Sign in to follow this  
Followers 0
sathiri

அவலங்கள் .சிறுகதை தொகுப்பு

9 posts in this topic

உண்மை மனிதர்களின் கதைகள்

-     கருணாகரன்
 

Avalagal%2BFb.jpg “ஆயுத எழுத்து“ என்ற புனைவின் ஊடாக தமிழ்வாசிப்புப் பரப்பில் அதிகமாக அறியப்பட்டவர் சாத்திரி. குறிப்பாக “ஆயுத எழுத்து“ முன்வைத்த அரசியலுக்காகவும் அது வெளிப்படுத்திய உள்விபரங்களுக்காகவும் உண்டாகிய சர்ச்சைகள், விவாதங்கள் மூலமாக சாத்திரி பரவலான அறிமுகத்தையடைந்தார். அதற்கு முன்பாக அவர் “ஒரு பேப்பர்“ என்ற பத்திரிகையிலும் “அவலங்கள்” என்ற தன்னுடைய இணையத்தளத்திலும்  பத்திகளையும் கதைகளையும் எழுதியிருந்தார். அவையும் சர்ச்சைகளைக் கிளப்பியதுண்டு. சாத்திரியின் அரசியற் பார்வை, பெண்ணிய நோக்கு, வரலாற்றுக் கண்ணோட்டம், யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளும்முறை போன்றவற்றில் பலருக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகளும் மறுப்புகளும் உண்டு. தனக்கெதிராகக் கடுமையான மறுப்புகளும் விமர்சனங்களும் உண்டென்று சாத்திரிக்கும் நன்றாகத் தெரியும். அவற்றின் தாற்பரியங்களையும் அவர் அறிவார். ஆனால், தன்னுடைய நிலைப்பாட்டை அவர் எதன்பொருட்டும் விட்டுக் கொடுப்பதில்லை. தான் தேர்ந்து கொண்ட முறையில் தன்னை முன்கொண்டு செல்வதிலேயே குறியாக இருப்பார். தன்னுடைய இலக்கை எட்டுவதே இதனுடைய அடிப்படை. இதற்கு ஒரு அடிப்படைக்காரணமும் பின்னணியும் உண்டு.விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக இருந்தவர் சாத்திரி.  தாம் கருதும் இலக்கை அடைவதையே குறியாகக் கொள்வது புலிகளுடைய இயல்பும் குணாம்சமுமாகும். அதற்கிடையில் உள்ள பிரச்சினைகளில் அவர்கள் கவனமோ கரிசனையோ கொள்வது குறைவு. மைய இலக்கே கவனப்புலத்தில் துலங்கும் குறி. அதை நோக்கியே முன்னகர்வர். இதுவே புலிகளைப் பெருந்தளத்தில் அடையாளப்படுத்தியது. இந்தக் குணாம்சம் சாத்திரியிடத்திலும் வலுவாக இருப்பதாகவே கருதுகிறேன். இந்தக் குணாம்சத்தை எதிர்ப்போரும் தவிர்க்கமுடியாமல் இதையும் இந்தக் குணாம்சம் உண்டாக்கும் விளைவுகளையும் கவனிக்கத் தவறுவதில்லை. சாத்திரி மீதான கவனமும் இப்படித்தான். சாத்திரியை ஆதரிப்போர் மட்டுமல்ல, அவரை எதிர்ப்போரும் அவரைத் தவறாமல் கவனிக்கிறார்கள். இதனால்தான் சாத்திரி அதிகமானவர்களால் வாசிக்கப்படுகிறார். புலிகளுடைய வீழ்ச்சிக்குப் பிறகு சாத்திரியின் எழுத்துகளைப் பற்றி, புலிகளைச் சேர்ந்தவர்களிடத்திலும் எதிர்நிலையில் இருப்போரிடத்திலும் ஆதரிப்பும் எதிர்ப்பும் விமர்சனங்களும் உண்டு. புலிகளின் கடந்த காலத்தைத் தன்னுடைய எழுத்துகளின் வழியாக சாத்திரி, திறந்து வருகிறார். இதனால் பொதுவெளி அறியாதிருந்த புலிகளுடைய பல விசயங்கள் வெளியே தெரியவந்தன. இன்னும் அப்படி திறக்கப்பட்டு வருகின்றன. இதுவே சாத்திரி மீதான கவனிப்புக்கும் விமர்சனங்களுக்கும் காரணமாகின்றன.இருந்தாலும் சாத்திரி அதற்கெல்லாம் அப்பால், இன்னும் புலிகளின் தொடர்ச்சியாகவே இருக்கிறார். அதேவேளை அதிலிருந்து இன்னொரு வழியில் மீறிக்கொண்டுமிருக்கிறார். இந்த மீறலின் விளைவாக, புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் உண்டாகியிருக்கும் தமிழ் மக்களுடைய அரசியற் பிரச்சினையை அணுகுவதிலும் அதற்கான தீர்வு முறையிலும் சாத்திரி சற்று வேறான புரிதலையும் பார்வையையும் கொண்டிருக்கிறார். அதை அவர் பகிரங்கமாகவே எழுதி வெளிப்படுத்தியும் வருகிறார். இவையும் சாத்திரியைச் சர்ச்சைக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன. இதில் சாத்திரியின் சிறப்பான அம்சம் என்னவென்றால், அவர் தன்னை ஒளித்து, மறைத்து விளையாடுவதில்லை. ஆட்களுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றமாதிரி வளைந்து நெளியும் இயல்பு சாத்திரியிடம் கிடையாது. புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், அந்த அமைப்பிலிருந்த பலர் சத்தமின்றி ஒதுங்கி விட்டனர். வாழ்க்கைச் சிரமங்களில் அவர்களுடைய நாட்களும் மனமும் கரைந்து போய்விடுகிறது. ஒருசாரர் இன்னும் தீவிரமாகப் பேசி வருகின்றனர். அவர்களுடைய கற்பனைச் சித்திரங்கள் அதற்கேற்ற வகையில் விரிந்து கொண்டே போகின்றன. சிலர் அமுங்கிக்கொண்டு, தங்களுடைய கைகளில் நியாயத் தராசை எடுத்து வைத்து, எல்லாவற்றையும் நிறுத்துத் தீர்ப்பெழுதிக் கொண்டிருக்கின்றனர். சாத்திரி, இவற்றிலிருந்து சற்று வேறுபட்டு, தனக்குப்பட்டதை பகிரங்க வெளியில் வைத்து விவாதிக்கிறார். விவாதிக்கக் கோருகிறார். இப்படியான ஒரு நிலையிலேயே, அவர்  பிரபாரகனுடைய மரணம் பற்றிய குழப்பமான கதைகளின் போது, அவருக்கான அஞ்சலியைச் செலுத்தி, தான் அஞ்சலி செலுத்தும் படத்தையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார். இதுவும் சாத்திரி மீது சர்ச்சைகளை உண்டாக்கியது. தொடர்ந்து தமிழ் நாட்டின் “புதிய தலைமுறை“ என்ற வார இதழில் “அன்று சிந்திய இரத்தம்“ என்ற தொடரையும் எழுதினார். அதுவும் சர்ச்சைகளைக் கிளப்பியது. இப்படியே சாத்திரி சர்ச்சைகளின் நாயகனாக கடந்த பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இப்பொழுது சாத்திரி எழுதிய கதைகள் தொகுக்கப்பட்டு, ஒன்றாக வருகின்றன. இவையும் சர்ச்சைகளை உண்டாக்கக்கூடிய குணாம்சங்களைக் கொண்டேயிருக்கின்றன.சாத்திரி யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து வளர்ந்தவர். அங்கிருந்தே தமிழீழத்தைக் கனவு கண்டவர். அந்தக் கனவுக்காக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவர். பல ஆண்டுகள் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இயக்கத்தின் உறுப்பினராக இருந்த செயற்பட்ட சாத்திரி, இப்பொழுது ஒரு பிரான்ஸ்வாசி. இலங்கையில் தனிநாட்டுக்காக, தமிழீழத்துக்காகப் போராடிய சாத்திரிக்குக் கிடைத்தது இரவல்தாய்நாட்டில் விதிக்கப்பட்ட வாழ்க்கையே.  இதுதான் இன்று பல்லாயிரக்கணக்கான தனிநாடு காண்பிகளின் நிலவரமும் யதார்த்தமும் உண்மையும். சாத்திரியிடம் இப்பொழுதிருப்பது பிரான்ஸ் நாட்டுப் பாஸ்போட். பிரான்ஸ் குடியுரிமை. தமிழீழம் கனவாகி விட்டது. நினைவுகளில் கொதித்துத் ததும்பும் கனலாகியுள்ளது சொந்த ஊரும் போராட்டமும். சாத்திரியின் இந்தக் கதைகளும் ஏறக்குறைய அப்படியானவையே. நினைவும் கனவும் கொதிப்பும் கொந்தளிப்புகளும் நிறைந்தவை. இந்த நினைவுகளையும் கொதிப்பையும் கனவையும் அவர் காண்பிக்கின்ற மனிதர்களும் கொண்டிருக்கிறார்கள். சாத்திரியும் சாத்திரியின் மனிதர்களும் வெவ்வேறானவர்களல்ல. ஒருவருடன் ஒருவர் ஒன்றித்து வாழ்ந்தவர்கள். அது ஊரிலென்றாலும் சரி, ஊர்விட்டுப்பெயர்ந்து இந்தியாவிலோ, பிற புலம்பெயர் நாடுகளிலோ என்றாலும் சரி, பிற நாடுகளில் சந்திப்பவர்களாக இருந்தாலும் சரி, எந்தத் திசைக்குப் பெயர்ந்தாலும் ஏதோ ஒரு வகையில் ஒன்றாகவே இருப்பவர்கள். எனவேதான் சாத்திரியின் கதைகள் அவரையும் அவரோடிணைந்த மனிதர்களையும் இவர்களெல்லாம் இயங்கும் காலத்தையும் சூழலையும் ஒரு தொடர்கோட்டில் மையப்படுத்தியிருக்கின்றன. இந்த மையப்படுத்தல் பல கதைகளை புனைவுக்குப் பதிலாக அ புனைவு போல உணரச் செய்கிறது. மறுவளமாக அ புனைவுகள் புனைவுருக்கமாகின்றன. இது சாத்திரியிடமுள்ள பண்பு மட்டுமல்ல, தம்முடைய அனுபவங்களையும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் மையப்படுத்தி எழுவோருடைய பண்பாகும்.அனுபவங்களையும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் மையப்படுத்திப் புனைவை உண்டாக்கும்போது அடிப்படையில் ஒரு பிரச்சினை உண்டாகிறது. புனைவின் சாத்தியங்களும் நுட்பங்களும் போதாமையாக இருந்தால், அது தனியே சம்பவங்களின் விவரிப்பாகவும் ஒருவருடைய டயறிக் குறிப்பாகவும் சுருங்கித் தட்டையாகி விடும். அதற்கப்பால், அனுபவங்களையும் புதிய உணர்கையையும் வரலாற்றின் வேர்களில், காலத்தின் சுவடுகளில் வைத்து புனைவாக்கம் செய்யும்போது அது ஒரு வகையான மாயத்தன்மையைப் பெற்றுக்கொள்கிறது. இது புனைவை மேம்படுத்தி, வரலாற்றுக்கும் அனுபவத்துக்கும் புனைவுக்குமிடையில் அந்தரத்தில் மிதக்க வைக்கிறது. இந்த அந்தர மிதப்பில் மிதக்கும் வாசகர்கள், வரலாற்றிலும் அனுபவத்திலும் புதிய உணர்கை என்ற கற்பனையிலும் அவ்வப்போது தொட்டும் பட்டும் கொள்ளும்போது, ஒருவிதமான ரசாயனத்தன்மையை உணர்ந்து கொள்கின்றனர். இதுவே புனைவை அவர்களோடு ஒன்றச் செய்கிறது. அல்லது புனைவோடு அவர்கள் ஒன்றிவிடும்படியாகிறது. இப்படி வரும்போது, அவர்கள் வரலாற்றைத் தொட்டுச் செல்லும் அல்லது வரலாற்றின் மீது தனது படைப்பைக் கட்டியெழுப்பும் படைப்பாளியைச் சந்தேகிப்பதற்கோ கேள்விக்குட்படுத்துவற்கோ சந்தர்ப்பங்கள் குறைவு. கலையின் வெற்றி இங்கேதான் வலுவாகிறது.ப. சிங்காரத்தின் “புயலிலே ஒரு தோணி”,  பாவண்ணனின் “சிதைவுகள்”, சு. வெங்கடேசனின் “காவல் கோட்டம்”,  ஜெயமோகனின் “வெள்ளையானை”, ரங்கசாமியின் “சாயாம் மரண ரயில்”, பிரபஞ்சனின் “வானம் வசப்படும்” சி.சு.செல்லப்பாவின் “சுதந்திரதாகம்” கி.ராவின் “கோபல்ல கிராமம்” தோப்பில் முகமதுமீரானின் நாவல்கள், அர்ஷ்யாவின் நாவல்கள், கே. டானியலின் ”கோவிந்தன்”, “அடிமைகள்”, “தண்ணீர்” சோபாசக்தி, யோ.கர்ணன் எனப் பலருடைய புனைவுகள், சயந்தனின் “ஆதிரை“, விமல் குழந்தைவேலின் ”கசகறணம்“ வரலாற்று நிகழ்ச்சிகளையும் அதனோடிணைந்த பாத்திரங்களையும் புனைவுப் பாத்திரங்களோடும் புனைவு நிகழ்ச்சிகளோடும் கலந்து நமக்கு முன்னே இன்னொரு வரலாறாகவும் புனைவாகவும் விரிந்திருக்கின்றன. சாத்திரி, ஆயுத எழுத்தில் மெய்யான மனிதர்களையும் மெய் வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டு, புனைவை உருவாக்கியதைப்போல, இங்கேயுள்ள கதைகளும் மெய்வரலாற்றின் அடித்தளத்தில், மெய்யான மனிதர்களுடன் மங்கியதொரு புனைகளமும் புனையப்பட்ட மனிதர்களுமாகக் கலந்து ஒரு கதைவெளியை உண்டாக்குகின்றன. இந்தக் கதை வெளியை சாத்திரி தன்னுடைய அனுபவத்தில் விரிந்த எல்லைகளின் வழியாக விரிக்கிக் காட்டுகிறார்.2006 தொடக்கம் 2016 வரையான காலப்பகுதிக்குள் எழுப்பட்டிருக்கும் இந்தக் கதைகள் 1970 களில் இருந்து 2016 வரையான காலப்பகுதியைக் கொண்டியங்குகின்றன. இந்தக் காலவெளியில் ஈழத்திலும் ஈழத்தமிழர்கள் ஊடாடும் பிற புலங்களிலும் அவர்கள் வாழ்கின்ற நிலைமைகளில் சந்தித்த சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு, வாழ்க்கை நெருக்கடிகளே இந்தக் கதைகளின் பொருள்மையம். அதிலும் கூடுதலான கதைகளில் பெண்களுடைய பிரச்சினைகளே பேசப்படுகின்றன. சாதி ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெண்கள் எப்படியெல்லாம் ஆண் நிலைச் சமூகத்தினால் பாதிப்படைகிறார்கள், சுரண்டவும் அடக்கவும் படுகிறார்கள் என்பதைக் கவனப்படுத்தியிருக்கிறார் சாத்திரி. அநேகமான கதைகளின் தலைப்பே ”ராணியக்கா“, ”மலரக்கா”, “மல்லிகா”, ”கைரி”, ”அலைமகள்”, என்றே உள்ளன. கதைகளின் மையப்பாத்திரமே பெண்கள்தான். இதில் “கைரி“ என்ற கதை இந்தத் தொகுதியின் ஆன்மா எனலாம். மிக எளிய அடிநிலைப் பெண் ஒருத்தி, சமூக (சாதி) ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலிகொள்ளப்படுவதைச் சாத்திரி மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். எந்தக் குற்றமும் செய்யாத, குற்றங்களையே விரும்பாத ஒரு முதிய கூலிப்பெண் எப்படி அரசியல் படுகொலையொன்றில், அநியாயமாகப் பலியிடப்படுகிறார் என்பதையும் ஆயுதம் தூக்கியவர்கள் எப்படியெல்லாம் தீர்ப்புகளை வழங்கினர் என்பதையும் சாத்திரி எதார்த்தமாக விளக்கி விடுகிறார். கைரியைப்போல இந்த மண்ணில் பலியிடப்பட்டவர்கள் ஒன்று இரண்டல்ல. ஆயிரக்கணக்கில். தன்னை எல்லாவகையிலும் சுரண்டவும் பலியிடவும் முனைகின்ற அனைவரையும் நல்லவர்கள் என்று எண்ணுகின்ற கைரியின் மனம் நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. ஆயிரமாயிரம் விழிகளைத் திறக்க முனைகிறது. கைரியின் மனமே மனித வாழ்க்கையின் சாரம்சமாக கால நதியில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறோம். கோடிக்கணக்கான சாமானிய மக்களின் அறம் வாழ்க்கையோடிணைந்து, இப்படித்தான் உலகெங்கும் உள்ளது. ஆனால், அவர்களே பலியிடப்படுகிறார்கள். அப்படியென்றால், இத்தகைய பேரன்புடைய மனதை எப்பொழுதும் இந்த உலகத்தின் அதிகார அடுக்குகள் தினமும் பலியெடுத்துக்கொள்கின்றன என்று சொல்லலாமா? என்றால், நிச்சயமாக அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இயக்கங்கள் கோலோச்சிய காலத்தில், இலங்கையில் ஆயுதம் தாங்கியவர்கள் எப்படியெல்லாம் பொது மக்களை இலக்காக்கினார்கள் என்பதற்கு இந்தக் கதை ஒரு இரத்த சாட்சியம்.கைரிக்கு நிகரான இன்னொரு கதை “மலரக்கா“. பதின்ம வயது ஆணின் மனவுலகையும் வயது கூடிய ஆணைக் கணவனாகத் திருமணம் முடித்து வைப்பதால் ஏற்படும் பெண்ணின் வாழ்க்கை நெருக்கடிகளையும் பாலியல் பிரச்சினைகளையும் சொல்லும் இந்தக் கதையும் நம்மை நோக்கிக் கேள்விகளை எழுப்புவதே. மலரக்காவை முழுமையாகப் புரிந்த கொண்ட ஆணாக இருப்பவனே, அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக, ஒரு கட்டத்தில் கூட இருக்கத்தயாரில்லாத யதார்த்தத்தையும் உண்மையையும் கோழைத்தனத்தையும் சாத்திரி தெளிவாக்குகிறார். இப்படி மறைவிடங்களில் பதுங்கும் கள்ள இதயங்களை நோக்கி ஒளியைப்பாய்ச்சும் வேலைகளே சாத்திரியின் முயற்சிகள்.“கைரி“ முன்வைக்கின்ற நிலைக்கு மாறான இன்னொரு முன்வைப்பைக் கொண்ட கதை “பீனாகொலடா“. தமிழ்நாட்டில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்சிசுவை வெறுக்கும் சமூகக் கொடுமையை வைத்து எழுதப்பட்டது. பெண் குழந்தைகளையே பெற்றதற்காக வெறுத்து ஒதுக்கப்படும் மல்லிகா, பின்னாளில் அதே சமூகத்தில் அங்கீகாரம் பெறுவதற்கிடையிலான வாழ்க்கையைக் குறித்த முன்வைப்பைச் செய்யும் கதை. மல்லிகாவின் இடைப்பட்ட வாழ்க்கை மீதான பண்பாட்டுக் கேள்விகளைவிட பொருளாதார மினுக்கமே எல்லாவற்றையும் மதிப்பீடு செய்கிறது என்பதைக் கதை உணர்த்துகிறது.ஈழத்திலும் ஈழத்தமிழர்கள் பெரும்பாலும் ஊடாடும் புலம்பெயர் சூழலிலும் இந்தியா மற்றும் சிங்கப்புரிலுமாக இந்தக்கதைகளின் களங்கள் விரிக்கப்பட்டுள்ளன.. ஆனால். கதைகளில் இடங்கள் குறிப்பிடப்படுகின்றனவே தவிர, அவற்றைப்பற்றிய கால, இடச் சித்திரிப்புகளோ, காட்சிப்படுத்தலோ குறைவு. சாத்திரியின் முயற்சியே கதைகளைச் சொல்லி விடுவதில்தான் கவனமாக உள்ளது. அவற்றைச் சித்திரிப்பதில் அல்ல. அவருக்கு கதையே முக்கியம். அதைச் சொல்லி விடவேணும். அவ்வளவுதான். அந்தக் கதைக்குள்ளால் அவர் பேச முற்படும் உண்மைகளை உணர்த்தி விடுவது. இதற்காக அவர் கதையை சுவாரசியப்படுத்துவதற்கான விசைகூடிய மொழிதலைக் கொள்கிறார். சுவாரசியமான மனநிலைகளையும் சம்பவங்களையும் சேர்த்துக்கொள்கிறார். இதில் கூடுதலான ஈர்ப்பை அளிப்பன, விடுதலைப்புலிகள் அமைப்போடு தொடர்பான கதைகள். ”முகவரி தொலைத்த முகங்கள்“ சாத்திரியின் ஆயுத எழுத்தை ஞாபகப்படுத்துகிறது. புலிகளின் ஆயுதக்கப்பல்களைப்பற்றிப் பலரும் கேள்விப்பட்டதுண்டு. அந்த ஆயுதக்கப்பல்களை ஓட்டிக்கொண்டிருப்போரைப்பற்றியும் அவர்களுடைய வாழ்க்கையைப்பற்றியும் அநேகருக்குத் தெரியாது. சாத்திரி அந்த வாழ்க்கையை இந்தக் கதையில் திறக்கிறார். இதைப்போல, இன்னொரு தளத்தில், இறுதிப்போர்க்காலத்தில், புலிகளை ஆயுத ரீதியாகப் பலப்படுத்துவதற்காக என்று கூறி, புலம்பெயர் நாடுகளில் புலிகளின் ஆதரவாளர்களும் புலிகளின் செயற்பாட்டார்களும் பெரும் நிதிச் சேகரிப்புகளில் ஈடுபட்டனர். இதற்காகப் பெரும்பாலான ஈழத்தமிழர்கள், தங்களுடைய சக்தியையும் மீறி, வங்கிகளில் பெருந்தொகைப்பணத்தைக் கடன்பட்டுக் கொடுத்திருந்தனர். புலிகளின் வீழ்ச்சிக்குப்பின்னர் அந்த நிதி உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்படவில்லை. அந்த நிதிக்கான கணக்குகளும் காட்டப்படவில்லை. இதனால் புலம்பெயர் தமிழர்களில் பலர் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினை தொடக்கம், அகதி அந்தஸ்துக்கோருவதற்காக முயற்சிக்கும் வழிமுறைத்தவறுகளின் விளைவுகள், இறுதி விளைவுகளை எப்படி உண்டாக்குகின்றன என்பது வரையில் புலம்பெயர் சமூகத்தின் கதைகளையும் அவலங்களையும் சாத்திரி பேசுகிறார். போர் முடிந்த பிறகும் பயங்கரவாத முத்திரையை எப்படிச் சாதாரணமானவர்களின் மீது சட்டம், நீதி, மனித உரிமைகள், ஜனநாயக விழுமியங்கள் எல்லாவற்றுக்கும் அப்பால் சென்று இலங்கை அரசாங்கம் குத்துகின்றது என்பதை “அகதிக் கொடி“ என்ற கதையில் வெளிப்படுத்துகிறார். இப்படி சாத்திரியின் கத்திகள் பல தரப்பிலும் விழுகின்றன. அப்படியே அது இந்தியப்படைகள், இலங்கை அரசு, அதன் படைகள் மீதும் விழுகிறது. சமூகத்தின் மீதும், பண்பாட்டின்மீதும் இயக்கத்தின் மீதும் விழுகிறது. தான் வாழும் காலத்தையும் வரலாற்றையும் அதிகார அமைப்புகளையும் விசாரணை செய்யாமல் ஒரு எழுத்தாளன் இருக்க முடியாது என்பது சாத்திரியின் நம்பிக்கை. இதற்காக அவர் தன்னையும் ஒரு வகையில் பலிபீடத்தில் வைக்கிறார். அதேவேளை இன்னும் இந்தச் “சக்கைச் சிறி” வெடிகுண்டுகளோடுதான் திரிகிறார். கந்தகம் நிரப்பப்பட்ட கதைகளின் வெடி குண்டுகளோடு.இந்தக் கதைகளை ஊன்றிக் கவனித்தால், இவற்றில் ஒரு வரலாற்று அடையாளத்தைக் காண முடியும். அதேவேளை ஒரு காலகட்டத்தின் முகத்தையும் உணரலாம். சாத்திரி போராளியாகவும் தனித்தும் உலாவிய இடங்களின் தடங்கள் தெரிகின்றன. அதில் ஒளியும் இருளும் உண்டு. இவையெல்லாம் இணைந்து புனைவாகவும் நிஜமாகவும் இணைந்திருக்கின்றன. மறுவளமாகச் சொன்னால் உண்மை மனிதர்களின் கதைகள் இவை. என்பதால் வலியும் துயரும் மகிழ்வும் வாசனையும் அழுக்கும் தூய்மையும் விருப்பும் வெறுப்பும் இனிப்பும் கசப்பும் இவற்றில் உண்டு.

 

 

 

 
2 people like this

Share this post


Link to post
Share on other sites
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வாழ்த்துக்கள் சாத்திரி

நன்றி

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றி சாத்திரியார்....! 

உங்களின் இந்தப் படைப்பு இன்னும் எனக்கு கிடைக்கவில்லை . பாரிஸ் அறிவாலயத்தில் கிடைக்குமா.....!

Share this post


Link to post
Share on other sites
45 minutes ago, suvy said:

பகிர்வுக்கு நன்றி சாத்திரியார்....! 

உங்களின் இந்தப் படைப்பு இன்னும் எனக்கு கிடைக்கவில்லை . பாரிஸ் அறிவாலயத்தில் கிடைக்குமா.....!

இப்போதுதான் வெளிவந்துள்ளது ..பாரிசில் கிடைக்கும் என நினைக்கிறேன்

 

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் சாத்திரியார். இலண்டனில் எங்காவது கிடைக்குமா? பெளசரிடம் இருந்தால் சொல்லுங்கள்

Share this post


Link to post
Share on other sites
On 03/01/2017 at 7:47 PM, கிருபன் said:

வாழ்த்துக்கள் சாத்திரியார். இலண்டனில் எங்காவது கிடைக்குமா? பெளசரிடம் இருந்தால் சொல்லுங்கள்

அனேகமாக கிடைக்கும் என நினைகிறேன்

 

Share this post


Link to post
Share on other sites

பாரிசில் இன்னும் வரவில்லை . நான் சென்றவாரம் பாரிஸில் விசாரித்தேன். ஆயுதஎழுத்து தான் இருக்கு என்கிறார்கள்....!

Share this post


Link to post
Share on other sites
22 hours ago, suvy said:

பாரிசில் இன்னும் வரவில்லை . நான் சென்றவாரம் பாரிஸில் விசாரித்தேன். ஆயுதஎழுத்து தான் இருக்கு என்கிறார்கள்....!

புத்தகம் வெளிவர தாமதமாகிவிட்டது .அது காரணமாக இருக்கலாம் ..

?ui=2&ik=d50be0e4aa&view=fimg&th=159c02471e5721ce&attid=0.5&disp=emb&realattid=159c022aefdd6d3a242&attbid=ANGjdJ_EMxZzAmoYuXUFd2vgzIC-0S6JZQ8kNdCLV8xfDR0q3kTtIbGHIdTysbQ_f4FDnDZe-mxzoTw-iI0MRCC-5RMwJKgxTLFW-_rRj4yjqoovFe6vAKx2s5QCWPI&sz=s0-l75&ats=1484987383571&rm=159c02471e5721ce&zw
?ui=2&ik=d50be0e4aa&view=fimg&th=159c02471e5721ce&attid=0.4&disp=emb&realattid=159c022d941e09afe213&attbid=ANGjdJ_dUiKS9gcno8DOV76zi8FK5MUjQ6ZRAs-TQvj_i8T-H7lia9ud_U3ndz_OxE9dZ8lx4wogAgiOkbMmSkPt5VBOM83Z9Fj9wC41jDgZbDk_xcO1Z6f3kDPvJjY&sz=s0-l75&ats=1484987383571&rm=159c02471e5721ce&zw
?ui=2&ik=d50be0e4aa&view=fimg&th=159c02471e5721ce&attid=0.1&disp=emb&realattid=159c0232d0cfecd11224&attbid=ANGjdJ8vOGNJjc_qsWqSemcCSQri22LxevwA-ykyOGBVXacTrY_ax6TLziRyHAEcaeABwRCEFRx9dOpEAE6y8lzHdOXkKmfDEI097pRNHLipmdbBiE70qg94PFqRWjk&sz=s0-l75&ats=1484987383571&rm=159c02471e5721ce&zw
?ui=2&ik=d50be0e4aa&view=fimg&th=159c02471e5721ce&attid=0.6&disp=emb&realattid=159c02352606db4c11e5&attbid=ANGjdJ8ev9fKexWvmBBIWONdC5r-xdr5mzlJe2PRS6jIIxQE3lVTI9jsAimwCiHb2uwjhcIA0ar1eZskTcosRQnIgOQDWoRXFVgIvWoyqHOVq7vgm5GEbgpPmfxTALo&sz=s0-l75&ats=1484987383571&rm=159c02471e5721ce&zw
?ui=2&ik=d50be0e4aa&view=fimg&th=159c02471e5721ce&attid=0.3&disp=emb&realattid=159c023931e8be6d41f6&attbid=ANGjdJ9FszpUqi6bveV8V4BjuN06BC2Qjf_303s8qr7ZltzdrlqP8qZk_igjNiNesopIsNv5tEU8p-bwuy93O_gOy7GyhIWFd9uqXTxdqjjSX-6KUbu9k9Ns6P-Kkvk&sz=s0-l75&ats=1484987383572&rm=159c02471e5721ce&zw
?ui=2&ik=d50be0e4aa&view=fimg&th=159c02471e5721ce&attid=0.2&disp=emb&realattid=159c022804771b34e251&attbid=ANGjdJ8RUUseMGWIxQlpsBoVF5XuCoxw_-n-_sQB0EGjPBLFnd9oEwOQ_W9ZW8lf3rFFqnp9s0Gw2FJV_XEYBsc4Iy2WxWfZV7KHx1LScEJ7byyNKZ0TKyl9-E0wlqo&sz=s0-l75&ats=1484987383572&rm=159c02471e5721ce&zw

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0