Jump to content

காக்கா கலருக்கு எதுக்கு வோட்கா? - ’கத்தி சண்டை’ விமர்சனம்


Recommended Posts

காக்கா கலருக்கு எதுக்கு வோட்கா? - ’கத்தி சண்டை’ விமர்சனம்

 

கத்தி சண்டை

’நாய்’ சேகர், ‘ஏட்டு’ ஏகாம்பரம் என வடிவேலுவின் ஹிட் வெர்ஷன் கொடுத்த இயக்குநர் சுராஜுடன் வடிவேலு ‘கம்-பேக்’ கூட்டணி வைத்திருக்கும் படம், வடிவேலு - சூரி ஒரே படத்தில் காமெடி செய்திருக்கும் படம் என்று எதிர்பார்ப்புகள் சிலவற்றோடு வெளியாகியிருக்கிறது கத்தி சண்டை. காது கிழிந்ததா.. இல்லை கைதட்டலால் அரங்கம் அதிர்ந்ததா?

’6 மாதங்களுக்கு முன்’ என்றொரு ஃப்ளாஷ்பேக்கில் ஆரம்பிக்கிறது படம். கண்டெய்னர் லாரி, கோடி கோடியாய்ப் பணம், மடக்கிப்பிடிக்கும் ஏ.சி. ஜெகபதி பாபு என்று டைட்டில் கார்டு வரும் வரை கொஞ்சம் விறுவிறுப்பு காட்டிவிட்டு, டைட்டிலுக்குப் பிறகு புளித்துப்போன பூர்வஜென்ம புரூடா விட்டு தமன்னாவை கரெக்ட் செய்யப் பார்க்கும் விஷால், தன் காதலுக்காக சூரியை டார்ச்சர் செய்வதில் ஆரம்பிக்கிறது படம். ஒருவழியாக காதல் கைகூடி, நல்ல பேர் எடுத்து  தமன்னாவின் அண்ணனான போலீஸ் அதிகாரி ஜெகபதி பாபுவின் குட் புக்ஸில் இடம்பிடித்து என்று படம் ஒரு ட்ராக்கில் பயணிக்கிறது. திடீரென்று சிலர் ஜெகபதி பாபுவைக் கடத்த, விஷால் அவர்களை அடித்து துவம்சம் செய்து காப்பாற்றிக் கொண்டு வருகிற காட்சியில் அடுத்தடுத்து ட்விஸ்ட்களால் நம்மை நிமிர்ந்து உட்காரவைக்கிறார் இயக்குநர் சுராஜ். ‘படம் பரவாயில்லையே’ என்று நினைத்தால், அதுக்கு அப்புறம் கண்ணுக்குள் கத்தியை விட்டு ஆட்டுகிறார் இயக்குனர்.
 

1482425674_kaththi-sandai_17582.jpg

 

இடைவேளைக்குப் பிறகு, விஷாலைத் துரத்தும் வில்லன்களிடமிருந்து விஷால் தப்பித்து, வில்லன்களிடமே மாட்டிக்கொண்டு, அதே சமயம் அவர்களிடமிருந்து தப்பித்து (குழம்புதா.. ஆனா அப்படித்தான்) சண்டை போட்டு, ‘சிட்டிசன்’ படத்தில் அஜித் சொன்ன பிளாஷ்பேக்கைச் சொல்லி, லஞ்சம், ஊழலுக்கு எதிராகப் பத்து நிமிடம் மூச்சு விஷால் வசனம் பேசி.... அப்பாடா, படத்தை முடிக்கிறார்கள். 
    விஷாலுக்கு இன்னுமொரு ஆக்‌ஷன் படம். தமன்னாவைக் காதலிக்கும்போது மென்முகம் காட்டும் இவர், இடைவேளைக்குப் பிறகு சண்டைக்கோழி ஆகிறார். சூரி, வடிவேலு இருவருடனும் நகைச்சுவைக் காட்சிகளில் தன்னை நன்கு பொருத்திக் கொள்கிறார். ஆனால், விஷால் நடிக்கும் எல்லாப் படங்களிலும் டாட்டா சுமோக்கள் அந்தரத்தில் பறப்பது நம் உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் மிகமிகக் கேடு பயக்கும்!
    சோகமான காட்சியென்றால்கூட, 4 இஞ்ச் ஷார்ட்ஸில் வந்து உள்ளம் கொள்ளை கொள்ள முயல்கிறார் அழகுப்பதுமை தமன்னா. சோகக் காட்சி என்பதால் வருத்தப்படுவதா, தமன்னாவின் அழகை ரசிப்பதா என்று திணறித் திக்குமுக்காடித்தான் போகிறார்கள் ‘தமன்னா’ ரசிகர்கள். தமன்னாவுக்கு குரலுதவி செய்திருக்கும் மானசாவுக்கு ஸ்பெஷல் பூங்கொத்து.    
    முதல் பாதியில் சூரியும், இரண்டாம் பாதியில் வடிவேலுவும் நகைச்சுவைக் கொடி பிடித்திருக்கிறார்கள். விஷாலிடம் மாட்டிக்கொண்டு விழிக்கும் சூரி, பலவித கெட்டப்களில் கிச்சுகிச்சு மூட்டுகிறார். தன் சகாக்களோடு மகாபலிபுரத்தில் செய்யும் அட்டகாசம் சிரிசிரி பட்டாசு. தாதாக்களைக் கவிதை எழுத வைத்த ஐடியாவில் சுராஜின் டிரேட்மார்க் காமெடி ஓகே.  ‘சரித்திரத்துக்குப் பதிலா தரித்திரம்னு எழுதின.. ஆனா ஹார்ட்டுக்குப் பதிலா ஏண்டா கிட்னி வரைஞ்ச?’ என்று விஷால் சூரியை அடிக்கும் காட்சி.... டமாஸூ பட்டாசு! அடிக்க வரும் தாதாவிடம் ஆதார் அட்டை கேட்பதும், கடைசி வரை பிரியாணி தின்ன முடியாமல் அவஸ்தைப்படுவதும் கலகல. ஆனால் அந்த பூர்வஜென்மக் கதையெல்லாம் கொட்டாவி சமாச்சாரம் பாஸ்! பின்பகுதியில் சைக்கியாட்ரிஸ்ட் பூத்ரியாக வரும் வடிவேலுவின் என்ட்ரிக்குத்தான் தியேட்டரில் அதிகபட்சக் கரவொலி. அவரது ஸ்பெஷல் உடல்மொழியும், மாடுலேஷனும் ரசிக்க வைத்தாலும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் திரைக்கதையும், லாஜிக்கும்... இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்! 

‘கருப்பா இருக்கறவன் இன்னொரு கருப்பா இருக்கறவனை அடிக்ககூடாது’, ‘காக்கா கலர்ல இருக்கறவனுக்கு வோட்கா கலர்ல பொண்ணா?’ என்று பசும்பொன் ஜோதியின் வசனங்கள் அங்கங்கே கவனிக்க வைக்கின்றன. பிற்பாதி கார், பைக் சேஸிங்கில் கேமராவுக்கு எக்ஸ்ட்ரா வேலை. ‘நான் கொஞ்சம் கருப்புதான்’ பாடலின் ரயில், டெலிபோன் பூத், சிக்னல் செட்டிங்ஸுக்காக ஆர்ட் டைரக்‌ஷனுக்கு ஸ்பெஷல் சபாஷ்!


இடைவேளை ட்விஸ்டில் அசரடித்த திரைக்கதை, அதற்குப் பிறகு ட்வெண்டி ட்வெண்டியாய் பரபர என்றிருக்கும் என எதிர்பார்த்தால் பெரும் ஏமாற்றம். வடிவேலு வந்தும் கதை நகர்வேனா என்கிறது. ‘எப்படியும் இதுக்கொரு கிராமத்து ஃப்ளாஷ்பேக் காட்டுவாங்கப்பா” என்று தியேட்டரிலேயே ரசிகர்கள் சொல்லக்கூடிய அளவுக்குப் பலவீனமான திரைக்கதை. அத்தனை பெரிய போலீஸ் அதிகாரி, தன் தங்கையைக் காதலிப்பவனைப் பற்றி விசாரிக்கும்போதே விஷாலின் பின்னணி தெரியாமலா போகும்? 
    `நான் கொஞ்சம் கருப்புதான்’ பாடலில் மட்டும் ஹிப் ஹாப் ஆதி கவர்கிறார். பின்னணி இசையில் அனிருத், இளையராஜா என்று பலரை துணைக்கு அழைத்திருக்கிறார். ‘எல்லாப் பாடல்களையும் நான்தான் பாடுவேன்’ என்று அடம்பிடிக்காமல் இருப்பது அவருக்கும் நமக்கும் நலம். விஷால், வடிவேலு, தமன்னா, சூரி என்று பவர் ப்ளேயர்ஸை வைத்துக் கொண்டு அசரடிக்கிற திரைக்கதையில் அசத்தலாக வந்திருக்கவேண்டிய படம், எப்படியோ ‘முடிந்தால் சரி’ என்ற ரீதியில் முடித்திருப்பதால் கண்களில் கத்தியை விட்டு ஆட்டி சண்டை போட்டது போல இருக்கிறது.


 சேம் ப்ளட்!

http://www.vikatan.com/cinema/movie-review/75776-kaththi-sandai-review.art

Link to comment
Share on other sites

திரை விமர்சனம்: கத்தி சண்டை

 

 
kaththi_3108584f.jpg
 
 
 

சென்னையை நோக்கி விரையும் கன்டெய்னர் லாரியை மடக்கிப் பிடிக்கிறார் போலீஸ் அதிகாரி ஜெகபதி பாபு. கோடிக்கணக்கில் பணம் கடத்தப்படுவதைக் கண்டுபிடித்து குற்ற வாளி தருண் அரோராவைச் சிறையில் அடைக்கிறார். ஜெகபதி பாபுவின் தங்கை தமன்னாவைக் காதலிக்கிறார் விஷால். பிறகு ஜெகபதி பாபு கடத்தப் படுகிறார். கடத்தலின் பின்னணியில் ஜெகபதி பாபுவின் வேறொரு முகம் தெரியவருகிறது. ஜெகபதி பாபுவைக் காப்பாற்றும் விஷால் அவர் பதுக்கி வைத்திருக்கும் பணத்தைச் சுருட்டிக் கொண்டு தப்பிக்கிறார். உண்மையில் விஷால் யார்? யாருக்காக இதையெல் லாம் செய்கிறார்? இதற்கான பதில்தான் ‘கத்தி சண்டை’.

இயக்குநர் சுராஜின் 10-வது படம் இது. மக்கள் பணத்தைக் கொள்ளையடிப் பவர்களை ஏமாற்றி, அவர்கள் பணத்தை எடுத்து மக்களுக்கு நன்மை செய்யும் கதையைக் கொண்ட பல படங்களின் சாயல் இந்தப் படத்தில் உள்ளது. பல படங்களில் இருந்த காட்சிகளில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்தால் புதிய திரைக்கதையாகிவிடும் என்று இயக்குநர் சுராஜ் நம்பியிருக்கிறார். அந்த நம்பிக்கை பலிக்கவில்லை.

முன் ஜென்மக் கதை, நினைவு இழத் தல் ஆகியவற்றுக்கான சம்பவங்களை, காட்சிகளை நிறுவிய விதம் பெரும் சோர்வை அளிக்கிறது. ஆங்காங்கே திருப்பங்கள் இருந்தால் போதும் என இயக்குநர் நினைத்திருக்கலாம். ஆனால், அர்த்தமற்ற திருப்பங்களால் சுவையைக் கூட்ட முடியாது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். முதல் பாதியில் வரும் அசட்டுத்தனமான காதல் முயற்சிகள் படத்தின் மீது கடும் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.

விஷால் எப்படி சூரியைத் தேடி வருகிறார்? தன் தங்கையின் காதலுக்காக விஷாலைப் பற்றி விசாரிக்கும் ஜெகபதி பாபுவுக்கு அவருடைய பின்னணி தெரி யாமல்போவது எப்படி? இரண்டாம் பாதி யிலும் எப்படி சொல்லி வைத்தாற்போல யாருமே விஷாலை சந்தேகப்படாமல், கண்காணிக்காமல் இருக்கிறார்கள்? கேள்விகளின் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.

வாட்டசாட்டமான ஒரு ரவுடி வானத்தில் பறந்து வந்து விழுகிறார். அடுத்த கணம் விஷால் திரையில் தோன்றுகிறார். இப்படிப்பட்ட மலினமான அதிரடிகளை நம் நாயகர்கள் எப்போது கைவிடுவார்கள்?

காதலிக்கிறேன் என்று துரத்துவது, இல்லாத பொய் சொல்லி நம்ப வைப் பது, வில்லன்களைப் பறந்து பறந்து புரட்டியெடுப்பது, டூயட் ஆடுவது என வழக்கமும் பழக்கமுமான கதா பாத்திரம்தான் விஷாலுக்கு. சாகச ஹீரோ வுக்கான பிரயத்தனங்களைச் செய்யும் விஷால், ஏன் கற்பனைக் கதையிலும் கண்ணியமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்? இதுவும் சாகசத்தில் ஒரு பகுதி என்று நினைக்கிறாரோ?

தமன்னா அழகுப் பதுமையாக வருகிறார். பாடல் காட்சிகளில் ஈர்க் கிறார். அதோடு சரி. சூரியின் பெண் வேடக் காட்சிகள் எரிச்சலை வரவழைக் கின்றன. வெற்றுவேட்டு ரவுடி வேடத்தை எல்லா நகைச்சுவை நடிகர்களும் சலிக்கச் சலிக்கப் பயன்படுத்திவிட்டார்கள் என் பதை சூரிக்கு யாராவது சொன்னால் நல்லது.

வடிவேலுவின் மறுவருகை மதிப்புக் கும் மகிழ்ச்சிக்கும் உரியது. அவருடைய முத்திரைப் பேச்சும் சேட்டைகளும் உடல் மொழியும் பத்திரமாக இருக்கின்றன. சில இடங்களில் ரசிக்கவைக்கிறார். ஆனால், அவருக்கான களம் சரியாக அமையாததால் அவரது பங்களிப்பு எடுபடவில்லை.

ஜெகபதி பாபு, தருண் அரோரா, சௌந்தர் ராஜா, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கதாபாத்திரங்களுக்குப் பொருந்திப் போகிறார்கள். ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவு படத்துக்குக் கைகொடுக்கிறது. ஹிப் ஹாப் தமிழா இசையில் ‘நான் கொஞ்சம் கறுப்புதான்’ பாடல் மட்டும் கவனம் ஈர்க்கிறது. ஆங்காங்கே திடீரெனக் குதிக்கும் பாடல்கள் தூக்கம் வரவழைப்பதில் திரைக்கதையோடு போட்டிபோடுகின்றன.

அரதப் பழசான கதை, பலவீனமான திரைக்கதை, நம்பகத்தன்மை இல்லாத காட்சி அமைப்புகளால் கத்தி சண்டை வெறும் அட்ட கத்தியின் ஜிகினா சலசலப்பாக ஏமாற்றுகிறது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-கத்தி-சண்டை/article9443220.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

அரதப் பழசான கதை, பலவீனமான திரைக்கதை, நம்பகத்தன்மை இல்லாத காட்சி அமைப்புகளால் கத்தி சண்டை வெறும் அட்ட கத்தியின் ஜிகினா சலசலப்பாக ஏமாற்றுகிறது.

இப்படி படம் எடுத்துவிட்டு தமிழ்நாட்டு திரைப்படம் ஓடவில்லை காரணம் அவன் இவன் என்று பழி போடுவது அவர்கள் வழக்கமாகிவிட்டது .

Link to comment
Share on other sites

7 hours ago, பெருமாள் said:

இப்படி படம் எடுத்துவிட்டு தமிழ்நாட்டு திரைப்படம் ஓடவில்லை காரணம் அவன் இவன் என்று பழி போடுவது அவர்கள் வழக்கமாகிவிட்டது .

அது மட்டுமல்ல விஷால் 6 மாதத்துக்கு ஒரு படம் விடுகிறார் அது ஏன்?? அதைவிட எல்லாம் அவரது சொந்த தயாரிப்பாக தான் இருக்கும், இல்லாவிடில்  எந்த தயாரிப்பாளரும் இவரை நம்பி படம் எடுக்க மாட்டான்!!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.