தமிழகச் செய்திகள்

வெள்ளக்காடான தென் மாவட்டங்கள் - கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் நிலைமை என்ன?

3 months 1 week ago
தென் மாவட்டங்களில் கனமழை
17 டிசம்பர் 2023, 14:43 GMT
புதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர்

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய தென் மாவட்டங்களில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

மேலும் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம். இந்நிலையில் தென் மாவட்டங்கள் பலவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

சமீபத்தில் தான் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் அருகில் உள்ள மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல அணைகள் நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஓடி கொண்டிருக்கிறது.

 
4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
படக்குறிப்பு,

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலியில் நிரம்பி வழியும் அணைகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதீத மழையால் அங்குள்ள பாபநாசம் அணை, மணிமுத்தாறு அணை உள்ளிட்டவற்றில் நீர் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் இங்கிருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று காலை முதல் நீடித்து வரும் கனமழையால் பிற்பகல் 2 மணி நிலவரப்படி பாபநாசம் அணைக்கு சுமார் 20,000 கன அடி தண்ணீர் வந்துள்ளது. அதேபோல் மாஞ்சோலை மலைப்பகுதியில் கொட்டி தீர்க்கும் கனமழையால் மணிமுத்தாறு அணைக்கு தண்ணீர் வரத்து 17,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

பாபநாசம் அணை 143 அடி கொள்ளவு மட்டுமே என்பதால் ஏற்கனவே அது 85 சதவீதம் நிரம்பிய நிலையில் விரைவில் அது நிறைய வாய்ப்புள்ளது. எனவே பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பாபநாசம் அணையில் இருந்து வெறும் 3000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் தற்போது வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

திருநெல்வேலி நகரம்
4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
படக்குறிப்பு,

தென்காசியில் மழைநீரோடு கழிவுநீர் கலந்துள்ளது

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலப்பாளையம், பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகர், பெருமாள்புரம், என் ஜி ஓ காலனி போன்ற பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

மேலும் திருநெல்வேலி டவுன், களக்காடு, திசையன்விளை பகுதியில் உடன்குடி சாலை, நேருஜி கலையரங்கம் மற்றும் செட்டிகுளம் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்த பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மீனவர்கள் வாழ்க்கை ஸ்தம்பித்தது

தூத்துக்குடி சாத்தான்குளம் ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக 2 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 400 விசைப்படகு மீனவர்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், பைபர் படகு மீனவர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
தென் மாவட்டங்களில் கனமழை
குற்றால அருவிகளுக்கு செல்ல தடை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காலையிலிருந்து பெய்த தொடரும் கனமழையின் காரணமாக திருவேங்கடம் சாலையில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து வெள்ளப்பெருக்கு போல் ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றாலம் மெயின் அருவி, பழைய அருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
படக்குறிப்பு,

கூடங்குளம் அதிகாரிகள் குடியிருப்பில் வெள்ளம்

கூடங்குளம் அணுமின் நிலையப் பகுதியில் நிலைமை என்ன?

கூடங்குளம் பகுதியிலும் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், கூடங்குளம் அனு விஜய் நகரியம் வளாகத்திற்குள் வெள்ளம் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்துள்ளனர்.

இந்த பகுதியில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்ற கூடிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

சனிக்கிழமையன்று தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் கொடுத்திருந்த நிலையில், ஞாயிறு(இன்று) அன்று பெய்த கனமழையால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த பகுதிகளில் மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுத்துள்ள நிலையில் இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு 18ம் தேதியன்று விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள் அடிப்படை தேவைகளுக்கு மட்டும் குறைந்த அளவில் பணியாளர்களை கொண்டு இயங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரலாறு காணாத மழை

சமீபத்தில் சென்னையில் பெய்த மழையே வரலாறு காணாத மழை என்று வானிலை நிபுணர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் தற்போது பாளையங்கோட்டையில் 4.30 மணிநேர நிலவரப்படி 26செமீ மழை பெய்துள்ளது. இதுவே 29ஐ தாண்டினால் கடந்த 150 வருடங்களில் இந்த பகுதியில் பெய்த அதிகமான மழை இதுவே என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் வானிலை நிபுணர் பிரதீப்.

தென்மாவட்டங்களுக்கு விரைந்த மீட்புக்குழு

கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் தூத்துக்குடி மற்றும் தென்காசிக்கு தேசிய பேரிடர் மீட்புகுழு விரைந்துள்ளது. என்டிஆர்ஃஎப் சார்பில் ஒரு அணிக்கு 25 பேர் என்ற கணக்கில் 4 அணிகள் தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடிக்கு சென்றுள்ள அணியே திருநெல்வேலி மாவட்டத்திலும் மீட்பு பணியில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், முதலுதவி மருந்துகள், படகுகள், இயந்திரங்கள் என தயார் நிலையில் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மக்களை தங்க வைக்கும் முகாம்கள், மீட்பு பணிகள் மற்றும் தேவையான அவசர பணிகளை தயார் படுத்தி வருகின்றனர்.

2 நாட்களில் 50 செ.மீ. மழை பெய்ய வாய்ப்பு

தற்போது பெய்யும் மழை கனமழை முதல் அதிகனமழையாக தொடரும் என்று அறிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதையடுத்து, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அரசு நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இந்த மழை இன்னும் அதி கனமழையாக உருவாகும் என்றும் செவ்வாய்க் கிழமைதான் இதன் வேகம் குறையும் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப். அடுத்த 48 மணி நேரத்திற்கு 30 முதல் 50 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c28y7ygkmk3o

தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை - என்ன நடந்தது?

3 months 1 week ago
தோனி போட்ட வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாள் சிறை: என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 15 டிசம்பர் 2023
    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ஐபிஎஸ் அதிகாரி ஜி. சம்பத் குமாருக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்துள்ளது.

தோனி தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தையும் சென்னை உயர் நீதிமன்றத்தையும் இழிவுபடுத்தும் வகையில் சம்பத் குமார் கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த வழக்கில், சம்பத் குமாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவகாசம் கிடைத்துள்ளது. மேல் முறையீட்டுக்கு சம்பத் குமார் கோரிக்கை வைக்கவில்லை என்றாலும், தண்டனை நிறுத்தப்படுவதற்கான முடிவை நீதிமன்றமே எடுத்தது.

கடந்த 2014ஆம் ஆண்டு தோனி, சம்பத் குமார் மீது 100 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு தொடுத்தார். ஐபிஎல் சூதாட்ட ஊழலில் தோனி தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டியதற்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டது.

 
தோனி தொடர்ந்த வழக்கில் ஐ பி எஸ் அதிகாரிக்கு  15 நாள் சிறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாகத் தனது கூற்றை வழங்கியிருந்த சம்பத் குமார், நீதிமன்றம் சட்டத்தின் பாதையிலிருந்து விலகுவதாகக் குறிப்பிட்டிருந்தார். ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி முட்கல் கமிட்டி, அறிக்கையை சரியாகக் கையாளவில்லை என்றும் தெரிவித்திருந்த சம்பத் குமார், உச்சநீதிமன்றம் சில ஆவணங்களை சிபிஐக்கு வழங்காதது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.

தோனி தனது மனுவில், சம்பத் குமாரின் இந்தக் கருத்துகள் நீதித்துறை மீது இழிவானவை மற்றும் அவமதிப்பானவை என்றும், அவரது கருத்துகளின் மூலம் நீதித்துறையின் நேர்மையைக் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், சம்பத் குமாரின் கருத்துகளுக்காக கடுமையான நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கை ஆய்வு செய்த தமிழ்நாடு தலைமை வழக்கறிஞர் ஆர். சுண்முகசுந்தரம், தோனிக்கு அவமதிப்பு வழக்கில் மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார். அந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

தோனி தொடுத்த ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு
தோனி தொடர்ந்த வழக்கில் ஐ பி எஸ் அதிகாரிக்கு  15 நாள் சிறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்திருப்பதாக 2013ஆம் ஆண்டு, குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. இது தொடர்பாக டெல்லி காவல்துறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய ஸ்ரீசாந்த், அஜித் சந்திலா, அன்கீத் சவன் ஆகியோரைக் கைது செய்தது.

அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்து, நீதிமன்ற வழக்குகள் பலவும் நடந்தன. ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரிக்க, நீதிபதி முகுல் முட்கல் கமிட்டியை உச்சநீதிமன்றம் 2014ஆம் ஆண்டு மே மாதம் நியமித்தது.

இந்திய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்.ஸ்ரீநிவாசன், அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் இணை உரிமையாளர் ராஜ் குந்த்ரா மற்றும் 12 வீரர்களின் பங்கு குறித்து விசாரிக்க இந்த கமிட்டி நியமிக்கப்பட்டது.

இந்த கமிட்டியின் அறிக்கை 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

 
தோனி தொடர்ந்த வழக்கில் ஐ பி எஸ் அதிகாரிக்கு  15 நாள் சிறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த விவகாரத்தில் தனது மதிப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக, ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் மற்றும் இந்த அறிக்கை குறித்து விவாதம் நடத்திய ஊடகத்தின் மீதும் தோனி ரூ.100 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கை 2014ஆம் ஆண்டு தொடுத்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த அந்த ஊடகம், கமிட்டியின் முன்பு சம்பத் குமார் கொடுத்த அறிக்கையைத்தான் தாங்கள் செய்தியாக வெளியிட்டதாகத் தெரிவித்தனர்.

தேசிய அளவில் முக்கியமான விவகாரம் ஒன்று ஊடகங்கள் பேசுவதைத் தடுக்க தோனி நினைக்கிறார் என்றும் கூறியிருந்தது.

 
தோனி வழக்கை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் மறுப்பு
தோனி போட்ட வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாள் சிறை: என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோனி தொடுத்த மானநஷ்ட வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

சம்பத் குமார் க்யூ பிரிவின் காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது, ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிகாரி என்ற முறையில், கமிட்டியின் முன்பு சமர்ப்பித்த அறிக்கையை வைத்துக்கொண்டு அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்வது சரியல்ல என்று கூறி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் வழக்கின் விசாரணை தொடங்கவுள்ள நேரத்தில், தோனி தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய முடியாது என்று 2021ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.

எனவே, உச்ச நீதிமன்றத்தில், சம்பத் குமார் இந்த விவகாரம் குறித்து எழுத்துப்பூர்வமான மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் சம்பத் குமார் கருத்துகளைத் தெரிவித்திருந்தார் என்று அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை 2022ஆம் ஆண்டு தொடர்ந்தார் தோனி.

 
தோனி தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
தோனி தொடர்ந்த வழக்கில் ஐ பி எஸ் அதிகாரிக்கு  15 நாள் சிறை

அவர் தனது மனுவில், 2014ஆம் ஆண்டு தாம் தொடுத்த வழக்குக்கு 2021ஆம் ஆண்டுதான் ஐபிஎஸ் அதிகாரி பதிலளிக்க விரும்பியுள்ளார் என்றும், அவரது கூற்றைப் படிக்கும்போது, மிக அதிர்ச்சிகரமான வகையில், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

“உச்சநீதிமன்றம் நீதியின் பாதையிலிருந்து தனது கவனத்தைத் திருப்பிவிட்டதாக சம்பத் குமார் குறிப்பிட்டுள்ளார்” என்று தோனி தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தோனி தொடர்வதற்குக் காரணமே வாய்ப்பூட்டு உத்தரவு பெறுவதற்காக என்றும், தோனி நியமித்திருக்கும் வழக்கறிஞரை பார்க்கும்போதே இந்த வழக்கின் பின்னால் உள்ள திட்டம் தெரிகிறது எனவும் குமார் தெரிவித்திருப்பதாக தோனி தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை எடுத்துக்கொண்ட நீதிமன்றம், ஐபிஎஸ் அதிகாரியின் கூற்று நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் கூட்டாளியாக இருக்கிறது எனக் கூறுவது போல் உள்ளது என்று தெரிவித்தது. எனவே தோனி தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க உத்தவிட்டது.

இந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், நீதிமன்ற அவமதிப்புக்காக ஐபிஎஸ் அதிகாரி ஜி.சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

https://www.bbc.com/tamil/articles/cpexwzxkgkqo

ஏமனில் பணம் கொடுத்தால் மரண தண்டனையிலிருந்து தப்பி விடலாமா? நிமிஷா பிரியா வழக்கின் பின்னணி என்ன?

3 months 2 weeks ago
டெல்லி நீதிமன்றம், ஏமன், இந்தியா, கேரளா, மரண தண்டனை
படக்குறிப்பு,

கேரள செவிலியர் நிமிஷா

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 14 டிசம்பர் 2023, 06:07 GMT
    புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர்

ஏமன் நாட்டில் மரண தண்டனை வழங்கப்பட்டுச் சிறையில் இருக்கும் கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா பிரியாவை விடுவிக்க அவரது குடும்பத்தின் தரப்பில் ஒரு பெரிய போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், நிமிஷாவின் குடும்பம், கொலை செய்யப்பட்ட ஏமன் நாட்டைச் சேர்ந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கினால் விடுதலை கிடைத்துவிடும் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

இந்நிலையில் இது ‘ஏமனில் கொலை செய்துவிட்டுப் பணம் கொடுத்தால் தப்பித்துவிடலாம்’ என்பதுபோன்ற பிம்பத்தைத் தோற்றுவிப்பதாகக் கூறுகிறார்கள் நிமிஷாவை விடுவிக்கப் போராடி வருபவர்கள்.

பணத்தைவிட இந்த வழக்கில் முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது.

அது, கொலை செய்யப்பட்டவரின் குடும்பம் தரும் மன்னிப்பு.

இந்த மன்னிப்பைப் பெறவே தாம் முயன்று வருவதாகவும், அதற்காகத்தான் அவர்கள் ஏமன் செல்லவிருப்பதாகவும் கூறுகின்றனர், நிமிஷாவை விடுவிக்கப் போராடி வருபவர்கள்.

 
என்ன வழக்கு?

2017-ஆம் ஆண்டு ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்ற உள்ளூர்வாசியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு ஏமனின் மத்திய சிறையில் இருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த 34 வயதான செவிலியர் நிமிஷா பிரியா.

மரண தண்டனையை ரத்து செய்யக் கோரிய அவரது மேல்முறையீட்டு மனுவை கடந்த நவம்பர் 13-ஆம் தேதி ஏமனின் தலைமை நீதித்துறை கவுன்சில் நிராகரித்தது. இதனால், மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு ஏமனின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நிமிஷா பிரியா.

ஏமன் நாட்டில் ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ளதால் மரண தண்டனையில் இருந்து தப்ப மற்றொரு வாய்ப்பு நிமிஷாவுக்கு உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மன்னிப்பைப் பெற்று இழப்பீட்டுத் தொகை செலுத்தி மரண தண்டனையில் இருந்து விடுதலையாவதே நிமிஷாவிற்கு இருக்கும் அந்த ஒரே வாய்ப்பு.

ஆனால், ஏமன் நாடு ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கும் ஏமன் அரசுக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. ஹூதி கிளர்ச்சியாளர்களை இந்திய அரசு அங்கீகரிக்கவில்லை.

எனவே இந்திய குடிமக்கள் ஏமனுக்கு செல்வது ஆபத்தானதாக இருக்கும் என இந்திய அரசு கருதுகிறது. எனவே இங்கிருந்து நிமிஷாவின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் சென்று அவரை மீட்பதில் சிக்கல் நிலவி வந்தது.

 
ஏமனுக்கு செல்ல அனுமதி அளித்த டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி நீதிமன்றம், ஏமன், இந்தியா, கேரளா, மரண தண்டனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஏமன்

இது குறித்து முன்னர் பிபிசியிடம் பேசியிருந்த நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி. "நான் ஏமனுக்கு சென்று அவர்களிடம் மன்னிப்பு கேட்பேன். என் உயிரை எடுத்துக்கொள்ளுங்கள், மகளை மன்னித்துவிடுங்கள் என அவர்களிடம் கேட்பேன்," என்று கூறினார்.

நிமிஷாவை மீட்க ஏமன் செல்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அங்கு ராஜ்ஜிய ரீதியான கட்டமைப்பு இல்லை என்ற காரணத்தைக் கூறி இதற்கான அனுமதியை இந்திய அதிகாரிகள் நிராகரித்தனர். இதைத் தொடர்ந்து நிமிஷாவின் தாயார் பிரேமா டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார்.

சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில் குழு சார்பில் (Save Nimisha Priya International Action Council) டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பிரேமா குமரியை தங்கள் கவுன்சிலை சேர்ந்த இரு உறுப்பினர்கள் உடனிருந்து அழைத்துச் செல்வார்கள் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஏமனுக்கு நிமிஷாவின் தாயார் மற்றும் அவருடன் மேலும் ஒரு நபரும் பயணிக்க அனுமதி அளித்துள்ளது. இந்த பயணத்திற்கு அவர்கள் மத்திய அரசைச் சாராமல், சொந்த பாதுகாப்பை தாங்களே உறுதி செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஏமன் செல்ல டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தனது பயணம் தொடர்பாக ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறும், பயண விவரங்களையும் முழுமையாக தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

 
ஏமன் வரலாற்றில் இது முதல்முறை
டெல்லி நீதிமன்றம், ஏமன், இந்தியா, கேரளா, மரண தண்டனை
படக்குறிப்பு,

தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமுவேல் நிமிஷாவை மீட்க முயற்சித்து வருகிறார்

"ஏமனில் பல கொலை வழக்குகளுக்கு உடனடியாக தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கில் நிமிஷா தரப்பு நியாயத்தை புரிந்துகொண்டு ஏமன் அரசு தண்டனை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தி வருகிறார்கள். ஏமன் வரலாற்றில் ஒரு வழக்கிற்கு இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொள்வது இதுவே முதல் முறை," என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஜெரோம்.

நிமிஷா பிரியா வழக்கை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் சாமுவேல் ஜெரோம். ஏமன் நாட்டில் வானூர்தி ஆலோசகராக பணிபுரியும் இவர் தற்போது தமிழ்நாட்டில் உள்ளார். நிமிஷாவின் தாயாருடன் ஏமன் செல்ல இவருக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தொடர்ந்து பேசிய சாமுவேல், "ஒரு சக இந்தியர் என்பதால் தான் நிமிஷா குறித்து ஊடகங்களிடம் கூறினேன். ஆரம்பத்தில் நானும் அவரை குற்றவாளியாக தான் பார்த்தேன். ஆனால் பின்னர் அவரது நிலையைக் குறித்து முழுதாக தெரிந்து கொண்டதால் அவர் பக்க நியாயம் எனக்கு புரிந்தது. நிமிஷாவின் நிலையில் இருந்து பார்க்கும்போது மன்னிக்கப்பட அவர் தகுதியானவரே," என்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், "முதலில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நிமிஷா கொலை செய்து விட்டார், இப்போது பணம் கொடுத்து அவரை நாங்கள் மீட்க போகிறோம் என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் அந்த குடும்பத்திடம் மன்னிப்பைப் பெறப் போகிறோம்.

"பணம் இங்கு ஒரு முக்கியமான விஷயமே அல்ல, மன்னிப்பிற்கான ஒரு குறியீடு மட்டுமே. அதை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் தலால் அப்தோ மஹ்தி குடும்பத்தின் தனிப்பட்ட விருப்பம்," என்று கூறுகிறார் சாமுவேல் ஜெரோம்.

'பணம் கொடுக்க அல்ல, மன்னிப்பு பெறவே செல்கிறோம்'

"ஏமன் நாட்டின் ஒரு குடிமகனைக் கொலை செய்துவிட்டு, பணம் கொடுத்தால் மட்டும் விட்டுவிடுவார்களா? பல கொலை வழக்குகளில் உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் நிமிஷாவின் நிலையைப் புரிந்து ஏமன் நாட்டு அதிகாரிகள் பொறுமை காத்து வருகிறார்கள். நிமிஷா செய்த செயலை நான் நியாயப்படுத்தவில்லை ஆனால் அவர் எந்த சூழ்நிலையில் அதை செய்தார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்," என்கிறார் சாமுவேல் ஜெரோம்.

அவர் மேலும் கூறியது, "ஏமன் நாட்டின் ஷரியத் சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மன்னிப்பைப் பெறுவதே முக்கியம். முதலில் ஏமன் பழங்குடி இனத்தலைவர்களுடன் நாங்கள் பேச வேண்டும். அவர்கள் எங்கள் மன்னிப்பை ஏற்க வேண்டும்.

அதன் பின் பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் பழங்குடித் தலைவர்கள் பேசுவார்கள். அந்த குடும்பம் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். பின்னர் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை ஏமன் நீதிமன்றத்தில் தெரிவித்த பின் நிமிஷா விடுதலை செய்யப்படுவார். இது ஒரு கூட்டு முயற்சி," என்கிறார் சாமுவேல்.

"பணம் மட்டுமே பிரதானம் என்பது போல சில ஊடகங்கள் சித்தரித்து விட்டதால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மனம் புண்பட்டுள்ளது. உங்கள் குடும்பத்தில் ஒருவரை கொன்றுவிட்டு மிகப்பெரிய தொகையைத் தருகிறோம் என்று சொன்னால் யாராவது ஒப்புக் கொள்வார்களா? இதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

"எனவே நான் வைக்கும் ஒரு வேண்டுகோள், நிமிஷா ஒரு சூழ்நிலைக் கைதி. அவரது நிலையைப் புரிந்து அந்த நாட்டினரே மன்னிப்பைக் குறித்து யோசிக்கும் போது, பலரும் பணம் கொடுத்து அழைத்து வருகிறோம் என்று எழுதுகிறார்கள். அது உண்மையில்லை," என்று கூறுகிறார் சாமுவேல்.

 
ஜனவரியில் ஏமனுக்கு பயணம்
டெல்லி நீதிமன்றம், ஏமன், இந்தியா, கேரளா, மரண தண்டனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஏமனில் நிலவும் போர் சூழல்

நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரிக்கு விசா கிடைத்தவுடன் ஜனவரி மாதத்தின் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் ஏமனுக்கு செல்லவிருப்பதாக கூறினார் சாமுவேல்.

"டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. கேரளாவைச் சேர்ந்த சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில் குழுவின் முயற்சியால் தான் இது நடந்தது. நிமிஷாவை மீட்பதில் அவர்களது பங்கு முக்கியமானது. இந்திய அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளனர். எல்லாம் சரியாக நடக்கும் என நம்புகிறோம்" என்கிறார் சாமுவேல் ஜெரோம்.

பிரேமா குமரியின் வழக்கறிஞர் கே.எல்.பாலச்சந்திரனிடம் பேசிய போது, "டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பல வருட போராட்டத்திற்கு கிடைத்துள்ள பலன். 2020-இல் நிலைமை ஏமனில் சீராக இருந்தபோதே அங்கு செல்ல எனக்கும் நிமிஷாவின் தாயாருக்கும் இந்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.

"பின்னர் போர் சூழல் நிலவியதால் எங்களால் அங்கு செல்ல முடியாத நிலை நிலவி வந்தது. இப்போது இந்த தீர்ப்பால் அடுத்த மாதம் ஏமன் செல்ல பிரேமா குமரிக்கு விசா கிடைத்து விடும். நிமிஷாவை கண்டிப்பாக மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை உள்ளது. அங்கு போர் சூழல் உள்ளதால் நிலைமை சற்று பதற்றமாக தான் உள்ளது, ஆனாலும் பிரேமா குமாரி தன் மகளை மீட்பதில் உறுதியாக உள்ளார்," என்று அவர் கூறினார்.

 
'தடைகளைத் தாண்டி மகளை மீட்டு வருவேன்'
டெல்லி நீதிமன்றம், ஏமன், இந்தியா, கேரளா, மரண தண்டனை
படக்குறிப்பு,

நிமிஷாவின் தாய் பிரேமா குமாரி

"அயல்நாட்டு மண்ணில் என் மகள் இறப்பதை நான் விரும்பவில்லை. அங்கு நிலைமை சரியில்லை, பாதுகாப்பில்லை எனக் கூறுகிறார்கள், ஆனாலும் அங்கு செல்வதில் உறுதியாக உள்ளேன். எனக்கு நம்பிக்கை உள்ளது, பாதிக்கப்பட்ட குடும்பம் எனது மகளை நிச்சயமாக மன்னித்து விடுவார்கள்," எனக் கூறுகிறார் நிமிஷாவின் தாய் பிரேமா குமாரி.

நாட்கள் கடக்க கடக்க பிரேமாவின் தாங்கொணா துயர் அதிகரித்து வருகிறது. "நிமிஷாவிற்கு பெண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தைக்கு தாய் இருக்க வேண்டும்," என்கிறார் பிரேமா.

அவர் தொடர்ந்து கூறியது, "நிமிஷா படிப்பில் சிறந்து விளங்கினார். நாங்கள் வறுமையில் இருந்ததால் அவரது பள்ளி மற்றும் செவிலியர் படிப்பிற்கான செலவை உள்ளூர் தேவாலயம் ஏற்றுக்கொண்டது. ஆனால், டிப்ளமோ படிப்பிற்கு முந்தைய பள்ளி தேர்வில் தேர்ச்சி பெறாததால் கேரளாவில் செவிலியராகப் பணிபுரிய நிமிஷா தகுதி பெறவில்லை. எனவே தான் ஏமன் சென்றார்," என்கிறார் பிரேமா குமாரி.

"வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க ஏமன் சென்ற என் மகள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாட்டிக்கொள்வார் என கனவிலும் நினைக்கவில்லை. எப்படியாவது என் மகளை மீட்டு விடுவேன்," எனக் கூறுகிறார் பிரேமா குமாரி.

https://www.bbc.com/tamil/articles/c8v2pn86pepo

2015ஐ விட 2023இல் அதிக மழை பெய்ததா? தரவுகள் என்ன சொல்கின்றன?

3 months 2 weeks ago
சென்னை வெள்ளம், மிக்ஜாம் புயல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளமும் 2023-ஆம் ஆண்டு மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட வெள்ளமும் தொடர்ந்து ஒப்பிடப்பட்டு வருகின்றன.

இரு சந்தர்பங்களிலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் இருந்ததாலும் இந்த விவாதம் தீவிரமாக சமூக வலைதளங்களில் சூடாக பரவிவருகிறது. எந்த ஆண்டு அதிக மழை பெய்தது, எத்தனை நாட்கள் பெய்தது என எண்ணிக்கைகளைக் கொண்டு முரணான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

மிக்ஜாம் புயலின் போது பெய்த மழை 47 ஆண்டுகளில் இல்லாத மழை என்று தமிழக அரசு கூறியது. இந்திய வானிலை ஆய்வு மையம் X தளத்தில் வெளியிட்டிருந்த தரவுகளின் படி, ஒரு நாளில் பெய்த மழை அளவு 2023-ஐ விட 2015-ஆம் ஆண்டே அதிகமாக இருப்பதாக கூறுகிறது.

இந்நிலையில், தரவுகள் என்ன சொல்கின்றன, அவற்றை எப்படிப் புரிந்து கொள்வது?

 

இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகள் அனைத்தும் காலை 8.30 மணி முதல் மறு நாள் காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரங்களில் மழை எவ்வளவு பெய்துள்ளது என்பதைக் கணக்கிடுகிறது. அதன் படி, 2015-ஆம் ஆண்டு அதிக மழை பெய்த டிசம்பர் 2-ஆம் தேதி சென்னையில் 29 செ.மீ மழை பதிவாகியது.

அதே முறையில் கணக்கிடும் போது, 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி மிக்ஜம் புயல் தாக்கிய நாளில் சென்னையில் 23 செ.மீ மழை பதிவாகியது.

பெரு மழை பெய்த நாட்களுக்கு முந்தைய நாளும், அடுத்த நாளும் எவ்வளவு மழை பெய்தன என்ற தரவுகள் உள்ளன. 2015-ஆம் ஆண்டில், டிசம்பர் 1-ஆம் தேதி 3.9 செ.மீ மழையும், டிசம்பர் 3-ஆம் தேதி1.6 செ.மீ மழையும் பதிவாகியது. அதாவது டிசம்பர் 1, 2, மற்றும் 3 தேதிகளில் மொத்தம் 34.9 செ.மீ மழை சென்னையில் பதிவாகியது.

அதே போன்று 2023-ஆம் ஆண்டில் டிசம்பர் 3-ஆம் தேதி 6.2 செ.மீ மழையும், டிசம்பர் 5ம் தேதி 23.8 செ.மீ மழையும் பதிவாகியது. அதாவது டிசம்பர் 3, 4 மற்றும் 5 தேதிகளில் மொத்தம் 53.1 செ.மீ மழை சென்னையில் பதிவாகியது.

 
2023 வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

'2015-இல் தீவிர மழை இல்லை'

புயல், மழை வெள்ளம் ஆகியவற்றை பற்றி ஒப்பிட்டு பேசும்போது, மழை அளவு தரவுகளை தவிர மற்றும் வேறு சில அம்சங்களும் உள்ளன.

“கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால். 2015-இல் புயல் ஏதும் உருவாகவில்லை. கிழக்கிலிருந்து காற்றாழுத்த தாழ்வு நிலை உருவானது. 2023-இல் மழை தொடங்கிய டிசம்பர் 3-ஆம் தேதி இரவு 8.30 மணி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி இரவு 8.30 மணி வரையிலான 24 மணி நேரங்களில் 40 செ.மீ மழை பெய்துள்ளது. இந்த அளவுக்கான தீவிர மழை 2015-ல் பெய்யவில்லை,” என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஒய்.இ.எ ராஜ் பிபிசி தமிழிடம் கூறினார்.

ஒவ்வொரு புயலும் தனித்துவமானது, அவற்றை ஒன்றோடு ஒன்று ஒப்பிட முடியாது என்கிறார் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மண்ட் ஸ்டடீஸ் முன்னாள் பேராசிரியரும் நீர் குறித்த விரிவான பல ஆய்வுகளை நடத்தி வரும் எஸ். ஜனகராஜ்.

"2015-ஆம் ஆண்டு அடையாற்றின் மேல் படுகையில் தான் அதிக மழை பெய்தது. அப்போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலேயே சென்னையை விட அதிக மழை பெய்தது. சென்னையின் தென் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதற்கு காரணம், அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது தான். அதற்கு காரணம் செம்பரம்பாக்கம் ஏரியை திடீரென திறந்துவிட்டது ஆகும்,” என்றார்.

 
சென்னைக்கு 30 கி.மீ தொலைவில் புயல்
2023 வெள்ளம்

பட மூலாதாரம்,IMD

2015-ஆம் ஆண்டில் 14 மணி நேரத்தில் 20 செ.மீ மழை பெய்தவுடன், செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை வேகமாக நெருங்கிக் கொண்டிருந்தது. ஏரி உடைந்துவிடும் ஆபத்து இருந்ததால் ஒரே நேரத்தில் 29,400 கன அடி நீர் செம்பரம்பாக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. செம்பரம்பாக்கத்திலிருந்து 900 கன அடி மட்டுமே நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் திடீரென 29,000 கன அடி திறக்கப்பட்டது, நிலைமையை மோசமாக்கியது. அடையாற்றின் கரை ஓரங்களில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 2023-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம் புயலினால் பெய்த மழை காராணமாகவே ஏற்பட்டது.

மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் மிக நீண்ட நேரம் நிலை கொண்டு இருந்ததன் காரணமாக அதி கனமழை தொடர்ந்து பெய்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் சென்னைக்கு மிக நெருக்கமாக வெறும் 90 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டிருந்தது. மணிக்கு 10 - 18 கி.மீ. வேகத்தில் செல்லும் புயல் வெறும் 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது அதன் வேகம் மேலும் குறைந்து மணிக்கு 5 கி.மீ. என்று இருந்தபோது புயல் கிட்டத்தட்ட சென்னைக்கு அருகிலேயே ஸ்தம்பித்து நிற்பது போல் ஆனது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஒய்.இ.எ ராஜ், “மிக்ஜாம் புயல் 16 முதல் 18 மணி நேரங்கள் சென்னைக்கு அருகிலான கடல் பகுதியில் நிலைக் கொண்டிருந்தது. புயலின் மைய பகுதி, சென்னையிலிருந்து 80-90 கி.மீ அருகில் இருந்தது. ஆனால், புயலின் வெளிப்புற பகுதியில் தான் தீவிர காற்றும் மேகங்களும் இருக்கும். அந்த பகுதி சென்னையிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் இருந்தது. அதனால் தான் மழை தீவிரமாக பெய்தது,” என்றார்.

மிக்ஜாம் புயல் எப்போது உருவாகும், புயலின் பாதை என்னவாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கூறியிருந்தாலும், புயல் இவ்வளவு நேரம் கடல் பகுதியில் நிலைக் கொண்டிருக்கும் என்பது யாரும் எதிர்ப்பார்க்காதது.

 
மிக்ஜாம் போன்ற 1976 புயல்
2023 வெள்ளம்

பட மூலாதாரம்,IMD

மிக்ஜாம் புயல் சென்னை கரைக்கு மிக அருகில் வந்து, சென்னையை உரசி உரசி சென்று மேலும் வடக்கு நோக்கி நகர்ந்தது.

1976-ஆம் ஆண்டு உருவான புயலின் பாதையும் இதுவாகவே இருந்தது என்கிறார் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஒய்.இ.எ ராஜ்.

“சென்னையில் அதிக அளவிலான வெள்ளத்தை முதல் முறையாக ஏற்படுத்தியது அந்த புயல். மிக்ஜாம் புயல் கடந்து சென்ற அதே பாதையில் சென்றது, ஆனால் மிக்ஜாம் போல வடக்கு நோக்கி செல்லவில்லை. அப்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் 24 மணி நேரத்தில் 45 செ.மீ மழை பதிவானது. இப்போதும், இதுவே 24 மணி நேரங்களில் சென்னையில் பதிவான அதிகபட்ச மழையாகும்,” என்றார்.

மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மண்ட் ஸ்டடீஸ் முன்னாள் பேராசிரியர் எஸ். ஜனகராஜ், “1976-க்கு பிறகு, சென்னையில் குறுகிய காலத்தில் அதிக மழை பெய்தது இதுவே முதல் முறையாகும். எனவே 47 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மழை இது என கூறலாம். ஆனால், மழையின் தாக்கம் 1976-ஐ விட இப்போது தான் அதிகமாக உள்ளது. இப்போது, நீர் வழிப்பாதைகள், ஆறுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தண்ணீர் பூமியின் உள் செல்வதற்கான நிலம் குறைந்துக் கொண்டே வருகிறது. பெய்யும் மழையில் 95% ஆறுகளில், கடல்களில் கலக்கிறது,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cw0d5ep5y64o

சென்னைக்குத் தேவை புதிய வடிகால் வடிவமைப்பு

3 months 2 weeks ago
சென்னைக்குத் தேவை புதிய வடிகால் வடிவமைப்பு

spacer.png

மிக்ஜாம் என்று இந்தப் புயலுக்குப் பெயர் சூட்டியது மியான்மர். அந்தப் பர்மீயச் சொல்லுக்குப் பல பொருள்களைச் சொல்கிறார்கள். அவற்றுள் இரண்டு முதன்மையானவை. அவை; வலிமை, தாங்குதிறன். இவ்விரண்டு பொருளும் இந்தப் புயலுக்குப் பொருத்தமானதாக அமைந்துவிட்டது. சென்னையைத் தாக்கிய புயல் மிக வலுவாக இருந்தது. அதைத் தாங்கும் திறன் நகருக்கு வெகு குறைவாக இருந்தது. 

டிசம்பர் 3 காலை முதல் டிசம்பர் 4 இரவு வரை நகரில் கொட்டிய தொடர் மழையின் அளவு சுமார் 500 மிமீ. இப்படியொரு மழை கடந்த 50 ஆண்டுகளில் பெய்ததில்லை என்றனர் சில ஆய்வாளர்கள். அப்படியானால் இது ஐம்பதாண்டு மழையா? இருக்கலாம். அதனினும் சக்தி வாய்ந்த நூறாண்டு மழையாகக்கூட இருக்கலாம். சரி, அதென்ன ஐம்பதாண்டு மழை? நூறாண்டு மழை?

கால மழையளவு

நூறாண்டுகளில் பெய்யக்கூடிய அதிக சாத்தியம் உள்ள மழையளவை நீரியல் நிபுணர்கள் நூறாண்டு மழை (100-year rain) என்று அழைக்கிறார்கள். இதைப் போலவே பத்தாண்டு மழை, ஐம்பதாண்டு மழை, இருநூறாண்டு மழை என்பனவும் உண்டு.

ஒரு நகரத்தில் ஆவணப்படுத்தப்பட்ட மழையளவைக் கொண்டு இவற்றைக் கணக்கிடுவார்கள். நூறாண்டு மழையானது நூறாண்டுகளுக்கு ஒருமுறைதான் வருமென்று எடுத்துக்கொள்ள முடியாது. இடையிடையேயும் வரும். இப்போது பெய்த மழை ஐம்பதாண்டு மழையாக இருக்கலாம். அதனினும் சக்தி வாய்ந்த நூறாண்டு-மழையாகவும் இருக்கலாம்.

நமது மழைநீர் வடிகால் வடிவமைப்பின் முக்கியப் பிரச்சினை, இப்போது பெய்த மழை நீரியல் கணக்குப்படி எத்தனையாண்டு மழை என்பது நமக்குத் தெரியாது. அதைப் போலவே நகரில் இப்போதைய மழைநீர் வடிகால்கள் எத்தனையாண்டு மழையைக் கடத்திவிட வல்லவை என்பதும் நமக்குத் தெரியாது.

ஒரு நகரின் மழைநீர் வடிகால்களை வடிவமைப்பதற்கு அந்த நகரின் பத்தாண்டு, இருபதாண்டு, ஐம்பதாண்டு, நூறாண்டு மழையளவுகளை மதிப்பிட வேண்டும். இப்போது காலநிலை மாற்றத்தால் குறுகிய காலத்தில் பெய்யும் அதீத மழை அதிகமாகிவிட்டது.

வருங்காலங்களில் இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நிகழும் என்று எச்சரிக்கிறது காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டுக் குழு (IPCC). காலநிலை மாற்றத்தின் விளைவுகளையும் கணக்கில் கொண்டு சாத்தியமுள்ள மழையளவின் மதிப்பீடு அமைய வேண்டும். இதுதான் மழைநீர் வடிகால் வடிவமைப்பின் முதற்கட்டம்.

என்ன இலக்கு?

வடிவமைப்பின் அடுத்த கட்டம், எத்தனையாண்டு மழையைக் கடத்திவிடக்கூடிய வடிகால்களை அமைக்கப்போகிறோம் என்ற தெளிவு.

வளர்ந்த நகரங்கள் பலவற்றில்கூட நூறாண்டு மழைக்கான வடிகால்கள் அமைக்கப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, ஹாங்காங்கில் சாலையோர மழைநீர் வடிகால்கள் ஐம்பதாண்டு-மழையைக் கணக்கில் கொண்டே வடிவமைக்கப்பட்டவை.

அதாவது, ஐம்பதாண்டுகளில் பெய்வதற்குச் சாத்தியமுள்ள அதிகப்படியான மழையை இவை உடனடியாகக் கடத்திவிடும். அதேவேளையில் இந்த வடிகால்கள் போய்ச்சேரும் பிரதான வாய்க்கால்கள் இருநூறாண்டு மழையை எதிர்கொள்ளும் ஆழமும் அகலமும் கொண்டவை. இப்போது ஹாங்காங்கில் நூறாண்டு மழையொன்று பெய்தால், சாலைகளில் மழைநீர் தேங்கவே செய்யும். ஆனால், சில மணி நேரங்களில் அவை அளவில் பெரிய பிரதான வாய்க்கால்களில் வடிந்துவிடும். 

சென்னையின் இன்றைய நிலை

சென்னை நகரின் இப்போதைய சாலையோர வடிகால்களின் வடிவமைப்பும், அவற்றின் நீர் கடத்தும் திறனும் எப்படியானவை?

சென்னை நகரின் சாலையோரங்களில் கட்டப்பட்டிருப்பவை செவ்வக வடிவிலான வடிகால்கள். இது ஒரு மரபான வடிவமைப்பு. நாம் அதை மட்டுமே கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கிறோம். இவை இயல் ஈர்ப்பாற்றலுக்கு (gravitational force) உட்பட்டு இயங்குபவை. சென்னை நகரம் மிகுதியும் சமதளத்திலானது. ஆகவே, ஈர்ப்பாற்றலை முழுவதுமாக நம்பினால், நீர் வேகமாக வடியாது, தேங்கும். மேலும், சென்னையின் நிலமட்டம் கடலின் நீர்மட்டத்தைவிட அதிக உயரத்தில் இல்லை.

ஆகவே, வடிகாலின் அடிமட்டத்தைக் கடலின் நீர்மட்டத்திற்கு மேலே அமைத்துக்கொள்வதால் வடிகால்களுக்குப் போதிய ஆழம் கிடைப்பதில்லை. மேலும் ஏற்கெனவே அமைக்கப்பட்ட சாலைகளின் ஓரத்தில் நிறுவப்படுவதால் அவற்றின் அகலமும் மட்டுப்படுகிறது. 

சரி, அப்படியானால் ஒரு வடிகாலை எப்படி வடிவமைக்க வேண்டும்? குறிப்பிட்ட இடத்தில் அமைந்திருக்கும் வடிகாலுக்கு எந்தெந்தப் பகுதியில் இருந்து நீர் வடிந்துவரும் என்பதை வைத்து வடிகாலின் கொள்ளளவைக் கணக்கிட வேண்டும். இதிலிருந்துதான் வடிகாலின் அகலமும் ஆழமும் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

இப்படியான பொறியியல்ரீதியான கணக்குகளின் அடிப்படையில் அமைந்தவை அல்ல இன்றைய சென்னை நகரத்தின் பெரும்பாலான மழைநீர் வடிகால்கள். அவற்றின் அகலத்தைச் சாலைகளின் அகலமும் அவற்றின் ஆழத்தை அவை போய்ச்சேரும் பிரதான வாய்க்கால்களின் நிலமட்டமுமே  நிர்ணயிக்கின்றன. இப்படியான வடிகால்கள்கூட புதிதாக உருவான சென்னையின் தென் பகுதிகள் பலவற்றிலும் இல்லை.

என்னவாயிற்று ரூ.4000 கோடி?

சமூக ஊடகங்களில் இப்போது சுற்றிக்கொண்டிருக்கும் கேள்வி, “ரூ.4000 கோடி என்னவாயிற்று?”

கடந்த இரண்டாண்டுகளில் சென்னை நகரின் மழைநீர் வடிகால்கள் அதிவிரைவாகவும் மிகுந்த பொருள் செலவிலும் சீரமைக்கப்பட்டன. பல இடங்களில் புதிதாகவும் அமைக்கப்பட்டன. இவையெல்லாம் முன் குறிப்பிடப்பட்ட ஈர்ப்பாற்றலில் இயங்கும் செவ்வக வடிகால்கள். வடிவமைப்பிலும் கொள்ளளவிலும் போதாமை இருந்தாலும் இவை கடந்த ஆண்டு பயன்பட்டதைப் பார்த்தோம்.

2022 அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரை மூன்று நாட்களில் நகரில் பெய்த மழையளவு சுமார் 205 மிமீ. இது நகர் பெறும் சராசரி மழையளவைவிட சுமார் மூன்று மடங்கு அதிகமானது. கடந்த ஆண்டு பெய்த இந்த மழையைச் சீரமைக்கப்பட்ட வடிகால்களால் கடத்திவிட முடிந்தது. ஆனால், இந்த ஆண்டின் பெருமழையை அவற்றால் கடத்த முடியவில்லை. பல இடங்களில் இரண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகுதான்  சாலைகளில் மிகுந்த நீர் கால்வாய்களில் வடிந்தது அல்லது இயந்திரங்களால் வெளியேற்றப்பட்டது. ஆனால், இந்தப் பேரிடரில் வடிகால்களே இல்லாத பல பகுதிகள் அனுபவிக்கும் துயரைக் கண் கொண்டு பார்க்கிறோம்.

புதிய வடிகால் வடிவமைப்புக் கொள்கை

இந்தச் சூழலில் வடிகால்களின் வடிவமைப்பை மேம்படுத்த என்ன செய்யலாம்? பின்வரும் நான்கு கட்டங்களில் இதை அணுகலாம்.

தரவுகள், திட்டமிடல், வடிவமைப்புக் கொள்கை: முன்கூறியபடி நகரில் பொழிவதற்குச் சாத்தியமுள்ள மழையளவைப் போதிய தரவுகளுடன் மதிப்பிட வேண்டும். அடுத்து, நமது வடிகால் திட்டம் எந்த மழையளவிற்கானது என்பதைத் திட்டமிட வேண்டும். அடுத்ததாக, அந்த மழையளவை இப்போதைய வடிகால்கள கடத்திவிடும் திறன் கொண்டவையா என்று கணக்கிட வேண்டும்.

ஆழ்குழாய்கள்: இப்போதைய வடிகால்களால் போதிய அளவு மழைநீரை வெளியேற்ற முடியாத இடங்கள் பல இருக்கும். அங்கெல்லாம் புதிய வடிகால்கள் அமைக்க வேண்டும். இவை சாலையின் மேல்மட்டத்தை வடிகாலின் மேல்மட்டமாகக் கொண்ட, செவ்வக வடிவிலான மரபான வடிகால்களாக இல்லாமல், அவற்றுக்குப் பதிலாக வட்ட வடிவிலான ஆழ்குழாய்களைப் பதிப்பிக்கலாம். செவ்வக வடிவத்தைவிட வட்ட வடிவக் குழாய்களே நீரை வேகமாகக் கடத்த வல்லவை. இவை ஈர்ப்பாற்றலுக்கு இயைபாக அமைக்கப்பட முடியாத இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்க வேண்டும்.

சுரங்கப் பாதை: பல மேலை நாடுகளிலும், ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற கீழை நாடுகளிலும் மழைநீர் வடிகால்களுக்கு அவசியமான இடங்களில் சுரங்கம் அமைக்கப்படுகின்றன. இவை மெட்ரோ ரயில் சுரங்கங்களைப் போல சாலைக்கும் போக்குவரத்திற்கும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் நிலத்திற்கு அடியில் குடையப்படுபவை.

நீர்வழிப் பாதையானது சாலையோர வடிகால்களில் தொடங்கி பிரதான வாய்க்கால்களுக்கும், இந்த வாய்க்கால்கள் வழி ஆற்றுக்கும் கொண்டுசெல்லப்படுகின்றன. இப்போதையப் பிரதான வாய்க்கால்களின் நீர் கடத்தும் திறன், புதிய வடிவமைப்பு கோரும் திறனைவிடப் பல இடங்களில் குறைவாக இருக்கும். இப்படியான இடங்களில் சுரங்கப் பாதைகளை அமைக்கலாம்.

இன்னொரு இடத்திலும் சுரங்கங்கள் அமைக்கலாம். இப்போதைய மழையைப் புயல்தான் கொண்டுவந்தது. அந்தப் புயல் நகரின் தலைக்கு மேல் சுமார் 16மணி நேரம் நின்றாடியது. அப்போது கடல் சீற்றம் மிகுந்திருந்தது. ஆகவே, அது மழை நீரை உள் வாங்கவில்லை.

இது இப்போதைய பிரச்சினை மட்டுமில்லை. பொதுவாகவே வங்காள விரிகுடா அலைகள் மிகுந்தது. ஒரே நாளில் அலைகள் உயர்வதும் தாழ்வதுமாக இருக்கும். தாழ்வான அலைகள் இரண்டடியும் உயர்வான அலைகள் நான்கடியும் எழும்பும். உயர்வான அலைகளின்போது ஆற்று நீர் கடலில் கலப்பதில் தாமதம் ஏற்படும்.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் அலைகள் பத்தடி வரைகூட உயரும். அப்போதெல்லாம் வெள்ளம் வடியாமல் ஆற்றிலும், கால்வாயிலும் சாலையிலும் தேங்கி நிற்கும். ஆகவே, கடைப் பகுதிகளில் சுரங்கங்களை அமைத்து வெள்ளத்தை நேரடியாக ஆழ்கடலில் கடத்திவிட முடியுமா என்றும் ஆலோசிக்கலாம்.

நீலத்தடி நீர்த் தேக்கம்: நமது நீர்த் தேக்கங்களின் மகிமையை அறிய நாம் ஹாங்காங்கிற்கும் டோக்கியோவிற்கும் போய்வர வேண்டும்.

ஹாங்காங்கின் மழைநீர் வடிகால்கள் 1989இல் விரிவுபடுத்தப்பட்டன. அப்போது வளர்ச்சியடைந்த பகுதிகளில் இடப் பற்றாக்குறையால் வடிகால்களைப் போதிய அளவில் அமைக்க முடியவில்லை. அதனால் தை-ஹாங் என்கிற இடத்தில் ஒரு நிலத்தடி நீர்க்கிடங்கைக் கட்டினார்கள். பெருமழையின்போது, வடிகால்கள் பெருகினால், கூடுதல் மழைநீரை இந்தக் கிடங்குக்குக் கடத்திவிடுவார்கள். பிற்பாடு மழை குறைந்ததும் இந்த நீரை வடிகால்களுக்கு வெளியேற்றுவார்கள்.

இந்தக் கிடங்கு மூன்று கால்பந்தாட்ட மைதானத்தின் பரப்பளவிலானது. இதன் கொள்ளளவு 35 லட்சம் கனஅடி. 2017இல் 'ஹேப்பி வேலி' எனும் இடத்தில் உள்ள குதிரைப் பந்தய மைதானத்தின் கீழும் இதேபோன்ற ஒரு நிலத்தடி கிடங்கைக் கட்டினார்கள். 2006இல் இதுபோன்ற கிடங்கை டோக்கியோ கட்டியது. ஆனால், இதன் கொள்ளளவு ஹாங்காங்கைவிட நான்கு மடங்கு பெரிதானது. இவை பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டவை.

ஹாங்காங்கும் டோக்கியோவும் இட நெருக்கடி மிகுந்த நகரங்கள். ஆகவே, அவர்கள் மழை நீரைச் சேமிக்க நிலத்திற்குக் கீழே போனார்கள். ஆனால், நமக்கு நிலத்திற்கு மேல் நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற எண்ணற்ற குளங்களும் ஏரிகளும் இருக்கின்றன. ஆனால், அவற்றில் கணிசமானவை ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றன. எஞ்சிய பகுதிகளிலும் குப்பைக் கூளங்கள் கொட்டப்படுகின்றன.

நாம் சாத்தியமுள்ள அனைத்து ஏரி குளங்களில் ஆக்கிரமிப்புகளையும் குப்பைக் கூளங்களையும் அகற்ற வேண்டும். முடிந்த இடங்களில் அவற்றை ஆழப்படுத்தவும் வேண்டும். வடிகால்களில் மிகுந்தோடும் மழை நீரை ஆழ்குழாய்கள் வழியாகவோ சுரங்கப் பாதை வழியாகவோ சீரமைக்கப்பட்ட ஏரி குளங்களுக்குக் கொண்டுவரலாம். இது சாத்தியமில்லாத இடங்களில் மட்டும் புதிய நிலத்தடி நீர்த் தேக்கங்களைக் கட்டலாம்.

ஒருங்கிணைந்த வடிகால் திட்டம்

மழைநீர் வடிகால்களில் நாம் கைக்கொள்ள வேண்டிய புதிய வடிவமைப்புக் கொள்கையின் சில கூறுகளைப் பார்த்தோம். இப்போதைய பாதிப்பிற்கு மழைநீர் வடிகால்களின் வடிவமைப்பில் உள்ள குறைபாடுகளைத் தவிர வேறு பல காரணங்களும் உண்டு. நீர்ப்பிடிப்புப் பகுதிகளும் வெள்ளச் சமவெளிகளும் சதுப்பு நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன.  

பல்லாண்டு காலமாக ஆறுகள், குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள், வரத்துக் கால்வாய்கள் முதலானவை முறையாகத் தூர்வாரப்படவில்லை. சாத்தியமுள்ள இடங்களில் அவை ஆழப்படுத்தப்படவில்லை. மாறாக, அவற்றில் குப்பைக் கூளங்கள் கொட்டப்படுகின்றன. கழிவு நீரும் கலக்கிறது. பல வடிகால்களை நகரவாசிகள் வீசியெறிந்த பிளாஸ்டிக் போத்தல்களும் பைகளும் அடைத்துக்கொண்டிருக்கின்றன.

மழைநீர் வடிகால் உள்ளிட்ட நகரத்தின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் நகரத்தில் அடுக்ககங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. இவை அனைத்தையும் சரிசெய்ய வேண்டும். இத்துடன் புதிய வடிகால் வடிவமைப்பையும் ஒன்றிணைக்க வேண்டும். அப்படியான ஒன்றிணைந்த வடிகால் திட்டமே சென்னைக்கான நிரந்தரத் தீர்வாக அமையும். இது நீண்ட காலத் திட்டம். நிதி மிக வேண்டிவரும். ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்குப் போதிய நிதி வழங்க வேண்டும். இந்த விரிவான ஒருங்கிணைந்த திட்டத்தைச் செயல்படுத்தாமல் இந்தச் சீரழிவை நாம் முடிவிற்குக் கொண்டுவர முடியாது.

மிக்ஜாங் எனும் பர்மீயச் சொல்லிற்கு இன்னொரு பொருளும் இருக்கிறது. நம்பிக்கை. இந்தப் பேரிடர் காலத்தில் அரசுத் துறை ஊழியர்களும் தன்னார்வலர்கள் பலரும் நல்கிய உழைப்பும் உதவியும் மானுடத்தின் மீது நம்பிக்கை கொள்ள வைக்கின்றன. இந்தப் பெருநகரத்திற்கான ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் வகுக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட வேண்டும். இது ஒரு நம்பிக்கை. இந்த நம்பிக்கை விரைவில் நடப்பிலாகட்டும்!

 

https://www.arunchol.com/mu-ramanathan-article-on-chennai-flood-2023

கோவை நகைக்கடை கொள்ளையன் கைது - உள்ளே நுழைய குறுகிய வழி இருப்பதை சொன்னது யார்?

3 months 2 weeks ago
கோவை நகைக்கடையில் கொள்ளை
கட்டுரை தகவல்
  • எழுதியவர், ச.பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 28 நவம்பர் 2023
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் விஜய் என்ற நபரை இரு வாரங்களுக்கு பின்னர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 400 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே நவம்பர் 30 ம் தேதி, விஜயின் மனைவி நர்மதாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 3.2 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் தர்மபுரி மாவட்டம் தும்பலஹள்ளியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்த விஜயின் மாமியார் யோகராணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.35 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். நகைகளை குப்பைத் தொட்டியிலும், சாலை ஓரத்திலும் புதைத்து வைத்திருந்த நிலையில் அவற்றை மீட்டனர்.

கோவை நகைக்கடையில் கொள்ளை
கோவை நகைக்கடை கொள்ளையன் கைது செய்யப்பட்டது எப்படி?

கடந்த 5 ம் தேதி தர்மபுரி மாவட்டம் தேவரெட்டியூரில் உள்ள தனது இல்லத்திற்கு வந்த விஜய் வீட்டில் 38 கிராம் நகையை வைத்துவிட்டு சென்றதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் விஜயின் தந்தை முனிரத்தினத்திடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் ஆறாம் தேதி இரவு விஜயின் தந்தை முனிரத்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் பெரும்பாலானவை மீட்கப்பட்ட நிலையில் விஜய் தொடர்ச்சியாக தலைமுறைவாக இருந்து வந்தார். ஐந்து தனிப்படை போலீசாரும் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் காளகஸ்தி பகுதியில், ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்த வேடத்தில் விஜய் சுற்றி திரிவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி இருந்த நிலையில், காளகஸ்தியில் இருந்து சென்னை வரும் வழியில் விஜயை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜய் தற்பொழுது தனிப்படை போலீசாரால் கோவை அழைத்து வரப்படுகிறார்.

விஜயிடம் இருந்து 400 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று 12 நாட்களுக்குப் பிறகு கொள்ளையன் விஜய் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய நபரான விஜய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நகைக்கடையில் இருக்கும் குறுகிய இடைவெளி குறித்து அவருக்கு தகவல் சொன்ன நபர் யார் ? இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை காணும் பணியில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கோவை நகைக்கடையில் கொள்ளை
‘லாவகமான திருடன்’

பல நகைக் கடை திருட்டுகள் நடந்திருந்தாலும் இந்த திருட்டு சற்று சவாலானது போலீஸார் கருதுகின்றனர்.

ஏனென்றால் திருடிய நபர் மிக லாவகமாக யாரும் எதிர்பார்க்காத படி ஏசி வெண்டிலேட்டர் குழாய் வழியாக வந்து சென்றுள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்து அவர் எவ்வாறு வந்திருப்பார் என செய்து பார்க்க முயன்ற போலீஸாருக்கு காயங்கள் ஏற்பட்டதே மிச்சம்.

சிசிடிவி காட்சிகளில் முதல் முறை ஒரு ஆடையும் அடுத்தடுத்த பதிவுகளில் வேறு ஆடைகளிலும் இருந்துள்ளார். கடையினுள் நுழைந்த 24 வயது திருடர், நகைகளை அப்படியே அள்ளி போடாமல், விரைவாக வேண்டிய இடத்துக்கு சென்று சில நகைகளை எடுக்கிறார் என்பதை போலீஸார் சிசிடிவி காட்சிகளில் கவனித்துள்ளனர்.

எனவே அவருக்கு கடையைப் பற்றிய விவரங்கள் ஏற்கெனவே தெரிந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

கோவை ஜோஸ் ஆலுக்காஸ்
பஸ் டிக்கெட் கொடுத்த துப்பு

பிபிசி தமிழிடம் பேசிய தனிப்படை போலீஸார், ‘‘நகைக்கடையில் திருடிவிட்டு குற்றவாளி தனது சட்டையை விட்டுச்சென்றார். அதில் இருந்த பஸ் டிக்கெட் கொண்டு பொள்ளாச்சியில் இருந்து காந்திபுரம் வந்தது கண்டறியப்பட்டது,” என்றனர்.

மேலும், "திருடும் முன் சிசிடிவி கேமராவை மாற்றியமைக்க முயன்ற போது பதிவான அவரது கைரேகைகளை எடுத்த போலீஸார், பழைய திருட்டு வழக்கு குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்தனர். ஏற்கனவே விஜய் தருமபுரி பகுதியில் திருட்டு வழக்கில் சிக்கியபோது எடுக்கப்பட்ட கைரேகையும், ஜோஸ் ஆலுக்காஸ் கைரேகையும் ஒத்துப்போனது. ஜோஸ் ஆலுக்காஸில் திருடிவிட்டு நகைகளை சிறிய பையில் வைத்து, ஆட்டோவில் சென்று, அதன்பின் பஸ் மூலம் அவர் வீடு சென்றுள்ளார். இவை அனைத்தும் கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளன. இதை வைத்து அவர் ஆனைமலையில் இருப்பதை கண்டறிந்தோம்," என்றனர்.

மேலும் தொடர்ந்த போலீஸார், "விஜயை கைது செய்ய ஆனைமலை சென்று வீட்டின் கதவை தட்டினோம், அப்போது அவரது மனைவி ஆடை மாற்றுவதாகக்கூறி உள்ளிருந்து சப்தமிட்டு கதவை அடைத்துக்கொண்டார். நாங்கள் கதவை உடைக்க முயன்றபோது அவரே கதவை மீண்டும் திறந்தார், உள்ளே சென்று பார்த்தபோது தான் 18 அடி உயரமுள்ள வீட்டின் மேற்கூரையை பிரித்து மீதமுள்ள 1.6 கிலோ தங்கத்துடன் விஜய் தப்பிச்சென்றது தெரியவந்தது. விரைவில் அவரையும் கைது செய்து மீதமுள்ள நகைகள் மீட்கப்படும்," என்கிறார்கள் அவர்கள்.

 
கோவை நகைக்கடையில் கொள்ளை
படக்குறிப்பு,

நர்மதா

கைதான நபர் யார்?

இப்படியான நிலையில் குற்றவாளி தருபுரி அரூரை சேர்ந்த விஜய் என்பதையும் அவர் கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் தங்கியிருப்பதையும் கண்டறிந்தனர். நவம்பர் 30-ஆம் தேதி விஜய் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்ற போலீஸார் விஜயை கைது செய்யும் முயற்சித்த போது குற்றவாளி அங்கிருந்து தப்பியோடிய நிலையில், வீட்டில் இருந்து 3 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்து, அவரது மனைவி நர்மதாவைக் கைது செய்துள்ளனர்.

கொள்ளைச் சம்பவம் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த கோவை மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணன், "ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை வழக்கில் முதற்கட்டமாக 2 கிலோ தங்கம், வைர நகைகள் திருடப்பட்டதாக வழக்கு பதிவு செய்திருந்தோம். புலன்விசாரணையில் திருடப்பட்டது 4.6 கிலோ தங்க நகைகள், 700 கிராம் வெள்ளி என்பது தெரியவந்தது. 350க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் குற்றவாளி தருமபுரியை சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது. அவரது மனைவி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த நர்மதா,” என்றார்.

"ஆனைமலையில் தங்கியிருந்த விஜய் தப்பியோடிய நிலையில், 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்து திருடுவதற்கும், திருடிய பொருட்களை மறைக்கவும் உதவிய அவரது மனைவி நர்மதா மற்றும் நண்பர் சுரேஷ் ஆகியோரை கைது செய்துள்ளோம். தப்பியோடி விஜய் விரைவில் கைது செய்யப்படுவார். நகைக்கடையில் கட்டுமானப் பணிகள் நடக்கும் நிலையில் விஜய் எப்படிச்சரியாக மூன்றாம் தளம் சென்று கொள்ளையடித்து தப்பினார், கடை ஊழியர்கள் யாரேனும் உதவினார்களா? என விசாரிக்கிறோம். குற்றவாளி விஜய் இதுவரையில் பணம் மட்டுமே திருடும் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார், முதன் முதலாக நகைகள் திருடியுள்ளார்," என்றார்.

சம்பவத்தன்று என்ன நடந்தது?

கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக்கடையில், ‘ஏசி வென்டிலேட்டர்’ குழாய் வழியாக புகுந்த மர்ம நபர் 200 பவுன் அளவுக்கான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

கோவை மாநகரின் முக்கிய வணிகப்பகுதியான காந்திபுரம் 100 அடி ரோடு பகுதியில் அதிக அளவிலான நகைக்கடைகள், ஆடை உள்பட பல கடைகள் உள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்தப் பகுதியில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக்கடை அமைந்துள்ளது.

நவம்பர் 28ம் தேதி காலை 9:30 மணிக்கு பணியாளர்கள் கடையை திறந்து பார்த்த போது, முதல் மற்றும் இரண்டாவது தளத்தில், ரேக்குகளில் அடுக்கி வைக்கப்படிருந்த தங்க நகைகள் கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், காட்டூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கைரேகை நிபுணர்களை வைத்தும், மோப்பநாய் வில்மாவை வரவழைத்தும் சோதனை செய்து தடயங்களை சேகரித்தனர்.

 
கோவை நகைக்கடையில் கொள்ளை
படக்குறிப்பு,

கோவை மாவட்ட கமிஷனர் பாலகிருஷ்ணன்

கொள்ளையர் கடைக்குள் நுழைந்தது எப்படி?

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளி ஒருவர் எனவும், நகைக்கடையில் சில கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில் நகைக்கடையின் பக்கவாட்டு சுவர் அருகேயுள்ள சிறிய சந்தில் நடந்து சென்று, சுவற்றில் பொருத்தியிருந்த ‘ஏசி’ இயந்திரத்துக்கான வென்டிலேட்டர் குழாய் வழியாக சென்று கடைக்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த கோவை மாவட்ட கமிஷனர் பாலகிருஷ்ணன், ‘‘முதற்கட்ட விசாரணையில் ஒரு நபர் தான் ‘ஏசி’ வென்டிலேட்டர் வழியாக நகைக்கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக சில தடயங்களை சேகரித்துள்ளோம், 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

குற்றவாளி தனது சட்டையை கழற்றி முகத்தை மூடி நகைகளை கொள்ளையடித்துள்ளார். அதிகாலை, 12:00 மணிக்கு மேல் கொள்ளை நடந்துள்ளது. சுமார் 150 – 200 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. நகைக்கடை ஊழியர்கள் எத்தனை நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்று கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்,’’ என்றார்.

குற்றவாளி வட மாநிலத்தை சேர்ந்தவரா? கட்டுமான பணி நடப்பதால் அந்த பணியாளர்களில் யாரேனும் குற்றவாளிகளா? என்ற கேள்விகளை நிருபர்கள் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் முன்வைத்தனர்.

அதற்கு பதிலளித்த அவர், ‘‘குற்றவாளி உள்ளூர் நபராகத் தான் தெரிகிறார், வடமாநிலத் தொழிலாளர் போன்று இல்லை. கட்டுமான பணியில் இதுவரை ஈடுபட்டவர்கள் விபரங்களை சேகரித்து விசாரிக்கிறோம். இந்த கொள்ளையை பொறுத்தவரையில் மற்ற குற்றவாளிகளைப் போல் அல்லாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக நகைகளை எடுத்துச் சென்றுள்ளார்,’’ என்றார்.

நகை திருட்டை எச்சரிக்க கடையில் சைரன் இல்லையா? என்ற கேள்விகளை கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் நிருபர்கள் முன்வைத்தனர்.

அதற்கு பதிலளித்த அவர், "கடையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், சைரன் இல்லை. மர்ம நபர் நகைகளை கொள்ளையடித்த போது, இரு காவலாளிகள் பணியில் இருந்ததுடன், 12 பணியாளர்கள் நகைக்கடையில் தான் தங்கியுள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்துகிறோம்," என்றார் கமிஷனர் பாலகிருஷ்ணன்.

கோவை ஜோஸ் ஆலுக்காஸ்
 
ஃபால்ஸ் சீலிங் வழியாக இறங்கிய கொள்ளையர்

பிபிசி தமிழிடம் பேசிய போலீஸார், "கடைக்கு முன் பகுதியில் சில கட்டுமான பணிகள் மற்றும் வெளிப்புற வேலைகள் நடப்பதால் பக்கவாட்டு சுவர் அருகே கட்டுமான பொருட்கள் போடப்பட்டுள்ளன. மற்றொரு பக்கம் மருந்துக்கடை அருகேயும் சந்து போன்று இடமுள்ளது. கட்டுமான பொருட்கள் போடப்பட்டுள்ள பகுதி வழியாக சென்று, ‘ஏசி’ வென்டிலேட்டர் குழாய் வழியாக மர்ம நபர் உள்ளே சென்றிருக்க வாய்ப்பு அதிகம்," என்கின்றனர் போலீஸார்.

மேலும் தொடர்ந்த அவர்கள், "கடைக்குள் நுழைய வென்டிலேட்டர் குழாயை பயன்படுத்திய குற்றவாளி, அதன் வழியாக சென்று பின் ஃபால்ஸ் சீலிங் (False Ceiling) பிரித்து அதன் வழியாக நகை வைத்திருக்கும் தளத்தினுள் இறங்கி, சட்டையால் முகத்தை மூடிக்கொண்டு நகைகளை கொள்ளையடித்துள்ளார். வந்த வழியாகவே வெளியில் சென்று தப்பியுள்ளார். சிசிடிவி காட்சிகளைப் பார்த்தால் அதிகாலை, 12:00 – 3:00 மணிக்கு கொள்ளை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

"குற்றவாளி வெறும் சாதாரண முகக்கவசம் அணிந்து, துணியை தலையில் சுற்றி வந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். நகைக்கடை மற்றும் அருகிலுள்ள கடைகளின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கிறோம்.

"இரண்டு பக்கவாட்டு சுவர், தரைத்தளத்தின் கீழேயுள்ள பார்க்கிங் என பல வழிகளில் ‘ஏசி வென்டிலேட்டரை’ அடைய முடியும் என்பதால், எந்த வழியாக சென்றார் என்பதையும் விசாரிக்கிறோம்," என்றனர்.

கோவை ஜோஸ் ஆலுக்காஸ்

சென்னை எண்ணூரில் எங்கு பார்த்தாலும் எண்ணெய் படலம் - எங்கிருந்து கசிந்தது? பிபிசி கள ஆய்வு

3 months 2 weeks ago
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 9 டிசம்பர் 2023

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த பெரும் மழையினால் நகரின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமான பாதிப்புக்கு உள்ளாயின என்றால், எண்ணூர் பகுதி மக்கள் சந்தித்த பிரச்னை விபரீதமானதாக இருந்தது.

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நிறைய இடங்களில் மழை நீர் தேங்கியது மட்டுமில்லாமல் பலரின் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் தங்களது உடமைகளை இழந்த பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், எண்ணூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய எண்ணெய் கலந்தது மிகப் பெரிய மாசுபாட்டு பிரச்னையை உருவாக்கியிருக்கிறது. இந்த எண்ணெய் கலந்த நீர் மழை நீருடன் கலந்து வீடுகளுக்குள்ளும் புகுந்ததால், பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

 
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய்
சென்னை எண்ணூரில் எங்கு பார்த்தாலும் எண்ணெய் படலம்

கடுமையாக மழை பெய்த திங்கள் கிழமையன்று, மழை நீர் வீடுகளுக்குள் வந்தது. அடுத்த நாளில் இருந்து எண்ணெய் கலந்த தண்ணீர் வீடுகளுக்குள் புக ஆரம்பித்தது. எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனி, பங்கிங்காம் கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகள், கிரிஜா நகர் பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்திலும் இந்த எண்ணெ மிதக்கும் தண்ணீர் உள்ளே புகுந்தது.

இது தவிர, தாழங்குப்பம், காட்டுக்குப்பம், நெட்டுக்குப்பம் பகுதிகளில் உள்ள கடல் பகுதிகளிலும் எண்ணெய் மிதக்க ஆரம்பித்தது.

சென்னையின் பிற பகுதிகள் அனைத்தும் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்ததால், ஆரம்பத்தில் இதை எப்படி அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வதென்றே அந்தப் பகுதி மக்களுக்குத் தெரியவில்லை.

"முதல்ல சாதாரணமான மழை நீர்தான் வீட்டிற்குள் வந்தது. பிறகு தண்ணீர் எண்ணையோடு கலந்து வீட்டிற்குள் வர ஆரம்பித்தது. இந்த எண்ணெய் கலந்த தண்ணீரில் மூழ்கி பொருட்கள் எல்லாம் நாசமாகிவிட்டன. பாதி வீடு வரை எண்ணெய் தேங்கிவிட்டது. நாங்கள் கூலி வேலை செய்கிறோம். இதை எப்படி தாங்க முடியும்" என்கிறார் எர்ணாவூர் திரௌபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குப்புராணி.

இது தவிர, தாழங்குப்பம், காட்டுக்குப்பம், நெட்டுக்குப்பம் பகுதிகளில் உள்ள கடல் பகுதிகளிலும் எண்ணெய் மிதக்க ஆரம்பித்தது.

 
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய்
“தாங்க முடியாத அளவிற்கு வீசும் டீசல் வாசம்”

எர்ணாவூரில் இருக்கும் ஆதி திராவிடர் காலனிக்குள் நுழையவே முடியாத அளவுக்கு எண்ணையும் தண்ணீரும் கலந்த சேறு கிடக்கிறது. அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் அனைத்திலும் எண்ணெயும் தண்ணீரும் புகுந்த நாசம் செய்திருக்கிறது.

"எண்ணெய் கலந்து வந்ததால் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பிரிட்ஜ், வாஷிங் மிஷின், குழந்தைகளின் பள்ளிக்கூட புத்தகங்கள் என எல்லாமே போய்விட்டன. நான் ஆட்டோ ஓட்டுகிறேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மீண்டும் ஒரு முறை இதுபோல பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார் எர்ணாவூரின் ஆதி திராவிடர் காலனி பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநரான கோபி.

துணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் எல்லாவற்றின் மீதும் எண்ணெய் படிந்திருப்பதால், அவை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிட்டன.

"வீட்டிற்குள் எண்ணெய் புகுந்ததால் உள்ளே கால் கூட வைக்க முடியவில்லை. எந்தப் பொருளையும் இனிமேல் பயன்படுத்த முடியாது. எண்ணெயில்லாமல் தண்ணீர் மட்டும் வந்திருந்தால், துணிகளைக் பிழிந்து, காய வைத்து மீண்டும் பயன்படுத்தலாம். இப்போது அந்தத் துணிகளை எல்லாம் தூக்கியெறிந்துவிட்டு புதிதாகத்தான் வாங்க வேண்டும். நாங்கள் தினமும் 300 -400 ரூபாய் சம்பாதித்து தினக்கூலியாக வாழ்கிறோம். எங்களிடம் அதற்கு பணம் ஏது" என்கிறார் அந்தப் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார்.

இப்படி வீடுகளுக்குள் எண்ணெயும் தண்ணீரும் புகுந்தது ஒருவிதமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றால், இந்த எண்ணெய் பக்கிங்காம் கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆற்றில் கலந்ததால், அதில் மீன்கள் செத்து மிதக்கத் துவங்கின. அந்த ஆறு கடலில் வந்து கலக்கும் முகத்துவாரப் பகுதியிலும் எண்ணெய் மிதந்துகொண்டிருக்கிறது. அதனால், அந்தப் பகுதி முழுக்கவே நிற்க முடியாத அளவுக்கு டீசல் நெடி வீசிக்கொண்டிருக்கிறது.

"மூச்சு விட முடியவில்லை. சாப்பிட முடியவில்லை. நெடியைத் தாங்க முடியாமல், குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே இருப்பதில்லை" என்கிறார் கொசஸ்தலை ஆறும் கடலும் சேரும் பகுதியில் வசிக்கும் சித்ரா.

 
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய்
எண்ணெய் எங்கிருந்து கசிந்தது?

இது தொடர்பான செய்திகள் வெளியானதும், மிகத் தாமதமாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த விவகாரம் குறித்து ஆராய ஆரம்பித்தது. அதற்குப் பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிக்கையில் "இந்த எண்ணெய் மணலி தொழிற்பேட்டை பகுதியிலிருந்து பக்கிங்காம் கால்வாயில் கலந்திருக்க வேண்டும். இந்த எண்ணெய் எங்கிருந்து வருகிறது என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் குழு ஆராய்ந்தது. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடட் (சிபிசிஎல்) நிறுவனத்தின் தெற்கு வாயில் அருகே உள்ள மழை நீர் வெளியேறும் பகுதிக்கு அருகில் எண்ணெயுடன் தண்ணீர் கலந்து தேங்கியிருந்தது. இதிலிருந்து இந்த எண்ணெய் வந்திருக்கலாம். ஆனால், நாங்கள் ஆய்வு நடத்தியபோது அங்கிருந்து வந்த மழை நீரில் எண்ணெய் படலம் ஏதும் இல்லை.

வளாகத்திற்குள் தேங்கியிருந்த மழை நீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டபோது, தரையில் படிந்திருந்த எண்ணெயும் அந்த தண்ணீருடன் சேர்ந்து வெளியேறியிருக்கலாம். பிறகு மெதுமெதுவாக பங்கிங்கம் கால்வாயில் கலந்திருக்கலாம். இப்படி எண்ணெய் மிதப்பதை அகற்றும்படி சிபிசிஎல்லுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. மழை நீர் கால்வாயுடன் கலக்கும் இடத்தில் உறிஞ்சிகளை வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், சிபிசிஎல்லுக்கு மேலே உள்ள கால்வாய் பகுதிகளிலும் எண்ணெய் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது" என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், சி.பி.சி.எல். நிறுவனம் தங்கள் ஆலையிலிருந்து எண்ணெய் வெளியேறியதாகச் சொல்வதை ஏற்கவில்லை. அந்த நிறுவனம் X சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்த விளக்கத்தில், "சி.பி.சி.எல். மணலி சுத்திகரிப்பு நிலையத்தின் எந்தக் குழாயிலும் கசிவு ஏதும் இல்லை. மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட இடைவிடாத மழையால், சுத்திகரிப்பு நிலையத்திற்குள் வரலாறு காணாத அளவுக்கு தண்ணீர் தேங்கியது. மணலியின் பிற தொழிற்சாலைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சி.பி.சி.எல். நிலைமையை புரிந்துகொண்டு தடையற்ற வகையில் ஆலையை இயக்கி, தமிழகத்துக்கு எரிபொருட்கள் வழங்குவதை உறுதி செய்தது. தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது. இப்போது நீர் மட்டம் குறைந்திருக்கிறது. நாங்கள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறோம்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு, வழக்குப் பதிவுசெய்தது. இந்த வழக்கில் சனிக்கிழமையன்று பதிலளித்த சி.பி.சி.எல்., இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் வழக்கறிஞர், இது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றும் இந்த எண்ணெய் தங்களுடைய ஆலையிலிருந்து வெளியேறவில்லையென்றும் கூறியிருக்கிறார்.

சிமென்ட் ஆலைகள், சுத்திகரிப்பு ஆலைகள், அனல் மின் நிலையங்கள் என ஏற்கனவே மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் எண்ணூருக்கு ஒரு புதிய அச்சுறுத்தலாக வந்திருக்கிறது இந்த எண்ணெய்க் கசிவு.

https://www.bbc.com/tamil/articles/cprprj2nevxo

சோழர்கள் ஆட்சியில் மழை, வெள்ளம்: பேரிடர்களைத் தவிர்க்க உதவிய நுட்பமான நீர் மேலாண்மை

3 months 2 weeks ago
சோழ மன்னர்கள்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், மாயகிருஷ்ணன்.க
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஒவ்வோர் ஆண்டும் பருவ மழை பெய்வது வழக்கம். அந்த மழை நமக்கு ஒரு வரலாற்றுப் படிப்பினையைத் தொடர்ந்து கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது.

ஓரிரு நாட்களில் பெய்த அதிகனமழை சென்னையைப் புரட்டிப்போட்டு விட்டது. இயற்கை நமக்கு வகுத்துக் கொடுத்த முறைகளை நாம் சரியாகப் பின்பற்றாததுதான் இது போன்ற பேரிடர்களுக்கு காரணம் என்கின்றனர் இயற்கையியலாளர்கள்.

தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன. அவற்றுள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 124 ஏரிகளும், 34 கோவில் குளங்களும் உள்ளன. இதில் ஏரிகளின் மொத்த கொள்ளளவு சென்னை மாநகர பரப்பளவில் 5.5 சதவீதமே ஆகும்.

பழங்காலத்தில் சோழ அரசர்கள் நீர் மேலாண்மையை வெகு லாகவமாக கையாண்டு தண்ணீரைப் பாதுகாத்து விவசாயத்திற்கு, குடிநீருக்கு என திட்டமிட்டுப் பயன்படுத்தி வந்தார்கள். இருப்பினும், சில நேரங்களில் ஏற்படும் புயல் மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் அளவிற்கு கட்டுமானங்களையும் நீர் வழித் தடங்களையும் வைத்திருந்தார்கள்.

தற்போது சென்னையில் பெய்த புயல், மழை, வெள்ளம் போன்ற தாக்குதல்கள் பழங்காலத்தில் ஏற்பட்டபோது என்ன செய்தார்கள், எப்படி அவர்கள் மக்களை பாதுகாத்தார்கள் என்பது குறித்து இதில் விரிவாக பார்ப்போம்.

கல்வெட்டு ஆய்வாளரும், வரலாற்று எழுத்தாளருமான குடவாயில் பாலசுப்பிரமணியன் பிபிசி தமிழிடம் பேசியபோது, "முன்னோர்கள் குறிப்பாக சோழர்கள் நீர் மேலாண்மையில் நிபுணர்களாகவே விளங்கினார்கள் என்ற போதிலும் புயல், மழை காலத்தில் சில நேரங்களில் ஏற்பட்ட அசம்பாவிதங்களையும் கல்வெட்டுகளாக பதிவு செய்து வைத்தார்கள்," என்று கூறினார்.

 
825 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பெருமழை
சோழ மன்னர்கள்

மூன்றாம் குலோத்துங்க சோழனின் 12ஆம் ஆட்சி ஆண்டில் அதாவது 825 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டை மண்டலத்தில் மிக கனத்த மழை பெய்தது. அதன் காரணமாக அன்றே காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள சோமங்கலம் ஊரில் இருந்த பெரிய ஏரியின் கரையில் ஏழு இடங்கள் உடைந்து வெள்ளம் பெருகி ஊர் சீர்குலைந்தது என்று குறிப்பிடுகிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

அவர் கூறியதன்படி, அந்த உடைப்புகளை திருச்சுரக் கண்ணப்பன் திருவேகம்படையார் கம்பமுடையான் காமன் கண்ட வானவன் என்பவன் அடைத்து ஏரிக்கரையைப் பலப்படுத்தினான். தொடர்ந்து அடுத்த ஆண்டும் பெருமழை வெள்ளத்தால் அதே ஏரி நிரம்பி உடைந்தது, மீண்டும் திருவேக கம்பமுடையான் அவற்றை அடைத்து சீர் செய்தான்.

மேற்கொண்டு விளக்கியவர், "அதற்கு அடுத்த ஆண்டு முதல் அது பலப்பட்டு நின்றது. அது தொடர்ந்து நடைபெற வேண்டும் எனக் கருதி அவன் சோமங்கலத்து ஊர் சபையோரிடம் 40 பொற்காசுகளை ஏரி பராமரிப்பிற்காக நிரந்தர வைப்புத் தொகையாக அளித்தான்.

அதைப் பெற்ற சபையோர் அந்த வைப்புத் தொகையை வட்டிக்கு ஈடாக 12 பிடி என்ற பரப்பளவுடைய குழிக்கோலால் 40 குழி நிலத்தை ஆண்டுதோறும் தோண்டி ஏரிக்கரையைப் பலப்படுத்த ஒப்புக்கொண்டனர். இதுபோல் இன்னும் பல கல்வெட்டுகள் உள்ளன.

அதுபோன்று பெருமழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏரி உடைந்து ஊர் நிலங்கள் அனைத்தும் பாழ்பட்ட பின்பு பெரும் பஞ்சம் ஏற்பட்ட போதும், தாம் வைத்திருந்த நகைகளையும் சொத்துகள் முழுவதையும் சீரமைப்புப் பணிகளுக்காகக் கொடுத்து நீர்நிலைகளையும் ஊரையும் மங்கையர்கரசியார் என்ற பெண்மணியும் அவரது சகோதரர் நாற்பத்தெண்ணாயிரம்பிள்ளை என்பாரும் காத்தனர," என்று குறிப்பிட்டார் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

அவர்கள் அளித்த கொடைகள் பற்றிய செய்திகளை திருவண்ணாமலை கோவிலில் உள்ள மூன்று சோழர் கால கல்வெட்டு சாசனங்கள் எடுத்துக் கூறுவதாகவும் அவர் கூறினார்.

 
வெள்ளத்தைத் தடுக்க நாணல்
குடவயல் பாலசுப்பிரமணியன்

அதேபோல், விஜய நகர மன்னர்கள் காலத்தில் திருச்சி திருவரங்கம் பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் அழிவைத் தடுப்பதற்காக ஒளக்கு நாராயண திருவேங்கடய்யங்கார் என்பவர் திருவரங்கத்தின் மேற்கு கரைக்கு எந்திர ஸ்தாபனம் செய்தும் அய்யனார் உருவச்சிலை அமைத்தும் காவிரி ஆற்றில் ஏற்படும் வெள்ளத்தின் வேகத்தைக் குறைக்க வடகரையில் நாணலை நட்டதாகவும் விஜயநகர மன்னர் சதாசிவராயரின் திருவரங்க கோவில் கல்வெட்டு தெரிவிக்கின்றது.

தஞ்சை பெரிய கோவிலின் மிகச் சிறந்த வடிகால் அமைப்பு

புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமான அற்புதங்களில் ஒன்று அதன் வடிகால் கட்டமைப்பு. எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அந்தக் கோவிலில் நீர் தேங்குவதைப் பார்க்க முடியாது என்கிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

அதுகுறித்து விவரித்தவர், "கோவிலின் உள்ளே இருக்கும் வடிகால்கள் கோவிலில் உள்ள நீரை வெளிப் பிரகாரம் வழியாக அருகில் உள்ள சிவகங்கை குளத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாம் அதை நேரில் காண முடியும். அதேபோல் சோழர்கள் காலத்தில் சாலைகள் நடுவே மேடாகவே வடிவமைக்கப்பட்டன. இதனால் மழை பொழியும்போது சாலை பயணமும் தடைப்படவில்லை.

நீர்நிலைகளை நோக்கிய மழை நீரின் பயணமும் தடைப்படவில்லை. சோழர்கள் தங்கள் உட்கட்டமைப்புகளை வடிவமைக்கும்போது நீர் மேலாண்மையை மனதில் கொண்டே திட்டமிட்டுச் செயல்பட்டனர்.

ராஜராஜசோழன் காலத்தில்தான் நீர்நிலைகளை உருவாக்கி பாதுகாக்கவும், நீரை சமமாகப் பங்கிடவும் ஆயக்கட்டு என்ற கிராம சபை அமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழக வரலாற்றில் மிகப் பிரமாண்டமான ஏரிகள் வெட்டப்பட்ட காலம் என்று சோழர்கள், அதிலும் குறிப்பாக ராஜராஜன் காலத்தைக் கூற முடியும். தொழில்நுட்பத்தின் முன்னோடி இராஜராஜ சோழன்," என்று அவர் கூறினார்.

 
தஞ்சை பெரிய கோவிலின் மிகச்சிறந்த வடிகால் அமைப்பு

சோழர்களின் நீர் மேலாண்மை குறித்து விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் பிபிசி தமிழிடம் பேசினார்.

அப்போது அவர், "ஒரு நாட்டின் வளமையும், வலிமையும் நீர் ஆதாரங்களைப் பொறுத்தே அமைகிறது. சங்க காலம் தொட்டே நீர்நிலைகள் பற்றிய சான்றுகள் கிடைக்கின்றன. பல்லவர்கள் மற்றும் பாண்டியர்கள் ஏரி, குளம், கிணறு ஆகிய நீர் ஆதாரங்களை உருவாக்கி பாதுகாத்ததை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன," என்று தெரிவித்தார்.

"பல்லவர் காலத்தில் மகேந்திர தடாகம், சித்திரமேக தடாகம், பரமேஸ்வர தடாகம், வைரமேக தடாகம் போன்ற பல ஏரிகள் உருவாக்கப்பட்டன. பாண்டியர்களின் காலத்தில் புள்ளனேரி, எருக்கங்குடி ஏரி, திருநாராயண ஏரி, மாலங்குடி பெருங்குளம், மாறனூர் பெருங்குளம் போன்ற ஏரிகள் மற்றும் குளங்கள் ஏற்படுத்தப்பட்டதை கல்வெட்டுகள் சுட்டிக்காட்டுகின்றன.

சோழர்கள் காலத்தில் பல ஏரிகள், குளங்கள், கிணறுகள் வெட்டப்பட்டதோடு பழைய நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டதை கல்வெட்டுக்கள் எடுத்துக் காட்டுகின்றன. வீரநாராயண பேரேரி (வீராணம்), கண்டராதித்த பேரரி, செம்பியன் மாதேவி பேரேரி, போன்ற பல நீர் நிலைகளை உருவாக்கினர்."

மேலும், அவற்றைத் தொடர்ந்து தூர்வாரி முறையாகப் பராமரித்து நீரை சேமித்து அதைப் பாசனத்திற்கும் பயன்படுத்தினார்கள். மேலும் நீர்நிலைகள் பராமரிப்பிற்கு என்று குழுக்கள் அமைக்கப்பட்டதையும் கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிவதாகவும் பேராசிரியர் ரமேஷ் கூறுகிறார்.

 
முட்காடுகளை அழித்து ஏரி
தஞ்சை பெரிய கோவிலின் மிகச்சிறந்த வடிகால் அமைப்பு

"கி.பி. 871இல் விஜயாலய சோழன் ஆட்சிக் காலத்தில் ஜம்பை அருகே உள்ள பள்ளிச்சந்தல் என்னும் ஊரில் வானர்குல சிற்றரசர் சக்கன் வைரி மலையன் என்பவர் தனது பெயரில் சமண பள்ளிக்குரிய பள்ளி நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக ஒரு ஏரியை அமைத்தார்."

அதைப் பராமரிப்பதற்காக முட்காடுகளை அழித்து நிலத்தைத் திருத்தி ஏரிப்பட்டியாக வழங்கியதை கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இதன் மூலம் ஏரி பராமரிப்பிற்காக தனியாக நிலம் வழங்கி அதை ஏரிப்பட்டியாக அளித்ததையும் ஜம்பை கல்வெட்டு தெளிவாக உணர்த்துவதாகக் கூறுகிறார் பேராசிரியர் ரமேஷ்.

ஜம்பை கோவிலின் அர்த்த மண்டபத்தின் தெற்கு சுவர் பகுதியில் உள்ள மற்றொரு கல்வெட்டு ராஜராஜனின் 24ஆம் ஆண்டு கல்வெட்டு எனக் குறிப்பிடுகிறார் அவர்.

அதில் "சிற்றரசன் இராச ராச வான கோவரையன், அரையர் காளாதித்த பேரேரி என்ற ஏரி ஒன்றை வெட்டி வைத்ததைக் கூறப்பட்டுள்ளது. அதேபோல் நெற்குன்றமாகிய வைரமேக சதுர்வேதி மங்களத்து சபையோர் குளம் வெட்டுவதற்கான நிலத்தை எடுத்துக்கொண்டு அதற்கு சமமான வேறு நிலம் கொடுத்த ஒப்பந்தத்தையும்" கூறுகின்றது.

 
ஓடத்தைப் பயன்படுத்தி தூர் வாரிய நிகழ்வு
முட்காடுகளை அழித்து ஏரி

இவை மட்டுமின்றி, திருச்சி மாவட்டம் நங்கவரம் கல்வெட்டு குளம் தூர்வரப்பட்டதைப் பற்றிய சுவாரஸ்யமான தகவலைத் தெரிவிக்கின்றது. குளத்தில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து ஆழப்படுத்துவதற்காக பணியாட்களும், ஓடங்களும் வழங்கப்பட்டதைக் குறிப்பிடுகிறதாகத் தெரிவ்கத்தார் பேராசிரியர் ரமேஷ்.

"அதாவது 6 பேர் ஓடத்தை இயக்கி கூடையைக் கொண்டு 140 கூடை எண்ணிக்கையில் குளத்தில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து வந்து குளத்தின் உச்சிக் கரையில் கொட்டுவதற்கு 6 பேருக்கு ஓராண்டுக்கு 320 களம் நெல்லும், சோறு மற்றும் ஆடையும் அளிக்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றது.

இதற்கான ஓடத்தை செய்வதற்கு தச்சன், கொல்லன் ஆகிய இருவருக்கும் இரு களம் நெல்லும், மரம் கொடுக்கும் வலையருக்கு இரு களம் நெல்லும், குளத்தைக் கண்காணிக்கும் கண்காணி இருவருக்கு 45 களம் நெல்லும் வழங்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது."

இந்த ஏற்பாட்டை அந்த ஊர் சபையோரே பயிர் செய்து தரவேண்டும் என்றும் இதைச் செய்யத் தவறினால் சபையோர் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று அவர்களே உறுதிமொழி அளித்ததை கல்வெட்டு தெரிவிப்பதாகவும் விளக்கினார் அவர்.

"இதேபோன்று காப்பலூர் குளத்தில் வண்டல் மண் அள்ளுவதற்கு முதலாம் பராந்தக சோழன் காலத்தில் ஓடம் தரப்பட்டதை கல்வெட்டு கூறுகின்றது. இதன்மூலம் சோழர் காலத்தில் ஓடங்களை பயன்படுத்தி தூர்வாரியதை அறிய முடியும்," என்கிறார் ரமேஷ்.

 
ஏரி மதகு பாதுகாப்பு
புயலை எப்படி மன்னர்கள் எதிர்கொண்டார்கள்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கிளியனூர் பெருமாள் கோவிலில் உள்ள உத்தம சோழனின் கல்வெட்டு இந்த ஊர் ஏரியின் மதகை பராமரிப்பதற்காக வோசாலிப்பாடி புடைப்பாக்கத்தைச் சேர்ந்த சாத்தன் மல்லடிகள் என்பவரிடம் ஏரி பாய்ச்சல் நிலத்தில் விளைந்த நெல்லை ஒவ்வொரு போகத்திற்கும் ஒரு தூணி அளவு கொடுக்க வேண்டும் என்றும் மேலும் நிலத்தை விற்று இந்த ஊர் சபையினர் கொடுத்ததையும் ஒரு தெரிவிப்பதாக விவரித்தார் பேராசிரியர் ரமேஷ்.

"ராஜராஜ சோழன் காலத்தில் நீர்ப்பாசனத்திற்காகத் தோண்டப்பட்ட குளங்களை ஆண்டுதோறும் பராமரிப்பதற்காக நிலங்களை வழங்கி அதிலிருந்து விளையும் நெல் வருவாயைக் கொண்டு பராமரித்தனர். இவ்வாறு அளிக்கப்பட்ட நிலம் ஏரிப்பட்டி, குளப்பட்டி என்றும் அழைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் திருவிளாங்குடி கோவிலில் உள்ள முதலாம் ராஜராஜனின் கல்வெட்டு குடிகாடு குளம் என்னும் ஏரி உடைந்து முள்காடு மண்டி கிடந்ததையும் அந்தக் காடுகளை அழித்து குளத்தை ஆழப்படுத்தி கரையைக் கட்ட வேண்டும் என்றும் ஊர் சபை சோழ அதிகாரியான உத்தம சோழ நல் உடையானிடம் விண்ணப்பித்து இந்த ஊர் ஏரியில் கூடி முடிவெடுத்து ஏரியிலிருந்து முட்காடுகளை அழித்து தூர்வாரி கரைகட்டி அதைப் பராமரிக்க நிலதானம் வழங்கியதையும் தெரிவிக்கின்றது."

 
ஏரி தூர்வார வயது வரம்பு... கட்டுப்பாடு...
புயலை எப்படி மன்னர்கள் எதிர்கொண்டார்கள்

முதலாம் ராஜேந்திர சோழனின் பாகூர் கல்வெட்டு கடம்பனேரியை தூர்வாருவதை விரிவாக தெரிவிப்பதாக பேராசிரியர் ரமேஷ் குறிப்பிட்டார்.

"அழகிய சோழன் என்னும் மண்டபத்தில் நீலன் வெண்காடன் என்ற அதிகாரி உடனிருக்க மக்கள் பெருமளவில் கூடி ஏரி வரி மற்றும் தூர்வாருதல் பற்றி முடிவு செய்ததைக் குறிப்பிடுகின்றது. இந்த ஊர் மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து இந்த ஊரில் பயிர் செய்வோரும் ஏரி வரியைச் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஏரியைத் தூர்வார வேண்டும் என்றும் அதன் அளவைத் துல்லியமாக அளவிட்டு உள்ளது.

நான்கு சான் அளவுள்ள அளவுகோலால் இரண்டு கோலுக்கு இருகோல் அகலமும் ஒரு கோல் ஆழமும் கொண்ட ஒரு குழி தோண்ட வேண்டும் என்றும் குழி தோண்டுபவர்களுடைய வயது வரம்பு 10 வயதிற்கு மேல் 80 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது."

தோண்டாத நபர்களிடமிருந்து ஏரி வாரிய நிர்வாகிகள் தண்டப்பணம் வசூலிக்க வேண்டும் எனவும் அவ்வாறு வசூலிக்காத ஏரி வாரிய நிர்வாகிகளிடம் இருந்து ஆணையை மீறியவர்கள் என்று கல்வெட்டு துல்லியமாகத் தெரிவிக்கின்றது எனவும் ரமேஷ் தெரிவித்தார்.

"நீர் நிலைகளின் கரைகளில் மரம் வளர்த்து கரையை மண் சரிவு ஏற்படாமல் பாதுகாத்து வந்துள்ளனர். கரைகளில் உள்ள மரங்களை வெட்டுவது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் கீரனூரில் உள்ள மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு நீர்நிலைகளையும் அவற்றின் கரைகளில் உள்ள மரங்களையும் அழிக்க மாட்டோம் என்று உறுதிமொழி கூறியதைக் கூறுகின்றது.

அதாவது தங்களுக்குள் எவ்வித பகையோ மோதலோ வந்தாலும் ஊரில் உள்ள ஏரி, வயலில் உள்ள கிணறுகள் குளக்கரையில் உள்ள மரங்கள் இவற்றை அழிக்கவோ வெட்டவோ கூடாது என்றும் அதையும் மீறி அழிப்பவர்கள் நிலத்தை தண்டமாகச் செலுத்த வேண்டும் எனவும் கல்வெட்டு தெரிவிக்கின்றது.

இதுபோல் சோழர்கள் காலத்தில் நீர் நிலைகளை ஏற்படுத்தி மழை நீரை சேகரித்தும் பாதுகாத்தும் பராமரித்தும் பயிர்த் தொழிலுக்கு மட்டுமல்லாது குடிநீருக்காகவும் பயன்படுத்தி உள்ளார்கள். மேலும் வெள்ளப் பெருக்கெடுக்கும் காலத்தில் நீர் வழித் தடத்தைச் செப்பனிட்டு வந்ததால் பெருமளவு வெள்ள பாதிப்பின்றி அவர்களால் மக்களைப் பாதுகாக்க முடிந்தது," என்று கூறி முடித்தார் ரமேஷ்.

புயலை எப்படி மன்னர்கள் எதிர்கொண்டார்கள்

மழை, புயல், வெள்ளம் என இயற்கை சீற்றங்கள் பழங்காலத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தியதாகவும் அதுகுறித்த கல்வெட்டுகள் தென்னிந்தியா முழுவதும் காணப்படுவதாகவும் கூறுகிறார் திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளரும் அம்மாவட்டத்தின் வட்டாட்சியருமான பாலசுப்பிரமணியன்.

"மூன்றாம் ராஜராஜனின் திருமழப்பாடி கல்வெட்டில் வேளாண் என்பவன் திருமழப்பாடி கிராமத்தை கொள்ளிட ஆற்றின் வெள்ளத்தால் சேதம் உண்டாகாமல் தடுப்பதற்காக அதன் தென்பகுதியில் கரையமைத்து ஊரைக் காப்பாற்றியதைத் தெரிவிக்கிறது.

விக்ரம சோழனின் ஆறாம் ஆட்சியாண்டில் வெள்ளம் ஏற்பட்டு ஊர் அழிந்ததை வட ஆற்காடு மாவட்டம் திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோவில் கல்வெட்டு மூலம் அறியலாம்.

காடவராயர்கள், கடலூர் மாவட்டத்தில் பெருமாள் ஏரி, புதுச்சேரி திருபுவனை ஏரி, ஒழுகரை ஏரி, திருக்கோவிலூர் அருகே கொளத்தூர் ஏரி எனப் பல இடங்களிலும் ஏரிகள் வெட்டி அதைப் பாதுகாத்து வந்ததை கோப்பெருஞ்சிங்கன் கால கல்வெட்டு மூலம் அறிய முடியும்.

கோப்பெருஞ்சிங்கனின் எட்டாம் ஆட்சியாண்டு காலத்தில் திரிபுவனமாதேவி ஏரியில் பெருவெள்ளம் ஏற்பட்டு மதகு உடைந்து அழிவு ஏற்பட்டதையும் அதை சீர்செய்து கரையை நன்றாகக் கட்டியதையும் கல்வெட்டு செய்தி உணர்த்துகின்றது," என்று விளக்கினார் அவர்.

 
பிட்டுக்கு மண் சுமந்த கதை...
புயலை எப்படி மன்னர்கள் எதிர்கொண்டார்கள்

மேலும், "முதல் பராந்தகன் காலத்தில் திருப்பாற்கடலில் பெரு மழையால் ஏற்பட்ட ஏரி உடைப்பை அடைப்பதற்காக 30 களஞ்சி பொன் ஏரி வாரிய பெருமக்களிடம் கொடுக்கப்பட்ட செய்தி கல்வெட்டு மூலம் அறியலாம்.

ஏரிகள், ஆறுகள், வாய்க்கால்கள், கரைகள், பெரும் புயல் மழை வெள்ளத்தால் உடையும்போது அவை உடனடியாகச் சீரமைக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. அதற்கு பெருமளவிலான மனித உழைப்பு அந்தக் காலத்தில் தேவைப்பட்டது.

அப்போது ஒவ்வொரு குடும்பமும் அல்லது ஒவ்வொரு நில உடமையாளரும் தாங்களே இலவச கட்டாய சேவையாக வேலையாட்களை அத்தகைய பணிகளுக்கு அனுப்புவது மரபு. இப்படி நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியின் அடிப்படைதான் திருவிளையாடல் புராணத்தில் குறிக்கப்படும் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சியாகும்," என்று விவரிக்கிறார் பாலசுப்பிரமணியன்.

அதுமட்டுமின்றி, "ராஜராஜனின் 20ஆம் ஆட்சியாண்டு காலத்தில் திருவண்ணாமலை உடையார் கோவில் பகுதியில் பல இடங்களில் ஆறு, ஏரிக் கரைகள் உடைந்து கிடந்ததை கல்வெட்டு செய்தி தெளிவாக உணர்த்துகின்றது.

சந்திரமௌலி ஆற்றில் வந்த பெரும் வெள்ளத்தால் ஊருக்கு சேதம் ஏற்படாமல் இருப்பதற்காக திருமறை காடுடையான் என்பவன் ஆற்றின் போக்கையே மாற்றியுள்ளான். இது தொடர்பான கல்வெட்டு திருக்குவளை தியாகராஜ சுவாமி கோவிலில் உள்ளது.

மேலும், அக்காலத்தில் ஏரி, ஆறு என நீராதாரங்கள் குறித்த தெளிவும் புரிதலும் அரசர் முதல் மக்கள் வரை அனைவரிடத்திலும் முக்கியமானதாகக் கருதப்பட்டது. அதனால்தான் அதற்கு வாரியம் அமைத்து பாதுகாத்துப் பயன்படுத்தி வந்தனர், என்கிறார் திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலசுப்பிரமணியன்.

https://www.bbc.com/tamil/articles/c8v8z353m4qo

தமிழ்நாடு தனி வானிலை ஆய்வு மையம் அமைக்க வேண்டுமென வலுக்கும் கோரிக்கையின் பின்னணி

3 months 2 weeks ago
சென்னை மழை அளவை துல்லியமாக கணிக்க முடியுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சென்னைக்கு தனி வானிலை மாடலை உருவாக்க 5 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகலாம் என வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ச.பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பில் துல்லியம் குறைவா? உண்மையில் புதிய மாடலுக்கான தேவை உள்ளதா?

இந்தியாவை பொறுத்தவரை நாடு முழுவதும் வானிலை முன்கணிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய வானிலை ஆய்வு மையம்தான் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது.

சென்னை, மும்பை, புது டெல்லி, கொல்கத்தா, நாக்பூர், குவஹாத்தி ஆகிய ஆறு மண்டல வானிலை ஆய்வு மையங்கள் வாயிலாக முன் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

இந்திய வானிலை ஆய்வு மையம், அமெரிக்கா உருவாக்கிய உலகளாவிய முன்னறிவிப்பு அமைப்பு (Global Forecast System, GFS) என்ற மாடலை பின்பற்றி வானிலை அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இப்படியான நிலையில், கடந்த ஒரு வாரமாக சென்னையை வெள்ளக் காடாக்கிய மிக்ஜாம் புயலின் தாக்கம் குறித்தும், சென்னை வானிலை ஆய்வு மையம் தனது கணிப்பை அறிக்கையாக வெளியிட்டது.

ஆனால், ஆய்வு மையம் கணித்ததைவிட, மிக்ஜாம் புயலின் வேகம், நிலைகொண்ட நேரம் மற்றும் மழை அளவில் பெரும் மாறுபாடு இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் வல்லுநர்கள். 2015 புயலில் சென்னை கடும் பாதிப்பைச் சந்தித்தபோதும் இதே வாதம் முன்வைக்கப்பட்டன.

சென்னை மற்றும் தமிழகத்துக்கான, வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகளில் துல்லியம் குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் வானிலை சார்ந்து இயங்கும் வல்லுநர்கள்.

கணிப்பின் துல்லியத்தன்மையை அதிகரிக்க தமிழகத்துக்கு தனி மாடல் உருவாக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 
துல்லியத்தன்மை குறைவா?
சென்னை மழை அளவை துல்லியமாக கணிக்க முடியுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிபிசி தமிழிடம் பேசிய சென்னை பொன்னேரி எல்.என் அரசுக் கல்லூரி இயற்பியல் துறையின் தலைவரும் இணைப் பேராசிரியருமான சாமுவேல் செல்வராஜ், ‘‘இந்தியா வெப்ப மண்டல (tropical region) நாடாக உள்ளதால் உலகளாவிய முன்னறிவிப்பு அமைப்பு மாதிரியைப் பயன்படுத்தி எடுக்கப்படும் வானிலை கணிப்புகளில் துல்லியத்தன்மை வெகுவாகக் குறைகிறது," என்று கூறினார்.

மேலும், மற்ற நாடுகளைப் போல் அல்லாமல் இங்கு கணிப்புகளை உருவாக்குவதே சவாலான ஒன்றாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

"சென்னையைத் தாக்கிய மிக்ஜாம் புயல் மோசமானதற்கு, எல் நினோ, இந்தியப் பெருங்கடலில் நிகழும் இருதுருவ செயல்முறை (Indian Ocean Dipole), மேடன்-ஜூலியன் அலைவு (Madden-Julian Oscillation) மற்றும் பருவநிலை ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றம்தான் காரணம்.

ஆனால், இதுபோன்ற மாற்றங்கள், புயலின் பாதை மற்றும் வேகத்தில் ஏற்படும் திடீர் மாற்றம் போன்றவை குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் முறையான மற்றும் முழுமையான படிப்புகளை மேற்கொள்வது இல்லை," என்றும் சாமுவேல் செல்வராஜ் கூறினார்.

சொல்லப்போனால், "இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்குப் பருவமழை தொடர்பான தகவல்கள் உள்ளதே தவிர, வடகிழக்கு தொடர்பான ஆராய்ச்சிகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்படுவதே இல்லை,’’ என்கிறார் அவர்.

சென்னை மழை அளவை துல்லியமாக கணிக்க முடியுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

தனி மாடல் சாத்தியமா?

தமிழகத்துக்கான தனி வானிலை மாடல் ஒன்றை உருவாக்குவதும், அதை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதும் சாத்தியம் என்கிறார் இணைப் பேராசிரியர் சாமுவேல் செல்வராஜ்.

‘‘உலகளாவிய முன்னறிவிப்பு அமைப்பின் (GFS) தரவுகளைப் பயன்படுத்தி டவுன்ஸ்கேலிங் என்ற முறையில் நமக்கு ஏற்றவாறு ஒரு தனி மாடலை உருவாக்க முடியும். தற்போது, வானிலை ஆய்வு மையம் சென்னை, செங்கல்பட்டு போன்ற மாவட்டம் அல்லது மண்டலம் வாரியாகத்தான் வானிலை முன் அறிவிப்பை வெளியிடுகிறது.

டவுன்ஸ்கேலிங் செய்தால், நாம் சென்னையை நான்காகப் பிரித்து பகுதிவாரியாகக்கூட எவ்வளவு மழை பொழியும், புயலின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பது போன்ற தகவல்களைக் கணிக்க முடியும்," என்று அவர் குறிப்பிட்டார்.

மற்ற முறைகளைவிட இதில் துல்லியத்தன்மை அதிகமாக இருக்கும் என்கிறார் சாமுவேல் செல்வராஜ். "நான் பல ஆண்டுகளாக டவுன்ஸ்கேலிங் முறையைப் பின்பற்றி பல ஆய்வுகளைச் செய்துள்ளேன், ஆய்வு அறிக்கைகளையும் தயாரித்துள்ளேன். இதன்மூலம், மக்கள் பாதிப்பதற்கு முன்பே அரசு மிக விரைவில் திட்டமிட முடியும்," என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு தெரிவித்த இணை பேராசிரியர் சாமுவேல் செல்வராஜ், "தமிழ்நாட்டிற்கு என பிரத்யேக வானிலை ஆய்வு மையத்தை உருவாக்கி, தனி வானிலை மாடல் ஒன்றை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். வல்லுநர்களை ஒருங்கிணைத்து தமிழக அரசு முயன்றால் இது சாத்தியமாகும். மக்கள் வெள்ளத்தில் தத்தளிப்பதைத் தடுக்க முடியும்,’’ என்றும் நம்பிக்கையுடன் கூறினார்.

 
டவுன்ஸ்கேலிங் முறையால் என்ன நன்மை?
தமிழ்நாடு வானிலை மாடல்

பிபிசி தமிழிடம் பேசிய சுயாதீன வானிலை முன்னறிவிப்பாளராக செயல்படும் பிரதீப் ஜான், "தமிழ்நாடு வெப்ப மண்டலப் பகுதி என்பதால், மீசோ ஸ்கேல் முறையை (Meso Scale Phenomena) பயன்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன.

ஆனால், டவுன் ஸ்கேலிங் முறையை வைத்து நமக்கான தனி மாடலாக உருவாக்க முடியும்," என்று கூறுகிறார்.

இதுவரை நாம் பின்பற்றும் மாடல்களைவிட அதிக துல்லியத்தன்மையுடன் கணிப்புகளை மேற்கொள்ள முடியும். தமிழகத்தில் சிலர் டவுன் ஸ்கேலிங் முறையை வெற்றிகரமாகச் செய்து வருகின்றனர் என்றும் பிரதீப் ஜான் கூறினார்.

தற்போது, "12 – 22 சதுர கி.மீ அளவில்தான் வானிலை குறித்த கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. டவுன் ஸ்கேலிங் முறையில் 12 சதுர கிலோ மீட்டருக்கும் குறைவான அளவிலேயே நம்மால் மழை, புயல் தாக்கம் குறித்து அறிய முடியும். சென்னையை சிறு சிறு மண்டலங்களாகப் பிரித்துக்கூட நம்மால் கணிப்பைக் கூற முடியும்.

ஆய்வாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, தமிழக அரசு தனி வானிலை ஆய்வு மையத்தை நிறுவினால், மழை, புயல் குறித்த கணிப்புகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல முடியும். அதன் மூலம் பாதிப்புகளைக் குறைக்க முடியும்,’’ என்கிறார் அவர்.

தமிழ்நாடு வானிலை மாடல்

பட மூலாதாரம்,RMC CHENNAI

படக்குறிப்பு,

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தினசரி வானிலை அறிக்கை

‘அரசு கைவிட்ட திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்’

குறுகிய நிலப்பரப்பில் நிலவும் மாற்றங்களைக் கண்டறிந்து வானிலை முன்னறிவிப்பை உருவாக்கப் பயன்படும் மீசோ ஸ்கேலிங், டவுன்ஸ்கேலிங் மாதிரிகளைப் பயன்படுத்தி தமிழ்நாட்டிற்கு என பிரத்யேக வானிலை மாடலை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக முன்வைக்கப்படுகிறது என்கிறார் பூவலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.

"தமிழ்நாடு அரசு 2022 பட்ஜெட்டில், பேரிடர் தாக்கும் முன் உரிய நேரத்தில் எச்சரிக்கையை வழங்குவதற்கு, புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஒரு வானிலை ஆய்வு மைய கட்டமைப்பை உருவாக்க 10 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்தது. ஆனால், இன்று வரை அது செயல்பாட்டிற்கே வரவில்லை,’’ என்கிறார் அவர்.

கைவிடப்பட்ட இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் எனக் கூறிய சுந்தர்ராஜன், "தமிழ்நாட்டிற்கென தனி வானிலை ஆய்வு மையத்தை உடனடியாக நிறுவி வானிலை ஆய்வாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், இது ஒரு சில நாட்களில் செய்து முடிக்கும் விஷயம் அல்ல. "தற்போது தொடங்கினால் 5 முதல் 10 ஆண்டுகளில் ஓரளவுக்குத் துல்லியமான வானிலை கணிப்பை மேற்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, அதற்கேற்ப கட்டமைப்புகளை மேம்படுத்தி வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க முடியும். இனியாவது அரசு விழித்துக்கொண்டு இதைச் செய்ய வேண்டும்," என்றும் சுந்தர்ராஜன் கூறினார்.

 
‘கூட்டு முயற்சி இருந்தால்தான் பலன் தரும்’

பிபிசி தமிழிடம் பேசிய 'சென்னையில் ஒரு மழைக்காலம்' (COMK) அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், ‘‘புதிய மாடலை உருவாக்குவதுடன் நிறுத்தாமல், பேரிடர்க் காலங்களில் உருவாக்கப்படும் வார் ரூமில் அந்தத் தகவல்களை வைத்து வெள்ள முன்னறிவிப்பைத் தயாரிக்க வேண்டும்," என்கிறார்.

எந்தப் பகுதியில் எவ்வளவு மழை பெய்தால் எந்த அளவுக்கு வெள்ளம் வெளியேறும், மழைநீர் செல்லும் பாதைகள் என்ன அந்தப் பாதைகளில் உள்ள தடைகள் என்ன? அதைச் சரி செய்வது எப்படி?

"இவற்றை உடனடியாகக் கணிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மழைநீர் வழிந்தோடும் பகுதிகளில் சென்சார்களை பொறுத்தி நிகழ்நேர அவதானிப்புகளைச் (Real Time Observation) செய்து பார்க்க வேண்டும்.

இப்படிச் செய்தால் மட்டுமே, புதிய மாடலின் கணிப்பைப் பயனுள்ளதாக மாற்ற முடியும். புதிய மாடலை உருவாக்க முயலும்போது கூடவே இவற்றையும் மேற்கொள்ள அனைத்துத் துறைகளையும் இணைத்துச் செயல்பட வைக்க வேண்டும்,’’ என்றார் ஸ்ரீகாந்த்.

தமிழ்நாடு வானிலை மாடல்

பட மூலாதாரம்,RMC CHENNAI

படக்குறிப்பு,

'பிரத்யேகமான வானிலை மாடல் ஏதும் தேவையில்லை. இருக்கும் மாடல்களை மேம்படுத்தினாலே போதும்' என்கிறார் பாலச்சந்திரன், சென்னை வானிலை மைய இயக்குநர்.

இந்திய வானிலை மையம் என்ன சொல்கிறது?

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் துல்லியம் குறைவா, புதிய மாடல் உருவாக்குவது பயன்தருமா என்ற கேள்விகளை சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலசந்திரனிடம் முன்வைத்தோம்.

அதற்கு விளக்கமளித்த பாலசந்திரன், ‘‘இத்தனை ஆண்டுகளாக உலகளாவிய முன்னறிவிப்பு அமைப்பின் (GFS) தரவுகளை மேம்படுத்தி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருவதால்தான் நாம் தற்போது இந்த அளவுக்காவது கணிப்புகளை வெளியிட முடிகிறது.

சிலர் இந்த முன்னறிவிப்பு அமைப்பு சரியில்லை, ஐரோப்பிய மாடல் நன்றாக இருக்கும் என்பது போன்றெல்லாம் கூறுகின்றனர். உண்மையில் மிகத் துல்லியமாக எந்த மாடலை கொண்டும் கூறிவிட முடியாது. எந்த மாடலாக இருந்தாலும் அதில் சில நேரங்களில் அறிவியல்ரீதியான தோல்விகள் (Scientific Failure) நடக்கும்,’’ என்கிறார் பாலசந்திரன்.

மேலும் தொடர்ந்த அவர், ‘‘மீசோ ஸ்கேல் முறை மற்றும் டவுன்ஸ்கேலிங் முறையிலான மாடல்களை பின்பற்றி இதுவரை செய்த முயற்சிகள் பெரிய அளவில் பயன் தரவில்லை. புதிது புதிதாக மாடல்களை உருவாக்கி நம்மால் துல்லியத்தன்மையை அதிகரிக்க முடியாது. ஒரு மாடலை மேம்படுத்த பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

எடுத்துக்காட்டாக ஓரிடத்தில் ஏரி இருந்திருக்கும், தற்போது அது கட்டடங்களாக மாறியிருக்கும். இதுபோன்ற ஒவ்வொரு விஷயமும் அந்த மாடலின் துல்லியத்தைப் பாதிக்கும்.

இருக்கின்ற வானிலை மாடலை மேம்படுத்தும் பணி தொடர்ந்து நடக்கிறது. இதை இன்னும் மேம்படுத்தினாலே போதும் துல்லியத்தன்மை அதிகரிக்கும்,’’ என்றார் பாலசந்திரன்.

https://www.bbc.com/tamil/articles/c6p641l72vlo

திமுக இளைஞர் அணி மாநாடு ஒத்திவைப்பு!

3 months 2 weeks ago
திமுக இளைஞர் அணி மாநாடு ஒத்திவைப்பு!
christopherDec 08, 2023 12:08PM
WhatsApp-Image-2023-12-08-at-12.03.10-PM

மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையை அடுத்து தற்போது வெள்ள நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் திமுக இளைஞர் அணி மாநாடு  ஒத்திவைக்கப்படுவதாக இன்று (டிசம்பர் 😎 அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2007-ல் நெல்லையில் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், திமுக இளைஞரணியின் 2-வது மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று நடைபெறும் முதல் மாநாடு என்பதாலும், முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது என்பதாலும் இதனை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

மாநாடு குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்த இருசக்கர வாகனப் பேரணியை கன்னியாகுமரியில் இருந்து கடந்த மாதம் 15-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதனையடுத்து திமுக கூட்டணிக் கட்சிகளை தலைவர்களை சந்தித்து மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன் முன்னோட்டமாக மாநாட்டுக்கான அழைப்பிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகனிடம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அளித்து வாழ்த்து பெற்றனர்.

சுமார் 10 லட்சம் பேர் இதில் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்புடன் தொடர்ந்து இளைஞர் அணி மாநாடு தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

தொடர்ந்து வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளில் 5வது நாளாக நடைபெற்று வரும் மீட்பு பணியில் முதல்வர் முதல் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், கவுன்சிலர்கள் என அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, அடுத்த சில நாட்களுக்கு வெள்ள நிவாரண பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக சேலத்தில் வரும் 17ஆம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக வரும் 24ஆம் தேதி இளைஞரணி மாநாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

https://minnambalam.com/political-news/dmk-youthwing-maanadu-postponed-due-to-michaung-cyclone-attack/

Checked
Thu, 03/28/2024 - 10:25
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed