Jump to content

அப்பா! - சிறுகதை


Recommended Posts

அப்பா! - சிறுகதை

 

 

37p1.jpg

விடியற்காலை ஐந்து மணி. நந்தினியின் செல்போன் விடாமல் அடிக்க... கண்களைக் கசக்கிக்கொண்டே போனை எடுத்த நந்தினி, அண்ணாவின் பெயரைப் பார்த்ததும் பயந்து போனாள்.

“என்னடா, இந்த நேரத்துல... யா... யாருக்கு என்னாச்சு?”

“அப்பாக்கு ஹார்ட் அட்டாக்டி. சாரதா நர்ஸிங் ஹோம்ல சேர்த்திருக்கோம்.”

அவ்வளவுதான்... நந்தினிக்கு அவள் உலகமே சுற்றியது. நிதானத்துக்கு வந்து ஆகாஷிடம் சொல்லிவிட்டு மருத்துவமனைக்குப் பயணித்த அந்த நிமிடங்கள் நரகமானவை.

எட்டு வருடங்களுக்கு முன்னால், அப்பாவின் முன் நின்றது நினைவிலாடியது.

“நான் எவ்ளோ சொல்லியும் கேக்காம ஆகாஷை கல்யாணம் பண்ணிண்டு வந்து நிக்கற... இதுக்கு மேல உன் கூட எனக்குப் பேச இஷ்டம் இல்ல...”

“எதுக்கு இப்படி கத்தறேள்... ஆகாஷ் உங்க அக்கா பையன்தானே?'' என்று சப்போர்ட்டுக்கு வந்த அம்மாவை பார்வையாலே எரித்தார் அப்பா.

அன்றிலிருந்து நந்தினியோடு பேசுவதையும் பார்ப்பதையும் அப்பா நிறுத்தி 8 வருடங்களாயிற்று. ஆனாலும், இரண்டு குழந்தை கள் பிறந்தபோதும், கிரஹப்பிரவேசத்தின்போது மறக்காமல் அம்மா, அண்ணா, மன்னி என்று யாராவது ஒருவரை அனுப்பி வைத்துக்கொண்டுதான் இருந்தார்.

“நமக்கு உடம்பு சரியில்லாம வீக்கா இருக்கும்போதுதான் எல்லாரையும் பாக்கணும், பேசணும்னு தோணும். நீ போனா அப்பா கோவிச்சுக்க மாட்டார். போயிட்டு வா” என்று ஆகாஷ் தந்த நம்பிக்கையில் மருத்துவமனை சென்றாள் நந்தினி.

அம்மா, அண்ணாவைப் பார்த்துவிட்டு ஐ.சி.யூ-வுக்கு சென்றபோது மனம் உணர்வுகளால் நிரம்பியிருந்தது. அப்பா இடது பக்க இரண்டாவது கட்டிலில் சுவாசக் கருவிகளின் துணையோடு சுவாசித்துக்கொண்டிருந்தார். தலை நரைத்து, வழக்கமான விபூதி கீற்று இல்லாமல் களையிழந்து, சோர்வாக இருந்த அப்பாவைப் பார்க்கவே வலித்தது. நினைவுகள் கண்ணீராக நிரம்பி வழிய ஆரம்பித்தன நந்தினிக்கு.

`கால் வலிக்குதுப்பா' என்று சொன்ன ஒரே காரணத்துக்காக இரவெல்லாம் கால் அமுக்கிவிட்ட அப்பாவா இது...

`ஹெர்பேரியம் பண்றதுக்கு பிளான்ட்ஸ் இல்லப்பா' என்று கண்களைக் கசக்கியபோது, மூச்சிரைக்க வந்து பிளான்ட்ஸ் கொடுத்த அப்பாவா இது...

`விருப்பப்பட்ட காலேஜ் கிடைக்காது போலப்பா' என்று முகம் சுருங்கியதை பொறுக்காது, தொடர்ந்து ஒரு மாத கடும் முயற்சியின் காரணமாக ஸீட் கிடைக்க வைத்த அப்பாவா இது... என்று அப்பாவை பற்றி நினைக்க நினைக்க கண்ணீர் வழிவதைத் தடுக்க முடியவில்லை நந்தினிக்கு.

அப்பா மெள்ள கண் விழித்து நந்தினியைப் பார்த்து கண்களில் நீர் வழிய மெலிதாக சிரித்து, `இங்கே வா' என்று சைகையால் அழைக்க, ஒரு கணம் இதயம் நின்று துடித்தது நந்தினிக்கு.
``எப்ப வந்தே?''

``இப்பதான்பா'' என்று அப்பாவின் கண்ணீரைத் துடைத்தபோது சோர்வில் அப்பாவின் கண்கள் தானாக மூடிக்கொண்டன. வெளியே வந்து கண்களைத் துடைத்துக் கொண்டே ``எதனால இப்படி ஆச்சு'' என்று அண்ணாவிடம் கேட்டாள் நந்தினி.

``ஆகாஷுக்கு ஒருமாசத்துக்கு முன்னாடி கார் ஆக்ஸிடன்ட் ஆச்சுல்ல... அதைச் சொன்னேன். அப்படியாவது மனசு மாறுவார்னு நினைச்சேன். ஆனா, அந்த நியூஸால அப்பாவுக்கு இப்படி ஆகும்னு நினைக்கலை... ஸாரி நந்தினி'' என்று தலைகுனிந்த அண்ணனின் குற்ற உணர்வை மேலும் கிளற விரும்பாமல் அமைதி காத்தாள் நந்தினி. 

“இவர் சொன்னதுலேருந்து அப்பா உடைஞ்சு போயிட்டார் நந்தினி” - மன்னி சொன்னாள். ```ஆகாஷுக்கு ஒண்ணும் இல்லையே, நல்லா இருக்கானா'னு கேட்டுண்டே இருந்தார். சரி நந்தினி, நீ கெளம்பு. டைம் ஆச்சு. நாளைக்கு காத்தால வா'' என்று அனுப்பி வைத்தான் அண்ணன்.

இரண்டு நாட்கள் குழந்தைப் பராமரிப்பை ஆகாஷே முழுவதுமாக எடுத்துக்கொண்டான். நந்தினி வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் சாப்பாடு கட்டி எடுத்துக் கொண்டுபோனாள். அப்பாவை நார்மல் வார்டுக்கு மாற்றியிருந்தார்கள்.

“அப்பா ஏதாவது சாப்பிட்டாளாம்மா?”

“நர்ஸ் வந்து கஞ்சி குடுத்தா. நாளைலேந்து இட்லி சாப்பிடலாம்னு சொல்லிருக்கா” என்றாள் அம்மா.

“இதுல சாப்பாடு இருக்கு” என்று பையை அம்மாவிடம் தந்தாள்.

கொஞ்ச நேரத்தில் அப்பா விழித்துக் கொண்டார். நந்தினியை அருகே அழைத்து பக்கத்தில் இருந்த நாற்காலியைக் காண்பித்து உட்காரச் சொன்னார்.

“ஆகாஷ் வரலையா?” - ஈனஸ்வரத்தில் கேட்டார்.

“வித்யாவையும்  வினயாவையும் ஸ்கூல்லேந்து கூட்டிண்டு சாய்ங்காலமா வருவார்ப்பா...”

மாலை ஆகாஷ் மகள்களோடு வந்தான். ஆகாஷைப் பார்த்து சந்தோஷமாகச் சிரித்தார். தன் கைகளை அசைத்துப் பக்கத்தில் வரச் சொன்னார். ஆகாஷ் பக்கத்தில் வர, அவனின் இடது உள்ளங்கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

“அந்த ஆக்ஸிடன்ட்ல உனக்கு ஒண்ணும் அடிபடலையேப்பா?”

“இல்ல மாமா, எனக்கு ஒண்ணும் ஆகலை.” தன் கை மேல் இருந்த அவரின் கையை ஆறு தலாக தடவிக்கொடுத்தான். வெகு நாட்களுக்கு பிறகு அப்பாவிடம் பேசியதால் மனது நிறைந் திருந்தது. நிம்மதியாக உறங்கினாள் நந்தினி.

மறுநாள் மருத்துவமனைக்குச் சென்றபோது அப்பா பழையபடி ஃப்ரெஷ்ஷாக நெற்றியில் விபூதிக் கீற்றோடு பார்ப்பதற்கு நிறைவாக இருந்தார். 37p2.jpg

“ஆகாஷ் வரலையாம்மா?'' - அப்பா கேட்டார்.

“பிளம்பிங் வேலை நடக்குதுப்பா...”

“நல்ல பெரிய வீடாம்மா?”

“எங்காத்தைப் பாக்கறயா?” என்றபடியே தன் செல்போனில் வீட்டை காட்ட, ரசித்து மகிழ்ந்த அப்பா, ``கார் ஒழுங்கா இருக்காமா?” என்றார்.

“நீ டிஸ்சார்ஸ் ஆகி எங்காத்துக்கு அதுலதான வரப்போற... அப்பப் பாரு'' என்றபோது அப்பா சிரித்தார்.

மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கு அப்பா மறைந்து போனார்.

பதின்மூன்றாம் நாள் காரியம் முடிந்த இரவு, ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்தார்.

“நந்தினி... அப்பா பீரோ லாக்கர்ல ஏதாவது பணம் இருக்கா பாரு... உங்கப்பா குருவி சேக்கறா மாதிரி ஒவ்வொரு பைசாவும் சேத்துருக்கா. அது வேஸ்ட்டா போயிட போறது. போய் பாரு...”


நந்தினி பீரோவைத் தொடும்போதே அப்பாவைத் தொடுவது போன்ற உணர்வு வர, கைகள் நடுங்கின. அப்பாவுக்கு மாச சம்பளம் வந்ததும் ரூபாயைப் பிரித்து வைக்கும் பழக்கம் உண்டு. நோட்டு கட்டுகளைப் பார்த்தபோது அப்பாவின் எழுத்து தெரிந்தது. உற்றுப் பார்த்த நந்தினி உறைந்தாள்.

`நந்தினி தலை தீபாவளி', `நந்தினி கிரஹப்பிரவேசம்', `நந்தினி வளைகாப்பு', `நந்தினி பொங்கல்' என்று அவளுக்கு தான் செய்ய வேண்டிய சீர் அனைத்துக்கும் பணத்தை பிரித்து வைத்திருந்தார் அப்பா.
ஒரு பெரிய விம்மல் ஒன்று அவள் தொண்டையில் இருந்து எழுந்தது.

“அப்பா...” - பணக்கட்டால் முகத்தை முடிக்கொண்டு பெரிதாக அழத் தொடங்கினாள் நந்தினி.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.