தலைக் கேசத்தை ஒரு கையால் கோதியவாறு, கழுத்திலே தொங்கவிடப்பட்டிருந்த கைக் கட்டின் வேதனையை மறந்து அழுத முகத்துடன் தாயின் வரவுக்காக ஏங்கிக் காத்திருந்தாள் வசந்தியின் மகள்.வசதி வாய்ப்பான குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் வசந்தி, கம்பீரமான அழகான கணனையும் ஆசைக்கு ஒரு மகனையும் ஒரு மகளையும் கொண்ட இனிமையான குடும்பம், சொற்ப காலத்திற்குள் அழகான நவீன வீட்டை நிர்மாணித்து வசந்தியின் மீதுள்ள காதலினால் அவ் வீட்டுக்கு "வசந்த மாளிகை" என நாமமும் சூட்டினான் வசந்தியின் கணவன் வரதன்.பாடசாலையில் ஒன்றாகப் படித்த காலத்தில் இருந்து இருவருக்கும் ஏற்பட்ட நட்பு இறுதியில் காதலாகி களியாணத்தில் முடிந்தது, உற்றார் உறவினர்கள், நண்பர்கள், ஊரவர்கள், தெரிந்தவர்கள் எல்லோரும் அழைக்கப்பட்டு சிறந்த பாதிரியார்களின் அசீர்வாதத்துடன் பிரமாண்டமாக நடைபெற்றது தான் வரதன் வசந்தி திருமணம். திருமணத்துக்கு வருபவர்களை மகிழ்ச்சிபடுத்துவதற்காக இன்னிசைக் கச்சேரியும் உண்ணுவதற்கு சுவையான சிறந்த சிற்றுண்டி மற்றும் உணவுகளெல்லாம் நினைக்கும் போது இப்போதும் நாவூறுகிறது.