Jump to content

Recommended Posts

இமயா - சிறுகதை

அராத்து, ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

 

ங்காவி தீவு. நள்ளிரவைத் தாண்டி இரவு தனக்கான தனி கேரக்டரை வடிவமைத்துக்கொண்டிருக்கும் நேரம். `அன்கான்ஷியஸ்’ எனப் பெயரிடப்பட்டிருந்த அந்த பப்பில், அப்போதுதான் அறிமுகமாகி இருந்த இருவர், அடி பின்னியெடுத்துக் கொண்டிருக்கும் ட்ரம்ஸ் இசைக்கும், `ஒன்மோர் டிரிங்க் ப்ளீஸ்’ என உரசிக்கொண்டிருக்கும் பெண்களின் நச்சரிப்புகளுக்கும் இடையில் பேசிக்கொண்டு இருந்தனர்.

p102.jpgவீடு, வாசல், பிசினஸ் தாண்டி குழந்தைகள் பற்றி பேச்சு வந்ததும், இன்னும் கவனமாகவும் சத்தமாகவும் பேச ஆரம்பித்தனர்.

இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான். விட்டதைப் பிடிப்போம் என, குழந்தைக்குட்டியான பிறகும் லங்காவி டூர் வந்திருக்கின்றனர். ஒரு தந்தையின் பெயர் நீலகண்டன். அதை `நீல்' எனச் சுருக்கிவைத்துக்கொள்ளாத கலாசாரத்தில், கரூரில் தொழில் செய்பவர். வெளிநாடு வந்தால் மட்டுமே ஷார்ட்ஸ் போடுபவர் என்பது, அவர் அணிந்திருந்த ஷார்ட்ஸிலும் பாடிலாங்வேஜிலும் அப்பட்டமாகத் தெரிந்தது.

இன்னொரு தந்தைக்கு சென்னையில் மென்பொருள் துறையில் வேலை; நல்ல சம்பளம்.

நீலகண்டன் தன்னை `நீல்' எனக் கூறிக்கொள்ளாவிட்டாலும், இன்னொரு தந்தை ராமகிருஷ்ணன் தன்னை `ராம்கி' எனக் கூறிக்கொண்டு, நீலகண்டனை `நீல்' என்றே அழைத்தார்.

``என் பையனை யு.கே.ஜி-லேயே ஊட்டி கான்வென்ட்ல விட்டுட்டேன் சார்’’ என்றார். அவர் முகத்தில் பெருமிதம் ஒளிர்ந்தது.

``யு.கே.ஜி-லேயேவா?! ஏன் சார்... பையன் அழாம இருக்கானா?’’

``ஊட்டியில் ரொம்ப ஃபேமஸான ஒரு ஸ்கூல் இருக்கு சார். அதுல நாலாம் வகுப்பில் இருந்துதான் அட்மிஷன். அங்கே சேர்க்கணும்னா, யு.கே.ஜி-யில் இருந்தே இந்த ஸ்கூல்ல சேர்த்து பிராக்டீஸ் குடுக்கணும் சார். அதான் இங்கே சேர்த்துட்டேன். முதல் தடவை ஸ்கூல்ல விட்டுட்டு வரும்போது மட்டும் பயங்கரமா அழுதான். அதுக்கு அப்புறம் செமயா ட்யூன் ஆகிட்டான். லீவில் வீட்டுக்கு வந்தால்கூட, `எப்பப்பா ஸ்கூல் திறக்கும்?’னு கேட்டுட்டே இருப்பான். அவனோட வேலைகளை அவனே செஞ்சுக்கிறான். நான் அவன்கூட டாய்லெட் வரைக்கும் போனால்கூட, `டாட்... நானே பார்த்துப்பேன். நீங்க போங்க'னு சொல்றான்’’ என்றார்.

``இருந்தாலும் யு.கே.ஜி ரொம்பச் சின்ன வயசுதானே சார்? வீட்டை மிஸ் பண்றதுகூட ஓ.கே. அம்மாவை மிஸ்பண்றது கஷ்டமா இருக்காதா?’’

p102a.jpg

``இல்லை சார். வருஷத்துல நாலு மாசம் லீவ் குடுத்துடுறாங்க. ஒவ்வொரு மாசமும் போய்ப் பார்த்துக்கலாம். ரெண்டு நாள் நம்மகூட வெச்சுக்கலாம். அங்கே படிப்பு மட்டும் இல்லை சார்... விளையாட்டு, பொழுதுபோக்குனு பசங்களுக்கு அங்கே இருக்கிறதுதான் பிடிச்சிருக்கு. ஆயாக்கள், டாக்டர்கள் இருக்காங்க. வீட்டுல இருக்கிறதைவிட ஜாலியா இருக்காங்க சார். நாமதான் வீட்டுல வெச்சு புள்ளைங்களை நல்லா வளர்த்திட்டிருக்கிறதா நினைச்சுக்கிறோம். வீட்டைவிட ஹாஸ்டல்ல ஜாலியா இருக்காங்க சார். தினமும் விதவிதமான விளையாட்டு, சாப்பாடு, எப்ப பார்த்தாலும் ஃப்ரெண்ட்ஸுனு ரகளையாப் போகுது அவங்க வாழ்க்கை. நம்ம காலம் மாதிரி அடைச்சுவெச்சு சொறிசிரங்கு புடிக்கவைக்கிற ஹாஸ்டல் இல்லை. குழந்தைங்களை ஃப்ரீயா விட்டு, என்ஜாய் பண்ணவைக்கிற ஹாஸ்டல் சார்.’’

அந்த ரவுண்ட் ஸ்காட்ச் முடிந்தது. இன்னொரு ரவுண்டை உற்சாகமாக ஆர்டர் செய்தனர் தந்தைகள்.

``என் பையனுக்கு இப்பதான் ரெண்டு வயசு ஆகுது. எப்ப யு.கே.ஜி சேர்க்கணும்?’’ என்றான் ராம்கி.

``இப்பவே போய் ரெஜிஸ்டர் பண்ணிடுங்க’’ என்றான் நீல்.

ராம்கிக்கு, தன் பையனை இப்போதே ஊட்டியில் சேர்த்ததுபோல் தோன்றியது. ஊட்டி க்ளைமேட்டில் கோட்சூட் போட்டு பனி படர்ந்த சாலையில், தன் பையன் பள்ளிக்குச் செல்வது மனதில் 3-டி படமாக ஓடியது. செம ஜாலியாகிவிட்டார் ராம்கி.

``சார்... வாங்க போய் ஒரு டான்ஸ் போடலாம்’’ என்றபடி டான்ஸ் ஃபுளோருக்கு இரு தந்தைகளும் சென்றனர். டான்ஸ் ஸ்டெப் ஸ்லோவாகப் போட்டபடியே, ஹாஸ்டலில் குழந்தைக்குக் கொடுக்கும் உணவு, விளையாட்டுக்கள், பள்ளி இருக்கும் லொக்கேஷன் ஆகியவை பற்றி சத்தமாகப் பேசியபடி ஆடினார்கள்.

லங்காவியில் முடிவுசெய்தபடி, இந்தியா வந்த அடுத்த வார முடிவிலேயே ஊட்டிக்குக் கிளம்பினான் ராம்கி. அங்கே நெடுநாள் நண்பன் ஒருவன் இருந்தான். அதிகாலைப் பேருந்தில் இருந்து இறங்கியதும், நண்பன் ஸ்வெட்டர் சகிதம் காத்திருந்தான். ``ஸ்வெட்டர் போட்டுக்கடா’’ என நண்பன் சொல்லியும், ``வேணாம்டா’’ என வீறாப்பாகச் சொல்ல, இருவரும் தேநீர் கடைக்குச் சென்றனர்.

இறங்கியதும் தெரியாத குளிர், இரண்டு நிமிடங்களில் நரம்புகளில் ஊடுருவி, ரத்தத்தில் பரவி வெடவெடக்க ஆரம்பித்தது ராம்கிக்கு. பற்றியிருந்த தேநீர் கிளாஸ் நடுங்கி, தேநீர் சிதறி, தரையில் கொட்டியது. அடித்துப்பிடித்து நண்பனிடம் இருந்து ஸ்வெட்டர் வாங்கிப் போட்டுக்கொண்டான் ராம்கி.

இருவரும், வீட்டுக்கு நடந்தே சென்றனர். வீடு நல்ல ஏற்றத்தில் இருந்தது. காலை நேரக் குளிரில் நடப்பது ரம்யமாக இருந்தது. வழி நெடுகிலும் பூச்செடிகளும் ஓங்கி உயர்ந்த மரங்களும் பச்சை வாசனையை வீசிக்கொண்டிருந்தன. நடப்பது கொஞ்சம் குளிரை மட்டுப்படுத்தியது.

வீட்டுக்குள் நுழைந்ததும், நண்பனின் மனைவி சிரித்துக்கொண்டே வரவேற்றாள். குழந்தைகள், பெரிய பெரிய கம்பளிப் போர்வைகளுக்குள் பதுங்கித் தூங்கிக்கொண்டிருந்தனர். வீடு முழுவதும் உள்ள ஒவ்வொரு பொருளிலும் குளிர் உறைந்துகிடந்தது. எதைத் தொட்டாலும் குளிர், ராம்கியுடன் கைகுலுக்கி உடலுக்குள் பாய்ந்தது. ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டும் என்ற தேவையைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.

பல் துலக்கி, வெந்நீரில் குளித்து, சுடச்சுட இட்லி, ஆவி பறக்கும் மொச்சைக்கொட்டை சாம்பார் மற்றும் இரண்டு வகையான சட்னிகளுடன் காலை உணவை முடித்துவிட்டு, நண்பனோடு ராம்கி பள்ளியைப் பார்க்கக் கிளம்பினான்.
அந்தப் பள்ளியின் பெயரைச் சொன்னதும், ஆட்டோ ஓட்டுநருக்குத் தெரிந்தது. ஊட்டி நகரத்துக்குள் ஓடிய ஆட்டோ, சரேலென ஓர் ஏற்றத்தில் ஏறத் தொடங்கியது. ஏற்றம் ஏறி முடித்ததும், வனத்துக்குள் செல்வதுபோல இரு புறங்களும் அடர்ந்த மரங்கள் இருக்கும் சாலை வழியாகச் சென்றது. வழியில் குழந்தைகள் அழகான யூனிஃபார்முடன் மெள்ள அன்னநடை போட்டு பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தனர். சில பள்ளிகளில் ஸ்வெட்டரும் வேறு பல பள்ளிகளில் கோட்டும் யூனிஃபார்மாக வைத்திருந்தனர்.

சாலையில் இருந்து இடதுபுறமாக வெட்டி உள்வாங்கியது ஒரு தனிச் சாலை. அதன் உள்ளே சிறிது தூரம் ஆட்டோ ஓடியதும் அந்தப் பள்ளி தெரிந்தது. சுற்றிலும் மலைகள் இருக்க, நடுவே இயற்கையாக உருவான சமவெளியில் ஒரு பள்ளி அமைந்திருந்தது. பழங்கால பிரிட்டிஷ் கட்டடம், கம்பீரமாகத் தெனாவெட்டுடன் அமர்த்தலாக அமர்ந்திருந்தது. பள்ளிக்கு முன்பு பெரிய புல்வெளி. பக்கவாட்டில் சற்றே மேடான பகுதியில், மரங்களும் மலைகளும் சூழ அமைந்திருந்த விளையாட்டு மைதானம். மொத்தத்தில் ஒரு ஹாலிடே ரிசார்ட் போல இருந்தது பள்ளி. அங்கே யு.கே.ஜி-யில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை இருந்தது. மொத்தமாக உண்டு உறைவிடப் பள்ளி.

பள்ளிக்கு வெளியே இருந்த வெளியில் குட்டிச்சுட்டீஸின் அட்டகாசங்கள். சின்னச் சின்னக் குழந்தைகள் எல்லாம் க்யூட்டாக யூனிஃபார்ம் அணிந்து விளையாடிக்கொண்டு இருந்தனர். இன்னும் வகுப்புகள் தொடங்கவில்லை. எங்கு பார்த்தாலும் ஒரே ஓட்டம், `ஹோ...'வென உற்சாகக் கூக்குரல்கள். `யாரடா இவர்கள் அந்நியர்கள்?’ என ஒரு செகண்ட் வித்தியாசமாகப் பார்த்துவிட்டு, தங்கள் லூட்டியைத் தொடர்ந்தனர் குழந்தைகள்.

பள்ளியை சுருக்கமாகச் சுற்றிவிட்டு அட்மின் அறைக்கு வந்தனர். ``பையனுக்கு என்ன வயது?'’ என விசாரித்தனர். ``ரெண்டு’' எனச் சொன்னதும், ``ஆயிரம் ரூபாய் பணம் கட்டி ரெஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்'’ என்றனர். ``யு.கே.ஜி-க்கு இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து வந்தால் போதும். அப்போது ஒரு இன்டர்வியூ வைப்போம்'' என்றனர்.

ஒரு ஃபார்மை நிரப்பி 1,000 ரூபாய் கொடுத்ததும் வேலை முடிந்தது. இந்தப் பள்ளியில் நான்காம் வகுப்பு வரை படித்தால், இங்கே இருக்கும் இந்தியாவிலேயே பிரபலமான பள்ளிக்குத் தயார் செய்கிறார்கள். அந்தப் பிரபலமான பள்ளியிலும் இப்போதே போய் ரெஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினர். வேலையை வெகுசுலபமாக முடித்துக்கொடுத்தார் அங்கே வேலைபார்த்த ஒரு பெண்மணி.

வெளியே வந்ததும் ராம்கிக்கு திடீரென மண்டையில் அடித்தது, `பையனுக்கு இவ்வளவு சீக்கிரம் ரெஜிஸ்டர் செய்கிறோமே. பெண் இப்போதே ஒன்றாம் வகுப்பு படித்துக்கொண்டி ருக்கிறாளே. அவளை மறந்தேவிட்டோமே!' எனக் குடைந்தது. `நடுவில் சேர்த்துக்கொள்வார்களோ இல்லையோ, கேட்டுப் பார்ப்பது நம் கடமை அல்லவா!' என நினைத்த ராம்கி, மீண்டும் அறைக்குள் நுழைந்தான்.

``பெண் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு படிக்கிறாள். அவளைச் சேர்க்க முடியுமா?’’ எனக் கேட்டான்.

``சிரமம்தான். வெகுசொற்பமான ஸீட்களே உள்ளன. டெஸ்ட் எழுத வேண்டும். பிறகு இன்டர்வியூ அட்டெண்ட் பண்ண வேண்டும்’’ எனக் கூறினாள் அட்மின் பெண்.

``இல்லை... பெண்ணை வைத்துக்கொண்டு, பையனுக்கு மட்டும் ரெஜிஸ்டர் செய்வது சரியாப்படலை’’ என்று ராம்கி இழுத்ததும், அந்தப் பெண்மணிக்குள் இருந்த பெண்ணியச் சிந்தனை எரிய ஆரம்பித்தது.

``ஆமா... நிச்சயமாக பெண்ணை விட்டுவிடக் கூடாது. வளர்ந்ததும் இது அவளுக்குத் தெரிந்தால் வருத்தப்படுவாள். நீங்கள் பையனைவிட பெண்ணுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’’ எனப் பேசிக்கொண்டே, அவளே பெண்ணுக்கான விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து பணத்தை வாங்கிக்கொண்டு, ``பெண்ணை அடுத்த வாரம் அழைத்து வாருங்கள்’’ எனச் சொல்லிவிட்டாள்.

வெளியே வந்து மனைவிக்கு போன் போட்டான் ராம்கி. விஷயத்தை விளக்கி, ``இமயாவையும் சேர்க்கலாமா?’’ என்றான்.

யோசித்த மனைவி, ``சும்மா போய் டெஸ்ட் எழுதிப் பார்ப்போம். செலெக்ட் ஆனா பார்த்துக்கலாம்’’ என்றாள். அவள் மனதுக்குள் ஓடும் ஊட்டி ட்ரிப் ஆசை புரிந்தது ராம்கிக்கு.

p102b.jpg

``சும்மா எல்லாம் ஊட்டிக்கு வந்து டெஸ்ட் எழுதக் கூடாது. ஒண்ணாவதுதான் முடிச்சிருக்கா. அதுக்குள்ள அவளை ஹாஸ்டலில் விட முடியுமா, அவ அதுக்கு ரெடியா இருக்காளா, அவளுக்குப் பிடிக்குதா... இதை எல்லாம் அவகிட்டயும் பேசிப்பார். நான் நேர்ல வந்து பேசுறேன்’’ என்றான்.

இமயா, தினமும் பிரைவேட் வேனில் பள்ளிக்குப் போகிறாள். வீட்டுக்கு வரும்போது தூங்கிக் கொண்டுதான் வருவாள். அவளைத் தூக்கி ராம்கியின் கையில் கொடுப்பார்கள். வியர்வைப் பிசுபிசுப்போடு தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வரும்போது அவளைப் பார்க்கவே பாவமாக இருக்கும். அல்லிமலர் போல காலையில் பள்ளிக்குச் செல்பவள், கசங்கிய கருவாடாகத் திரும்பி வருவாள். சென்னையின் க்ளைமேட் ஒரு சாபக்கேடு. தினமும் இந்தப் பரபரப்பான டிராஃபிக்கில் நீந்தி, பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் எப்படி நிம்மதியாகப் படிக்க இயலும்?

போனை கட் செய்துவிட்டு நண்பனுடன் சென்று, ஒரு ரிசார்ட்டுக்குள் செக் இன் ஆனார்கள். நண்பனின் வாழ்க்கை, குழந்தைகள், மனைவி, மாமனார், மாமியார் பிரச்னை பற்றி எல்லாம் பேசினார்கள். கொஞ்ச நேரம் ஊட்டி லோக்கல் அரசியல் பற்றி பேச்சு ஓடியது. மதிய உணவுக்குப் பிறகு குட்டித் தூக்கம். மாலை சிறு நடைப்பயிற்சி. இரவு, மதுவுடனும் இசையுடனும் கழிந்தது. ரிசார்ட்டின் அறையிலேயே தணல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குடும்பத்துடன் காரிலேயே ஊட்டிக்கு வந்தான் ராம்கி. மனைவியைப் பொறுத்தவரை ஊட்டியைச் சுற்றிப்பார்க்க மற்றும் ஓய்வு எடுக்க இந்த ட்ரிப். இமயாவின் டெஸ்ட் ஒரு சாக்கு. இமயா, எப்படியோ ஊட்டியில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்க விருப்பம் தெரிவித்துவிட்டாள். நண்பன் வீட்டிலேயே தங்க ஏற்பாடு. விரைவிலேயே இரு குடும்பங்களும் குழந்தைகளும் ஒன்றாகக் கலந்துவிட்டனர். தூங்கி எழுந்து, காலை உணவை முடித்துக்கொண்டு குடும்பத்துடன் பள்ளிக்குச் சென்றான் ராம்கி.

இமயா, டெஸ்ட் எழுதினாள். அதை க்ளியர் செய்தாள். இன்டர்வியூ அட்டெண்ட் செய்து கொண்டிருந்தாள். இரண்டு வயது பொடியன் ஆழி, அங்கே இருக்கும் புல்தரை மற்றும் விளையாட்டுச் சாதனங்களில் விளையாடிக்கொண்டிருந்தான். இமயா இன்டர்வியூவும் க்ளியர் செய்தாள். ஆனால், ஒரு சிக்கல் வந்தது. இடம் இல்லை என்பதுதான் அது. அதாவது வகுப்பில் அட்ஜஸ்ட் செய்து உட்கார்ந்துகொள்ளலாம். ஆனால், டார்மில் படுக்க, கட்டில் இல்லை. எல்லாம் நிரம்பிவிட்டன.

இப்போது அந்தப் பெண்ணிய ஆர்வம்மிக்க பெண்மணி, சீனில் வந்தார். வகுப்புவாரியாக ஏதேதோ மாற்றங்கள் செய்து கட்டில்களை மாற்றிப்போட்டு, இமயாவுக்கு ஒரு கட்டில் ஏற்பாடு செய்தார். அட்மிஷன் நிச்சயமாகிவிட்டது. கையிலேயே செக் கொண்டுபோயிருந்ததால், உடனே செக் கொடுத்தான் ராம்கி.

``ரெண்டு நாள் டைம் எடுத்துக்கோங்க. தேவையானதை எல்லாம் பர்ச்சேஸ் செய்துவிட்டு, மூன்றாவது நாள் கொண்டுவந்து விட்டுடுங்க’’ என்றார்கள். ஊட்டியில் இருக்கும் அந்தப் பிரபல பள்ளியில் ஐந்தாம் வகுப்புக்கு இப்போதே ரெஜிஸ்டர் செய்துவிடும்படி அறிவுறுத்தினர்.

மனைவிக்கு ஒன்றுமே புரியவில்லை. கண் மூடி கண் திறப்பதற்குள் இமயா ஊட்டி கான்வென்ட்டில் சேர்ந்துவிட்டாள். இமயாவும் ஆழியும் ஜாலியாகச் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தனர். மனைவி முகம் சோகமாகிவிட்டது. குழம்பியபடி காணப்பட்டாள். இமயாவை இங்கே சேர்த்துட்டோம், ஏழு வயதுக் குழந்தையை... அதுவும் பெண் குழந்தையை ஹாஸ்டலில் விட்டுவிட்டுச் செல்லப்போகிறோமா? மனைவியின் மண்டையில் எதுவும் ஏறவில்லை. மயக்கம் வருவதுபோல் இருந்தது.

மனைவிதான் இப்படிக் குழம்பிப்போய் இருந்தாள். ஆழி, அந்தப் பள்ளியின் உள்ளே இண்டு இடுக்கு எல்லாம் ஓடிக் குதித்து, ரகளை செய்துகொண்டிருந்தான். அவனைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பெரிய மனுஷத் தனத்துடன் பின்னாலேயே ஓடிக்கொண்டிருந்தாள் இமயா.

பள்ளியைவிட்டு மீண்டும் நண்பன் வீட்டுக்கு வந்தனர். நண்பனின் மனைவி ராம்கியின் மனைவியைச் சமாதானப்படுத்தினாள்.

``நீங்க வேறங்க... இவ வீட்டைவிட ஹாஸ்டல்ல ஜாலியா இருப்பா. நிறையக் கத்துப்பா. நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க. அடிக்கடி பிக்னிக் கூட்டிட்டுப் போவாங்க. இன்னும் கொஞ்சநாள்ல உங்களுக்கே சொல்லிக்குடுப்பா பாருங்க’’ எனச் சிரித்தபடியே கூறினாள்.

``அட்மிஷன் கிடைச்சது லக்குடா’’ என்றான் நண்பன்.

மதியம் ஓய்வு எடுத்துவிட்டு மாலையில் இரு குடும்பங்களும் ஷாப்பிங் போனார்கள். இமயாவுக்குத் தேவையான பொருட்கள் என பெரிய லிஸ்ட் கொடுத்திருந்தனர். ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி ஊட்டியில் ஷாப்பிங் செய்வது சுலபமாக இருந்தது. சென்னை அளவுக்கு டயர்டு ஆகவில்லை. நண்பனின் குழந்தைகளும் இமயாவும் ஆழியும் நெருங்கிவிட்டிருந்தனர். ஒவ்வொரு கடையிலும், அவர்களின் தனி உலகத்தில் அவர்கள் லூட்டி அடித்தனர். ராம்கியின் மனைவி முகம் இன்னமும் இருண்டே காணப்பட்டது. இமயா, `ஹாஸ்டலாவது ஒண்ணாவது...' என்பதுபோல ஜாலியாகச் சிரித்தபடி விளையாடினாள். அவளுக்கு வாங்கும் உடைகளைத் தேர்ந்தெடுப்பதும் நிராகரிப்பதுமாக பிஸியாக இருந்தாள்.

அன்றைய இரவு, இறுக்கமாகக் கழிந்தது. ராம்கியின் மனைவி, அவனைக் கட்டிக்கொண்டு அழுதாள். ராம்கிக்கும் குழப்பமாக இருந்தது. ரொம்ப ஸ்பீடாகப் போகிறோமா? இமயா, வழக்கமான சென்டிமென்ட் டைப் குழந்தை இல்லை. இயல்பிலேயே பிராக்டிக்கல். வெட்டிப் பிடிவாதம், அம்மா-அப்பாவோடு ஒட்டிக்கொள்ளுதல் என்பது எல்லாம் இல்லை. பாட்டியுடன் சில நாட்கள் தனியாக இருந்திருக்கிறாள். தேவை எதுவானாலும் தெளிவாகக் கேட்கக்கூடியவள். இருந்தாலும் ஏழு வயதுச் சிறுமியை ஹாஸ்டலில் விடுவது இனம்புரியாத திகிலாகவே இருந்தது. `எனக்கு ஹாஸ்டல்ல இருக்கணும்போல ரொம்ப ஆசையா இருக்குப்பா’ என்றும் ஒருமுறை சொல்லியிருக்கிறாள். இப்படியான குழப்பமான சிந்தனைகளோடு இரவு அரைத் தூக்கத்தில் கழிந்தது.

றுநாள் ஊட்டியில் அந்தப் பிரபலமான பள்ளியில் ஐந்தாம் வகுப்புக்கு இரண்டு குழந்தைகளுக்கும் ரெஜிஸ்டர் செய்வதற்கு, ராம்கி குடும்பம் மட்டும் மதிய வேளையில் காரில் சென்றது.

`மனைவிக்குப் பழக்கம் வரட்டும்' என மனைவியையும் மகளையும் மட்டும் உள்ளே அனுப்பிவிட்டு, ராம்கியும் ஆழியும் கேம்பஸுக்கு வெளியே நின்றுகொண்டார்கள். இந்தப் பள்ளி, நூற்றாண்டு பழைமை வாய்ந்தது. மிகப் பிரபலமான பள்ளி. தனியார் பள்ளி அல்ல, இந்திய அரசின் கீழ் வரும் பள்ளி.

சுற்றிலும் மலை. ஆட்கள் யாரும் இல்லை. ஆழி, அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தான். ஒரு கொடி மரம் இருந்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு இந்தியக் கொடி பறக்கும் கொடி மரத்துக்கு அடியில், ராம்கியும் ஆழியும் அமர்ந்துகொண்டனர். வகுப்புகள் முடிந்துவிட்டனபோல. ஐந்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் பெண்கள் கான்வென்ட் யூனிஃபார்மில் பள்ளியில் இருந்து, நான்கு வரிசையாக ஹாஸ்டல் நோக்கி, இவர்களைக் கடந்து சென்றனர்.

``ஹாய் சொல்லட்டுமாப்பா?’’ என்றான் ஆழி.

 ``ம்.’’

அவ்வளவுதான். ஆழி குஷியாகிவிட்டான். இப்போது இந்தக் காட்சியை எந்த SLR கேமராவிலோ அல்லது பி.சி.ஸ்ரீராம் கேமராவிலோ படம்பிடிக்க இயலாது.

சுற்றிலும் மலை, பச்சைப்பசேல் எனத் தாவரங்கள், மரங்கள். பெரிய கேம்பஸ், நீண்ட வரிசையில் நான்கு நான்கு பேராக சீருடையில் பெண்கள், நடுவில் கொடி மரம், கடும் குளிர், ஒற்றைச் சிறுவன்.

சலிக்காமல்  துள்ளிக்குதித்தபடி   சிரித்துக்கொண்டே உற்சாகமாக ``ஹாய்... ஹாய்... ஹாய்...’' எனத் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தான் ஆழி. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வந்து ஹாஸ்டலில் தங்கி வாழும் அனைத்துப் பெண்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. ஒருத்திவிடாமல் அனைவரும் விதவிதமாக ``ஹாய்... ஹாய்... ஹாய்...'’ எனச் சொல்லியபடி வரிசை நகர்ந்தது.

உடன் வரும் வார்டன்களும், சிரித்தபடி சென்றனர்.

சில அராத்துப் பெண்கள் பலவிதமான சேட்டைகள் செய்தபடி ``ஹாய்'’ சொன்னார்கள்.

அந்த மகிழ்ச்சிச் சூழலைக் கெடுக்க வேண்டாம் என வெட்கத்துடன், கன்னிப்பெண் போல கொடிமரத்தின் அடியில் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தான் ராம்கி.

மூட்டைமுடிச்சுகளோடு மறுநாள் இமயாவைப் பள்ளியில் விடச் சென்றனர். சின்னச்சின்ன ஃபார்மாலிட்டீஸ் இருந்தது. அதை எல்லாம் முடித்துவிட்டு, இமயாவைப் பார்த்துக்கொள்ளும் ஆயாவைச் சந்தித்தான் ராம்கி.

``இமயா, தெளிவான பொண்ணு. ஆனா, கொஞ்சம் ரிசர்வ்டு டைப் ஆயா. எதையும் வெளிப்படையா சொல்ல மாட்டா. வலிச்சாலும் முடிஞ்சவரை தாங்கிக்குவா. ரொம்ப வலி தாங்க முடியலைன்னாதான் வெளியே சொல்லுவா. பசிச்சாலும் சொல்ல மாட்டா’’ என ஆரம்பித்து, நிறையச் சொன்னான். அப்போதுதான் மகளைப் பற்றி சொல்லச் சொல்ல, அவனுக்கே அவன் மகளின் சித்திரம் கிடைத்தது. உள்ளுக்குள் நெகிழ்ந்தான். கடைசியாக ``நீங்கதான் ஆயா உங்க பொண்ணுபோல பார்த்துக்கணும்’’ எனச் சொல்லும்போது கொஞ்சம் கலங்கினான்.

``அதெல்லாம் நான் பார்த்துக்கிறேங்க. சின்னச்சின்னப் புள்ளைங்க எல்லாம் ஜாலியா இருக்குங்க. கவலைப்படாதீங்க. இங்கே உங்க பொண்ணுக்கு ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சுட்டா போதும். எல்லாத்தையும் அவங்க பார்த்துப்பாங்க’’ என்றாள் ஆயா.

ராம்கியின் மனைவி, வாய் திறந்து எதுவும் பேசவில்லை. பேசினாலே அழுதுவிடுவாள்போல. இமயாவின் ரூமில் அவளின் பொருட்களை வைத்துவிட்டுக் கிளம்பும் நேரம் வந்ததும், ஆழி, இமயாவைக் கட்டிக்கொண்டு முத்தமிட்டான்.
``பை அக்கா...’’ என்றான்.

இமயா அவளின் டார்மைவிட்டு பள்ளிக் கட்டடம்  வரை வந்தாள்.

``பை அப்பா... பை அம்மா...’’ எனச் சொல்லிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் தன்னுடைய டார்ம் நோக்கிச் சென்றாள்.

காரை அங்கே இருந்து கிளப்பிக்கொண்டு நேராக சென்னை நோக்கிப் பயணம். ஊட்டி மலை இறங்குகையில் இருக்கும் உற்சாகம் எதுவும் இல்லை. வளைவுகள் கடந்து கார் இறங்கிக் கொண்டே இருந்தது. மனம் வெறுமையாக இருந்தது. ஊட்டி வரும்போது இமயா அமர்ந்திருந்த இடம் வெற்றிடமாக இருந்து மனதை அழுத்தியது. மனைவி, பின் ஸீட்டில் இருந்து விசும்பிக்கொண்டே வந்தாள். மறைத்து மறைத்து அழ அவள் முயற்சிசெய்தாலும், ஆழி கண்டுபிடித்துவிட்டான்.
``ஏம்மா அழறே... இமயா நல்லா படிப்பாமா. அழாமப் படிச்சு, பெரிய ஆளாகிடுவாம்மா’’ என்று சமாதானப்படுத்தினான்.

ராம்கி, ஜடம்போல காரைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

திடீரென வேறு வேலையாக ஊட்டி செல்லவேண்டிய தேவை ஏற்பட்டது ராம்கிக்கு. வேறு ஒரு நண்பனுடன் ஊட்டிக்குப் பயணப்பட்டான். ஊட்டி பள்ளியில், தெளிவாக முன்னரே கூறியிருந்தார்கள். அறிவிக்கப்பட்ட லாங் வீக் எண்டின்போது மட்டுமே, பள்ளியில் வந்து குழந்தைகளைப் பார்க்க முடியும்; வெளியே அழைத்துச் செல்ல முடியும்; இரண்டு நாட்கள் பெற்றோருடன் தங்கவைத்துக்கொள்ள முடியும். மற்றபடி விரும்பியபோது எல்லாம் பள்ளியில் வந்து குழந்தைகளைப் பார்க்கக் கூடாது... அது விடுமுறையாகவே இருந்தாலும்.

ஊட்டியில் சென்ற வேலை முடிந்ததும், தன் மகள் இங்கேதான் இருக்கிறாள் என்ற எண்ணம் லேசாகத் தோன்றி, பூதாகாரமாக வளர்ந்தது ராம்கிக்கு. மனைவி வேறு `சும்மா... போய்ப் பார்த்துட்டுத்தான் வாங்களேன். விட்டா பாருங்க. இல்லைன்னா வந்துடுங்க. என்ன நஷ்டம்?’ எனச் சொல்லியிருந்தாள்.

நண்பனுடன் மதியம் பள்ளி நோக்கிக் கிளம்பிவிட்டான். படபடவென இருந்தது ராம்கிக்கு. `மகளைப் பார்க்க முடியுமா, எப்படி இருப்பாள், ஹாஸ்டல் செட்டாகி இருக்குமா?'... எனக் குழப்பத்திலேயே சென்றான்.

பள்ளி வளாகத்தினுள் நுழைந்ததும் ஏதோ சொர்க்கத்தில் நுழைந்தது போன்ற உணர்வு. அவ்வளவு குழந்தைகள் குதித்துக்கொண்டும், விளையாடிக்கொண்டும், ஓடிக்கொண்டும் இருந்தனர். கண்கள், இமயாவைத் தேடின. எவ்வளவுதான் கண்களைக் கூர்மையாக்கி குழந்தைகளுக்குள் ஊடுருவிப் பார்த்தாலும், இமயா தென்படவில்லை. சில செகண்ட்களில் பல குழந்தைகளின் முகங்களை ஸ்கேன் செய்துவிட்டான் ராம்கி.

அட்மின் பிளாக்கினுள் நுழைந்து ஹவுஸ் மேடத்தைச் சந்தித்தான்.

அவசர வேலையாக வந்ததாகவும், ஒருமுறை மட்டும் இமயாவை இங்கேயே பார்த்துவிட்டுச் சென்றுவிடுவதாகவும், இனி இப்படி தனியாக வந்து சலுகை கேட்க மாட்டேன் என்பதாகவும் மடமடவெனப் பேசி முடித்தான்.

என்னவோ யோசித்த அந்த மேடம், ஒரு குழந்தையை அழைத்து, ``கால் இமயா’' என்று பணித்தார். நன்றி சொல்லிவிட்டு மீண்டும் வெளியே வந்து காத்திருந்தான் ராம்கி.

இமயா, தூரத்தில் நடந்து வருவது தெரிந்தது. பள்ளி நேரம் முடிந்துவிட்டதால் ஹாஸ்டல் உடையில் இருந்தாள்.

அருகில் வந்ததும், ``இமயாக்குட்டி’’ என இமயாவைத் தூக்கிக்கொண்டான் ராம்கி. மற்ற குழந்தைகள் இதை வேடிக்கை பார்த்ததும் இமயாவுக்கு வெட்கமாகி இருக்க வேண்டும். நெளிந்தபடியே ராம்கியிடம் இருந்து இறங்க யத்தனித்தாள். அதைப் புரிந்துகொண்டு ராம்கியே இறக்கிவிட்டான்.

``எப்பிடிமா இருக்க... ஆர் யூ ஓ.கே?’’

``ஓ.கே-ப்பா.’’

``எப்படி இருக்கு ஹாஸ்டல்?’’

``நல்லாயிருக்குப்பா.’’

இடையில் வந்த மேடம் ஒருவர், ``இமயா... ஸ்நாக் டைம் ஃபார் யூ’’ எனச் சொல்லிவிட்டு, ``சாப்பிட்டு வந்து அப்பாகூடப் பேசலாம்’’ என்று அனுப்பிவிட்டார்.

விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் எல்லோரும் ஸ்விட்ச் போட்டதுபோல ஸ்நாக்ஸ் சாப்பிட வந்துவிட, அந்த மைதானம் அமைதியில் நிறைந்தது.

ஸ்நாக்ஸ் டைம் முடிந்து இமயா வரும்போது, கூடவே அவளின் தோழிகள் பட்டாளமும் வந்தது.

``நாங்க உன்னை விட்டுட்டுப் போனதும் அழுதியா இமயா?’’ என்றான் ராம்கி.

`ம்ஹூம்…’ எனத் தலையாட்டினாள் இமயா.

இமயாவைவிட சீனியர், ஒன்பது வயதுடைய ஒரு வாண்டு, ``இல்லை அங்கிள்... நீங்க போனதும் தனியாப் போய், யாருக்கும் தெரியாம அழுதா. நாங்க கேட்டதுக்கு `கால்ல இடிச்சுக்கிட்டேன். அதான்’னு பொய் சொன்னா’’ என்றாள்.

இமயா, மீண்டும் `இல்லை... இல்லை...’ என்பதுபோல தலையசைத்தாள்.

``ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கிடைச்சுட்டாங்களா இமயா?’’ என்றதும், தன் அருகே இருந்த வாண்டுகளை அறிமுகப்படுத்தினாள் இமயா.

அதில் ஒன்பது வயதிருக்கும் ஒரு சுட்டிவாண்டு, ``அங்கிள்... நான் நார்த் இண்டியா. அப்பா-அம்மா வருஷத்துக்கு ரெண்டு தடவைதான் வருவாங்க. இமயாவைப் பத்தி கவலைப்படாதீங்க. நாங்க பார்த்துக்கிறோம்’’ என்றாள்.

இன்னொரு வாண்டு, ``இமயா செகண்ட் ரேங்க் வாங்கியிருக்கா அங்கிள். நல்லா படிக்கிறா’’ என சர்ட்டிஃபிகேட் கொடுத்தாள்.

``நான்வெஜ் சாப்பிட மாட்டேங்கிறா அங்கிள்’’ என்று குறைப்பட்டுக்கொண்டாள் ஒரு குட்டி வண்டு.

``தமிழ் ரெசிடேஷன்ல இமயா ஃபர்ஸ்ட் வாங்கியிருக்கா. ஒரு புக் ப்ரைஸ் குடுத்திருக்காங்க’’ என்றாள் இன்னொரு வாண்டு.

அவர்கள் எல்லோரும் யார், என்ன பெயர், என்ன ஊர் என விசாரித்துக்கொண்டான் ராம்கி.

டார்ம் மேட் என, ஒருவரை இமயாவுக்கு செட் செய்திருந்தார்கள். அவளுக்கு எட்டு வயது இருக்கும். இமயாவைவிட ஒரு வகுப்பு அதிகம். அதாவது, மூன்றாம் வகுப்பு.

``கம்மியா சாப்பிடுறா அங்கிள். லேட்டாத் தூங்குறா...’’ என, சில குறைகளை எளிமையாக அக்கறையாகப் பட்டியலிட்டாள் அவள்.

p102c.jpg

``வேறு ஏதாவது பிரச்னை இருக்கா?’’ எனப் பொதுவாகக் கேட்டதும், ``இந்த டார்மில் ஒரு பொண்ணு இருக்கா. அவ மட்டும்தான் இமயாவை அப்பப்ப கிண்டல் பண்ணுவா,  சண்டைபோடுவா. அதனால் இமயா அழுவா!’’ என்றனர் குழந்தைகள்.

அந்த வீம்புக்கார வாண்டுவை வரவழைத்துப் பேசினான் ராம்கி. முதலில் முரண்டுபிடித்த அந்த வீம்பு, பிறகு கொஞ்சமாகச் சிரிக்க ஆரம்பித்தது. விளையாட்டுப் பொருளைப் பகிர்ந்துகொள்வதில் ஆரம்பித்த பிரச்னை எனப் புரிந்தது. அந்த வீம்புப் பாப்பா கொஞ்சம் புஷ்டியாக இருந்ததால், மற்ற குழந்தைகள் அதனிடம் கொஞ்சம் பயந்தது தெரிந்தது.

அந்த வீம்புப் பாப்பாவைச் சமாதானப்படுத் தினான் ராம்கி. ``நான் அடுத்த தடவை வரும்போது உனக்கு நிறைய விளையாட்டுப் பொருட்கள் வாங்கிட்டு வர்றேன்’’ எனச் சொல்லி, மற்ற குழந்தைகளுடனும் இமயாவுடனும் கை கொடுக்கவைத்துச் சமாதானப்படுத்தினான். அப்போதும் இமயாவுக்கும் மற்ற குழந்தைகளுக்கும் நம்பிக்கை வரவில்லை. அந்த அளவுக்கு டெரர் பாப்பா போல. வாங்கிக்கொண்டு போயிருந்த தின்பண்டங்களை அந்த டெரர் பாப்பாவைவிட்டே மற்ற குழந்தைகளுக்கும் கொடுக்கச் சொன்னான்.

இடையிடையே வேறு சில வாண்டுகளும் வந்து நைஸாக எட்டிப்பார்த்து ஓடின. அருகில் வந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் தின்பண்டங்கள் கொடுத்தான்.

குழந்தைகளை அப்படியே விட்டுவிட்டு ரெஸ்ட் ரூம் எப்படி இருக்கிறது எனப் பார்க்கச் சென்றான். ரெஸ்ட் ரூமைப் பார்க்கும்போதே, ஒரு பொடியன் பின்னால் இருந்து ``அங்கிள்...’’ என்று அழைத்தான்.

``அங்கிள், உங்க ரெஸ்ட் ரூம் இங்கே இல்லை. வாங்க’’ என அழைத்துவிட்டு, முன்னால் குடு குடு என ஓடினான். பின்தொடர்ந்து சென்றான் ராம்கி. கெஸ்ட்களுக்கான ரெஸ்ட் ரூமைக் காட்டி, ``அது எங்க ரெஸ்ட் ரூம். இதுதான் உங்களுக்கு’’ எனச் சொல்லிவிட்டு ஓடினான்.

மீண்டும் குழந்தைகளிடம் வந்து, அனைவரிடமும் கொஞ்ச நேரம் ஜாலியாகப் பேசினான். குழந்தைகள் கொஞ்ச நேரத்தில் சிதறி ஓடினர். இமயா, தனித்து இருந்தாள். தன் சிறு மகளுடன் தனியே என்ன பேசுவது எனத் தெரியாமல் குழம்பினான் ராம்கி. தூக்கினால் வெட்கப்படுகிறாள்; கொஞ்சினால் கூச்சப்படுகிறாள். பள்ளி வளாகத்தினுள் தனியே தன் மகளுடன் இதற்கு மேல் எப்படிப் பொழுதைக் கழிப்பது எனத் தெரியாத ராம்கி, ``இந்த மாசக் கடைசியில் லாங்க் வீக் எண்ட் இமயா. அம்மா, நான், ஆழி எல்லோரும் வர்றோம்’’ என்றான்.

``இன்னும் எவ்ளோ நாள் இருக்கு... பத்து நாளா?’’ என இரு கை விரல்களையும் விரித்துக் கேட்டாள்.

`நாள், கால இடைவெளி எல்லாம் குழந்தைக்குப் புரியுமா?’ என முதல்முறையாகக் குழம்பிய ராம்கி, ``ஆமாம் குட்டிம்மா...’’ என்றான்.

வாங்கிச் சென்றிருந்த ஸ்கிப்பிங் கயிறு, டென்னிகாய்ட், ஷட்டில் காக் ராக்கெட்டை எல்லாவற்றையும் இமயாவிடம் கொடுத்தான். ஆர்வமாக வாங்கிக்கொண்டாள்.

`` உன் ஃப்ரெண்ட்ஸ்கூட ஷேர் பண்ணிக்கமா’’ என்றதும் தலையை ஆட்டினாள் இமயா.

``கிளம்பட்டுமா குட்டிமா?’’ என்றான்.

``ஓ.கே-ப்பா’’ என்றாள்.

கன்னத்தைத் தட்டிக்கொடுத்துவிட்டு, பள்ளியின் மெயின் கேட் நோக்கி நடக்க ஆரம்பித்தான். மெயின் கேட் அருகே வந்ததும் யாரோ பின்னால் தட்டுவதுபோல் இருந்தது.

பின்னால் திரும்பிப் பார்த்தான்.

இமயாதான். பின்னாலேயே ஓடிவந்து, அந்த ராக்கெட்டால் மென்மையாகத் தட்டிவிட்டுச் சிரித்தபடி இருந்தாள்.

``என்னம்மா?’’ என்றான்.

``ஒண்ணுமில்லை’’ என்று சொல்லிச் சிரித்துவிட்டு, உள்ளே ஓடிப்போனாள்.

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.