Jump to content

பெண் என்றால் அவள் உடல் மட்டும்தானா..? - சமூகத்துக்கு ஒரு கேள்வி!


Recommended Posts

பெண் என்றால் அவள் உடல் மட்டும்தானா..? - சமூகத்துக்கு ஒரு கேள்வி!

 

பெண் 


சமீபத்தில் உலகத்தரத் திரைப்படமாகக் கொண்டாடப்படும் ஒரு திரைப்படம் பார்த்தேன். ஆனால், நடு ஹாலில் அமர்ந்து பார்க்கும் படமாக அது இல்லை. என் இளைய மகன் எப்போதும் என்கூடவே இருப்பதால், அவன் பார்க்கக் கூடாத படங்களை நான் பெரும்பாலும் லேப்டாப் மற்றும் டி.வியில் பார்ப்பதில்லை. குழந்தைகளுக்கான கார்ட்டூன், அல்லது கணவருக்கான செய்தி சேனல்களுக்கு மட்டுமே ஹாலில் இருக்கும் டிவியில் அனுமதி உண்டு.

சம்பந்தப்பட்ட படத்தின் கதையம்சம், ஆண்களின் உலகை அப்பட்டமாகக் காட்டுவதாக ஒரு விமர்சனம் படித்தேன், ஒவ்வொரு மனிதருக்கும், மறைக்கப்பட்ட எதிர்பாலின பக்கங்களைக் காண ஒரு பேராவல் எழும்தானே ..?!

இத்தாலியில் ஒரு சிறு நகரத்தில் நடக்கும் கதை. அழகிய பெண், அவள் கணவனுக்கு ராணுவத்தில் வேலை, போர்ச்சூழல். இந்நிலையில், அந்தப் பெண்ணை யாரும் மனுஷியாகவே பார்ப்பதில்லை. அவளின் உடல், அழகு... இதுதான் ஆண்களுக்கு 'அவள்'. ஆண்கள் அவளைப் பற்றி பேசுவதும், பரவசப்படுவதும், பெண்கள் அவளை அந்த,  இந்த ஆண்களுடன் தொடர்புபடுத்திப் பேசுவதும், பொறாமை கொள்வதும்... இதுதான் அவளைச் சுற்றிய உலகம். இவற்றையெல்லாம் காதில் வாங்காமல் அவள் தன் வேலையை கவனிப்பாள். தன் கணவனின் வருகைக்காக காத்திருப்பாள்.

இந்தப் படத்தின் ஹீரோ, ஒரு பதின் வயதுச் சிறுவன். அவள் மேல் பைத்தியமாகி அவளைத் தொடர்வான். சாவித் துவாரம்வரை விடுவதில்லை. அவளின் இரவுகள், பகல்கள் இவனுக்கு அத்துப்படி. டீன் ஏஜ், ஹார்மோன்கள் வேகம் காரணமாக, அவளைப் பார்க்கும்போதெல்லாம் உரித்துதான் பார்க்கத் தோன்றும் அவனுக்கு. இந்தப் படம் பற்றிய ஒரு விமர்சனம் நினைவுக்கு வருகிறது. 'ஆண்கள் பார்வையில், அவர்களுக்கு மிகப்பிடித்துப் போனால் இப்படித்தான் செய்வார்கள்'.

அது வெளிநாட்டுக் கதை என்று ஒதுக்கிவிட முடியவில்லை. அதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. ஒரு பெண், அழகாக ஆண்கள் கண்ணுக்குத் தெரிந்துவிட்டால், அவர்கள் உலகத்தில் அந்தப் பெண் மீதான கற்பனை எப்படி கட்டுக்கடங்காமல் போகும் என்று அந்தப் படத்தில் உரித்துக்காட்டி இருப்பார்கள். இது அனைவருக்கும் பொது என்று சொல்லமுடியாவிட்டாலும், பெரும்பாலும் என்றே கவனிக்கலாம்.

பெண்ணோ, ஆணோ... மற்றவர்களுடன் தன்னம்பிக்கையோட பழக தன்னை சிறிதளவேனும் அழகுபடுத்திக்கொள்ளுதல் மிக அவசியம். தன்னைச் சரியாக வெளிக்காட்டிக் கொள்வது, தன் மீதான நன்மதிப்பை அதிகரிக்கும் செயல். ஆனால், ஒரு பெண் ஒருவனுக்கு என்று ஏற்பட்டவுடன் வரும் முதல் கட்டுப்பாடு, அழகாக அலங்கரித்தாலும் அது அவனுக்காக என்றே நினைக்க வேண்டும் என்ற திணிப்பு. இதைச் சென்ற தலைமுறையில் அதிகம் கவனித்து இருப்போம். அதில்தான், தனியாக வாழும் பெண்கள், விதவைகள் சிறிது கூடுதலாக தங்களை அலங்கரித்துக்கொண்டால், சக பெண்களே அவர்களை விமர்சிப்பதைக் கண்டிருக்கிறேன். 'இவளுக்கு இந்த அலங்காரம் தேவையா? பார்க்கிறவன் எப்படிப் பார்ப்பான்?' என்பார்கள். அவளின் நுண்ணிய உணர்வுகளை கவனிக்கத் தவறுவார்கள். இப்போதும் சில இடங்களில் நடந்துகொண்டிருக்கும் விஷயம்தான் இது.

p90ae_14238.jpg

இந்தத் தலைமுறைப் பெண்கள், 'அவள் அலங்காரம் அவனுக்காகத்தான்' என்ற திணிப்பைத் தாண்டி இருக்கிறார்கள். ஆனால் ஆண்கள் வேறு வடிவில் அவர்களின் அந்தச் சுதந்திரத்தை முடக்குகிறார்கள். முகநூலில் பெண்கள் தங்கள் புகைப்படத்தைப் பதிவிட்டாலே, ஆண்களுக்கு ஒரு கிளர்ச்சி ஏற்படும். 'ஆண்கள் உங்களை தவறாகத்தான் பார்ப்பார்கள். பெண்கள் படம் லைக்ஸ் வாங்குவதற்குக் காரணம், பெண் முகம் பார்த்த அவர்களின் கிளர்ச்சிதான்' என்று ஆண் சமூகத்தின் பிரதிநிதியாக, சம்பந்தப்பட்ட பெண்ணின் நண்பனோ, காதலனோ எச்சரிப்பார்கள். அறிவுரை சொல்லுவார்கள். அவர்கள் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. ஏனென்றால், அவர்களுக்கு ஆண்கள் உலகம் பற்றித் தெரியும்.

அப்படியெனில், ஆண்களின் கண்ணுக்கு அழகாக, கவர்ச்சியாகத் தட்டுப்படும் பெண்களை வேறு பார்வையில்தான் பார்ப்பார்களா? ஆம்... பார்ப்பார்கள். அது ஏன்? அவர்களுக்கு அதைத் தவிர, பெண்களுடனான ஆரோக்கியமான அணுகுமுறை எதுவும் கற்றுத்தரப்படவில்லை.

இன்னொன்று... கவர்ச்சி. எதன் மேல் கவர்ச்சி வரும்? சுவாரஸ்யமான, மர்மமான விஷயம் மேல் கவர்ச்சி வரும். எதிர்பாலினம் மேல் ஈர்ப்பு ஏற்படுவது, இயற்கையின் ஏற்பாடு. ஆனால், அந்த ஈர்ப்பை வன்முறையில் வெளிப்படுத்தவும், முடிக்கவும் நாம் காட்டில் வாழவில்லை இன்று. காட்டிலும்கூட, கண்களைக் கவரத்தான் இயற்கை அழகைப் படைத்திருக்கிறதே தவிர, சொந்தம் கொண்டாட, வன்முறை, ஆதிக்கம் செலுத்த அல்ல.

வெளிநாட்டில் வாழும் தோழி ஒருவர் சொன்னார்: இந்தியக் குழந்தைகள்  நம் நாட்டில் வேறுவிதமாக வளர்ந்துவிட்டு வெளிநாடு வரும்போது, இங்குள்ள பெண்களை எப்படிப் பார்ப்பது, அணுகுவது என்றுகூடத் தெரியாமல் சிக்கல்களில் மாட்டிக் கொள்கின்றனர். வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் என்றால், 'அவர்கள் அப்படித்தான்' என்ற எண்ணத்தை விதைக்கிறார்கள். எனவே, இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்குக் கிளம்பும் மாணவர்களுக்கும் ஆண்களுக்கும், பெண்களைப் பற்றிய சரியான பார்வையையும் கற்றுக்கொடுத்து அனுப்பவேண்டிய தேவை இருக்கிறது!

p96aar_14449.jpg

வெளிநாட்டில் படிக்கும் என் பையனுடைய பல்கலைக்கழகத்தில், ஜூன் மாத வெயிலில் சில மாணவிகள் சண் பாத் எடுத்துக்கொண்டு இருந்தனர். நான் கொஞ்சம் நேரம் அவர்களை கவனித்ததை என் பையன் பார்த்துவிட்டு, 'யாரையும் இப்படி உற்று பார்க்காதேம்மா... தவறு' என்று என் கைப்பிடித்து அழைத்து வந்துவிட்டான். இதே இந்தியாவில் என்றால், பல்கலைக்கழகத்தில் சன் பாத் எடுக்கும் அளவுக்கெல்லாம் வேண்டாம்... மினி ஸ்கர்ட், ட்ரவ்ஸர், ஸ்லீவ்லெஸ் அணிந்த பெண்களை, வெளிநாட்டு மாணவர்கள் போல  இங்குள்ள கல்லூரி மாணவர்கள் சலனமின்றி கடந்து போவார்களா? ஆண்களை விடுங்கள்... பெண்கள் அந்தப் பெண்களைப் பற்றி என்ன பேசுவார்கள்? பல கேள்விகள் மனதுக்குள் ஓடின.

ஒரு சமூகம் பெண் மீது கொண்டுள்ள பார்வையை வைத்தே, அச்சமூகத்தின் நாகரிக வளர்ச்சியை எடைபோட இயலும். பெண்ணின் உடல் சார்ந்த அரசியல் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. அளவில் கூடுதலோ, குறைவோ... அந்த அரசியலில் இருந்து எந்தப் பெண்ணும் தப்புவதில்லை.

'எல்லாவற்றிலும் வளரும் சமுதாயம் நாங்கள்' என்று சொல்லிக்கொண்டு, மாண்புமிகு இந்தியர்கள் என்ன செய்கிறோம்? காதலர் தினம் அன்று கண்ணில் படும் ஜோடிகளை எல்லாம் தாலிகட்டச் சொல்லி தடியுடன் வருகிறார்கள் கலாசாரக் காவலர்கள். எல்லாக் கலாசாரங்களும் பெண்களை இம்சிக்கும் நுண்ணிய பிரச்னைகளைக் கொண்டுள்ளன. உறவு ரீதியாக பலப்பட்ட திருமண பந்தங்கள்கூட  விவாகரத்தில் முடியும் காலத்தில், அப்போதுதான் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கும் காதல் காலத்தில், 'லவ்வர்ஸ்னா அப்போ தாலி கட்டு' என்று நாட்டாமை செய்யும் கேலிக் கூத்தை நடத்திப் பார்க்கும் ஒரு போலி கலாசார அமைப்பை, இந்தக் காலத்திலும் அனுமதித்து இருக்கிறோம்.

உண்மையில் காலாசாரம் என்ற பெயரில் இந்தச் சமூகம் வலியுறுத்துவது என்ன தெரியுமா? ஆண் மனது... ஆண் பார்வை. இங்கு பெண்களின் சுதந்திரம் பற்றி கேள்வி இல்லை. அவள் முகம் மூடிக்கொள்ள வேண்டியவள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடன் இந்த இணையக் காலத்தில் இன்னொன்றும் சேர்ந்திருக்கிறது அவளுக்கான பட்டியலில். தங்கள் முகம் தோன்றா  புகைப்படங்களை ப்ரொஃபைல் பிக்சராக செட் செய்வது, தங்களின் படங்களை பதிவிடாமல் இருப்பது... இதுதான் குடும்பப்(!)  பெண்களுக்கு அழகு. இது மீண்டும் மீண்டும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பலரால் வலியுறுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

p16ar_14064.jpg

இன்னும் சில ஆண் குரல்களும் மனங்களும் இங்கே...

'டெல்லியில் நிர்பயா இரவில் சென்றது தவறு. ஒரு போலிஸ் அதிகாரி வீட்டில் பார்ட்டிக்குச் சென்றது பெண்ணின் தவறு. அரசியலுக்கு வந்தால் சேலையைப் பிடித்தும் இழுப்போம், இதெல்லாம் சகஜம். துணிவிருந்தால் மட்டுமே வரவேண்டும். சினிமா நடிகையென்றால் பொது இடம் என்றுகூட பார்க்க மாட்டோம்... காசு கொடுத்து சினிமா பார்க்கிற நாங்கள் கொஞ்சம் தொட்டுப் பார்ப்போம். இதுதான் ஆண்மை.

ஒரு பெண்ணை, மனதில் அழுக்குடன் பார்க்கும் பார்வை ஆண்மை. அவளைத் தொட்டால் அது பேராண்மை. அதை பெருமையாக நண்பர்களிடமும் சொல்வோம். பெண்ணை பொய்யாக மயக்குவோம். அன்பு என்று சொல்லி அவளை மனம் மாற்றுவோம். சிதைப்போம். அடிமையாக்குவோம். ஒரு பொன்னாளில், 'நீ வேண்டாம் போ' என்போம். இன்னொரு பெண் தேடுவோம். எதுவுமே தவறில்லை.'

ஏனென்றால், பெண் என்ற புனித பிம்பம் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்வாள். ஆம் ஆண்களே... அவளுக்கு ஆசிட் வீசத் தெரியாது. தன் காதலை மறுப்பவனை நடுரோட்டில் வைத்து வெட்டத் தெரியாது. ஆணை கதறக் கதற வலுக்கட்டாயமாக சேதப்படுத்த அவளுக்கு வலுவோ, மனமோ இல்லை. ஒரே சமயத்தில் மூன்று, நான்கு ஆண்களைக் காதலித்து, 'அனைவரும் தன் இணை' என்று பெருமையாக வெளியே சொல்லிக்கொள்வது கிடையாது.

பலதார மணம், இங்கு ஆண்களுக்கு மட்டுமே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெண்ணுக்கு இரண்டாம் திருமணமும் முறிந்து, மூன்றாவது உறவை அவள் நேர்மையாகத் தேர்ந்தெடுத்தால், சமூக வலைதளங்களில் இஷ்டத்துக்கு அவளை நோக்கிக் கேள்விகள் கொட்டப்படும். ஒருவனுக்கு ஒருத்தி என்பது அவசியமில்லை. ஒருத்திக்கு ஒருவன் இல்லாவிடில், மிகப்பெரும் சமூகக்கேடு.

'ஏன்... ஆண்களுக்கு இருக்கும் உணர்வு பெண்களுக்கும் இருக்கும்தானே?' என்றெல்லாம் இங்கு நாம் கேள்வி எழுப்பக்கூடாது. ஏனென்றால் நாம் பெண். சமூகக் கோட்பாடுகளை தாங்கிப்பிடிக்க வேண்டும். எல்லைக் கோட்டை சிறிது தாண்டினாலும் சமூகம் குலையும். 'வேற்றுப் பெண்களிடம் நான் எப்படியும் பழகலாம். எனக்கு உரிமை, சலுகை உண்டு. என் மனைவியோ, காதலியோ என்னிடம் மட்டுமே பழக வேண்டும். எனக்கு உண்மையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வேண்டாம்' என்ற ஆண் மனதுக்கு, பெண் அடிமை சாசனம் எழுதப்பட்டவள்.

பெண் உடலிடம் வெளிப்படையாக வன்முறை நிகழ்த்தும் ஆண்கள் ஒருபுறம் என்றால், அவள் கூடவே இருந்து வாழ்க்கை நடத்தும் ஆண்களின் மன வன்முறைகள், ஆதிக்கங்கள் உக்கிரமானவை. தாங்கள் அவளைச் சந்தேகப்படுவதைக்கூட, 'அவளுக்கு ஒன்றும் தெரியாது, நான்தான் பார்த்துக்கணும்' என்ற போர்வையில் நுட்பமாகச் செய்பவர்கள். அதுவே பெண், தன் கணவர் இன்னொரு பெண்ணிடம் பழகுவதைப் பற்றி கேள்வி எழுப்பினால், 'சந்தேகப்பிராணி, வாய்க்கொழுப்பு, பொறாமைபிடிச்சவ' என்று ஆயிரம் சொற்கள் அவளைக் கரிக்கும். அதிலும் ஒரு சுயபச்சாதாபத்தை தேடிக்கொள்ளும் சில ஆண்களின் உலகம், மிக சுயநலமானது.

பெண்களுக்குத் தேவை பாதுகாப்பு இல்லை. ஏன் என்றால், அவளுக்கு ஆபத்து என்று சொல்பவர்களும், அவளைப் பாதுகாக்கிறேன் என்று சொல்பவர்களும் ஒரே இடத்தில் இருந்துதான் வருகிறார்கள். ஒன்றே ஒன்று செய்யுங்கள்... உங்கள் வீட்டு, தெரு, சமூக, ஊர், மொழி, நாட்டு, உலகப் பெண்களைப் பாதுகாக்க ஆசையிருந்தால்... பெண்ணின் உடலை எப்படிக் கடக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆணுக்கும் சொல்லித்தாருங்கள். எழும் உணர்வுகள் இயற்கையாக இருந்தாலும்கூட, அதை ஆரோக்கியமாக எதிர்கொண்டு, சக பெண்ணைக் காயப்படுத்தாமல் எப்படிப் பேசி, பழக வேண்டும் என்று கற்றுத்தாருங்கள்.

ஆண், பெண் என்ற திரைகளுக்குப் பின்னால் இருக்கும் பிரமிப்பு அழகு, சுவாரஸ்யம் என்பதைவிட, நாளுக்கு நாள் அது ஆபத்தாக மாறி வருகிறது. எனவே ஆண், பெண் என்பதை உடைத்து சக மனிதர்கள் என்ற நட்புப் பார்வையில், பேச , பழக ஆண் பிள்ளைகளுக்குச் சொல்லித்தாருங்கள். பள்ளி, கல்லூரிகளில் ஆண், பெண்களை விலக்கிவைத்திருக்கும் கட்டுப்பாடுகளை தகர்த்து எடுங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் தன்னைப் பார்த்துக்கொள்ள நன்றாகவே தெரியும். ஒவ்வொரு ஆணும் தன் மனதைப் பார்த்துக்கொள்ளவேண்டிய சமூகக் கட்டாயத்தில் இருக்கிறோம்.

அந்தப் படத்தில் கதாநாயகியை ஆண்கள் வன்புணர்வு செய்ய, சக பெண்கள் நடுரோட்டில் அவளைக் கதற, கதற அவள் தலைமுடியை வெட்டி அவமானப்படுத்தி வன்மம் தீர்ப்பார்கள். ஆனால், அவள் கணவன் அவளை ஏற்றுக்கொள்ள, அதன் பிறகுதான் ஊர் அவளுக்கு மரியாதை கொடுக்க ஆரம்பிக்கும். தமிழ் சினிமாவில் கதாநாயகன் தன் அம்மாவைப் பத்தினி என்று நிரூபிக்கப் போராடும் அபத்தத்திற்கு சிறிதும் குறைவே இல்லாமல் இருக்கிறது இந்த வெளிநாட்டுப் படத்தின் க்ளைமாக்ஸ். ஆண்கள் அனுமதித்தால் மட்டுமே பெண்களால் சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ முடியும் என்பதை, நுட்பமாகக் காட்டிக்கொடுத்து உள்ளார்கள்.

p76ar_14492.jpg

இதற்கு முடிவு என்ன? உறவுகள் குறித்து குழப்பிக்கொள்ள வேண்டாம். நம் வீட்டில்தான், நம்மைச் சுற்றிதான் பெண்கள் உள்ளார்கள். அவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும், அன்பானவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள்... என்ன செய்யலாம்?!

பெண் என்றதுமே அவளின் உடல்தான் எனும் கருத்தாக்கத்தில் இருப்போர் முதலில் வெளியே வாருங்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் கோயில் மட்டுமில்லை, கல்லூரி முதல் கழிப்பறை வரையில்கூட தூரம் விலகும் அளவுக்கு சமநிலையை உருவாக்குவோம். ஒரு பெண்ணை எந்தச்  சலனமுமின்றி, ஆரோக்கியமாகப் பார்க்கும் கண்களும் மனதும் அமையப்பெற்ற ஆண்களை உருவாக்குவோம், பெருக்குவோம்.

சக மனுஷியை நேர்மையான பார்வையுடன் கூடுதலாக நேசிப்பதில் என்ன குறைந்துவிடப் போகிறது?!

Link to comment
Share on other sites

சக மனுஷியை நேர்மையான பார்வையுடன் கூடுதலாக நேசிப்பதில் என்ன குறைந்துவிடப் போகிறது?! ......

Link to comment
Share on other sites

2 hours ago, வந்தியத்தேவன் said:

சக மனுஷியை நேர்மையான பார்வையுடன் கூடுதலாக நேசிப்பதில் என்ன குறைந்துவிடப் போகிறது?! ......

 

2 hours ago, நவீனன் said:

மனுஷியை நேர்மையான பார்வையுடன் கூடுதலாக நேசிப்பதில் என்ன குறைந்துவிடப் போகிறது?!

ஏம்பா, வீட்டை நிம்மதியா இருக்கப் பிடிக்கலையா?

3D Smiley Says No Way animated emoticon

Link to comment
Share on other sites

பல ஆண்கள் தம்மை திரும்பிப் பார்க்க வேண்டும். அதன்மூலம் தனக்கு மிகவும் தோதான துணையை (அறிவு, பலம், ஆரோக்கியம் போன்ற விடயங்களில் சிறந்த ஆண்) தான் பெற வேண்டும் என்பது பெண்களின் உடல் அணுக்களில் எழுதப்பட்டிருப்பது. tw_blush: உடல் அழகில் கூடுதல் கவனம் செலுத்துதல், வண்ணப்பூச்சுக்கள் பூசுதல், கடைக்கண் பார்வை, கவர்ச்சியான ஆடை என அவர்கள் போவதற்கு இதுவே காரணம். நல்ல துணையைத் தேர்ந்தெடுத்த பின் அவர்கள் வம்ச விருத்தி செய்வார்கள். இன்னொரு சக வயதுப் பெண்ணைக் கண்டால் அவர்களுக்கு எரிச்சல் வரும். :D:

ஆனால் இதற்கு முரணான சிந்தனையை தமது உடல் அணுக்களில் கொண்டவர்கள் ஆண்கள். எவ்வளவுக்கெவ்வளவு தம் வம்சத்தை விருத்தி செய்ய முடியுமோ அவ்வளவுக்கும் செய்வார்கள். அவர்களுக்கு தெரிந்தது நேரடி நெல் விதைப்பு முறைதான். tw_blush: அதனால் சக நண்பர்களுடன் பிரச்சினைப் படமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் தெரிவுகள் அதிகம். ஆனால் சமூகக் கட்டுப்பாடுகளுக்குப் பயந்து பலர் ஒரு வீட்டோடு குடித்தனம் நடத்துகிறார்கள். :unsure:

இதில் நம்மூரு பசங்களுக்கு பெண்களை கண்ணிலும் காட்டமாட்டார்கள். அவர்கள் வெளிநாட்டுக்கு வந்தால் வாயைப் பிளக்கத்தான் செய்வார்கள். ஆனால் வெள்ளையரும், கருப்பரும் சிறு வயதிலேயே ஆண், பெண் நண்பர்கள் என்று குடித்தனத்தை ஆரம்பித்துவிடுவதால் வில்லங்கமான பார்வைகளை வீசமாட்டார்கள். ஆகவையால் இந்த இடத்தில் ஒப்பீடுகள் தவறு. :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.