Jump to content

சொந்தக்கதை: வாழ்க்கையில அவலம் வரும்... அவலம் வாழ்க்கை ஆனால்... ?


Recommended Posts

சொந்தக்கதை: வாழ்க்கையில அவலம் வரும்... அவலம் வாழ்க்கை ஆனால்... ?

இனிய வணக்கங்கள்,

வாழ்க்கையில நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகளிற்கு முகம் கொடுக்கவேண்டி இருக்கிது, ஒவ்வொருவிதமான அவலங்களை சந்திக்கவேண்டி இருக்கிது. நீங்கள் உங்கட தனிப்பட்ட வாழ்க்கையிலபட்ட ஒரு பெரும் அவலத்தை நான் சிலவேளைகளில அனுபவிச்சு இருக்கமாட்டன். இதைமாதிரி நான் சந்திச்ச ஒருபெரும் அவலத்தை நீங்கள் சந்திச்சு இருக்கமாட்டீங்கள். நான் இஞ்ச உண்மைக்கதையாக சொல்லப்போறது எனது தனிப்பட்ட வாழ்க்கையில ஏற்பட்ட ஓர் நெருக்கடிபற்றிய சில எண்ணப்பகிர்வுகள்.

பலவிதமான பயனுள்ள தகவல்களை மற்ற ஆக்களுக்கு சொல்லலாம் எண்டுற காரணத்தாலையும், தாயக மக்கள் படுகின்ற சில கஸ்டங்களை இந்தக்கதைமூலம் சிறிது கற்பனை செய்து பார்க்கலாம் எண்டுறதாலையும் இங்கு விரிவாக எனது சொந்தக்கதையை உங்களுக்கு சொல்லிறன். இந்தக்கதையை வாசிச்சபிறகு உங்கள் குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் யாருக்காவது இதேமாதிரியான சிக்கல் இருந்தால்... உங்களிற்கு இதுவிடயமாக ஏதாவது ஆலோசனைகள் தேவைப்பட்டால்.. உங்கட கேள்விகளை, சந்தேகங்களை கீழ கேட்டால் எனது அறிவுக்கு எட்டியவரையில சரியான தகவல்களை உங்களுக்கு தந்து உதவமுடியும். கதையாக சொல்லவேணும் எண்டுற காரணத்துக்காக மூல விசயத்தை மாத்திரம் சொல்லாமல்... இதற்கு அப்பால்பட்ட சிலவிசயங்களையும், சில சுவாரசியமான சம்பவங்களையும் உங்களோட பகிர்ந்து கொள்ளிறன். சரி, இஞ்ச எதைப்பற்றி - என்னத்தை சொல்லப்போறன் எண்டு கனக்க யோசிச்சு குழம்பாதிங்கோ. விசயத்துக்கு நேரடியாக வாறன்.

அறிமுகம்

அரிது அரிது மானிடர் ஆதல் அரிது. அதிலும் குருடு, செவிடு இல்லாமல் சுகதேகத்துடன் பிறக்கிற அதிர்ஸ்டம் எல்லாருக்கும் கிடைக்கிறது இல்லை எண்டு சொல்லுவீனம். சிலருக்கு நேரடியான உடல்குறைபாடுகள் இல்லாவிட்டாலும் வேறுவிதமான பல உடல் உபாதைகள் இருக்கும். சிலருக்கு குழந்தையாக இருக்கும்போது வெளிக்காட்டப்படாத உடல் உபாதைகள் வாலிபப்பருவத்தில வெளிக்காட்டப்படும். ஆனால், நான் சந்திச்ச அவலம் என்ன எண்டால் பிறக்கும்போது நான் பிளவடைஞ்ச உதட்டுடன் + பிளவடைஞ்ச அன்னத்துடன் பிறந்தது. இந்தக்குறைபாட்டை Cleft Lip & Cleft Palate எண்டு ஆங்கிலத்தில சொல்லுவீனம். உலகத்தில பிறக்கிற ஒவ்வொரு ஆயிரம் குழந்தையிலையும் ஒரு குழந்தை இந்தக்குறைபாட்டுடன் பிறக்கும் எண்டு புள்ளிவிபரங்கள் சொல்லிது.

இந்தக்குறைபாட்டுக்கும் பரம்பரைக்கும் எதுவித சம்மந்தமும் இல்லை. எங்கட பரம்பரை எண்டு பார்த்தால் நான் அறிஞ்சவரையில என்னைத்தவிர வேற ஒருத்தருக்கும் இந்தக்குறைபாடு இருக்க இல்லை. எண்டாலும் இந்தக்குறைபாடு பின்னடைவான இரண்டு நிறமூர்த்தங்கள் (Genes) சேரேக்க வெளிக்காட்டப்படுகிது எண்டு முந்தி உயிரியலில படிச்ச நினைவு இருக்கிது. குழந்தையிண்ட தாய் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர் எண்டால் குழந்தை இந்தக்குறைபாட்டோட பிறக்க அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஒரு ஆராய்ச்சி சொல்லிது (அதுக்காக எண்ட அம்மா புகைப்பிடிச்சவவோ எண்டு பிழையாக யோசிக்ககூடாது).

சரி இந்தக்குறைபாட்டால ஏற்படக்கூடிய பிரசசனைகள் என்ன? முதலாவது விசயம் சந்தோசப்படவேணும் - மற்றைய குறைபாடுகள் போல இதனால குழந்தைகளுக்கு உயிர் ஆபத்து ஒண்டும் இல்லை. ஆனால், குழந்தைகள் அதிக அளவில உளவியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டி வரலாம். முக்கியமாக குழந்தை வளர்ந்து 12 வயசு சொச்சம் வரேக்க இந்த நெருக்கடிகள் அதிக அளவில அதிகரிக்கலாம். பிறந்தஉடன வாறபிரச்சனை என்ன எண்டால் குழந்தயிண்ட மேல் உதடு பிளந்து இருக்கிறதோட, அன்னமும் பிளந்து இருக்கிறதாலை தாய்ப்பால் குடிக்கிறது சரியான கஸ்டம். அம்மா எனக்கு சொல்லுவா நான் குழந்தையாய் இருக்கேக்க எனக்கு பால் தர ஏலாதாம் எண்டு. ஏன் எண்டால் நான் அம்மாவிட்ட பாலை குடிக்க அது அப்பிடியே மூக்குக்கால ஊத்துப்பட்டு வெளியில வந்திடும். இதனால குழந்தையுக்கு பாலை எடுத்து ஒரு போச்சியில ஊத்தி அடிவாயுக்க ஊத்தவேணும். தாயிட்ட இருந்து நேரடியாய் குடிக்க ஏலாது.

இந்தச்சிக்கலோட குழந்தை பிறந்தால் உடனடியாகவும், பிறகு குழந்தை வளர்ந்தபிறகும் பல சத்திரசிகிச்சைகளை குழந்தையுக்கு மேற்கொள்ளவேணும். முதலாவது உடனடியாக பிளவடைஞ்ச உதட்டையும், பிளவடைஞ்ச அன்னத்தையும் ஒட்டவேணும். இதுதான் முதலாவது சத்திரசிகிச்சையில செய்யவேண்டியது. இல்லாவிட்டால் குழந்தையை கண்கொண்டு பார்க்க ஏலாது. முகம் அகோரமாய் இருக்கும். அதுக்கு பிறகு சில வருசங்களால குழந்தையிண்ட பால்பற்கள் விழுந்தவுடன நிரந்தரப்பற்கள் முளைக்கேக்க பற்களை சீர்செய்து சிகிச்சைகள் செய்யவேணும். வாயுக்க கண்டபடி ஒழுங்கு இல்லாமல் பற்கள் முளைச்சு இருக்கும். இதனால ஒழுங்காக பல் மினுக்கவும் முடியாது, அத்தோட தெளிவாக பேசுறதும் கடினம். கடைசியாக, குழந்தையிண்ட மூக்கு சரியான வடிவம் இல்லாமல் கேவலமாய் இருக்கும். மூக்கையும் கடைசியில சரிப்படுத்தவேணும்.

கனடா, அமெரிக்கா எண்டு வளர்ச்சி அடைஞ்ச நாடுகள் எண்டு பார்த்தால் இஞ்ச இப்பிடியான குறைபாடுகளோட குழந்தைகள் பிறக்கேக்க அதுகளுக்கு ஒப்பீட்டளவில பிரச்சனைகள் குறைவு. ஏன் எண்டால் இஞ்ச இருக்கிற நவீன வசதிகள், வளங்கள் காரணமாக இந்தக்குறைபாட்டை முற்றுமுழுதாக பிள்ளைக்கு சுமார் பதினாறு வயசு சொச்சம் வரேக்க நீக்கிப்போடுவாங்கள். இந்தக்குறைபாட்டிலையும் அகோரம் குறைஞ்சது, சரியான அகோரமானது எண்டு பலவகைகள் இருக்கிது. இதனால சில பிள்ளைகளுக்கு சுமார் பத்து சத்திரசிகிச்சைகளுக்கு பிறக்கு குறைபாடு ஏறக்குறைய முற்றுமுழுதாக நீக்கப்பட்டு விடும். சில பிள்ளைகளுக்கு இருவது, முப்பது சத்திரசிகிச்சைகள் கூட செய்யவேண்டிவரலாம். ஏன் எண்டால் வாய், முகத்தை சரியாக அழகாக மறுசீரமைக்க நீண்ட காலம் எடுக்கிறதோட, பலப்பல கட்டங்களாகவும் பல்வேறுவிதமான சிகிச்சைகளை பெறவேண்டி வரும்.

எனது கதை:

நான் பிறந்ததில இருந்து இண்டைக்கு வரைக்கு எட்டு (உண்மையில ஒன்பது) சத்திரசிகிச்சைகளை கண்டுட்டன். இன்னும் இரண்டு சிறிய சத்திரசிகிச்சைகள் மிச்சம் இருக்கிது. சிறீ லங்காவில ரெண்டு சத்திரசிகிச்சைகளையும், கனடாவில ஆறு (உண்மையில ஏழு) சத்திரசிகிசைகளையும் பெற்று இருக்கிறன். சிறீ லங்காவில வசதிகள் குறைவாக இருக்கிறதாலையும், இந்தத்துறையில அனுபவம் வாய்ந்த சத்திரசிகிச்சை நிபுணர்கள் குறைவாக இருக்கிறதாலையும் (Plastic & Cosmetic Surgeons + Oral & Maxillofacial Surgeons) திருப்திப்படும் வகையில அங்க சிகிச்சையை பெற்றுக்கொள்ள ஏலாது. இப்ப சிலது முன்பைவிட அதிக வசதிகள் வந்து இருக்கலாம். ஓரளவு வசதி உள்ள ஆக்கள் குழந்தைகளை இந்தியாவுக்கு கூட்டிக்கொண்டுபோய் சிகிச்சை செய்யுறது. வெளிநாட்டு மருத்துவர் குழு ஒண்டு முந்தி தாயகத்துக்குபோய் அங்க இருக்கிற இந்தக்குறைபாடு உள்ள தாயகத்தில இருக்கிற குழந்தைகளுக்கு சத்திரசிகிச்சைகள் செய்ததாய் நான் ஓர் செய்தியை தொலைக்காட்சியில பார்த்து இருந்தன்.

எனது முதல் இரண்டு சத்திர சிகிச்சைகள்:

எண்ட முதல் இரண்டு சத்திரசிகிச்சைகளும் கொழும்பு குழந்தைகள் வைத்தியசாலையில நான் பிறந்து மூண்டுமாசக் கைக்குழந்தையாக இருக்கேக்கயும், மூண்டு வயசுக்குழந்தையாக இருக்கேக்கயும் நடந்திச்சிது. இதில எனக்கு மூண்டு வயசில நடந்த சத்திரசிகிச்சை இப்பவும் அப்பிடியே மனதில பசுமையாக நினைவில இருக்கிது. இதுபற்றி முந்தியும் யாழில எங்கையோ ரெண்டு மூண்டு இடங்களில உங்களுக்கு சொல்லி இருக்கிறன். நான் மூண்டுமாத கைக்குழந்தையாக இருக்கேக்க அம்மாவுக்கு அப்ப உடம்பு கொஞ்சம் சுகம் இல்லாமல் இருந்ததால எண்ட ரெண்டாவது அக்கா தான் என்னை வைத்தியசாலைக்கு அப்பாவோட கூட்டிக்கொண்டுபோனதாய் சொல்லி இருந்தா.

நான் மூண்டு வயசாக இருக்கேக்க கொழும்பில இருந்த எண்ட ஒரு பாட்டா வீட்டில இருந்து வைத்தியசாலைக்கு போயிருந்தம். என்னை தனியாய் வைத்தியசாலையில விட்டுட்டு அம்மா, அப்பா போயிட்டீனம். நான் அங்க தனிய கொஞ்சநேரம் இருந்து முளுசிக்கொண்டு இருந்தன். மிகப்பெரிய ஒரு அறை அது. சுமார் பத்து கட்டில்கள் போடடப்பட்டு இருந்திச்சிது. நான் நடுக்கட்டிலில அழுதுகொண்டு தனியாய் இருந்தன். அம்மா, அப்பா என்ன செய்திச்சீனம் எண்டால் நான் என்ன செய்யுறன் எண்டு பார்க்கிறதுக்கு நான் இருந்த அறையிண்ட பின்பக்கத்தால வந்து கடைசி யன்னலுக்கால என்னை எனக்குத்தெரியாமல் களவாக பார்த்துப்போட்டு கடைசியில கையும் காட்டிச்சீனம். அவைய தற்செயலாக மீண்டும் கண்டவுடன எனக்கு இருப்புக்கொள்ள இல்லை. அவையக் கண்டஉடன நல்ல துணிவும் வந்திட்டிது. யாரும் ஆக்கள் வருவீனமோ எண்டு பார்த்தன். ஒருத்தரையும் அறையுக்க காண இல்லை. திடீரெண்டு கட்டிலால (cot) இறங்கி கிடுகிடு எண்டு கால்போன போக்கில போகத்துவங்கீட்டன்.

நான் விடப்பட்டு இருந்த அறையுக்கு வெளியால வந்து இன்னும் நாலைஞ்சு அறைகள் தாண்டி நடந்து எதிர்பாராமல் Security மாதிரி ஒருவர் இருந்த அறையுக்க போயிட்டன். அவர் இன்னொருத்தரோட வலு ஆர்வமாய் எதையோபற்றிக் கதைச்சுக்கொண்டு இருந்தார். என்னை தனியாகக் கண்டஉடன அவருக்கு சரியான ஆச்சரியம். என்னட்ட கேள்விகள் கேட்கத்துவங்கினார். நான் எண்ட பெயரையும், அப்பாவிண்ட பெயரையும் சொன்னன் இன்னாரிண்ட மகன் எண்டு. எனக்கு அப்ப இருந்த அறிவைப்பாவிச்சு என்னால முடியுமான அளவு தெளிவாக அவருக்கு ஏதோ விடைகள் சொல்லிக்கொண்டு இருந்தன். அவருக்கு என்னோட கதைக்கேக்க என்னை பார்த்து நல்ல சிரிப்பு வந்திட்டிது. இந்தநேரத்தில என்ன நடந்திச்சிது எண்டால் நான் கட்டிலால பாய்ஞ்சு அறையுக்கு வெளியால ஓடினதை அம்மா, அப்பாவும் ஒளிஞ்சுநிண்டு பார்கேக்க கண்டுட்டீனம். இதனால அப்பா என்னைத்தேடி வந்து, கடைசியில நான் நிண்ட அந்த Securityயிண்ட அறையுக்க வந்துட்டார். நான் அப்பாவக்கண்ட உடனை அழுகையை கூட்டி அட்டகாசம்போட கடைசியில அவையள் என்னை தனியாக விடாமல் அப்பிடியே திரும்பவும் பாட்டா வீட்ட கூட்டிக்கொண்டு போச்சீனம்.

அதுக்கு பிறகு எப்பிடி எப்ப வைத்தியசாலைக்கு திரும்ப வந்தனான் எண்டு இப்ப நினைவில இல்லை. ஆனால்.. சத்திரசிகிச்சை அறையுக்க நடந்தவிசயங்கள் இப்பவும் அப்பிடியே நினைவில இருக்கிது. நல்ல நிறமான கட்டான உடம்பான சத்திரசிகிச்சை நிபுணர் ஒருத்தர் வாயில துணியைக்கட்டி, தலையில தொப்பியும் போட்டுக்கொண்டு எனக்கு முன்னால நிண்டார். நான் அவரை அப்பிடியான தோற்றத்தோட கண்ட உடன ஊரைக்கூப்பிட்டு குய்யோ மய்யோ எண்டு கத்தி அழத்துவங்கீட்டன். அவர் என்ன செய்தார் எண்டால் ஒரு Loud Speaker மாதிரியான தோற்றம் உள்ள ஓர் கருவியை - அதிண்ட அளவு அவரிண்ட உள்ளங்கை அளவு வரும் - அதை எண்ட வாயுக்ககொண்டுவந்து வச்சார். எண்ட அழுகை அடங்கிப்போச்சிது. அது மயக்கத்தை ஏற்படுத்துற சாதனம் எண்டு நினைக்கிறன். அதுக்குபிறகு நான் வாயுக்க தையல்களோட சத்திரசிகிச்சை செய்தாப்பிறகு பழையபடி முந்தி இருந்த அதேகட்டிலில இருந்த சம்பவம்தான் நினைவில இருக்கிது.

இஞ்ச ஒருவிசயம் சொல்லவேணும் என்ன எண்டால் நான் சொன்னனாந்தானே சத்திரசிகிச்சைநிபுணர் வாய், முகத்துக்கு எல்லாம் துணியைக்கட்டிக்கொண்டு எனக்கு முன்னாலவந்து நிக்கேக்க அவரைபார்த்து சரியாய் பயந்து அழத்துவங்கினது. எனக்கு அதுக்குபிறகு யாராச்சும் வாயிலயும், முகத்திலையும் துணிகட்டி இருந்தால் - அதை நான் பார்த்தால் பயந்து அழத்துவங்கீடுவன். வீட்டில சிலது அப்பா கூரை, சுவரில இருக்கிற தூசுகளை துடைக்க வாயுக்கு, முகத்துக்கு துணி கட்டுறது... நான் அதைக்கண்டாலும் பிறகு அழுகிறது. இந்தவிசயம் தெரிஞ்ச எண்ட அக்காமார் எனக்கு சின்னனில என்ன செய்வீனம் எண்டால்.. நான் வீட்டில அளவுக்கு மிஞ்சி குழப்படிகள் செய்தால் அவையள் தங்கட முகத்துக்கும், தலையுக்கும் துணிகட்டிக்கொண்டு எனக்கு முன்னால வந்து வெருட்டுவீனம். நான் அதக்கண்டுபோட்டு சத்தம்போட்டு அழுகிறது, பயந்து ஓடுறது, குழப்படி செய்யாமல் இருக்கிறது. எனக்கு இந்தப்பயம் நான் ஆறு, ஏழு வயசு சொச்சம் வரும்வரைக்கும் இருந்திச்சிது.

சரி, சத்திரசிகிச்சை முடிஞ்சு கட்டில இருக்கிறன். அப்ப என்ன எண்டால் எனக்கு ஒரு தாதிவந்து குளிர்பானம் பருக்குவா. நல்ல ருசியாய் இருக்கும். ஒவ்வொரு கரண்டியாய் நிரப்பி அதை எண்ட வாயில ஊத்திவிடுவா. அந்த ருசி நல்லாய் பிடிச்சதால அவ எப்ப எண்ட கட்டிலடிக்கு வருவா எண்டு பார்த்துக்கொண்டு இருப்பன். மற்றது, வஞ்சகம் இல்லாமல் கட்டில கண்ட கண்ட இடமெல்லாம் மலசலம் கழிச்சுவிடுவன் (கட்டில் எண்டு இஞ்சநான் சொல்லிறது குழந்தைகள படுக்கப்போடுற Cot). கட்டிலில ஒவ்வொரு மூலையுக்கையும் மலம் கழிச்சு இருப்பன். இப்ப நினைச்சுப்பார்க்க கண்றாவியாய் இருக்கிது. என்னைக் கவனிச்சதாதி எண்ட குப்பைகள் எல்லாத்தையும் எரிச்சலோட சுத்தம் செய்து இருப்பா எண்டு நினைக்கிறன்.

அந்த சத்திரசிகிச்சை செய்த சத்திரசிகிச்சை நிபுணர் செய்த தவறு எண்டு் ஒரு விசயம் பற்றி சொல்லவேணும். என்ன எண்டால் எண்ட ரெண்டு பாகங்களாக இருந்த பிளவடைஞ்ச அன்னத்தை - Palate ஒன்றாக்கி ஒட்டுறதே இந்த சத்திரசிகிச்சையிண்ட நோக்கமாய் இருந்திச்சிது. அப்ப சத்திரசிகிச்சையுக்கு பிறகு எண்ட வாயுக்க ஒரு நூல் (தையல் - stitches) கொளுக்கி மாதிரி (loop) தொங்கிக்கொண்டு இருந்திச்சிது. நான் என்ன செய்தன் எண்டால் அந்த வட்டமான நூலுக்க எண்ட நாக்கை கொளுவி விளையாடத்துவங்கினன். எனக்கு அந்தநேரம் எண்ட நாக்கை அந்த loopக்கவிட்டு விளையாடவேணும் போல இருந்திச்சிது. அப்பிடியே விளையாடிக்கொண்டும் இருந்தன்.

கடைசியில என்ன நடந்திச்சிது எண்டால் அது அறுந்துபோச்சிது. இதை அறிஞ்ச உடன சத்திரசிகிச்சை நிபுணருக்கு சரியான அதிர்ச்சி. தையலை நான் அறுப்பன் எண்டு அவர் எதிர்பார்க்க இல்லை. இதனால அந்த சத்திரசிகிச்சை கொஞ்சம் தோல்வியில முடிஞ்சிட்டிது. எல்லாரும் Nurseஐத்தான் பேசிச்சீனம். அம்மா இப்பவும் சொல்லி பேசுவா. அவ கவனமாய் இருந்து இருந்தால் நான் தையலை அறுத்து இருக்கமாட்டனாம் எண்டு. இப்பிடியான நேரங்களில குழந்தைகளிண்ட கைகளை கட்டிவைக்கிறவேளாம் ஏதாவது இசகுபிசகாக நடக்காமல் இருக்கிறதுக்கு. ஆனால்.. உண்மையில நடந்தது என்ன எண்டால் நான் கையைப்பாவிச்சு அதை அறுக்க இல்லை. எண்ட நாக்கை அதுக்கபோட்டு இழுத்துத்தான் அறுத்தது.

சில சிக்கல்கள்:

எனக்கு முக்கியமான ரெண்டு சிகிச்சைகளும் முடிஞ்சிட்டிது. மூண்டு மாத கைக்குழந்தையாய் இருக்கேக்க எண்ட பிளவடைஞ்ச உதட்டை ஒட்டி சத்திரசிகிச்சை செய்திச்சீனம். எனக்கு மூண்டு வயசு இருக்கேக்க எண்ட பிளவடைஞ்ச அன்னத்தை ஒட்டி சத்திரசிகிச்சை செய்திச்சீனம். சிறீ லங்கா நாட்டைப்பொறுத்த அளவில அவ்வளவுதான் ஆகக்கூடியது அங்க அப்போது செய்யக்கூடியது. நான் கொஞ்சம் வளர்ந்தாப்பிறகு எனக்கு எட்டுவயசு சொச்சம் வரேக்க மிகுதி சிகிச்சைகளை என்னை இந்தியாவுக்கு கூட்டிக்கொண்டுபோய் செய்யும்படி வைத்தியர்மார் அம்மா, அப்பாவுக்கு அறிவுரை சொல்லி இருந்திச்சீனம். ஆனால்.. நாட்டுப்பிரச்சனைகள் காரணமாகவும், அம்மா, அப்பாவிண்ட சில கவனக்குறைவுகள் காரணமாகவும் நான் உரியநேரங்களில சிகிச்சைகளை பெறமுடிய இல்லை. எண்ட ஒரு மாமி அப்போது இந்தியாவில வைத்தியபீட மாணவியாய் இருந்தா. நான் பன்னிரண்டு வயசுசொச்சம் இந்தியாவுக்குபோய் இருக்கேக்க எனது சிகிச்சைகளை இந்தியாவில தொடர்வது சம்மந்தமாய் அவவோட அம்மா, அப்பா கதைச்சீனம். எண்டாலும் அது கைகூட இல்லை (மாமி இப்ப லண்டலில குழந்தைகள் வைத்தியராய் இருக்கிறா, அண்மையில கனடாவுக்கு வந்து இருக்கேக்க நாந்தான் அவவைகூட்டித்திரிஞ்சது. அவவுக்கு நான் கனடாவுக்கு வந்துசிகிச்சைகள் செய்து என்பாட்டில முன்னேறினதை பார்த்த உடன சரியான ஆச்சரியம், சந்தோசம்).

எனக்கு மூண்டு வயசில நடந்தசிகிச்சை பூரணவெற்றி பெறாத காரணத்தால என்ன பிரச்சனை வந்திச்சிது எண்டால்.. அன்னத்தில சிறிய பிளவு தொடர்ந்தும் இருந்ததால நான் ஏதாவது சாப்பிடேக்க அது மூக்குக்கால வரத்துவங்கிச்சிது. இதைமாதிரி குடிக்கிறதுகளும் மூக்குக்கால வந்திச்சிது. ஆயினும்... உடல் வளர்ச்சி அடைய அடைய.. அந்த அன்ன வெடிப்பு அளவில சிறிதாகிக்கொண்டு போச்சிது. இப்ப அது ஏறக்குறைய முற்றாக மூடுப்பட்டுவிட்டிது எண்டு சொல்லலாம். முந்தி ஒடியல் ஏதும் சாப்பிட்டால் சிறிய மயிருகள் அந்த பிளவுக்கபோய் சிக்குப்பட்டிடும். பிறகு அதை வாயுக்கால இல்லாட்டிக்கு மூக்குக்கால வெளியால கொண்டுவாறது பெரிய வேலை. ஆனால்... நீண்ட அனுபவம் காரணமாக எனக்கு எல்லாம் பழகீட்டிது. எப்பிடியான பொருள் அன்னவெடிப்பு இடையுக்க அடைபட்டாலும் அதை வெளியால அப்புறப்படுத்துறது எப்பிடி எண்டு பழகீட்டன். இந்தவகையில... நான் வளர்ந்தபிறகு.. அதாவது சுமார் பதினாறு வயசுக்குபிறகு இந்த பிளவடைஞ்ச அன்னத்தால எனக்கு பெரிசாக பிரச்சனை ஒண்டும் இருக்க இல்லை.

ஆனால்... எனக்கு வந்த பெரிய பிரச்சனை என்ன எண்டால் பற்கள் எல்லாம் அங்கொன்றும், இங்கொன்றுமாக வளரத்துவங்கீட்டிது. இதனால சரியாக பல்லு மினுக்கிறது கஸ்டமாய் இருந்திச்சிது. ஊரில பல் வைத்தியர்களிண்ட சரியான வழிகாட்டுதல்கள் கிடைக்க இல்லை. நான் எப்பிடி நல்லாய் பல்லுமினுக்கினாலும் 'வாய் மணக்கிது, ஒழுங்காய் பல்லை மினுக்கு' எண்டு வீட்டில அடிக்கடி பேச்சு விழுந்திச்சிது. நானும் ஒருநாளைக்கு பத்துதரம் எல்லாம் பல்லு மினுக்கி பார்க்கிறது. நான் பல்லு மினுக்கின உடன அக்காமாரிட்ட ஓடிப்போய் 'இப்ப மணக்கிதோ' எண்டு பாருங்கோ எண்டு கேட்கிறது. அவையள் 'ஓம் இன்னும் மணக்கிது ஏன் சரியாய் மினுக்க இல்லையோ?' எண்டு கேட்பீனம். ஆனால் எனக்கு மட்டும் மணக்காது. எனக்கு அப்போது Flush பண்ணிற நுட்பம் எல்லாம் ஒருத்தரும் சொல்லித்தர இல்லை. இது பெரிய சிக்கலாய் போச்சிது. ஆக்களுக்கு பக்கத்தில போய் நிண்டு கதைக்கவும் பயம். எண்ட வாய் மணக்கிமோ எண்டு. சரி ஒருபக்கத்தால இப்பிடி பிரச்சனை எண்டால்...

பிறகு மற்றப்பக்கத்தால என்ன எண்டால்... எனக்கு மேல் உதட்டில வாயுக்க உள்பக்கமாக ஒரு ஓட்டை (Fistula) இருந்திச்சிது (கனடாவில செய்யப்பட்ட நாலாவது சத்திரசிகிச்சையின்போது இந்த ஓட்டை மூடபட்டுவிட்டது). அதால பிரச்சனைகள் வரத்துவங்கிச்சிது. குடிக்கிறதுகள் அந்த ஓட்டைக்காலபோய் மூக்குக்கால வரத்துவங்கிச்சிது. இதைமாதிரி சிலது சாப்பிடுறதுகளும் சிறிய துகள்கள் அந்த ஓட்டைக்காலபோய் மூக்குக்கால வெளியால வந்திச்சிது. இப்ப இந்த பிரச்சனை எல்லாம் எனக்கு இல்லை. முக்கியமான அடுத்தபெரிய பிரச்சனை என்ன எண்டால்.. தெளிவாக கதைக்கிறது. பள்ளிக்கூடம் எண்டால் ஆயிரக்கணக்கான வாசிப்புக்கள், ஆக்களுக்கு முன்னால விதம்விதமான Presentations, ஒப்படைகள் எல்லாம் இருந்திச்சிது. தெளிவாக கதைக்கிறது கஸ்டமாக இருந்ததால பலவிதமான நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கவேண்டி இருந்திச்சிது. முக்கியமாக உளவியல் நெருக்கடிகள். எனக்கு ஓரளவு அறிவுவரத்துவங்கின பிறகு - தன்னிலை உணர்வு தோன்றிய பிறகு - சுமார் பதின்மூண்டு வயசுக்குபிறகு பலவிதமான உளவியல் சவால்களை எதிர்கொள்ளவேண்டி இருந்திச்சிது. வாய் முழுவதும் ஒழுங்கீனமாக பற்கள் இருந்ததால தெளிவாக கதைக்கிறது மிகவும் கடினமாய் இருந்திச்சிது. அதை எப்பிடி சொல்லலாம் எண்டால் நீங்கள் வாயுக்க சின்ன மிட்டாய் ஒண்டை வச்சுக்கொண்டு கதைச்சால் கதைக்கும்போது எப்பிடி இருக்கும்? அப்பிடி இருக்கும் எண்டு சொல்லலம். ஆனாலும்... எனது தனிப்பட்ட ஆற்றல்களை விருத்திசெய்ததன் மூலம், எனது பேச்சை பற்றி - அதைக்கேட்டு நான் செய்த தனிப்பட்ட ஆராய்ச்சிகள் மூலம் மெதுமெதுவாக இந்தப்பிரச்சனை ஓரளவுக்காவது என்னை வேதனைப்படுத்தாத வகையில நான் என்னை முன்னேற்றிக்கொண்டன். கனடாவுக்கு நான் வந்து இதுவரை செய்த ஆறு சத்திர சிகிச்சைகளில மூன்று நான் தெளிவாக பேசுவதை முன்னேற்றுவதை அடிப்படையாகக் கொண்டது. பேச்சு இன்னும் தெளிவாக வருவதற்கு இன்னும் ஒரே ஒரு சின்னசிகிச்சை மிகுதி இருக்கிது. ஆனால்... முன்பு சிறீ லங்காவில இருந்தபோது இருந்த பேச்சின் தெளிவைவிட இப்போது எத்தனையோ மடங்கு முன்னேற்றம் எண்டு சொல்லலாம். எனக்கு பாடும்போது பிரச்சனை இருப்பது குறைவு. ஏன் எண்டால் பாட்டு ஓசை எல்லாம் வயிறு, அடித்தொண்டையில இருந்து வரும். வாயின் வெளிப்பகுதிகளை பாடும்போது அதிக அளவில பாவிக்கவேண்டிய தேவை எனக்கு இருப்பது இல்லை. அப்படி பயிற்சிமூலம் எனது தனிப்பாணியை வளர்த்துவிட்டன்.

நீங்கள் செய்யக்கூடியவை:

நான் கனடாவுக்கு வந்து பெற்ற சத்திரசிகிச்சைகள் பற்றி சொல்லமுன்னம்... உங்கள் குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் யாருக்காவது இந்தக்குறைபாடு இருந்தால் நீங்கள் செய்யக்கூடிய சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகள், மற்றும் சில முக்கிய தகவல்களை சொல்லிப்போட்டு பிறகு மிச்சம் அங்கால சொல்லிறன்.

முதலாவது, ஐயோ இப்பிடியாய் போச்சிதே.. குழந்தை இப்பிடி பிறந்திட்டுதே எண்டு பயப்படாதிங்கோ, பதற்றம் அடையாதிங்கோ. எத்தினயோ பயங்கரமான குறைபாடுகள், கொடிய நோய்கள் எல்லாம் இருக்கிற உலகத்தில இப்பிடியான சின்ன பிரச்சனையை கண்டு நீங்கள் கலங்கத்தேவையில்லை. ஆனால்... சிகிச்சைகளை செய்யவேண்டிய நேரத்தில - செய்யவேண்டிய காலத்துக்கு செய்திடவேணும். பொறுமை வேணும். அவசரப்பட்டு ஒண்டும் செய்ய ஏலாது. நான் கனடாவில இந்த சிகிச்சைகளை கடந்த எட்டுவருசங்களாக ஒன்றன்பின் ஒன்றாக பெற்றுவாறன். இந்த மறுசீரமைப்பு வேலை மிகப்பெரிய திட்டம். நீண்டகாலம் பிடிக்கும்.

எனக்கு எண்ட அம்மா, அப்பா இந்தவிசயத்தில கொஞ்சம் அக்கறையீனமா இருந்திட்டீனம். இதனால நான்தான் என்பாட்டிலயே மருத்துவ புத்தகங்களை வாசிச்சு, மருத்துவர்களை தேடிச்சென்று எனது பிரச்சனையை தீர்த்துக்கொண்டது. நான் யாழ்ப்பாணத்தில இருக்கேக்க ஒருநாள் சரியாய் மனம் உடைஞ்சுபோனன். நண்பர்கள் சிலரோட கதைச்சுக்கொண்டு இருக்கேக்க Readers Digest (அந்த புத்தகம்) பற்றி ஒரு கதை வரேக்க நான் அதை உச்சரிக்க அவையுக்கு நக்கலாய் போச்சிது. சும்மா பகிடிக்கு அந்த சொல்லை நான் சரியாக உச்சரிக்க முடியாமல் இருப்பதை குத்திக்காட்டி இருந்திச்சீனம். அண்டைக்குத்தான் எண்டமனதில மிகப்பெரிய ஆக்கிரோசம் கிளம்பிச்சிது. உடனடியாகவே அடுத்த சிலநாட்களில யாழ்ப்பாணம் மருத்துவமனைக்குபோய் பல்வைத்தியர் ஒருவவிட்ட எனது பிரச்சனைகள் பற்றிசொல்லி என்ன செய்யுறது எண்டு கேட்டன். அவவுக்கு எண்ட கதைகளை கேட்டாப்பிறகு என்னில பெரிய கவலையாப்போச்சிது. 'ஐயோ அப்பன்.. செல்லம்' எண்டு துவங்கி ஆறுதலாய் என்னில சரியான அக்கறையோட பலவிதமான ஆலோசனைகள் சொன்னா. நான் வளர்ந்தாப்பிறகு உழைக்கிற காலத்தில இல்லாட்டிக்கு ஒருகாலத்தில வெளிநாடுபோனால் இதுக்கான சிகிச்சைகள் எல்லாம் எடுத்து எனது குறைபாட்டை போக்கிக்கொள்ளலாம் எண்டு சொன்னா. அன்றுதான் இண்டைக்குவரை நான் மறுசீரமைப்பு சிகிச்சைகள் செய்து இவ்வளவு தூரம் என்னை முன்னேற்றிக்கொள்ள போடப்பட்ட பிள்ளையார் சுழி. அதுக்கு பிறகு யாழ்ப்பாணத்தில இருந்த வேறும் சில பிரபல பல்வைத்தியர்களிட்ட ஆலோசனைகள் கேட்டு இருந்தன்.

பிறகு கொழும்புக்கு போய் இருக்கேக்க நான் எண்ட தேடலை விடுறதாய் இல்லை. தொலைபேசி புத்தகங்களை எடுத்து முகமறுசீரமைப்பு தொடர்பாய் சத்திரசிகிச்சை நிபுணர்களிண்ட இலக்கங்களை, முகவரிகளை தேடி எடுத்து அவர்களிட்ட போனன். அப்ப அங்க இருக்கிற பிரபலமான ஒரு நிபுணர் எனக்கு என்ன அறிவுரை சொன்னார் எண்டால்.. நான் சிகிச்சையை செய்யுறது ஆபத்தானதாம். அன்னம் உடையப்பார்க்குமாம். தேவையில்லாத பிரச்சனை வருமாம். எண்டபடியால இருக்கிறதை வச்சு, அதை குறைபாடு எண்டு நினைக்காமல்.... அப்பிடியே கனக்க ஒண்டும் யோசிக்காமல் வாழ்க்கையை வாழட்டுமாம் எண்டு அறிவுரை சொன்னார். அவர் அப்போது அப்பிடி சொன்னதும் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத்தான் இருந்திச்சிது. ஏன் எண்டால் இந்த சிகிச்சைகளுக்கு ஏராளம் காசுவேணும். ஆனாலும்.. 'அட எண்ட விருப்பம் ஒண்டும் நிறைவேறாமல் போகிதே' எண்டு சரியான கவலையாய் இருந்திச்சிது. இதனால எனது கனவுகளை தற்காலிகமாக மூட்டை கட்டி வச்சுப்போட்டன்.

கடைசியில... நான் கனடாவுக்கு வந்த உடன திரும்பவும் மறுசீரமைப்பு சிகிச்சைகள் செய்யவேணும் எண்டு எனக்குள்ள ஒரு வெறி வந்திட்டிது. நானாகவே வலைத்தளத்தில பலவிதமான ஆராய்ச்சிகள் செய்து கடைசியில போய்ச்சேரவேண்டிய இடத்துக்கு வந்துசேர்ந்தன். எனது சிகிச்சைகள் 90% இதுவரை வெற்றிகரமாக முடிஞ்சிட்டிது. ஏன் நான் இதை சொல்லிறன் எண்டால்... நீங்கள் - பெற்றோரே - உங்கள் குழந்தைகளிண்ட எதிர்காலத்தில அக்கறையாய் இருந்து அவர்கள் குழம்பிக்கொள்ளாதவகையில அவர்கள் பிரச்சனைகளை அவை பெரிதாகும் முன்னம் தீர்த்துவிட்டால் நல்லது. குழந்தைகள் தாங்களாக வளர்ந்து தாங்களாகவே தேடிச்சென்று சிகிச்சைகள் செய்யுறது எண்டால் அது மிகக்கடினம். எனக்கு வாழ்க்கையில கிடைத்த வாய்ப்புக்கள், வசதிகள் எல்லாருக்கும் கிடைக்கப்போவது இல்லை. அதான் சொல்லிறன். நீங்கள்தான் உங்கட குழந்தையிண்ட எதிர்காலத்தில அக்கறையாய் இருக்கவேணும்.

சிறீ லங்காவில இருக்கிற ஆக்கள் எண்டால் இந்தியாவில திருப்திப்படும்வகையில சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளலாம். வெளிநாட்டில இருக்கிற ஆக்கள் எண்டால் பிரச்சனை இல்லை. வளர்ச்சி அடைஞ்ச எல்லா நாடுகளிலுமே முகமறுசீரமைப்பு சிகிச்சைக்கு எண்டு பலவித வசதிகள் இருக்கிது. இஞ்ச கவனிக்கவேணும் என்ன எண்டால்.. குழந்தை வளர்ந்து தன்னை மற்ற ஆக்களில இருந்து வித்தியாசமான ஆளாக நினைச்சு உளவியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளமுன்னம் பெற்றோர் குழந்தைக்கு சிகிச்சைகளை தொடங்கிவிடவேணும். இல்லாட்டிக்கு பிள்ளையிண்ட ஆற்றல்கள், திறமைகள், இனிமையான வாழ்க்கை எல்லாம் சிதைஞ்சு வீணாகிவிடும்.

மற்றது, பள்ளிக்கூடத்தில குழந்தைகளை சக மாணவர்கள் சீண்டிப்பார்த்து விளையாடக்கூடும். இதனால அவர்கள் வீட்டில இதுகள் எல்லாத்தையும் சொல்லாவிட்டாலும் உண்மையில அவர்கள் மனநிலை பாதிக்கப்படலாம். நான் சின்னனில மூண்டாம் வகுப்பு படிக்கேக்க... ஒரு பெடியன் என்னை சீண்டத்துவங்கினான். அது என்ன நடந்திச்சிது எண்டால்.. எனக்கு இருந்த குறைபாடு காரணமாய் என்னால எண்ட மூக்கை நாக்கு மூலம் வெளியால நீட்டி தொடக்கூடியதாய் இருந்திச்சிது. ஒருநாள் நான் அவனுக்கு சும்மா விளையாட்டுக்கு அப்பிடி செய்துகாட்டி இருந்தன். ஆனால்.. அதுக்குபிறகு அவன் அடிக்கடி வகுப்பில மற்ற ஆக்களுக்கு முன்னால எல்லாம் என்னை 'நாக்கால மூக்கை தொட்டுக்காட்டு' எண்டு கேட்டு கரைச்சல் தரத்துவங்கீட்டான். இதுக்கு பிறகு அவன் என்னை சீண்டினால் அவனுக்கு நான் அடிச்சுப்போடுவன். வேறபெடியங்களும் சின்னனில இப்பிடி என்னை எண்ட குறைபாட்டை சொல்லி நக்கல் அடிச்சால் அவையளுக்கு அடிதான். வீட்டிலயும் சிலது யாராச்சும் பகிடிக்கு என்னை ஏதாவது சொன்னால் அடிக்கிறது.

ஆனால்... கொஞ்சம் வளர்ந்தாப்பிறகு அதாவது பதின்மூண்டு வயசு சொச்சம் வரேக்க... ஆக்கள் எனது குறைபாடுகளை சுட்டிக்காட்டி கிண்டல் செய்யேக்க எனது ஆத்திரங்களை வெளிப்படுத்தாது எனக்குள் வைச்சு மறைக்கத் துவங்கீட்டன். அவர்கள் உண்மையைத்தானே சொல்லுறீனம் எண்டு விளங்கிச்சிது. இதனால.. பலவிதமான உளவியல் நெருக்கடிகளை சந்திக்கவேண்டி வந்திச்சிது. உங்கட குழந்தைகளுக்கு இந்தவிசயத்தில நீங்கள் கொஞ்சம் கவனமாய் இருக்கவேணும். அதாவது பதின்ரெண்டு, பதின்மூண்டு வயசுகளை அடைஞ்சு குழந்தை வளரேக்க அவர்களுக்கு அவர்களிண்ட இயலாமைகள் வடிவாய் விளங்கும். இதனால மற்றவர்களில இருந்து விலகி ஒதுங்கிப்போக பார்ப்பீனம். இதுக்கு நீங்கள் செய்யக்கூடிய ஒரு பரிகாரம் என்ன எண்டால் அவர்களில இருக்கிற இதர திறமைகளை ஊக்குவிச்சு அவர்களை பலர் முன்னிலையில கொண்டு செல்லலாம். உதாரணமாக, குறிப்பிட்ட குழந்தையுக்கு துடுப்பாட்டத்தில ஆர்வம் வரச்செய்து, பாடசாலை துடுப்பாட்ட அணியில பிள்ளையை சேர்ப்பித்து, குழந்தை சோர்வு அடையாத வகையில பார்த்துக்கொள்ளலாம்.

கனடாவுக்கு வந்தபின்னர் நான் பெற்ற சிகிச்சைகள்:

எனக்கு ரெண்டு விதமான பிரச்சனைகள் இருந்திச்சிது. முதலாவது மூக்கு ஒரு வடிவம் இல்லாமல் ஏதோ மாதிரி இருந்திச்சிது. அடுத்தது பல்லுகள் அகோரமாய் இருந்ததோட தெளிவாக கதைக்கவும் ஏலாமல் இருந்திச்சிது. எனக்கு ஆரம்பத்தில இந்த நாசமாய்ப்போன மூக்கை ஒருவழிபண்ணவேணும் எண்டுதான் அதிக ஆர்வமாய் இருந்திச்சிது. இதனால பலவித சுய ஆராய்ச்சிகளுக்கு பிறகு சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவரிட்ட போனன். என்னோட மிகவும் அக்கறையாக கதைச்சார். பல விசயங்கள் பற்றி விளக்கம் தந்தார். இறுதியில சிலமாதகால உரையாடல்களின் பின்னர் சத்திர சிகிச்சையுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிச்சிது. எனது நல்ல காலத்துக்கு நான் போய்ச்சேர்ந்தது நல்ல ஓர் மனம் படைச்ச ஓர் சிறந்த சத்திர சிகிச்சை நிபுணரிடம்தான்.

கனடாவில் நடந்த முதல் மூன்று சத்திரசிகிச்சைகள்:

சத்திர சிகிச்சை எண்டுறது ஓர் கலை. அதில எத்தனையோ ஆயிரம் நுட்பங்கள், procedures எல்லாம் இருக்கிது. பல்வேறு கோணங்களில முகத்தை படம்பிடிக்கிறது தொடக்கம்.. சிகிச்சையை திட்டமிடுவது வரை எத்தனையோ விசயங்கள் இருக்கிது. எனக்கு மூக்கை மறுசீரமைக்கிறது சம்மந்தமாய் செய்யப்பட்ட மூன்று சத்திரசிகிச்சைகளும் நடைபெற்ற மொத்தநேரம் சுமார் ஏழு மணித்தியாலங்கள்:

முதலாவது - சுமார் மூண்டு அரை மணித்தியாலங்கள்

ரெண்டாவது - சுமார் ஒண்டு அரை மணித்தியாலங்கள்

மூண்டாவது - சுமார் ஒண்டு அரை மணித்தியாலங்கள

ஆனால்.. இந்த ஏழு மணித்தியாலங்கள் தவிர செய்யப்பட்ட இதர பரிசோதனைகள், Consultations எண்டு பார்த்தால் சுமார் பத்து பன்னிரண்டு மணித்தியாலங்கள் வரும். இதில நான் பயணம் செய்த நேரங்கள், Waiting time, இதர உதிரி நேரம் எண்டு பார்த்தால் நூற்றுக்கு மேற்பட்ட மணித்தியாலங்கள் வரும். நான் ஏன் இதை சொல்லிறன் எண்டால் இந்த விசயங்களில இறங்கிறது எண்டால் உங்களுக்கு மிகவும் பொறுமை வேணும். இந்த மூன்று சிகிச்சைகளும் முடிந்து பலன் கிடைக்க சுமார் எனக்கு நான்கு வருசங்கள் எடுத்திச்சிது.

எனக்கு முதலாவது சிகிச்சை மற்றைய இரண்டையும்விட மிகுந்த வேதனையை ஏற்படுத்திச்சிது. நெற்றி, மூக்கை மூடி மிகவும் கடினமான மட்டை மாதிரியான பொருளால Support தரப்பட்டு இருந்திச்சிது. சிகிச்சையின் பின்னர் நிறைய இரத்தப்பெருக்கு ஏற்படத்துவங்கீட்டிது. மூக்கு இரத்தத்தால முற்றுமுழுதாய் அடைபட்டு இருந்ததால வாயுக்காலதான் சுவாசத்தை செய்யவேண்டி இருந்திச்சிது. வேதனை ஒருபக்கம், இத்தோட அருவருப்பாகவும் இருந்திச்சிது. மூக்கினுள் இரத்தம் உறைஞ்சு இருந்ததால பலவிதமான சிரமங்களை அடையவேண்டி இருந்திச்சிது.

குறிப்பாக இன்னொரு விசயம் சொல்லவேணும் என்ன எண்டால் இந்த மயக்கமருந்து. எனக்கு இந்த மூன்று சிகிச்சைகள் செயேக்கையும் anesthetic தந்து எனக்கு முற்றுமுழுதாக சுயநினைவு அற்ற நிலையிலதான் செய்யப்பட்டிச்சிது. வேதனை எங்க இருந்திச்சிது எண்டால்... சிகிச்சை முடிந்ததும் Recovery Room இக்க நினைவு வரேக்க வருகிற வேதனைகள். நினைவு வாறதும் போறதுமாய் இருக்கும். கண்ணை முளிச்சு பார்க்கவேணும் போல இருக்கும். ஆனால் கண்ணை திறக்க ஏலாமல் இருக்கும். இந்த அரைமயக்கநிலை சுமார் அரை மணித்தியாலம் சொச்சம் நீடிக்கும். எனக்கு சத்திரசிகிச்சையால வருகிற காயங்களிண்ட வேதனையைவிட மிகவும் பிடிக்காத விசயம் இந்த அரைமயக்க நிலைதான். அந்த வேதனையை அனுபவிச்சால்தான் தெரியும்.

முதலாவது சிகிச்சையில மூக்கு ஒரு சரியான வடிவத்துக்கு கொண்டுவரப்பட்டிச்சிது. எனது சத்திரசிகிச்சை நிபுணர் பாவிச்ச நுட்பம் என்ன எண்டால் வெளியில அடையாளம் ஒண்டும் இல்லாத வகையில உள்ளுக்காலையே எல்லாத்தையும் வெட்டி மறுசீரமைப்பு செய்கிற முறை. இப்பிடியான நுட்பத்தை பாவிச்சால் சத்திரசிகிச்சை செய்யப்பட்டதற்கான அடையாளம் மூக்கிண்ட உள்பக்கத்தால தடவிப்பார்த்தால் மட்டும்தான் தெரியும்.

முதலாவது சிகிச்சை முடிஞ்சு சுமார் ஒரு வருசத்தால மூக்கில இரண்டாவது சிகிச்சை நடந்திச்சிது. இந்தச்சமயம் என்ன செய்யப்பட்டிச்சிது எண்டால் காதில ஓர் கசியிழையம் (மென்மையான எலும்பு - cartilage) வெட்டி எடுக்கப்பட்டு மூக்கிண்ட அடிப்பகுதியில வச்சு பதிவாக இருந்த பகுதி உயர்த்தப்பட்டிச்சிது. இந்த சிகிச்சையின்போது முதலாவது மாதிரி அதிக வேதனைப்பட இல்லை. காதில கசியிழையம் வெட்டி எடுகப்பட்ட இடத்தில கொஞ்சக்காலத்தால ஒரு பிரச்சனை வந்திட்டிது. அது என்ன எண்டால்... வெட்டப்பட்ட அந்த இடத்தில் சவ்வுமாதிரி ஒண்டு (ear scar) பெரிய கட்டி மாதிரி வளரத்துவங்கீட்டிது (மண்ணிறதோல் இருக்கிற ஆக்களுக்கு சத்திரசிகிச்சையின் பின்னர் இந்தப்பிரச்சனை வழமையாய் வருமாம்). அது கொஞ்சக்காலத்தில ஒரு சிறிய விரல் அளவுக்கு பெரிய அளவில வளந்திட்டிது. பிறகு மீண்டும் ஒரு சின்ன சிகிச்சை செய்து அதை வெட்டி எடுத்தது. இந்தக்காரணத்தால எனக்கு காதுப்பகுதியில சுமார் நான்கு தடவைகள் ஊசி மருந்து ஒண்டு செலுதப்பட்டிச்சிது. அந்த மருந்து இப்படியான வளர்ச்சியை தடுக்கும் எண்டு சொல்லப்பட்டிச்சிது. அதுக்கு பிறகு சிக்கல் ஒண்டும் வர இல்லை. எனது இரண்டு காதுகளையும் பார்க்கேக்க ஒரு காதில கசியிழையம் வெட்டி எடுக்கப்பட்ட விடயம் தெரியாது. ஆனால்... எனக்கு மிக அருகாக வந்து இரண்டு காதுகளையும் பின்பக்கத்தால மிகவும் உற்று அவதானிச்சு பார்த்தால் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கிறது தெரியும்.

இரண்டாவது சிகிச்சையின் பின்னர் மூக்கின் வடிவம் இன்னும் ஓரளவு வடிவாய் வந்திட்டிது. பின்னர் மீண்டும் ஒரு வருசத்தின் பின்னர் எனக்கு மூண்டாவது சிகிச்சை செய்யப்பட்டிச்சிது. இந்தச்சமயம் ஒரு பக்கமாய் கொஞ்சம் சாய்ஞ்சு இருந்த மூக்கிண்ட ஒரு பகுதி நடுவில வரக்கூடிய வகையில மறுசீரமைப்பு செய்யப்பட்டிச்சிது.

ஒவ்வொரு சத்திர சிகிச்சைகளின் பின்னரும் எனது தோற்றம் பல கோணங்களில படம் பிடிக்கப்பட்டிச்சிது. மூன்றாவது சிகிச்சை நடந்து சுமார் ஏழு, எட்டு மாதங்களின் பின்னர் எனது சத்திரசிகிச்சை நிபுணர் நான் சிகிச்சைகளுக்கு முன்னம் இருந்த தோற்றத்தையும், சிகிச்சைக்கு பிறகு இருக்கும் தோற்றத்தையும் - மாற்றங்களையும் காட்டினார். ஏதோ அந்தப்புண்ணியவானிண்ட தயவில எனது மூக்கு ஒருமாதிரி மறுசீரமைக்கப்பட்டு விட்டிச்சிது. எனக்கு அவர் சொன்னார் இதுக்கு மேல தன்னால ஒண்டும் செய்ய ஏலாது எண்டு. அத்தோட இன்னொருவிசயமும் சொன்னார் இப்ப உனக்கு இருக்கிற இந்த மூக்கு குறைபாடுகள் ஒண்டும் இல்லாமல் பிறக்கிற ஆக்கள் பலருக்கு இருக்கிற இயற்கையான மூக்கைவிடவும் வடிவாய் இருக்கிது எண்டு. எனக்கும் நான் ஆரம்பத்தில இருந்தநிலையோட ஒப்பிட்டு பார்க்கேக்க இப்ப எவ்வளவோ பலமடங்கு முன்னேற்றம் இருந்ததால மூன்று சிகிச்சைகளின் முடிவின்பின்னர் அவை எனக்கு மிகவும் திருப்தியை அளிச்சிது.

எனது சத்திரசிகிச்சை நிபுணர் ஒரு பல்கலைக்கழகத்தில பேராசிரியராகவும் இருந்தார். நான் சிகிச்சை பெறமுன்னம் 'எனது சிகிச்சை முடிவுகள்பற்றி சத்திரசிகிச்சை நிபுணர்களிண்ட சஞ்சிகையில கட்டுரையாக பிரசுரிக்கப்பட அனுமதி அளிக்கிறன்' என்கின்ற ஒப்பந்தம் என்னிடம் இருந்து பெறப்பட்டிச்சிது. அட யாரோ படிக்கிற விசயம்.. மற்ற ஆக்களுக்கு பயனுள்ள விசயம்தானே எண்டு நான் இதுக்கு ஓம் எண்டு சொல்லிப்போட்டன். அத்தோட கனடா ஒன்றாரியோ மாகாணத்தில என்னை மாதிரி குறைபாடுகளோட பிறக்கிற குழந்தைகளுக்கு உதவுறதுக்காக ஓர் சிறப்பு திட்டம் சுகாதார அமைச்சில இருக்கிது. இதனால எனக்கு இந்த மூன்று சிகிச்சைகளையும் செய்ய சுமார் $3,500 நேரடிசெலவுதான் ஏற்பட்டிச்சிது (நேரடி அல்லாத செலவுகளும் இருக்கிது). ஆனால்.. இதே சிகிச்சையை வேறு யாராவது - அதாவது பிறப்பினால் குறைபாடு இல்லாத யாராவது - பெறுவது எண்டால் $15,000 சொச்சம் தேவைப்படும். இந்தியாவில மலிவாய் செய்யலாம் எண்டு சிலர் சொல்லிச்சீனம். ஆனால்... எவ்வளவு செலவு எண்டு தெரிய இல்லை.

கனடாவில் நடந்த அடுத்த மூன்று சத்திரசிகிச்சைகள்:

மூக்கில இரண்டாவது சத்திரசிகிச்சை செய்தகையோடையே நான் 2003ம் ஆண்டில வாய் மறுசீரமைப்பு சிகிச்சையில இறங்கீட்டன். இஞ்சயையும் எனது சுய தேடல்கள், ஆராய்ச்சிகளிண்ட பயனாலதான் சிகிச்சை செய்யமுடிஞ்சிது. ஆனால்.. எனக்கு ஏற்பட இருந்த ஆபத்து ஒண்டு நல்லகாலம் விலகிப்போச்சிது. அது என்ன எண்டால் நான் இந்தப்பிரச்சனையை தீர்க்க யாரிடம் சிகிச்சைக்குபோகலாம் எண்டு யோசிச்சுக்கொண்டு இருந்துபோட்டு ஓர் பிழையான - பணத்துக்கு முக்கியத்துவம் குடுத்து பணத்தில குறியாய் இருக்கிற ஒரு வைத்தியரிண்ட கையில நான் கொஞ்சக்காலம் தெரியாமல் அகப்பட்டுப்போனன்.

அது உண்மையில தகப்பனும், மகனும். ரெண்டுபேரும் பல்வைத்தியர்கள், பல் சிகிச்சை நிபுணர்கள். தகப்பன் பெரிய ஆள், கெட்டிக்காரன். ஆனால் அவர் எல்லாத்தையும் இப்பத்தான் பள்ளிக்கூடம் முடிஞ்சு புதுசாக வேலையில இணைஞ்சு இருந்த மகனிண்ட கையில கொடுத்து இருந்தார். எனது பிரச்சனை மிகவும் சிக்கலானது. மிகச்சிறந்த நீண்ட அனுபவம் கொண்ட நிபுணர்களால மட்டும்தான் எனது பிரச்சனையை தீர்க்கமுடியும். ஆனால்.. மகன்காரர் என்னட்டை காசு இருக்கிது எண்டு அறிஞ்சுபோட்டு (அப்பநான் முழுநேரமாக வேலை செய்துகொண்டு இருந்தன். வேலை மூலம் பல், சுகாதாரம் 100% காப்புறுதி இருந்திச்சிது) என்னில வைத்தியம் பழகிப்பார்க்கத் துவங்கினார். நான் இவர் எனக்கு சிகிச்சைகள் தரத்துவங்கின உடன ரெண்டுதரம் அவரிண்ட வைத்தியசாலையுக்கு போயிட்டு மூண்டாம்தரம் 'நன்றி! வணக்கம்!' சொல்லிப்போட்டு வீட்டில நிண்டிட்டன். கொஞ்சக்காலம் என்னை துரத்தித்துரத்தி தொலைபேசி எடுத்திச்சீனம். எங்கையாம் என்ன காண இல்லையாம், வைத்தியர் எனக்கு சிகிச்சை தர தேடிக்கொண்டு இருக்கிறாராம் கவலையில எண்டு. நான் 'ஐயோ என்னை விடு ராசா' எண்டு சொல்லிப்போட்டு அந்தப்பக்கமே போறது இல்லை. அங்க இருந்து வீட்டுக்குவாற தொலைபேசி அழைப்பை எடுக்கிறதும் இல்லை.

இஞ்ச நீங்களும் எல்லாரும் ஒரு முக்கியமான விசயத்தை கவனிக்கவேணும். யாராக இருந்தாலும், எப்பிடியான வியாதிக்காரராக இருந்தாலும் வைத்தியரை தெரிவு செய்யேக்க மிகவும் அவதானமாக இருக்கவேணும். பலர் உங்களிட்ட பணம் இருந்தால் அதையே குறிவைச்சு தங்களால செய்யமுடியாத வேலையையும் - தங்கட சக்திக்கு அப்பால்பட்ட வேலையையும் தாங்கள் செய்துதாறதாய் சொல்லி உங்களை மயக்கி கவிட்டுப்போடுவீனம். கவனமாய் இருங்கோ. அரைவயித்தியனிட்ட போனால் கடைசியில எல்லாம் கெட்டு இருக்கிற வாழ்க்கையும் நாசமாய் போயிடும். முக்கியமாக Plastic Surgeons எண்டு சொல்லிக்கொண்டு அனுபவம் இல்லாத நிறைய வைத்தியர்மார் செய்யுற கூத்துக்கள் தினம்தினம் செய்திகளாக வந்துகொண்டு இருக்கிது. இந்தியாவில போய் சிகிச்சை செய்யுறது எண்டால் இன்னும் மிகவும் கவனமாய் இருக்கவேணும். ஏதாவது தவறு நடந்தால், ஆபத்து வந்தால் எல்லாரும் ஓடீடுவாங்கள். நாங்கள்தான் தனிய நிண்டு தவிக்கவேணும். 'முகத்தை மறுசீரமைச்சு அழகுபடுத்துறன்' எண்டு சொல்லிக்கொண்டு இருக்கிற முகத்தை வெட்டிக்கொத்தி இன்னும் கேவலமாக்கிவிட்டால் ஒண்டும் செய்ய ஏலாது.

இந்த சின்னப்பெடி வைத்தியரிட்ட போனபிறகு எனக்கு கொஞ்சம் பயம் வந்திட்டிது. கண்டவனிட்டையும் சிகிச்சையுக்குபோக பிறகு அவங்கள் உள்ளதையும் கெடுத்துப்போடுவாங்களோ எண்டு. இதுக்குபிறகு எண்ட பற்களை சுத்தம் செய்ய ஒரு பற்சிகிச்சை நிபுணரிட்ட போனன். அப்ப எண்ட பிரச்சனைகள், பழைய வரலாறு பற்றி எல்லாம் அவருக்கு சொன்னன். அவரும் ஆரம்பத்தில தானே எல்லாம் செய்வன் எண்டு சொன்னார். அட இவனும் பழைய ஆள் மாதிரி இப்பிடியோ எண்டு யோசிக்க... பிறகு சில கிழமைகளுக்கு பிறகு என்னோட மீண்டும் சந்திச்சு கதைகேக்க சொன்னார்.. தான் தனது நண்பர்களோட கதைச்சவராம்.. அப்ப நண்பர்கள் சொன்னவிசயம் என்ன எண்டால் எனது பிரச்சனை மிகச்சிக்கலான ஒண்டு எண்டபடியால... மிகச்சிறந்த நிபுணர்கள் பணியாற்றுகின்ற இரண்டு சிறுவர் வைத்தியசாலைகளில நான்போய் அங்கு சிகிச்சை பெற முயற்சித்து பார்க்கலாம் எண்டு.

உண்மையில இவருக்கு ஆரம்பத்தில விளக்கம் குறைவாக இருந்திச்சிது எண்டாலும்... மிகவும் நல்ல உள்ளம் படைச்ச ஒருத்தர் எண்டு சொல்லலாம். இவர் ஒரு இந்தியன். ஆனால்... நீண்டகாலமாய் கனடாவில இருக்கிறவர். ஆளைப்பார்த்தால் இந்தியன் எண்டு சொல்ல ஏலாது. இவர் எனக்கு ஒரு கடிதம் எழுதித்தந்தார் - சிறுவர் வைத்தியசாலைகளுக்குபோய் அங்க இருக்கிற சத்திரசிகிச்சை நிபுணர்களோட நான் தொடர்புகொள்ளுறதுக்கு. இந்த சிறுவர் வைத்தியசாலைகளில கிடைச்ச இன்னொரு மிகப்பெரிய பயன் என்ன எண்டால் என்னை மாதிரி இவ்வாறான குறைபாடு உள்ள ஆக்களுக்கு குழந்தைகள் வைத்தியசாலையில சிகிச்சை பெறுவதற்கு வயதுக்கட்டுப்பாடுகள் இல்லை. அத்தோட சிகிச்சையுக்கு ஏற்படுகின்ற செலவில 25% மட்டும் நான் செலுத்தினால் போதுமானது. மிகுதி 75% Cleft Lip & Cleft Palate சம்மந்தமாக உருவாக்கப்பட்ட ஓர் சிறப்பு திட்டம் மூலம் வைத்தியசாலையே பொறுப்பேற்றுக்கொள்ளும்.

நானும் கொஞ்சம் நம்பிக்கையும், கொஞ்சம் சந்தோசமும் பட்டுக்கொண்டு குழந்தைகள் வைத்தியசாலைக்கு போனன். முதலாவது வைத்தியசாலையில சொல்லிப்போட்டீனம் தங்களுக்கு ஏற்கனவே ஏராளம் நோயாளர்கள். இதனால என்னை பொறுப்பேற்க ஏலாது எண்டு. மற்றைய குழந்தைகள் வைத்தியசாலைக்கு போய் முயற்சிசெய்து பார்க்கச்சொல்லிச்சீனம். எனக்கு ஏமாற்றமாய் இருந்திச்சிது. ஏதோ ஒரு நம்பிக்கையோட அடுத்த குழந்தைகள் வைத்தியசாலையுக்கு போனன். அங்க இருந்த குறிப்பிட்ட Cleft Lip & Cleft Palate சிறப்பு திட்டத்துக்கு பொறுப்பான தலமை வைத்தியர் என்னோட நீண்டநேரம் உரையாடினார். பிறகு அங்க இருக்கிற சத்திர சிகிச்சை நிபுணர்களும் கொஞ்சநாளைக்கு பிறகு மீண்டும் அங்கபோகேக்க என்னோட நீண்டநேரம் உரையாடிச்சீனம். நான் எண்ட பிரச்சனைகளை, பழைய வரலாறுகளை சொன்னன். அவையள் எனக்கு பலவிதமான ஆலோசனைகள் சொல்லிச்சீனம். கடைசியில எண்ட நல்லகாலத்துக்கு குறிப்பிட்ட அந்த குழந்தைகள் வைத்தியசாலையில நான் சிகிச்சை பெறுவதற்கு உத்தியோகபூர்வமாக அனுமதி தரப்பட்டிச்சிது. எனக்கு 2003ம் ஆண்டு இந்த வாய், முக மறுசீரமைப்பு சிகிச்சை ஆரம்பிச்சிது.

எனக்கு ஆரம்பத்தில மேல்தாடை நல்லாய் பின்னுக்கும், கீழ்தாடை நல்லாய் முன்னுக்கும் இருந்திச்சிது. இதனால நான் வாயை மூடேக்க கீழ்தாடை முன்பற்கள் மேல்தாடை முன்பற்களில இருந்து சுமார் 1cm பின்னால நிண்டிச்சிது. சிகிச்சையிண்ட முதலாவது இலக்கு இந்த இரண்டு தாடைகளையும் ஒன்றாக பொருந்தும்படிகொண்டு வாறது. அதாவது மேல்தாடை முன்னுக்கு கொண்டுவரப்படவேண்டி இருந்திச்சிது. கீழ்தாடை பின்னுக்கு கொண்டுபோகப்படவேண்டி இருந்திச்சிது. சிகிச்சையிண்ட அடுத்த இலக்கு என்ன எண்டால் பற்களை அழகாக வரிசையாக கொண்டு வாறது. இந்த இரண்டு இலக்குகளும் எடடுப்படேக்க எனது பேச்சில தானாகவே தெளிவு ஏற்படும் எண்டு எதிர்பார்க்கப்பட்டிச்சிது. எண்டாலும் சிகிச்சைகளுக்கு பிறகு பேச்சில 100% முன்னேற்றம் ஏற்படும் எண்டு தன்னால உறுதிகூற ஏலாது எண்டு வைத்தியர் ஒருத்தர் எனக்கு சொன்னார்.

2003ம் ஆண்டில எனக்கு சிகிச்சை ஆரம்பிச்சு இருந்தாலும் எனக்கு உண்மையில முதலாவது பெரிய சத்திரசிகிச்சை 2007ம் ஆண்டுதான் நடந்திச்சிது. முதலாவது சிக்கல் - நோயாளிகளிண்ட மிகநீண்ட Waiting list. நூற்றுக்கணக்கான குழந்தைகள். இதனால நீண்டகாலம் எல்லாருமே காத்து இருக்கவேண்டி இருந்திச்சிது. இந்த நேரத்தில நோய்வாய்ப்பட்ட குழந்தைகளிண்ட நினைவு எனக்கு வந்திட்டிது. இதனால இந்தக்குழந்தைகள் பற்றி கொஞ்சம் சொல்லிப்போட்டு மிச்சம் தொடருறன்.

நோய்வாய்ப்பட்ட குழந்தைகள்:

நான் இருந்திட்டு அம்மாவை பேசுறது.. 'ஏன் நீங்கள் என்னை இப்பிடி பிரச்சனையோட பெத்தனீங்கள். என்னை பெறாமலே இருந்து இருக்கலாம் தானே' எண்டு. சிலது சரியான கோவம் வரும் நான் ஏன் இப்பிடி பிரச்சனையோட பிறந்தன்... வாழ்க்கையில நிறைய நேரம் இந்தச்சிகிச்சைகளோட போகிதே எண்டு எல்லாம் கவலையாய் இருக்கும். அப்ப அம்மா என்ன சொல்லுவா எண்டால்... 'உனக்காவது பரவாயில்ல... ஆக முகத்திலமாத்திரம்தான் சின்னக்குறைபாடு... ஆனால் உன்னைவிட கேவலமாய் எத்தின குழந்தைகள் பிறக்கிதுகள்' எண்டு. அம்மா இப்பிடி சொல்லி என்னை சமாதானப்படுத்தி இருந்தாலும்.. உண்மையில எனக்கு அட எனக்கு இப்பிடி ஒரு பிறப்பு கிடைச்சதே மிகப்பெரிய விசயம் எண்டு - நல்ல சந்தோசம் எண்டுற உணர்வு - குறிப்பிட்ட குழந்தைகள் வைத்தியசாலையுக்கு நான் போனபிறகுதான் வந்திச்சிது.

கடவுளே... அதை எப்பிடி சொல்லிறது எண்டு தெரிய இல்லை. எனக்காவது பரவாயில்லை சிகிச்சைகள் மூலம் தீர்த்துக்கொள்ளக்கூடிய சிக்கல்கள். சின்னச்சின்ன உளவியல் நெருக்கடிகள்.. இவற்றைக்கூட எண்ட ஆற்றல்களை சரியானமுறையில விருத்தி செய்து நான் இப்ப அவற்றை அகற்றிவிட்டன். ஆனால்.. இந்தக்குழந்தைகளிண்ட வாழ்க்கையைபற்றி சொல்லிறது எண்டால் மண்டை காய்ஞ்சுபோகும்.

விதம், விதமான வியாதிகள். விதம், விதமான குறைபாடுகள். சில குழந்தைகள் இருபத்துநான்கு மணிநேரமும் தொடர்ச்சியாக வேதனைப்பட்டுக்கொண்டு இருக்கிதுகள். சில குழந்தைகள் ஆ ஊ எண்டு சத்தம் போடுறது தவிர வேறு ஒரு பாசையும் அறியாதுகள். சில குழந்தைகள் தள்ளுவண்டிலிலயே வாழ்க்கை கட்டிப்போடப்பட்டதுகள். ஒட்சிசன் சிலிண்டர் தொடக்கம் எல்லாம் தள்ளுவண்டிலுக்க அடக்கம். சில குழந்தைகளுக்கு மற்ற ஆக்களிண்ட உதவி இல்லாமல் சுயமாக அசைய ஏலாது, ஒரு காரியமும் ஆற்ற ஏலாது. இப்பிடி வேதனையின் உச்சநிலையைக்கண்ட பிஞ்சுகள். அதுகளிண்ட தாய், தகப்பனிண்ட முகங்களை பார்த்தால் தீராத ஒரு சோகம்... நீண்ட மாறாத கவலை... வலி இருக்கும். அந்த தாய், தகப்பன் குழந்தைகளுக்கு குழந்தைகளாய் இருந்து அவையுக்கு சேவகம் செய்வீனம்.

எனக்கு ஒவ்வொரு மாதமும் ஒருமுறை குறிப்பிட்ட சிகிச்சைக்காக அந்த குழந்தைகள் வைத்தியசாலைக்கு போகவேண்டிய தேவை இருக்கும். ஒவ்வொருமுறை போகேக்கையும் அங்க எனக்கு ஒவ்வொருவிதமான அனுபவம் கிடைக்கும். ஒவ்வொருவிதமான குழந்தையை காணுவன். ஒவ்வொருவிதமான பிரச்சனையை காணுவன். 'மனுசனுக்கு இப்பிடியெல்லாம் பிரச்சனைகளை கடவுள் கொடுப்பாரா' எண்டு ஒவ்வொரு குழந்தையிண்ட நிலமையையும் பார்க்க எனக்கு யோசனையாய் தோன்றும். ஆனால்... மனதில எப்பவும் சந்தோசத்தை ஏற்படுத்திற விசயம் என்ன எண்டால்...

கடவுள் எண்டு ஒருத்தர் இருக்கிறாரோ இல்லையோ ஆனால்... மனிசனிண்ட உருவத்தில நிறைய நடமாடும் கடவுளுகள் இருக்கிதுகள். நான் இஞ்ச யாரை சொல்லிறன் எண்டால் மனிதகுலத்திண்ட வளர்ச்சிக்காக பாடுபட்ட விஞ்ஞானிகள், அறிஞர்களை... எத்தனயோ ஆயிரம், ஆயிரம் விஞ்ஞானிகள், அறிஞர்களிண்ட விடாமுயற்சியாலையும், கற்றலில அவையளுக்கு இருந்த பேரார்வம் காரணமாகவும்தான் இண்டைக்கு மனிசனிண்ட வாழ்வு இவ்வளவு இலகுபடுத்தப்பட்டு இருக்கிது. மனுசன் சந்தோசமாகவும், நிறைவாகவும் வாழ - இரவு, பகலாக உழைச்ச அறிஞர்கள்தான் காரணம். 'From Disability to Possibility' எண்டு சொல்லுவீனம். மிகக்கேவலமான நிலமையில இருக்கிற, கொடிய வியாதிகளால பாதிக்கப்பட்டு இருக்கிற குழந்தைகளுக்கு எல்லாம் ஒளிமயமான வாழ்வு கொடுக்கிற தெய்வங்கள் எண்டு அறிஞர்களை சொல்லவேணும். நான் கடைசியாக சென்ற கிழமை எனக்கு சத்திரசிகிச்சை செய்யப்பட்டபோதும் இதத்தான் யோசிச்சுக்கொண்டு இருந்தன். 'இந்த மனுசன் என்னத்தை எல்லாம் கண்டுபிடிச்சு உலகத்தை எங்ககொண்டுபோயிட்டான்' எண்டு. மனுசன் மாத்திரம் சுறுசுறுப்பு இல்லாமல் 'உலகம் பொய்! உலகம் மாயை!' எண்டு சொல்லிப்போட்டு கண்ணை மூடிக்கொண்டு இருந்து இருந்தால் எல்லாரும் ஒட்டுமொத்தமாய் சீரழிஞ்சு போயிருக்க வேண்டியதுதான்.

குட்டிக்குட்டி விசயமாய் கோடிக்கணக்கான விசயங்களை - ஒழுங்குமுறைகளை மனுசன் கண்டுபிடிச்சு இருக்கிறான், விஞ்ஞானத்தில பாகுபடுத்தி வச்சு இருக்கிறான். ஒருபக்கத்தால மனுசனை மனுசன் கொலை செய்து கொடூரமானவனாய் இருக்கிறான். இன்னொரு பக்கத்தால மனுசனுக்கு மனுசன் வாழ்வு குடுத்துக்கொண்டு இருக்கிறான். என்னதான் வியாதிஉள்ள குழந்தையாக இருந்தாலும் குறிப்பிட்ட இந்த குழந்தைகள் வைத்தியசாலையில மிகச்சிறப்பான முறையில சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு தங்களால முடியுமான அளவுக்கு குழந்தைகளுக்கு நல்வாழ்வு அமைச்சு குடுக்கிறீனம்.

அடுத்த மூன்று சத்திரசிகிச்சைகள் தொடர்ச்சி:

அப்ப என்ன எண்டால் எனக்கு 2004ம் ஆண்டு சொச்சத்தில பலவிதமான சின்னச்சின்ன சிகிச்சைகள் நடந்தபிறகு ஒழுங்கீனமாக இருந்த பல்லுகள் புடுங்கப்பட்டிச்சிது. ஒரேநேரத்தில எல்லாமாய் அஞ்சு பற்கள் புடுங்கப்பட்டிச்சிது. நான் அப்ப காலம்பற பள்ளிக்கூடம் போயிட்டு பின்னேரம் வேலையுக்கு போறது. ரெண்டும் முழுநேரமாய் செய்துகொண்டு இருந்தன். இதனால நிறைய சிக்கலுகள். பள்ளிக்கூடத்தில நிரம்பமினக்கட்டால் பிறகு வேலையுக்கு போக நேரம் போயிடும். அங்க வேலையுக்கு நேரம்செல்லபோனால் அவங்கள் கத்திக்கொண்டு நிப்பாங்கள். பள்ளிக்கூடத்துக்கு முன்னாலதான் எண்ட வீடு இருந்திச்சிது. இதனால காலை 9.00க்கு வகுப்பு எண்டால் நான் 8.55க்குத்தான் வீட்டில இருந்து வெளிக்கிடுவன். ஆனால் வேலையுக்கு நாப்பது நிமிசம் காரில போகவேணும். சரியான வாகன நெரிசல் இல்லாட்டிக்கு வீதியில ஏதும் விபத்து நடந்தால் 60 நிமிசம், சிலது 90 நிமிசமும் எடுக்கும். அப்பிடி என்னமும் எண்டால் நான் உடனடியாகவே எண்ட managerக்கு தொலைபேசியில தகவல் சொல்லிபோடுவன் நான் வர நேரம் செல்லும் எண்டு. இதமாதிரி வேலை அதிகாலை ஒருமணி சொச்சம் முடிஞ்சால் வீட்ட வர ஒண்டு நாப்பது ஆகீடும். பிறகு சாப்பிட்டு படுக்க ரெண்டு அரை ஆகீடும். சிலது காலம்பற எட்டு மணிக்கு வகுப்பு இருக்கும். சரியாய் கஸ்டப்பட்டு எழும்பி வகுப்புக்கு ஓடுறது. சிலது சோதினைகள் இருந்தாலும் படிக்க நேரம் இருக்காது. அப்ப என்ன எண்டால் இந்தநேர நெருக்கடியோட வைத்தியசாலைக்கும் சிகிச்சைக்கு போறது எண்டால் அதுமாதிரியான ஒரு துன்பம் இல்லை. எக்கச்சக்கமான நேர நெருக்கடிகள்!

வைத்தியசாலைக்கு நேரத்துக்கு போகாட்டிக்கு பிறகு அவங்கள் எல்லாருக்கும் முடிஞ்சாப்பிறகு கடைசியாய்தான் சிகிச்சை செய்வாங்கள். அது முடிய சிலது இரவு ஏழு மணியாகீடும். ஆனால் நான் வேலையில பின்னேரம் சரியாய் நாலு அரைக்கு நிக்கவேணும். எனக்கு வழமையா பின்னேரம்தான் வைத்தியசாலைக்கு போகவேண்டி இருக்கும். அண்டைக்கு எனது அஞ்சு பல்லுகளையும் பிடிங்கினபிறகு (இதுவும் ஆபத்தான ஒரு சத்திரசிகிச்சைதான்) எனக்கு வேலைக்கும் போகவேண்டி இருந்திச்சிது. எனக்கு சும்மா வேலைக்கு கள்ளம் அடிக்கிற விளையாட்டு சரிவராது. வானம் இடிஞ்சு விழுந்தாலும் நேரம் செல்லவாவது நான் வேலைக்கு போயிடுவன். புடுங்கப்பட்ட அந்த அஞ்சு பற்களில மூண்டு சிக்கலான பற்கள். அதாவது பிடுங்கப்படேக்க அதுகள் எண்ட மேல் அன்னத்தை உடைக்கக்கூடிய ஆபத்து இருந்திச்சிது. ஏன் எண்டால் அதில மேல்தாடையில பல்லுகள் எனக்கு விலகிப்போய் அன்னத்துக்கு கிட்டவாகவும் முளைச்சு இருந்திச்சிது. கடவுளே எண்டு மூண்டுபேர் என்னைச்சுத்தி நிண்டு கவனமாய் பல்லுகளை பிடுங்கிப்போட்டாங்கள். வாயுக்கால இரத்தம் வடிஞ்சுகொண்டு இருந்திச்சிது. நான் வாயை சுத்தம் செய்துபோட்டு காரில அப்பிடியே வேலைக்கு அடிச்சு அள்ளிக்கொண்டு போனன். அங்கபோனால் அவன் manager எனக்கு வாயுக்கால ரத்தம் வாறதை பார்த்துப்போட்டு பேசினான் 'ஏன் வந்தனி' எண்டு. 'சரி அப்ப போயிட்டு வாறன்' எண்டு managerக்கு சொல்லிப்போட்டு கடை ஒண்டுக்குபோய் தேவையான மருந்துகளை வாங்க்கொண்டு வீட்ட வந்தன்.

இதுக்கு பிறகு எனக்கு மேல், கீழ் தாடை பற்களை சுத்தி Braces போடப்பட்டிச்சிது. Braces போடப்பட்டதன் நோக்கம் என்ன எண்டால் என்னை தாடை அறுவைச்சிகிச்சைக்கு (Jaw Surgery) ஏற்றவகையில தயார் செய்யுறதுக்கு. மாதத்துக்கு ஒருக்கால் வைத்தியசாலையுக்கு போகவேணும். அங்க Bracesஐ சரிப்படுத்திவிடுவாங்கள். இப்பிடி 2004ம் ஆண்டில இருந்து 2006 மார்கழி மட்டும் போய்க்கொண்டு இருந்தன். இடைக்கிடை வழமையான பல் சுத்திகரிப்புக்கள், அடைப்புக்களும் அங்க எனக்கு நடந்திச்சிது. குழந்தைகள் வைத்தியசாலையில இருக்கிற மருத்துவர்கள், வேலை செய்யுற ஆக்கள் எண்டு எனக்கு எல்லாரும் நண்பர்களாய் வந்திட்டீனம். அவையளோட குடும்பவிசயம் பற்றி எல்லாம் கதைக்கிற அளவுக்கு நட்பு வளர்ந்து இருந்திச்சிது. அத்தோட அங்க எல்லாருமே எப்பவும் கலகலப்பாய் கதைச்சு பகிடிவிட்டுக்கொண்டு இருப்பீனம். நோய்வாய்ப்பட்ட குழந்தைகளும் கவலைகளை மறந்து இருக்குங்கள். சிலது எனக்கு சிரிப்பாய் இருக்கும் என்ன எண்டால் மூண்டு நாலு வயசு குழந்தைகள் நானும் அவையளோட அவையிண்ட இடத்தில சிகிச்சையுக்கு போய் நிக்கிறதை வினோதமாய் பார்ப்பீனம். எண்ட வைத்தியர் என்னை 'பெரிய குழந்தை' எண்டு இருந்திட்டு பகிடியாய் கூப்பிடுவார்.

2006ம் ஆண்டு எனது பொன்னாளுக்கு திகதி குறிக்கப்பட்டிச்சிது. அதாவது, டொரண்டோவில இருக்கிற இன்னொரு வைத்தியசாலையில தாடை அறுவை சிகிச்சையை நான் 2007தை மாதம் பெறுகிறதுக்கு ஒழுங்குகள் செய்யப்பட்டிச்சிது. அது மிகப்பெரிய திட்டம். ஏராளம் கடதாசிகள் நிரப்பவேண்டி இருந்திச்சிது. பிறகு காசு ஒழுங்குபடுத்தவேணும். நான செலவில 25% மட்டும் செலுத்தவேண்டி இருந்திச்சிது. எண்டாலும் அது $2,500 சொச்சம் வந்திச்சிது. பிறகு இதர உடல்சோதனைகள், Impressions, Lab works, pictures எண்டு விதம்விதமாய் நிறைய விளையாட்டுக்கள். உதை எப்பிடி சொல்லாம் எண்டால் சிறீ லங்காவில இருந்து கனடாவுக்கு வாறதுக்கு வீசா எடுக்கிறமாதிரியான நிலமை எண்டு சொல்லலாம்.

சத்திரசிகிச்சைக்கு முன்னதாய் சத்திரசிகிச்சை நிபுணர்கள், அவரிண்ட குழு எல்லாரும் என்னோட வந்து கதைச்சு இருந்திச்சீனம். தாங்கள் என்ன செய்யப்போறீனம் எண்டு சொல்லிச்சீனம். இதில இருக்கிற ஆபத்து, மற்றும் வரக்கூடிய பின்விளைவுகள் பற்றி சொல்லிச்சீனம். சிகிச்சையில எனக்கு என்ன செய்ய தீர்மானிச்சீனம் எண்டால் எண்ட இடுப்பில இருந்து சிறிய எலும்பு ஒண்டை வெட்டி எடுத்து அதை எண்ட மேல்தாடையில முன்பக்கத்தில ஒட்ட இருந்திச்சீனம். ஏன் எண்டால் எனக்கு மேல்தாடையில பற்கள் திடமாய் நிக்கிறதுக்கு எலும்பு குறைவாய் இருந்திச்சிது. மிச்சம் என்ன எண்டால் எண்ட கீழ்த்தாடையை வெட்டி பின்னுக்கு கொண்டு போறது. இதுமாதிரி எண்ட மேல்தாடையை வெட்டி முன்னுக்கு கொண்டு வாறது. எல்லாத்தையும் கேட்க வயித்தை கலக்கிச்சிது. சரி.. முகத்தை மறுசீரமைக்கிறது எண்டு ஆசைப்பட்டு விடாமுயற்சியோட காரியத்தில இறங்கியாச்சிது.. இனி யோசிக்க இல்லாட்டிக்கு கவலைப்பட ஒண்டும் இல்லை எண்டுபோட்டு அமைதியாகீட்டன். ஆனால்..

இந்த விசயங்களை எல்லாம் வீட்டில கேட்ட உடன சனம் நல்லாய் குழம்பீட்டுதுகள். எனக்கு செத்தவீடு செய்யாதகுறை எண்டு சொல்லலாம். ஏற்கனவே நான் மூக்கில செய்த மூண்டு சத்திரசிகிச்சைகள் காரணமாய் வீட்டில எல்லாரும் என்னில கோவிச்சுக்கொண்டு இருந்திச்சீனம். அவங்கள் உடம்பை வெட்டிக்கொத்தி விளையாடுறாங்கள் எண்டு. உன்னில என்ன பரிசோதனை - experiment செய்து பழகப்போறாங்களோ எண்டு ஆளாளுக்கு கத்த துவங்கீட்டீனம். இது எல்லாம் உனக்கு தேவை இல்லை. இப்ப இருக்கிறது காணும் - இப்ப இருக்கிறதே எல்லாம் ஒழுங்காய் வடிவாய் இருக்கிது எண்டு ஒரு பக்கத்தால அறிவுரை. பிறகு அரைகுறையாக விசயம் அறிஞ்ச சொந்தக்காரர்களிண்ட அறிவுரைகள் எண்டு ஒரே ரணகளமாய் போயிட்டிது. நான் ஒவ்வொருத்தரா அக்காமாருக்கு எல்லாம் விளங்கப்படுத்தி எல்லாரையும் ஒருமாதிரி சமாதானம் செய்துபோட்டன். 'நான் உனக்கு சமைச்சு சமைச்சு போடுறன். நீ திண்டுபோட்டு அவங்களுக்கு இரத்ததை கொண்டுபோய் குடு' எண்டு அம்மா கோவத்தில கத்திக்கொண்டு இருந்தா.

இஞ்ச ஒரு விசயம் சொல்லவேணும் என்ன எண்டால்.. சில விசயங்களை ஆக்களுக்கு விளங்கப்படுத்த ஏலாது. அதை அனுபவத்திலதான் அறிய ஏலும். நான் ஒவ்வொருவிசயம் பற்றியும் தனிப்பட ஆராய்ச்சிகள் செய்து இருந்தன். எனக்கு இப்பிடி ஒரு சிகிச்சை செய்யப்போறாங்கள் எண்டு அறிஞ்சஉடன நான் வலைத்தளத்திலையும் போய்த்தேடி அதுபற்றி பல தகவல்கள் பெற்று இருந்தன். இதனால எனக்கு பயம் வாறது கொஞ்சம் குறைஞ்சிது. சும்மாய் சோம்பேறியாய் இருந்தால் ஒரு விசயமும் நடக்காது. சில நன்மைகளை பெறுகிறது எண்டால் தற்காலிகமாக சில தீமைகளை அனுபவிக்க வேணும். எனக்கு நீண்ட கால நோக்கில பார்க்கேக்க நான் ஆறு வருசங்களை, எண்ட நேரத்தை, காசை செலவளிச்சு ஆறு சிகிச்சைகளை செய்தது நல்லவிசயமாகவே - சரியாகவே தெரியுது. வாழ்க்கை ஒரே ஒரு வாழ்க்கை. அதை சரியான முறையில கொண்டுசெல்லவேணும் எண்டு நான் நினைச்சு இருந்தன். மறுசீரமைப்பு சிகிச்சைகள் நான் வாழ்க்கையில முன்னேற உதவும் எண்டு உறுதியாய் நினைச்சு இருந்தன். நான் எதிர்பார்த்தபடியே இப்ப ஆறு வருச போராட்டத்துக்கு பிறகு பலவிதமான நன்மைகளை என்னால பெறக்கூடியதாக இருக்கிது.

திரும்பவும் தாடை அறுவை சிகிச்சை பற்றி வாறன். எல்லா ஒழுங்குகளும் முடிஞ்சிது. சத்திரசிகிச்சையுக்கு வரேக்க முதல்நாள் இரவு எட்டுமணியுக்கு பிறகு ஒண்டும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது எண்டு சொல்லி இருந்தாங்கள். அதுக்கு ஏற்றமாதிரி நான் தயாராய் போனன். போகேக்க நான் தனியத்தான் போனனான். ஆனால்.. மூக்கில சிகிச்சை செய்யேக்க முதல்தரமும், ரெண்டாம் தரமும் அப்பாவும், மூண்டாம்தரம் அண்ணியும் (ஒன்றுவிட்ட அண்ணாவிண்ட) வந்து இருந்திச்சீனம். முதல்தரம் சிகிச்சை முடிஞ்சு வீட்டபோகேக்க பெரிய ஊர்வலம் மாதிரி போனது. அக்கா, அத்தான், அம்மா எண்டு எல்லாரும் பதறி அடிச்சு வைத்தியசாலையுக்கு வந்திட்டீனம். நான் ஆக்கள் குழம்பக்கூடாது எண்டு வைத்தியசாலையுக்கு என்னை பார்க்க யாராச்சும் வரப்போறம் எண்டு சொன்னால் அதை விரும்புறது இல்லை. அவசரம் இல்ல, பிறகு ஆறுதலாய் வீட்ட வாங்கோ எண்டு அவையுக்கு சொல்லிறது.

அட... நான் கனடாவில நடந்த முதல் மூண்டு சத்திரசிகிச்சைகளும் நடக்கேக்க நடந்த சில விசயங்களை உங்களுக்கு சொல்ல மறந்துபோனன். அது என்ன எண்டால்.. வைத்தியசாலையுக்கு போன உடன கையில அடையாளப்படுத்திற மட்டைகளை கொழுவி உடுப்புக்களை எல்லாம் மாத்தி சத்திரசிகிச்சை செய்யப்படேக்க உடுக்கிற உடுப்புக்களை போட எல்லாம் சொல்லுவீனம். எனக்கு ஆரம்பத்தில சத்திரசிகிச்சையுக்கு போடுற உடுப்பை பார்க்க சரியான சிரிப்பாய் இருந்திச்சிது. தலையுக்கு ஒரு தொப்பி, காலுக்கு ஒரு கவசம், உடம்பை சுத்தி வித்தியாசமான ஒரு அங்கி எண்டு கொஞ்சம் பகிடியாய் இருந்திச்சிது. 'என்னையா கொடுமை' எண்டு எல்லாத்தையும் ஏதோ போட்டன். வினோதமான உடுப்புகளோட எண்ட கோலத்தை பார்த்து அப்பா சிரிச்சுக்கொண்டு நிண்டார். அந்த உடுப்புக்களை எல்லாம் போட்டுக்கொண்டு கண்ணாடியில என்னை பார்க்க எனக்கும் சிரிப்பாய் இருந்திச்சிது.

கையில மயக்கமருந்து ஊசியை ஏத்திப்போட்டு வாயுக்க ஒட்சிசன் குழாயை வச்சுப்போட்டு மூச்சை நல்லாய் இழுத்துவிடு எண்டு சொல்லுவாங்கள். ஒரே இழுவைதான். ஆட்டம் குலோஸ். அங்கால மிச்சம் என்ன நடந்திச்சிது எண்டு சிகிச்சை எல்லாம் முடிஞ்சு மயக்கம் தெளியேக்கதான் தெரியும். எனக்கு முதலாவது சத்திரசிகிச்சை செய்யேக்க எண்ட கையில மயக்கமருந்து ஊசிய ஏத்த ஒரு தாதி எண்ட கையை பிடிக்க - அவவுக்கு பின்னால நிண்ட இன்னொரு தாதி முகத்தை என்னமோ மாதிரி பிடிச்சுக்கொண்டு பயத்தில அங்காள திரும்பீட்டா. அவவுக்கே அந்த கொடுமையை முகம் குடுத்து பார்க்க சகிக்க இல்லை போல இருக்கிது. பிறகு சுவாரசியமான சம்பவம் ஒண்டு என்ன எண்டால் மூக்கில முதல் தரமும் ரெண்டாம்தரமும் எனக்கு சத்திரசிகிச்சை செய்யப்படேக்க நான் மயக்கம் தெளிஞ்சு எழும்பேக்க என்னை கவனிச்ச தாதி ஒரே ஆள்தான். இந்த ரெண்டும் வேற வேற வைத்தியசாலைகளில நடைபெற்று இருந்திச்சிது. நான் மயக்கம் தெளிஞ்சு எழும்பின உடன அவவை பார்த்து போனமுறை எனக்கு சத்திரசிகிச்சை செய்யப்பட்டாப்பிறகும் நீங்கள்தான் என்னை கவனிச்சனீங்கள் எண்டு சொன்னன். அவவுக்கு நல்ல சந்தோசம். தானும் என்னை நினைவில வச்சு இருந்ததாய் சொன்னா. மற்றது, படுபாவிகள் முதல்தரம் நான் சத்திரசிகிச்சையுக்கு உள்ளாக்கப்படேக்க ஒரு சின்ன தவறு செய்து போட்டாங்கள். எண்ட ஒரு கையை சரியாக சத்திரசிகிச்சை செய்யுற கட்டில கிடத்தி வைக்க இல்லை. அது கட்டிலுக்கு வெளியால வந்து சும்மா தொங்கிக்கொண்டு நிண்டு இருக்கிது மூண்டு அரை மணித்தியாலங்களாய். சத்திரசிகிச்சை முடிஞ்சகையோட எனக்கு வேதனை மூக்கைவிட கையிலதான் அதிக அளவில இருந்திச்சிது. அந்த கை நோ (உலுக்கு) மாறி முற்று முழுதாய் சுகம் பெற ரெண்டு மூண்டு கிழமைகள் ஆச்சிது. இதுக்கு பிறகு நான் சரியான கவனம். மயக்கம் ஆக முன்பே தாதிமாரிட்ட சத்திரசிகிச்சை நடக்கேக்க எண்ட உடம்பு பகுதிகள் தாங்குப்படாமல் - நசிபடாமல் கவனமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள சொல்லிறது. எண்டகை சத்திரசிகிச்சையில தாங்குப்பட்டது பற்றி நான் வைத்தியரிட்ட பிறகு முறைப்பாடு செய்தன். அவர் மன்னிப்பு கேட்டு இனிமேல் அப்பிடி நடாக்காமல் பார்த்துக்கொள்ளிறதாய் சொன்னார்.

அப்ப இனி திரும்பவும் தாடை சத்திரசிகிச்சையுக்கு வாறன். காலம்பற எட்டுமணிக்கு எனக்கு சத்திரசிகிச்சையுக்கு நேரம் குறிக்கப்பட்டு இருந்திச்சிது. எங்கடவீட்டுக்கு பக்கத்திலதான் வைத்தியசாலை. நான் வீட்டில இருந்து நடந்துதான் போனனான். அஞ்சு நிமிச பொடிநடை.. அப்பா, அம்மாவை காலம்பற கஸ்டப்படுத்தகூடாது எண்டு நான் தனியப்போறன் எண்டு சொன்னன். சிகிச்சை முடிஞ்சாப்பிறகு அவையளை வரச்சொன்னன். அங்கபோனால் எல்லாம் பதியப்பட்டு சத்திரசிகிச்சை அறையுக்குகிட்ட நான் ஏழுமணி சொச்சமே போயிட்டன். அறையுக்கு வெளியால என்னை ஒரு கட்டில கிடத்தி சத்திரசிகிச்சை செய்யப்போற வைத்தியர்மார் நிறையக்கேள்விகள் கேட்டிச்சீனம். தாங்கள் எனக்கு என்ன செய்யப்போறீனம், இதனால எனக்கு கிடைக்கப்போற நன்மைகள், தீமைகள் எண்டு எல்லாத்தையும் பற்றி திரும்பவும் சொல்லிச்சீனம். இறுதியாய் என்னை ஒப்பந்த கடதாசியிலை கையொப்பம் இடச்சொல்லி சொல்லிச்சீனம். அதில என்ன சொல்லப்பட்டு இருந்திச்சிது எண்டால் 'சிலவேளைகளில குறிப்பிட்ட இந்த சிகிச்சை தோல்வியில முடியலாம் இதற்கு நான் உடன்படுகிறன்' எண்டு. எண்ட இடுப்பிண்ட இடதுபக்கத்தில இருந்து எலும்பை வெட்டப்போறம் எண்டு சொன்னார். நான் சொன்னன் வலது பக்கத்தில இருந்து வெட்டச்சொல்லி. இதுக்குபிறகு அப்பிடியே செய்வதாய் சொன்னார். நான் ஏன் அப்பிடி சொன்னனான் எண்டால் எனக்கு இரண்டு பக்கமும் வலம்(பாவிப்பன்) எண்டாலும் நான் இடக்கை, இடக்காலைத்தான் பெரிய வேலைகளுக்கு பாவிக்கிறது. இதனால எனக்கு எண்ட உடம்பிண்ட வலப்பக்கத்தவிட இடப்பக்கம் கொஞ்சம் விசேசம் மாதிரி. காதிலயும் இடப்பக்கத்தில இருந்துதான் முந்தி சிகிசையுக்கு கசியிழையம் வெட்டி எடுக்கப்பட்டிச்சிது.

எண்ட தலையை துணியால சுத்தி பாதுகாப்பு உறை எண்டு ஏதோ சுத்திக்கட்டினார். கிருமித்தாக்குதல் வராமல் இருக்க அப்பிடி செய்யுறதாய் சொன்னார். பிறகு சத்திரசிகிச்சை அறையுக்க கூட்டிக்கொண்டுபோய் கட்டில கிடக்கச்சொன்னார். ஒவ்வொருவிதமான மின்குமிழ்கள், வித்தியாசம் வித்தியாசமான உபகரணங்கள் எண்டு அதைப்பார்க்க பெரிய ஒரு ஆராய்ச்சிகூடம் மாதிரி இருந்திச்சிது. நான் கட்டில நல்லவடிவாய் உடம்பு பாகங்கள் ஒண்டுக்கு அழுத்தம் - தாங்கல் ஏற்படாதவகையில படுத்தன். படுத்த கையோடயே கிடுகிடு எண்டு ஒவ்வொருத்தராய் என்னை சுத்தி ஆக்கள் குவிஞ்சிட்டீனம். நாலைஞ்சு தாதிகள், வைத்தியர்மார் எண்டு என்னைச்சுத்தி ஒரு பெரியகூட்டம். ஒவ்வொருத்தரும் என்னில ஒவ்வொரு வேலையை செய்திச்சீனம். ஒருத்தர் கையில சேலைனை ஏத்த, இன்னொருத்தர் என்னை துணியால போர்த்துமூட, இன்னொருத்தர் Sorry எண்டு சொல்லிப்போட்டு மயக்கமருந்து ஊசியை செலுத்தினார். நான் ஆட்டம் குளோஸ்.

காலம்பற சரியாய் எனக்கு எட்டுமணி சொச்சம் மயக்கமருந்து தரப்பட்டு நான் சுயநினைவை இழந்தன். எனக்கு திரும்பவும் சுயநினைவு வரேக்க இரவு எட்டுமுப்பது மணி. சத்திர சிகிச்சை சுமார் பதினொரு மணித்தியாலங்கள் நடந்து இருந்திச்சிது. எனக்கு நினைவு வரேக்க மிகப்பெரிய வேதனை எண்ட கழுத்தை சுத்தி இருந்திச்சிது. ஏன் எண்டால் ஒட்சிசன் குழாய் மூலம்தான் எனக்கு காற்றோட்டம் செலுத்தப்பட்டிச்சிது. ஒட்சிசன் குழாயை மூக்கு ஓட்டைக்கால விட்டு அப்பிடியே உள்ளுக்க தள்ளி தொண்டையுக்கவிட்டு இருந்திச்சீனம். சுமார் பன்னிரண்டு மணித்தியாலங்கள் தொண்டையுக்க ஒட்சிசன் குழாய் இருந்ததால அந்தப்பகுதி அப்பிடியே சுத்தமாய் வரண்டு போச்சிது. யாரோ கழுத்தை பிடிச்சு நெரிக்கிறமாதிரி மிகவும் வேதனையாய் இருந்திச்சிது. நான் நினைவு வரத்துவங்கின உடனடியாகவே சைகையால Orange juice ஏதாவது தரச்சொல்லி கேட்டன். சரியான தாகமாய் இருந்திச்சிது. கடதாசி ஒண்டு கேட்டு அதில எழுதிக்காட்டினன். எண்ட வாய், தலை எல்லாம் மருத்துவதுணியால சுத்திக்கட்டப்பட்டு இருந்திச்சிது. கதைக்க ஏலாது. எல்லாப்பக்கத்தாலையும் இரத்தம். வாயுகாலதான் மூச்சு எடுக்கவேணும். அதுக்கையும் தடங்கல். மூக்கு முற்றுமுழுதாய் இரத்தம்மூலம் அடைபட்டு போச்சிது.

நான் இப்பவும் வைத்தியரை சந்திக்கேக்க அவரிட்ட சொல்லி பேசுறது. இவங்களுக்கு மண்டையுக்க அறிவு இல்லையா.. ஏன் பன்னிரண்டு மணித்தியாலங்களுக்கு ஒட்சிசன் குழாயை எண்ட தொண்டையுக்க விட்டாங்கள் எண்டு. சரி வேற வழி இல்லைதான். தாடை, வாயுக்க சத்திரசிகிச்சை செய்யேக்க நான் மூச்சுவிட இதுஒண்டுதான் ஒரே ஒரு வழி. ஆனால்... தொண்டை வரண்டு அதில அழற்சி மாதிரிவந்து நான் வேதனைப்படாது இருக்கும்வகையில ஏதாவது செய்து இருக்கலாம் தானே? எனக்கு செய்தது மாதிரியான சத்திரசிகிச்சகையை மாதத்தில அவேள் ஆகக்குறைஞ்சது நாலுபேருக்காவது அந்த வைத்தியசாலையில செய்வீனம். அப்ப நான் துன்பப்படுவதை குறைக்க ஏதாச்சும் செய்து இருக்கலாம் தானே?

சத்திரசிகிச்சை முடிஞ்சகையோட எனக்கு சிகிச்சை செய்த வைத்தியர் ஒருத்தர் வந்து வீட்டில இருந்து ஒருவரையும் காண இல்லை எண்டு சொன்னார். நான் அப்ப அவருக்கு அண்ணாவிண்ட தொலைபேசி இலக்கத்தை எழுதிக்குடுத்தன். நான் அண்ணாவுக்கு இரவு எட்டு அரைக்குபிறகு வரச்சொல்லி சொல்லி இருந்தன். எனக்கும் அவங்கள் இரவு எட்டு அரைக்கு பிறகுதான் Recovery Roomஇல வீட்டுக்காரர் என்னை பார்க்கலாம் எண்டு சொல்லி இருந்தாங்கள். தவிர, நான் பாட்டுக்கேட்க காதிலபோடுற Headphone வாங்கிவரச்சொல்லி அண்ணாவிட்ட சொல்லி இருந்தன். இதனால அவர் ரெண்டு நிமிசம் கழிச்சுத்தான் வந்தார். அண்ணா வந்த உடன வைத்தியர் எனக்கு தாங்கள் சிகிச்சையிலசெய்தது என்ன எண்டு எல்லாம் வடிவாய் விளக்கம் கொடுத்திச்சீனம். பிறகு அண்ணையர் எனக்கு வந்து மிச்சம் விளங்கப்படுத்தினார். சத்திரசிகிச்சை காரணமாய் எண்ட முகம் முற்றிலும் மாறி அகோரமாய் இருந்திச்சிது. அம்மா என்னைபார்த்து அழத்துவங்கீட்டா. அப்பர் அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு தீவிர யோசனையில இருந்தார்.

எனக்கு இந்த பதினொரு மணித்தியால சிகிச்சையில மேல சொன்னமாதிரி இடுப்பில இருந்து எலும்பை வெட்டி எடுத்து மேல்தாடையில பதிச்சு இருந்தாங்கள். கீழ்தாடையை உடைச்சு பின்னுக்கு தள்ளி இருந்திச்சீனம். இதுமாதிரி மேல்தாடை உடைக்கப்பட்டு முன்தள்ளப்பட்டு இருந்திச்சிது. சத்திரசிகிச்சையின் பின்னர் தாடைகள் Titanium ஆணிகள் (Screw) மூலம் நிலைநிறுத்தப்பட்டிச்சிது. இப்ப எண்ட மண்டையோட்டை x-ray படம் பிடிச்சால் அதில பதினைஞ்சு தைத்தேனியம் ஆணிகளை பார்க்கலாம். கீழ்த்தாடையிண்ட பின்பக்கம் ரெண்டு பக்கமுமாக ஆறு ஆணிகள், மேல்தாடையிண்ட பின்பக்கம் ரெண்டு பக்கமுமாக ஆறு ஆணிகள், மேல்தாடையிண்ட முன்பக்கம் மூண்டு ஆணிகள். இது உடம்பில - எண்ட வாழ்க்கையில நிரந்தரமாய் இருக்கும். என்னால அதுகளை உணரமுடியாது. பிரச்சனை ஒண்டும் இல்லை. எண்ட வைத்தியர் இதனால என்னை பலம்பொருந்திய தைத்தேனிய மனிதன் எண்டு பகிடியாய் சொல்லுவார். விமானம் மாதிரி நானும் பலமான ஆளாம் எண்டு.

சத்திரசிகிச்சை நடந்தகையோட மேல்தாடையும், கீழ்தாடையும் கம்பிளாக சுத்திக்கட்டப்பட்டு இருந்திச்சிது. மூண்டு மாதங்களுக்கு வாயை திறக்க ஏலாது எண்டு சொல்லிப்போட்டாங்கள். சாப்பாடு எல்லாம் உதட்டை தள்ளிப்பிடிச்சுக்கொண்டு திரவமாய் எதையாவது ஊத்தவேண்டியதுதான். பற்களும் முழுதுமாய் மினுக்க ஏலாது. ஆக முன்பக்கம் மட்டும் தூரிகையால மேலால தடவிவிடவேண்டியதுதான். வாய் எல்லாம் உள்பக்கம் தையல்கள் போடப்பட்டு இருந்திச்சிது. வாயுக்க என்ன இழவு நடந்து இருக்கிது எண்டு சரியாய் பகுத்தாராய்ஞ்சு கண்டு பிடிக்க எனக்கு ரெண்டு கிழமைகள் எடுத்திச்சிது. தாடை அறுவைச்சிகிச்சை நடந்து முதல் இரண்டு மாதங்கள் நான் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. பல்லும் மினுக்க ஏலாது.. ஒருபக்கத்தால அருவருப்பு. பிறகு சாப்பிடவும் ஏலாது.. வாயை கொஞ்சம் அங்கால இங்கால ஆட்டினால் உயிர்போறமாதிரி வேதனை. ஒரு கப் சூப் குடிக்கிறது எண்டால் எனக்கு சுமார் ஒரு மணித்தியாலங்கள் வேணும். பிறகு வாயை துப்பரவு செய்ய அரை மணித்தியாலங்கள் வேணும். இதனால நான் சாப்பிடுவதையே வெறுத்தன். வீட்டைவிட்டு வெளிக்கிடவும் ஏலாது. ஏன் எண்டால் முகம் எல்லாம் வீங்கி அகோரமாய் இருந்திச்சிது. சனம் கண்டாலே பயந்திடுங்கள். இந்தச் சந்தர்ப்பத்திலதான் நான் யாழ் இணையத்திலையும் இணைஞ்சது. நான் யாழில மாப்பிளை எண்டுற பெயரில கலகலப்பாக எழுதுற காலத்தில எண்ட வாழ்க்கை நிலமை இப்பிடித்தான் இருந்திச்சிது.

கடைசியில மிகுந்த வேதனைகளுக்கு பிறகு துன்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் குறையத்துவங்கிச்சிது. வாயில இருந்த கம்பிவேலி அறுக்கப்பட்டிச்சிது. நான் வாயை நல்லாய் திறந்து விருப்பமான சாப்பாடுகளை சாப்பிடக்கூடியதாய் இருந்திச்சிது. வீட்டிக்கு ஒவ்வொரு நாளும் நிறைய விருந்தினர்களாய் இருந்திச்சிது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமான சத்துணவுகளோட என்னை பார்க்க வந்து இருந்திச்சீனம். ஆனால் சாப்பிடுற நிலமையிலதான் நான் அப்ப இருக்க இல்லை (சிகிச்சை முடிந்த உடன). ஒவ்வொரு மாதமும் ஆகக்குறைஞ்சது ஒரு தடவையாவது வைத்தியரிட்ட போய் பரிசோதனை செய்யவேண்டி இருந்திச்சிது. இப்படி தொடர்ச்சியான சிகிச்சைகளுக்கு பிறகு அடுத்த சத்திர சிகிச்சை சுமார் ஏழு மாதங்களுக்கு முன்னம் போனவருசம் நடந்து இருந்திச்சிது.

இந்த சிகிச்சையில என்ன செய்தாங்கள் எண்டால் வாயுக்க உள்ளுக்கையே எலும்பை வெட்டி மேல்தாடையில பொருத்தினாங்கள். தவிர, நிரந்தர பல்லு ஒண்டை கீழ்த்தாடையில பொருத்துறதுக்கு தைத்தேனியம் ஆணி அறையப்பட்டிச்சிது. எனக்கு கடைசி சத்திர சிகிச்சை போன வெள்ளிக்கிழமை நடந்து இருந்திச்சிது. மீண்டும் இன்னொரு தடவை வாயுக்கால உள்ளுக்கையே எலும்பை (கீழ்தாடையிண்ட உள்பக்கமாக வெட்டி எடுத்துச்சீனம்) வெட்டி எடுத்து மேல்தாடையில ஒட்டி, அதேநேரம் மேல்தாடையில நிரந்த பல் ஒன்றை பொருத்திறதுக்கு தைத்தேனியம் ஆணி ஒண்டை மேல புதைச்சு விட்டிச்சீனம் (Implant). எனக்கு கடைசி இரண்டு சத்திரசிகிச்சைகளும் கொஞ்சம் வித்தியாசமான அனுபவம். ஏன் எண்டால் எனக்கு செய்யப்பட்ட முதல் ஆறு சத்திரசிகிச்சைகளும் என்னை முழுதுமாக மயக்கி நான் சுயநினைவு இல்லாத நிலையில செய்யப்பட்டு இருந்திச்சிது. ஆனால்.. கடைசி இரண்டு சத்திரசிகிச்சைகளிலையும் Local Anesthetics பாவிக்கப்பட்டிது. எனக்கு என்னமோ முற்றுமுழுதாய் எங்களை மயக்கி செய்யுற சத்திர சிகிச்சைகள் பரவாயில்லை போல இருக்கிது. ஏன் எண்டால் உடம்பிண்ட ஒரு பகுதியை மாத்திரம் மயக்கவச்சு சத்திரசிகிச்சை செய்யேக்க அவங்கள் என்னத்தை வெட்டிக்கொத்துறாங்கள், எதைப்பற்றி எல்லாம் கதைக்கிறாங்கள் எண்டுறதை காதால கேட்டுவிளங்கேக்க - உணரேக்க சரியான விசறாய் இருக்கும். சிலது வைத்தியர்மாரே தங்களுக்க - தாங்கள் சத்திரசிகிச்சை செய்யேக்க வருகின்ற பிரச்சனைகளை சொல்லி உரையாடேக்க... ஐயோ இது தோல்வியில முடியப்போகிதோ எண்டு கொஞ்சம் பயமாய் இருக்கும்.

எனக்கு கடைசியாய் போன வெள்ளிக்கிழமை சத்திரசிகிச்சை நடந்தாப்பிறகு வைத்தியர்மாரில சரியான கோவம். முதலாவது, சின்னப்பிழை ஒண்டு விட்டுப்போட்டீனம். ஏழுமாதத்துக்கு முன்னம் வாயுக்க தாடையுக்கு அடியில எலும்பை வெட்டி எடுத்தவேள்தானே? அப்ப தாடையிண்ட இடப்பக்கமாய் வெட்டி எடுத்துச்சீனம். போனவெள்ளிக்கிழமை அந்தவிசயத்தை மறந்து திரும்பவும் இடதுபக்கமே வெட்டிபோட்டீனம். தாடைக்கு கீழ இடதுபக்கம் திரும்பவும் வெட்டி உள்ளுக்க பார்த்தபிறகுதான் அவையுக்கு தெரியும் இன்னும் எலும்பு அதுக்க வடிவாய் வளர இல்லை எண்டு - அதுக்க இருக்கிற எலும்பு காணாது எண்டு. அதுக்குபிறகுதான் பாவிகள் தாடையிண்ட வலதுபக்கத்தை திறந்து திரும்பவும் எலும்பை வெட்டினாங்கள். எருமைமாடுகள் தேவையில்லாமல் எண்ட இடதுபக்க தாடையுக்கு கீழவெட்டி இப்ப இடப்பக்கமாய் முகம் கொஞ்சம் வீங்கிப்போச்சிது. உள்ளுக்க ஆழமாய் தேவையில்லாத காயம். தாடையை வெட்டி உள்ளுக்கால எலும்பு எடுக்கிறது எண்டால் தெரியும்தானே காயம் எவ்வளவு ஆழமாய் இருக்கும் எண்டு. போனவருசம் தாடையில எலும்பு வெட்டி எடுக்கேக்க வைத்தியர்மார் தாங்கள் இடதுபக்க தாடையுக்கு கீழ இருந்து வெட்டி எடுத்தனாங்கள் எண்டு குறிச்சு வச்சு இருக்கவேணும். ஆனால்.. அவையுண்ட கவனக்குறைவால கடைசியில எனக்குத்தான் இப்ப தாடையிண்ட ரெண்டு பக்கங்களும் வேதனை. எண்ட தலமை மருத்துவரை சந்திக்கேக்க இதுபற்றி முறைப்பாடு செய்யுறதாய் இருக்கிறன் (எனக்கு நல்லவிதமாய் பல சிகிச்சைகள் செய்து எண்ட வாழ்க்கையையே மாற்றிஅமைச்ச அவர்களில மரியாதை, நன்றிக்கடன் எல்லாம் எனக்கு இருக்கிது. ஆனால், இந்தமுறைப்பாடு இவேள் கவலையீனமாக இதே பிழையைவிட்டு எதிர்காலத்தில குழந்தைகள் எவரையாவது வேதனைப்படுத்துறதை தடுக்கத்தான்).

மற்றது என்ன எண்டால் சத்திரசிகிச்சைகள் செய்யேக்க வித்தியாசம், வித்தியாசமான Proceduresஐ பாவிப்பீனம். தவிர, உளவியல் ரீதியாகவும் நோயாளியை கட்டுப்படுத்த வித்தியாசம், வித்தியாசமான நுட்பங்கள் எல்லாம் பாவிப்பீனம். உண்மையில அப்பிடி எல்லாம் செய்யுறது சரியானதுதான். ஏன் எண்டால் சும்மா ஒரு கதையுக்கு வையுங்கோ. ஒருவருக்கு சத்திரசிகிச்சை துவங்கி அது நடந்துகொண்டு இருகேக்க திடீரெண்டு அவர் ஆவேசப்பட்டு எழும்பி, தான் உடன வீட்ட போகபோறன் எண்டு சொன்னால் என்ன செய்யுறது? முக்கியமாய் இது குழந்தைகள் வைத்தியசாலை. குழந்தைகள் என்ன நேரத்தில என்ன செய்யுங்கள் எண்டு சொல்ல ஏலாது. சத்திரசிகிச்சை நடந்துகொண்டு இருக்கேக்க அதுகள் திடீரெண்டு ஏதாவது குழப்படிகள் விட்டால் நிலமை பாரதூரமாகிவிடும். இப்பிடியான பல சிக்கல்களை சமாளிக்க மருத்துவர்கள் ஏராளாமான பல நடைமுறை செயற்பாட்டு ஒழுங்குகளை எல்லாம் வச்சு இருக்கிறீனம்.

இதில கொஞ்சம் சுவாரசியமான சம்பவம் என்ன எண்டால்.. போனவெள்ளிக்கிழமை நான் அந்த சத்திரசிகிச்சை செய்யப்படுகிற இருக்கையில கிடக்கிறன். முதலில எனக்கு வழமையாய் தாறமாதிரி மெல்லிய விறைப்பு ஊசிகள் வாயுக்க அடிக்கப்பட்டிச்சிது (போனமுறை ஆடு மாட்டுக்கு போடுற ஊசிமாதிரி அரை அடி சொச்சம் நீளமான பெரிய ஊசியால வாய் எல்லாம் குத்தோ குத்து எண்டு குத்தி வேதனையை ஏற்படுத்தி இருந்திச்சீனம். கற்பனை செய்து பாருங்கோ. உங்கட வாயிண்ட மேல்முரசில ஊசியால குத்தினால் எப்பிடி இருக்கும்? சிரிப்பு வருமோ? ஆனால்...இந்தமுறை அப்பிடி நடக்க இல்லை). இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமான அனுபவம். வாயை விறைக்கச் செய்துபோட்டு என்னை சுமார் பதினைஞ்சு நிமிசம் தனியாக இருக்கவிட்டுப்போட்டு எல்லாரும் தங்கடபாட்டுக்கு போயிட்டீனம். பிறகு கொஞ்ச நேரத்தில ஒருத்தர் வந்து எண்ட மூக்கில ஒட்சிசன் குழாய் ஒண்டை பொருத்திப்போட்டு கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கும் எண்டு சொல்லிப்போட்டு போயிட்டார். நானும் அட ஒட்சிசன் குழாய் எண்டுபோட்டு பேசாமல் இருந்திட்டன். ஆனால்... கடவுளே.. என்ன அநியாயம் நடந்திச்சிது எண்டால்... கொஞ்சநேரத்தில நான் நினைச்சன் நான் சாகப்போறன் ஆக்கும் எண்டு. பாவிகள் அந்தகுழாயுக்கு உள்ள இருந்தவிசயம் பற்றி எனக்கு முன்னதாய் ஒண்டும் சொல்ல இல்லை. அந்த குழாய் மூலம் மூக்குக்க காத்துபோய்க்கொண்டு இருந்திச்சிது. திடீரெண்டு உடம்பில உணர்வுகள் ஒண்டும் இல்லாமல் போச்சிது. ஆக கண் மாத்திரம் தெரிஞ்சிது. காது கேட்கிறதும் குறைஞ்சிட்டிது. விரலில நாடி, இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம் எல்லாம் அவதானிக்க கருவி பொருத்தி இருந்தாங்கள். 72 இல இருந்த துடிப்பு திடீரெண்டு 144க்கு போயிட்டிது. நான் நினைச்சன் சரி எண்ட கதை முடிஞ்சிது எண்டு ஆக்கும். ஏன் எண்டால் இப்பிடி எனக்கு திடீரெண்டு மயக்கம் வரப்போகிது எண்டு இவங்கள் எனக்க ஆரம்பத்தில சொல்ல இல்லை. உங்களுக்கு சிலவேளைகளில இதை வாசிக்க சிரிப்பாய் இருக்கலாம்...

நான் செத்துக்கொண்டு இருக்கிறன் எண்டு எனக்குள்ள நினைச்சு... எனது அன்புக்குரியவர்களை ஒவ்வொருத்தராய் நினைச்சன். எண்டாலும் நானும் கடைசிமட்டும் விடுறதாய் இல்லை. பெரிய ஒரு போராட்டத்துக்கு பிறகு எண்ட கால்களை ஒரு மாதிரி ஆட்டி அசைச்சு அதில வெற்றிபெற்றன். அட கால் ஆடுது எண்ட உடன நம்பிக்கை வந்திட்டிது. எண்டாலும் பயம் போக இல்லை. நான் அந்தமாதிரிமுளுசி அந்தரப்பட்டுக்கொண்டு இருக்கிறதை அவதானிச்சுப்போட்டு ஒரு வைத்தியர் எனக்கு கிட்டவந்து ஒட்சிசன் குழாயுக்கால ஒட்சிசனோட நைத்திரஜனும் எனக்கு தரப்படுகிது. இதனால எனக்கு மயக்கம் வரும் எண்டு சொன்னார். 'அட கருமமே இதை முதலிலயே சொல்லக்கூடாதா' எண்டு நான் அவையளை எனக்குள்ள திட்டிப்போட்டு, சரி இனி தாங்க ஏலாது எண்டு கண்ணை மூடீட்டன். கண்ணை மூடினனோ... இந்தா எண்டு டங் எண்டு சொல்லிவச்சமாதிரி திடீரெண்டு நான் இருந்த சத்திரசிகிச்சை அறையுக்க நாலைஞ்சுபேர் வந்திச்சீனம். ஒருத்தர் என்னை துணியால போர்த்துமூடினார். இன்னொருத்தர் ஒளிவழங்கலை ஒழுங்குபடுத்தினார். சில நிமிசங்களில எண்ட வாயுக்க வெட்டிக்கொத்த துவங்கிச்சீனம். எனக்கு பெரிய அளவில வெட்டுக்கொத்து நடக்கேக்கேக்க - அந்த இழவுக்காத்து - அது அதிக அளவில மூக்குக்காலபோய் சுயநினைவு இடைக்கிடை இல்லாமல் போச்சிது. சிலது எனக்கு வலி ஏற்படுறதை குறைக்க - வாயுக்க எலும்பை வெட்டேக்க ரெண்டுபேர் எண்ட மார்பை இறுக்கமாய் அழுத்திச்சீனம். நான் நினைக்கிறன் என்ன எண்டால் ஒவ்வொண்டும் Local anesthetic - மருத்துவ முறைகளில இருக்கிற ஒவ்வொருவிதமான ஒழுங்குகள் - procedures எண்டு.

என்னதான் வித்தைகளை அவையள் செய்தாலும் ஓரிருமுறை எனக்கு சரியாய் வலிச்சிது. ஒருக்கால் நான் 'ஆ' எண்டு சத்தமாய் ஒரு கத்தல்போட்டன். ஆனால் குரல் பெரிசாய் வெளியில வர இல்லை. கண்ணை துணியால மூடிமறைச்சு இருந்திச்சீனம். இதனால என்னால வெளியில என்ன நடக்கிது எண்டு பார்க்க முடிய இல்லை. ஆனால் உணரமுடிஞ்சிது. எண்ட கீழ் தாடை அடியில வெட்டி எடுக்கப்பட்ட எலும்பை மேல்தாடையில ஒட்டுறதுக்காக அதை அளவாக வெட்டேக்க... நாங்கள் வீட்டில Chicken, fish எலும்புகளை கத்தி இல்லாட்டிக்கு கத்திரிக்கோலால வெட்டேக்க கேட்கிற டக் டக் எண்டுற சத்தம் கேட்டிச்சிது. சரியான எரிச்சலாய் இருந்திச்சிது. பாவிகள் எண்டை எலும்பை ஆடு, மாட்டிண்ட எலும்புமாதிரி வெளியில வெட்டி எடுத்து வச்சு cut பண்ணி விளையாடுறாங்களே எண்டு. மிகவும் பிரகாசமான வெளிச்சம் போடப்பட்டு இருந்திச்சிது. இதனால சில சந்தர்ப்பங்களில வெளியில என்ன நடக்கிது எண்டு துணியுக்கால வடிவாய் பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைச்சிது. ஆனால்... நான் பிறகு எண்ட இரத்தம், சதை, எலும்புகளை எண்ட கண்ணாலையே ஏன் பார்ப்பான்... இந்தக்கருமங்கள் எல்லாம் வேண்டாம் எண்டு நினைச்சுப்போட்டு கண்ணை இறுக்கிமூடிக்கொண்டு இருந்திட்டன். கடைசி சத்திரசிகிச்சையில ஒட்சிசன் காத்து குழாய் மூலம் எனக்கு கிடைச்ச அதிரடி அனுபவம்தான் மிகவும் பெரியதொரு 'இழவு' அனுபவமாய் எனக்கு இருந்திச்சிது. என்னமோ கடைசியில ஒருமாதிரி எல்லாம் வெற்றிகரமாய் முடிஞ்சிது. வருசக்கணக்காக வேதனைப்பட்டு இருந்தாலும்... கடைசியில பட்டவேதனைகளுக்கு பலன்கிடைச்சு இருக்கிது.

மற்றது, இனி தாயகம் பற்றி வந்த எண்ணங்கள். எனக்கு ஒவ்வொரு வெட்டுக்கொத்தல் நடக்கேக்கையும் நான் தாயகத்தில இருக்கிற மக்கள் குண்டடிபட்டு இருக்கேக்க எவ்வளவு வேதனைப்படுவீனம் எண்டுறதை நினைச்சுப்பார்த்தன். இவ்வளவு வளர்ச்சி அடைஞ்ச நாட்டில மிகுந்த பாதுகாப்போட - கட்டுப்பாட்டு நிபந்தனையுக்கு கீழ எனக்கு சத்திரசிகிச்சை நடக்கேக்கயே என்னால அந்த வேதனைகளை, துன்பங்களை தாங்கிக்கொள்ள ஏலாமல் இருக்கிது. ஆனால்.. தாயகமக்களுக்கு எதுவித பாதுகாப்பும் இல்லாமல் காயப்பட்டு துடிதுடிக்கேக்க - உடம்புவேதனை ஒருபக்கம் இருக்க... மனதில சாவுபற்றி எத்தினவிதமான உணர்வுகள் எல்லாம் தோன்றி எவ்வளவு எல்லாம் துடிதுடிச்சுப்போய் இருப்பீனம் எண்டு நினைச்சுப்பார்க்க மிகவும் வேதனையாய் இருந்திச்சிது. ஆனானப்பட்ட கனடாவிலயே ஒரு கட்டுப்பாட்டு நிலமையில ஓர் சத்திரசிகிச்சை செய்யப்படேக்க இத்தனையோ பல துன்பங்களை அனுபவிக்கவேண்டி இருக்கிது. தாயகத்தில் குண்டுஅடிபட்டு - அவயவங்களை இழந்தவர்கள், இறந்தவர்கள் எல்லாம் எப்பிடி துடிதுடித்துப்போய் இருப்பீனம் எண்டு கற்பனை செய்தும் பார்க்க முடிய இல்லை. அவர்கள் அங்க அனுபவிக்கிற பேரவலங்களோட ஒப்பிடேக்க நான் அனுபவிச்ச அவலங்கள் ஒரு ஜுஜுப்பிதான்.

கடைசியாய்.... ஒருவிசயம்... எங்களுக்கு கிடைச்சு இருக்கிறது ஒரே ஒரு வாழ்க்கை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள். சிலர் அழகான உடலை பெற்று இருப்பீனம். உடலிண்ட ஒவ்வொரு பகுதியுமே சிலைமாதிரி அற்புதமாக வடிக்கப்பட்டு இருக்கும். ஆனால்... திடீரெண்டு அவர்கள் நோய்வாய்ப்படக்கூடும். இறந்தும் போகக்கூடும். அதாவது எல்லாருக்குமே குறை எண்டு, அவலங்கள் எண்டு ஒண்டு எப்பவும் இருந்துகொண்டுதான் இருக்கும். மற்ற ஆளுக்கு ஒரு குறைபாடு இருக்கேக்க - அதை வெளியில இருந்து பார்கேக்க எனக்கு அது ஒரு சின்னவிசயமாய் தெரியும். ஆனால் அவருக்கு அது இருபத்துநான்கு மணிநேரமும் அவரைப்போட்டு குடைஞ்சு அவரிண்ட நிம்மதியையே கெடுத்துக்கொண்டு இருக்கும். இதமாதிரி எனக்கு குறைபாடாக தோன்றுகிற - எனக்குள்ள இருக்கிற ஒரு விசயம் எனது தனிப்பட்ட உணர்வுகளை புரிஞ்சுகொள்ளாத ஒருவருக்கு ஒரு சாதாரண - கவலைப்படவே தேவையில்லாத ஒரு விசயமாய் தெரியும். மனித இயல்பே இப்படியானதுதான். எண்டாலும்... நாங்கள் எங்கள் ஒவ்வொருவரையும் திருத்திப்படுத்துற வகையில எங்கட வாழ்க்கையை அமைச்சுக்கொள்ள நவீனஉலகில பல்வேறு வசதிகள் எல்லாம் இப்பஇருக்கிது. முடியாதது எண்டு ஒண்டு இல்லை. நான் யாழ்ப்பாணத்தில இருக்கேக்க முடுயவே முடியாது எண்டு நினைச்ச ஒரு விசயம் இப்ப எண்ட வாழ்க்கையில செயன்முறை வடிவாக நடந்து வெற்றிகரமாக முடிகிற தருவாயில இருக்கிது. இதனால எப்படியான பிரச்சனை உங்களை தாக்கினாலும்.. நம்பிக்கையுடன்.. சுறுசுறுப்பாக உங்கட வாழ்க்கைப்பயணத்தை தொடருங்கோ. முயற்சியில் வெற்றி நிச்சயம் கிட்டும்.

நன்றி! வணக்கம்!

பி/கு: இந்த சிகிச்சைகள் சம்மந்தமாக சொல்லிறதுக்கு இன்னமும் எவ்வளவோ எவ்வளமோ விசயங்கள் - அனுபவங்கள் எல்லாம் இருக்கிது. இப்போதைக்கு இவ்வளவத்தையும் என்னால உங்களுக்கு சொல்லக்கூடியதாய் இருந்திச்சிது. எல்லாரும் ஒருநாளைக்கு சத்திரசிகிச்சை அறையுக்கு வாழ்க்கையில ஒரு தடவையாவது போகவேண்டி வரலாம். எண்ட எண்ணப்பகிர்வுகள் மூலம் நீங்கள் பலவிதமான பயனுள்ள தகவல்களை பெறக்கூடியதாக இருக்கும் எண்டு நினைக்கிறன். உங்களுக்கும் இவைபற்றி தனிப்பட பல அனுபவங்கள் இருக்கும். அவற்றை நீங்களும் பகிர்ந்துகொள்ளுங்கோ.

Link to comment
Share on other sites

  • Replies 136
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் புற அழகை விட.. உங்கள் மன உறுதியும்.. விடயங்களை வெளிப்படையாக ஒளிவுமறைவின்றி கலந்துரையாடும் அக அழகும் மிக அழகானவை. என்றாலும் புற அழகை.. ஆடம்பரத்தை விரும்பும் இவ்வுலகில் உங்களின் புற அழகை மெருகேற்றுவதில் தவறே இல்லை. அது இவ்வுலகத்தவர் மத்தியில் உங்களுக்குள் மேலும் மேலும் தன்னம்பிக்கையை வளர்க்கும்.

பலர் அக அழகு அது இதென்று வாய்கிழியப் பேசினும்.. புற அலகை விரும்புவதே அதிகம்..! நாமும் அவர்களுக்கு ஈடுணையாக எம்மை மாற்றிக் கொண்டால் தான் வாழ முடியும். வெளவால்கள் மத்தியில்.. கவுண்டுதான் கிடக்கனும் என்று எம் முன்னோர் சொன்னது புறக்கணிக்கக் கூடியதல்ல...!

எதிர்காலத்தில் உங்களைப் போன்று இயற்கையாகவும்.. போராலும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள உறவுகளுக்கும் உதவுவீர்கள் என்று நம்புகின்றேன்.

முகந்தெரியாத உங்களின் கருத்துக்களின் வழி.. உங்கள் அக அழகு மட்டும் எனக்குத் தெரிகிறது. அது உங்களை மிக அழகாகவே காட்டி நிற்கிறது. எதுஎப்படி இருப்பினும்.. புற அழகை பூஜிக்கும் இவ்வுலகில்.. உங்கள் புற அழகும் மெருகேற என் வாழ்த்துக்கள். சொந்த விடயப் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்..! :rolleyes:

Link to comment
Share on other sites

முரளி உங்கள் அனுபவங்கள் உங்கள் மனவுறுதியை காட்டுகிறது. உங்கள் மனந்தளராத முயற்சிக்கு பாராட்டுகள்.

உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமை பலருக்கும் உதவியாக இருக்கும்.

இந்தியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த முகச் சீரமைப்பு நிபுணர் பாலாஜி என்பவர் பற்றி அறிந்திருக்கிறேன். அவர் புதிய முறையில (உடம்பில் எலும்பை வளரச் செய்யும் புரதம் மூலம் (சரியாக நினைவு இல்லை) அண்ணப்பிளவுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையளித்ததாக படித்திருக்கிறேன். அமெரிக்காவைச் சேர்ந்த Dr. michael kosdon என்பவரும் இந்த சிகிச்சையில் பிரபலமானவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தன்னம்பிக்கையும் தேடலில் உள்ள ஆர்வமும் உங்களை ....இந்த சுவாரசிய நாவலை எழுத வைத்து இருக்கிறது .....

...பகிர்வுக்கு நன்றி . மகிழ்வான் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முரளி

உங்கள் தன்னம்பிக்கைக்கும் சகிப்புத் தன்மைக்கும் உங்கள் பொறுமையான அனுபவப்பகிர்வுக்கும் பாராட்டுக்கள். உண்மையிலேயே நீங்கள் எழுதியிருப்பதைப் படிக்கும் எவராவது உங்களை கற்பனைசெய்து பார்க்கும் தோற்றத்திற்கும் உங்களுக்கும் நிரம்பவே வித்தியாசம். யாராவது உங்களில் இப்படியொரு குறைபாடு இருந்தது என்று சொன்னால்தான் நம்பமுடியும். நேரில் நீங்கள் சராசரி இளைஞனுக்குரிய முகத்தோற்றத்துடனும் ஆளுமையுடனும் இருக்கிறீர்கள். எதுவும் அவரவர் பார்க்கும் பார்வையின் கோணத்தில்தான்.எத்தனையோ திறமைகளை இறைவன் உங்களுக்கு நிறைவாகத் தந்துள்ளார். அதற்காக இறைவனுக்கு நன்றிகள்.உங்கள் எதிர்காலம் சிறந்தோங்க இன்பங்கள் நிறைந்தோங்க கண்மணிஅக்காவின் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

மாப்பு அந்த நாட்களில இத்தினை வலியோடயா ஆதியோட சேந்து அட்டகாசம் பண்ணீங்க? ஆதியே ஆடிப்போய்ட்டன் அப்பிடிச் சொல்லுவன் எண்டா பாக்கிறீங்க? செல்வன் சீரியலில கடசில வி...மலமக்கா கதையை நம்கி ஹீரோவா இருந்த என்னைக் கைவிட்டுட்டு..... வாரும் வாரும் பழையபடி மாப்புவா வாரும் பாத்துக்கிறன்.

Link to comment
Share on other sites

முரளி! உங்களைப்பற்றி ஒரு உயர்வான மதிப்பு வைத்திருந்தேன். ஆனால், உங்கள் உறுதியையும் நம்பிக்கையுடனான முயற்சியையும் வாசிக்கும்போது... உண்மையிலேயே 'இதோ ஒரு மனிதன்' என்ற சுட்டுதலுக்கு உரியவராகிறீர்கள்.. உங்களை வாழ்த்துவதா பாராட்டுவதா என்று புரியவில்லை.. நீங்கள் சாதிக்கக்கூடியவர்.. நிறையச் சாதிக்க வேண்டும்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரளி உங்கள் எழுத்துகளை பார்க்கும் போது நீங்கள் இப்படி குறையோடு பிறந்தீர்கள் என நம்ப முடியாமல் உள்ளது.நீங்கள் வாழ்க்கையில் நிறைய அடிபட்டுள்ளதால் அதிக தன்னம்பிக்கை கொண்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

முரளி, உங்களின் வாழ்க்கைப்போராட்டங்களை பகிர்ந்ததற்கு பாராட்டுக்கள். உங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

அடேயப்பா முரளி..! படிச்சு முடிச்ச உடன அவன்தான் மனிதன் எண்டு உங்களை நினைச்சன்..! அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்..!

Link to comment
Share on other sites

முரளி இவ்வுலகின் சாதனையாளர்கள் வராலாற்றினை படித்தால் அவர்கள் எல்லோருமே தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதோவெரு பாதிப்பின் தாக்கம்தான் அவர்களை வாழ்க்கையில் ஒரு வெறியொடு போராடி சாதனையாளகளாக்கிருக்கின்றது அதே வரிசையில் நீங்களும் ஒரு சாதனையாளராக வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

நல்ல கலைஞனாக நகைச்சுவை கலந்த எழுத்தாளனாக அறிந்திருந்த உங்களின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்பவை பாராட்டுதற்குரியது.

Link to comment
Share on other sites

முரளி!

உங்களுடன் களத்தில் அதிகமாக கதைத்்ததில்லை. ஆனால் உங்கள் ஆக்கங்கள் பலவற்றை படித்திருக்கின்றேன்.

இந்த ஆக்கத்தை முதலில் மேலோட்டமாகத் தான் படித்தேன். பின்னார் தான் ஆக்கத்்தின் வலிமையை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

தன்னம்பிக்கை, விடா முயற்சி உள்ள நீங்கள் வாழ்வில் தோற்கவே மாட்டீர்கள்.

தலையிடியும் காய்ச்சலும் தனக்கு தான் வந்தால் தான் தெரியும். அந்த வகையில் நீங்கள் அனுபவித்த அந்த வலியின் ஒரு துளியை தான் இங்கு பதிந்து இருப்பீர்கள் என்று நம்்புகின்றேன். உங்கள் அனுபவம் தன்னம்பிக்கை இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்குமே நல்ல எடுக்்காட்டாக இருக்கின்றது.

உங்கள் அனுபவப் பகிர்வுக்கு மிக்க நன்றி முரளி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொந்தக்கதை: வாழ்க்கையில அவலம் வரும்... அவலம் வாழ்க்கை ஆனால்... ?

இனிய வணக்கங்கள்,

அறிமுகம்

அரிது அரிது மானிடர் ஆதல் அரிது. அதிலும் குருடு, செவிடு இல்லாமல் சுகதேகத்துடன் பிறக்கிற அதிர்ஸ்டம் எல்லாருக்கும் கிடைக்கிறது இல்லை எண்டு சொல்லுவீனம். . இந்தக்குறைபாட்டை Cleft Lip & Cleft Palate எண்டு ஆங்கிலத்தில சொல்லுவீனம். உலகத்தில பிறக்கிற ஒவ்வொரு ஆயிரம் குழந்தையிலையும் ஒரு குழந்தை இந்தக்குறைபாட்டுடன் பிறக்கும் எண்டு புள்ளிவிபரங்கள் சொல்லிது.

நட்பின் முரளி, நீங்கள் ஆயிரத்தில் ஒருவன். .

.>>>> குழந்தையிண்ட தாய் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர் எண்டால் குழந்தை இந்தக்குறைபாட்டோட பிறக்க அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஒரு ஆராய்ச்சி சொல்லிது (அதுக்காக எண்ட அம்மா புகைப்பிடிச்சவவோ எண்டு பிழையாக யோசிக்ககூடாது).<<<<

இது இது இதுதான் முரளியின் தனிப்பாணி

. <<<<ஏன் எண்டால் நான் அம்மாவிட்ட பாலை குடிக்க அது அப்பிடியே மூக்குக்கால ஊத்துப்பட்டு வெளியில வந்திடும். இதனால குழந்தையுக்கு பாலை எடுத்து ஒரு போச்சியில ஊத்தி அடிவாயுக்க ஊத்தவேணும். தாயிட்ட இருந்து நேரடியாய் குடிக்க ஏலாது.<<<<<<

தாயின் முழு அக்கறையும் உங்கள் மேல் தான் இருந்திருக்கும் உங்களை விட தாயின் வேதனை இரட்டிப்பாக இருந்திருக்கும்.

இந்தச்சிக்கலோட குழந்தை பிறந்தால் உடனடியாகவும், பிறகு குழந்தை வளர்ந்தபிறகும் பல சத்திரசிகிச்சைகளை குழந்தையுக்கு மேற்கொள்ளவேணும். முதலாவது உடனடியாக பிளவடைஞ்ச உதட்டையும், பிளவடைஞ்ச அன்னத்தையும் ஒட்டவேணும். இதுதான் முதலாவது சத்திரசிகிச்சையில செய்யவேண்டியது. இல்லாவிட்டால் குழந்தையை கண்கொண்டு பார்க்க ஏலாது. முகம் அகோரமாய் இருக்கும். அதுக்கு பிறகு சில வருசங்களால குழந்தையிண்ட பால்பற்கள் விழுந்தவுடன நிரந்தரப்பற்கள் முளைக்கேக்க பற்களை சீர்செய்து சிகிச்சைகள் செய்யவேணும். வாயுக்க கண்டபடி ஒழுங்கு இல்லாமல் பற்கள் முளைச்சு இருக்கும். இதனால ஒழுங்காக பல் மினுக்கவும் முடியாது, அத்தோட தெளிவாக பேசுறதும் கடினம். கடைசியாக, குழந்தையிண்ட மூக்கு சரியான வடிவம் இல்லாமல் கேவலமாய் இருக்கும். மூக்கையும் கடைசியில சரிப்படுத்தவேணும்.

கனடா, அமெரிக்கா எண்டு வளர்ச்சி அடைஞ்ச நாடுகள் எண்டு பார்த்தால் இஞ்ச இப்பிடியான குறைபாடுகளோட குழந்தைகள் பிறக்கேக்க அதுகளுக்கு ஒப்பீட்டளவில பிரச்சனைகள் குறைவு. ஏன் எண்டால் இஞ்ச இருக்கிற நவீன வசதிகள், வளங்கள் காரணமாக இந்தக்குறைபாட்டை முற்றுமுழுதாக பிள்ளைக்கு சுமார் பதினாறு வயசு சொச்சம் வரேக்க நீக்கிப்போடுவாங்கள். இந்தக்குறைபாட்டிலையும் அகோரம் குறைஞ்சது, சரியான அகோரமானது எண்டு பலவகைகள் இருக்கிது. இதனால சில பிள்ளைகளுக்கு சுமார் பத்து சத்திரசிகிச்சைகளுக்கு பிறக்கு குறைபாடு ஏறக்குறைய முற்றுமுழுதாக நீக்கப்பட்டு விடும். சில பிள்ளைகளுக்கு இருவது, முப்பது சத்திரசிகிச்சைகள் கூட செய்யவேண்டிவரலாம். ஏன் எண்டால் வாய், முகத்தை சரியாக அழகாக மறுசீரமைக்க நீண்ட காலம் எடுக்கிறதோட, பலப்பல கட்டங்களாகவும் பல்வேறுவிதமான சிகிச்சைகளை பெறவேண்டி வரும்.

எனது கதை:

நான் பிறந்ததில இருந்து இண்டைக்கு வரைக்கு எட்டு (உண்மையில ஒன்பது) சத்திரசிகிச்சைகளை கண்டுட்டன். இன்னும் இரண்டு சிறிய சத்திரசிகிச்சைகள் மிச்சம் இருக்கிது. சிறீ லங்காவில ரெண்டு சத்திரசிகிச்சைகளையும், கனடாவில ஆறு (உண்மையில ஏழு) சத்திரசிகிசைகளையும் பெற்று இருக்கிறன். சிறீ லங்காவில வசதிகள் குறைவாக இருக்கிறதாலையும், இந்தத்துறையில அனுபவம் வாய்ந்த சத்திரசிகிச்சை நிபுணர்கள் குறைவாக இருக்கிறதாலையும் (Plastic & Cosmetic Surgeons + Oral & Maxillofacial Surgeons) திருப்திப்படும் வகையில அங்க சிகிச்சையை பெற்றுக்கொள்ள ஏலாது. இப்ப சிலது முன்பைவிட அதிக வசதிகள் வந்து இருக்கலாம். ஓரளவு வசதி உள்ள ஆக்கள் குழந்தைகளை இந்தியாவுக்கு கூட்டிக்கொண்டுபோய் சிகிச்சை செய்யுறது. வெளிநாட்டு மருத்துவர் குழு ஒண்டு முந்தி தாயகத்துக்குபோய் அங்க இருக்கிற இந்தக்குறைபாடு உள்ள தாயகத்தில இருக்கிற குழந்தைகளுக்கு சத்திரசிகிச்சைகள் செய்ததாய் நான் ஓர் செய்தியை தொலைக்காட்சியில பார்த்து இருந்தன்.

எனது முதல் இரண்டு சத்திர சிகிச்சைகள்:

உங்களுக்கும் இவைபற்றி தனிப்பட பல அனுபவங்கள் இருக்கும். அவற்றை நீங்களும் பகிர்ந்துகொள்ளுங்கோ.

முரளி, முழுமூச்சுடன் வாசிக்க வைத்துவிட்டீர்கள். உங்களை நேரில் கண்ட பொழுது உங்கள் அறிவும் கபடமற்ற பேச்சும், செயலில் காட்டும் ஆர்வமும் தான் முன்னின்றதே தவிர வேறு எதுவும் தெரியவில்லை; நீங்களே சொல்லி உற்றுப்பார்க்காவிட்டால் எந்தக்குறைகளுமே தெரிய வாய்ப்பும் இல்லை. உங்கள் உறுதி தன்னம்பிக்கை வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்கின்ற இலட்சியம் இவைதான் மனிதனை வரலாற்றில் நிலைநிறுத்தும்.

'ஆனந்தமான வாழ்க்கை அமைந்தும் முகாரி பாடுவோருக்கு இடையில் எத்தனையோ இடைஞ்சல்களையும் சத்திர சிகிச்சைகளையும் தாங்கிக்கொண்டு சவால்களை எதிர்நோக்கி சந்தோஷமாக இருக்கும் உங்களை நினைத்தால் 'என் தோழமை பெருமை கொள்கின்றது முரளி. இதைவிட எனக்கு வேறு வார்த்தைகள் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி நான் பலநாளைக்குப்பிறகு இன்டைக்குத்தான் இவ்வளவுபெரிய கதையை (கதையல்ல நிஜம்) வாசிச்சிருக்கிறன் உங்களது தளராத மனவுறுதியை நான் மெச்சுகின்றேன் எவ்வளவோ சத்திரசிகிச்சைகளை எதிர்கொண்டு இன்று உற்சாகத்துடன் வாழும் உம்மை நினைத்தால் எனக்கு சந்தோசமாய் இருக்கு ஏனென்டால் நீரும் எனது நண்பன். இப்படியே தளராத மனவுறுதியுடன் இருங்கள் வாழ்கையென்பது வெறுமனே வாழப்பிறந்ததல்ல சாதிக்கப்பிறந்நது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரளி,

மனந்திறந்து நீங்கள் கடந்து வந்த உடல்,மன வலிகளை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். ஒரு ஆளுமையுள்ள எழுத்தாளனின் பின்னால் அனுபவம் என்பது வழிகாட்டியாகவும், துணிவான நிமிர்வுக்கும் அடித்தளமாக மாறிவிடும் என்பது எவ்வளவு கண்கூடு. முரளி உங்களுக்கான கரடுமுரடான பாதைகளைக் கடந்து விட்டீர்கள் இனிவரும் காலங்கள் துன்பங்கள் எல்லாம் தூசாகிவிடும். வாழ்த்து, பாராட்டு என்று எத்தகைய உணர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வது என்று திகைப்பாக இருக்கிறது. ஆனால் தோழமையுடன் தட்டிக் கொடுக்கிறேன் அதுவே உங்களுக்கு நான் கொடுக்கும் உண்மையான மதிப்பாக இருக்கும்.

Link to comment
Share on other sites

உணர்வுகளையும், எண்ணங்களையும் அன்புடன் பகிர்ந்துகொண்ட நெடுக்காலபோவான், வசி, நிலாமதி அக்கா, கண்மணி அக்கா, ஆதி, சோழியன் மாமா, ரதி, ஈஸ், டங்குவார், சாத்திரி அண்ணா, மணி, ரமா, தமிழ்தங்கை, புஸ்பாவிஜி, சகாரா அக்கா எல்லாருக்கும் உளங்கனிந்த நன்றிகள்!

நெடுக்காலபோவான், நீங்கள் சொன்னமாதிரி என்னைப்போல பலர் இயற்கையாக இபபடியான பிரச்சனைகளோட பிறந்து இருந்தாலும் தாயகத்தில நடக்கிற போரின் காரணமாக பாரிய அழிவுகள் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த உடல் மறுசீரமைப்பு சிகிச்சைகள் செய்யப்படவேண்டிய முக்கியமான தேவை இருக்கிது.

வெளிநாடுகளில இருக்கிற தாராள மனம் படைச்ச ஆக்கள் இந்தச்சிகிச்சைகளை தாயக மக்கள் பெறுவதற்கு பலவிதமான செயற்பாடுகளை செய்யலாம். பொருள் உதவி, ஒருங்கிணைப்பு, தகவல்கள் எண்டு ஏராளமான பகுதிகளில பங்கு ஆற்றலாம். குறிப்பிட்ட துறையில நிபுணத்துவம் பெற்ற பல தமிழ் ஆக்கள் சத்திரசிகிச்சை நிபுணர்களாக வெளிநாடுகளில பணிபுரிஞ்சு வரலாம். இவர்கள் தாயகத்துக்குபோய் சிறிதுகாலம் தங்கி இருந்து தங்கட சேவையை வசதி இல்லாத மக்களும் பெற்றுக்கொள்ள உதவலாம். வெளிநாட்டுக்காரங்களே அங்கபோய் இலவசமாக சிகிச்சைகள் செய்யேக்க எங்கட ஆக்களும் செய்வது கடினமான பணியாக இருக்காது.

நானும் இந்தவிசயத்தில என்னால முடியுமான உதவிகளை தாயக மக்களும் இந்தசிகிச்சைகளை பெறுவதற்கு - தகவல் தொழில்நுட்பம், மற்றும் ஒருங்கிணைப்பு வாயிலாக ஒரு காலத்தில உதவலாம் எண்டு நினைக்கிறன். இப்ப அங்க சாதாரண உயிர்வாழ்க்கையே கேள்விக்குறியாக இருகேக்க இந்தவிசயம் எல்லாம் சாத்தியம் இல்லை எண்டாலும்... நிலமைகள் வழமைக்கு திரும்பேக்க சிகிச்சைகள் தேவைப்படுகின்ற மக்களுக்கு தொண்டு நிறுவனங்கள், மனித நலன்புரி அமைப்புக்கள் மூலம் எம்மவர்கள் இங்கிருந்து உதவ முயற்சிக்கலாம்.

மற்றது தங்கட குழந்தைகள் மருத்துவ துறையில படிச்சால் குறிப்பிட்ட இந்தப்பகுதியில நிபுணர்களாக வருவதற்கு பெற்றோர் அதிக அளவில ஊக்குவிப்பு குடுக்கலாம். பிள்ளைகளும் ஆர்வம் உள்ளவர்களாய் இருந்தால் தாயக மக்கள் ஒருகாலத்தில இவர்கள் மூலம் பலவித நன்மைகளை பெற்றுக்கொள்ளலாம்.

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மாப்பு!

சகலதையும் வாசித்தேன்.நெஞ்சு கனத்துவிட்டது.

நான் பல தடவைகள் இங்குள்ள பெரிய வைத்தியசாலைகளுக்கு அடிக்கடி சென்று வந்திருக்கின்றேன்.அப்போது பல முகங்களை பல நோயாளிகளை பார்த்திருக்கின்றேன்.

மாற்றமுடியா நோயாளிகளை பார்த்திருக்கின்றேன்.அவர்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முரளி, மனம் திறந்து உங்கள் உணர்வுகளைப் பதிந்திருக்கிறீர்கள். நான் நேரில் சந்தித்த போது இதை கேட்டால் (முன்னரே உங்களுக்கு சத்திர சிகிச்சை நடத்தாக கூறியதால்) என்ன நினைப்பீர்களோ என நினைத்து தவிர்து விட்டேன். எனது உறவினர் ஒருவருக்கும் (ஊரில்) இப்படி இருந்தது. அவர்கள் அங்கு இருப்பதால் என்ன மாதிரியான சிகிச்சை எடுத்தார்களோ தெரியாது.

நீங்கள் கூறியது போல சத்திர சிகிச்சை பெரிய அவஸ்த்தை இல்லை ஆனால் அந்த அரை மயக்க நிலை (றிகவறி) தான் அவஸ்த்தை. எனக்கும் 3 தடவை கையில் சத்திர சிகிச்சை நடந்தது. 2ம் முறை சத்திர சகிச்சைக்கு சென்றபோது "மயக்க வேண்டாம் கையை விறைப்பாக்கி போட்டு வெட்ட" சொன்னேன் ஆனால் சந்திரசிகிச்சை நிபுனர் மறுத் விட்டார்.2-3 மணித்தியாலம் வெட்டுறதை பத்துகொண்டு இருக்க மாட்டேன் என கூறினார். நானும் இல்லை கையை ஆட்டாமல் அசைக்காமல் இருக்கிறேன் எண்டு வாதாடி பார்த்தேன். மனிசன் சம்மதிக்கவே இல்லை. கடைசியா கதைச்சுகொண்டு நிக்கவே அந்த வயருக்கால மயக்க மருந்தை ஏத்திபோட்டினம். பிறகென்ன அனுங்கி கொண்டு கண்ணை மூடினதுதான்.

உங்களுக்கு வாயில் எண்டபடியால் எப்படி தாங்கினிங்களோ தெரியாது. றிகவறி அறையில கொஞ்சம் கண்ணை திறக்கு தண்ணியை குடிக்க சொல்லி கதை வேறை கேட்பினம். தண்ணியை குடிக்க சத்தி வேறை வாறமாதிரி இருக்கும்.

என்னும் 1-2 சிறிய சத்திரசிகிச்சை இருப்தாக எழுதியிருந்தீர்கள். எல்லாம் சிறந்த முறையில் நடைபெற இறைவனை வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

நன்றி முரளி உங்களின் கரடு முரடான வாழ்கை அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்தமைக்கு. உங்கள் மனவுறுதி தான் எல்லாம் வெற்றிகரமாக முடிய அடித்தளமானது என அறிய முடிந்தது. குடும்ப நண்பர் ஒருவரின் மகளுக்கும் இதே மாதிரியான பிளவு சிறு வயதில் இருந்தது. அவவுக்கு 20 வயது. கனடாவில் சில சத்திரசிகிச்சைகள் செய்யப்பட்டன. அவ ஜேர்மனியில் பிறந்த படியால் அனேகமானவை ஜேர்மனியில் மேற்கொள்ளப்பட்டன. இப்போது பிளவு இருந்த அடையானமே இல்லாமல் போய்விட்டது.

தொடர்ந்து மிகுதி சத்திரசிகிச்சைகளையும் செய்து முடியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனதை நெருடுகிறது. சாதிப்பதற்கு உடல் ஒரு குறையல்ல.

நல்ல உள்ளம் படைத்தவர்கள் நல்லா இருப்பார்கள் உங்களைப்போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனதை நெருடுகிறது உங்கள் வார்த்தைகள்.

சாதிப்பதற்கு உடல் ஒரு குறைபாடல்ல நல்ல விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் போதும்

அது உங்களிடம் நிறைய இருக்கு,நல்ல மனசு படைத்தவங்கள் நல்லா இருப்பார்கள்

உங்களைப் போல

Link to comment
Share on other sites

குமாரசாமி அண்ணா, சபேஸ், நுணாவிலான், பிரசாந்த்: உங்கள் எண்ணங்களையும், உணர்வுகளையும் பகிர்ந்துகொண்டதற்கு உளங்கனிந்த நன்றிகள்.

சபேஸ், உங்கட நிலமையில வைத்தியர் செய்ததுதான் சரியாய் எனக்குபடுகிது. கையில வெட்டுக்கொத்து நடக்கேக்க - நீங்கள் சொன்ன நிலமையின்படி பார்க்கேக்க Local Anesthetic தந்து இருந்தால் அவையுக்கு அதுகூட Riskகாய் இருந்து இருக்கும் எண்டு நினைக்கிறன். மருத்துவ துறையுக்க இருக்கிற ஆக்களுக்குத்தான் சரியான காரணம் தெரிஞ்சு இருக்கும் - எதுக்கு Local Anesthetic பாவிக்கிறது பாதுகாப்பானது எண்டு.

ஊரில எண்டால் Local Anestheticஐ கொஞ்சம் அதிக அளவில பாவிப்பீனம் போல. அங்க Hernia சத்திரசிகிச்சை செய்யேக்க எல்லாம் முழுதுமாக ஆக்களை மயக்கிறது இல்லை எண்டு கேள்விப்பட்டு இருக்கிறன். ஒரு பகுதியை மாத்திரம் விறைக்கவச்சுப்போட்டு நோயாளியோட கதைச்சுக்கொண்டு வைத்தியர் வெட்டுக்கொத்து நடக்கும். இஞ்ச எண்டால் வைத்தியர்மார் கொஞ்சம் கூடப்பயப்படுவாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில எண்டால் Local Anestheticஐ கொஞ்சம் அதிக அளவில பாவிப்பீனம் போல. அங்க Hernia சத்திரசிகிச்சை செய்யேக்க எல்லாம் முழுதுமாக ஆக்களை மயக்கிறது இல்லை எண்டு கேள்விப்பட்டு இருக்கிறன். ஒரு பகுதியை மாத்திரம் விறைக்கவச்சுப்போட்டு நோயாளியோட கதைச்சுக்கொண்டு வைத்தியர் வெட்டுக்கொத்து நடக்கும். இஞ்ச எண்டால் வைத்தியர்மார் கொஞ்சம் கூடப்பயப்படுவாங்கள்.

அப்பிடியெண்டும் சொல்ல முடியாது. இங்கும், மகப்பேறின் போது (சி-செக்சன்) என்றால், நெஞ்சு பகுதிக்கு கீழ் விறைக்க பண்ணிட்டு தான் செய்றது. தாயின் களுத்துக்கு நேரா ஒரு மறைப்பு (ஸ்கிறீன்) போடுவினம். எனது மனைவிக்கு சி-செக்சன் நடக்கும் போது, நான் அவாவுடன் கதைத்துகொண்டிருந்தேன். அப்பப்ப எவ்வளவில நிக்கினம் எண்டு மறைப்புக்கு மேலால எட்டி பாக்கிறது. குழந்தையை வெளியால் எடுத்தவுடன் மறைப்புக்கு மேலால காட்டுவினம். ஆனால் இது 20-30 நிமிடத்தில் முடிந்திடும். எனது விடயத்தில் கைக்கு 2-3 மணித்தியாலம் தேவையெண்டு சொல்லித்தான் மறுத்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரளி,

தம்பி ராசா நீர் ஒரு இரும்பு மனிசன் தான் ( டைட்டானியம் மனிசன் இல்லை)

உங்கள் விடாமுயற்சிக்கும், திறமைக்கும், எழுத்து வன்மைக்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.