ஊர்ப்புதினம்

பேரரசியல் அபிலாஷைகளால் மத மோதல்கள் தொடர்ந்து அரங்கேறும் - சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் ஆய்வாளர் எச்சரிக்கை

1 week 2 days ago
பௌத்த பிக்குகளின் பேரரசியல் அபிலாஷைகளைத் தடுக்கும்வரை வெடுக்குநாறிமலை விவகாரத்தை ஒத்த மோதல்கள் தொடர்ந்து அரங்கேறும் - சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் ஆய்வாளர் எச்சரிக்கை

Published By: DIGITAL DESK 3   20 MAR, 2024 | 11:01 AM

image

(நா.தனுஜா)

சட்டத்துக்கு மதிப்பளிக்குமாறு 'கொழும்பு அரசாங்கம்' வலியுறுத்தும் வரையிலும், நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் காணிகளை அபகரிப்பதையும், இன-மதப்பரவலை மாற்றியமைப்பதையும் இலக்காகக்கொண்டு இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இயங்கிவரும் பௌத்த பிக்குகளின் பேரரசியல் அபிலாஷைகளைத் தடுக்கும் வரையிலும் வெடுக்குநாறிமலை விவகாரத்தை ஒத்த மோதல்கள் தொடர்ந்து அரங்கேறும் என சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் எச்சரித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறிமலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடச்சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், இரவு வேளையில் வழிபாடுகளைத் தொடர முற்பட்டோர் அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அதுமாத்திரமன்றி ஆலயப்பூசகர் உள்ளடங்கலாக எண்மர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை வரவேற்கத்தக்க செய்தி எனக் குறிப்பிட்டுள்ள சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன், இருப்பினும் சட்டத்துக்கு மதிப்பளிக்குமாறு 'கொழும்பு அரசாங்கம்' வலியுறுத்தும் வரையிலும், நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் காணிகளை அபகரிப்பதையும், இன-மதப்பரவலை மாற்றியமைப்பதையும் இலக்காகக்கொண்டு இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இயங்கிவரும் (சிறியளவிலான) பௌத்த பிக்குகளின் பேரரசியல் அபிலாஷைகளைத் தடுக்கும் வரையிலும் இவ்வாறான மோதல்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கும் என எச்சரித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/179195

ஜேர்மனியின் கப்பலிற்கு அனுமதி வழங்குவதா? இலங்கைக்கான சீன தூதரகம் போர்க்கொடி

1 week 2 days ago
எங்களின் ஆராய்ச்சி கப்பலிற்கு தடை விதித்துவிட்டு ஜேர்மனியின் கப்பலிற்கு அனுமதி வழங்குவதா? இலங்கைக்கான சீன தூதரகம் போர்க்கொடி

Published By: RAJEEBAN   20 MAR, 2024 | 10:40 AM

image

வெளிநாட்டு ஆராய்ச்சிக்கப்பல்களிற்கு இலங்கை  ஒரு வருட தடையை விதித்துள்ள நிலையில் ஜேர்மனியை சேர்ந்த ஆராய்ச்சி கப்பல் கொழும்பு துறைதுகத்திற்கு வருவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளமை குறித்து  இலங்கைக்கான சீன தூதரகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

ஜேர்மனியின் கப்பலின் ஆராய்ச்சி கப்பலிற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமை  குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது என தெரிவித்துள்ள ஆசிய இராஜதந்திரியொருவர் அனைத்து நாடுகளினதும் ஆராய்ச்சி கப்பல்களுக்கும் அனுமதி மறுப்பது என இலங்கை தீர்மானித்திருந்தால் சீனா இந்த விடயத்தை பெரிதுபடுத்தியிருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனை சேர்ந்த ஆராய்ச்சி கப்பலிற்கு இலங்கை அனுமதி வழங்கியதை அரசாங்க வட்டாரங்கள் உறுதிசெய்துள்ளன.கொழும்பு தற்போது ஜேர்மனியின் கப்பலிற்கு  அனுமதி வழங்கியுள்ளதால் சீனா தனது கப்பல்களிற்கும் அனுமதியை கோரும்; என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சீன தூதரகத்தின் எதிர்ப்பு குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சிடமிருந்தோ சீன தூதரகத்திடமிருந்தோ கருத்துக்களை பெற முடியவில்லை என எக்கனமி நெக்ஸ்ட் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/179191

O/L பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

1 week 2 days ago

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என அறிவிப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது குறித்த பரீட்சைக்கான நேர அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

OL-TAMIL-TIME-TABLE-2023_1710818369267-7

https://thinakkural.lk/article/296334

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி

1 week 2 days ago
kks.jpg

காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் துறைமுகங்கள், கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இடையிலான சந்திப்பொன்று அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாரிய அளவிலான கப்பல்கள் மற்றும் படகுகள் உள்நுழைவதற்கு ஏற்ற வகையில் துறைமுகம் 30 மீற்றர் ஆழப்படுத்தப்படவுள்ளதுடன், புதிய அலைதாங்கியை நிர்மாணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியா இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அதிக அளவிலான இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவரவும் இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்குமென இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்திய சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 600 மில்லியன் ரூபா செலவில் காங்கேசன்துறை துறைமுகத்தில் புதிய பயணிகள் முனையம் நிர்மாணிக்கப்பட்டதாகவும் கடந்த 9 மாதங்களில் பாரிய அளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, இந்தியா வழங்கவுள்ள 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை பயன்படுத்தி, காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/296344

கிழக்கின் முழுமையான அபிவிருத்தியின் மூலம் நாட்டின் கடன் நெருக்கடியைத் தீர்க்க முடியும் - கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்

1 week 2 days ago

Published By: VISHNU   19 MAR, 2024 | 10:04 PM

image

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், கிழக்கு மாகாணத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதன் மூலம் நாட்டின் கடன் நெருக்கடியைத் தீர்க்க முடியும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக கையாண்டு, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதால் அவருக்கு ஆதரவளிக்க வேண்டியது அனைத்து தரப்பினரின் கடமை எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஆளுநர் செந்தில் தொண்டமான்,

“கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், நாம் கிழக்கு மகாணத்தில் தற்போது பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். முப்பது வருட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மாகாணம் என்பதால் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் கிழக்கு மாகாணம் வளர்ச்சியில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. எனவே இந்த மாகாணத்திற்குரிய மூன்று மாவட்டங்களினதும் வளர்ச்சியில் அதிக கவனம் எடுக்குமாறு ஜனாதிபதி எனக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதற்காக கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள வளங்கள் தொடர்பில் நாம் தற்போது கண்டறிந்துள்ளோம். உதாரணமாக இறால் வளர்ப்பு, கனிய வளங்கள், துறைமுகம், விமான நிலையம், நீர் வளம், சுற்றுலாத் துறை மற்றும் விவசாய நிலங்கள் போன்றவற்றை எவ்வாறு நாம் அபிவிருத்தி செய்வது குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம். எனவே இவற்றை மேம்படுத்துவதன் மூலம் எமது நாட்டின் கடன்களை அடைப்பதற்கு கிழக்கு மாகாணம் மாத்திரம் போதுமானது என்பதைக் கூற வேண்டும். 

அந்தளவு வளங்கள் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்றன. அவற்றை முறையாக அபிவிருத்தி செய்ய வேண்டும். எதிர்காலத்தில்  சர்வதேச நாணய நிதியத்தின் கடனைத் திருப்பி செலுத்தும்போது கிழக்கு மாகாணம் அதற்கு நிதிப் பங்களிப்பை வழங்க முடியும் என்று நான் நினைக்கின்றேன்.

எதிர்காலத்தில் முழு நாட்டுக்கும் பொருளாதார பங்களிப்பை வழங்கும் முதல் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

மேலும் மலையக மக்களின் சம்பளப் பிரச்சினையைப் பொருத்தவரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெருந்தோட்ட மக்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதற்காக பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றன. பொதுவாக இரண்டு வருடங்களில் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே ஒரு வருடம் தாமதமாகி உள்ளது. இதற்காக நாம் சம்பள நிர்ணய சபைக்கு சென்றுள்ளோம்.

தற்போது பெருந்தோட்டக் கம்பனிகள் அவர்களின் முன்மொழிவுகளை வழங்கியுள்ளன. பெருந்தோட்டத் தொழில் என்பது அந்நியச் செலாவணியுடன் தொடர்புபட்டது. எனவே டொலரின் பெறுமதி அதிகரிப்பிற்கு ஏற்பவும் உள்நாட்டு வாழ்க்கை செலவினைப் பொருத்துமே சம்பளம் தீர்மானிக்கப்பட வேண்டும். விரைவில் மலையக மக்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும் என நாம் நம்புகின்றோம்.  

எமது நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தற்போது இருக்கும் ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே. அவர் அதனை செய்தும் காட்டியுள்ளார். எரிபொருள் இல்லை, மின்சாரம் இல்லை. உணவு இல்லை. மருந்துகள் இல்லை என அன்று இருந்த அதே அரசாங்கத்தை நடத்திச் செல்ல முடியாது என அனைவரும் கைவிரித்தபோது, அதே அரசாங்கத்தை எடுத்து அதனைத் தற்போதைய ஜனாதிபதி செய்து காட்டியுள்ளார். 

எதிர்காலத்தில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மாற்ற முடியாது. தற்போதுள்ள வரி விதிப்புகள் அனைத்தும் ஜனாதிபதி விரும்பி ஏற்படுத்தியவை அல்ல. மாறாக சர்வதேச நாணய நிதியம் எமது நாடு பொருளாதார ரீதியில் மீண்டு வருவதற்காக இட்ட நிபந்தனைகளாகும். 

நாம் விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டு அதில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காகவே பல்வேறு வேலைத் திட்டங்களை ஜனாதிபதி முன்னெடுத்து வருகின்றார்.  ஏனைய நாடுகள் நாம் எவ்வாறு ஒரு குறுகிய காலத்தில் பொருளாதார ரீதியில் மீண்டு வந்தோம் என்பதை ஆராய்கின்றது. பல்வேறு நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு கிடைத்தும் இன்னும் மீட்சி பெறாமல் இருக்கின்றன. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைத்து சில மாதங்களிலேயே எமது நாட்டை மீட்டெடுத்து விட்டார். பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டதாகக் கூறவில்லை. 

ஆனால், இன்னும் ஒரு வருடத்திற்குள் எமது நாட்டை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கே முயற்சி எடுத்து வருகின்றார். ஜனாதிபதி பதவி என்றால் என்ன என்பதையே தெரியாத ஒருவருக்கு நாட்டைப் பொறுப்பளித்தால், அதனைப் பற்றி அறிந்துகொள்ளவே அவர்களுக்கு இரண்டு மூன்று வருடங்களாகும். அதற்குள் மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை நோக்கி எமது நாடு சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது. 

நாம் ஏற்கனவே பல தேர்தல்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக செயற்பட்டவர்கள். ஆனாலும் தற்போது அவரைத் தவிர வேறு எவரும் இந்த நாட்டை மீட்டெடுக்கக் கூடியவர் இல்லை. எனவே நாம் தற்போதுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவதே சிறந்த தீர்வாக இருக்க முடியும்.” என்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/179168

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய 19 பொலிஸ் உத்தியோகத்தர்கள்!

1 week 3 days ago
19 MAR, 2024 | 03:28 PM
image
 

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என 19 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது   குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.  

இதேவேளை, சிஐடி மற்றும் பிற துறைகளில் பணிபுரியும் சில அதிகாரிகள் ஹரக்கட்டாவிடமிருந்து பணம்  பெற்றுள்ளதாகவும்  தெரிய வந்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் இதற்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கடமையாற்றிய  உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை இடமாற்றம் செய்திருந்தது.

இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மேலும் பல சிரேஷ்ட அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து தப்பிச் செல்ல ஹரக் கட்டாவுக்கு உதவியதாக பல பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/179124

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று ஆரம்பமாகின்றது விவாதம்!

1 week 3 days ago
mahinda-yapa-abeywardane-700x375.jpg சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று ஆரம்பமாகின்றது விவாதம்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

அந்த வகையில் இன்று காலை 9.30 மணி முதல், மாலை 5.30 மணி வரையிலும் நாளை (20) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் விவாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1373909

ஜனாதிபதிக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

1 week 3 days ago
ranil8-700x375.jpg ஜனாதிபதிக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது.

வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் வடக்கு- கிழக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரியதையடுத்தே, இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை முற்பகல் குறித்த கலந்துரையாடலை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு, இவ்விவகாரம் தொடர்பாக வவுனியா பிராந்திய அலுவலக ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை நாளை கிடைக்கப்பெறும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் எவரும் கைது செய்யப்பட்டவர்களை வந்து பார்வையிடவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1373977

தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு

1 week 3 days ago
தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு
March 19, 2024
 

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு,

“தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர்.

தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது.

இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.

 

https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/

 

யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!

1 week 3 days ago
யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!
395031141.jpg
 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!

(புதியவன்)

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது.

இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ)

https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை ; வழக்கு தள்ளுபடி

1 week 3 days ago
19 MAR, 2024 | 11:21 AM
image
 

வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று  கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை  (19) வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று  உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு இன்றையதினம் நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த 8 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி வழக்கினையும் தள்ளுபடிசெய்தார். 

குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம்,  அருள், க.சுகாஸ், தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

IMG_20240319_103401.jpg

 

IMG_20240319_104156.jpg

https://www.virakesari.lk/article/179099

யாழில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு அபராதம்

1 week 3 days ago

Published By: DIGITAL DESK 3    18 MAR, 2024 | 12:47 PM

image

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் உரிமையாளருக்கு யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றால் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி பகுதியில் உள்ள இரண்டு பல்பொருள் அங்காடிகளில் பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. 

அதன் போது, காலாவதியான பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியமை , வண்டுகள் மொய்த்த பழுதடைந்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. 

மீட்கப்பட்ட பொருட்களை சான்று பொருட்களாக மன்றில் முற்படுத்திய சுகாதார பரிசோதகர் அங்காடி உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். 

குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை மன்றில் அழைக்கப்பட்ட போது ஒருவர் மன்றில் முன்னிலையாகத நிலையில் , மன்றில் முன்னிலையான ஒரு அங்காடி உரிமையாளருக்கு எதிராக 18 குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. 

தன் மீதான குற்றச்சாட்டுக்களை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவரை கடுமையாக எச்சரித்த மன்று , அவருக்கு ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.

https://www.virakesari.lk/article/179015

புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தில் நெருக்கடி!

1 week 4 days ago
புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தில் நெருக்கடி!
 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தை பெற விருப்பம் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றிக்கொண்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய கூட்டணி தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டமும் அண்மையில் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றதுடன், இந்த நெருக்கடி நிலை குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

எவ்வாறாயினும், புதிய கூட்டணியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, அந்த கலந்துரையாடலில் மீண்டும் ஒருமுறை முன்னாள் ஜனாதிபதியுடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, சுயேச்சைகள் என பலர் இணைந்து கூட்டணியில் செயல்படுவதால், தங்கள் கருத்து, நிலைப்பாடு குறித்து கூட்டணியில் செயல்படுவது குறித்தும் விரிவாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

 

https://tamil.adaderana.lk/news.php?nid=185298

நாட்டில் நிகழும் கொலைகளை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை

1 week 4 days ago
POLIS.jpg

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்கு புதிய நடவடிக்கையை ஆரம்பிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி ஆகியோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

தற்போது அதிக கொலைகள் இடம்பெறும் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி இப்பகுதிகளில் 20 ஆயுதம் தாங்கிய தாக்குதல் பொலிஸ் பட்டாலியன்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளன.

இதேவேளை, அனைத்து கிராமிய சேவை பிரிவுகளிலும் ஸ்தாபிக்கப்பட்ட சமூக பொலிஸ் பிரிவை மேலும் பலப்படுத்தி அதன் ஊடாக தேசிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பாரிய பொறுப்பு கிராம மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குழுக்களுக்கு உண்டு என பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சமூகப் பொலிஸ் பிரிவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/296140

அகலித்துச் செல்லும் விரிசல்கள்!

1 week 4 days ago

இந்திய முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்துடன் இணைவது மீண்டும் இந்திய மத்திய அரசால் தாமதிக்கப்பட்டிருக்கின்றது.

விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான சாந்தன், தன் விடுதலையை அனுபவிக்காமல் -தன் உறவுகளைச் சந்திக்காமல் இவ்வுலகை விட்டுப் பிரிக்கப்பட்டிருக்கும் நிலையில் - ஏனைய மூவரும் விடுதலை ஏக்கத்துடன் இன்னமும் இந்திய சிறப்புத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முருகன், ரொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கான கடவுச்சீட்டு வழங்கும் செயன்முறைகள் இந்திய மத்திய அரசாங்கத்தின் பின்னடிப்பால் இழுபறி நிலையில் இருக்கின்றன. முருகன், ரொபேர்ட் பயஸ் ஆகியோர் 1990ஆம் ஆண்டு தமிழகத்துச் சென்று அகதிகளாகப் பதிவு செய்து கொண்டவர்கள். ஜெயக்குமார், ரொபேர்ட் பயஸின் மைத்துனர். திருச்சியில் உள்ள சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் இந்திய அரசாங்கத்தின் பயண ஆவணங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். பெரும் சட்டப் போராட்டத்தின் பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இவர்களை - மீண்டும் சிறப்பு முகாமில் பொலிஸ் கண்காணிப்பில் தங்க வைத்து பெரும் மனித உரிமை மீறலைச்செய்து வருகின்றது அகிம்சையின் மறுபெயர் தாமே எனத் தம்பட்டம் அடிக்கும் காந்திய தேசம்.

திருச்சி சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன் இலங்கைக்கு வருவதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்த நிலையில், பல்வேறு காரணங்களைக் காட்டி இந்திய அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் அவருக்கான பயண ஆவணங்களை வழங்குவதை இழுத்தடித்து வந்தன. சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன், சரியான மருத்துவக் கவனிப்பின்றி, வீடு திரும்பும் தனது ஆசை நிறை வேறாமலேயே உயிர் பிரிந்தார். இதை இந்திய, இலங்கை அரசாங்கங்களின் திட்டமிட்ட பழி வாங்கல் என்றே நோக்கும் தமிழ் மக்கள் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனையோரை உடன் விடுவிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர்.

கடந்த காலங்களில் -பல்வேறு சந்தர்ப்பங்களில் -தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளைச் சிதறடித்த -தமிழ் மக்களைக் கைவிட்ட இந்தியா இந்த விடயத்திலும் தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. காலங்காலமாகத் தம்மை ஏமாற்றும் இலங்கையிடம் பணிந்து கிடக்கும் இந்தியா என்னும் பிராந்திய வல்லரசு, 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து - வாழ்வின் பெரும்பங்கை சிறைக்கம்பிகளுக்குள் தொலைத்து விட்டவர்கள் மீது இன்னமும் வன்மம் கொண்டு தண்டிக்க முயல்கின்றது. காந்திய தேசத்தின் இந்தப்போக்கே தமிழ் மக்கள் இந்தியாவை விட்டுத் தூரம் செல்ல வைக்கின்றது. இந்த எண்ணம் -போக்கு தொடருமானால் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்குமான விரிசல் அகலிப்பதைத் தடுக்கமுடியாது.

(15.03.2024 - உதயன் பத்திரிகை)

https://newuthayan.com/article/அகலித்துச்_செல்லும்_விரிசல்கள்!

வெடுக்குநாறிமலை பொதுப்பிரச்சினை

1 week 4 days ago

'இலங்கையின் முதல் மதம் இந்துமதமே. இந்து மதம் நிலைகொண்ட பின்னரே இலங்கைக்குள் பௌத்தம் கொண்டுவரப்பட்டது. இதுவே வரலாற்று உண்மை' என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித் துள்ளது கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு. 'வரலாற்றுக்கு முற்பட்ட இந்துமதம், எவ்வாறு பௌத்தத்தை ஆக்கிரமிக்க முடியும்?' என்றும் அந்த ஆணைக்குழு கேள்வியெழுப்பியுள்ளது. நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆல யத்தில், சிவராத்திரி வழிபாடுகளின்போது பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் கண்டனங்கள் நாளுக்குநாள் குவிந்துவரும் நிலையில், கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு விடுத் துள்ள கண்டனக் குறிப்பு தனித்துவமானது என்ப துடன், 'குன்றின் மேல் ஏற்றிவைத்த தீபம் போன்று' அமையவேண்டியதாகவும் இருக்கின்றது. ஒரு கத்தோலிக்க அமைப்பான, கத்தோலிக்க மறைமா வட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் இந்த அறிக்கையானது, மத சகிப்புத்தன்மையென்பது எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இலங்கைத் தீவுக்குக் காலக்கண்ணாடியாகவும் பறைசாற்றி நிற்கின்றது.

முல்லைத்தீவு குருந்தூர்மலையாக இருக்கட்டும் அல்லது நெடுங்கேணி வெடுக்குநாறிமலையாக இருக்கட்டும் அல்லது கிழக்கிலுள்ள கேந்திரப்பகுதி களாக இருக்கட்டும், அங்கு மேற்கொள்ளப்படும் பௌத்த பேரினவாத அடக்குமுறைச் சிந்தனையின் பாற்பட்ட செயற்பாடுகள் வெறுமனே இந்து சம யத்துக்கு மட்டுமானவையல்ல. இந்த அடக்கு முறைகளை எதிர்கொள்ளும் மதமாக இந்து மதமும், இந்துக்களும் இருந்தாலும் இதை அனைத்துத் தமிழர்களுக்கும் எதிரான அடக்குமுறையாகவே கொள்ளவேண்டும். அது ஏன் என்பதைத்தான் வெளிப்படையாகவும் பட்டவர்த்தனமாகவும் பேசியிருக்கின்றது கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு.காணாமலாக்கப்பட் டவர்களின் விவகாரம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, பௌத்த பேரினவாதத்தின் நிலவிழுங்கல் செயற்பாடுகள் என அனைத்தும் எவ்வாறு தமிழர்களின் பொதுப்பிரச்சினையாக உள்ளனவோ அதுபோன்றுதான், இந்து வழிபாட்டுத்தலங்கள் மற்றும் இந்து ஆலயங்கள் மீதான ஆக்கிரமிப்பையும் எடுத்துக்கொண்டு அதற்கேற்ப வினையாற்றவேண்டும். ஆனால், இந்தப் புரிதல் தமிழர்தாயகத்தில் அநேகமானவர்களிடத்தில் இல்லை என்பதே கசப்பான உண்மை. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர், மதத்தலங்கள் மீதான ஆக்கிரமிப்பை பொதுப்பிரச்சினையாக எடுத்துக்கொள்ளும் மனப் பாங்கு தமிழ் மக்களிடம் அருகியே வருகின்றது. உண்மையில் இந்த நிலை மாற்றப்படவேண்டும். எதிரி பிரித்தாளும் தந்திரத்தைக் கைக்கொள்வதற்கு 'பொதுப்பிரச்சினையாக'சில விடயங்களை தமிழர்கள் அணுகாதிருப்பதுதான் முதன்மைக் காரணம்.

இங்குள்ள தமிழ்த் தலைமைகளும் தத்தம் கட்சிக் கொடிகளைப் பலப்படுத்துவதில்தான் காலம் கடத்துகின்றனரே அன்றி, அதற்கு அப்பாற்பட்ட 'ஒன்றி ணைப்புச் செயற்பாடுகளையோ', செயற்றிட்டங்களையோ அவர்களும் முன்னெடுப்பதாயில்லை. இந்தச் சபிக்கப்பட்ட போக்குக்கு விரைவாக வைக்கப்படும் முற்றுப்புள்ளியே தமிழர்களின் நிலங்களை, வழிபாட்டுத் தலங்களை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும். இதேவேளை, கத்தோலிக்கத் தமிழர்களுக்கு எதிராக நடுவீதியில் நின்று கூப்பாடுபோடும் சிலர், சிங்கள - பெளத்த பேரினவாதத்தின் கொடூரத்தனங் களுக்கு எதிராகக் கைகட்டி, வாய்மூடி இருக்கும் இடம் தெரியாமல் காட்டும் விசுவாசத்தையும் தமிழர்கள் கவனித்து வைத்திருக்க வேண்டிய காலமிது.

(16.03.2024 - உதயன் பத்திரிகை).

https://newuthayan.com/article/வெடுக்குநாறிமலை_பொதுப்பிரச்சினை

மட்டு. போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் மேலதிக சேவைகள் இடைநிறுத்தம்!

1 week 4 days ago

Published By: DIGITAL DESK 3   18 MAR, 2024 | 10:37 AM

image

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மேலதிக சேவைகள் இன்று திங்கட்கிழமை (18) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச கதிரியல் தொழிநுட்பவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் கடமை புரியும் கதிர் வீச்சு சிகிச்சையாளர்களுக்கு  வழங்க வேண்டிய மேலதிக சேவைக்கால கொடுப்பனவை வைத்தியசாலை நிருவாகம் தமக்கு வழங்குவதில்லை எனத் தெரிவித்து மேலதிக சேவைகளை இடைநிறுத்தியுள்ளனர்.

இதே பதவி நிலையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு  ஏனைய வைத்தியசாலையில் இக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில் தமக்கு மாத்திரம் வழங்கப்படுவதில்லை என கதிர் வீச்சு சிகிச்சையாளர்கள் தெரிவித்தனர்.

இதனால் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் ஏனைய சில மாவட்டங்களிலிருந்து சிகிச்சை பெற வரும் நோயாளர்கள் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த கொடுப்பவை வழங்காமை  தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு தாம் அறிவித்ததற்கமைவாக, இந்த கொடுப்பனவை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும் அக்கொடுப்பனவு கதிர் வீச்சு சிகிச்சையாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்படவில்லை என கதிரியல் தொழிநுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/178985

தமிழர் தாயகம் உரிமை கோரிக்கையை சிதைக்க முயற்சி - பிரித்தானிய தமிழர் பேரவை

1 week 4 days ago
தமிழ் மக்களின் பாரம்பரிய நிலத்தினை சிதைத்து அவற்றை சிங்கள பௌத்த அடையாளங்களால் உருமாற்றம் செய்து தமிழர் தாயகம் உரிமை கோரிக்கையை சிதைக்க முயற்சி - வெடுக்குநாறி சம்பவங்கள் குறித்து பிரித்தானிய தமிழர் பேரவை

Published By: RAJEEBAN   18 MAR, 2024 | 10:43 AM

image

வெடுக்குநாறிமலை ஆலய சிவராத்திரி வழிபாட்டு நிகழ்வில் பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்ட தடங்கல்கள் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம்வெளியிட்டுள்ளது

இது தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது

சிறிலங்கா அரசும் அதன்  இராணுவஇ போலீஸ் நிர்வாகங்களும் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் கைதுகள் நில அபகரிப்பு மற்றும் பொது மக்களின் அன்றாட செயற்பாடுகளில் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள் இடையூறுகள் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.

கடந்த வெடுக்குநாறிமலை ஆலய சிவராத்திரி  வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட ஆலய பூசகரின் கைதும் பக்தர்களின் கைதும் கண்டனத்துக்கு உரியதுடன்  இவர்கள் அனைவரும்  உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். மேலும் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் விக்கிரகங்கள் மீள கையளிக்கப்பட்டு அவற்றினை அபகரித்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்க வேண்டிய அரச நிர்வாகம் அதற்கு மாறாக பல்லாண்டு காலமாக வழிபட்டு வரும் தமிழ் மக்களின் மீது அரச படைகளை ஏவி விட்டு அச்சுறுத்த முனைகின்றது. அடக்குமுறைகள்தான் எம் மக்களை போராட நிர்ப்பந்தித்தது என்ற யதார்த்தத்தை சிங்கள தேசம் புறக்கணித்தபடியால்தான் இன்று அது கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறன கைதுகளும் தமிழர்களின் வழிபாட்டு உரிமைகளை தடுத்து வழிபாட்டு தளங்களை அபகரிப்பதும் தொல்லியல் திணைக்களம் போன்ற அரச இயந்திரத்தின் அங்கங்களை ஏவி விடுவதும் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலத்தினை சிதைத்து துண்டம் துண்டமாக்கி அவற்றை சிங்கள பௌத்த அடையாளங்களால் உருமாற்றம் செய்து தொடர்ச்சியான நிலப் பரப்பினை கொண்ட தமிழர் தாயகம் என்ற எம் உரிமை கோரிக்கையை சிதைப்பது சிறிலங்கா அரசின் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பின்   திட்டமிட்ட மூலோபாயம் ஆகும்.

நல்லிணக்கம் பற்றிக் கூறி கொள்ளும் ரணில் அரசு இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வது இலங்கை தீவில் நிலையான அமைதி ஸ்திரத் தன்மைஇ வளர்ச்சி ஒரு போதும் சாத்தியப்படாது என்பதனை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சர்வதேச தளத்தில் பன்முனைப்பட்ட முடிவெடுக்கும் சக்திகளிடம் எடுத்துரைக்க வேண்டும் என்பதனை தோழமையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த பல வருடங்களாக தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் இவ்வாறான இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் சர்வதேச சமூகத்திடமும்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையிலும் எடுத்துரைத்து வருவது போன்று இப்பொழுது  இடம்பெறும் ஐ.நா.மனித உரிமைக்கழக மார்ச் மாதக் கூட்டத் தொடரிலும் தகமை வாய்ந்த முடிவெடுக்கும் மையங்களுக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் பதிவு செய்யப்படும்.

இவ்வாறான தொடரும் நில ஆக்கிரமிப்பு சமூக பொருளாதார அடிப்படைகளில் தமிழர் தேசத்தினை சிதைத்து பலவீனப்படுத்தல்இ தங்குநிலையில் வைத்திருத்தல் தாயகத்தில் தமிழ் மக்கள் வாழ முடியாத சூழ்நிலைகளை உருவாக்கி அவர்களை மண்ணிலிருந்து வெளியேற்றுவது தமிழர் அரசியல் பிரதிநிதித்துவத்தை சிதைப்பதும் செயலிழக்கச் செய்வதுமான செயல்பாடுகளை இடைநிறுத்தி தம்மை தாமே நிர்வகிக்கக் கூடிய இடைக்கால நிர்வாகப் பொறிமுறை ஒன்றினை உடனடியாக உருவாக்குமாறு இந்தியா உட்பட சர்வதேச தளப் பரப்பில் முக்கிய உறுப்பு நாடுகளிடம் எமது இக் கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

https://www.virakesari.lk/article/178984

புத்தளத்தில் நடமாடும் 'தலக்கூரா' கொம்பன் யானை

1 week 4 days ago
18 MAR, 2024 | 10:50 AM
image

புத்தளம் மாவட்டத்தில் 'தலக்கூரா' என மக்களால் அழைக்கப்படும் சுமார் 5 அடிக்கு அதிக நீளமுடைய கொம்பன் யானை நேற்று (17) மாலை மற்றுமொரு யானையுடன் உணவு உட்கொண்ட காட்சி கமராவில் பதிவாகியது.

புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மயிலாங்குளம் மாந்தோட்டம் பகுதியில் நேற்று மாலை கொம்பன் யானை மற்றுமொரு யானையுடன் மேய்ந்துகொண்டிருந்தது. 

இந்த கொம்பன் யானை கடந்த காலங்களில் கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட தேவனுவர காட்டுப் பகுதியில் நடமாடிய நிலையில், தற்போது உணவுக்காக பல கிலோமீற்றர் சென்று மயிலாங்குளம் பகுதியில் சுற்றித் திரிந்து உணவுகளை உட்கொண்டு வருகிறது.

இதன் தந்தம் தரையில் உரசுமளவு சுமார் 5 அடிக்கும் அதிக நீளத்தை கொண்டிருப்பதே இக்கொம்பன் யானையின் விசேட அம்சமாகும். இதனாலேயே இந்த யானைக்கு 'தலக்கூரா' என பெயரை அப்பகுதி மக்கள் சூட்டியுள்ளனர்.

குறித்த அப்பாவி கொம்பன் யானை இதுவரை எவரையும் தாக்கி, எந்தவொரு தொல்லையும் கொடுக்காத 'தலக்கூரா' பட்டாசு கொழுத்தினால் பயத்தில் காட்டினுள் விரண்டு ஓடிவிடும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் மயிலாங்குளம் மற்றும் தேவனுவர பகுதிகளில் சஞ்சரித்து வந்த 'வலகம்பா' மற்றும் 'வாசல' என மக்களால் பெயர் சூட்டப்பட்ட தந்தம் கொண்ட யானைகள் மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்தன.

நாட்டிலுள்ள இதுபோன்ற தந்தம் கொண்ட யானைகளை பாதுகாப்பது மிகப் பெரும் கடமை என்றும் பல்வேறு தரப்பினர் தெரிவிக்கின்றனர். 

download__2_.jpg

download__1_.jpg

download__4_.jpg

https://www.virakesari.lk/article/178982

வடக்கில் கடந்தாண்டு மாத்திரம் வெளிநாடு அனுப்புவதாக 254 கோடி ரூபா மோசடி

1 week 4 days ago
வடக்கில் கடந்தாண்டு மாத்திரம் வெளிநாடு அனுப்புவதாக 254 கோடி ரூபா மோசடி
480861248.jpeg

வவுனியாவிலேயே அதிக முறைப்பாடுகள்!

ஆதவன்.

யாழ்ப்பாணம், மார்ச் 18
வடக்கு மாகாணத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மாத்திரம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து மோசடி செய்யப்பட்ட சம்பவங்களில் 139 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முறைப்பாடுகளின் அடிப்படையில் 254 கோடி ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக பொலிஸ் பணிமனையிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவலிலேயே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணப் பொலிஸ் பிராந்தியத்தில் 30 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 33 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 14 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 18 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. 7 பேர் சந்தேகத் தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பொலிஸ் பிராந்தியத்தில் 17 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 46 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. 8 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா பொலிஸ் பிராந்தியத்தில் 53 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 116 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. 30 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பொலிஸ் பிராந்தியத்தில் 20 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 33 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. 13 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் பிராந்தியத்தில் 5 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 5 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ச)
 

https://newuthayan.com/article/வடக்கில்_கடந்தாண்டு_மாத்திரம்_வெளிநாடு_அனுப்புவதாக_254_கோடி_ரூபா_மோசடி

Checked
Fri, 03/29/2024 - 13:27
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr