Jump to content

தமன்னாவும் நாடாளுமன்றமும் ஆடைகளும்


Recommended Posts

தமன்னாவும் நாடாளுமன்றமும் ஆடைகளும்
 

article_1483169136-Lakshmi-new.jpg- கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

இந்த ஆண்டு, பல்வேறு வழிகளில் மோசமானதாக அமைந்தது. உலகமெங்கிலும் அதிகரித்திருக்கும் வன்முறைகளும் பிரிவினைகளும், இந்த ஆண்டு எப்போது முடியுமென்ற எதிர்பார்ப்பையே, பல்வேறு தரப்பினருக்கும் ஏற்படுத்தியிருக்கும்.

ஆனால், விடைபெறும் நேரத்திலும், சர்ச்சைகளும் இரத்தங்களுமின்றி விடைபெறப் போவதில்லை என்ற திடசங்கற்பத்துடன், இவ்வாண்டு, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்கிறது.  

பிரதானமாக இரண்டு விடயங்கள், அண்மைய சில நாட்களில் பேசுபொருட்களாகியிருக்கின்றன. ஒன்று, இலங்கையின் நாடாளுமன்றம் சம்பந்தமானது. அடுத்தது, தமிழக நடிகை தமன்னா பற்றியது.

இந்த இரண்டு விடயங்களுமே எவ்வாறு ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவை என்றால், இரண்டுமே பெண்களின் ஆடைகள் பற்றியன.  
நாடாளுமன்றத்தில் பணிபுரியும் பெண்கள் அனைவரும், கைகளில்லாத ரவிக்கைகளை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது தான், முதலாவது செய்தி. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்குள், கைகளுள்ள இரவிக்கைகளையே அணிய வேண்டுமெனவும், அவ்வாறு கைகளில்லாத இரவிக்கைகளை அணிந்த பெண் ஊழியர்கள், வரவு - செலவுத் திட்டத்தின் போது, தமது பணிகளை ஆற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும், செய்தி தெரிவிக்கிறது.  
கைகளில்லாத இரவிக்கைகள், நாடாளுமன்றத்துக்குப் பொருத்தமற்றவை என்று, நாடாளுமன்ற அதிகாரிகள் கருதியதன் காரணமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாகக் கோபப்படுவதற்கு முன்னர், இது தொடர்பான செய்தியில் குறிப்பிடப்பட்ட “இது தொடர்பான அறிவித்தல், மூன்று மொழிகளிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது” என்ற பகுதி, “ஆகக்குறைந்தது மொழிக் கொள்கையையாவது ஒழுங்காக நடைமுறைப்படுத்தியிருக்கிறார்களே” என்ற “திருப்தியை” தந்தது. 

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், கைகளில்லாத இரவிக்கைகள், இலங்கையின் கலாசாரமாக இருந்திருக்கவில்லைத்தான். மாறாக, இரவிக்கைகள் இல்லாத சேலைகளும் அதற்கு முன்னைய காலத்தில் மேலங்கிகளே இல்லாத ஆடைகளும் (சீகிரிய குன்றில், இவ்வாறான சித்திரங்களைத் தான் இன்னமும் எமது சொத்து என்று கொண்டாடிவருகிறோம்) அதற்கு முன்னராக ஆடைகளே இல்லாத நிலைமையும் தான் இருந்தன. 

ஆகவே, கலாசாரத்தின்படி, கைகளில்லாத இரவிக்கைகள் தவறானவை என்ற உப்புச்சப்பற்ற வாதத்தைக் கருத்திற்கொள்ளத் தேவையில்லை.  

மாறாக, நிறுவன விதிப்படியான ஆடைக்கட்டுப்பாடு என்ற விடயத்தை முன்வைத்தால், எதற்காகப் பெண்களுக்கு மாத்திரம், தனியான கட்டுப்பாடு என்ற கேள்வி எழுகிறது. கைகளில்லாத இரவிக்கைகள் என்பன, தற்போது மிகவும் பொதுவானவையாக மாறிவிட்டன.

பெண்களின் உடலில் அதிக தோல் தெரிவது தான் பிரச்சினை என்றால், தற்போதைய தேசிய பாதுகாப்புச் சபை, தடை செய்வதற்குக் கருத்திற் கொண்ட முகத்தை மூடி முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகளையே அணியச் செய்யலாமே?   

பெண்களின் கைகளில் தெரியும் தோல் தான், நாடாளுமன்றத்தில் கௌரவத்தையும் கலாசாரத்தையும் இல்லாது செய்துவிடும் என்றால், அச்சபையின் கௌரவமும் கலாசாரமும், நூலளவில் தான் தொங்கிக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை, ஏற்றுக் கொள்கிறார்களா?

நாடாளுமன்றத்தில் உண்மையான கலாசாரம் தொடர்பான அக்கறை காணப்பட்டால், சபைக்குள் பெண் உறுப்பினர்கள் மீது ஆண் உறுப்பினர்களால் பாலியல் தொல்லை வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக, முழுமையானதும் வெளிப்படையானதுமான விசாரணைகளை நடத்த வேண்டும்.

வெறுமனே சாட்டுக்கு நடத்தப்படும் விசாரணைகள், இங்கு சேர்க்கப்படாது. வன்முறைகள், கொலை, கொள்ளை, ஊழல், வன்புணர்வுகள் போன்ற குற்றச்சாட்டுகளுடன், நாடாளுமன்றத்துக்குள் இன்னமும் இருக்கும் உறுப்பினர்கள், மீண்டுமொருமுறை சபைக்குத் தெரிவாவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆராய வேண்டும்.  

அரசியல் கட்சிகளின் பிரசார நிதி தொடர்பாக, தெற்காசியப் பிராந்தியமே மிகவும் தளர்வான சட்டங்களைக் கொண்டுள்ள நிலையில், இலங்கையில் அந்நிலைமை இன்னமும் மோசமாகக் காணப்படுகிறது. கட்சிகள், தமது பிரசார நிதிச் செலவீனங்கள் குறித்து, அறிக்கையிடத் தேவையில்லை.

தமது வருமானங்கள் தொடர்பில் அறிக்கையிடத் தேவையில்லை. ஆண்டுதோறும் வழங்கும் அறிக்கைகளே போதுமானவை. தனி வேட்பாளர்களாக இருந்தால், எந்தத் தடைகளும் இல்லை. எந்த அறிக்கைகளும் கிடையாது.

இவ்வாறான ஓட்டைகளை அடைத்து, சட்டத்துக்குப் புறம்பாக உழைக்கப்பட்ட பணத்தின் உதவியுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைபவர்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  

நாடாளுமன்றத்துக்குள் நடக்கும் அடி தடி தொடர்பாகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெண்களில் 95 சதவீதமானோர், இன்னமும் பாலியல் தொல்லைகளைச் சந்திக்கிறார்கள் எனவும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆண்களில் வெறுமனே 3 சதவீதமானோர் மாத்திரமே சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகுகிறார்கள் எனவும் காணப்படும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நிலைமைகளை மாற்றுவதற்கான முயற்சிகளில், இச்சபை ஈடுபட வேண்டும்.  

அதைவிடுத்து, பெண்கள் அணியும் இரவிக்கை தான் அச்சபையில் காணப்படும் பிரதான பிரச்சினை போன்று செயற்படுவது, முட்டாள்தனத்தின் உச்சக்கட்டமாகும்.  

ஏற்கெனவே, கொழும்பின் பிரபல தனியார் பாடசாலொன்று, தமது பாடசாலை மாணவர்களின் தாய்மாருக்கு, இவ்வாறான ஆடைக்கட்டுப்பாட்டை முன்வைத்து, கடும் விமர்சனங்களைச் சந்தித்திருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பெண்களின் ஆடைகள் தொடர்பில் கருத்து வெளியிட்டு, கடுமையான விமர்சனங்களைச் சந்தித்திருந்தார். இந்நிலையில் தான், நாட்டின் உயரிய சபையும், அதே பாதையில் பயணித்திருக்கிறது.  

இது இவ்வாறிருக்க, இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரொருவரும், பெண்களின் ஆடைகள் தொடர்பான சர்ச்சைக்குள் சிக்கிக் கொண்டுள்ளார்.

மூவேந்தர், குங்குமப் பொட்டுக் கவுண்டர், படிக்காதவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சுராஜ், தனது அண்மைய வெளியீடான கத்தி சண்டை திரைப்படம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போது, நடிகைகளை இழிவுபடுத்தும் விதமாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். (இதில் சுவாரசியமாக, படத்தின் தலைப்பே வித்தியாசமானது. கத்தியைக் கொண்டு சண்டை போடுதல் என்ற அர்த்தத்தில் ‘கத்திச் சண்டை’ எனத் தலைப்பிட நினைத்து, இலக்கணத் தவறால் ‘கத்தி சண்டை’ எனப் பெயரிடப்பட்டதா, இல்லையெனில், திரைப்படம் முழுவதும் சத்தமிட்டுக் கொண்டு சண்டை போடுகின்றனர் என்ற அர்த்தத்தில் ‘கத்தி சண்டை’ என்று பெயரிடப்பட்டதா தெரியவில்லை)  

“நாமெல்லாம் ‘லோ கிளாஸ் ஓடியன்ஸ்’” என்று தொடங்கும் அவரது அக்கருத்தில், பிரதான நடிகரென்றால் அடிதடியில் ஈடுபட வேண்டுமெனவும் நடிகையென்றால் கவர்ச்சியாக நடிக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்படுகிறது. நடிகைகள், சேலையணிந்து வருவதைப் பார்ப்பதற்கு, பணம் கொடுத்துத் திரையரங்குக்குச் செல்லும் எவரும் விரும்புவதில்லை எனத் தெரிவிக்கும் அவர், தனது படங்களிலுள்ள ஆடை வடிவமைப்பாளர், நடிகையின் முழங்காலுக்குக் கீழ் ஆடைகள் இருக்குமாறு வடிவமைத்தால், அதை மாற்றுமாறு உத்தரவிடுவதாகவும் பெருமையுடன் சொல்லியிருந்தார்.  

இதில் இரண்டு விடயங்கள்: தனது திரைப்படங்களைப் பார்க்கும் இரசிகர்கள் அனைவருமே, வெறும் தசைத்துண்டங்களைப் பார்ப்பதற்காகத் தான் வருகிறார்கள் என்ற அவரது அனுமானம், அதில் முதலாவது. வெறும் களிப்புக்காகத் திரைப்படங்களைப் பார்ப்போர் கூட, நடிகைகளின் கவர்ச்சியைப் பார்ப்பதற்காக மாத்திரம் திரையரங்குக்காகச் செல்கிறார்கள் என்பது, எவ்வளவு தூரம் உண்மையானது எனத் தெரியவில்லை. 

ஏனெனில், வெறுமனே கவர்ச்சி அல்லது பாலியல் கிளர்ச்சியைத் தூண்டும் விடயங்கள் தேவையெனில், இணையம் முழுக்க, அவை காணப்படுகின்றன. எதற்காகப் பணம் கொடுத்துத் திரையரங்குக்குச் செல்ல வேண்டும். இது, இரசிகர்களை மட்டந்தட்டும் ஒரு கருத்தாகும்.  

ஹிந்தி சினிமாவின் மாபெரும் நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன், கலந்துரையாடலொன்றில் அண்மையில் தெரிவித்த, “பார்வையாளர்கள் எங்களைச் சிறந்த திரைப்படங்களை உருவாக்க வைக்கிறார்கள். ‘இந்த விடயங்களை நாங்கள் ஏற்கெனவே பார்த்துவிட்டோம்.

திரும்பத் திரும்பச் செய்து, எங்களுக்கு அலுப்பூட்டாதீர்கள்’ என அவர்கள் சொல்கிறார்கள். இது, சினிமாவுக்கு உதவுகிறது” என்ற கருத்தோடு ஒப்பிடும் போது, சுராஜின் கருத்து, தனது துறை மீது எந்தளவுக்குப் புரிதலுடன் அவர் இருக்கிறார் என்ற கேள்வியை எழுப்புகிறது. அவரது கடைசி 2 திரைப்படங்களும் தோல்வியடைந்தன என்பதோடு, கத்தி சண்டை திரைப்படத்துக்கும் சிறப்பான விமர்சனங்கள் காணப்படவில்லை என்பன, அக்கேள்விக்கான விடைகளாகவும் உள்ளன.

இரண்டாவது விடயம் தான், இங்கு பிரதானமானது. நடிகைகளை, வெறுமனே ஊறுகாயாகப் பயன்படுத்தும் தமிழ் சினிமாவின் போக்கைத் தான் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இது, சுராஜோடு தொடங்கியதும் இல்லை, அவரோடு முடியப் போவதும் இல்லை. ஆனால், இவ்வளவு வெளிப்படையாக இவ்விடயத்தை ஏற்றுக் கொண்டவர்கள் கிடையாது. தமிழ் சினிமாவில் காணப்படும் மாபெரும் (தொற்று)நோய், தனக்கிருப்பதாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதுவும், அது தொடர்பில் பெருமையுடன்.  

இதில் குறிப்பிடத்தக்கதாக, இயக்குநர்களை மாத்திரம், இவ்விடயத்தில் தவறு கூற முடியாது. அதிகப்படியான கவர்ச்சிக்கு ஒரு நடிகை இல்லையென்று கூறினால், இன்னொருவரைக் களமிறக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதன் காரணமாகவே, இவ்வாறான கேவலமான கருத்தியல்களைக் கொண்டவர்களின் திரைப்படங்களுக்கு, இன்னமும் நடிகைகளை ஒப்பந்தம் செய்யக்கூடியதாக அமைந்திருக்கிறது.

ஆண்களால் ஆதிக்கம் செய்யப்படும் திரையுலகத்தில், ஆண்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பிரச்சினை தொடர்பாக, நடிகைகளும் தங்களது பங்கை ஆற்ற வேண்டிய தேவையிருக்கிறது. அதில், சுராஜின் கருத்துக்கு உடனடியாகவே கண்டனம் வெளியிட்டு, அவரை மன்னிப்புக் கோரச் செய்திருக்கும் தமன்னாவையும் நயன்தாராவையும், இதில் பாராட்டித் தான் ஆக வேண்டும்.  

இவ்வாறு, தமன்னாவாக இருக்கலாம், இலங்கை நாடாளுமன்றத்தில் பணிபுரியும் பெண்ணாக இருக்கலாம். ஆளுமைகளையும் திறமைகளையும் செயற்பாடுகளையும் தாண்டி, பெண்களது ஆடைகள் தான், அவர்களைக் கணிப்பிடும் பிரதான கருவியாக இன்னமும் காணப்படுகின்றன.

ஒன்றில், பெண்களின் ஆடைகள் போதாது என்கிறார்கள், இல்லையெனில் ஆடைகள் அதிகமாகிவிட்டன என்கிறார்கள். இந்நிலைமை, நாமெல்லோரும் வெட்கப்பட வேண்டிய ஒன்று.  இதற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது, எம்மனைவரினதும் பொறுப்பாகும்.  

- See more at: http://www.tamilmirror.lk/188964/தமன-ன-வ-ம-ந-ட-ள-மன-றம-ம-ஆட-கள-ம-#sthash.WcWZ2mR7.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.