமிழ்ப்பழமொழிதான் நினைவுக்கு வந்தது.

இந்த மாதிரியான உணர்ச்சிகரமான எதிர்மறைச் சிந்தனைகளால்  தமிழ்ச்சமூகம் மிகப் பெரிய விலையைக் கொடுத்துள்ளது. குறிப்பாக சமானிய மக்கள்.

இலங்கைத்தீவின் அரசியல் யதார்த்தத்தை இன்னும் புரிந்து கொள்ளாத – புரிந்து கொள்ள விரும்பாதவர்களின் கோமாளி விளையாட்டு அது. இதனுடைய விபரீதம் சாதாரணமானதல்ல. மேலும் சிங்களப் பேரினவாதத்தைக் கூர்மைப்படுத்தும் முட்டாள்தனமான யோசனை அது.

புதிதாகச் சிந்திக்க முடியாதவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. வரலாற்றிலிருந்தும் சொந்த அனுபவங்களிலிருந்தும் கூட எதையும் கற்றுக் கொள்ள முடியாதவர்களாக இவர்கள் இருக்கிறார்கள் என்பது எவ்வளவு துயரமானது!

தமிழ் வேட்பாளர் என்பது ஒன்றும் புதியதல்ல. முன்னர் குமார் பொன்னம்பலம் அப்படி நின்றார். பிறகு சிவாஜிலிங்கம். தமிழ் வாக்குகளின்றியே ஒருவர் ஜனாதிபதியாக வரமுடியும் என்பதற்கு கோட்டபாய ராஜபக்ஸ உதாரணம். எந்த வாக்குகளுமின்றியே ஒருவர் ஜனாதிபதியாக முடியும் என்பதற்கு ரணில் விக்கிரமசிங்க எளிய சான்று. 

இந்த நிலையிற்தான் தமிழ் வேட்பாளர் பற்றிய சிந்தனை இருக்கிறது. குறைந்த பட்சம் மலையக, முஸ்லிம் மக்களை உள்ளடக்கிய தமிழ் பேசும் தரப்பிலிருந்து ஒரு வேட்பாளர் என்று சிந்தித்தாற் கூடப் பரவாயில்லை.

ஆக மொத்தத்தில் தேர்தலுக்கு முன்பே தேர்தற் களம் சேற்றுக் குழியாகக் கிடக்கிறது. இதற்குள் முத்தெடுப்பது எப்படி இலங்கை மக்கள்?



https://arangamnews.com/?p=10617

 

 

மோடியும் கச்சதீவும்

1 week 2 days ago
மோடியும் கச்சதீவும்
மோடியும் கச்சதீவும் 

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

   இந்தியா கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்த பிறகு கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் அது தொடர்பாக சர்ச்சை  கிளப்பிய முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.  அதுவும் பத்து வருடங்களாக பதவியில் இருந்துவரும் அவர் இதுகாலவரை எதுவும் பேசாமல் இருந்துவிட்டு தற்போது பிரச்சினையை கிளப்புவது கச்சதீவை மீண்டும் இந்தியா வசமாக்குவதற்காக அல்ல, எதிர்வரும் லோக்சபா தேர்தலில் தனது பாரதிய ஜனதா கட்சிக்கு  தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை பெறுலாம்  என்ற எதிர்பார்ப்பிலேயே என்பதை  புரிந்துகொள்வதற்கு  அரசியல் ஞானம் தேவையில்லை.

  வடஇந்தியாவில் அமோகமான மக்கள் செல்வாக்குடைய தலைவராக இருந்துவரும் மோடி மூன்றாவது தடவையாகவும் பிரதமராக வருவார் என்று உறுதியாக  நம்பப்படுகிறது. அவ்வாறு நடந்தால் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ச்சியாக மூன்று தடவைகள் பிரதமராக பதவிக்கு வருபவர் என்ற பெருமையை அவர் தனதாக்கிக்கொள்வார்.

ஆனால், அவரின் பாரதிய ஜனதா  தென்னிந்திய மாநிலங்களில் குறிப்பாக, சுமார் ஏழு தசாப்தங்களாக மாறி மாறி இரு பெரிய திராவிட இயக்கக் கட்சிகளின் ஆட்சியில் இருந்துவரும் தமிழ்நாட்டில் கணக்கில்  எடுக்கத்தக்க ஆதரவைப் பெறமுடியாமல் இருக்கிறது. இது அவருக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கிறது.

   நீண்டகாலமாக கூட்டணி சேர்ந்து இயங்கிவரும் திராவிட முன்னேற்ற கழகத்தையும் காங்கிரஸ்  கட்சியையும் தேர்தல் பிரசாரங்களில் ஒருங்கே  தாக்குவதற்கு மோடியும் கட்சியும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில்  உணர்ச்சியைக் கிளறக்கூடிய கச்சதீவு பிரச்சினையை  பயன்படுத்த முனைந்து நிற்பதே தற்போதைய சர்ச்சைக்கு  காரணமாகும். 

  எதிர்க்கட்சியை தாக்குவதற்கு  மோடி கச்சதீவு பிரச்சினையை  பயன்படுத்துவது  இதுதான்  முதற்தடவை அல்ல. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையொன்றில் அவர் “தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள கச்சதீவை இன்னொரு நாட்டுக்கு கொடுத்து விட்டார்கள். இந்திரா காந்தியின் தலைமைத்துவத்தின் கீழ்தான் அது நடந்தது….. அந்தத் தீவு பாரதமாதாவின் ஒரு பகுதியாக அல்லவா  இருந்தது? ” என்று  குறிப்பிட்டார்.

 அவரது அந்தப் பேச்சு  தற்போது மூண்டிருப்பதைப்  போன்று ஊடகங்களின் அதீத கவனிப்புடன் கூடியதாக பெரும் சர்ச்சையை உருவாக்கவில்லை. லோக்சபா தேர்தல் பிரசாரங்களின் சூடு இயல்பாகவே தற்போதைய சர்ச்சை மீது கவனத்தை பெரிதும் திருப்பியிருக்கிறது.

   கச்சதீவை முன்னாள்  இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் காங்கிரஸ் அரசாங்கம் இலங்கைக்கு கையளிக்க எடுத்த தீர்மானம் தொடர்பில் விபரங்களை அறிவதற்கு பாரதிய ஜனதாவின் தமிழ்நாடு தலைவர் குப்புசாமி  அண்ணாமலை தகவலைப் பெறுவதற்கான உரிமையின்( Right to Information)  அடிப்படையில் வெளியுறவு அமைச்சை நாடியது ஒன்று தற்செயலானது அல்ல. 

  “இந்திய அரசாங்கம் 1974 ஆம் ஆண்டில் கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்தது. அந்தத் தீவு பாரதத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தமிழ்நாட்டுக்கு வெளியில் இருப்பவர்களும் விளங்கிக் கொள்வார்கள். ஆயிரக்கக்கான வருடங்களாக தமிழ்நாட்டு மீனவர்கள் எந்தவித இடையூறும் இன்றி  மீன்பிடிக்கும் உரிமையைக் கொண்டிருந்த கச்சதீவு  தமிழ்நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். அது சூட்சுமமான முறையில் இலங்கைக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. ஏன் அவ்வாறு நடந்தது? அதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா? ஆர்வமிகுதி காரணமாக அந்த காலப்பகுதியின் முக்கியமான ஆவணங்களை தந்துதவுமாறு நான் வெளியுறவு அமைச்சை அணுகினேன்” என்று அண்ணாமலை கூறினார்.

பாரதிய ஜனதா உயர்மட்டத்தின் முழுமையான அனுசரணையுடன்தான் அண்ணாமலை தகவலைக் கோரினார் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன்  வெளியுறவு அமைச்சிடம் இருந்து ஆவணங்கள் கிடைக்கப் பெற்றதும் அவர் தனக்கு நெருக்கமான ஊடகங்களுடன் அவற்றைப்  பகிர்ந்துகொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுத் தொடர்பாடலுக்கு பொறுப்பான பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே இவ்வாறு பாரதிய ஜனதா செய்திருக்கிறது என்று குற்றஞ்சாட்டினார்.

  “தமிழ்நாட்டில் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் ஒரு தந்திரோபாயமாகவே பாரதிய ஜனதா தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்தி வெளியுறவு அமைச்சிடம் கச்சதீவு விவகாரம் தொடர்பில் விபரங்களைப் பெற விண்ணப்பித்தது. மக்கள் எதிர்நோக்கும் எரியும்  பிரச்சினைகள் தொடர்பில் தகவல்களை அறிவதற்கு செய்யப்பட்டிருக்கும் இலட்சக்கணக்கான  விண்ணப்பங்கள் அலட்சியம் செய்யப்பட்டு  அல்லது நிராகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த விண்ணப்பம் அதிமுக்கியத்துவம் கொடுத்துக்  கவனிக்கப்பட்டு பதில் வழங்கப்பட்டிருக்கிறது. பாரதிய ஜனதாவின் தமிழ்நாட்டு தலைவர் தனக்கு கிடைத்த பதிலை மிகவும் வசதியாகவே தனக்கு  நெருக்கமான ஊடகங்களுடன் பகிர்ந்துகொண்டார். பிரதமர் மோடி உடனடியாகவே அதைப் பெரிதுபடுத்திச் சர்ச்சையாக்கிவிட்டார். இது கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறும் ஆட்டநிர்ணயச்சதி (Match fixing ) போன்று இருக்கிறது ” என்று ரமேஷ் கூறினார். 

 அண்ணாமலைக்கு வெளியுறவு அமைச்சிடம் இருந்து கிடைத்த ஆவணங்கள் தொடர்பில்  கடந்தவாரம் ரைம்ஸ் ஒஃப் இந்தியா பத்திரிகையில் வெளியான விரிவான செய்தியை அடுத்தே பிரதமர் மோடி முதலில் ‘ எக்ஸ் ‘ சமூக வலைத்தளத்தில் பதிவைச் செய்தார்.

  இந்திரா காந்தி மக்களின் உணர்வுகளை மதிக்காமல் கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்தார்; இலங்கையுடன் இந்திய அரசாங்கம் அன்று நடத்திய பேச்சுவார்த்தைகள்  தொடர்பில்  தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கலைஞர் மு. கருணாநிதிக்கு முழுமையாக தெரியப்படுத்தப்பட்டது ; கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்படுவதை வெளிப்படையாக கருணாநிதி எதிர்த்தாலும், முறைமுகமாக மத்திய அரசாங்கத்துடன் இணங்கிப்போனார் என்பனவே வெளியுறவு அமைச்சு வழங்கிய பதிலைப் பயன்படுத்தி காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு எதிராக செய்யப்படும் பிரசாரத்தின் முக்கிய அம்சங்களாகும்.

  மேலும் காங்கிரஸ் ஒருபோதுமே இந்தியாவின் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பில்  அக்கறையுடன் செயற்பட்டதில்லை என்ற தனது  குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக பிரதமர்  ஜவஹர்லால்  நேரு கச்சதீவு குறித்து தெரிவித்த கருத்தையும் மோடி சுட்டிக் காட்டியிருக்கிறார்.

 ” அந்த சிறியதொரு தீவுக்கு எந்த வகையிலும் நான் முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லை. அதன் மீதான எமது உரிமைக் கோரிக்கையை கைவிடுவதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. இந்த விவகாரம் காலவரையறையின்றி நீடிப்பதையும் பாராளுமன்றத்தில் பிரச்சினை கிளப்பப்படுவதையும் நான் விரும்பவில்லை ”  என்று 1961 மே 10  நேரு குறிப்பிட்டதாக  வெளியுறவு அமைச்சின் பதிலில் தெரிவிக்கப் பட்டிருப்பதாக  ரைம்ஸ் ஒஃப் இந்தியா செய்தி கூறுகிறது.

” புதிய தகவல்கள்  மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் காங்கிரஸ் எவ்வாறு கச்சதீவை விட்டுக் கொடுத்தது என்பதை வெளிக்காட்டுகின்றன. அவை அதிர்ச்சியை தருகின்றன. திடுக்கிட வைக்கின்றன. இது ஒவ்வொரு இந்தியனையும் ஆத்திரமடையச் செய்திருக்கிறது. காங்கிரஸை நாம் ஒருபோதும் நம்பமுடியாது என்ற மக்களின் எண்ணத்தை இது மீண்டும் உறுதிப்படு்த்துகிறது. இந்தியாவின் ஐக்கியம், ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்தும் முறையிலேயே 75 வருடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் செயற்பட்டு வந்திருக்கிறது” என்று மார்ச் 31 மோடி ‘ எக்ஸ் ‘ பதிவில் கூறினார்.

  ஏப்ரில் முதலாம் திகதி செய்த இரண்டாவது பதிவில் ரைம்ஸ் ஒஃப் இந்தியாவின் இரண்டாவது செய்தி ஒன்றைப் பகிர்ந்துகொண்ட இந்திய பிரதமர், ஆரவாரப் பேச்சைத் தவிர திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்கு  எதையும் செய்யவில்லை. கச்சதீவு விவகாரம் தொடர்பில் வெளியாகும் புதிய விபரங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டை வேடத்தை முற்றுமுழுதாக அம்பலப்படுத்துகின்றன. காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமும் குடும்பக்கட்சிகள். அவற்றுக்கு தங்களது சொந்த புதல்வர்கள், புதல்விகளின் முனனேற்றத்தில் மாத்திரமே அக்கறை. குடும்பங்களின் மேம்பாட்டுக்கே அவர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள் என்று குறிப்பிட்டார்.

 அதே தினம்  இந்த பிரச்சினை குறித்து புதுடில்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்கள் மகாநாட்டில் கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கச்சதீவு விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிவதற்கான உரிமை மக்களுக்கு இருக்கிறது என்றும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் கச்சதீவு இந்திய பிராந்தியத்திற்குள் வரப்போவதில்லை என்பதை முதலமைச்சர் கருணாநிதி நன்கு அறிந்திருந்தார் என்றும் குறிப்பிட்டார். 

  ‘ இந்திரா காந்தி அரசாங்கம் இலங்கையுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விபரங்கள் அவ்வப்போது  கருணாநிதிக்கு கூறப்பட்டுவந்தன. 1973 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெற்ற வெளியுறவுச் செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ஒரு வருடம் கழித்து 1974 ஜூனில் முதலமைச்சர் கருணாநிதிக்கு வெளியுறவுச் செயலாளர் கெவால் சிங்  கச்சதீவுக்கு உரிமைகோருவதைக் கைவிடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து கூறினார்.

 ‘ அந்த தீர்மானத்தை இரு வருடங்களுக்கு தாமதிக்க முடியாதா என்று கெவால்சிங்கிடம் கேட்ட கருணாநிதி அரசியல் காரணங்களுக்காக  உடன்படிக்கைக்கு ஆதரவான தீர்மானம் ஒன்றை தன்னால் எடுக்கமுடியாது.  ஆனால் பெரிய எதிர்ப்புகள் கிளம்பாமல் பார்த்துக்கொள்ள முயற்சிப்பதாக கூறினார்’ என்று வெளியுறவு அமைச்சின் ஆவணங்களில் கூறப்பட்டிருப்பதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

  உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்வது குறித்து புதுடில்லி சிந்திக்கிறதா? இலங்கையுடன் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா ? என்று செய்தியாளர்கள் ஜெய்சங்கரிடம் திரும்பத்திரும்ப கேட்டபோது அவர், ” அதுவல்ல முக்கியமான பிரச்சினை. கச்சதீவு விவகாரம்  நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது ” என்று கூறி  நேரடியாக பதிலளிப்பதைத் தவிர்த்துக்கொண்டார். ஆனால், கச்சதீவு பிரச்சினை  அரை நூற்றாண்டுக்கு முன்னர் தீர்த்துவைக்கப்பட்ட ஒன்று என்று கூறப்படுவதை அவர் திட்டவட்டமாக நிராகரித்தார்.

  கச்சதீவை இலங்கைக்கு இந்திரா காந்தி விட்டுக் கொடுத்ததன் விளைவாகவே இந்திய மீனவர்கள் நெருக்கடியை எதிர்நோக்கவேண்டியிருக்கிறது என்பதை வலியுறுத்துவதிலேயே ஜெய்சங்கர் கூடுதல் அக்கறை காட்டினர். “கடந்த இருபது வருடங்களில் 6,184 இந்திய மீனவர்கள் இலங்கையினால் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். 1175 இந்திய மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இதுவே நாம் ஆராய்கின்ற பிரச்சினையின் பின்னணி. காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமும் கச்சதீவு பிரச்சினையில் தங்களுக்கு பொறுப்பு எதுவும் இல்லை என்பது போன்று நடந்து கொள்கின்றன” என்று அவர் கூறினார். 

   பாரதிய ஜனதாவின் பல முக்கிய தலைவர்களும் இந்த பிரச்சினை குறித்து காங்கிரஸ் கட்சியையும் திராவிட முன்னேற்றக் கழகத்யைும் கடுமையாக விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இது இலங்கைக்கும்  இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு  உறவுகளைப் பாதிக்கக்கூடிய ஆபத்தைக் கொண்ட பிரச்சினை என்பதைப் பற்றிய கரிசனை எதுவும் இல்லாமல் வெறுமனே தேர்தல் அரசியல் நலன்களை நோக்கமாகக் கொண்ட கருத்துக்களாகவே அமைந்திருக்கின்றன.

 ” பந்து இப்போது மத்திய அரசாங்கத்தின் பக்கத்திலேயே இருக்கிறது. சாத்தியமான சகல தீர்வுகள் குறித்தும் பரிசீலிக்கப்படும். தமிழ்  மீனவர்களைப் பாதுகாப்பது மாத்திரமே பாரதிய ஜனதாவின் நோக்கம். பிரதமர் மோடியும் வெளியுறவு அமைச்சரும் இந்த விடயத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார்கள். கச்சதீவு இலங்கைக்கு சட்டவிரோதமாகவே கையளிக்கப்பட்டது. அந்த தீவை மீட்டெடுப்பதற்கு சாத்தியமான சகல நடவடிக்கைகளையும் மத்திய அரசாங்கம் எடுக்கின்றது” என்று கடந்த வாரம் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

மோடி கிளப்பியிருக்கும் சர்ச்சைக்கு ‘ எக்ஸ் ‘ சமூக வலைத்தளத்தில் உடனடியாகவே  பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் அவர்களே, உங்களது தவறான ஆட்சியின் பத்தாவது வருடத்தில் தீடீரென்று உறக்கத்தில் இருந்து எழுந்தவர் போன்று இந்தியாவின் ஆட்புல ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளைக் கிளப்புகிறீர்கள். தேர்தல் தான் அதற்கு காரணம் போலும். என்ன செய்வது என்று தெரியாமல் நீங்கள் தடுமாற்றத்தில் இருப்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

  மோடி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு பங்களாதேஷுடன் செய்துகொண்ட நில எல்லை உடன்படிக்கையுடன் கச்சதீவு உடன்படிக்கையை ஒப்பிட்ட கார்கே “உங்களது அரசாங்கத்தின் கீழ் ஒரு நட்புறவு அடையாளமாக இந்தியாவின் 111 நிலப்பகுதிகளை விட்டுக்கொடுத்து பங்களாதேஷிடமிருந்து 55 நிலப்பகுதிகளை மாத்திரம் இந்தியாவுடன் சேர்த்துக்கொண்டீர்கள். அப்போது நீங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட எல்லை உடன்படிக்கை நிலப்பகுதிகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு செயல் அல்ல,  இதயங்களின் சந்திப்பு பற்றியது என்று கூறினீர்கள். அதே போன்றே கச்சதீவு உடன்படிக்கையும் இன்னொரு அயல்நாடான இலங்கையுடன் நட்புறவின் அடிப்படையில் செய்து கொள்ளப்பட்டதேயாகும்” என்று மோடிக்கு சுட்டிக்காட்டினார்.

  “தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவிருப்பதற்கு முன்னதாக உணர்ச்சிபூர்வமான பிரச்சினையை கிளப்பியிருக்கிறீர்கள். ஆனால், கச்சதீவு தொடர்பான வழக்கில் 2014 ஆம் ஆண்டில் உங்களது சொந்த அரசாங்கத்தின் சட்டமா அதிபர் ஸ்ரீ முகுல் றோராக்கி உயர்நீதிமன்றத்தில் கூறியதை மறந்துவிட்டீர்களா? ‘ 1974 உடன்படிக்கையின் மூலமே கச்சதீவு இலங்கை வசமானது…. அதை எவ்வாறு திருப்பியெடுக்கமுடியும்?  கச்சதீவை மீளப் பெறவிரும்பினால், நீங்கள் போருக்கு போகவேண்டியிருக்கும் ‘ என்று அவர் கூறியிருந்தார். பிரதமர் அவர்களே கச்சதீவை மீட்டெடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வைக்காண உங்களது அரசாங்கம் ஏதாவது நடவடிக்கையை எடுத்ததா என்பதை நீங்கள் கூறவேண்டும்” என்று ‘ எக்ஸ் ‘ மூலமாக மோடியை நோக்கி கேட்டிருக்கிறார் கார்கே.

  காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களும் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து வருகிறார்கள். ஆனால் சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்ற நேரு — காந்தி குடும்ப தலைவர்கள் இதுவரையில் எந்த கருத்தையும் கூறவில்லை.

 கச்சதீவு உடன்படிக்கையை நியாயப்படுத்திய ஜெய்ராம் ரமேஷ், “கச்சதீவு இலங்கையின் ஒரு பகுதியாக மாறிய அதே 1974 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி —  சிறிமா பண்டாரநாயக்க உடன்படிக்கை இலங்கையில் இருந்து 6 இலட்சம் தமிழ் மக்கள் இந்தியாவுக்கு வருவதற்கு அனுமதித்தது. அந்த நடவடிக்கை மூலமாக பிரதமர் இந்திரா காந்தி அதுகாலவரை நாடற்றவர்களாக இருந்த 6 இலட்சம் மக்களின் மனித உரிமைகளையும் கண்ணியத்தையும் காப்பாற்றினார் ” என்று கூறினார்.

  மோடி அரசாங்கம் பங்களாதேஷுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு வசதியாக நில எல்லை சட்டத்தைக் கொண்டுவந்தபோது அந்த உடன்படிக்கையின் விளைவாக இந்தியா 10,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை  இழக்கப்போகின்ற போதிலும், மனிதாபிமான தேவையை ஏற்றுக்கொண்டு காங்கிரஸ் சிறுபிள்ளைத் தனமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்காமல் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் ஆதரவை வழங்கியது என்றும் ரமேஷ் குறிப்பிட்டார்.

  இலங்கை தரப்பின் பிரதிபலிப்பு :

  கச்சதீவு பிரச்சினை பாரதிய ஜனதாவினால் தேர்தல் பிரசாரப் பொருளாக்கப்பட்டு  விட்ட நிலையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளில் அதனால் ஏற்படக்கூடிய தாக்கம் முக்கிய கவனத்துக் குரியதாகும். 

  மோடி சர்ச்சையைக் கிளப்பி ஒரு வாரகாலம் கடந்துவிட்ட நிலையில் இலங்கை அரசாங்கம் எந்தவிதமான உத்தியோகபூர்வ பிரதிபலிப்பையும் வெளியிடாமல் மிகுந்த இராஜதந்திர விவேகத்துடன்  நடந்துகொள்கிறது. வெளியுறவு அமைச்சர் அலி சப்பரி, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீர்விநியோக அமைச்சர் ஜீவன் தொண்டமான் போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். அமைச்சரவை பேச்சாளரான பந்துல குணவர்தனவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது இந்தியாவில் தேர்தல் நடக்கிறது என்று மாத்திரம் பதிலளித்ததா செய்தி வெளியானது.

  ஆனால், இரு நாடுகளினதும் முக்கியமான ஆங்கிலப் பத்திரிகைகள் ஆசிரிய தலையங்கங்கள் மூலமாக வெளியிட்ட கருத்துக்கள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

  ” லோக்சபா தேர்தலை முன்னிட்டு பிரதானமாக  உள்நாட்டுப் பாவனையை நோக்காகக்கொண்டு இந்தியாவில் அரசியல் விவாதம் மூண்டிருக்கின்ற போதிலும், கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்த உடன்படிக்கையை மாற்றியமைக்கும் நோக்கம் இந்தியாவுக்கு இல்லை” என்று டெயிலி மிறர் அதன் ஆசிரிய தலையங்கத்தில் கூறியிருக்கிறது.

  இந்திய உயர்மட்ட தலைவர்களை சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளாக அன்றி அறிவார்ந்த அரசியல்ஞானிகளாகப் பார்க்கவே இலங்கையர்கள் விரும்புகிறார்கள். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூட இராஜதந்திரப் பக்குவத்தை கைவிட்டு தமிழ்நாட்டில் சொற்ப வாக்குகளுக்காக பிரதமர் மோடியுடன் கைகோர்த்து நிற்பது பெரும் ஏமாற்றத்தை தருகிறது என்று டெயிலி மிறர் எழுதியிருக்கிறது.

 ” 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு குறிப்பாக கொவிட்  பெருந்தொற்று / பொருளாதார நெருக்கடி காலப் பகுதிகளில் இலங்கையில் நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கு இந்தியா அயராது எடுத்துவந்த முயற்சிகளை பாதிக்கக்கூடிய ஆபத்தை கச்சதீவுச் சர்ச்சை கொண்டிருக்கிறது. மாலைதீவில் இந்தியா கண்டிருக்கும் பின்னடைவுக்கு பிறகு தேர்தல் நலனுக்காக குறுகிய நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் இந்த பிரசாரம் அனாவசியமானது. பாக்கு நீரிணைக்கு இடையில் உறவுகளை பலப்படுத்துவதற்கு இது உதவாது ” என்று த மோர்ணிங் பத்திரிகை எழுதியிருக்கிறது.

  பாக்குநீரிணைக்கு இடையில் நல்லெண்ண உறவுகளில் ஏற்படக்கூடிய பாதிப்பை தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்துவதற்கு பல வல்லாதிக்க நாடுகள் நாட்டம் காட்டும் என்பது இந்திய அரசாங்கத்துக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்றும் அந்த பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

 ” தமிழ்நாடடில் உணர்ச்சிபூர்வமானதாக இருந்துவரும் ஒரு பிரச்சினையை இந்தியப் பிரதமர் கிளப்பியிருப்பது வேறு பிராந்தியங்களில் நண்பர்களை தேடுவது குறித்து சிந்திக்க இலங்கையை தூண்டுவதற்கு போதுமானதாகும். இந்தியாவில் அதிகார உயர்பீடத்தில் உள்ளவர்கள் இலங்கையின் பிராந்தியத்துக்கு தொடர்ச்சியாக உரிமை கோரினால் வேறு எங்காவது பாதுகாப்பு உத்தரவாதத்தை தேடவேண்டிய நிர்பந்தம் இலங்கைக்கு ஏற்படும் ” என்று ஃபைனான்சியல் ரைம்ஸ் ஆசிரிய தலையங்கத்தில் எழுதியிருக்கிறது.

 இந்திய பத்திரிகைகள்

  ” பிரதமரின் கருத்துக்கள் துரதிர்ஷ்டவசமானவை.குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக கூறப்படுபவை.பல வருடங்களுக்கு முன்னர் தீர்க்கப்பட்டுவிட்ட ஒரு பிரச்சினையை மீண்டும் கிளறுவது மிகவும் தவறானது. விவேகமானதல்ல. மக்களின் உணர்ச்சிகளைக் கிளறக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்களைக் கூறும்போது பிரதமர் பெருமளவுக்கு பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் ” என்று டெக்கான் ஹெரால்ட் கூறியிருக்கிறது.

  இலங்கையுடனான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பிரச்சினையை அரசியல் அனுகூலத்துக்கு பயன்படுத்த முனைந்திருப்பதன் மூலம் பிரதமர் மோடி ஆரோக்கியமற்ற ஒரு போக்கை தொடக்கி வைத்திருக்கிறார் என்று  ‘ த இந்து ‘ பத்திரிகை குறிப்பிட்ட அதேவேளை, அரசியல் எதிரிகளுக்கு மேலாக புள்ளிகளை எடுப்பதற்கு பாரதிய ஜனதா தலைமைத்துவம் கச்சதீவு பிரச்சினையை கிளப்புவது பெரும் குழப்பத்தை தருகிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியிருக்கிறது.

  வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்களை மறுதலித்திருக்கும் இந்துஸ்தான் ரைம்ஸ் இந்திய மீனவர்களின் பாதுகாப்புப் பிரச்சினைக்கும் கச்சதீவுக்கும் தொடர்பு கிடையாது என்று கூறியிருக்கிறது.

  பழைய பிரச்சினைகளை கிளறாமல் இருப்பதில் தலைவர்கள் முதிர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். தேர்தல் அனுகூலத்துக்காக நட்பு நாடொன்றுடனான உறவுகளை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது. பெய்ஜங் அவதானித்துக் கொண்டிருக்கிறது  என்பதை மறந்துவிடக் கூடாது என்று மோடிக்கும் ஜெய்சங்கருக்கும் அறிவுரை கூறுவது போன்று இந்துஸ்தான் ரைம்ஸ் எழுதியிருக்கிறது.

   இந்திய இராஜதந்திரிகள்

 2004 — 2006 காலப்பகுதியில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக இருந்த நிருபமா ராவ் கருத்து தெரிவிக்கையில் தேர்தலுக்கு முன்னதாக இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் கச்சதீவு தொடர்பில் கிளம்புகின்ற சர்ச்சை தமிழ்நாட்டு அரசியலில் முக்கியமான தாக இருந்த பழைய பிரச்சினை மீண்டும் கிளப்பப்படுவதாக இலங்கையில் அர்த்தப்படுத்தப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

 நீண்டகாலத்துக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட ஒரு சர்வதேச உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்கு  இந்தியா விரும்புகிறதா? அவ்வாறு செய்வதன் மூலம் சர்வதேச அரசியலில் வழமைக்கு மாறான முன்னுதாரணம் ஒன்றை வகுக்க இந்தியா விரும்புகிறதா? என்று வெளியுறவுச் செயலாளராகவும் பதவியில் இருந்த நிருபமா ராவ் கேள்வியெழும்பினார்.

 இலங்கையில் இருந்த இன்னொரு இந்திய உயர்ஸ்தானிகரான அசோக் காந்தா ( 2009 — 2013 ) கச்சதீவு பிரச்சினை தற்போது கிளப்பப்பட்டிருப்பது இந்தியாவில் ஒரு தேர்தல் பிரச்சினை என்பதை கொழும்பு விளங்கிக்கொள்ளும் என்று குறிப்பிட்டார்.

  மீட்புக்கோரிக்கை 

 தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் கச்சதீவை இலங்கையிடம் இருந்து மீட்கவேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்து வந்திருக்கின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ( 2008) திராவிட முன்னேற்றக்கழகமும் (2013 ) இந்த விவகாரம் தொடர்பில் இந்திய உயர் நீதிமன்றத்தையும் நாடின. ஆனால், மத்திய அரசாங்கங்கள் உடன்படிக்கையை மாற்றியமைக்க முடியாது என்ற நிலைப்பாட்டையே உறுதியாக அறிவித்தன. இன்றும் புதிய தலைமைத்துவங்களின் கீழும் திராவிடக் கட்சிகள் மீட்புக் கோரிக்கையை வலியுறுத்திய வண்ணமே இருக்கின்றன.

   தற்போது பிரதமர் மோடியும் பாரதிய ஜனதாவும் தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக பெரிய வாக்கு வங்கியாக விளங்கும் மீனவர் சமூகத்தை இலக்கு வைத்து அரசியல் அனுகூலத்துக்காக திட்டமிட்டு இந்த பிரச்சினையைக் கிளப்புகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் இந்த பிரசாரத்திற்கு எடுபடக்கூடிய சாத்தியமில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினையை மாத்திரம் முன்னிலைப்படுத்தி தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை தேர்தல்களில் அந்த மாநில மக்கள் ஒருபோதும் பெரிதாக ஆதரித்ததில்லை. அதே கதியே கச்சதீவுப் பிரச்சினையை கிளப்புவதன் மூலமாக வாக்குகளைப் பெறலாம் என்ற பாரதிய ஜனதாவின் எதிர்பார்ப்புக்கும் ஏற்படும்.

 இந்திரா காந்தி காலத்தில்  கச்சதீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தமைக்காக   காங்கிரஸை மோடி குற்றஞ்சாட்டுகிறாரே தவிர தீவை மீட்டெடுக்கப்  போவதாகக் கூறவில்லையே!

 

 

https://arangamnews.com/?p=10609

லூயிகள்- ரணில் - கோத்தாபய

1 week 4 days ago

பிரெஞ்சு வரலாற்றில், 15ஆம் லூயியுடையதும் அவன் மகனான 16ஆம் லூயியுடையதும் ஆட்சியை கறுப்புப்பக்கங்கள் என்றுதான் இன்றளவும் அடையாளப்படுத்துகின்றனர். 15ஆம் லூயியுடைய ஆட்சியில் மக்கள் பசியாற்றுவதற்குப் போதுமான உணவுகள் இருக்கவில்லை. 16ஆம் லூயியோ உணவுகளை மக்களின் கண்ணில் காட்டினாலும் வரிகளால் அவர்களை வதைத்தெடுத்தான்.

மக்கள் இங்கே புல்லைத் தின்கின்றார்கள். அனுதினம் வறுமையாலும் அவல ஆட்சியாலும் வதைபட்டுச் செத்துக் கொண்டிருக்கும் நோயாளிக்கும் பிச்சைக்காரருக்கும் மன்னராயிருப்பவரை 'மாட்சிமை தங்கிய சக்கரவர்த்தி' என எவ்வாறழைப்பது? இது பிரான்ஸின் கொடுங்கோலனான 15ஆம் லூயி தொடர்பில் அக்காலக் கவிஞனொருவன் தெரிவித்த கருத்துகளாக அமைகின்றன. 'இரு கழுதைகளை அவன் ஓட்டிச் சென்றான். ஒரு கழுதை யின் முதுகில் ஓட்ஸ் தானியங்கள். இன்னொரு கழுதையின் முதுகில் உப்பு வரிச் சீட்டுகள்' என்று 16ஆம் லூயியின் கொடுங்கோன்மை பற்றிக் கட்டியம் செய்தார் கத்தோலிக்க மதகுரு ஒருவர். பிரான்ஸ் போன்று இலங்கையும் இரு லூயிக்களின் பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாகியது. இன்று செய்வதறியாது திகைக்கின்றது. அவர்களில் ஒருவர் கோத்தாபய, இன்னொருவர் ரணில்.

விடுதலைப்புலிகள் ஆயுத அளவில் மௌனிக் கச் செய்யப்பட்டதன் பின்னரான மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் சீனாவின் 'கடனாதிக்கம்' இலங்கையில் அதிகரிக்க ஆரம்பித்தது. இந்த நாடு முதலாளி களுக்கும், சீன செங்கொடியின் செல்வாக்குக்கும் ஏற்றதாக மாறிநடைபோட்டது. குருவியின் தலையில் வைத்த பனங்காயாக தகுதிக்கும்-திராணிக்கும் மீறிய கடன்சுமைகள் இலங்கைத் தீவை நெருடிக்கொண்டி ருந்தன. தொடர்ந்துவந்த கோத்தாபயவின் ஆட்சியில் இந்த நெருக்குவாரங்கள் உச்சம் பெற்றன. இலங்கை யர்களுக்கு உணவுப் பொருள்கள்கூட மறுக்கப்பட் டன. தினம்தினம் ஏதாவது ஒரு பொருள் விலையேற்றத்தைச் சந்தித்துக் கொண்டிருந்தது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் அனுதினம் அதிகரித்துச் சென்றன. கோத்தாபய ஆட்சியிலிருந்து விரட்டப்பட்ட பின்னர், தற்போது இடம்பெற்றுவரும் ரணிலின் ஆட்சியில் மக்களுக்கு உணவுப்பொருள்கள் கிடைக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், 16ஆம் லூயி காலத்தைப்போல் ‘கழுதைச் சுமைகளாக' வரிகள் வானைப் பிரித்துக்கொண்டு நிற்கின்றன.

இத்தனைக்கும் இந்த வரிச்சுமைகளை இறக்கி வைப்பதற்கு காத்திரமான திட்டங்கள் எதையும் ரணில் அரசாங்கம் எடுத்ததாகத் தெரியவில்லை. சர்வதேச நாணய நிதியம் என்ற ஒன்றே ரணில் அரசாங்கத்தின் ஒற்றைப்பிடிமானமாக இருக்கின்றது. பொருளாதார மீளெழுச்சிக்கு நாணய நிதியத்தின் தலையீடு அவசியமானது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், வரிவிதிப்புக்கு அப்பாற்பட்ட பொருளாதார ஈட்டுகையை ரணில் தரப்பு இன்னமு உறுதிப்படுத்தவில்லை. நாணய நிதியத்தின் கடன்கள் முற்றாகப் பெறப்பட்ட பின்னர், அந்தக் கடன்களை திரும்பச் செலுத்த வேண்டியதும் அவசியமே. அக் காலத்தில் இலங்கை எதைவைத்து கடன்களை அடைக்கும். வரிகள், கடன்கள் என பழைய பல்லவியே ஆரம்பமாகும். இதனால் வதைப்படப்போவது என்னமோ அப்பாவிப் பொதுமக்கள் தான்...!

(31.03.2024-உதயன் பத்திரிகை).

 

https://newuthayan.com/article/லூயிகள்-_ரணில்_-_கோத்தாபய

ஜேவிபி பதில் கூறுமா? நிலாந்தன்!

1 week 5 days ago
anura-kumara-dissanayake-700x375.jpg ஜேவிபி பதில் கூறுமா? நிலாந்தன்!

அனுரகுமார கவர்ச்சியாகப் பேசுகிறார். மேடையைத் தனது பேச்சினால் கட்டிப்போடவல்ல ஒரு பேச்சாளராக அவர் தெரிகிறார். இனப்பிரச்சினை தொடர்பாக, இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக அவர் கவர்ச்சியாகப் பேசுகின்றார். கனடாவிலும் அவர் அப்படித்தான் பேசினார். யாழ்ப்பாணத்திலும் அவர் அப்படித்தான் பேசினார். ஆனால் அவர் இதுவரை பேசிய அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. என்னவெனில், அவர் இனப்பிரச்சினையை, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை, எல்லாவற்றையும் மனிதாபிமானக் கண் கொண்டுதான் பார்க்கின்றார். மாறாக அவற்றுக்குரிய அரசியல் அடர்த்தியோடு, அரசியல் பரிமாணத்தோடு, அவற்றை விளங்கி வைத்திருக்கிறாரா என்று கேட்கத்தக்க விதத்தில்தான் இனப்பிரச்சினை தொடர்பான அவருடைய கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.

அவர் மொழிப் பிரச்சினை பற்றிப் பேசுகிறார். அதைத் தீர்க்க வேண்டும் என்று பேசுகிறார்.மரபுரிமைச் சொத்துகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பற்றிப் பேசுகிறார். அதைத் தீர்க்க வேண்டும் என்று கூறுகிறார். ஒரு காலம் தன்னுடைய சிறு பிராயத்தில் தன்னுடைய கிராமத்தில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இன பேதம் இன்றி ஒன்றாக வாழ்ந்ததைக் கூறுகிறார். சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் ஒரு மக்கள் மயப்பட்ட விடயம் அல்ல என்றும் கூற வருகிறார். இனப் பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தத்தை அவர் இன்னமும் வெளிப்படையாக உறுதியாக ஆதரிக்கும் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவில்லை.ஆனால் அதைப் பரிசீலிக்கும் ஒரு நிலைப்பாட்டுக்கு ஜேவிபி வந்துவிட்டது. இவைதான் அவர் பேசியவற்றின் சாராம்சம்.

தமிழ் லிபரல் ஜனநாயகவாதிகளுக்கு அவை உற்சாகமூட்டக்கூடிய கருத்துக்கள்.இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு புதிய வெளிச்சம் தோன்றியிருப்பதாக அவர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து பார்த்தால், அனுராவிடம் ஆழமான சில கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது.

கேள்வி ஒன்று, இலங்கைத் தீவு பல்லினத்தன்மை மிக்கது என்பதனை ஜேவிபி ஏற்றுக்கொள்கின்றதா?

ஆயின்,இரண்டாவதாக,தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஜேவிபி ஏற்று கொள்கின்றதா?

அவ்வாறு தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டால், ஒரு தேசிய இனத்திற்குள்ள சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஜேவிபி தயாரா?

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஒரு தீர்வு என்று பார்க்கும் பொழுது, தமிழ் மக்கள் இப்பொழுது கூட்டாட்சியைத் தான் கேட்கின்றார்கள். உலகம் முழுவதிலும் உயர்ந்த ஜனநாயகங்களில் கூட்டாட்சி ஒரு வெற்றிகரமான ஆட்சி முறைமையாகக் காணப்படுகின்றது. ஜேவிபி தமிழ் மக்களுக்கு ஒரு கூட்டாட்சி தீர்வைத் தரத் தயாரா?

இதைத் தமிழ் மக்களுக்கான தீர்வு என்பதனை விடவும்,இலங்கை முழுவதுக்குமான ஒரு தீர்வு என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்ளும் ஒரு கட்சியானது அந்த அடிப்படையில், பல்லின; பல் சமய ; இரு மொழிப் பண்பைப் பேணும் விதத்தில் ஒரு தீர்வைதான் முன்வைக்க வேண்டும். உலகில் பல்லினத்தன்மை மிக்க நாடுகளில்; பழமொழி ;பல மதங்கள் ; பயிலப்படும் நாடுகளில் ; கூட்டாட்சி அதாவது சமஸ்டி ஒரு வெற்றிகரமான ஆட்சி முறையாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே சமஸ்ரித் தீர்வு எனப்படுவது தமிழ் மக்களுக்கு உரியது என்பதை விடவும், இலங்கைத் தீவை ஒரு தேசமாகக் கட்டி எழுப்புவதற்கானது என்பது தான் மிகச் சரியான விளக்கம்.

நாலாவது கேள்வி, 2009க்கு முன்பு ஆயுத மோதல்களின் போது ஜேவிபி போரை ஆதரித்தது. போரில் ஈடுபடும் படை வீரர்களை ஆதரித்தது. படைத்தரப்புக்கு ஆட்சேர்த்துக் கொடுத்தது. அதுதொடர்பாக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயாரா?

ஐந்தாவது கேள்வி,இந்திய இலங்கை உடன்படிக்கையின் மூலம் இணைக்கப்பட்ட வடக்கையும் கிழக்கையும் ஒரு வழக்கின் மூலம் பிரித்தது ஜேவிபி. அதாவது தமிழ் மக்களின் தாயகத்தை சட்ட ரீதியாகப் பிரிக்க முற்பட்ட ஒரு கட்சி.அவ்வாறு தமிழ் மக்களின் தாயகத்தைச் சட்ட ரீதியாகப் பிரித்தமைக்காக தமிழ் மக்களிடம் ஜேவிபி மன்னிப்புக் கேட்குமா ? இதை ஐநா தீர்மானங்களின் வார்த்தைகளில் கேட்டால், ஜேவிபியானது, இறந்த காலத்துக்குப் பொறுப்புக் கூறுமா? இறந்த காலத்தில் அது தமிழ் மக்களுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடுகளுக்கும், தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுத்த செயற்பாடுகளுக்குப் பொறுப்புக் கூறுமா?

ஐந்தாவது கேள்வி, ஜேவிபியின் முதலாவது கிளர்ச்சியின் போது அது இந்தியத் தமிழர்களை குறிப்பாக, மலையகத் தமிழர்களை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவியாகக் காட்டியது.இப்பொழுதும் ஜேவிபி அதே நிலைப்பாட்டோடுதான் காணப்படுகின்றதா? அது தொடர்பாக மலையக மக்களிடம் ஜேவிபி மன்னிப்புக் கேட்குமா ?

மேற்கண்ட கேள்விகள் தமிழ் மக்களால் அனுரகுமரவிடம் பகிரங்கமாகக் கேட்கப்பட வேண்டியவை. தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரித்தால், தமிழ் மக்களுக்குச் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான கூட்டுரிமைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். அனுரகுமார உதிரியாகப் பேசுகின்ற மொழிப் பிரச்சினை; வழிபாட்டுப் பிரச்சினை; காணிப்பிரச்சினை; கல்விப் பிரச்சினை…முதற்கொண்டு பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் வரை அனைத்தும் அந்தக் கூட்டு உரிமைகளுக்குள் அடங்கும்.

தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமக்குரிய கூட்டு உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒரு தீர்வைதான் கேட்கின்றார்கள். எனவே கோட்பாட்டு ரீதியாகவும் அரசறிவியல் அர்த்தத்திலும் ஜேவிபி முதலில் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்கிறதா இல்லையா என்பதனைத் தெளிவாகக் கூற வேண்டும்.

இனப்பிரச்சனை ஒரு மனிதாபிமானப் பிரச்சினை அல்ல.முதலில் இனப்பிரச்சினை என்றால் என்ன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இனப் பிரச்சினை எனப்படுவது, இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை பெரிய இனமாகிய பெரிய மதமாகிய சிங்கள பௌத்தர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தமைதான். அதனால் தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்வதற்குரிய அடிப்படைகளை அவர்கள் அழிக்க முற்பட்டார்கள். தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்பும் மொழி, நிலம், பண்பாடு ,பொருளாதாரம் போன்ற அம்சங்களைக் குறி வைத்துத் தாக்கினார்கள். தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதற்குரிய அடிப்படைகளை அழிப்பதுதான்.

எனவே இனப்பிரச்சினை தோன்றியது எங்கிருந்து என்றால், இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதில் இருந்துதான். அதற்குத் தீர்வும் எங்கிருந்து தொடங்க வேண்டும் என்றால்,இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்வதில் இருந்துதான்.

இதைத் தமிழ் நோக்கு நிலையில் இருந்து சொன்னால்,தமிழ் மக்களை ஒரு தேசமாக ஏற்றுக் கொள்வதில் இருந்துதான் அதைத் தொடங்கலாம். ஆனால் ஜேவிபி அவ்வாறான அரசறிவியல் ஆழத்துக்குள் இறங்கத் தயார் இல்லை. தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரிப்பதன்மூலம், சமஸ்ரித் தீர்வு ஒன்றை ஏற்றுக் கொள்வதன்மூலம், தென்னிலங்கையில் தங்களுக்கு கிடைக்கக்கூடிய சிங்கள பௌத்த வாக்குகளை இழப்பதற்கு அவர்கள் தயார் இல்லை.

அதேசமயம் தமிழ் வாக்குகள் அவர்களுக்குத் தேவை.அனுரகுமார கூறுகிறார், நான் வாக்கு வேட்டைக்கு வரவில்லை, நான் தீர்வைத் தருகிறேன் வாக்கைத் தாருங்கள் என்று வியாபாரம் செய்வதற்கு வரவில்லை… என்று கேட்க அது கவர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இனப்பிரச்சினைக்கு ஜேவிபியின் தீர்வு என்ன என்பதனை வெளிப்படையாகச் சொல்வதில் இருந்து அவர் தப்ப முயற்சிக்கின்றார். தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் பல தசாப்தங்களுக்கு முன் இருந்த நல்லுறவை மீளக்கட்டி எழுப்பப் போவதாகக் கூறுகிறார். அந்த நல்லுறவு எங்கே பாதிப்படைந்தது? தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்வதற்குரிய அடிப்படைகளை அழிக்க முற்பட்ட பொழுதுதானே? அந்த நல்லுறவை எங்கிருந்து கட்டி எழுப்பலாம்? தமிழ் மக்களை ஒரு தேசமாக ஏற்றுக் கொள்வதில் இருந்துதானே ?ஆனால் ஜேவிபி அதை வெளிப்படையாகச் சொல்ல தயாரில்லை.

இந்த விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ இனப்பிரச்சினைக்கு 13 பிளஸ் தீர்வு என்று வெளிப்படையாகக் கூறி வருகிறார். ரணில் விக்கிரமசிங்க மாகாண சபைகள்தான் தீர்வு என்கிறார். ஆனால் ஜேவிபி தீர்வை வெளிப்படையாகப் பேசத் தயங்குகின்றது.

அதாவது, ஜேவிபி வெளிப்படையான, அரசியல் அடர்த்தி மிக்க, வார்த்தைகளுக்கு ஊடாக கதைப்பதைத் தவிர்த்து, மழுப்பலான, பொத்தாம் பொதுவான, சமூகநீதி மற்றும் மனித உரிமைகளின் பாற்பட்ட வார்த்தைகளுக்கு ஊடாகப் பேச விளைகின்றது. அந்த அமைப்பில் இருந்து விலகிய ஒருவர் எழுதிய நாட்குறிப்பில்…“மகிந்த ராஜபக்ஷ வெளிப்படையாகத் தெரியும் ஓர் இனவாதி. ஆனால் ஜேவிபியோ சமூக நீதியின் பின் பதுங்கும் ஓர் இனவாதி” என்று கூறியிருப்பது தவறு என்பதனை நிரூபிக்கும் விதத்தில் ஜேவிபி இக்கட்டுரையில் முன் வைக்கப்படும் பகிரங்க கேள்விகளுக்கு பதில் கூறுமா?

https://athavannews.com/2024/1376894

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதம் - நிலாந்தன்

1 week 5 days ago
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதம் - நிலாந்தன்
 
Screenshot-2024-04-06-225418-ccc.png
 
Screenshot-2024-04-06-225531-ccc.png

கடந்த 19ஆம் திகதி தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஒரு கூட்டுக் கடிதம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உப தூதரகத்தில் கையளிக்கப்பட்டது. திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த மூன்று அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு தமிழக முதல்வரிடம் அக்கூட்டுக் கடிதம் கோரிக்கை விடுத்திருந்தது. திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களின் நலன்களைக் கவனிக்கும் ஒரு வழக்கறிஞரின் பங்களிப்போடு அக்கூட்டுக் கடிதம் தயாரிக்கப்பட்டது. கடந்த 17 ஆம் தேதி உத்தியோகப் பற்றற்ற விதத்தில் தமிழக முதல்வரிடம் கையளிக்கப்பட்டது. பின்னர் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள உபதூதரகம் ஊடாக அனுப்பப்பட்டது. தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12பேர் ஒன்றாக இணைந்து அப்படி ஒரு கடிதத்தை அனுப்பியமை முக்கியமான ஒர் அடைவு. உடல்நலக் குறைவு காரணமாக சம்பந்தர் கையெழுத்திடவில்லை.

2021ஆண்டும் ஒரு கூட்டுக் கடிதம் தயாரிக்கப்பட்டது. அந்த ஆண்டு நடக்கவிருந்த ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரை  முன்னிட்டு அந்த ஆண்டு ஜனவரி மாதம் அக்கடிதம் அனுப்பப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளின் பின் மீண்டும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஒரு கூட்டுக் கடிதத்தை  தமிழக முதல்வருக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

அதிகம் கவனத்தை ஈர்க்காத அந்த முயற்சி மகத்தானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் சிறப்பு முகாம் கைதிகளின் விடயத்தில் ஒன்றிணைந்த  அதே கட்சிகள் ஏனைய  எல்லா விடயங்களிலும் ஒன்றிணையும் என்று கற்பனை செய்யத் தேவையில்லை. தமிழரசுக் கட்சிக்குள் நடப்பவை முழுத் தமிழ் அரசியலுக்கும் பொருந்தும். தமிழ் மக்களுக்கு இப்பொழுது எதிரிகள் வெளியில் இல்லை . சொந்த வீட்டுக்குள்தான் இருக்கிறார்கள். ஒரு தேர்தல் ஆண்டில் தமிழ் மக்கள்  ஒருமித்து முடிவெடுக்க முடியாத ஒரு நிலை.

434968357_3732817976984188_2299633173007

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், தமிழ் மக்கள் மத்தியில் மூன்று விதமான முடிவுகள் காணப்படுகின்றன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப்  புறக்கணிக்கின்றது. ஆனால், அந்த முடிவை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்று அக்கட்சி சிந்திக்கவில்லை. அதாவது தன்னுடைய முடிவு சரி என்று மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்து தேர்தலைப் புறக்கணிக்கும் ஒரு மக்கள் மக்கள் ஆணையைப் பெற அக்கட்சி முயற்சிக்கவில்லை.

தமிழரசுக் கட்சி இரண்டாகி நிற்கிறது. ஒரு பிரிவு சஜித்தோடு நிற்பதாகத் தோன்றுகிறது. மற்றொரு பிரிவு தமிழ்ப் பொது வேட்பாளருக்குக் கிட்டவாக நிற்கிறது. குத்துவிளக்கு  கூட்டணிக்குள், ஈபிஆர்எல்எப்   தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற முடிவை எப்பொழுதோ எடுத்துவிட்டது. ஏனைய கட்சிகள் அது தொடர்பாக தமது உத்தியோகபூர்வ நிலைப்பாடுகளை அறிவிக்கவில்லை. விக்னேஸ்வரன்,பொது  வேட்பாளரை ஏற்றுக்கொள்கிறார். இப்படியாகத்  தமிழ்த் தரப்பில் மூன்று நிலைப்பாடுகள் உண்டு.

ஆனால் அவை நிலைப்பாடுகள்தான். கருத்துருவாக்கம் என்ற செயற்பாட்டுக்கும் அப்பால் என்பதற்கும் அப்பால் அதை நோக்கிய கட்டமைப்புகள் எவையும் இதுவரை உருவாக்கப்படவில்லை. அதாவது கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் வரக்கூடிய ஒரு தேர்தலை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தரப்பு இப்படித்தான் தயாராகக் காணப்படுகின்றது.

அதேசமயம் தென்னிலங்கையில் பிரதான கட்சிகள்  ஜனாதிபதித் தேர்தலை நோக்கி திட்டமிட்டு உழைக்கின்றன. ஜேவிபிதான் முதலில் உற்சாகமாக உழைக்க தொடங்கியது. “அரகலய”வின் விளைவு அது. அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய  பசில் அதிகரித்து எதிர்பார்ப்போடு உழைத்து வருகிறார். அமெரிக்காவிலிருந்து வந்த பசில் தமது பேர பலத்தை அதிகரிக்கும் நோக்கத்தோடு கருத்து தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலை முதலில் வைப்பதற்குப் பதிலாக பொதுத் தேர்தலை முதலில் வைக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். ஏனென்றால் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மக்களுக்கு முற்கற்பிதங்களை ஏற்படுத்தும். முன் முடிவுகளை உருவாக்கும். ஒரு வெற்றி அலையானது தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களிலும் எதிரொலிக்கும். எனவே ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பொதுத் தேர்தலிலும் மக்கள் வாக்களிக்கக்கூடும். ஒரு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவாராக இருந்தால், அவர் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்காக கிடைத்த வெற்றியாக அது காட்டப்படும். அதனால் ரணிலின் பேரபலம் அதிகரிக்கும். அதன்பின் நடக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தாமரை மொட்டுக் கட்சி, ரணிலோடு பேரம் பேசி வேண்டிய அமைச்சுகளைப் பெறுவது கடினமாகலாம்.  எனவேதான் முதலில் ஒரு பொதுத் தேர்தலை வைக்க வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள்.

ஒரு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றி பெறுவாராக இருந்தால் அது அவருடைய சொந்தக் கட்சியின் வாக்கு வங்கியால் அல்ல என்பது அவருக்கே தெரியும். தாமரை மொட்டுக்களின் பலமின்றி வெற்றிபெற முடியாது என்ற நிலைதான் இப்பொழுதுவரை உண்டு. அவருடைய சொந்தக் கட்சியின் பலம் அவருக்கு குறைவு. எனவே அவருடைய சொந்தப் பலம் எது என்பதனை அவருக்கு உணர்த்தும் விதத்தில் ஒரு பொதுத்  தேர்தலை முதலில் வைத்தால் அதில் ரணில் தன்னுடைய சொந்தப் பலம் எது என்பதைக் கண்டுபிடித்து விடுவார். அப்பொழுது அவருடைய பேரம் குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் ராஜபக்சங்கள் அவருடன் பேரம் பேசுவது இலகுவாக இருக்கும். நாமலை பிரதமராக நியமிக்கும்படி கேட்கலாம்.

எனவே முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடந்தால் அதில் ரணிலுக்குப் பேர பலம் அதிகரிக்கும். முதலில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் அதில் ரணிலின் பேரம் குறையும். எனவே ரணிலின் பேரத்தைக் குறைப்பதுதான் ராஜபக்சகளின் திட்டம். இதை இன்னும் ஆழமாகச் சொன்னால் அடுத்த நாடாளுமன்றத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான் அவர்களுடைய திட்டம்.

எனவே ராஜபக்சத்தை தங்களுடைய பேரபலத்தை நிரூபிப்பதற்குத் தயாராகி வருகிறார்கள் என்று பொருள். இதை அதன் சாராம்சத்தில் சொன்னால், ராஜபக்சக்கள் தற்காப்பு நிலையில் இருந்து வலிந்து தாக்கும் நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள். கடந்த 2021 ஆம் ஆண்டு “அரகலய”வின் பொது  அவர்கள் பின்வாங்கும் நிலையில் இருந்தார்கள். சொந்தத் தேர்தல் தொகுதிகளிலேயே அவர்களுக்குப் பாதுகாப்பு இருக்கவில்லை. படை முகாம்களில் அவர்கள் அடைக்கலம் தேட வேண்டி வந்தது. ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய வெளிநாடு ஒன்றுக்கு தப்ப வேண்டி வந்தது. ஆனால் அவ்வாறான தற்காப்பு நிலையில் இருந்து இப்பொழுது வலிந்து தாக்கும் ஒரு நிலையைத் தாங்கள் அடைந்து விட்டதாக அவர்கள் நம்புகிறார்கள். எனவே அதை நோக்கித்தான் அவர்கள் திட்டமிடுகிறார்கள். கோட்டாபயவின் புத்தகமும் அந்த அடிப்படையில் எழுதப்பட்டதுதான்.

ஆனால் அமெரிக்காவிலிருந்து வந்த பசில் நினைத்தபடியெல்லாம் அரசியலை நகர்த்த முடியாது என்பதைத்தான் அண்மையில் அமெரிக்காவுக்கு சென்று வந்த மைத்திரியின் சர்ச்சைக்குரிய கூற்று வெளிப்படுத்துகின்றதா? மைத்திரி கூறுகிறார், ஈஸ்டர் குண்டு வெடிப்புத் தொடர்பாக தனக்கு ரகசியங்கள் தெரியும் என்று. அவர் ஏன் அவ்வாறு கூறுகிறார் ? அதுவும் ஒரு ஜனாதிபதித் தேர்தல் வர இருக்கும் பின்னணியில் ஏன் அப்படிக் கூறுகிறார்? ஏனென்றால், ஈஸ்டர் குண்டு வெடிப்பைப்பற்றிப் பேசினால் அதன் விளைவின் விளைவுகள் ராஜபக்சக்களைத்தான் பாதிக்கும்.

ராஜபக்சக்கள் தற்காப்பு நிலையில் இருந்து வலிந்து தாக்கும் நிலைக்கு முன்னேறுவதை, மேற்கு நாடுகள் விரும்பவில்லையா? அப்படிப் பார்த்தால், மைத்திரி கிளப்பிய சர்ச்சையும் “சனல் நாலு” வீடியோவை போன்றதுதானா? இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், ராஜபக்சக்களை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்குச் சவாலாக  எழாதபடி பார்த்துக் கொள்வதுதான் மேற்கு நாடுகளின் திட்டமா ? அதாவது ரணிலுடைய வழிகளை இலகுவாக்கிக் கொடுத்தல்?

மேற்கு நாடுகளும் மேற்கத்திய பெரு நிறுவனங்களாகிய பன்னாட்டு நாணய நிதியம் போன்றனவும் ரணில் பதவியில் தொடர்ந்துமிருப்பதைத்தான் விரும்புவதாகத் தெரிகிறது. மேற்கத்திய பாரம்பரியத்தில் வந்த அவரைக் கையாள்வது இலகுவானது என்று அவை நம்புகின்றன. கத்தியின்றி ரத்தமின்றி,தேர்தலின்றிக் கிடைத்த ஆட்சிமாற்றத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் தொடர விரும்புகின்றன. எனவே மேற்கு நாடுகளின் விருப்பத் தெரிவு ரணில்தான்.

ராஜபக்சக்கள் தாம் வலிந்து தாக்கும் நிலைக்கு வளர்ந்து விட்டதாக நம்பினாலும்கூட, தங்களுக்குப் பொருத்தமான முன் தடுப்பு ரணில் விக்கிரமசிங்கதான் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் ரணிலுடன் தமது பேரத்தை அதிகப்படுத்த விரும்பினாலும், ரணிலை விட்டால் அவர்களுக்கு வேறு தெரிவில்லை. அப்படித்தான் மகா சங்கத்திற்கும், படைத்தரப்புக்கும். அதாவது உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் மேற்கு நாடுகள் மத்தியிலும் ரணில் விக்கிரமசிங்கவுக்குத்தான் அதிகம் வரவேற்புக் காணப்படுகின்றது. அதனால்தான் ராஜபக்சக்கள் அவருடைய வழிகளைத் தடுக்காமல் இருக்க மைத்திரி அவ்வாறு பேச வைக்கப்படுகின்றாரா?

GJfmLgJWMAAO708-1-1024x723.jpg

ஆயின், இந்த விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? ரணில் விக்கிரமசிங்க எல்லாப் பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்துக் கையாளக்கூடிய ஒருவர். அப்படிப்பட்ட ஒருவர் இந்தியாவைப் பொறுத்தவரையிலும் கையாளக் கடினமானவர். அப்படிப் பார்த்தால் இந்தியா ரணிலை ஒரு விருப்பத் தெரிவாக எடுக்க முடியாது.

அது ரணிலுக்கும் விளங்கும். அதனால்தான் அவர் ஜனாதிபதித் தேர்தலில் இந்தியா தனக்கு எதிராகப் போகாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தியாவுடன் குறிப்பிடத்தக்க அளவுக்கு இணங்கிப் போக முயற்சிக்கின்றார். யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளிலும் இந்திய நிறுவனங்களுக்கு மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்களை வழங்கும் உடன்படிக்கைகள் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி கையெழுத்திடப்பட்டன. அதுபோலவே ராமர் பாலம் என்ற விடயத்திலும் ரணில் உண்மையாக இருக்கிறார் என்ற ஒரு தோற்றம் வெளிக்காட்டப்படுகிறது. ராமர் பாலத்தை கட்டப் போவதாக ரணில் இந்தியாவை நம்ப வைக்கின்றார். தன்னை நம்பத் தயாரற்ற  ஒரு பக்கத்து பேரரசுக்கு நாட்டை  முழுமையாகத் திறக்கத் தயார் என்று காட்ட  ரணில் முற்படுகிறாரா?

இந்தியப் பொருளாதாரம் அண்மை ஆண்டுகளில் வளர்ச்சி கண்டு வருகிறது. தமிழகத்திலும் அதுதான் நிலைமை. இவ்வாறு ஒரு பெரிய பொருளாதாரத்தோடு சிறிய இலங்கைத் தீவை நிலத்தால் இணைத்தால், இலங்கைத் தீவு விழுங்கப்பட்டு விடும் என்ற ஒரு பயத்தை சிங்கள மக்கள் மத்தியில் இலகுவாகத் தூண்ட முடியும். இந்த விடயத்தை ரணில் எப்படிக் கையாள்வாரோ தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி. பாலங் கட்டத் தயார் என்று சொன்னதிலிருந்து அவர் பின்வாங்க முடியுமா இல்லையா என்பது இந்தியா அந்த விடயத்தை எப்படிக் கையாளப்போகிறது என்பதில்தான் தங்கியிருக்கின்றது.

புதுடில்லி ஜேவிபியை அழைத்து கதைத்தமையும் ரணில் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் நோக்கிலான ஒரு நடவடிக்கைதான். ரணிலுக்கு எதிராகக் கையாளப்படத்தக்க சக்திகளை இந்தியா அரவணைக்கிறது என்று பொருள்.

எதுவாயினும், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரையிலும் இந்தியா தனக்கு நெருக்கடிகளைத் தரக்கூடாது என்று ரணில் கருதுவதால், அவர் இந்தியாவை எப்படியும் சுதாகரிக்கத்தான் முயற்சிப்பார்.

இவ்வாறாக தென்னிலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி கட்சிகள் வியூகங்களை அமைத்து உழைத்து வருகின்றன. தமிழ்த் தரப்பிலோ பிரதான கட்சி நீதிமன்றத்தில் இருந்து வீட்டுக்கு  வரமுடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. ஒரு கட்சி புறக்கணிப்பு என்று சொல்லிவிட்டு ஒதுங்கி விட்டது. தமிழ்ப் பொது வேட்பாளரை  முன்னிறுத்தும் கட்சிகள் கருத்துருவாக்கம்  என்ற கட்டத்தைத் கடந்து அதற்கான கட்டமைப்பு சார்ந்த நடவடிக்கைகளில் இன்னமும் இறங்கவில்லை. தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டது போல, தமிழ் ஐக்கியந்தான். கடந்த 15 ஆண்டுகளாக முடியாமல் போன காரியம் அது.கடந்த மாதம் தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்ட கூட்டுக் கடிதத்தைப் போல, அரிதாக ஏதாவது நடக்கும். மற்றும் படி கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதில் எல்லாக் கட்சிகளுமே தோல்வியடைந்து விட்டன. இந்த லட்சணத்தில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நோக்கி இதே கட்சிகளை எப்படி ஒருங்கிணைப்பது? அல்லது கட்சிகளைக் கடந்து மக்கள் அமைப்புகள் அதை முன்னெடுக்க வேண்டுமா ?

 

ரணில் விக்கிரமசிங்க: One Man Government

1 week 6 days ago
ரணில் விக்கிரமசிங்க: One Man Government
ரணில் விக்கிரமசிங்க: One Man Government

— கருணாகரன் —

இலங்கை அரசியலில் One Man Government ஆகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க. மட்டுமல்ல, அரசியல், பொருளாதாரம், பண்பாடு என அனைத்தையும் தீர்மானிக்கும் ஒரே ஆளாகியுள்ளார். ரணில் என்ன நினைக்கிறாரே அதுவே நடக்கிறது. அதுவே நடக்கக் கூடிய சூழலும் உள்ளது. அவரை மீறி எதுவும் இல்லை என்ற நிலை.

இதைக் கட்டுப்படுத்தவோ இடையீடு  செய்யவோ முடியாமல் எதிர்க்கட்சிகள் படுத்து விட்டன. எதிர்ப்பு அரசியல் என்பது காணாமலே போய் விட்டது. அங்கங்கே மெல்லிய தொனியில் அனுங்கலாகக் கேட்கும் குரலைத் தவிர, வேறெதுவும் இலங்கையில் இல்லை. 

நெடுங்காலமாக இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தி வந்த ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் உடைந்து, சிதறிச் சிறுத்து விட்டன. ஐ.தே.க உடைந்து ஒரு பகுதி ஐக்கிய மக்கள் சக்தி என சஜித் பிரேமதாசவின் தலைமையில் இயங்குகிறது. மற்றப்பகுதி ரணில் விக்கிரமசிங்கவோடு. சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுண்டு ஒரு அணி பொதுஜன பெரமுன என ராஜபக்ஸக்களின் செல்வாக்கோடு செயற்படுகிறது. மற்றது மைத்திரிபால சிறிசேனவின் கீழ். அதிலும் ஒரு துண்டு தனியாகச் செயற்படவுள்ளதாக சொல்லிக் கொண்டிருக்கிறது.

ஆயுதப்போராட்ட அரசியல், தேசிய நீரோட்ட அரசியல் என்ற பாராளுமன்ற ஜனநாயக அரசியல் ஆகிய இரண்டு வழி அனுபவங்களையும் கொண்ட ஜே.வி.பி ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் குழந்தையாகத்தான் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் அதனால் எழுந்து நடக்க முடியவில்லை. 

தமிழ்த்தரப்பின் அரசியற் குரலைக் காணவே இல்லை. அது ஆழக்கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பதைப்போல யாருக்குமே பெரிதாகக் கேட்பதில்லை. அதற்குள் ஆயிரத்தெட்டுப் பிரிவினைகள். ஒரு காலம் ஈழ விடுதலை இயக்கங்கள் பெருகிக் கிடந்ததைப்போல இப்பொழுது தமிழ்த்தேசியக் கட்சிகள் பெருகிக் கிடக்கின்றன. 

ஈழவிடுதலை இயக்கங்களிலிருந்து பெற்ற அனுபவமோ என்னவோ தெரியவில்லை. இப்பொழுது தமிழ் மக்களும் தமிழ் அரசியற் குரலைப் பெரிதாகக் கவனத்திற் கொள்வதில்லை. அதற்கு உருவேற்றுவதற்குச் சிலர் உடுக்கடிகாரர்களைப்போல எப்படியெல்லாமோ முயற்சிக்கிறார்கள். ஆனால், சனங்கள் சன்னதங்கொள்வதைக் காணோம். பட்டறிவாக இருக்கலாம்.

பதிலாகப் பலரும் தம்மை விட்டாற் காணும் என்ற நிலையில், இன, மத பேதமின்றி நாட்டை விட்டுத் தப்பியோடுகிறார்கள். 

உயர் பதவியிலுள்ளவர்கள் கூட பதவியாவது மண்ணாவது என  அரசு வழங்கியிருக்கும் ஐந்தாண்டுகள் ஊதியமற்ற விடுமுறையைப் பயன்படுத்திக் கொண்டு வெளியே பறக்கிறார்கள். 

போர்க்காலத்தில் நாட்டை விட்டு வெளியேறியோரின் தொகையை விட இப்பொழுது வெளியேறுவோரின் தொகை அதிகம் என்று சொல்கின்றன புள்ளிவிவரங்கள்.

உண்மையும் அதுதான். கடவுச் சீட்டுப் பெறும் அலுவலகமும் வெளிநாட்டுத் தூதுவரகங்களும் சனங்களால் நிரம்பி வழிகின்றன. 

எஞ்சியிருப்போரில் பலரும் இனியும் காலத்தைக் கடத்த முடியாது என்று இலங்கைத் தேசிய அரசியலில் கலந்தும் கரைந்தும் போகிறார்கள். இதனால்தான் அங்கயன் ராமநாதன், சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), டக்ளஸ் தேவானந்தா போன்றோர் அதிகூடிய வாக்குகளைப் பெறுகிறார்கள். 

நாடு யுத்த நெருக்கடியிலிருந்து மீண்டு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டிருக்கிறது. 

எல்லாவற்றுக்கும் காரணம் தேசியப் பிரச்சினைகளில் ஒன்றான இனவாதம் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை விட்டுத் தொலைப்பதற்கு யாரும் தயாரில்லை. 

அரசியல் கட்சிகளும் சரி, அரசியல் ஆய்வாளர்கள், பத்தியாளர்கள், ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள், மத பீடங்கள், புத்திஜீவிகள், அறிவு மையங்கள், விளிம்புகள் என எல்லா இடங்களிலும் எல்லாத்  தரப்புகளிலும் இனவாதம் தாராளமாக ஊறிப்போய்க் கிடக்கிறது.

மூன்றுவேளை சாப்பாட்டைப் போல இனவாதம் பலருக்கும் அவசியமான – பழக்கமான ஒன்றாகி விட்டது. 

அதை விட்டால் உயிரே போய் விடும் என்று எண்ணுகிறார்கள். 

சமாதானத்தை விட, அமைதியை விட, சுபீட்சமான எதிர்காலத்தை விட, அந்நிய தலையீடுகள், ஆக்கிரமிப்புகளை விட, பிற சக்திகளிடம் முழந்தாழில் நின்று கையேந்துவதை விட, நாடு கடனில் மூழ்குவதை விட, அரை வயிறு பட்டினி கிடப்பதை விட இனவாதம் ருசிக்கிறது எல்லோருக்கும்.

இந்த மாதிரி மூடத்தனம் வேறில்லை. என்னதான் சொல்லுங்கள். நாங்கள் மூடர்களாகவும் முட்டாள்களாகவும் இருந்து விட்டுப் போகிறோம். நம்முடைய முயலுக்கு ஒன்றரைக் கால்தான் என்பதிலிருந்து எவரும் முன்னகரத் தயாரில்லை.

இந்தப் பைத்தியக்காரத்தனத்துக்கு எந்த வைத்தியமுமில்லை. 

இந்தச் சூழலில்தான் தான் ஒரு சிறந்த ஜனநாயகவாதி. அரசியல், பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க வந்த ஆபத்பாந்தகர். இனவாதத்துக்கு எதிரான பேர்வழி. அமைதியின் நேசன். மூழ்கும் நாட்டை மீட்க வந்த ஒரேயொரு மாலுமி என்று தோற்றம் காட்டுகிறார் ரணில் விக்கிரமசிங்க.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவியிலிருக்கும் ரணில் இன்று சர்வ வல்லமை பொருந்திய பெருந்தலைவர். 50 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் அனுபவம் ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தாராளமாகக் கை கொடுக்கிறது. சர்வதேச நாடுகளின் ஆதரவு ஒரு பக்கம் அவருக்குக் கிடைக்கிறது என்றால், சர்வதேச நாடுகளை லாவகமாகக் கையாளும் அவருடைய கலை இன்னொரு பக்கமாகக் கைகொடுக்கிறது. 

இதனால் ரணில் விக்கிரசிங்கவை எவராலும் எதுவும் செய்ய முடியவில்லை. பலருக்கும் அவர் மீது பொருமல்கள் உண்டு. ஆனால், அடுப்படிக்குள் புகைவதைப்போல அடிவயிற்றில் புகைவதோடு எல்லாம் அடங்கிப் போகின்றன. 

அறுதிப் பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் வைத்திருக்கின்ற ராஜபக்ஸக்களின் ‘பொது ஜன பெரமுன’ கூட ரணிலை எதுவும் செய்ய முடியாதுள்ளது. மட்டுமல்ல, ரணிலுக்குச் சவால் விட்டுக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி, ஒரு பெரும் அணியாகத் திரண்டிருக்கும் சஜித்தின் கூட்டணியினாலும் ரணிலை ஆட்ட முடியவில்லை.

இவ்வளவுக்கும் இந்தச் சீமான் ஒரு வாக்கைக் கூட, தான் இப்பொழுது வகிக்கும் பதவிக்காகப் பெற்றவரில்லை. ஏன், இதற்காக நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலிலேயே போட்டியிட்டதுமில்லை. ஆனால், அவரே நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி – நாட்டின் அதிபராகி ஆட்டுவிக்கிறார். 

இலங்கை அரசியல் சாசனத்தின்படி ஜனாதிபதிக்கே உச்ச அதிகாரமுண்டு. அமைச்சரவையும் பாராளுமன்றமும் முப்படைகளும் என முழு நாடுமே ஜனாதிபதிக்குக் கீழேதான். 

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தனக்கு எதிரான திசையிலிருந்தவர்களை வைத்தே வெற்றிகரமாக ஆட்சியை நடத்துகிறார். அமைச்சரவையில் உள்ள அத்தனை பேரும் எதிரணியைச் சேர்ந்தவர்கள். இருந்தாலும் ரணிலுக்குக் கட்டுப்பட்ட பெட்டிப் பாம்புகளாகவே இருக்கின்றனர். 

இதற்கெல்லாம் காரணம், இவர்கள் அனைவரும் பலவீனமான நிலையில், கடந்த காலத்தில் தவறுகளை இழைத்தவர்களாக இருப்பதேயாகும்.

இந்தத் தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமென்றால், தவிர்க்க முடியாமல் ரணிலை ஆதரித்தே ஆக வேண்டும். அவருடைய கால்களைப் பிடித்தே ஆக வேண்டும். ராஜபக்ஸக்களைக் காப்பாற்றி வைத்திருப்பதே ரணில்தான். 

இந்த நிலையிலிருந்து நாடு மீள்வதென்றால், பல காரியங்கள் நடக்க வேண்டும். முதலில் பொருளாதார நெருக்கடி தீர வேண்டும். இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதற்கு அரசியலமைப்பில் மாற்றம் வேண்டும். அதற்கு மக்களின் மனதிலும் அரசியற் கட்சிகள் – அரசியல்வாதிகளின் மனதிலும் மதவாதிகளின் தலைக்குள்ளும் மாற்றம் நிகழ வேண்டும். அதற்கு ஏற்றமாதிரிப் பல தரப்பிலும் வேலைகள் நடக்க வேண்டும். சமாதானத்தின் மீதும் தீர்வின் மீதும் விருப்பமும் உறுதிப்பாடும் வேண்டும். ஜனநாயக ரீதியான – மாண்புடைய தேர்தல் நடக்க வேண்டும். இப்படிப் பலவும் நடப்பது அவசியம்.  

பொருளாதார நெருக்கடியை வைத்தே ரணில் தன்னைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். 

ரணிலை விட்டால் பொருளாதார நெருக்கயைக் கையாளக் கூடிய வேறு ஆட்களில்லை என்றமாதிரியே நாட்டின் பெரும்பான்மையான சனங்கள் எண்ணுகிறார்கள். ஏன் அரசியற் கட்சிகள், பிற தலைவர்களுக்கும் கூட அப்படியான எண்ணம்தான். 

ஆனாலும் ரணில் விக்கிரசிங்கவை வீழ்த்தி விட வேண்டும் என்றே ஒவ்வொருவரும் யோசிக்கிறார்கள். இதற்காக அவர்கள் குறுக்கு வழியில் பயணிப்பதைப்போல தேர்தலை எதிர்பார்க்கிறார்கள்.

தேர்தல் நடந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று சிந்திக்கிறார்கள். இதுதான் சிரிப்புக்கிடமான சங்கதி. ஒரு தேர்தல் அல்ல ஒன்பது தேர்தல் நடந்தாலும் பிரச்சினைகள் தீராது. 

ஏனென்றால் நாட்டின் பிரச்சினைகளுக்குத் தேர்தல் மூலமாகத் தீர்வைக் காணவே முடியாது. தீர்வு காண வேண்டிய வேலைகளில் தேர்தல் மூலமான அதிகார மாற்றமும் ஒன்றாக இருக்கலாமே தவிர, அதுதான் தீர்வைப் பெற்றுத்தரும் என்று சொல்வதற்கில்லை.

இதற்கு முன்பும் பல தேர்தல்கள் நடந்திருக்கின்றன. பல விதமான வாக்குறுதிகளின் மத்தியில்தான் அந்தத் தேர்தல்களும் அவற்றின் வெற்றியும் அமைந்தது.

மக்களும் பெரும் எதிர்பார்ப்புகளோடுதான் வாக்களித்திருக்கிறார்கள். 

ஆட்சி பீடம் ஏறியவர்கள் மாபெரும் பிரகடனங்களோடு கதிரையில் அமர்ந்தனர். 

இரண்டு மாதம் சென்றதும் பழையபடி வேதாளம் முருங்கையில் ஏறிய கதையே நிகழ்ந்தது.

அதிகம் ஏன், யுத்தம் முடிந்தபோது நாட்டிலுள்ள பெரும்பான்மையோரிடம் இனிப் பிரச்சினை இல்லை என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.

ஆனால் நடந்தது என்ன? 

அதற்குப் பிறகுதான் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகளும் பொருளாதார நெருக்கடியும் அந்நியத் தலையீடுகளின் அதிகரிப்பும்.

இன்று நாடு இருக்கின்ற நிலை?

தேர்தலினால் சிலவேளை ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிக்கலாம்.  நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது நடக்கும் என்றில்லை. அதற்கு ஏற்கனவே சொல்லப்பட்டதைப்போல பல காரியங்கள் நடக்க வேண்டும். அதற்கான திடசங்கற்பம் ஒவ்வொருவரிடமும் ஏற்பட வேண்டும். அதற்கு நாட்டையும் மக்களையும் நேசிக்கும் ஒரு பண்பு உருவாக வேண்டும். அரசியல் வணிகத்திலிருந்து கட்சிகளும் தலைவர்களும் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளரும் விடுபட வேண்டும். தனி நலனை விட பொது நலன் என்ற சிந்தனை எழ வேண்டும். தேசப்பற்றும் மக்களின் மீதான மதிப்பும் ஒரு அலைபோல மேற்திரள வேண்டும். இதை முன்னெடுக்கும் ஒரு அணி அல்லது தலைமை உருத்திரள வேண்டும்.

இப்போதிருப்பவை சவலைகள். இவற்றினால் எதையுமே செய்ய முடியாது. இதை அவை நன்றாக நிரூபித்துள்ளன. இவற்றை விட இருக்கின்ற One Man Army அல்லது One Man Government பரவாயில்லை. இதை நான் சொல்லவில்லை. சனங்கள் சொல்கிறார்கள். 

00

 

https://arangamnews.com/?p=10600

"தமிழர்கள் கற்க மறந்த பண்பு எது?"

2 weeks 4 days ago

"தமிழர்கள் கற்க மறந்த பண்பு எது?"


தமிழர் அல்லாத நண்பர்களிடம் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு கேள்வி:  "தமிழர்களின் குரல் முக்கியமான விடயங்களில் கூட ஒரு சேர ஒலிப்பதில்லையே ஏன்?" என்னையும் கூட நீண்ட காலமாக அரிக்கிற கேள்வி இது. தமிழர்களாகிய நாம் பெற்றிருக்கும் வளங்கள் - குறிப்பாக - அறிவுசார் வளங்கள், பல துறைகளில் நம்மவர்கள் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் - பிரமிப்பானவை;  உலகின் எந்த ஓர் இனத்துக்கும் சவால் விடக் கூடியவை. அப்படியிருந்தும், ஏன் சக்திமிக்க ஓரினமாக நாம் உருவெடுக்க முடியவில்லை? தமிழர்களாகிய நாம், குறிப்பாக கொஞ்சம் யோசிக்கக் கூடியவர்கள், படித்தவர்கள், ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ், ஒரு பொது நோக்கத்தின் கீழ் பணியாற்றும் பண்பை இன்னும் ஏனோ கற்றுக் கொள்ள வில்லை. தமிழர்களில் பெரும் பான்மையினரிடத்தில் - அதாவது, அவர்கள் எவ்வளவு பெரிய மேதைகள், ஆளுமைகள், சாதனையாளர்களாக இருந்தாலும் சரி - 
 இந்தப் பலவீனத்தை அதிகமாக இன்னும் கொண்டு உள்ளார்கள். இன்னும் சொல்லப் போனால், இந்த விடயத்தில், சாமானியர்களைக் காட்டிலும் கொஞ்சம் யோசிக்கத் தெரிந்தவர்களே மிக மோசமாக இருக்கிறார்கள். ஒற்றுமையாக வாழத் தெரியாமல், இருப்பதையும் போட்டு உடைக்கிறார்கள்!  அவர்களிடம் "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற வாழ்வை இன்னும் காணோம்!" 

ஆனால் தமிழர் சரித்திரத்தில் ஒரு முறை கண்டோம். அது கி மு 300 அளவில். அதன் பின்பு இன்று வரை நாம் ஒன்றுபடவில்லை. இனி இதை எங்கு காண்போம்? இத்தனை அழிவு கண்ட பின்பாவது திரிந்தினோமா ?

வட இந்தியாவை ஆண்ட நந்த வம்சம் [Nandhas] தென் இந்தியாவை ஆண்ட மூன்று பேரரசுகளுடனும் சகோதரரைப் போன்ற ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருந்தனர். என்றாலும் அவர்களை தொடர்ந்து வந்த மௌரியப் பேரரசு [Mauryas] (322–185 கிமு) தென் இந்தியா மேல் படையெடுத்தது. சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயம் வரை படை நடத்திச் சென்றவன். வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப் பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற் கடித்துச் சிறைப் பிடித்தவன். அது மௌரியர்களை சேர நாட்டின் மேல் பலி வாங்கும் தாக்குதலுக்கு தூண்டியது. என்றாலும் மௌரியப் பேரரசால் சோழ எல்லைக்குள் நுழைய முடியவில்லை. இந்த படை எடுப்பு மூவேந்தர்களுக்கும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியது. இதனால் 313 B.C, யில் இவ் மூவேந்தர்களும் ஒரு ஒற்றுமைக்கான உடன்படிக்கை ஒன்றில் ஒப்பம் இட்டார்கள் என Dr.மதிவாணன் [author Dr.Mathivanan] கூறுகிறார்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கருங்கை ஒள் வாட் பெரும் பெயர் வழுதி, 70 ஆவது பாண்டியனாகிய தேவ பாண்டியன் ஆகிய மூவரும் கையொப்பம் இட்ட அந்த ஒற்றுமை ஒப்பந்தம் ஆக 113 வருடமே நிலைத்து இருந்தது. அது, அந்த ஒற்றுமை, வட இந்தியர்களின் தாக்குதல்களில் இருந்து தமிழகத்தை அசைக்க முடியாத குன்றாய் நின்று காப்பற்றியது. சங்க பெண் புலவர் முடத்தாமக் கண்ணியார் தாம் இயற்றிய பொருநராற்றுப் படை [53-55] யில் மூவேந்தர்களும் ஒரே மேடை யில் இருக்க கண்டதாக பதிந்து உள்ளார்.

“பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள்
முரசு முழங்கு தானை மூவருங்கூடி
அரசவை இருந்த தோற்றம் போலப்
பாடல் பற்றிய பயனுடைய எழாஅல்
கோடியர் தலைவ கொண்டது அறிந
அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது
ஆற்று எதிர்ப் படுதலும் நோற்றதன் பயனே
போற்றிக் கேண்மதி புகழ் மேம் படுந (53 – 60)

பெருமையுடைய செல்வத்தையும், பெரிய பெயரையும், வலிய முயற்சியையும், வெற்றி முரசு முழங்கும் படையையும் உடைய மூவேந்தர்கள் ஒன்றாகக் கூடி அரச அவையில் இருக்கும் தோற்றம் போல, பாடல்களையும் பற்றித் தோன்றும் இசைப் பயனையுடைய யாழினையும் உடைய கூத்தர்களின் தலைவனே!  பிறர் மனதில் கொண்டதைக் குறிப்பால் அறிய வல்லவனே! அறியாமையினால் வழியைத் தவறிச் செல்லாது, இந்த வழியில் என்னைக் கண்டது உன்னுடைய நல்வினையின் பயனே!  நான் கூறுவதை நீ விரும்பிக் கேட்பாயாக புகழை உடையவனே!


{(பொரு. ஆற். படை: 53-60) போரொழுக்கத்தில் வெற்றிகளைச் சாதித்த மூவேந்தர்களை அப்பாடல்களில் சந்திக்கின்றோம்.} 

மேலும் இரண்டாம் பத்தை பாடிய குமட்டூர்க் கண்ணனார் என்பவரும் தாணும் இதை கண்டதாக பதிந்து உள்ளார். பின் ஔவையாரும் இதை கண்டுள்ளார். ஆனால் அந்த ஒற்றுமை அதன் பிறகு இன்று வரை ஏற்படவே இல்லை. இப்ப நாம் காரிக் கண்ணனார் என்ற இன்னும் ஒரு சங்க புலவர் கண்ட காட்சியை பார்ப்போமா ?

ஒருசமயம், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர். அதைக் கண்ட புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பெருமகிழ்ச்சி அடைந்தார். சோழனும் பாண்டியனும் ஒருங்கே இருந்ததைப் பலராமனும் திருமாலும் ஒருங்கே இருப்பதற்கு ஒப்பிட்டு, “அவர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்தால் இவ்வுலகம் அவர்கள் கையகப்படுவது உறுதி" என்று இப்பாடலில் கூறுகிறார்.

"நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே,
முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்
......................................................
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் 
உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப்
பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே;
..........................................................
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே."
[புறநானூறு 58]

நீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்; இவன் முன்னோர் புகழைக் காப்பாற்றும் பஞ்சவர் ஏறு. இன்னும் கேள். ’நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிடுவீர். இருவரும் இப்படி இணைந்திருந்தால் இந்த உலகம் முழுவதும் உங்கள் கையில் இருக்கும். பிறருடைய நாடுகளிலுள்ள குன்றுகளில், வளைந்த கோடுகளையுடைய புலிச் சின்னமும், பெரிய நீரில் வாழும் கயல்மீன் சின்னமும் பொறிக்கப்படுவதாகுக.


இதை ஏன் எம் இலங்கைத் தமிழ் தலைவர்கள் இன்னும் உணரவில்லை. அன்று ஒரு கட்சியில் ஆரம்பித்து ஒரே ஒரு தமிழ் தலைவன் இருந்தான், இன்று எத்தனை காட்சிகள், எத்தனை தலைவர்கள் ? இது இன்னும் வேண்டுமா எமக்கு ?? 


"இருந்ததும் இல்லை நிலமும் இல்லை
சிதைந்து போராடி வெற்றியும் இல்லை   
புதைந்து போனது மண்ணின் மைந்தர்களே!" 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

தமிழ்ப் பொது வேட்பாளர்: யாரால்? யாருக்கு? யாருக்காக ? - நிலாந்தன்

2 weeks 4 days ago

தமிழ்ப் பொது வேட்பாளர்: யாரால்? யாருக்கு? யாருக்காக ? - நிலாந்தன்

 

image_140aba5788-c.jpg

சில மாதங்களுக்கு முன்பு வடமராட்சி கட்டை வேலி கிராமத்தில் ஒரு மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. சமகால நிலைமைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டும் நோக்கிலான அச்சந்திப்பின் போது, வளவாளர் அங்கு வந்திருந்த மக்களை நோக்கி பல்வேறு கேள்விகளையும் கேட்டார். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள்? ஏன் வாக்களிக்க விரும்புகிறார்கள்? என்றும் கேட்டார். கேள்விகளின் போக்கில் அவர் ஒரு கட்டத்தில் கேட்டார், தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் அவருக்கு நீங்கள் வாக்களிப்பீர்களா? என்று. அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஏறக்குறைய ஒரே குரலில் ஆம் என்று பதிலளித்தார்கள். அதில் யாரோ ஒரு பெண் ரகசியமான குரலில் சொன்னார் “அந்தப் பொது வேட்பாளர் தமிழ் ஈழம் கேட்டால் சந்தோஷமாக வாக்களிப்போம்” என்று.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, சில மாதங்களுக்கு முன்னரே ஈபிஆர்எல் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் முன் வைத்தார். அதன் பின் அவர் அங்கம் வகிக்கும் குத்துவிளக்குக் கூட்டணி அதை ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது. அதன்பின் விக்னேஸ்வரன் அவ்வாறு ஒரு பொது வேட்பாளராக நிற்பதற்குத் தான் தயார் என்று அறிவித்திருந்தார்.

இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சி அதன் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை இன்றுவரை வெளிப்படுத்தவில்லை. அவ்வாறு ஒருமித்த முடிவை எடுக்க முடியாதபடி அக்கட்சி நீதிமன்றம் ஏறிக்கொண்டிருக்கிறது. எனினும், தமிழரசுக்  கட்சிக்குள் தேர்தல் நடப்பதற்கு முன்பு, சாணக்கியன் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருந்தார். அதேசமயம் அண்மையில் டான் டிவி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு சிவில் சமூகம் ஒழுங்குபடுத்திய ஒரு கருத்தரங்கில் பேசிய சிறீதரன் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாகக் கருத்துரைத்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வழமை போல தேர்தலைப் பகிஷ்கரிக்கப் போகின்றது.

இதனிடையே, புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர் ஒருவருடைய தூதுவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர், சில மாதங்களுக்கு முன், தமிழ்க் கட்சிகள் சிலவற்றோடு உரையாடியிருக்கிறார். குறிப்பிட்ட முதலீட்டாளர் தென்னிலங்கையில் உள்ள இரண்டு கட்சிப் பதிவுகளை விலைக்கு வாங்கி வைத்திருப்பதாகவும், அதில் ஒரு கட்சியின் பதிவின் கீழ் தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சிப்பதாகவும் கூறப்பட்டது. அத்தமிழ்ப் பொது வேட்பாளர், தமிழ் வாக்குகளை ஒன்று திரட்டி ரணில் விக்ரமசிங்கவை நோக்கித் திருப்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது ரணிலை வெல்ல வைப்பதற்கே அந்த முயற்சி என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் அக்கோரிக்கைக்கு இணங்கவில்லை என்றும் தெரிகிறது.

அதேசமயம் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட டான் டிவி ஒரு சிவில் சமூகத்தை முன்னிறுத்தி, தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக ஒரு கருத்தரங்கை சில கிழமைகளுக்கு முன் நடத்தியது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர ஏனைய பெரும்பாலான கட்சிகள் அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தன.

articles_oqF2dgHWywdy2xvr1yHd-1c-1024x53

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவை தமிழ் மக்கள் பேரவை கையில் எடுத்தது. அது வெற்றி பெறவில்லை. இப்பொழுது குத்துவிளக்குக் கூட்டணி, புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர், டான் டிவியின் சிவில் சமூகம் போன்றன அதைக் கையில் எடுத்திருக்கின்றனவா?

இந்த விடையத்தில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்கள் பேரவை ஏன் வெற்றி பெறவில்லை என்ற கேள்விக்கு விடை முக்கியம்.

அன்றைக்கு அந்த முயற்சிக்கு சம்பந்தர் ஆதரவாக இருக்கவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்தது. ஆனால் ஏனைய கட்சிகள் தயக்கத்தோடு தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்க முன்வந்தன. அவ்வாறு ஆதரித்த கட்சிகளை ஒன்று திரட்டி அதை ஒரு அரசியல் செய்முறையாக பரிசோதிப்பதற்கு பேரவையால் முடியவில்லை. அதற்குத் தேவையான பலமும் கட்டமைப்பும் தமிழ் மக்கள் பேரவையிடம் இருக்கவில்லை.

இப்பொழுதும் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தத் தேவையான பலம், அது பற்றி உரையாடுபவர்களிடம் உண்டா?

இது ஏறக்குறைய கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியின் மறு வடிவம்தான். அதை இன்னும் தெளிவாகச் சொன்னால், ஜனாதிபதி தேர்தல் என்ற ஒர் அரசியல் நிகழ்வை முன்வைத்து தமிழ் ஐக்கியத்தைக் கட்டி எழுப்புவது; தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்புவதுதான்.

ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக அதைச் செய்யத்தான் தமிழ் பரப்பில் ஆட்கள் இல்லையே? தமிழ்க் கட்சிகளை ஒன்றாக்குவதற்கு ஏதாவது ஒரு பலம் இருக்க வேண்டும். கட்சிகளைக் கூப்பிட்டுக் கருத்தரங்கை வைக்கலாம். ஆனால் கட்சிகளை ஒன்று திரட்டி இதைச் செய்யுங்கள் என்று நெறிப்படுத்த ஒரு பலமான அரசியல் கட்டமைப்பு வேண்டும். அது தமிழ் மக்களிடம் உண்டா? இல்லையென்றால் தமிழ் ஐக்கியத்தைப் போலவே தமிழ்ப் பொது வேட்பாளர் தெரிவும் நெருக்கடிக்கு உள்ளாகும்.

உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி இந்த விடயத்தில் ஆதரவளிக்காவிட்டால் அது வெற்றி பெறாது என்ற கருத்து குத்துவிளக்கில் உள்ள சில கட்சிக்காரர்களிடம் உண்டு. இதில் தன்னம்பிக்கை குறைவும் தாழ்வுச் சிக்கலும் உண்டு என்பதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். தன் சொந்தப் பலத்தில்; சொந்த உழைப்பில்; தான் சரியென்று கருதும் ஒன்றை வெற்றிபெறச் செய்வதற்கான திடசித்தம் குத்துவிளக்குக் கூட்டுக்குள் எத்தனை கட்சிகளிடம் உண்டு?

தமிழரசுக் கட்சி இந்த விடயத்தில் முடிவெடுக்க முடியாதபடி இரண்டாக நிற்கின்றது. அது நீதிமன்றத்தில் இருந்து வீட்டுக்குத் திரும்பும் வரையிலும் இந்த நிலைமை தொடரும். இவ்வாறு அக்கட்சி இரண்டாகி நிற்பது தென்னிலங்கை வேட்பாளர்களுக்குச் சாதகமானது.

ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் என்ற விடயத்தை தமிழ் மக்கள் உருப்படியாகச் செய்து முடிப்பார்கள் என்று தென்னிலங்கையில் உள்ள எந்த ஒரு வேட்பாளரும் நம்பவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்கள் பேரவையின் சுயாதீனக் குழுவோடு உரையாட சஜித் பிரேமதாச முயற்சித்தார். அவருடைய மனைவி “ஜெட் விங்” ஹோட்டலில் தங்கியிருந்து அதற்கான அழைப்பையும் எடுத்தார். இம்முறை சஜித் அந்த விடயத்தைப் பொருட்படுத்தவில்லை என்று தெரிகிறது. சுமந்திரனும் சாணக்கியனும் தனக்குச் சாதகமாக தமிழ் வாக்குகளைத் திரட்டுவார்கள் என்று அவர் நம்புகிறார் போலும். மனோ கணேசன், ரவூப் ஹக்கிம் போன்றவர்கள் தமிழ் வாக்குகளையும் முஸ்லிம் வாக்குகளையும் தன்னை நோக்கிச் சாய்க்கலாம் என்றும் அவர் நம்புவதாகத் தெரிகிறது. அதனால், தமிழ்ப் பொது வேட்பாளரைக் குறித்து அவர் அலட்டிக் கொள்ளவில்லை.

276238730_523328779139985_62592831040002

அப்படித்தான் ரணிலும் ஜேவிபியும். தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் சிங்கள வேட்பாளர்களுக்குப் பதட்டத்தை ஏற்படுத்தும் ஒரு வளர்ச்சிக்கு இன்னும் வரவில்லை. அதை நோக்கி தமிழ்க் கட்சிகள் கட்டமைப்பாக ஒன்றிணைையவில்லை.

அவ்வாறு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்தாலும், சிங்கள வேட்பாளர்களுடன் பேரம் பேசுவது என்ற தெரிவை முதன்மைப்படுத்துவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்துவதாக அமையலாம்.

ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரின் கோரிக்கைகள் தொடர்பாக குத்துவிளக்குக் கூட்டணியோ அல்லது சிவில் சமூகமோ இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. தமிழ்ப் பொது வேட்பாளரின் கோரிக்கைகள் சிங்கள வேட்பாளர்களுடன் பேரம் பேசக்கூடியவைகளாக அமைய வேண்டும் என்று குத்து விளக்குக் கூட்டணிக்குள் உள்ள சில கட்சிகள் கருதுவதாகத் தெரிகின்றது. அவ்வாறு சிங்கள வேட்பாளர்களை நோக்கித் தமிழ்ப் பொது வேட்பாளரின் கோரிக்கைகளை வளைப்பது என்பது, 13 ஐ அமல்படுத்துவது வரையிலும் போக முடியும். ஆனால்,தமிழ் மக்களின் கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்களை நோக்கி வளைப்பதற்கு ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் தேவையில்லை. தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதற்குத்தான் அது தேவை.

தமிழ்ப் பொது வேட்பாளர் தெரிவு எனப்படுவது பேரம் பேசலுக்கானது என்பது அதன் முதன்மை நோக்கம் அல்ல. முதன்மை நோக்கம் எதுவென்றால், தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்புவதும் தமிழ் மக்களின் ஐக்கியத்தை உலகத்துக்குக் காட்டுவதும் தமிழ் மக்களின் உச்சமான கோரிக்கைகளுக்குரிய ஆகப் பிந்திய மக்கள் ஆணையை பெறுவதும்தான். தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுவது தமிழ் ஐக்கியத்தின் குறியீடு. தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்பும் ஒரு தெரிவு. தமிழ் மக்களின் உச்சமான கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதித் தேர்தலை ஒரு மறைமுக பொதுசன வாக்கெடுப்பாகப் பயன்படுத்தும் ஒரு தெரிவு. தேர்தல் முடிவை தமிழ் மக்களின் ஆகப் பிந்திய மக்கள் ஆணையாக உலகத்துக்கு காட்டப்படலாம்.

மாறாக,பேரம் பேசுவதை அடிப்படையாக வைத்து சிந்தித்தால், அது தமிழ் மக்களின் கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்களை நோக்கி வளைப்பதில்தான் போய்முடியும். மேலும், பொது வேட்பாளர் உச்சமான கோரிக்கைகளை முன்வைத்தால் பேரம் பேசலுக்கான வாய்ப்புக் குறைந்து விடும். எந்த ஒரு சிங்கள வேட்பாளரும் அவரோடு பேரம் பேசி தனக்குரிய சிங்கள பௌத்த வாக்குகளை இழக்கத் தயாராக இருக்க மாட்டார்.

அதேசமயம், தமிழ் மக்களின் உச்சமான கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் ஆணையைப் பெறுவதற்குரிய மறைமுக வாக்கெடுப்பாக ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்தி அதில் தோல்வி கண்டால், அது தமிழ் மக்கள் ஒரு தேசமாக இல்லை என்பதை வெளியுலகத்திற்கு நிரூபித்து விடும் ஆபத்தும் உண்டு.  எனவே ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவு எடுத்தால், அதற்காகக் கூட்டாக உழைக்க வேண்டும். அர்ப்பணிக்க வேண்டும். அது ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்கான உழைப்பு என்பதைவிட, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான உழைப்பு என்பதே சரி.
 

https://www.nillanthan.com/6668/

Checked
Fri, 04/19/2024 - 11:37
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed