Jump to content

அ.தி.மு.க.,வை, அதன் பொதுச் செயலர் சசிகலாவின் கணவரான நடராஜனும், சகோதரரான திவாகரனும் கைப்பற்ற முயற்சி செய்வதாக, கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான, கே.பி.முனுசாமி, பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்;


Recommended Posts

அ.தி.மு.க.,வை, அதன் பொதுச் செயலர் சசிகலாவின் கணவரான நடராஜனும், சகோதரரான திவாகரனும் கைப்பற்ற முயற்சி செய்வதாக, கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான, கே.பி.முனுசாமி, பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்; மேலும், முதல்வர், ஓ.பி.எஸ்.,சுக்கு ஆதரவாக, கருத்து தெரிவித்துள்ளார்.
 

 

Tamil_News_large_1691804_318_219.jpg

ஏற்கனவே, சமீபத்தில், சென்னையில் நடந்த ஒரு விழாவில், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனும், ஓ.பி.எஸ்.,சுக்கு ஆதரவாக பேசி உள்ளதால், கட்சியில் பலரும், சசிகலா மீதும், அவர் உறவினர்கள் மீதும் எரிச்சலில் உள்ளது வெளிப்படும் சூழலும், ஓ.பி.எஸ்.,சுக்கு ஆதரவு பெருகும் சூழலும் உருவாகி உள்ளது. இதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, ஓ.பி.எஸ்., தலைமையில் புதிய அணி உருவாகும் வாய்ப்பு தெரிகிறது.
 

சரமாரி புகார்


கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், சட்டத்துறை அமைச்சராக பணியாற்றியவர், கே.பி.முனுசாமி. கடந்த லோக்சபா தேர்தலில் தர்மபுரி தொகுதியில் மட்டும், பா.ம.க., வெற்றி பெற்றது. அன்புமணி எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார் முனுசாமி. ஜெயலலிதா மறைவுக்கு பின், வன்னிய இன முக்கிய பிரமுகர்களை ரகசியமாக சந்தித்து பேசி வந்தார் முனுசாமி. இந்நிலையில் நேற்று திடீரென, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் உள்ள அவரது வீட்டில், பத்திரிகையாளர்களை சந்தித்தார் முனுசாமி. அப்போது அவர், சசிகலா

உறவினர்கள் மீது சரமாரியாக குற்றம் சாட்டினார். மறைமுகமாக சசிகலாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவரது பேட்டி இருந்தது.அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூரில், 15ம் தேதி, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவின் கணவர் நடராஜன் தலைமையில் நடந்த பொங்கல் விழாவில், திவாகரன் பேசிய போது, 'அ.தி.மு.க.,வை தொடங்கிய நாள் முதல், நாங்கள் நிர்வகித்து வருகிறோம். எம்.ஜி.ஆரின் மறைவுக்குபிறகு, அ.தி.மு.க.,வையும், இரட்டை இலை சின்னத்தையும், நடராஜன் தான் மீட்டார்' என்று பேசியுள்ளார்.
 

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற சதி


இந்த பேச்சு, அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், அவரது மனைவி ஜானகியின் ஒத்துழைப்பின்படி, இரட்டை இலை சின்னம் பெறப்பட்டது. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட, அ.தி.மு.க., தற்போது, ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட இயக்கமாக உள்ளது.இதையெல்லாம் மறைத்துவிட்டு, அ.தி.மு.க.,வையும், ஆட்சி அதிகாரத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்றும் வகையில் திவாகரன், நடராஜன் பேசியுள்ளனர்.


ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, கட்சியில் எந்த ஒரு அடிப்படை பொறுப்பிலும் இல்லாத இவர்கள், இது போன்று பேசுவதை, அ.தி.மு.க., தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வன்மையாக கண்டிக்கிறோம்.மேலும், திவாகரன், 'தமிழகத்தில் திராவிடர் ஆட்சி அமைந்துள்ளது, ஆரியர் ஆட்சி முடிந்துள்ளது' என்று பேசியுள்ளார். இது போன்ற வார்த்தைகளை, கருணாநிதி மற்றும் வீரமணி மட்டுமே பேசி வருகின்றனர்.

 

பார்ப்பன இனத்தைச் சேர்ந்த ஜெயலலிதாவை, ஜாதியை பார்க்காமல் அனைத்து தொண்டர்களும் கடவுளாக பார்த்தோம். திவாகரன் இது போன்று பேசியுள்ளது ஜெயலலிதாவுக்கு எதிராக உள்ளது.
 

பன்னீருக்கு பாராட்டு


ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட முதல்வர் பன்னீர்செல்வம், அவருக்கு பின் முதல்வராக சிறப்பாக பணியாற்றி வருகிறார்; பொதுமக்கள் எளிமையாக சந்திக்கும் முதல்வராக அவர் செயல்படுகிறார். 'வர்தா' புயலின் போது நேரில் பார்வையிட்டு மீட்புப் பணிகளை மேற்கொண்டார்; மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொண்டார்.சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு, ஆந்திர முதல்வரை சந்தித்து, கிருஷ்ணா நதி நீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறு சிறப்பாக செயல்படும் முதல்வர் பன்னீருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சிலர் செயல்படுகின்றனர். திவாகரன் பேச்சு, புதிதாக பொறுப்பேற்றிருக்கும், அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவுக்கு, தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.அ.தி.மு.க.,வை கைப்பற்ற திவாகரன் மற்றும் நடராஜன் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அ.தி.மு.க.,வை கைப்பற்றவும், அழிக்கவும் என்னை போன்ற ஒன்றரை கோடி தொண்டர்கள், உயிர் உள்ளவரை விடமாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

கே.பி.முனுசாமியின் இந்த பேட்டி, சசிகலாவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுப்பதாக இருக்கிறது என, கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. மேலும், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இவரும், பண்ருட்டி ராமச்சந்திரனும் பேசி இருப்பதாலும், ஏற்கனவே, 'எளிமையானவர்' என்ற பெயரை பன்னீர் பெற்றிருப்பதாலும், அவருக்கு மேலும் ஆதரவாளர்கள் கூடி, தனி அணி உருவாகும் சூழல் ஏற்படலாம்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1691804

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.