Jump to content

தமிழ் சினிமா 2016-ன் 10 நிகழ்வுகள்: பிரச்சினை முதல் பேரிழப்பு வரை


Recommended Posts

தமிழ் சினிமா 2016-ன் 10 நிகழ்வுகள்: பிரச்சினை முதல் பேரிழப்பு வரை

 

 
 
tamilcinema2016_3110769f.jpg
 
 
 

2016ம் ஆண்டு தமிழ் திரையுலகில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றில் பலராலும் கவனிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, பாராட்டப்பட்ட 10 முக்கிய நிகழ்வுகளின் பட்டியல் இதோ!

நடிகர் சங்கப் பிரச்சினை

nadigarsangam_2685363a.jpg

நாசர் தலைமையிலான புதிய நிர்வாகம் நடிகர் சங்கத்தில் பொறுப்பேற்றவுடன், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று அறிவித்தது. ஆனால், இந்தாண்டும் அதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது எனச் சொல்லலாம். சரத்குமார் உள்ளிட்ட பழைய நிர்வாகிகள் கணக்குகளை இன்னும் சரிவர ஒப்படைக்கவில்லை என்று புதிய நிர்வாகம் குற்றம்சாட்டியது. இதற்கு பழைய நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்தார்கள்.

மேலும், நடிகர் சங்கக் கட்டிடத்தை கட்டுவதற்காக முன்னணி நடிகர்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்றது. அதில் ஊழல் நடைபெற்று இருப்பதாக பழைய நிர்வாகிகள் குற்றம்சாட்டினார்கள். மேலும், நடிகர் சங்கப் பொதுக்குழுவில் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டவர்கள் நடிகர் சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்கள். இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது. அவ்வப் போது நடிகர் சங்கப் பிரச்சினைகளைப் பற்றிய செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

ரஜினிகாந்துக்கு பத்மவிபூஷன் விருது

rajini_2213657a.jpg

மத்திய அரசாங்கத்தால் அளிக்கப்படும் உயரிய விருதான பத்மவிபூஷன் விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. அவரோடு இயக்குநர் ராஜமெளலி மற்றும் ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற பாடகி சுசீலா

susila_2793458a.jpg

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப் பல இந்திய மொழிகளில் சுசீலா நாற்பதாண்டுகளாக பாடிவருகிறார். பத்மபூஷன் , தேசிய விருது, கலைமாமணி விருது, ஆந்திர மாநில அரசினரின் விருது ரகுபதி பெங்கையா விருது, கம்பன் புகழ் விருது உள்ளிட்ட பல விருதுகளை பி.சுசீலா பெற்றுள்ளார். திரைப்படத் துறையில் முன்னணிப் பாடகியாக திகழும் பி.சுசிலா 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதால் அதிக பாடல்களைப் பாடியவர் என்ற அடிப்படையில் கின்னஸ் சாதனை புத்தக்கதில் இடம்பிடித்தார்.

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் சுசீலா, "எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ண தாசன், வாலி போன்ற பெரிய கலைஞர்களோடு பணியாற்றியதை பெருமையாகக் கருதுகிறேன். எம்.எஸ்.வி இசையில் வெளியான ‘நாளை இந்த வேளை பார்த்து’ பாடலுக்குத்தான் எனக்கு முதல் முறையாக தேசிய விருது கிடைத்தது. இந்தப் பாடலை பதிவு செய்யும்போதே அதற்காக எனக்கு விருது கிடைக்கும் என்று எம்.எஸ்.வி கூறினார். அதேபோல கிடைத்தது மகிழ்ச்சி அளித்தது. இசைக்காகவே என் வாழ்க்கையை அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி. நல்ல வாய்ப்பு அமைந்தால் இப்போதும் பாடத் தயாராகவே இருக்கிறேன்." என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

குடுமிப்பிடி சண்டையில் பாரதிராஜா - பாலா

bala__bharathiraja_2807610a.jpg

'குற்றப்பரம்பரை' என்ற தலைப்பில் படம் உருவாக்குவதற்கு இயக்குநர் பாரதிராஜா - பாலா இருவரும் கடுமையாக விவாதித்துக் கொண்டனர். நீண்ட நாட்களாக "தனது கனவுப் படமான 'குற்றப்பரம்பரை' விரைவில் உருவாக்குவேன்" என்று தெரிவித்து வந்தார் பாரதிராஜா. இடையே விஷால், ஆர்யா, அரவிந்த்சாமி, அனுஷ்கா, ராணா உள்ளிட்ட நடிகர்களோடு பாலாவும் புதிய பட அறிவிப்பை வெளியிட்டார். ’குற்றப்பரம்பரை’ கதையை மையப்படுத்தி தான் படமாக்குகிறார் பாலா என்று பாரதிராஜா கொந்தளித்தார்.

எழுத்தாளர் ரத்னகுமார் பாலாவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். இறுதியில் பாலா, "வரலாற்று நிகழ்வை ஒருவர் மட்டும்தான் படமாக்கலாம் என்று எந்த விதியும் இல்லை. யார் வேண்டுமானாலும் படமாக்கலாம். பாரதிராஜாவும், ரத்னகுமாரும் என்னைப்பற்றி அவதூறாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுவரை 4 முறை என்னைப் பற்றி அவர்கள் பேசும்போது பொறுமையாக இருந்துவிட்டேன். இனிமேல் பொறுமையாக இருக்க முடியாது. இதற்கு மேலும் என்னைப் பற்றி பேசுவது அவர்களுக்கு நல்லதல்ல" என்று கடுமையாக சாடினார்.

அவசரகதியில் 'குற்றப்பரம்பரை' படத்துக்கு பெரும் விமர்சையாக பூஜை போட்டார் பாரதிராஜா. தற்போது வரை இருவருமே அப்படத்தை உருவாக்கவில்லை. எப்போது உருவாக்குவார்கள் என்பதற்காக விடை அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

ரஜினியின் அமெரிக்கா பயணம்

 

'2.0' படப்பிடிப்புக்கு இடையே, திடீரென்று ரஜினி அமெரிக்கா பயணமானார். எங்கிருந்து சென்றார், உடன் சென்றவர்கள் யார் உள்ளிட்ட எந்த ஒரு தகவலுமே வெளியாகாமல் இருந்தது. மீண்டும் அவருக்கு உடல்நிலையில் மறுபடியும் பிரச்சினை என பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. இதற்கு ரஜினி தரப்பில் எந்த ஒரு மறுப்புமே வெளியாகவில்லை. நீண்ட நாட்கள் ரஜினியுடன் சென்ற ஐஸ்வர்யா தனுஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அமெரிக்காவில் உள்ள கோயிலில் தரிசனம் மற்றும் 'கபாலி' விநியோகஸ்தர்கள் காட்சி ஆகியவற்றில் ரஜினி தோன்றி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

'கபாலி' மூலம் பெரும் விவாதம்

kabali1_2943648a.jpg

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'கபாலி'. பெரும் எதிர்பார்ப்போடு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முதல் நாள் டிக்கெட் விலை அதிகம், ஒதுக்கப்பட்ட சமுதாயத்தை மையப்படுத்தியது என பல்வேறு சர்ச்சைகளையும், விவாதங்களையும் உண்டாக்கியது. மேலும், அப்படத்தின் காட்சியமைப்புகளுக்கு எப்படி 'யு' சான்றிதழ் தணிக்கைக் குழுவால் வழங்கப்பட்டது என்று திரையுலகிலும் விவாதத்தை உண்டாக்கியது. படக்குழுவினரால் பெரும் லாபம் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், விநியோகஸ்தர்கள் தங்களுக்கு நஷ்டம் என்கிறார்கள். இப்படக்கூட்டணியான ரஜினி - ரஞ்சித் மீண்டும் இணையும் பட அறிவிப்பையும் வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினார்கள்.

கமல்ஹாசன்: வலியும், செவாலியே விருதும்

kamal1_jpg_1597505a.jpg

அமெரிக்காவில் 'சபாஷ் நாயுடு' முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பினார் கமல்ஹாசன். அவருடைய அலுவலகத்தில் மாடிப்படி இறங்கும் போது, காலில் அடிபட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதி, காலில் அறுவை சிகிச்சை என வலிகளில் சிக்கினார். இதனால் 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பு தொடங்க முடியாமல் போனது.

அதனைத் தொடர்ந்து கவுதமியும் கமல்ஹாசனைப் பிரிவதாக அறிவித்தார். ஏன் பிரிகிறோம் என்பதற்கு கவுதமி அளித்த விளக்கம் பெருவாரியாக சமூகவலைத்தளத்தில் ஷேர் பண்ணப்பட்டது.

2016ம் ஆண்டில் இந்த வலிகளைத் தாண்டி அவரை பெருமைப்படுத்தப்பட்டது பிரான்ஸ் அரசாங்கம் அளித்த 'செவாலியே விருது'. அவ்விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கமல்ஹாசன் அளித்த அறிக்கையில், "இனி நான் செய்ய வேண்டிய கலை இலக்கிய பணிக்கான ஊக்கியாகவே இவ்விருதினை நான் உணர்கிறேன். கலை கடற்கரையில் கைமண் அளவு அள்ளிவிட்ட பெருமை எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது என்பதை நான் உணர்கிறேன். வயதில்லாது என்றும் ஆர்ப்பரிக்கும் கலை கடல் அலைகள், இத்தகைய தருணங்களில் கரை மோதி, என் போன்றோர் முகத்தில் தெளித்து பெருவசம் மயக்கம் கலைத்து, உதடும் நனைத்து உப்பிட்டவர் நினைவை உணரச் செய்கிறது. இதுவரையிலான என் கலைப் பயணம், தனிமனிதப் பயணம் இல்லை என்பதை உணர்கிறேன்" என்று தெரிவித்தார்.

பெருமை சேர்த்த வெற்றிமாறன்

visaranai_2723511a.jpg

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் வெளியான ‘விசாரணை' இந்த ஆண்டு தமிழ் திரையுலகைப் பெருமைப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் உள்ள காவல் துறை மீதும் நீதி விசாரணை மீதும் கேள்வி எழுப்பிய படமாக இருந்தாலும், இந்திய அரசாங்கத்தால் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகவில்லை என்றாலும், அப்போட்டியில் பல்வேறு கட்டங்களைத் தாண்டியது. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் “அற்புதமான படம்” என்று புகழ்ந்தார்கள். 'சிறந்த படம்', 'சிறந்த உறுதுணை நடிகர்' மற்றும் 'சிறந்த எடிட்டிங்' என மூன்று தேசிய விருதுகளையும் வென்றது 'விசாரணை'

விவாதப் பொருளானார் சிவகார்த்திகேயன்

sivakarthikeyan1_3041584a.jpg

'ரஜினி முருகன்' மற்றும் 'ரெமோ' ஆகிய படங்களின் பெரும் வசூலால், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம்பிடித்தார் சிவகார்த்திகேயன். 'ரஜினி முருகன்' வெளியீடு சமயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மற்றும் 'ரெமோ' வெளியீட்டு சமயத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளில் சிக்கினார் சிவகார்த்திகேயன்.

'ரெமோ' நன்றி தெரிவிக்கும் விழாவில், "இந்தப் படம் வெளியாகும் வரை பிரச்சினை. எவ்வளவு தான் பிரச்சினைக் கொடுப்பீர்கள். எவ்வளவு கொடுத்திருக்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியும். நீண்ட நாட்களாக கஷ்டப்பட்டு வருகிறேன். நானோ அவரோ சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து படம் எடுக்க வரவில்லை. ரசிகர்கள் ரசிப்பதற்காக மட்டுமே படம் எடுக்க வருகிறோம். அதற்கு வேலை செய்ய விடுங்கள். கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், என்னையும் அவரையும் வேலை செய்ய விடுங்கள். இன்றைக்கு வரைக்கும் அவர் தூங்கவில்லை. நினைத்திருந்தால் நிறைய சம்பாதித்து எங்கேயாவது சென்று செட்டிலாகி இருக்கலாம். அனைவருமே ஏற்றிக் கொடுத்தது தான் இந்த மேடை. ஒரு படம் பண்ணி அனைவரையும் சந்தோஷப்படுத்தலாம் என்று ஆசையாக இருக்கிறது. என்றைக்காவது ஒரு நாள் புதிதாக ஏதாவது பண்ணிவிட மாட்டோமா என்ற எண்ணம் இருக்கிறது. நான் உங்களிடம் உதவியே கேட்கவில்லை. மக்களின் ஆதரவு இருக்கிறது. அனைவரிடமும் தயவு செய்து வேலை செய்ய விடுங்கள் என்று மட்டுமே கேட்கிறேன்." என்று கண்ணீர் மல்க பேசி சர்ச்சையில் சிக்கினார்.

அவருடைய பேச்சு தமிழ் திரையுலகில் மட்டுமன்றி, சமூக வலைதளத்தில் விவாதப் பொருளானார் சிவகார்த்திகேயன்.

தமிழ்த் திரையுலகின் பேரிழப்பு

08_MP_MUTHUKUMAR_1_2971970a.jpg

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியரான நா.முத்துக்குமாரின் மறைவு, திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும், கல்பனா, குமரிமுத்து, கலாபவன் மணி, பிலிம் நியூஸ் ஆனந்தன், வியட்நாம் வீடு சுந்தரம், ஜோதிலட்சுமி, தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம், பாடலாசிரியர் அண்ணாமலை, கே.என்.காளை, பாலமுரளி கிருஷ்ணா மற்றும் இயக்குநர் கே.சுபாஷ் ஆகியோர் இழப்பு தமிழ் திரையுலகுக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/தமிழ்-சினிமா-2016ன்-10-நிகழ்வுகள்-பிரச்சினை-முதல்-பேரிழப்பு-வரை/article9450947.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.