Jump to content

தமிழக முதல்வர் பதவி சந்திக்கப்போகும் சட்டச் சிக்கல்கள்


Recommended Posts

தமிழக முதல்வர் பதவி சந்திக்கப்போகும் சட்டச் சிக்கல்கள்
 

article_1484033514-article_1480303869-ka “சின்னமாவை முதல்வராக்கு” என்பதுதான் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் முழக்கமாகத் தமிழகத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இதன் அர்த்தம், தற்போது முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் இராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான். 

ஆனால், இதுவரை ‘சின்னம்மா முதல்வராக வேண்டும்’ என்ற கோரிக்கையை முதலமைச்சராக இருக்கும் பன்னீர்செல்வம் விடுக்கவில்லை. ஆனால், முதலமைச்சருக்குரிய பணிகளை மட்டும் தொடர்ந்து செய்து வரும் அவர், கட்சி நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்கிறார். 

சசிகலா நடராஜனை அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்த தீர்மானத்தை கொண்டு போய்க் கொடுத்து, “நீங்கள் கட்சிப் பணியாற்ற வரவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆனால், ‘ஆட்சிப் பணிக்கு வாருங்கள்’ என்று, அவர் இதுவரை வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை.

முதலமைச்சர்கள், பெரும்பாலும் பிரதமருக்கோ, குடியரசுத் தலைவருக்கோ புத்தாண்டு வாழ்த்துச் சொல்வதில்லை. குறிப்பாக தமிழகத்தில் உள்ள முதல்வர்கள் அப்படிச் சொன்னதில்லை. ஆனால், முதலமைச்சர் 
ஓ. பன்னீர்செல்வம் இந்த வழக்கத்துக்கு மாறாக இந்திய குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் நரேந்திரமோடி ஆகியோருக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தி அனுப்பினார். 

தன்னைப் பார்க்க, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் விரும்பினால் அனுமதி கொடுத்து சந்திக்கிறார். பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்திரராஜனுக்கும் நேரம் ஒதுக்கிக் கொடுத்து, விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்கிறார். அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி, ஆலோசனை நடத்தியுள்ளார். ஆகவே, முதலமைச்சராகத் தொடர விரும்புகிறார் ஓ. பன்னீர்செல்வம் என்பது, அவரது நடவடிக்கைகளில் இருந்து தெரிய வருகிறது. 

அதனால்தான் “சின்னம்மா முதல்வராக வேண்டும்” என்று அமைச்சர் உதயகுமார் குரல் எழுப்புகிறார். இவர், ஓ. பன்னீர்செல்வம் இருக்கும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர். முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கூட, “நான் சின்னம்மா போட்டியிடுவதற்காக என் பதவியை இராஜினாமாச் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்று கூறுகிறார். 

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல், அ.தி.மு.கவின் நாடாளுமன்ற துணைச் சபாநாயகர் மு. தம்பித்துரை, “சின்னம்மா முதல்வராக வேண்டும்” என்று நீண்டதொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை வெளிவந்தவுடன் முதலில் தாக்குதலைத் தொடுத்தது தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தி.மு.கவின் செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் ஆவார். 

“துணைச் சபாநாயகர் கடிதத்தலைப்பில் இப்படியொரு அறிக்கை வெளியிட்டது வெட்கக்கேடானது” என்றும் “அமைச்சர்களே முதலமைச்சர் பன்னீர்செல்வம் விலக வேண்டும் என்று கோரிக்கை வைப்பதால், முதலமைச்சருக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்” என்றும் அறிக்கை கொடுத்தார். 

இந்த அறிக்கை வெளிவந்த தினத்தில், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, “தம்பித்துரை துணை சபாநாயகர் கடிதத் தலைப்பைப் பயன்படுத்துவதை தவிர்த்து இருக்கலாம்” என்று ஸ்டாலினின் கருத்துக்கு வலுச் சேர்த்தார். இதற்கெல்லாம் சிறப்புச் செய்தது ஆளுநர், தி.மு.க தலைவர் கருணாநிதிக்கும் செயல் தலைவர் 
மு.க. ஸ்டாலினுக்கும் புத்தாண்டு வாழ்த்து சொன்னதாகும்.

பிரதமருக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன முதலமைச்சர் பன்னீர்செல்வம், தனக்கு மத்திய அரசாங்கத்தின் ஆதரவு இருக்கிறது என்பதை உணர்த்த வேண்டியவர்களுக்கு உணர்த்தியுள்ளார். 

‘சின்னம்மா முதல்வராக வேண்டும்’ என்று அறிக்கை விட்ட தம்பித்துரை மீது பா.ஜ.கவின் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, அதிருப்தி தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலினுக்குப் புத்தாண்டு வாழ்த்துக் கூறிய ஆளுநர் “எனக்கும் தி.மு.கவுக்கும் பிரச்சினையில்லை. ஓ. பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்க முயற்சித்தால், என் முடிவு அ.தி.மு.கவுக்கு மட்டுமே சாதகமாக இருக்காது என்பதைத் தெளிவுபடுத்தும் செய்தி போல் அமைந்திருக்கிறது. 

ஆளுநர், முதலமைச்சர், மத்திய பா.ஜ.க அமைச்சர் மற்றும் தி.மு.கவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் கருத்துக்கள், பேட்டிகள் எல்லாம் ஒரே திசையில் பயணிக்க, சசிகலா நடராஜன், டாக்டர் மு. தம்பித்துரை போன்றவர்களின் கருத்து எதிர்திசையில் பயணித்துக் கொண்டிருக்கி்றது.

இந்தப் பரபரப்பான பேட்டிகள் வெளிவந்த கையோடு, அ.தி.மு.க நிர்வாகிகளை மாவட்ட ரீதியாகச் சந்தித்து வருகிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன். கட்சி நிர்வாகிகளின் ‘பல்ஸ்’ பார்ப்பதற்கு இந்தச் சந்திப்பு உதவும் என்று அவர் கருதியிருக்கக் கூடும். ஆகவே, அ.தி.மு.கவுக்குள் அடுத்து, சசிகலா நடராஜன்தான் முதலமைச்சராக வரவேண்டும் என்பதில் இன்னும், அனைத்து மட்டத்திலும் தெளிவு பிறக்கவில்லை. 

இப்போதைக்கு, ‘மதில் மேல் பூனை’யாக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இருக்கிறார். ஆனால், அவருக்கு பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கம் முழு ஆதரவு அளிக்கத் தயாராக இருக்கிறது என்ற நிகழ்வுகள்தான் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

கட்சிக்குள் முதல்வர் பதவி குறித்து இன்னும் தெளிவு பிறக்கவில்லை. என்றாலும், முதல்வரை நியமிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 164 இல் உள்ள ஆளுநர் அதிகாரம், விருப்ப அதிகாரம் என்பதும் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. 

பொதுவாக, பெரும்பான்மை உள்ளவரையே முதலமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் அழைப்பார். ஆனால், இன்றைக்கு நாடு முழுவதும் பேசப்படும் ஊழல் பிரச்சினையின் உச்சத்தில், ஊழல் வழக்கில் கூட்டுப் பிழையால் விடுவிக்கப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, இந்த அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதில் மாநில ஆளுநர் புதிய வழிமுறையைக் கையாள முயற்சி செய்யலாம். 

அதுமட்டுமின்றி, 2001 இல் தேர்தலில் போட்டியிடும் தகுதி இல்லாத ஜெயலலிதாவை முதல்வராகத் தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி நியமித்தார். அந்த நியமனத்தை எதிர்த்து கபூர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து ஜெயலலிதாவை முதலமைச்சராக நியமித்தது செல்லாது என்று, உச்சநீதிமன்றம் இரத்து செய்தது. அந்தத் தீர்ப்பில், மக்களின் வாக்குகளைப் பெற்றிருக்கிறோம் என்ற காரணத்துக்காக அரசியல் சட்டத்தை மீறி, ஒருவரை ஆளுநர் நியமிக்க முடியாது என்று கூறப்பட்டது. 

ஆகவே, கபூர் வழக்கில் உச்சநீதிமன்றம் சொன்ன தீர்ப்பின் வாசகங்களை ஆளுநர் படித்துப் பார்க்கக் கூடும். இது போன்ற நுணுக்கமான விவகாரங்களைக் கவனித்து, ஆளுநர் ஏதாவது ஒரு முடிவு எடுத்தால், ஆளுநரின்  ‘விருப்ப அதிகாரத்தின்படி எடுக்கும் நடவடிக்கையில் ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தலாம். 

ஆகவே, முதல்வர் நியமனம் என்பது விருப்ப அதிகாரம் என்பதால், இப்போது முதல்வராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வத்தை நீக்கி விட்டு, சசிகலா நடராஜனை நியமித்தால், அரசின் ஸ்திரத்தன்மை எப்படியிருக்கும் என்பது பற்றி ஆலோசிக்கும் அதிகாரம், இந்த விருப்ப அதிகாரத்தின் கீழ் ஆளுநருக்கு  இல்லை என்று கூறிவிட முடியாது. 

குற்றவழக்குகள் இருந்தாலே தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று போடப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றத்தின், ‘அரசியல் சாசன பெஞ்ச்’ விசாரிக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இதுபோன்று ஊழல் வழக்கில் மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் விவகாரத்தில் எப்படி முடிவு செய்ய வேண்டும் என்பது முழுக்க முழுக்க ஆளுநரின் அதிகார வரம்புக்குள்  இருக்கலாம். 

இந்த அடிப்படையில் கவனித்தால், ஓ. பன்னீர்செல்வம் விலகினால் மட்டுமே சசிகலா நடராஜன் முதலமைச்சராகி விடுவாரா அல்லது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஊழல் வழக்கும் தலைக்கு மேல் கத்தியாக தொங்குமா என்ற கேள்வி எழுகிறது. முதல் கேள்விக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவும் இரண்டாவது கேள்விக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பும் விடை கொடுக்கும் என்று தெரிகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டு ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர், வருகின்ற மே மாதம் ஓய்வு பெறுகிறார். ஆகவே, இந்த வழக்கில் எந்த நேரத்திலும் தீர்ப்பு வெளிவரலாம். 

ஜெயலலிதாவின் மரணம், வழக்கில் அவரது பகுதியை இரத்து செய்து விட்டது. ஜெயலலிதா மரணம் குறித்த தகவல் உச்சநீதிமன்றத்துக்கு சொல்லப்பட்டு, மற்றவர்களுக்கு மீண்டும் தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைக்க வாய்ப்பு வழங்கப்படுமா என்பதையும் உச்சநீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும். இப்படி பல்வேறு சட்டச் சிக்கல்களையும் இப்போது இருக்கின்ற முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை மாற்றினால் அ.தி.மு.க சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை. 

ஆகவே, முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் தொடரும் வரை அ.தி.மு.க ஆட்சிக்கு ஆபத்து ஏதும் இல்லை. ஆனால், அந்த நிலை மாறினால், அதன் பிறகு, ஏற்படும் சூழல்கள் உச்சநீதிமன்றம், மத்திய அரசு மற்றும் ஆளுநர் கையில்தான் இருக்கிறது என்பதுதான் இன்றைய தமிழக அரசியல் நிலவரம்.

- See more at: http://www.tamilmirror.lk/189562/-தம-ழக-ம-தல-வர-பதவ-சந-த-க-கப-ப-க-ம-சட-டச-ச-க-கல-கள-#sthash.ZhogakXT.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.