Jump to content

"ஆமா... நானும் கணேஷும் ஒண்ணா இல்லை...எங்களுக்குள்ள பிரச்னை!" - ஆர்த்தி


Recommended Posts

"ஆமா... நானும் கணேஷும் ஒண்ணா இல்லை...எங்களுக்குள்ள பிரச்னை!" - ஆர்த்தி

ஆர்த்தி

காதல் கணவர் கணேஷுடன் விவாகரத்து...

ஹீரோயின் ஆசையில் சைஸ் ஸீரோவுக்கு முயற்சி...

காமெடி நடிகை ஆர்த்தியைச் சுற்றி இப்படி ஏகப்பட்ட செய்திகள்....'நெசமா' என ஆர்த்திக்கு வாட்ஸப்பினால், ஸ்மைலியை அனுப்பிவிட்டு அதே ஸ்மைலுடன் 'ஹாய் அக்கா' என லைனில் வருகிறார் ஆர்த்தி.

''ஆமாம்... நானும் கணேஷும் ஒண்ணா இல்லை... செம அடிதடி... பயங்கர பிரச்னை...''சின்ன இடைவெளி விட்டு பெரிய சிரிப்புடன் தொடர்கிறார் ஆர்த்தி.

''புருஷன், பொண்டாட்டின்னா சண்டை, சச்சரவு இருக்கணும். பிரச்னை இருக்கணும். அப்பதான் இந்த சமுதாயம் நம்மை உத்துப் பார்க்கும். அமைதியா இருந்தா, அட அவங்களுக்கென்ன... நல்லாத்தானே இருக்காங்கனு விட்ருவாங்க.  நான் தனியா எங்கேயாவது போறபோது கணேஷ் எப்படியிருக்கார்னு என்கிட்ட யாராவது கேட்டாங்கன்னா, அவர் எப்படியிருக்கார்னு யாருக்குத் தெரியும்னு சொல்லிடுவேன். அப்புறம் எங்களைப் பத்தியே யோசிச்சிட்டிருப்பாங்கல்ல... 

இப்ப டைவர்ஸ் டிரெண்ட். நாங்க டிரெண்டிங்ல இருக்கோம்ல... நியூஸ்ல அடிபட்டுக்கிட்டே இருப்போம்ல.... இன்னிக்குக் காலையில கூட பாபா கோயிலுக்கு சேர்ந்துதான் போயிட்டு வந்தோம். அப்ப நாங்க யார் கண்லயும் படலை... தனியா போற போது மட்டும் கவனிச்சுக் கேட்கறாங்க பாருங்க... அதுதான் காமெடி...'' சிரிப்புக்கு இடையே பேசுகிறார் ஆர்த்தி.

''என்னைப் பொறுத்தவரைக்கும் டைவர்ஸுங்கிறதே இருக்கக்கூடாது. டைவர்ஸ் கொடுத்துட்டோம்னா ரெண்டு பேரும் சுதந்திரமாயிடுவாங்க. கொடுக்காம கூடவே வச்சுக்கிறதுதான் பெரிய தண்டனை. அப்படிப் பார்த்தா கணேஷுக்கு நான் கொடுத்திருக்கிறது ஆயுள் தண்டனை. தப்பிக்கவே முடியாது...'' என்கிறவர் சைஸ் ஸீரோ வதந்தியையாவது உண்மை என்கிறாரா?

''சான்ஸே இல்லை... பயங்கரமான புரளி. யானை இளைச்சிட்டா யானைக்கு மதிப்பே இல்லையே... இது வினையில்லாத மனசுங்க. அதனால நாம எப்போதும் இப்படித்தாங்க...''வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறவர், மீண்டும் தமிழ் சினிமாவில் பிசி.

''கத்திச் சண்டை' பொங்கலுக்கு ரிலீஸ். வடிவேலுக்கு அசிஸ்டென்ட்டா பண்ணியிருக்கேன்.  ஜீவாகூட 'ஜெயிக்கிற குதிரை' பண்றேன்.

மலையாளத்துல மூணு படங்கள் போயிட்டிருக்கு. விஜய் டி.வியில 'கலக்கப் போவது யாரு'ல ஜட்ஜா வரப் போறேன்...''லேட்டஸ்ட் தகவல்கள் பகிர்கிற ஆர்த்திக்கு பெரிய திரையில் பெரிய பெரிய திட்டங்கள் இருக்கின்றன.''தமிழ்ல வந்த 'திரைக்கு வராத கதை' படத்தோட மலையாள வெர்ஷன்ல நடிச்சிருக்கேன். அதுல ஒரு வருஷம் போயிடுச்சு. அதனால தமிழ்ல ஒரு சின்ன இடைவெளி வந்திருச்சு. எனக்கு எத்தனை படங்கள் பண்றோம்ங்கிறது முக்கியமில்லை. சும்மா ஹீரோயின் ஃப்ரெண்ட் கேரக்டர், ஹீரோ, ஹீரோயினை சேர்த்து வைக்கிறதுனு பண்றதுல  ஆர்வம் இல்லை. அதனால எனக்கு முக்கியத்துவம் இருந்தா மட்டும்தான் நடிக்கிறேன்.

காமெடிதான் என்னோட சாய்ஸ். அதுலயும் எனக்குனு சில கொள்கைகள் வச்சிருக்கேன். டபுள் மீனிங் டயலாக் பேச மாட்டேன். நான் இருக்கும்போது யாராவது டபுள் மீனிங்ல பேசினாலும் பேசாதீங்கனு சொல்லிடுவேன். பெண்களை அவமானப்படுத்தறதோ, கலாய்க்கிறதோ எனக்குப் பிடிக்காது...'' என்கிற ஆர்த்தி தன்னைப் பற்றிய கிண்டல், கேலியை லட்சியம் செய்வதில்லையாம்.

''என்னை புளி மூட்டை, அரிசி மூட்டைனு எப்படி வேணா கூப்பிடட்டும். எனக்குக் கவலையே இல்லை. நான் குண்டா இருக்கிறதை நினைச்சு பெருமைப்படறேன். எங்கம்மா, அப்பாவுக்கு நன்றி சொல்றேன். என் கூட நடிக்கிற எத்தனையோ ஹீரோயின்கள் இங்க் ஃபில்லர்ல தண்ணீர் குடிக்கிற அளவுக்கு கட்டுப்பாடா இருக்கிறதைப் பார்த்திருக்கேன். வெயிட் போடக்கூடாதேங்கிற பயம். கடவுள் கொடுக்கிற சாப்பாட்டை ஒதுக்கி வைக்கிறதையே பாவம்னு நினைக்கிறேன். சாப்பாடு இல்லாம எத்தனையோ பேர் கஷ்டப்படும்போது,  நமக்கு இருக்கும்போது சாப்பிடறதை ஏன் தவிர்க்கணும்? காமெடி மட்டுமில்லை, டான்ஸ் உள்பட ஒரு ஒல்லியான ஹீரோயின் பண்றதுக்கு இணையா என்னாலயும் பண்ண முடியும். அப்படியிருக்கும்போது நான் ஏன் ஃபீல் பண்ணணும். இன்னும் சொல்லப் போனா ஒரு சேனல்ல டான்ஸ் ரியாலிட்டி ஷோவுல நான் டான்ஸ் பண்ணி, ஜெயிச்சிருக்கேன்...'' அதிரடியாகச் சொல்கிற ஆர்த்தியின் அடுத்த அவதாரம் கதாசிரியர்.

''பெண்களை மையப்படுத்தி பயங்கர காமெடி ஸ்கிரிப்ட் ஒண்ணு பண்ணிட்டிருக்கேன். அதை படமாக்கணும். நல்ல டைரக்டர், நல்ல ஹீரோயினை வச்சு எடுத்து, அதுல நானும் ஒரு கேரக்டர் பண்ணலாம்னு ஐடியா...'' புதுத் தகவல் சொல்பவருக்கு, தமிழ் சினிமாவில் காமெடியில் பெண்களுக்கான இடம் இன்னும் காலியாகவே இருப்பது குறித்த கோபமும் இருக்கிறது.

''ஸ்கிரிப்ட் எழுதறவங்க பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதறதில்லை. ஒரு டைரக்டர் காமெடியனோட கால்ஷீட் கிடைச்சிருச்சுன்னா, 'பத்து சீன்... நீங்களே உங்க டீமை வச்சு காமெடி டிராக் எழுதிக்கோங்க'னு சொல்லிடறாங்க. எந்த காமெடியனுக்கும் தன்கூட நடிக்கிற பெண் காமெடியனுக்கு வாய்ப்பு கொடுக்கற எண்ணம் இல்லை. அவங்க நம்மளை ஓவர்டேக் பண்ணிடுவாங்களோன்ற பயம். பெண்களுக்கு முக்கியத்துவமே இல்லை. கேட்டா பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு கம்மிங்கிறாங்க. நானே பர்சனலா பல முறை இந்த அனுபவத்தை சந்திச்சிருக்கேன். ஷூட்டிங் வரைக்கும் போயிட்டு, மேக்கப் எல்லாம் போட்டுட்டு, பிறகு கேரவேன்லேருந்து இறங்கி வந்ததெல்லாம் நடந்திருக்கு. அப்பகூட எனக்கு கோபமெல்லாம் வராது. 'பரவால்லை... நம்மைப் பார்த்து ஒரு பயம் இருக்கட்டும்'னு நினைப்பேன். கடவுள் எல்லாருக்கும் ஒருநாள் வச்சிருப்பார். எனக்கும் அப்படியொரு நாள் வரும்...'' நம்பிக்கையுடன் சொல்பவருக்கு காமெடியில் இன்ஸ்பிரேஷன் மிஸ்டர் பீனும், நடிகர் கமல்ஹாசனுமாம்.

நடிப்பில் தனக்கொரு தெளிவையும் பக்குவத்தையும் கொடுத்த படம் 'படிக்காதவன்' என்கிறார் ஆர்த்தி.

''படிக்காதவன்' படத்துல அருக்காணி கேரக்டர் என் வாழ்க்கையில மறக்க முடியாதது.  'ஒரே ஒரு சீன்தாம்மா... தனுஷ் பொண்ணு பார்க்க வருவார்... நீ வந்து நிக்கணும். பாட்டு பாடிட்டு வெட்கப்படணும். அவ்வளவுதான்'னு சொல்லிட்டார் டைரக்டர் சுராஜ். 'ஒரே ஒரு சீனா... அதுக்கு நான் எதுக்கு சார்?'னு கேட்டேன். 'ஒரு சீன்தான்னாலும் உன்னால நிறைய ஸ்கோர் பண்ண முடியும். முயற்சி பண்ணு'னு சொன்னார்.

 நான் என்ன பண்ணப் போறேன்னு யாருக்கும் தெரியாது. டேக் போயிட்டாங்க. பாட்டு பாடிட்டு, தனுஷ் சார் கன்னத்துல இடிச்சிட்டு ஓடி வர்ற மாதிரி பண்ணினேன். அந்த ஷாட் முடிஞ்சதும் மொத்த கூட்டமும் ஆச்சரியமா பார்த்தது. தனுஷ் சார் கைதட்டி பாராட்டினார். இன்னிக்கு இருக்கிற சினிமாவுல சக நடிகர்களைப் பாராட்டற மனசு எல்லாருக்கும் வராது. தனுஷ் சாருக்கெல்லாம் என்னைப் பாராட்டணும்னு எந்த அவசியமும் இல்லை. ஆனாலும் ஈகோ பார்க்காம பாராட்டினது பெரிய விஷயம். கூட நடிக்கிறவங்க தன்னை விட பெட்டரா நடிக்கிறாங்கனு தெரிஞ்சாலே, 'வேணாம்... அதை மாத்திடலாம்'னு சொல்ற ஹீரோக்களுக்கு மத்தியில தனுஷ் சார் என்னை பிரமிக்க வச்சிட்டார். அந்தப் படம் என் கேரியர்ல பெரிய திருப்புமுனை.  அந்தப் படத்துக்காக எக்கச்சக்கமான விருதுகள், பாராட்டுக்கள் வாங்கியிருக்கேன். என் வாழ்க்கையை மாத்தின சீன் அது... அதுக்ப்புறம்தான், நான் எப்படிப்பட்ட படங்களை, கேரக்டரை தேர்ந்தெடுக்கணும்ங்கிற தெளிவும் வந்தது...'' பெருமையாகச் சொல்கிறவர், ஆர்த்தி ஐ.ஏ.எஸ் ஆகியிருக்க வேண்டியவர். சினிமா அவரது தலையெழுத்தை மாற்றிவிட்டது.

''ஆமாம். ரொம்பத் தீவிரமா அதுக்காக படிச்சேன். ஒரு கட்டத்துல வேண்டாம்னு விட்டுட்டேன். எத்தனையோ டாக்டர்களும், இன்ஜினியர்களும் சினிமாவைத் தேடி வந்திட்டிருக்கிறபோது, எனக்கு தானா கிடைச்ச சினிமா துறையை ஏன் விடணும்னு நினைச்சேன். அதையே எனக்கான அடையாளமாக்கிக்கிட்டேன். சினிமாவுல நடிப்பு தவிர நிறைய விஷயங்கள் பண்ணணும்னு ஆசை. என் குருநாதர் பாக்யராஜ் சார் மாதிரி நல்ல ஸ்கிரிப்ட் எழுதணும்னு ஆசை. ஆஸ்கார் வாங்கணும்ங்கிற அளவுக்கு நிறைய கனவுகள் இருக்கு...'' என்கிறார்.

கனவுகள் நனவாகட்டும். 

http://www.vikatan.com/news/television/74589-tv-star-aarthi-says-she-is-not-with-her-husband-ganesh-now.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.