Jump to content

Recommended Posts

இந்த நாட்டில் மீண்டும் பௌத்த இனவாதத்திற்கு நீதித்துறையை பலி கொடுக்கின்ற செயற்பாடுகள் நடைபெற தொடங்கியுள்ளது.

நாட்டின் வடகிழக்கு உட்பட தென்னிலங்கையில் நடைபெற்ற அனைத்து இனவாத நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக நின்று செயற்பட்ட எந்த பௌத்த இனவாத பிக்குகளையும் இன்று வரை சட்டம் கைது செய்யவில்லை மாறாக அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதையே செய்து வருகின்றது.

இலங்கையின் அரசியல் யாப்பை காரணமாக வைத்து பௌத்த மதத்திற்கான பாதுகாப்பை வழங்கி வரும் அரசாங்கம் இன்று பௌத்த இனவாதத்திற்கும் பாதுகாப்பு வழங்க முயற்சிக்கின்றது.

இந்த நாட்டில் பௌத்தத்திற்கு எதிராக எந்த சம்பவங்களும் இடம்பெறாத போதும் பௌத்த இனவாதம் முழுநாட்டையும் பௌத்த நாடாக மாற்றுவதற்கான திணிப்பை மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக பௌத்தர்களே வாழாத இடங்களில் எல்லாம் பௌத்த விகாரைகளை அமைத்து முழுமையான பௌத்த தேசத்தை பிரகடனப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கான தனியான தேசியக்கொடி ஒன்றை கூட உருவாக்கி அதனை பகிரங்கமாக பிடித்து திரிகின்றார்கள். அந்த கொடியில் இலங்கையின் சிறுபான்மையினருக்காக அடையாளப் படுத்தப்பட்ட நிறம் மற்றும் அடையாளங்கள் அகற்றப்பட்டுள்ளன. குறித்த செயற்பாடுகள் இலங்கையை முழுமையான பௌத்த நாடாக பிரகடனப்படுத்தும் வெளிப்படையான செயற்பாடாகவே கணிப்பிட முடிகின்றது.

ஏனெனில் குறித்த செயற்பாட்டில் இறங்கியுள்ள நபர்கள் மீதோ அல்லது பௌத்த தேரர்கள் மீதோ இன்றுவரை அரசாங்கம் எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த நாட்டில் நீதியும், பௌத்தமும் ஒன்றாக இருக்கும் போது நாட்டில் பௌத்த இனவாதிகளால் முன்னெடுக்கப்படும் இனவாத நடவடிக்கைகளை நீதித்துறை எவ்வாறு கட்டுப்படுத்தும் என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சுக்கள் இரண்டையுமே ஒருவரிடம் வழங்கிவிட்டு நாட்டில் நடக்கும் இனவாதத்தை வேடிக்கை பார்க்கின்றது. அதாவது அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்களிடம் நீதித்துறையையும் மற்றும் பௌத்த சாசன அமைச்சையும் வழங்கி விட்டு பௌத்தம் செய்யும் இனவாதத்தை நீதியின் முன் நிறுத்த முயற்சிக்கின்றது.

ஆனால் பௌத்த சாசனத்தில் ஊரிப்போன அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் ஒரு கையால் பௌத்த இனவாதத்தை அரவணைத்துக் கொண்டு மறுபுறம் மற்ற கையால் நீதியை மறைக்கவே முற்படுகின்றார். இதன் காரணமாகவே நாட்டில் இன்று பௌத்த தேரர்கள் சிலரினால் முன்னெடுக்கப்படும் இனவாத நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படவில்லை இனியும் நிறுத்தப்படாது என தெரியவந்துள்ளது. பௌத்தம் தவறு விடும் போது அதனை நீதி அரவணைத்து காக்கின்றமையானது இந்த நாடடில் மீண்டும் நீதித்துறை மீதான நம்பிக்கையினை கேள்விக்குறியாக்கியுள்ளது.

வடக்கு கிழக்கில் காணப்படும் புராதன பௌத்த விகாரைகளை பாதுகாப்போம்!

வடக்கில் பௌத்த விகாரைகள் அமைப்பதற்கு தடையில்லை என நீதி மற்றும் பௌத்த சசான அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அண்மையில் தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்…

இலங்கையில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அனைவரும் தத்தமது மத வழிபாடுகளை மேற்கொள்ளவும் சட்டத்திற்கு அமைய வழிபாட்டுத் தளங்களை அமைத்துக்கொள்ளவும் உரிமையுண்டு. இலங்கையின் பெரும்பான்மை இனமான சிங்கள பௌத்தர்கள் வடக்கில் விகாரைகளை அமைக்கக் கூடாது என வடக்கு மாகாணசபை கூறுவது எந்தவிதமான அடிப்படையும் அற்ற கருத்தாகும்.

வடக்கு மாகாணசபை எவ்வாறான எதிர்ப்பை வெளியிட்டாலும் அதனை ஓர் அங்கீகரிக்கப்பட்ட எதிர்ப்பாக நாம் கருதப் போவதில்லை. அண்மையில் வடக்கு மாகாணசபையில் பௌத்த விகாரைகள் அமைப்பது குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.

அரசியல் சாசனத்திற்கு புறம்பான வகையில் வட மாகாணசபையினால் சட்டங்களை கொண்டு வர முடியாது. வடக்கு கிழக்கில் காணப்படும் புராதன பௌத்த விகாரைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பௌத்தர்கள் வாழாத இடத்தில் சட்டவிரோத புத்தர்சிலைகளை அனுமதிக்க முடியாது!

நீதி மற்றும் புததசாசன அமைச்சரின் கருத்துக்கு பதிலளித்துள்ள வடமாகாணசபை முதலமைச்சர் வடமாகாணத்தில் பௌத்த விகாரைகளை அமைக்கக் கூடாது என வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஐபக்ச நாடாளுமன்றத்தில் பேசியிருப்பது கவலையளிக்கிறது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் புத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கூறியிருக்கும் கருத்துக்கு பதிலளித்து முதலமைச்சர் விடுத்துள்ள செய்தி குறிப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

குறித்த செய்தி குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

எனக்கு நன்றாக அறிமுகமான ஒருவரான அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் மேற்படி கூற்றை வெளியிட முன்னர் என்னுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். அவ்வாறில்லாமல் தவறான செய்திகளை முன்வைத்து தவறான கருத்துக்களை பாராளுமன்றத்தில் பதிய வைப்பது கவலைக்குரியதாக அமைகின்றது.

பௌத்தர்கள் வாழாத இடத்தில், சட்டத்திற்குப் புறம்பாக, சட்ட அனுமதி பெறாமல், பலாத்காரமாகப் புத்தர் சிலைகளைத் தனியார் காணிகளில் இராணுவத்தினரின் துணையுடன் அமைப்பதையே நாங்கள் கண்டிக்கின்றோம்.

புத்தர் சிலையென்ன, இந்துத் தெய்வங்களின் சிலையென்ன, கிறிஸ்தவர்களின் சிலையென்ன வேறெந்த மதத்தவர் சிலையென்றாலும் சட்டப்படி அமைப்பதை நாங்கள் தடுக்கமாட்டோம்.

தான்தோன்றித்தனமாக அமைத்தால் அதற்கு எங்கள் ஆட்சேபனையைத் தெரிவிக்கத் தயங்கவும் மாட்டோம்.

அமைச்சர் விஜேதாச அவர்களின் கூற்றுக்கள் எமது தமிழ் பேசும் மக்களுக்கே ஆத்திரமூட்டியுள்ளன. சொல்லாததைச் சொன்னதாகக் கூறிக் குற்றஞ்சாட்டினால் யாருக்குத் தான் ஆத்திரம் வராது.

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தென்பகுதியில் இருந்த தமிழ் மக்கள் எவ்வாறு விரட்டியடிக்கப்பட்டார்கள், அவர்கள் ஆலயங்கள் எவ்வாறு சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன, அதன் பின்னர் அவற்றுள் பெரும்பான்மையானவை மீளக்கட்டப்படவில்லை போன்றவை பற்றியெல்லாம் திரு.ராஜபக்ச அறியாதவராக இருக்க முடியாது.

இந்து மக்கள் விரட்டி அடிக்கப்பட்ட காரணத்தினால் தெற்கில் இந்துக் கோயில்கள் கட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனால் பௌத்தர் அல்லாதோர் வசிக்கும் இடங்களில் இராணுவத்தினரின் உதவியுடன் பௌத்த கோயில்களைத் தனியார் காணிகளில் கட்ட முற்படுவது ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே கொள்ள வேண்டியுள்ளது.

அண்மையில் சிங்கள அகராதியின் ஆசிரியர் வணக்கத்திற்குரிய கலாநிதி அகுரடியேநந்தா தேரோ அவர்கள் வேறு இரு பௌத்த பிக்குமார்களுடன் என்னைச் சந்திக்கவந்தார்கள்.

அவர்கள் கூட பௌத்தர் இல்லாதோர் இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாக புத்தர் சிலைகளை நிர்மாணிப்பதைத் தாம் கண்டிப்பதாகக் கூறினார்கள்.

சட்டப்படி மனு செய்து எந்த மதத்தினரும் உரியவாறு தமது வணக்க ஸ்தலங்களை வட மாகாணத்தில் அமைக்கலாம். சட்டத்திற்குப் புறம்பாக அமைப்பது பற்றியே நாங்கள் கருத்துத் தெரிவித்தோம் என்று கூறியுள்ளார்.

பௌத்த தேரரை கைது செய்யாது அழைத்துப் பேசுவது வெட்கக்கேடானது!

முஸ்லிம் சிங்கள மோதல்களை ஏற்படுத்துவதற்கு முனைந்து கொண்டிருக்கும் பௌத்த தேரரை கைது செய்யாது அழைத்துப் பேசுவதானது வெட்கமானதும் வேதனையானதுமான செயலாகும் என அமைச்சர் ரிசாத் பதியூதீன் சபையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை புத்தசாசன அமைச்சு சுற்றுலாத்துறை அபிவிருத்தி கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு, தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் செலவுத் தலைப்புகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் உரையாற்றுகையில்,

அண்மைக்காலமாக மட்டக்களப்பில் பௌத்த தேரர் ஒருவர் கடும் போக்குடன் செயற்படுகின்றார். தமிழ் சகோதரர்களை திட்டுகிறார். இவ்வாறு தமிழ், முஸ்லிம் சமூகங்களின் மீது கடும் போக்குடன் செயற்படும் பௌத்த தேரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சிங்கள, முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்த முயலும் கடும் போக்கான தேரர்களை கைது செய்வதற்கு பதிலாக அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதானது மிகவும் வெட்கத்துக்குரியதும் வேதனையானதுமான விடயமாகும்.

அவ்வாறான செயற்பாட்டை பார்க்கும் போது இந்த நாட்டில் இரண்டு சட்டங்கள் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. சட்டம் என்பது ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். அது பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை தடுக்கமுடியாது!

முஸ்லிம்களின் உயிர் மூச்சான இஸ்லாத்தையும் குர்ஆனையும் நிந்தித்தால், முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை யாராலும் தடுக்கமுடியாது என்று இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற பௌத்த சாசன அமைச்சு, தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விகார அமைச்சு, சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சுக்கள் மீதான குழு நிலைவிவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் முஸ்லிம்கள் இஸ்லாத்தை பின்பற்றக்கூடாது, பள்ளிவாசல்களுக்கு செல்லக்கூடாது என சில இனவாதிகள் கூறுகின்றனர். ஆனால், எம்மால் இப்படி வாழ முடியாது. இஸ்லாம்தான் எங்கள் உயிர்மூச்சு. அதற்காகத்தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

எனினும், எமது உயிரிலும் மேலான இஸ்லாமும், குர்ஆனும் தொடர்ச்சியாக சிலரால் நிந்திக்கப்பட்டுவருகிறது. இதனால் முஸ்லிம் இளைஞர்கள் தற்போது மிகவும் மனவேதனையடைந்துள்ளனர்.

உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையென முஸ்லிம் அரசியல்வாதிகள்மீதும் சமுகவலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டபோது ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள் முதலில் தமிழ் தலைவர்களையே படுகொலை செய்தனர். அதேபோல முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினால் எம்மையே முதலில் படுகொலை செய்வார்கள்.

நாடு கடந்த 30 வருடங்கள் யுத்தத்தால் அழிவடைந்தது. இந்த நிலையில் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினால் நாடு மேலும் 60 வருடங்களுக்கு மேலாக மோசமான நிலைமைக்கு தள்ளப்படும்.

இலங்கை பௌத்த நாடாக இருந்தாலும் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை உள்ளது. நாமும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.

அத்தோடு, ஐ.எஸ்.அமைப்பு என்பது முஸ்லிம் அமைப்பு அல்ல என்பதையும் அதில் உள்ளவர்கள் முஸ்லிம்களும் அல்லர் என்பதையும் கூறிக்கொள்ள வேண்டும். அது மேற்குலக நாடுகளின் கூலிப்படைகளுள்ள அமைப்பாகும்' என தெரிவித்துள்ளார்.

நாட்டின் நீதித்துறை மீது வடக்கிலும் கிழக்கிலும் இருந்து இவ்வாறான மிகக் காரசாரமான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் போது இனவாத நடவடிக்கைகள் மீது தொடர்ந்தும் நீதித்துறை நடவடிக்கை எடுக்கத் தவறுகின்றமையானது பௌத்த இனவாதத்திற்காக நாட்டின் நீதித்துறையை பலிகொடுக்க அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தயாராகின்றாரா என்ற சந்தேகங்களை சிறுபான்மையின மக்கள் மத்தியில் வலுப்படுத்தியுள்ளது.

கடந்த ஆட்சியை இதே இனவாதத்திற்காகவே தமிழ் முஸ்லிம் மக்கள் தூக்கியெரிந்திருந்தார்கள் குறிப்பாக முஸ்லிம் தலைவர்கள் பலர் மகிந்த ராஜபக்சவை தூக்கியெறிந்துவிட்டு வெளியேறவேண்டிய நிர்ப்பந்தம் கொழும்பில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட சிங்கள பௌத்த இனவாதமே காரணமாக அமைந்திருந்தது.

அதேநிலை இன்றுள்ள நல்லாட்சி அரசாங்கத்திற்கும் ஏற்படப்போகின்றதா என்பதற்கான சமிக்ஞைகளாகவே இவற்றையெல்லாம் பார்க்ககேவண்டியுள்ளது.

http://www.tamilwin.com/articles/01/127845?ref=morenews

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.