கவிதைக் களம்

புரட்சியில் விழித்தோம்

3 hours 10 minutes ago
 
432882072_7154042677977178_7166801738279இன்று நாம்
 
பனிப் புயலின்
புரட்சியில் விழித்தோம்
எங்கள் நிலப்பரப்பு
மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது
வெள்ளைக் கொடி பிடித்து
சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம்
கட்டிடங்கள் பனியில் மூழ்கின
பள்ளிகள் களை இழந்தன
தபால் சேவை முடங்கியது
இப்போதைக்கு நான்
எங்கள் வீட்டில்
சிறை வைக்கப்பட்டுள்ளேன்
ஆனால்
கொஞ்ச நேரத்தில் நான்
பூட்ஸ் போடுவேன்
விண்வெளியில் நடப்பது போல
நிறை தண்ணீரில் மிதப்பது போல
வெளியில் உலாவுவேன்
வழியை மூடிய
பனியை அகற்றி
புதுப்பொலிவு செய்வேன்
எங்கள் குழந்தைகள்
இன்னும் சற்று நேரத்தில்
ஜாக்கெட்டுகளை அணிவார்கள்
அங்கு கூடுவார்கள்
குதிப்பார்கள் சறுக்குவார்கள்
ஆம்
பனிப் பொழிவின்
பெரு மௌனத்தின் பின்
இங்கு ஒரு
சிறு கலவரம் நடக்கவுள்ளது
 

நானும் ஒரு அடிவிட்டன்

6 days 14 hours ago

நானும் ஒரு அடிவிட்டன்

 

எண்பத் தைந்துகளின் பிற்பகுதி

பள்ளிக்கூடக் காலத்தில்

கலக்கல் கோலி…

கொழும்பில் இருந்தாலும்

அவசர அழைப்பில்

அல்வாயில் நிற்கும்  காலம்…

 

இறுதி ஆட்டமொன்று..

இறுக்கமான

இரண்டு குழுவும்…

இடையில் நடுவராக

உடுப்பிட்டியின்

உயர்ந்த ஜம்பாவான்….

ஆறடிக்கு மேல் உயரம்…

 

அதுதான் பரவாயில்லை..

பிரதம அதிதி.

பொலிசு  அதிகாரி…

அம்பயரின்…மைத்துனரம்..

அதுவும் பெரும்பான்மை இனம்..

 

மோதும் அணி இரண்டும்

ஏலவே பிக்கல் புடுங்கல் உள்ளவை

நடத்தும்..அணியும்

நமக்கெதிரானதுதான்….

ஆட்டம் ஆரம்பம்….

அடி உதையும் நடக்குது….

 

முதல் கோல் நமக்கு…

அம்பயரோ…ஆஃப்சைடு என்கிறார்…. கோல்

அடித்தவனோ..இல்லை கோல்

அம்பயர் ..மறுக்க  அடிதடி…

கோலிக்கு நின்ற  எனக்கு

கோபத்தின் உச்சம்…

 

கோதாரி விழுந்தது..

கோலிக்கு  நின்ற நான்

ஹோலி யாகமாறி..

ஆறடி அம்பயரின் பிடரியில்

அசத்தலான அடிவிட்டேன்..

ஆட்டமே அல்லோல கல்லோலம்

 

அம்பயர் சொன்னார்

ஆரடித்தாலும் பரவாயில்லை

அலிஷ்பாண்ட் போட்ட  பிளேயர்

அடித்ததுதான் பொறுக்க முடியவில்லை..

அந்த பொலிசு அதிகாரியும்

அம்பயர்…என்  மைத்துனன்

அவனை என் கண்முன்னால்

அடித்த அந்த பிளேயர்

ஆரென்றாராம்…

 

ஆரவாரம் இப்ப டி இருக்க..

ஆட்கள்  என்னைப் பிடித்து

அலிஸ்பாண்டையும் பறித்து

ஆளையும் உருமாற்றி

அல்வாயுக்கு அனுப்பிய கதை..

அப்புறம் ஆறடி

அம்பயர் என்றால்..

அந்தப் பக்கமே

அடியேன் இல்லை…

கார்பன் வெளிச்சம்

6 days 17 hours ago
சினிமாவுடன் வளர்ந்தோம். ஊர் தியேட்டர்களில் எந்தப் படம் வந்தாலும் பார்த்தோம். சில படங்களை, முக்கியமாக பல எம்ஜிஆர் படங்கள், பல தடவைகள் பார்த்தும் இருக்கின்றோம்.
 
இதில் சிலருக்கு தியேட்டர் மாடியில் உள்ள புரொஜெக்டர் அறைக்கு போகும் வாய்ப்பு கிடைத்தும் இருக்கும்.
 
*******
 
கார்பன் வெளிச்சம்
-------------------------------
வெளிப்பாட்டு முடிந்து
உள்பாட்டு ஓடி
இரண்டு மணிகள் அடித்த பின்
மின் வெளிச்சம் கலைந்து
கும்மிருட்டு சூழ
பளிச்சென்று வரும்
கண்ணைக் கூசும்
கார்பன் வெளிச்சம்
 
திரும்பி மாடியைப்  பார்த்தால்
தூசி எழும்பி மிதக்கும்
குவிந்திருந்து விரிந்து
வெள்ளித்திரையில் கொட்டி
கொட்டிக் கொண்டிருக்கும்
கார்பன் வெளிச்சம்
 
'அபூர்வராகங்கள்'
அந்த வயதிலும்
அன்றே புரிந்தது 
ஆனால் விடையில்லை இன்றும்
 
எல்லா காதலும் ஒன்றா
நல்ல காதல்
நல்லாவே இல்லை காதல்
இதை சொல்லுபவர் யார்
இரண்டு மனங்களையும் அறிந்த
இன்னொரு மனம் இங்கு உண்டா
 
இன்னொரு நாள்
'யாருக்காக அழுதான்'
நாகேஷ் யாருக்காகவோ அழ
பார்த்த நாங்கள் அவருக்காக அழுதோம்
  
அன்றிலிருந்து இன்றுவரை
உண்மை வேறொன்று
எப்போதும் அது ஒளித்தே இருக்குது என்ற
உண்மை விளங்க
திருடனையும் திருடரென்று
கள்வனையும் கள்வரென்று
வாய் சொல்லுகின்றது
 
இரண்டு புரொஜக்டர்கள்
ஒரு மணியில் எரிந்து முடியும்
கார்பன் குச்சி முடிய முன்
அடுத்த புரொஜக்டரை
அண்ணன் தயார் ஆக்கியிருப்பான்
என்னைத் தொட விடான்
எப்பவுமே சொல்வான்  
எனக்கு எதுவும் தெரியாது என்று
 
புரொஜக்டர் அறை
கொதிக்கும் நெருப்பாய்
அப்பப்ப ரீல்கள் அறும்
அவர்களும் கொதிப்பர்
அரை செக்கனில்
வெட்டி ஒட்டுவார்கள் பொசுங்கின ரீல்களை
 
விழுந்த ரீல் துண்டுகள்
என்னுடன் வீட்டிற்கு வரும்
பெட்டியில் ஒட்டி
வீட்டில் நான் படம் வெளியிட்டேன்
 
அங்கேயே வேலை
முன்னுக்கு போய்
பின்னுக்கு வந்தேன்
கார்பன் வெளிச்சம் ஒரு சதுர ஓட்டையால்
என்னுடைய கண் மறு சதுர ஓட்டையால்
திரையில் விழும்
 
குருவாக கமலும்
காளியாக ரஜனியும்
அரச கட்டளையும்
வசந்த மாளிகையும்
துணிவென்று ஜெய்சங்கர்
பணிவென்று சிவகுமார்
அழகாக ஶ்ரீதேவி
ஆர்ப்பாட்டமாக ஶ்ரீப்பிரியா
பாவப்பட்டது சுஜாதா என்று
என்னுடைய உலகத்தில்
உதித்தவர்கள் எல்லோரும்
கார்பன் வெளிச்சத்தில் உதித்தார்கள்
அன்று
 
திரை மாற்ற கணக்கெடுத்தனர் ஒரு நாள்
பைதகரஸ் தேற்றம்
அண்ணனும் அவர்களும் அறியாதது 
அறிந்து கணக்கை சொன்னேன்
இன்னொரு கணக்கு
சொன்னேன் அதையும்
இன்னும் ஒன்று
இன்னும் ஒன்று
எல்லாம் சரி
அதுவே எனக்கு
நானே வைச்ச வெடிகுண்டு
 
திரைமாற்ற வந்தவர்
அடிக்காத குறை
அண்ணனுக்கும் நண்பருக்கும்
நல்லா படிப்பானடா
படிக்க வையுங்கடா
நாசமாய்ப் போனவங்களே
திட்டித் தீர்த்தார் 
 
படித்தால் படி
விட்டால் விடு
ஆனால் தியேட்டர் பக்கம்
வந்தாய்..... செத்தாய் என்றான் அண்ணன் 
செய்யக்கூடியவன் அவன் 
 
வெளிச்சத்தின் வெம்மை
சுடவேயில்லை பின்னர்
 
பின்னர்
கார்பனும் நின்று போனது
விஞ்ஞானம் வளர்ந்ததால்
 
இந்நாளில் கூட
கீற்றாக சூரியன்
இலையால் விழ
கார்பன் வெளிச்சமே
கண்ணில் தெரிகின்றது.

வெள்ளிக்கிழமை வேலை

1 week 6 days ago
வெள்ளிக்கிழமை வேலை
----------------------------------------
இன்று வெள்ளிகிழமை, ஏன் வேலை செய்ய வேண்டும் என்று மனம் கேட்கின்றது. உண்மையைச் சொன்னால் அது ஒவ்வொரு திங்கட்கிழமையிலிருந்தும் இதே கேள்வியையே கேட்கின்றது.
 
முன்னர் ஒரு காலத்தில், வேலை செய்ய ஆரம்பித்து இருந்த நாட்களில், நாங்கள் இவ்வளவு வயது பிந்தி வேலை செய்யத் தொடங்கியிருக்கின்றோம், வேறு பல நாட்டவர்கள் 21 வயதுகளிலேயே ஆரம்பித்து விடுகின்றார்கள் என்று கவலை கூட பட்டும் இருக்கின்றோம். படித்து முடிப்போம் என்று மூச்சைப் பிடித்துக் கொண்டு படித்து முடிக்கவே எங்களுக்கு 26 அல்லது 27 அல்லது அதற்கு மேலும் வயதாகி விடுகின்றது. 
 
ஆனால், அந்த கூடுதலான ஐந்தாறு வருடங்களாவது நினைவுகளாக இன்று மிஞ்சியதே என்று இப்பொழுது ஆறுதலாக இருக்கின்றது.
 
வேலை தான் லட்சணம் என்றாகிவிட்டது. போங்கடா, நீங்களும் உங்கட வேலையும் என்று எங்களால் விட்டுவிட்டு ஓடவும் முடியாது. 
 
எங்களால் முடிந்தது  அப்படி ஓடிப் போய் எழுதும் ஒருவரின் எழுத்துகளை வாசிப்பது மட்டுமே. 
 
கீழே இருப்பது லஷ்மி மணிவண்ணனின் கவிதை ஒன்று. மிக அருமையான இன்றைய கவிஞர்.     
------------------------------------------------------------------------------
 
எனக்கு நன்றாக சைக்கிள் ஓட்டத் தெரியும்
நீங்கள் என்னிடம் வேறு எதையோ எதிர்பார்க்கிறீர்கள்
 
டியூப் லைட் முதுகில் கட்டி
தலைகீழாகவும்
சைக்கிள் ஓட்டுவேன்
 
விண்ணில் கட்டியிருக்கும் அந்தரக்கயிற்றில்
இந்த துருவத்தில் இருந்து அந்த துருவத்திற்கு
சைக்கிள் ஓட்டுவது எனக்கு
தண்ணீரில் நீந்துவது போல
 
முன்சக்கரத்தில் நிறுத்தி பின்சக்கரத்தை
மேலுயர்த்தும் போது
மேளதாளங்கள்
முழங்கட்டும்
 
ஆனால் நீங்கள் வேறென்னவோ
கேட்கிறீர்கள்
 
கரகரக்கும் குரலில்
தகரத்தில் ஒலி  கேட்கிறதா உங்களுக்கு
பதிலாக

அதனை உங்களுக்கு கேட்பதற்காகத் தான்
வைத்திருக்கிறேன்

வெறுப்பு!

2 weeks 3 days ago

large.IMG_2709.JPG.1138eac431ec88b464967ac61cffbbaf.JPG

வெறுப்பு!

***********

அரசமரக் கன்றுகளை

அழித்துக்கொண்டிருந்தான்

அந்தத்தேசத்து

மனிதனொருவன்

எத்தனையாண்டுகள்

வாழும் மரத்தை

ஏன்..

அழிக்கிறாய்யென்றான்

வழிப்போக்கன்.

 

எனக்கும் கவலைதான்

என்னசெய்வது

வருங்காலப் பிள்ளைகளும்

வாழவேண்டுமே என்று

பெரு மூச்சுவிட்டான்

அந்த மனிதன்.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி.

எச்சரிக்கை

3 weeks ago

எச்சரிக்கை

-----------
வீட்டில் குடியிருக்கும் எலிகளுக்கு
 
நான் விடுக்கும் கடைசி எச்சரிக்கை இது
 
எச்சரிக்கை
நீங்கள் இங்கிருப்பது எனக்குத் தெரியும்
 
அங்கங்கே இருக்கும் கறுப்பு எச்சங்கள்
உங்களின் மிச்சங்களே
 
இருட்டில் உருட்டுவதும்
 
பகலில் ஒழிவதுமாக
 
நீங்கள் ஓடித் திரிவதும் தெரியும்
 
தக்காளிச்செடியில் நின்றதாகவும்
அம்மணி அழுதார்
 
எலிக்கு ஏனய்யா
தக்காளி?
 
ஏக பிரதிநிதியாக
இங்கு எல்லாம் உங்களுக்காகவா?
 
முட்டைக்கோதுகள் ரேடியேட்டருக்குள் கிடக்க
 
'என்ன பாம்பு வளர்க்கிறீர்கள்?' என்று
 
தள்ளி நின்று கேட்டார் மெக்கானிக்
 
பின்னர்
மொத்தமாக ஒரு பில் கொடுத்தார்
 
இனிமேலும் பொறுக்க முடியாது
 
நேற்றிரவு கூரைக்குள் உங்களின் இரு குரல்கள்
ஒன்று கொஞ்சம் சிணுங்கியது
 
ம்ம் ......... 
குடும்ப வாழ்க்கை ஆரம்பிக்கிறீர்கள் போலிருக்கு 
 
ஒரு பூனையைக் கொண்டு வந்தால்
உங்கள் கதை முடியும்
 
பின்னர் பூனையை என்ன செய்வது?
 
பகலிலும் பிராண்டுமே பூனை
 
ஒரே வழி பொறி தான்
 
உள்ளே வா
உட்கார்ந்து சாப்பிடு 
என்று கூப்பிட்டு
போட்டுத் தள்ளலாம் என்றிருக்கின்றேன்
 
இப்பவும் நீங்கள் தப்பி வாழ 
ஒரு வழியிருக்குது
 
அம்மணியின் கண்ணில் விழாதே
 
அவவின் பொருட்களை தொடாதே
 
சத்தமில்லாமல்
ஓரமாக இருந்து விட்டு போங்கள்
 
நான் பொறியை திருப்பிக் கொடுக்கின்றேன்.

ஒரு கோப்பை தேநீர்

3 weeks 2 days ago
சிறு வயதில், ஊரில் இருந்த நாட்களில், வீட்டிற்கு அப்பாவின் நண்பர்கள் எந்நேரங்களிலும் வருவார்கள். பலர் தேநீர் கேட்பார்கள். கேட்காதவர்களுக்கும் தேநீர் கொடுக்கப்படும், அது ஒரு உபசரிப்பு, மரியாதை போல. சீனியின் அளவு, சாயத்தின் அளவு போன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை.
 
இப்பொழுது காலம் மாறி, இடமும் மாறிவிட்டது. கேட்பதற்கும் தயக்கம், கொடுப்பதற்கும் தயக்கம், அளவுகள் வேறு தனித்தனியாகிவிட்டது.
 
**
 
ஒரு கோப்பை தேநீர்
--------------------------------
வீட்டுத் தவணைக் கட்டணம்
வாகன தவணைக் கட்டணம்
வீட்டுக் காப்புறுதி
பொருள் காப்புறுதி
மருத்துவக் காப்புறுதி
கண்ணுக்கு தனிக் காப்புறுதி
பற்களுக்கு புறம்பாக இன்னொன்று
மரணக் காப்புறுதி வரை கட்ட வேண்டும்
 
தண்ணீர்
காஸ்
கரண்ட்
இன்டர்நெட்
இரண்டு வகை ஃபோன்கள்
குப்பை
இவை ஒவ்வொன்றுக்கும் 
தனித்தனி கட்டணங்கள்
 
ஆர்வம் அதிகமானால்
நெட்ஃபிளிக்ஸ்
பிரைம்
ஐபி டிவி பாக்ஸ்
கேபிள்
சாட்டிலைட்
யூடியூப் டிவி
ஸ்லிங்
இப்படியும் சில செலவுகள் இருக்கும்
 
கோவில்கள்
சங்கங்கள்
மையங்கள்
அமைப்புகள்
நிறுவனங்கள்
இவையும் கையை எதிர்பார்க்கும்
 
விழாக்கள்
கொண்டாட்டங்கள் 
விருந்தினர்கள்
தவிர்க்க முடியாதவை
 
பயணங்கள்
கட்டாயப் பயணங்கள்
சொந்தங்கள்
பொறுப்புகள்
கடமைகள்
இதில் எதையும் விடவும் முடியாது
 
வழமையான வீட்டுச் செலவுகள்
பள்ளிச் செலவுகள்
பள்ளிக்கு பின் வரும் செலவுகள்
இவை ஒரு தனிக் கணக்கு
 
சாஸ்த்ரிய கலைகள்
அரங்கேற்றம்
சாமத்திய வீடு என்றால்
கட்டுக் கட்டாக வேண்டும்
 
இத்துடன்
சேமிக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர்
 
இவைக்காக
கண் முழித்தால் 
கண் மூடும் வரை 
ஓடிக் கொண்டிருக்கும் ஒரு மனிதன்
 
வீடு தேடி வந்தால்
 
இருக்க விட்டு
 
ஒரு கோப்பை தேநீர் கொடுங்கள்.

ஒரு வழிச் சாலை

3 weeks 4 days ago
கலிபோர்னியாவில் இடைவிடாமல் மழையும், பனியும் ஆக இருக்கின்றது. போன வருடமும் இவ்வாறே. கொட்டும் பனியிலும், கடும் காற்றிலும் ஒரு சோடி கழுகளின் கூட்டையும், அவைகளின் முட்டைகளையும் இங்கு சிலர் பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள். இது இங்கு செய்திகளில் வந்து கொண்டிருக்கின்றது
 
*************  
 
ஒரு வழிச் சாலை
---------------------------

இரண்டு வெண்தலைக் கழுகுகள்

 
அவற்றுக்கு பெயரும் உள்ளது
 
ஒன்று லிபர்ட்டி
மற்றது கார்டியன்
 
மூன்று முட்டைகள் போட்டு
மாறி மாறி அடைகாக்கின்றன
 
வாழும் நாள் முழுதும்
இவை சோடி மாறுவதில்லை
 
கூடும் மாறுவதில்லை
 
ஒவ்வொரு வருடமும்
தண்டும் தடியும் கொடியும்
புதிதாக அதே கூட்டில் 
அகலமாகச் சேரும்
 
இப்பொழுது
கொட்டும் பனியிலும்
பலத்த காற்றிலும்
ஒரு முட்டை உடைந்து விட்டது
 
பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
மீதமிருக்கும்
இரண்டு குஞ்சுகளாவது
தப்ப வேண்டும் என்று
பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்
 
நேற்று
விளக்கேற்றிய போது
நானும் கும்பிட்டேன்
 
குடுமபத்திற்கான
நண்பர்களுக்கான
தெரிந்தவர்களுக்கான
ஈழத்துக்கான
இலங்கைக்கான
இந்தியாவிற்கான
உக்ரேனுக்கான
ரஷ்யாவிற்கான
பலஸ்தீனியர்களுக்கான
யூதர்களுக்கான
 
இப்பொழுது
இரண்டு கழுகுகளுக்கும்
அவைகளின் இரண்டு முட்டைகளுக்குமான
 
என் 
பழைய மற்றும் புதிய 
பிரார்த்தனைகள்
 
விண்வெளியில்
சென்று கொண்டேயிருக்கின்றன
கேட்பார் ஒருவரைத் தேடி.
 

மனிதம் செத்துவிட்ட மகாத்மாபூமி!

3 weeks 4 days ago

large.d5de1b69-c9bc-426e-8418-6314de10626a.JPG.d16d0dc22261d1a44c6e831357716552.JPG

 

மனிதம் செத்துவிட்ட மகாத்மா பூமி!

*****************************************

வாசலை திறந்து கொண்டு-நீ

வருவாயென்றுதானே

ஏங்கிக் கிடந்தது

எம் தேசம்…

விடுதலை பெற்றபின்னும்

தூக்கு கயிறை மாட்டி

தூங்கவைத்து

அனுப்புமென்பது

யாருக்குத் தெரியும்.

          😢

உன்னைப்போலவே

உன் அம்மாவும்

ஒவ்வொருநாளும்

செத்து செத்து..

உன்வரவுக்காகவே

காத்துக் கிடந்தாள்-எனி

அவளுக்கு ஆறுதல் சொல்ல

யாரால் முடியும்

இந்த பூமியில்.

 

ஆத்மார்த்த அஞ்சலிகள்🙏

பசுவூர்க்கோபி.

அங்கே நான் உன்னை..#பழநிபாரதி

2 months ago
கவிஞர் பளநிபாரதியவர்களின் கவிதை  ஒன்று படிக்கும் போது இங்கு பதிவிடத் தோன்றியது அதனால் இங்கு இணைக்கிறேன்..எமது நாடு பற்றியது.
 
 
அங்கே நான் உன்னை
அழைத்துச் செல்லமாட்டேன்
அது கருணையற்ற நிலம்
பிரிவின் யுகாந்த வெள்ளத்தில்
அது மூழ்கடிக்கப்பட்டது
காதலற்ற சொற்களின் முள்வேலியால்
சுற்றி வளைக்கப்பட்டது
அங்கே நான் உன்னை
அழைத்துச் செல்லமாட்டேன்
காதலர் சந்தித்த மரங்கள்
வெறுமையின் காலவெளியில்
கல்மரங்களான காடு
கைவிடப்பட்ட இதயங்கள்
நடுகற்களாக
புதையுண்டிருக்கின்றன
சபிக்கப்பட்ட காதலர்
அங்கே
கற்களை உண்ணும் புறாக்களாக
அலைந்து திரிகிறார்கள்
அங்கே நான் உன்னை
அழைத்துச் செல்லமாட்டேன்
வாழ்வை விட அழகானவள் நீ
மரணத்தைவிட உறுதியானவன் நான்
அங்கே நான் உன்னை
ஒருபோதும்
அழைத்துச் செல்லமாட்டேன்
 
No photo description available.
 
 
 
 
 
 

வாழ்வு தந்தவள் இவளே!

2 months 1 week ago

வாழ்வு தந்தவள் இவளே!

*****************************

எழில் கொஞ்சும் மலைகள் தந்தாய்

ஏர் பூட்ட வயல்கள் தந்தாய்

பயிர் வளர மழையும் தந்தாய்

பார் சிறக்க பல்லுயிர்கள் தந்தாய்.

 

அழகான அருவி தந்தாய்

அகிலம் சுற்றி கடலும் தந்தாய்

எரிகின்ற தீயும் தந்தாய்

இளவேனிற் காற்றும் தந்தாய்.

 

உயர்வான வானம் தந்தாய்

உருண்டோடும் மேகம் தந்தாய்

வளமான காடு தந்தாய்

வலிமைமிகு மரங்கள் தந்தாய்.

 

சூரியன்,மதியும் தந்தாய்

சுதந்திர பறவைகள் தந்தாய்

கடல் நிறைந்த உயிர்கள் தந்தாய்

கரையோரம் காட்சிகள் தந்தாய்.

 

கலர்,கலராய் மலர்கல் தந்தாய்

கண்குளிர பலவும்  தந்தாய்

இரவு பகல் எமக்குத் தந்தாய்

எம் வாழ்வு சிறக்கத் தந்தாய்.

 

இத்தனையும்  தந்த உன்னை

மறக்கலாமோ?

இடையில் வந்த பணத்தின்பின்

ஓடலாமோ?

செத்தபின்பும் செயற்கை 

என்றும் வருவதில்லை

சிறந்த இந்த இயற்கை

எம்மைப் பிரிவதில்லை.

அன்புடன் -பசுவூர்க்கோபி.

17.01.2024

மாதங்களில் நான் மார்கழி.

3 months 1 week ago

மாதங்களில் நான் மார்கழி.

 

வீதியெங்கும் மாவிலைத் தோரணங்கள்  

வாசலெல்லாம் வண்ணக்  கோலங்கள் 

பூசணிப் பூக்கள் மத்தியிலே  

சாணியில் பிள்ளையார் பூவினிலே  

 

மெல்லிய பனியுடன் மழைக்காலம் 

வகை வகையாய் பறவைகள் இசைக்கோலம் 

நிரை நிரையாய் எறும்புகள் ஊர்வலம் 

அவசர கதியில் மாந்தர் நகர்வலம் 

 

கோடை முடிந்தால் வந்திடும் மார்கழி 

வாடைக்காற்றும் வந்து வாட்டிடும் 

பீடை மாதமென்பார் பேதையர் 

சாடையினால்  தை   பிறக்கட்டுமென்பர் சோதிடர் 

 

பெருவிழாக்கள் குறைந்தாலும் 

திருவிழாக்கள் களை கட்டும் 

ஓதுவார் இறைபுகழ் ஓதிச் செல்ல 

சாதுக்கள் பஜனையில் கூடிச்செல்வர் 

 

அடிகளின் திருவெம்பாவை திக்கெட்டும் ஒலிக்க 

கோதையின் திருப்பாவை காற்றினில் தவழுவதால் 

மாதங்களில் நான் மார்கழி 

என்றே பகல்கின்றான் மாதவனும் .......!

 

ஆக்கம் :   சுவி ......!  

 

Checked
Thu, 03/28/2024 - 16:25
கவிதைக் களம் Latest Topics
Subscribe to கவிதைக் களம் feed
texte-feed
https://www.yarl.com/forum3/forum/214-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/