Jump to content

இரவில் ஊருக்கு வந்தவன்


Recommended Posts

இரவில் ஊருக்கு வந்தவன் - சிறுகதை

 

ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம்

 

நான் பாலு வீட்டு முன்பு காரில் இருந்து இறங்கியபோது, இரவு மணி மூன்று.

காவிரியில் குளித்துவிட்டு, பாதங்களில் நீர் சொட்டச் சொட்ட எத்தனையோ காலைகளில் நான் நடந்த ஊருக்கு, நண்பர்களுடன் ஆயிரமாயிரம் கதைகள் பேசிச் சிரித்துத் திரிந்த ஊருக்கு, ஒரு திருடன்போல் இரவில் வந்து இறங்கியிருக்கிறேன். விடிவதற்குள் வந்த வேலையை முடித்துக்கொண்டு, யார் கண்ணிலும் படாமல் கிளம்ப வேண்டும்.

நான் கார் கதவை அடித்துச் சாத்தியபோது, இரண்டு மூன்று தெரு நாய்கள் என்னைப் பார்த்துப் பலவீனமாகக் குரைத்துவிட்டு ஓய்ந்தன. சாலையோரச் சாக்கடையில் இருந்து தவளைகளின் கொர்... கொர்... சத்தம். புதிதாக பெயின்ட் அடித்திருந்த சிவன் கோயில் கோபுரம், மின்விளக்கு வெளிச்சத்தில் வண்ணமயமாக மின்னியது.

பாலு வீட்டின் உள்ளே லைட் எரிந்தது. நான் வீட்டின் படியில் ஏறுவதற்குள் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான் பாலு. புன்னகையுடன் என் கையைப் பிடித்துக்கொண்டு, “வாடா சேது…” என்றான்.

“ராஜா மாதிரி சுத்தி வந்துட்டிருந்த ஊருக்குள்ள, ஏதோ ஊரை விட்டு ஓடிப்போன கடன்காரன் மாதிரி நடுராத்திரி வந்துருக்கேன்டா” என்று சொன்னபோது, என் குரல் தழுதழுத்தது.

p158.jpg

``ச்சீ… என்னது சின்னப் பையன் மாதிரி” என என்னை அணைத்துக்கொண்ட பாலுவின் குரலும் உடைந்திருந்தது. பாலு, பள்ளிக்காலம் முதல் என் நண்பன். உள்ளூரிலேயே ஆசிரியராக இருக்கிறான்.

வீட்டினுள் நுழைந்தவுடன், தூக்கக் கலக்கத்தில் இருந்த பாலுவின் மனைவி சுமதி, “வாங்கண்ணா…” என, என் கையில் இருந்த பையை வாங்கிக்கொண்டாள்.

“ம்… நல்லாருக்கியாம்மா?”

“நல்லாருக்கேன் அண்ணா. வீட்டுல எல்லாரும்…”

“என்னைத் தவிர எல்லாரும் நல்லா இருக்காங்க” என்றவுடன் சுமதியின் முகம் மாறியது.

“பசங்கல்லாம்…” என்று நான் இழுக்க, `ரூம்ல தூங்கிட்டிருக்காங்க. எழுப்பலாம்னேன். இவர்தான் நீங்க வந்தது யாருக்கும் தெரியக் கூடாதுன்னு சொன்னார்” என சுமதி சொல்ல, அமைதியானேன். சுமதி, பேச்சை மாற்றும் விதமாக, “உங்களுக்குப் பாதி முடி நரைச்சுடுச்சுண்ணா” என்றாள்.

“நாப்பத்து நாலு வயசு ஆச்சு... நரைக்காம? உன் புருஷன் டை அடிச்சு மறைச்சுட்டான்” என்றதற்கு, சுமதி மெலிதாகப் புன்னகைத்தாள்.

“டேய்…. பேச்சு சத்தம் கேட்டா, பசங்க முழிச்சுடுவாங்க. வா... நாம பின்னாடி ஆத்தங்கரையில நிப்போம்” என்றான் பாலு.

நான் பேன்ட்டில் இருந்து மாறி, வேட்டி கட்டிக் கொண்டேன். கொல்லை வாசல் கதவை பாலு திறக்க, விசுக்கென காவிரிக் காற்று முகத்தில் பட்டதும் மிகவும் ஆறுதலாக இருந்தது.

“ரொம்ப நாள் கழிச்சு காவிரிக் காத்து” என்றபடி கொல்லை வாசல்படியில் இறங்கினேன். காற்றில் சலசலத்த வாழைமரங்களைப் பார்த்துவிட்டு, “இன்னும் வாழை எல்லாம் போடுறியா?” என்றேன்.

“ம்… பெருசா லாபம் ஒண்ணும் கிடையாது. பழக்கத்தை விட முடியலை.”

ஆற்றுக்குப் போகும் ஒற்றையடிப் பாதை தெரிந்தது. டார்ச் அடித்தபடி முன்னால் நடந்தான் பாலு. நான் பின்னால் நடந்தேன். சில்வண்டுகளின் ரீங்காரம், இரவின் அடர்த்தியை இன்னும் அதிகரித்தது. பாதை முடிந்தவுடன் ஓவென விரிந்துகிடந்த வெற்று மணல் காவிரியைக் கண்டவுடன், மனதில் ஓர் அலையடித்து ஓய்ந்தது. எதிர் கரை மூங்கில் தோப்பில் இருந்து விநோதமான சத்தம் எழுப்பிய காற்று, `நல்லாருக்கியா சேது?’ எனக் கேட்டது. அரை நிலா வெளிச்சத்தில் தெரிந்த ஆற்று மணலில் என்றோ, எங்கிருந்தோ அடித்துக்கொண்டு வந்த ஒரு சிவப்பு நிறப் புடவையும் வேட்டியும் துண்டும் காற்றில் படபடத்தன.

சட்டைப் பையில் இருந்து சிகரெட் எடுத்துப் பற்றவைத்துக் கொண்டு காவிரி மணலைப் பார்த்தேன். தண்ணீர் கரைபுரண்டு ஓடும் ஆகஸ்ட் மாதத்தில், நீரில் ரப்பர் பந்தை வீசி விளையாடியது, தண்ணீர் இல்லாத நாட்களில் மணலில் கபடி விளையாடியது... என, இந்த ஆற்றின் ஒவ்வொரு மணல் துகளிலும் என் ஞாபகங்கள் இருந்தன.

 “நாம சின்னப்பிள்ளையாவே இருந்துருக்கணும் பாலு” என்றேன் புகையை விட்டபடி. ``நம்ம வாய்க்கால் பாலத்துல உட்கார்ந்து பேசிட்டிருந்த இருபது வயசுலேயே வாழ்க்கை நின்னுருக்கணும்.அதுக்குப் பின்னாடி ஒரு நிமிஷம்கூட நகர்ந்திருக்கக் கூடாது. நிர்மலா, டியூஷனுக்கு வாய்க்கால் பாலம் வழியா சைக்கிளில் போவா. அவளைப் பார்க்கிறதுக்கு பத்துப் பேர் உட்கார்ந்திருப்போம்” என்றேன் புன்னகையுடன்.

“இப்ப நிர்மலா ஹெச்.எம் ஆகிட்டாடா.”

“அப்படிப் போடு” என்ற நான், கரையோரம் சலசலத்த தென்னை மரங்களைப் பார்த்தபடி, “நாம தென்னந்தோப்புல கள் குடிச்சு மயங்கிக் கிடந்தது, ஆடி மாசம் தண்ணி திறந்ததும், கண்ணு சிவக்கச் சிவக்க ஆத்துல குளிச்சுட்டு, திருச்சி காவேரி தியேட்டர்ல, `ஓமனிக்கான் ஒரு சிசிரம்’ மலையாளப் படம் பார்த்துட்டு வந்ததுல்லாம் ஞாபகம் இருக்கா... அன்னைக்கி தியேட்டர்ல செம கும்பல்ல?”

“கும்பல்ல அந்த ஏரியாவே டிராஃபிக் ஜாம் ஆகி போலீஸ் வந்துடுச்சுல... அவ்ளோ கும்பல்ல செல்வராஜ்தான் நமக்கு டிக்கெட் வாங்கிக் குடுத்தான்.”

“இப்ப செல்வராஜ் எங்கேடா இருக்கான்?”

“திருப்பூர் பனியன் கம்பெனியில இருக்கான். தீபாவளிக்கு வந்துட்டுப் போனான்.”

“காவிரிக் கரைக்காரன், திருப்பூருக்குப் பிழைக்கப் போறான். ம்… எல்லாம் போச்சு” என்ற நான் பெருமூச்சுவிட்டபடி, “அக்கா எத்தனை மணிக்கு வர்றேன்னு சொல்லியிருக்கு?” என்றேன்.

“நாலு மணிக்கு” என்றவுடன் நான் மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் காவிரியைப் பார்த்தேன்.

“நீ இரு. காபி எடுத்துட்டு வர்றேன்” என பாலு எழுந்தான். காவிரியைப் பார்க்கப் பார்க்க, கண்கள் கலங்கின. கண்கள் முன்பாக இருந்த மணல் மெள்ள மெள்ள மறைந்தது.

p158b.jpg

காவிரி கரைபுரண்டு ஓடிய ஒருநாளில், அக்கா எனக்கு நீச்சல் கற்றுக்கொடுத்த போதுதான், பொன்னம்மா அக்கா வந்து விஷயத்தைச் சொன்னாள்.

அப்போது எனக்கு பத்து வயது இருக்கும். அக்காவுக்குப் பதினேழு வயது இருக்கும். அரசமரத்தடிப் படித்துறையில் அக்கா எனக்கு நீச்சல் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தாள். அக்கா கைகளை விட்டவுடன், நான் தபதபவென இரண்டு அடி கடந்துவிட்டு, அப்படியே நீரில் மூழ்கி நீரைக் குடித்தேன். என்னைத் தூக்கிய அக்கா, ``காலை அடின்னு எத்தனை தடவை சொல்றது?’’ என்றாள். நான் குடித்த தண்ணீர் மூக்கில் வழிந்தது. அப்போது பின்னால் இருந்து சிரிப்புச் சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தோம்.

அரசமரத்து மேடை பிள்ளையார் கோயிலுக்கு, வாரம் ஒரு முறை பூஜை செய்யும் ஃப்ரீலான்ஸ் குருக்கள் குடத்தில் காவிரி நீரை மொண்டபடி, ``டேய்… நீச்சல்கூட உங்க அக்காதான் கத்துத்தரணுமா?’’ எனக் கேட்க, நான் வெட்கப்பட்டுச் சிரித்தேன். அப்போது என் அக்காவின் அருகில் நின்றுகொண்டிருந்த மலர் அக்கா, `ஆ…’ என அக்காவின் மீது சாய, ``நாயே… என்னடி?’’ என்றாள் அக்கா.

``மீன் கடிக்குதுடி’’ என்ற மலர் அக்கா பொத்தென்று நீரில் விழுந்து நீந்துவதைப் பார்க்க, எனக்குப் பொறாமையாக இருந்தது.

அரச மரத்து மேடையில் இருந்து “பானு…” என்ற குரல் கேட்க, அக்கா நிமிர்ந்து பார்த்தாள். படிக்கட்டில் புடவைக்கு சோப்பு போட்டுக்கொண்டிருந்த தேன்மொழி அக்கா, “பொன்னம்மா அக்கா அழுவுற மாதிரி இருக்கு” என்றபடி பரபரப்பாக எழ, நாங்களும் வேகமாகப் படியேறினோம்.

பொன்னம்மா அக்கா, “எல்லாம் போயிடுச்சுடி” எனத் தலையில் அடித்துக் கொண்டு பெருங்குரலெடுத்து அழுதாள். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. என் அக்காவும் தேன்மொழி அக்காவும் ஆடைகள் மாற்றிக்கொள்ள மரத்தடிக்கு அந்தப் பக்கம் சென்றனர். என்னைக் கட்டிப்பிடித்தபடி பொன்னம்மா அக்கா,  “எல்லாம் போயிடுச்சுடா… போயிடுச்சுடா” என்று அழுதுகொண்டிருந்தாள். நான் விஷயம் புரியாமல், இடுப்பில் கட்டிய துண்டுடன் நின்றுகொண்டிருந்தேன்.
தாவணியைச் சரிசெய்தபடி வந்த அக்கா, “விஷயத்தைச் சொல்லிட்டு அழுக்கா” என்றவுடன், “உங்களை அநாதையாக்கிட்டு, உங்க அப்பனும் அம்மாவும் போய்ச் சேந்துட்டாங்கடி” என்றவுடன் அதிர்ந்தேன்.

“அய்யோ… மகமாயி” என்று அக்கா அலற, எனக்கு வயிற்றைப் புரட்டி, கை கால்கள் வெடவெடவென நடுங்கின.

திருச்சியில் ஒரு திருமணத்துக்காக, ஊரில் இருந்து பதினைந்து பேர் வேனில்  போயிருந்தனர்.

“கல்யாணம் முடிஞ்சு வந்தப்ப, ஒரு லாரி மோதி, பத்துப் பேரு செத்துட்டாங்கடி” என்றவுடன், “அம்மா… அப்பா…” என்று அக்கா அலறிய அலறல் கலங்கடித்தது.

“அக்கா…” என்று அவள் கையைப் பிடித்த நான், அதன் பிறகு அதை விடவே இல்லை.

திருச்சி ஜி.ஹெச் மார்ச்சுவரியில் அம்மா, அப்பாவின் உடல்களை அடையாளம் காட்டியபோதும், ஏதேதோ பேப்பர்களில் அக்கா கையெழுத்துப் போட்டபோதும், பத்துப் பிணங்களும் சேர்ந்தாற்போல் ஊரில் வந்து இறங்க, ஊரே தீப்பிடித்ததுபோல் அத்தனை ஜனங்களும் அலறியபோதும், வீட்டுக்கு வந்த உறவுகள் எல்லாம் எங்களைக் கட்டிப்பிடித்து அழுதபோதும், அடம்பிடித்து அக்காவும் சுடுகாட்டுக்கு வர, நான் கொள்ளி போட்டபோதும் அக்காவின் கையைப் பிடித்துக்கொண்டேதான் இருந்தேன்.

`கடைசி வரைக்கும் நாங்க இருக்கோம். ஒண்ணுக்கும் கவலைப்படாதீங்க’ என்ற உறவுகள் பத்தாம் நாள் காணாமல் போய், நானும் அக்காவும் மட்டும் வீட்டில் தனித்திருந்த அந்த இரவு, இன்னும் என் நினைவில் உள்ளது. அம்மா, அப்பா புகைப்படத்துக்கு முன்னால் விளக்கு எரிய, அக்காவின் கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது.

“ஏன்க்கா… எல்லாரும் போய்ட்டாங்க?” என்றேன்.

“எல்லாரும் அவங்கவங்க வேலையைப் பாக்கணும்ல. அவங்க போனா என்ன? உனக்கு நான் இருக்கேன்டா. எனக்கு நீ இருக்க. வேற யாரும் வேண்டாம்” என்றாள்.

சொன்னபடியே இருந்தாள்.

குடியிருந்த அந்தச் சின்ன ஓட்டு வீட்டைத் தவிர வேறு சொத்துக்கள் கிடையாது. அப்பா, திருச்சி சின்னக்கடை வீதி ஒரு ஜவுளிக்கடை வாசலில், இறக்கும் வரை ஜாக்கெட்கள் மட்டுமே தைத்த ஏழை டெய்லர். அப்பா, அம்மா இறந்த இருபதாம் நாள், வீட்டில் உலை வைக்க அரிசி இல்லை. சொந்தங்களும் பெரிதாக உதவும் அளவுக்கு வசதி இல்லை. பத்தாவதில் அப்போதே 500-க்கு 454 மார்க் வாங்கி, டாக்டர் கனவுகளுடன் ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருந்த அக்கா, அதிகம் யோசிக்காமல் படிப்பை நிறுத்தினாள். அப்பா மெஷின் போட்டிருந்த ஜவுளிக் கடையிலேயே வேலைக்குச் சேர்ந்தாள். காலையில் எழுந்து, சமைத்து, என்னை சைக்கிளில் கொண்டுபோய் பள்ளியில் விட்டுவிட்டு, பாசஞ்சர் ரயிலில் திருச்சிக்குச் செல்வாள்.

நான் எட்டாவது படிக்கும்போது, எப்போதும் என் நினைவிலேயே இருந்த அக்காவின் நினைவில் வேறு ஒருவனும் வந்தான். எதிர்வீட்டுக்குப் புதிதாகக் குடிவந்த ஹெட்மாஸ்டர் மகன் அருண். தஞ்சாவூரில் ஏதோ அரசு வேலையில் இருந்தான்.
சனி, ஞாயிறுகளில் வீட்டுக்கு வருவான். அப்போது மட்டும் ஒரு புது அக்கா பிறந்தாள்.

சனிக்கிழமையானால், காலையில் சீக்கிரமே எழுந்து குளித்துவிட்டு நிலைகொள்ளாமல், வீட்டுக்கும் தெருவுக்கும் நடந்துகொண்டே இருந்தாள். சந்தேகத்துடன் நான் ஜன்னல் அருகில் அமர்ந்து படித்தபடி பார்த்துக்கொண்டி ருப்பேன். அப்போது தோளில் பையுடன் தெருமுனையில் தெரிந்த அருணைப் பார்த்தவுடன், அக்காவின் கண்கள் ஒளிர்வதைப் புரியாமல் பார்ப்பேன். அருணும் ஒரு பிரத்யேகப் புன்னகையை வீசிவிட்டுச் செல்வான். ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் என்னை வீட்டில் விட்டுவிட்டு அக்கா எங்கோ தனியாகச் சென்று வந்தாள்.

ஒருநாள் காவிரி ஆற்று நீரில் போர்வையை அலசி, ஆளுக்கு ஒரு முனையைப் பிடித்து முறுக்கியபோதுதான் அக்கா சொன்னாள்.

“சேது… எதிர் வீட்டு அருணைப் பார்த்துருக்கியா... எப்படி இருக்காரு?”

“நல்லாருக்கார். ஏன் கேட்குற?” என்றேன் சிரிப்புடன்.

“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்கிறார். நம்மாளுங்கதான். கல்யாணமாகிட்ட பிறகு, நாம எல்லாரும் ஒண்ணா இருக்கலாம்னு சொல்றார். உன்னைக் கேட்டுச் சொல்றேன்னு சொல்லியிருக்கேன்” என்றபோது நான் போர்வையை முறுக்குவதை நிறுத்தினேன். அக்காவுக்குத் திருமணமாகிவிட்டால், வேறு யாரும் இல்லாத என் மீது அக்கா பழைய ப்ரியம் செலுத்துவாளா? அவளுக்குக் குழந்தை பிறந்துவிட்டால், அதேபோல் என்னையும் பார்த்துக்கொள்வாளா... என்று தோன்ற, எனது சிரிப்பு நின்றது; அத்துடன் அக்காவின் சிரிப்பும் நின்றது.

ந்த ஞாயிறு அன்று மாலை சிவன் கோயில் குளத்துக்கு அருகில் அருணுடன் பேசிவிட்டு வந்த அக்கா, அறையில் அழுவதைப் பார்த்தேன். ஆறே மாதங்களில் அருணின் திருமணம் நடந்தது. எங்கள் வீட்டுக்கும் பத்திரிகை வைத்திருந்தார்கள். அருணின் கல்யாணம் நடந்தபோது அக்கா என்னை அழைத்துக்கொண்டு, திருக்காட்டுப்பள்ளி பெரியம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார். உள்ளுக்குள் எனக்கு சிறிது வருத்தமாக இருந்தாலும், அந்த வயதில் அக்காவுடைய இழப்பின் தீவிரம் புரியவில்லை.

அதன் பிறகு நான் பள்ளிப்படிப்பு முடித்து, பி.இ சிவில் இன்ஜினீயரிங் படித்து, பெங்களூரில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் வரையில் அக்காவிடம் எந்தச் சலனமும் இல்லை. 29 வயது ஆகியிருந்த அக்கா ஊரில் ஃபேன்சி கடை வைத்திருந்த மாமாவை மணந்துகொண்டாள். அடுத்த வருடமே ஒரு பெண் குழந்தைக்குத் தாயும் ஆனாள். நான் மாதாமாதம் அக்காவைப் பார்க்க ஊருக்கு வந்துவிடுவேன். 27 வயதில், கவிதாவுடன் எனக்குத் திருமணம் ஆகும் வரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

p158a.jpgவிதா… அக்கா பார்த்துவைத்த பெண். எங்கள் ஊர் ரைஸ் மில் அதிபர் மகள்.  வாழைத்தோப்பு, தென்னந்தோப்பு என ஏராளமான சொத்து. பெரிய இடம் என நான் சற்று யோசித்தேன். ஆனால், அக்காதான் என்னை வற்புறுத்தி திருமணம் செய்துவைத்தாள். திருமணமாகி பத்து நாட்களுக்குப் பிறகு பிரச்னை ஆரம்பித்தது. நான் தினமும் இரவு, அக்காவிடம் போனில் பேசுவது கவிதாவுக்குப் பிடிக்கவில்லை.

“அது என்ன தினமும் அக்காகூட போன்ல பேச்சு?” என்ற கவிதாவை முறைத்தபடி, “ஏன்... பேசினா என்ன?” என்றேன்.

மேற்கொண்டு கவிதா ஒன்றும் பேசவில்லை. ஆனால், அடுத்த வாரம் அக்காவைப் பார்க்க ஊருக்குக் கிளம்பியபோது, கவிதா மீண்டும் பிரச்னை செய்தாள்.

“இப்ப எதுக்குத் திடீர்னு?”

“நான் ஒவ்வொரு மாசமும் அக்காவைப் போய்ப் பார்த்துட்டு வருவேன் கவிதா.”

“மாசாமாசமா? சரி... அப்ப கல்யாணமாகலை. போய்ட்டு வந்தீங்க. இப்பத்தான் நான் வந்துட்டேன்ல.”

கவிதாவை நெருங்கி அவளை உற்றுப் பார்த்தேன்.

“கவிதா… நான் வானத்துல இருந்து குதிச்சு நேரா உன் புருஷனா வந்துடல. அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு வாழ்க்கை இருந்தது. அதுல தெய்வம் மாதிரி என் அக்கா இருந்தா.”

“இருக்கட்டும். அதுக்குனு ஒவ்வொரு மாசமும் போய்ப் பாக்கணுமா?”

“பார்த்தா என்ன? நீயும்தானே வர்ற.

நீ வேணும்னா போய் உங்க வீட்டுல இரு” என்றவுடன் ஒன்றும் பேசாமல் கிளம்பி வந்தாள். ஆனாலும் அவ்வப்போது பிரச்னை செய்துகொண்டே இருந்தாள். நான் அக்கா மீது மிகவும் பாசமாக இருப்பது, அவளை உறுத்திக்கொண்டே இருந்தது. அடுத்த மாதம் கிளம்பியபோது மீண்டும் ஆரம்பித்துவிட்டாள்.

“இது என்ன? மாசாமாசம் வேண்டுதல் மாதிரி. இனிமே ஏதாச்சும் விசேஷத்துக்குப் போனா போதும்.”

“அதை நான்தான் முடிவு பண்ணணும்.”

“எல்லாத்தையும் நீங்களே முடிவு பண்ண முடியாது. இப்ப நான் எங்க வீட்டுல யாரையும் பார்க்காம இல்லியா?”

“உங்க வீட்டுலயும் எங்க அக்காவும் ஒண்ணு கிடையாது கவிதா.”

“ஏன் அவங்க என்ன பெரிய மகாராணியா?” என்று சொல்லி முடிப்பதற்குள், அவளை அடித்திருந்தேன். அதிர்ந்துபோய் என்னைப் பார்த்த கவிதாவின் கண்களில் குரோதம் தெரிந்தது.

“அவ்ளோ பெருசுன்னா, உங்க அக்காவையே கல்யாணம் பண்ணியிருக்க வேண்டியதுதானே?” என்று கவிதா கூறி முடித்த அடுத்த விநாடி, அவள் கழுத்தை நெரிக்க ஆரம்பித்திருந்தேன். அவள் விழிகள் பிதுங்கிய பிறகுதான் கையை விட்டேன்.

p158c.jpg“வயிறு எரிஞ்சு சொல்றேன்டி. நீ நல்லா இருக்க மாட்ட” என்று வீட்டை விட்டு வெளியே வந்தேன்.

ல்சூரில் இருந்த ஒரு நண்பன் அறையில் தங்கிவிட்டு, மறுநாள் காலை பத்து மணிக்கு மேல் வந்தபோது, வீட்டு வாசலில் என் மாமனாரின் அம்பாசிடர் கார் நின்றிருந்தது. வீட்டினுள் மாமனார், மாமியார், சின்ன மாமனார், மச்சான்கள் என ஒரு கும்பலே உட்கார்ந்திருந்தது. அவர்களுடன் அக்காவும் மாமாவும் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தவுடன் எனக்குப் பகீரென்றது. என்னைப் பார்த்தவுடன் ஓடிவந்து என் சட்டையைப் பிடித்த அக்கா, “பொம்பள வளர்த்த பையன். பொம்பளப்பிள்ளைகிட்ட கை நீட்டுறியே… வெட்கமா இல்ல?” என்றாள்.

நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை.

“நீ என்னைப் பார்க்க வரலைன்னா, ஒண்ணும் குடி முழுகிடாது. உனக்குனு ஒருத்தி வந்துட்டா. அப்புறமும் அக்கா, அக்கான்னுக்கிட்டு” என்ற அக்காவுக்குக் குரல் அடைத்து, பேச்சு நின்றது.

“ஆகா… என்னா நடிப்பு? தினம் போன்ல பேசி, ஊருக்கு வரச்சொல்லி எங்களுக்குள்ள சண்டை மூட்டிவிட்டுட்டு, இப்ப யோக்கியம் மாதிரி பேசுறதைப் பாரு” என்று கவிதா சொல்ல, அக்கா அதிர்ந்தாள்.

“நான் ஏன்மா உங்களுக்குள்ள சண்டை மூட்டப்போறேன்? என் தம்பி நல்லா வாழணும்னுதான் நினைப்பேன்” என்றதற்கு கவிதா பதில் ஒன்றும் சொல்லவில்லை.

என் அருகில் வந்த மாமனார், “ரெண்டு பொண்ணுங்களைப் பெத்து வளர்த்துருக்கேன். ரெண்டு பேரு மேலயும் இதுவரைக்கும் என் சுண்டுவிரல்கூட பட்டது இல்லை. பார்த்து நடந்துக்கங்க. என் பொண்ணுக்கு மரியாதை கொடுத்தாதான், நான் உங்களுக்கு மரியாதை கொடுப்பேன்” என்றார் மிரட்டுவதுபோல்.

“முதல்ல உங்க பொண்ணைக் கண்டிச்சுவைங்க. எங்க அக்காவைப் பத்தி மரியாதையா பேசச் சொல்லுங்க” என்ற நான், கவிதா சொன்னதைச் சொல்லிவிடலாமா என்று நினைத்தேன். ஆனால், அக்கா மனம் கஷ்டப்படும் என்பதால் சொல்லவில்லை. குறுக்கே புகுந்த மாமா, “நடந்ததை எல்லாம் விடுங்க சம்பந்தி. சேது… இனிமே நீ சும்மா சும்மா ஊருக்கு வர வேண்டாம். ஏதாச்சும் நாள், கிழமைன்னா வந்தா போதும்” என்று முடித்துவைத்தார்.

அதன் பிறகு நான் மாதாமாதம் ஊருக்குப் போவதை நிறுத்திவிட்டேன். போனில் பேசினாலும், “அக்காக்காரிகூட அப்படி என்ன குசுகுசுனு பேச்சு” என்று அசிங்கமாகப் பேச, நான் போனில் பேசுவதைக் குறைத்துக்கொண்டேன். எப்போதாவது கல்யாணம் காட்சிக்கு ஊருக்குப் போனால்தான் பார்ப்பது என ஆயிற்று. இருந்தாலும் அக்கா தொடர்பாக பல சண்டைகள். ஆயிரம் சண்டைகளுக்கு நடுவிலும் பிள்ளைகள் பெறும் விநோதமான படைப்பு மனிதப் பிறவி என்பதால், எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர்.

p158d.jpg

மாமாவுக்கு பிசினஸில் ஏதோ நஷ்டம் என அக்கா என்னிடம் பணம் கேட்டாள். நான் ஊருக்குச் சென்று கொடுத்திருக்கலாம். அப்போது முக்கிய வேலையில் மாட்டிக்கொண்டிருந்ததால் நேரில் வரச் சொல்லிவிட்டேன். அப்போது நான் செய்த பெரிய தப்பு... இந்த விஷயத்தை கவிதாவிடம் சொன்னது. 

“ஆத்தாடி… ரெண்டு லட்ச ரூபாயா? பா… பா… பா…”

“கத்தாதடி. அவங்க காதுல விழுந்துடப்போகுது.”

விழுந்துவிட்டது.

ஹாலில் இருந்த அக்கா அறைக்கு வந்து, “உனக்குக் கஷ்டம்னா வேண்டாம்டா. நான் ஊர்ல பார்த்துக்கிறேன்” என்றாள்.

“ஒருத்தரை வளர்த்தோம்னு, இப்படியா அட்டையா உறிஞ்சுவீங்க?” என்று கவிதா கேட்டவுடன், அக்கா திகைத்துப்போனாள்.

“இல்லம்மா… கொஞ்சம் கடன் நெருக்கடி. முடிஞ்சா கொடுனுதான் கேட்டேன்.”

“எங்களுக்கும் ரெண்டு பொட்டப்புள்ளைங்க இருக்கு. நாளைக்கு அதுங்களுக்கு நல்லது கெட்டது பண்ண வேணாம்?”

“கவிதா… நீ எதுவும் பேச வேண்டாம். உள்ளே போ…” என்று குரலை உயர்த்தினேன்.

“என்னை ஏன் உள்ளே போகச் சொல்றீங்க? விட்டா வெளியே போகச் சொல்வீங்கபோல” என்றவுடன்,

“ச்சீ... வாயை மூடுடி” என்று கையை ஓங்க, அக்கா கையைப் பிடித்துத் தடுத்தாள். 

“ஆகா… தம்பிக்காரனை நல்லா தூண்டி விட்டுட்டு, இப்ப சமாதானம் பேசுறதைப் பாரு.”

“அம்மா கவிதா... ஏதோ கஷ்டம்னு தெரியாமக் கேட்டுட்டோம். விடு தாயே. நாங்க கிளம்புறோம்” என்றாள் அக்கா கண்களைத் துடைத்தபடி.

“நீ என்னக்கா போறது? இவளை முதல்ல தலைமுழுகினாத்தான் நான் நிம்மதியா இருப்பேன். நீ முதல்ல போடி” என்று கவிதாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ள, பொத்தென்று கீழே விழுந்தாள். என் மகள்கள் இருவரும், “அம்மா… அம்மா...” என கவிதாவின் மேல் பாய்ந்து அழுதனர். வேகமாக எழுந்த கவிதா தலைமுடியை வாரி முடிந்துகொண்டு, “அக்காக்காரிக்காக நான் வெளியே போகணுமா? நான் சாகறேன். நீங்க உங்க அக்காகூட நிம்மதியா இருங்க” என்றவள் வேகமாக ஓடி இன்னோர் அறையில் நுழைந்து கதவைச் சாத்திக்கொள்ள, நாங்கள் பதறிப்போனோம்.

“கவிதா… கவிதா…” என்று நாங்கள் அலறினோம். ஜன்னல் வழியாக கவிதா சீலிங் ஃபேனில் சேலையைக் கட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், “அய்யோ… கடவுளே” என்று அக்கா தலையில் அடித்துக்கொண்டு கதறினாள். நானும் மாமாவும் சேர்ந்தாற்போல் கதவை இடித்தோம். திறக்கவில்லை. குழந்தைகள் சத்தமாகக் கதறினர். மாமா, “சேது... அந்த கிரைண்டர் கல்லை எடுத்துட்டு வருவோம்” என்று இருவரும் சமையல் அறைக்கு ஓடினோம். கிரைண்டர் கல்லைத் தூக்கிக்கொண்டு வந்து வேகமாக நான்கு இடி இடித்தவுடனேயே தாழ்ப்பாள் உடைந்து, கதவு திறந்துகொண்டது.

நாங்கள் உள்ளே நுழைந்தபோது கவிதா சேலையில் தொங்கிக்கொண்டிருந்தாள். நான் பாய்ந்து, அவள் கால்களைப் பிடித்தேன். மாமா வேகமாகக் கயிற்றை அவிழ்க்க, அவள் மயக்கமாகி இருந்தாள். மூக்கில் கை வைத்துப் பார்க்க மூச்சு இருந்தது.

ருத்துவமனையில் கவிதா பிழைத்துக் கொண்டாள். ஆனால், மறுநாள் அங்கு வந்த கவிதாவின் அப்பா, எங்கள் மீது, `வரதட்சணைக் கொடுமை செய்து தற்கொலைக்குத் தூண்டியதாக’ புகார் கொடுக்க, போலீஸ் எங்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. நாங்கள் உண்மையைச் சொல்ல, அந்த போலீஸ் அதிகாரி, “நீங்க சொல்றது எல்லாம் உண்மையாவே இருக்கலாம். ஆனா வரதட்சணை கேஸ்ல ஒண்ணும் பண்ண முடியாது. உங்களை அரெஸ்ட் பண்றதைத் தவிர வேற வழி இல்லை. நீங்க பொண்ணு வீட்டுல பேசி கம்ப்ளைன்ட்டை வாபஸ் வாங்கச் சொல்லுங்க” என்றார்.

மருத்துவமனை அறையில், “நான் இப்ப என்ன செய்யணும்?” என்றேன் என் மாமனாரைப் பார்த்து. மாமனார் கவிதாவைப் பார்த்தார். என்னையும் என் அக்காவையும் மாறி மாறிப் பார்த்த கவிதா, “இனிமேல் அவங்க அக்கா இங்க வரக் கூடாது” என்றாள்.

p158e.jpg“சரி…” என்றேன் நான்.

“நீங்களும் ஊருக்குப் போய்ப் பார்க்கக் கூடாது. பாக்கக் கூடாதுன்னா கல்யாணம், காட்சினு இனிமே உங்க வாழ்நாளில் எங்கேயும் பார்க்கவே கூடாது. போன்லேயும் பேசக் கூடாது. இன்னைக்கு நீங்க பார்த்தது, பேசியதுதான் கடைசி…” என்று கூற, நான் அதிர்ச்சியுடன் அக்காவைப் பார்த்தேன்.

நான் பேச வாய் திறக்க, சடாரென அக்கா, “அவ்ளோதானேம்மா… இனிமே நாங்க பேச மாட்டோம்; பார்க்க மாட்டோம். போதுமா?”

“அக்கா… அவ சொல்றானு.”

“வேண்டாம்டா… போதும். உறவுங்கிறது சந்தோஷமா இருக்கத்தான். ஒரு உறவால அந்தச் சந்தோஷம் கெடுதுன்னா, அந்த உறவே வேண்டாம். செத்துப்போனா எல்லா உறவும் ஒருநாள் முடியத்தான் போகுது. நம்ம அம்மா அப்பா செத்து நாம வாழலையா? அந்த மாதிரி நினைச்சுக்க.”

“அக்கா… எப்படிக்கா உன்னைப் பார்க்காம?”

பலவீனமாகப் படுக்கையில் படுத்திருந்த அந்த நிலையிலும் கவிதா, “ஏன் பார்க்காம இருந்தா குடியா முழுகிடும். அவங்க என்ன உங்க அக்காவா... இல்ல என் சக்களத்தியா?” எனக் கேட்க, நாங்கள் அத்தனை பேரும் அதிர்ந்துபோனோம். அடிப்பதற்குக்கூட வழி இல்லாது நான் திகைத்து நின்றேன்.

மாமா உடனே வெளியே சென்றுவிட்டார்.  உலகில் உள்ளவர்களின் அத்தனை சோகங்களையும் தன் கண்களில் சுமந்தபடி என்னைப் பார்த்த அக்கா, சில விநாடிகள் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. பிறகு கண்ணோரம் கண்ணீர் வழிய, “நான் போயிடுறன்மா. இனிமே ஜென்மத்துக்கும் பார்க்க மாட்டேன். மறுபடியும் நீ அசிங்கமா எதுவும் பேசிடாத” என்றபடி என்னைப் பார்த்த அக்கா, சட்டெனத் தலையைக் குனிந்துகொண்டாள்.

ஒன்றும் செய்ய முடியாமல் கையாலாகாத நிலையில் இருந்த நான், “எனக்கு மட்டும் ஏன்க்கா இப்படி ஒரு பொண்டாட்டி?” என தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தேன்.

“சேது… நம்ம ரெண்டு பேரும் ஒரே அப்பனுக்குப் பிறந்திருந்தா, இனிமே நாம பார்த்துக்கக் கூடாது. பார்த்துக்கிட்டாத்தான் பாசமா என்ன? எனக்கு நீ நல்லா இருக்கணும். அவ்வளவுதான்” என்ற அக்கா தடதடவென வெளியேற, நான் வாழ்க்கையே வெறுத்துப் போய் நின்றேன்.

திமூன்று வருடங்கள் ஆகின்றன. அதன் பிறகு இன்று வரையிலும் அக்காவைப் பார்க்கவே இல்லை. ஊர்ப் பக்கம், தெரிந்தவர்கள் கல்யாணம், விசேஷம் என்று எதற்கும் வந்தது இல்லை. கவிதாவுக்குத் தெரியாமல் ஊருக்கு வந்தால்கூட, என் மாமனாரும் அதே ஊர்தான் என்பதால், எப்படியும் அவருக்குத் தகவல் போய்விடும் என ஊருக்கே வரவில்லை. பாலுவின் சகலை ஓசூரில் இருந்தான். பாலு, சகலை வீட்டுக்கு ஓசூருக்கு வரும்போது அவனைச் சென்று பார்த்து நலம் விசாரிப்பதோடு சரி. அந்தச் சண்டைக்குப் பிறகு இப்போதுதான் ஊருக்கு வருகிறேன்.

எதிர்கரை மூங்கில் தோப்பில் இருந்து குயில்கள் கூவும் சத்தம் கேட்டது. தோப்பில் இருந்து திடீரெனக்  கும்பலாகப் பறந்துவந்த காகங்கள், வானத்தைப் பார்த்துவிட்டு இன்னும் விடியவில்லை என்று மீண்டும் கூடுகளுக்குத் திரும்பின. அருகில் காபி குடித்துவைத்த டம்ளர் காய்ந்துகொண்டிருந்தது. ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டு நானும் பாலுவும் ஆற்று மணலில் இறங்கினோம். செருப்பு இல்லாமல் வெறும் மணலில் நரநரவென நடந்தபோது சுகமாக இருந்தது.

காற்றில் பறந்த வேட்டி நுனியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, “மனைவிங்கிற ஒரே ஒரு உறவுக்காக, மத்த எல்லா உறவுகளையும் அறுத்துவிடுறதுக்குப் பேர்தான் கல்யாணமா பாலு?” என்றேன்.

“ம்…” என்று பெருமூச்சுவிட்ட பாலு, “ஆம்பளையாப் பிறந்த எல்லாருக்கும் இந்தப் பிரச்னை இருக்கு சேது. என்னைய எடுத்துக்க. உள்ளுர்ல இருக்கேன். ரெண்டு தெரு தள்ளித்தான் அம்மா அப்பா இருக்காங்க. சேர்ந்து வாழ முடியலை. அம்மாக்களுக்கு, மகனுக்குக் கல்யாணம் ஆன பிறகு அவன் மகன் இல்லை; மருமகளோட புருஷன். பொண்டாட்டிங்களுக்குப் புருஷன், புருஷன் இல்லை; மாமியாரோட மகன். ரெண்டு பேரும் சேர்ந்து நம்ம தலையை உருட்டிச் சாவடிக்கிறாங்க.”

“தனியா இருந்தாலும் அப்பப்ப பார்த்துக்கிறீங்கல? எனக்கு அதுக்குக்கூட வழியில்லாமப் போச்சு. கல்யாணமாகி பத்து நாட்கள் ஹனிமூனுக்கு கூர்க் போய்ட்டு வந்தோம். அந்த நாட்கள்தான் என் கல்யாண வாழ்க்கையில் சந்தோஷமான நாள். அதுக்குப் பிறகு, கவிதாவைப் பத்தி நினைச்சுப்பார்க்க ஒரு சந்தோஷமான நினைவுகூட இல்லை. சின்ன வயசுல… பணம் சம்பாரிச்சா, எல்லாம் கஷ்டங்களும் சரியாகிடும்னு நினைச்சேன். இப்ப நிறையப் பணம் இருக்கு. ஆனா அதைக் கொண்டு வீட்டுல சந்தோஷத்தை வாங்கித் தர முடியலை. ஒருநாள் பெங்களூர்ல ஒரு கல்யாண ரிசப்ஷன்ல, நான் என் ஆபீஸ் ஃப்ரண்டஸ்கூடச் சிரிச்சுப் பேசுறதைப் பார்த்துட்டு என் பெரிய பொண்ணு சொன்னா, `நீங்க இப்படிச் சிரிச்சுப் பேசி நான் பார்த்ததே இல்லை. வீட்டுல ஏன் இப்படி இருக்கிறது இல்லை?’னு கேட்டாள். `அங்க உங்க அம்மா இருக்கா’னு நான் எப்படிச் சொல்றது சிவா?”

ப்போது வானம் லேசாக விடிய ஆரம்பித்திருந்தது. அப்போது பாலு வீட்டுக் கொல்லைப்பக்கத்தில் இருந்து ஆற்று மணலில் ஒரு பெண் உருவம் இறங்கி நடந்துவருவது தெரிந்தது.

“யாருடா அது... சுமதியா?”

“இல்லை. உங்க அக்கா…” என்றபோது என் அடிவயிற்றில் ஒரு பந்துபோல் உருண்ட உணர்வுக்கு பெயர்தான் பாசமா?

p158f.jpgநான் அக்காவை நோக்கி நடந்தேன். அக்காவின் தலைமுடி ஏகத்துக்கு நரைத்திருந்தது. முதிர்ந்த தளர்ந்த நடை. என்னைப் பார்த்தவுடன் அக்கா நின்று விட்டாள். அவள் அருகில் சென்ற நான் தாங்க முடியாமல் “அக்கா” என்று அழ ஆரம்பித்தேன். அடுத்த விநாடியே அக்காவும், “சேது…” என என்னைக் கட்டி அணைத்தபடி அழ ஆரம்பித்தாள். நாங்கள் அழுது ஓய்ந்து பேச ஆரம்பிக்க ஐந்து நிமிடம் ஆனது. பாலு எங்களைத் தனிமையில் விட்டுவிட்டு சென்றான்.

“சேது… எப்படிடா இருக்க?”

“நல்லாயில்ல அக்கா. உங்களை எல்லாம் நோகடிச்சுட்டு எப்படிக்கா நான் நல்லாருப்பேன்?”

“சேது… அவங்கவங்களுக்குனு ஒரு வாழ்க்கையை கடவுள் விதிச்சிருக்கான். அது நல்லதோ கெட்டதோ, அதுப்படி வாழ்ந்துட்டுப் போறதைத் தவிர நமக்கு வேறு வழியே இல்லை சேது” என்ற அக்கா கண்களைத் துடைத்துக்கொண்டு, “பொண்ணுங்க என்ன படிக்கிறாங்க?” என்றாள்.

“மூத்தவ ஒன்பதாவது. சின்னவ ஆறாவது.”

“கவிதாவுக்கு நீ இங்க வரக் கூடாது சரி.  கவிதாகூட ஒரு கல்யாணம் காட்சினு பிள்ளைங்ககூட இந்தப் பக்கம் வர்றது இல்லையே?”

“அப்புறம் பிள்ளைங்களுக்கு உன் உறவு ஒட்டிக்குச்சுனா?”

“கவிதா அப்படி ஒரு வார்த்தை சொன்ன பிறகு, இப்பக்கூட உன்னைப் பாக்கக் கூடாதுனுதான் நினைச்சேன். ஆனா நேத்து ராத்திரி பாலு வந்து, சொன்ன பிறகு மனசு கேக்கலைடா. இப்ப எதுக்குத் திடீர்னு வந்த?”

“ உன் பொண்ணுக்குக் கல்யாணம் வெச்சுருக்க. என்கிட்ட ஒரு வார்த்தைகூடச் சொல்லலையே.”

“உனக்கு யார் சொன்னது?”

“ரெண்டு நாள் முன்னாடி போன் பண்ணியிருந்தப்ப பாலு சொன்னான். மாப்ள என்னக்கா பண்றார்?”

“கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் கிளார்க். நல்ல ஜனங்க.”

 “ரொம்பச் சந்தோஷம்க்கா. நிறையச் செலவாகுமே. பணத்துக்கு என்ன பண்ணுனீங்க?”

“அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை. சேர்த்துவெச்சிருந்தேன்” என்றபோது, அக்கா என் கண்களைச் சந்திக்கவில்லை.

“ஏன் பொய் சொல்ற? நீ காசுக்காக, கந்துவட்டிக் காரன்கிட்ட எல்லாம் கையேந்திக்கிட்டு நிற்கிறேனு பாலு சொன்னப்ப எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? என்கிட்ட கேட்கணும்னு உனக்கு தோணலையாக்கா?”

“ஏ… அப்பா. ஒரு தடவை கேட்டுட்டு என்ன பாடுபட்டோம், மறுபடியும் கேட்பேனா? என் பிரச்னையை நான் பார்த்துக்கிறேன். நீ சந்தோஷமா இருந்தா போதும்.”

“நீ கஷ்டப்படுறது தெரிஞ்சுக்கிட்டு எப்படி நான் சந்தோஷமா இருக்க முடியும்?” என்ற நான் சட்டைப் பையில் இருந்து அந்த டிமாண்ட் டிராஃப்ட்டை எடுத்தேன்.

“அக்கா… இதுல அஞ்சு லட்ச ரூபாய் இருக்கு. வேண்டாம்னு சொல்லாம வாங்கிக்க” என்றவுடன் அக்காவின் முகம் மாறியது.

“இதுக்குத்தான் இத்தனை வருஷம் கழிச்சு  வந்தியா?”

p158g.jpg

“நீ பயப்படாத. அவளுக்குத் தெரியாது. இது நான் தனியா ஒரு அக்கௌன்ட்ல போட்டு வெச்சிருந்தேன். நான் இங்கே வந்தது, யாருக்கும் தெரியாது. அவகிட்ட `புனே போறேன்’னு சொல்லிட்டு, இப்படி நடுராத்திரி வந்துருக்கேன். இந்தா வாங்கிக்க” என டிராஃப்ட்டை நீட்ட, அக்கா தன் கையைப் பின்னால் இழுத்துக்கொண்டாள்.

“நீ இதுக்குத்தான் வந்திருக்கேனு தெரிஞ்சா, நான் வந்திருக்கவே மாட்டேன். உன்னைப் பார்த்த வரைக்கும் சந்தோஷம் சேது. நீ விடியறதுக்குள்ள கிளம்பு. இது எல்லாம் வேண்டாம்.”

அக்காவின் குரலில் இருந்த உறுதியைப் பார்த்து நான் அசந்துபோனேன்.

நான் குரல் உடைய, “அக்கா… வாங்கிக்க” என்றேன்.

“வேண்டாம்டா… நான் சொல்றதைக் கேளு.”

அவள் கையைப் பிடித்து இழுத்து, “உன் தம்பி கொடுக்கிறேன். வாங்கிக்க” என்று கூற அவள் கையைப் பின்னால் இழுத்து, முதுகுக்குப் பின்னால் உறுதியாகக் கட்டிக்கொண்டாள்.

“நீ வாங்கினா நான் நிம்மதியா இருப்பேன். வாங்கிக்கக்கா” என்றபோது குரல் தழுதழுத்தது. அக்கா, அமைதியாக நின்றாள். அவள் முகம் கல்போல் இருந்தது.

“அப்படி ஒரு வார்த்தை சொன்ன பிறகு எப்படிடா நான் வாங்குவேன்.”

 “அதை ஏன்க்கா இன்னும் மனசுல வெச்சிருக்க? என் சந்தோஷத்துக்காக வாங்கிக்க” என்று அடக்க முடியாமல் சத்தமாக அழுதேன்.

இதற்கு எல்லாம் கலங்காமல், “நான் வர்றேன்…” என அக்கா திரும்பி நடக்க ஆரம்பித்தாள். சிறுவயதில் அக்காவுடன் பேசியது எல்லாம் மின்னல் வெட்டாக மனதில் ஓடியது.

`உன்னை விட்டுட்டு மூணு நாள் ஸ்கூல் டூர் போக மாட்டேன்க்கா.’

`கல்யாணமானாலும் பக்கத்து, பக்கத்துலேயே வீடு கட்டிக்கிட்டு இருக்கலாம்க்கா.’

நான் பெரும் அழுகையுடன், “அக்கா… அக்கா… அக்கா…” என்று கத்த, அக்கா நடந்துகொண்டே இருந்தாள். எனக்காகப் படிப்பை விட்டு வேலைக்குச் சென்ற அக்கா; எனக்காக தன் காதலை இழந்த அக்கா; எனக்காக பெங்களூர் போலீஸ் ஸ்டேஷனில் அவமானப்பட்ட அக்கா... என் வாழ்க்கையில் இருந்து முற்றிலும் விலகி, அந்தப் பரந்த மணல்வெளியில் போய்க்கொண்டே இருந்தாள்!

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
    • வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
    • ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
    • உன்மேலே கொண்ட ஆசை .......!  😍
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.