Jump to content

நமலி போல் வாழேல் - சிறுகதை


Recommended Posts

நமலி போல் வாழேல் - சிறுகதை

விநாயக முருகன், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

 

p154a.jpg

வீட்டுக்கு வெளியே வரும்போது, தெருவில் பட்டாசுக்குப்பைகள் மிதந்துகொண்டி ருந்தன. மழையிலும் மக்கள் தீபாவளியை எப்படியோ கொண்டாடியி ருந்தார்கள். மீண்டும் ஒரு பெருமழை வரும் என்று தோன்றியது. கவலையுடன் வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தவன், ஏதோ சத்தம் கேட்டு அங்கு நின்றிருந்த காரைத் திரும்பிப் பார்த்தேன். முதலில் பார்க்கும்போது, காருக்குக் கீழே துணிமூட்டை போலத்தான் தெரிந்தது. என்னைப் பார்த்து விருட்டென அது வெளியே வந்ததும்தான் நாய் என்று உணர்ந்தேன். பயத்தில் அனிச்சையாக எனது கால்கள் பின்னால் நகர, படிக்கட்டில் ஏறி நின்றுகொண்டேன். அவ்வளவு பெரிய உயரத்தை எப்படிக் குறுக்கி, அந்த காருக்கு அடியில் பந்துபோல சுருண்டுகிடந்தது? அது ஒரு டால்மேஷன் நாய். உடம் பில் இருந்த கருந்திட்டுகள் எல்லாம் உதிர்ந்திருந்தன.

வாழ்ந்துகெட்டவனின் வீட்டுச் சிதிலங்கள்போல, போனால்போகட்டும் என உடலில் ஒட்டியிருந்தன. சேறும் சகதியும் அப்பிக்கிடந்தது. தெருநாய்போல கண்களில் கோழை வழிய முன்னங்கால்களை ஊன்ற முடியாமல் நின்றிருந்தது. தோல் கிழிந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. கழுத்தில் வெளுத்துப்போன சங்கிலிப்பட்டை மின்னியது. அக்கம்பக்கத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு பங்களாவில் இருந்து ஓடிவந்திருக்கலாம். இல்லை. ஓடிவந்திருக்காது. மனிதர்கள்தான் அற்பவிஷயங்களுக்குக் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு ஓடிப்போவார்கள். வளர்ப்புப் பிராணிகள் அப்படிச் செய்யாது. விரட்டித்தான் விட்டிருப்பார்கள்.

அந்த நாய் எங்கு இருந்து வந்திருக்கும் என்று குழப்பத்துடன் தெருவைப் பார்த்தேன். தெரு அமானுஷ்யமாக இருந்தது. மழைநகரத்தில் இது ஒரு பெரிய தொல்லை. பெருநகரின் மழை, மனிதர்களை மட்டும் அல்ல வீடுகளையும் ஒருவித அமைதியில் உறையவைத்துவிடுகிறது. அந்த நாய் என்னையே பார்த்தபடி நின்றது. அதன் தோற்றம் பரிதாபமாக இருந்தாலும், அது நின்றிருந்த தொனியும், கண்களின் கூர்மையும் கம்பீரமாகவே இருந்தது. என்னிடம் இருந்து எந்தவித கருணையையும் எதிர்பார்க்கவில்லை என்று அதன் அலட்சியமான உடல்மொழி சொன்னது. பங்களாவில் வளரும் நாய்களுக்கும் தெருநாய்களுக்கும், உடல்மொழியில் மிகுந்த வித்தியாசங்கள் இருப்பதைக் கவனிக்கலாம். தெருநாயாக இருந்திருந்தால், இந்நேரம் என்னைப் பார்த்துப் பயந்து வெளியே ஓடியிருக்கும். இதுவோ என்னையே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தது.

`இப்ப என்ன வந்துச்சு? ஒதுங்க கொஞ்சம் இடம் இருந்தது... வந்துட்டேன். உனக்குப் பிடிக்கலைன்னா, மழை நின்னதும் போயிடுறேன்’ என்று சொல்வதுபோல நின்றிருந்தது.

கார் உயரத்துக்கு இணையாக, கன்றுக்குட்டிபோல நிற்கும் அந்த நாயை விரட்ட பயமாக இருந்தது. மாடிப்படிக் கட்டுகளில் ஏறி நின்றுகொண்டு தயக்கத்துடன் `ச்சூ’ என்றேன். அது அசரவில்லை. என்னையே சலனமற்ற விழிகளுடன் பார்த்தது. அதன் திமிர் மீது எனக்குக் கோபம் வந்தாலும், மனதின் மூலையில் சிறுபரிதாபம் வெளிப்பட்டு என்னை அமைதியாக்கியது. வீட்டுக்குள் சென்று பத்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்து பார்த்தேன். மழை சற்று வலுவாகப் பெய்து கொண்டிருந்தது. அந்த நாய், எதிர்வீட்டின் கார் நிறுத்தும் இடத்தில் படுத்திருந்தது. நான் நிம்மதியாக வீட்டுக்குள் சென்று எனது வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தேன்.

p154b.jpg

மறுநாள் மழையினூடாக அலுவலகம் சென்று, வேலைகளின் ஆயிரம் கரங்கள் எனது கழுத்தை நெரிக்க அந்த நாயை மறந்தேபோனேன். இரண்டு நாட்கள் ஓடின. அலுவலகம் முடிந்து வந்து கொண்டிருந்தேன். இரண்டாவது தெருமுனையில் தேநீர்க்கடை ஒன்று இருந்தது. அந்தக் கடையை `பாய் கடை’ என்பார்கள். கடையின் உரிமையாளர் முகமதியர். அவருக்கு ஐம்பது வயது இருக்கும்.

சொந்த ஊர் ராமநாதபுரம். துபாய் செல்ல யாரோ ஓர் ஏஜென்ட்டிடம் பணம் கொடுத்துள்ளார். அவன் இவரை சென்னை வரச்சொல்ல, இவரும் மூட்டை முடிச்சுகளோடு வந்து ஏஜென்ட் சொன்ன லாட்ஜில் தங்கியுள்ளார். விடுதியில் இவரைப்போலவே துபாய் செல்ல பணம் கட்டியவர்கள் சிலரும் தங்கியிருந்தார்கள். ஆனால், ஒருவரும் துபாய் செல்லவில்லை. பணத்தோடு தலைமறைவான ஏஜென்ட்டைத் தேடுகிறேன் என்று சென்னையிலேயே தங்கியவர், பிறகு ஒருவழியாக மனதைத் தேற்றிக்கொண்டு, டீக்கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து, இப்போது சொந்தமாகவே இந்தக் கடையை நடத்துகிறார். 

பாய் கடைக்கு எதிரே குப்பைத்தொட்டி அருகே, அந்த நாய் என்னையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தது. இந்த நாய் இன்னுமா இதே தெருவில் சுற்றிக்கொண்டிருக்கிறது? இரண்டு நாட்களாகக் கண்ணில் தென்படவே இல்லையே. எங்கே  இருந்தது? யார் சோறு போட்டிருப்பார்கள்? யோசித்தபடியே வீட்டுக்குத் திரும்பினேன். இரவு உணவை முடித்துவிட்டு வீட்டின் கதவைப் பூட்டுவதற்கு வெளியே வந்து பார்த்தேன். நாயின் நடமாட்டம் இல்லை. நிம்மதியாக இருந்தது. 

காலை அலுவலகம் செல்ல வெளியில் வரும்போது, நாய் என் வீட்டின் கார் நிறுத்தும் இடத்தில் உட்கார்ந்திருந்தது. என்னைப் பார்த்ததும் எழுந்துசென்று விறுவிறுவென எதிர்வீட்டு கார்நிறுத்தும் இடத்தில் உட்கார்ந்து கொண்டது. அந்த வீட்டின் உரிமையாளர் ஆர்.வி., அப்போதுதான் வெளியே வந்தார். வெளியே கிடந்த கல்லை எடுத்து நாயின் மீது வீச, அது தெருவில் ஓடி மறைந்தது. 

“காத்தால நான் பார்க்குறச்சே, அந்த நாய் உங்க வீட்டு கார் பார்க்கிங்ல உட்கார்ந்திருந்தது. விரட்டிவிட்டேன். இப்ப இங்க வந்து உட்கார்ந்திருக்கு. நைட்டுல கேட்டைத் திறந்து வைக்காதீங்க” என்றார்.

மறுநாளில் இருந்து நான் செல்லும் இடங்களில் எல்லாம், அந்த நாயைப் பார்க்க ஆரம்பித்தேன். யதேச்சையாக   அந்த நாய் என் கண்களில் பட்டாலும், அந்த நாய் என்னைப் பின்தொடர்கிறதா என்றுகூடக் குழப்பமாக இருந்தது. தெரு கேட்டை மூடிவைத்தாலும், அந்த நாய் நள்ளிரவுக்கு மேல் எப்படியோ வாகனம் நிறுத்தும் இடத்தில் வந்து படுத்துக்கொள்ளும். கண்விழித்து வெளியில் வந்து பார்க்கும்போது எழுந்து ஓடிவிடும். நான் அலுவலகம் செல்லும்போது, அந்த நாய் என் பின்னாலேயே நடந்துவர ஆரம்பித்தது. அலுவலகம் முடித்து தெருவுக்குள் நுழையும்போது எங்கு இருந்தோ ஓடிவரும். வீடு வரை பின்னாலேயே வரும். கேட்டைச் சாத்துவதையே சலனமற்றுப் பார்க்கும். பிறகு மெதுவாகத் திரும்பி வந்த வழியே நடந்துசெல்லும். அந்த நாயின் மெளனம் மெள்ள மெள்ள எனது மூளைக்குள் புகுந்து, கரையான்போல அரிக்க ஆரம்பித்தது. கண்ணாடி முன்னர் நான் நிற்கும்போதுகூட அங்கு நாயின் உருவமே தெரியும். கனவிலும் தொடர்ந்தது. அலுவலகத்தில் இருக்கும்போதும் நாயின் நினைவே ஓடிக்கொண்டிருந்தது.

அன்றைய தினம் அமெரிக்க நிறுவனத்துக்கு அனுப்பவேண்டிய மின்னஞ்சலைத் தவறாக அனுப்பி, எனது மேனேஜரிடம் வாங்கிக்கட்டிக் கொண்டேன். அவர் என்னைத் திட்டும்போதும் நாயின் குரலையே கேட்டேன். எனது குழப்பத்தைக் கவனித்த அலுவலக நண்பர் ராஜ், என்னிடம் நடந்த விஷயங்கள் பற்றி கேட்டார்.

p154c.jpg

அவரிடம், ``அந்த நாய் ஏன் எங்கள் தெருவிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறது?’’ என்று கேட்டேன்.

அவர் சிரித்தபடியே ``உங்கள் தெருவாசிகள் எவரேனும் அதற்கு ஒருவேளை சோறு போட்டிருக்கலாம். அந்த நன்றி விசுவாசத்துக்காகச் சுற்றிக்கொண்டிருக்கக்கூடும்’’ என்றார்.

``ஒரு குழந்தையைப்போல வளர்த்த நாயை, யாராவது விரட்டிவிடுவார்களா?’’ என்று கோபமாகச் சொன்னேன்.

``மனிதர்களையே விரட்டிவிடும்போது நாய்களை விரட்டிவிட மாட்டார்களா?’’ என்று ராஜ் கேட்டார்.

சாலையில் எத்தனை பேர் மனநிலை பிறழ்ந்தவர்களாக நடமாடுகிறார்கள்? அவர்கள் எல்லாரும், தங்கள் வீட்டின் முகவரியை மறந்தவர்களா? மனநிலை சரியில்லாத  ஆட்களை லாரியில் ஏற்றி, ஏதாவது தேசிய நெடுஞ்சாலையில் இறக்கிவிடும் டிரைவர்களை நாம் பார்த்தது இல்லையா? தேவையற்ற சுமை என்று வந்துவிட்டால், மனிதனும் நாயும் ஒன்றுதானே? ராஜ் சொல்வதிலும் உண்மை இருப்பதாகப் பட்டது.

நாங்கள் அலுவலகத்தில் வேலைசெய்யாமல் அரட்டையடிக்கிறோம் என்று மேனேஜர் மீண்டும் வந்து கத்தினார். மேனேஜர் சென்ற பிறகு, அவர் திட்டியது நாய் குரைத்ததுபோலவே இருந்தது இல்லையா என்று கேட்டேன். தனக்கும் அப்படித்தான் தோன்றியதாக ராஜ் சொன்னார்.
 
நான் அலுவலகம் முடித்து சோர்வாக வீட்டுக்குத் திரும்பும்போது வழக்கம்போல, அந்த நாய் என்னையே பின்தொடர்ந்து வந்தது. எப்போதும் நான் கேட்டைச் சாத்தியவுடன் அந்த நாய் என்னை உற்றுப்பார்த்துவிட்டுத் திரும்பிச் சென்றுவிடும். எனக்குள் குற்றவுணர்ச்சி எழும். ஆனாலும் நள்ளிரவில் எப்படியோ பூட்டிய கேட்டைத் தாண்டி, அந்த நாய், நான் கார் நிறுத்தும் இடத்தில் வந்து படுத்துக்கொள்ளும். ஒரு முடிவுக்கு வந்தவனாக கேட்டைச் சாத்தாமல் திறந்துவைத்துவிட்டு நாயை ஏறிட்டுப் பார்த்தேன். அது என்னையே விநோதமாகப் பார்த்தபடியே நின்றிருந்தது. வீட்டுக்குள் சென்று, ஒரு பிளாஸ்டிக் தட்டில் சோற்றை எடுத்து வந்து அந்த நாயின் முன்னால் வைத்தேன். அந்த நாய் என்னைச் சந்தேகமாகப் பார்த்தது. என் அருகில் வரத் தயங்கி நின்றது. நான் பின்னால் நகர்ந்து மாடிப்படிகளில் ஏறி நின்றுகொண்டேன். அந்த நாய் மெள்ள அடியெடுத்து முன்னால் வந்து, சுற்றிலும் ஒருமுறை பார்த்தது. பிறகு தட்டில் இருந்த சாதத்தை முகர்ந்துபார்த்தது. ஒரு வாய் மட்டும் தட்டை நக்கிவிட்டு, திரும்பி வந்த வழியே நடக்க ஆரம்பித்தது. `என்ன திமிர்?’ என்று நினைத்துக்கொண்டேன்.

“அது சாம்பார் சோறு சாப்பிடாது” - குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். ஆர்.வி., அவர் வீட்டுவாசற்படியில் நின்றிருந்தார். நடந்ததை எல்லாம் பார்த்திருப்பார் என்று நினைக்க, எனக்கு வெட்கமாக இருந்தது.

எதிர்வீட்டில் வசிக்கும் ராஜவேலுவை நாங்கள் `ஆர்.வி’ என்றுதான் அழைப்போம். அவருக்கு அறுபது வயது இருக்கும். அசோக் லேலேண்டில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். மகன்கள் இருவரும் வெளிநாட்டில் வசிக்க, இவர் இங்கே தனியாக உடல்நலம் சரியில்லாத மனைவியைப் பராமரித்துக்கொண்டிருந்தார். மகள் திருமணமாகி ஆவடியில் வசித்தாள். எப்போதாவது மட்டும் பார்க்க வருவாள்.
அவர் என்னைப் பார்த்துச் சிரித்தபடியே “நானும் சோறு வெச்சுப் பார்த்தேன். அது சாப்பிடலை” என்றார்.

அவரது உறவினர் வீட்டில் ஒரு டால்மேஷன் வளர்த்ததாகவும், அந்த நாய்க்கு என்னென்ன வாங்கித் தருவார்கள் என்றும் சொல்ல ஆரம்பித்தார்.

``நாய்களுக்கு என்று விசேஷமாக பெடிக்ரி உணவு விற்கும் கடைகள் இருக்கு. ஒரு கிலோ முன்னூறு ரூபாய். அதோடு தினமும் மாட்டுக்கறி கலந்து தரவேண்டும். கூடவே நாய்களுக்கு என்று விற்கும் ஷாம்பூ வாங்க வேண்டும். நம் வீட்டு குழந்தைகளுக்கு ஒருவாரத்துக்கு ஆகும் செலவை, பங்களாவில் வளர்க்கும் நாய்களுக்கு ஒருநாளுக்குச் செய்வார்கள். அவை எல்லாம் நமக்குக் கட்டுப்படியாகுமா?’’ என்று அவர் கேட்க எனக்குத் தலைசுற்றியது.

``டால்மேஷன்களை முறையாகப் பராமரிக்காவிட்டால் தோல்வியாதி வரும்’’ என்று சொன்னார்.  

அந்த நாயின் பின்னணி ஆர்.வி-க்குத் தெரிந்திருந்தது.

ஐந்து தெரு தாண்டி ஒரு சினிமா நடிகையின் பங்களா இருந்தது. அவருக்கு நாற்பது வயது இருக்கும். அவர் கதாநாயகியாக நடித்த முதல்படம் சுமாராகவே ஓடியது. இரண்டாவது படம் சரியாகப் போகவில்லை. மூன்றாவது படம் வெளிவரவே இல்லை.  பிறகு ஒன்றிரண்டு படங்களில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். பிறகு கதாநாயகனுக்குத் தங்கையாக நடித்தார். அப்புறம் வெகுநாட்கள் வரை வாய்ப்பு எதுவும் கிடைக்காமல்போக, தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார்.

``அந்த டால்மேஷன் அவரது வீட்டு நாய்தான். அவங்க வீட்டைக் காலி செஞ்சுட்டு வேற எங்கேயோ போயிட்டாங்க. போறச்ச இந்த நாயை மட்டும் விட்டுட்டுப் போயிட்டாங்க. கொஞ்ச நாள் அந்தத் தெருவுலேயே சுத்திக்கிட்டிருந்தது. இப்பத்தான் நம்ம தெரு பக்கம் வர ஆரம்பிச்சிருக்கு” என்றார் ஆர்.வி.

அந்த நடிகைக்குச் சமீபமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிப்பது இல்லை என்று எங்கேயோ படித்த நினைவு. அவர் பங்களாவைக் காலிசெய்துவிட்டு இப்போது வேறு எங்கோ வசிக்கிறார். வருமானம் இல்லாதவர்கள் எதற்கு நாய் வளர்க்க வேண்டும்? வளர்க்க முடியாவிட்டால் ஏதாவது பிராணிகள் வளர்ப்பு சங்கத்தில் ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கலாமே என்று நினைத்துக்கொண்டேன். நடிகையின் பங்களாவில் இப்போது வேறு யாரோ குடிவந்திருந்தார்கள். அந்த வீட்டு வாசலிலேயே சோகமாகப் படுத்துக் கிடக்குமாம். அங்கிருந்தவர்கள் இந்த நாயை விரட்டிவிட, இது குப்பைமேட்டில் திரிய ஆரம்பித்துள்ளது. தெருநாய்கள் இந்த டால்மேஷனின் உயரத்தையும் விநோதமான தோற்றத்தையும் பார்த்து மிரண்டுபோய் தாக்க, இங்கே ஓடிவந்திருக்கிறது. 

இந்த நாய்க்குப் பின்னால் இவ்வளவு பெரிய சோக ஃப்ளாஷ்பேக்கா என்று நினைத்துக் கொண்டேன். அது சரி, மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒரு கதை இருக்கும்போது, நாய்களுக்கு ஏன் இருக்கக் கூடாது?

ஆர்.வி சிரித்துக்கொண்டே,  “அவனவனுக்கு ஆயிரம் பிரச்னைகள். இந்தப் பங்களா நாய்ங்க பாலும் தேனும் குடிச்சு சொகுசா வளர்ந்திருக்கும். திடீர்னு தெருவுக்கு வந்தா என்ன செய்றதுனு அதுங்களுக்குத் தெரியாது. இப்பகூடப் பாருங்க. மழை பெஞ்சா, தெருநாய்ங்க ஏதாவது கடைக்கு முன்னாடி படுத்துத் தூங்கிடும். இதுக்கு கார் ஷெட் கேக்குது” என்றார்.

“கார்ப்பரேஷனுக்கு போன் செஞ்சா அவங்க வந்து பிடிச்சுட்டுப் போவாங்க சார்” என்றேன்.

“சொல்லிப் பார்த்துட்டேன். வந்தபாடில்லை. தெருவுல இருக்கிற எல்லாரும் சேர்ந்து சொன்னாலும் வர மாட்டாங்க. டிரெயினேஜ் அடைப்புக்கே வர்றது இல்லை. நாய்க்கு எல்லாமா வருவாங்க? நாம என்ன செய்றது? கேட்டை  மூடிவைங்க” என்றார்.

p154d1.jpg

நாயை வளர்க்க முடியாவிட்டால் அதைக் கொன்றுவிடலாம். எதற்கு அதை வீட்டைவிட்டுத் துரத்திவிடுகிறார்கள் என்று தோன்றியது. இந்த நாய் விஷயம், எப்படியோ என் மனைவிக்குத் தெரிய வந்தது.  

“நாம என்ன செய்றது? வேணும்னா அதுக்கு ஒருவேளை சோறு வைக்கலாம்” என்று மனைவி சொல்ல, எனக்கு நடந்ததைச் சொல்லப் பயமாக இருந்தது. நான் நாய்க்குச் சோறுவைத்து, அது சாப்பிடாமல் சென்றதைச் சொல்லவில்லை. ஒருவேளை நான் ஏதாவது சொல்லி என் மனைவி அதை வேறு அர்த்தத்தில் எடுத்துக்கொண்டால்? ஏனெனில் அந்தச் சோற்றைத்தானே நான் தினமும் சாப்பிடுகிறேன்.   

“அது டால்மேஷன் நாய். ஏற்கெனவே தோல் அலர்ஜி வந்து ரத்தம் கொட்டுது. வெறும் சோறு மட்டும் வைத்தால் தேறாது. அதுக்கு சத்தா ஏதாச்சும் வாங்கிப் போடணும்.” 
 
“ஆபீஸ் முடிச்சு வர்றப்ப புகாரியில சிக்கன் பிரியாணி வாங்கிட்டுவந்து போடுங்களேன்.”

நான் எதுவும் பேசாமல் திரும்பிப் படுத்துக் கொண்டேன். என்னதான் வெளியில் சற்றுக் கடுமையாக நடந்துகொண்டாலும், ஆண்களைவிட பெண்கள் கருணைமிகுந்தவர்கள் அல்லவா? அந்த நாய் கார் நிறுத்தும் இடத்துக்கு வந்து செல்வதை, என் மனைவி தடுப்பது இல்லை. எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் நான்கு வீடுகள் இருந்தன. தரைத்தளம் எங்களுடையது. வெளியில் நின்றிருந்த ஸ்கோடா கார், இரண்டாவது தளத்தில் வசிப்பவருடையது. அவர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளிநாடு சென்றிருந்தார். திரும்பி வர ஒரு மாதம் ஆகும். முதல்தளத்தில் வசிப்பவரிடம் பைக் மட்டும் இருந்தது. எனவே, ஒரு நாய் வெளியில் இருந்து வந்து, காருக்கு அடியில் படுத்து அதிகாலையில் எழுந்துசெல்வதை, யாரும் கண்டுபிடிக்கவோ அல்லது புகார்சொல்லவோ வாய்ப்பு இல்லை. ஸ்கோடா கார் பக்கத்தில் நைந்துபோன, பயன்படுத்தாத பழைய நைலான கார் கவர்கள், அழுக்குத்துணிகள் கிடக்கும். நைலான் உறைகள் குளிருக்கு இதமாக இருக்கும். அந்த நாய் நைலான் உறையை வாயால் கவ்வி காருக்கு அடியில் இழுத்துப்போட்டிருந்தது. தினமும் அதில்தான் படுத்து உறங்கும்.

``எவ்வளவு சொகுசுபாருங்களேன்’’ என்று எனது மனைவி கிண்டல் செய்வாள்.

“குழந்தைகளை வீட்டைவிட்டுத் துரத்தி விடுவதைவிட கொடுமையானது, வளர்ப்பு நாய்களைத் துரத்திவிடுவது. இந்த நாயைத் துரத்திவிட்ட பெண்மணியை மட்டும் நேரில் பார்த்தால் கொலையே செய்வேன்” - மனைவியிடம் சொன்னேன்.

“நல்லவேளை... நாயை வளர்த்தவங்க, வீட்டுக்கு வெளியில மலம் கழிக்கப் பயிற்சி கொடுத்திருக்காங்க. அந்த வகையில அவங்களைப் பாராட்டணும்”  என்றாள். p154e.jpg

எல்லா தீமைகளிலும் எப்படியோ ஒரு நன்மையை அவள் கண்டுபிடித்துவிடுவாள். சொகுசாக வளர்ந்த நாய்கள் தெருவுக்கு வருவது கொடுமையான விஷயம்தான். ஆனால், அந்த நாய்களிடம் நான் வியக்கும் விஷயம். அதன் நாகரிகம். அதுபோல வீட்டின் முன்பு மலம், சிறுநீர் கழிப்பது இல்லை. வீட்டின் அருகே ஒரு காலிமனை இருக்கிறது. அங்குதான் எல்லாம். அதுபோல நாங்கள் எல்லாரும் விளக்கை அணைத்த பிறகே கார் நிறுத்தும் இடத்துக்கு வந்து படுத்துக் கொள்ளும். சொல்லப்போனால், அதற்கு இரவில் உறங்க ஓர் இடம் மட்டுமே தேவை. எங்களிடம் சோறு எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு சிறிதும் தொந்தரவு தந்துவிடக் கூடாது என்பதில், அது மிகுந்த கவனமாக இருந்தது. எங்கள் கண்ணில் படாமல் ஒரு பூனைபோல அது தங்கிவிட்டுச் சென்றுவிடும். அதற்கு யார் உணவு தருகிறார்கள் என்ன சாப்பிடுகிறது என்பது எல்லாம் புரியாத புதிராகவே இருந்தது. எனது வேலைப்பளுவில் அதைத் தெரிந்துகொள்ளும் முயற்சியிலும் இறங்கவில்லை.  
  
இரண்டு வாரங்கள் ஓடியிருக்கும். மழை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. மழைக்காலம் காவியங்களில் வேண்டுமானால் அழகாகத் தோன்றலாம். ஆனால், யதார்த்தத்தில் மழையைப்போல எரிச்சலூட்டும் பருவகாலம் வேறு இல்லை. `இன்னும் சில நாட்களில் இதைவிட அதிகமாகக் கனமழை பெய்யும். வீட்டை விட்டு வெளியே வராதீங்க. மீனவர்கள் கடலுக்குச் செல்லாதீங்க’ என்று நகரம் எங்கும் அறிவித்துக்கொண்டே இருந்தார்கள். இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் பயந்தால், பிழைப்பைப் பார்க்க முடியுமா? மழையில் நகரத்தின் போக்குவரத்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. சாலைகள் எங்கும் குண்டும்குழியுமாக சாக்கடை நீரும் மழை நீரும் கலந்து, துர்நாற்றம் வீசியது. 

அன்று வீட்டுக்குத் திரும்பும் வழியில், தெருவில் நீர்மட்டம் அதிகரித்திருந்தது. என் மனைவி அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது. வீட்டு முன்னால் பாதாளச் சாக்கடை அடைத்துக்கொண்டதாகவும், மழைநீர் இடுப்பு அளவு நிற்பதாகவும் சொன்னாள். முன்பக்கம் செல்ல முடியாது. எங்கள் வீட்டின் பின்புறம் இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் நுழைந்து, அந்த மதில்சுவர் மீது ஏறித்தான், எங்கள் வீட்டுக்குள் செல்ல வேண்டும். வழக்கமாக ஒவ்வொரு வருடமும் எங்கள் பகுதியில் நடப்பதுதான். பெண்கள், குழந்தைகள் எல்லாரும் இப்படித் தான் செல்வோம். பாதாளச் சாக்கடை பற்றி அதிகாரிகளிடம் புகார் கொடுத்து, நாங்கள் ஓய்ந்துபோனோம். குரங்குகள்போல வாழ எங்களைத் தயார்செய்து கொண்டோம். 

பின்வீட்டின் மதிற்சுவர் மீதேறி நான் எனது வீட்டின் பின்னால் குதித்திருக்க வேண்டும். ஆனால், நான் மதில் மீது நடந்துசென்று கார் நிறுத்தும் இடத்தில் குதித்தேன். அங்கு நீர்க்குழாய் ஒன்று இருந்தது. கால்களைக் கழுவிக்கொண்டு வீட்டுக்குள் போகலாம் என்ற யோசனையோடுதான் அங்கு குதித்தேன். மின்சாரம் இல்லை. அவசரத்தில் நான் குதித்த இடத்தில், டால்மேஷன் படுத்துக் கிடக்கும் என்பதை மறந்துபோனேன். நான் குதித்ததும் அந்த நாய் விருட்டென ஸ்கோடா கார் கீழ் இருந்து எழுந்து, என்மீது சிறுத்தைபோல பாய்ந்தது. இரண்டு கால்களையும் என் தோள்களில் வைத்து, குரல்வளையில் பற்களை பதிக்க... ஒரு கணமேதான். பயத்தில் வெலவெலத்துப் போனேன். நான் பின்னால் சரிந்துவிழ, நாய் என்னை அடையாளம் கண்டுகொண்டது. தலையைத் தொங்கப்போட்டு எதுவும் செய்யாமல் நின்றது. எனது உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தது. எரிச்சலோடு கேட்டைத் திறந்துவைக்க, அதுவோ மன்னிப்பு கேட்பதுபோல பரிதாபமாகப் பார்த்தது.

``ச்சீ போ நாயே’’ என்று காலடியில் கிடந்த சிறு ஜல்லிக்கல்லை கையில் எடுத்து, நாயின் மீது வீசினேன். அது நாயின் மீது படவில்லை. அது ஒரு கணம் என்னை நிதானமாக ஏறிட்டுப் பார்த்துவிட்டு, வெளியே நின்ற இடுப்பு அளவு வெள்ள நீரில் நீந்திச் சென்றது. 

அன்று இரவு எல்லாம் எனக்கு உறக்கம் வரவில்லை. அந்த நாய் தலைகுனிந்து நின்ற சித்திரம் மனதுக்குள் தொடர்ந்து வந்தபடியே இருந்தது. குழந்தையை அடித்த தந்தையைப்போல உணர்ந்தேன். தவறு என் மீதுதான். இந்த இருட்டில் யாராக இருந்தாலும், மதிற்சுவர் மீது ஏறிக் குதித்தால், `திருடன்’ என்றுதானே நினைப்பார்கள்? எனக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்படும்போது எல்லாம் எனது முகநூலில் பதிவுகள் எழுதுவேன். நான் நாயைத் திட்டியதை, அதன் மீது கல் வீசி விரட்டிவிட்டதையும் உருக்கமாக எழுதினேன். ஐந்து நிமிடங்களில் முன்னூறு பேர் விருப்பக்குறி இட, பத்துப்பேர் ஆறுதலாகப் பின்னூட்டங்கள் எழுதினார்கள். சிலர், `நாயை பிராணி நலச் சங்கத்தில் சேர்த்துவிடுங்கள்’ என்று ஆலோசனை சொன்னார்கள். பிராணி நலச் சங்கத்தின் தொடர்பு எண்ணைக் கேட்டேன். ஒருவருக்கும் தெரியவில்லை. நேரம் செல்லச் செல்ல யார் யாரோ எனது பதிவை, அவர்களது டைம்லைனில் பகிரத் தொடங்கினார்கள். சிலர் பின்னூட்டத்தில் என்னைத் திட்ட ஆரம்பித்தார்கள். ஒருவர் தொடர்பே இல்லாமல், என் அம்மா, மனைவி எல்லாரையும் திட்டி, பின்னூட்டம் போட்டிருந்தார். ஒவ்வொன்றாக அழித்து விட்டு உறங்கச் செல்லும்போது, மணி பன்னிரண்டு. நெடுநேரம் வரை நாய்களின் சன்னமானக் குரைப்புச் சத்தம் ஒலித்துக்கொண்டே இருந்தது.

p154f.jpg

லுவலகத்திலும் எனக்கு அதே நினைப்புதான். மேனேஜர் அறையில் இருந்து சோகத்துடன் வந்துகொண்டிருந்த ராஜ் என்னைப் பார்த்து, ``கேன்டீன் போகலாமா?’’ என்றார்.

நாங்கள் காபி வரவழைத்துப் பேச ஆரம்பித்தோம். `புராஜெக்ட்டை ஏன் முடிக்கலை?’ என மேனேஜர் திட்டியதாக வருத்தத்தோடு சொன்னார் ராஜ். நான் என் பிரச்னையைச் சொன்னேன். ``நல்லவேளை நாய் உங்களை கடிக்கலையே?’’ என்றார். ``நாய்கள் புத்திசாலிகள்’’ என்று சொன்ன ராஜ், அவர் வசிக்கும் அண்ணாநகரில் இருக்கும் ஒரு நாயைப் பற்றி சொன்னார்.  

அந்த நாய்க்கு தீபாவளி என்றால் பயம். தீபாவளி  பண்டிகை வருவது இரண்டு நாட்களுக்கு முன்பே அதற்குத் தெரிந்துவிடுமாம். அது இருக்கும் இடத்தில் இருந்து வெளியேறி, ஆவடி தாண்டிச் சென்றுவிடும். இரண்டு மூன்று நாட்கள் கழித்துதான் திரும்பிவரும். ஒருமுறை யாரோ அந்த நாய் வாலில் பட்டாசைக் கட்டிவிட, அன்றில் இருந்து ஒவ்வொரு வருடமும் தீபாவளி நெருங்கும்போது, அது இப்படிச் செய்வது வழக்கம் என்றார்.

மனிதர்கள் காலண்டர் பார்த்து, பண்டிகை நாட்களைத் தெரிந்துகொள்வார்கள். ஆனால், ஒரு நாய்க்கு எப்படி தீபாவளி வரப்போகிறது என்று தெரியும்? தொடர்ந்து காற்றில்  ஒலிக்கும் பட்டாசு சத்தம், பருவகாலம், மழை இவை எல்லாவற்றையும் கொண்டு தீபாவளி வரப்போகிறதைக் கணித்து, பதுங்கிக்கொள்ளும் என்று ராஜ் சொன்னார். அவ்வளவு புத்திசாலி நாய்க்கு, ஏன் இருளில் என்னை அடையாளம் தெரியவில்லை என்று வியப்பாக இருந்தது.   

p154g.jpgமறுநாள் காலை கண் விழித்ததும் வெளியே மழை ஓய்ந்திருந்தது. ஜன்னல் கண்ணாடிகளில் எல்லாம் நீர்த்துவாலைகள் இறங்கியிருந்தன. குளிருக்கு இதமாகத் தேநீருடன் சிகரெட் பிடிக்கத் தோன்றியது. மனைவி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். விடுமுறை தினம். அவளை எழுப்ப மனம் இல்லை. எழுந்து வீட்டின் பின்புறமாகச் சென்றேன். லுங்கியை மடித்துக்கட்டி, மதிற்சுவர் மீது ஏறிக் குதித்து, பாய் கடைக்குச் சென்றேன். தெருக்களில் நீர் நின்றிருந்தது. இன்னும் இரண்டு தினங்கள் மழை தொடர்ந்தால், வீடுகளுக்குள் நீர் புகுந்துவிடும் என்று தோன்றியது. தெருவில் நாயைக் காணவில்லை. வழக்கமாக தேநீர்க் கடை எதிரே இருக்கும் குப்பைத்தொட்டி அருகே உட்கார்ந்திருக்கும். பாயிடம் கேட்டேன். அவர் யோசித்தார்.

“இங்கதான் கிடக்கும். பொறை போடுவேன். சிலநேரம் சாப்பிடும். சிலநேரம் சாப்பிடாம  ஓடிடும். நீங்க கேட்டதுக்கு அப்புறம்தான் தெரியுது. ரெண்டு நாளா அதைக் காணோம்”  -தேநீர்க் குவளையைக் கழுவியபடியே சொன்னார்.

பக்கத்துத் தெருவில் இறைச்சிக் கடை ஒன்று இருந்தது. நான்கு கடைகள் தள்ளி ஓர் அசைவ உணவகம் இருந்தது. அங்கு சுற்றிக்கொண்டி ருக்கும் என்று பாய் சொன்னார். அங்கு சென்று பார்க்கும்போது டால்மேஷன் நாய் இல்லை. வேறு ஒரு பெரிய நாய், இறைச்சிக் கழிவுகளை, எச்சில் இலைகளை முகர்ந்தபடி நின்றிருந்தது. அதைத் தெருநாய்கள் பெரும் கூட்டமாகத் திரண்டு விரட்டிக்கொண் டிருந்தன. பாவம் இதை எந்தப் பங்களா வாசி விரட்டி விட்டானோ?  

எங்கு போயிருக்கும் அந்த டால்மேஷன்? அடுத்தடுத்த நாட்களில் வேலைப்பளுவும் மழையும் அதிகரித்தது. வீடு திரும்ப நேரமானது. வழியில் எங்காவது அந்த நாய் தென்படுகிறதா என்று பார்த்தபடியே நடப்பது வழக்கம். கேட்டைத் தாழிடாமல் திறந்தேவைத்தேன். நள்ளிரவுக்கு மேல் எழுந்து, ஜன்னல் வழியாகப் பார்ப்பேன். நாய் வந்தபாடில்லை.  
 
சிறுவயதில் நான் வசித்த ஊர் ஞாபகம் வந்தது. ஊரில் பெரிய மனிதர்கள் சிலரைப் பார்த்திருக்கிறேன். `ஜமீன் வாரிசு’ என்று பெருமையாகச் சொல்வார்கள். ஒருகாலத்தில் அரண்மனை போன்ற வீட்டில் வசித்திருப் பார்கள். ஆனால், இப்போது அந்த வீடுகளின்  வெளிப்புறச்சுவர்களில் பாசிபடர்ந்து உள்ளே  ஒருவிதத் தனிமையும் வெறுமையும் குடிகொண்டிருக்கும். வேலைக்காரர்கள் இருக்க மாட்டார்கள். காட்டுக்கொடிகள் மண்டிய இடங்களில், குதிரை வண்டிகள் மட்டும் எலும்புக்கூடுபோல நிற்கும். குதிரைகள் இருக்காது. அநேகமாக அதுபோன்ற வீடுகளில் வசித்தவர்கள் மானஸ்தர்களாக இருப்பார்கள். செல்வமும் மானமும் ஒரே இடத்தில் இருப்பது ஆபத்து. அதைவிட ஆபத்து... நீட்டிய பத்திரங்களில் எல்லாம் கண்ணைமூடி கையெழுத்துப் போடுவது. எப்போதாவது அவர்களை ஊர் எல்லையில் இருக்கும் தேநீர்க் கடையில் பார்க்கலாம். தலை கவிழ்ந்து பெஞ்சில் உட்கார்ந்தபடி, அமைதியாக செய்தித்தாள் படிப்பார்கள்.

படிப்பது ஒரு பாவனைதான். உண்மையில் அவர்கள் முகத்தை பேப்பரால் மறைத்து, எவரிடமும் பேசாமல் கூனிக்குறுகி உட்கார்ந்திருப்பார்கள். அவர்களிடம் என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று மற்றவர்களுக்கும் தயக்கமாக இருக்கும். ஆனால், அவ்வளவு வறுமையிலும் அவர்கள் தங்கள் பழைய பகட்டை, கம்பீரத்தை விட்டுவிட மாட்டார்கள். கடன் வாங்கியாவது தானம் செய்வார்கள்.

அதுபோன்ற மனிதர்கள் ஒருநாள் இரவோடு இரவாக ஊரைவிட்டு சென்றுவிடுவார்கள். அவர்கள் எங்கு போவார்கள் என்ன செய்வார்கள் என்பது புதிராகவே இருக்கும். குற்றவுணர்வுடன் தலையைத் தொங்கப்போட்டபடி உட்கார்ந்திருந்த அந்த டால்மேஷனை நினைக்கும்போது எல்லாம், வாழ்ந்துகெட்ட ஜமீன்தார்கள் ஊர் எல்லையில் இருக்கும் தேநீர்க்கடைகளில் உட்கார்ந்திருப்பது, எனக்கு நினைவுக்கு வரும். 

டுத்தடுத்த மழைநாட்களில் அந்த நாய் எங்கள் பார்வையில் இருந்து முற்றிலும் மறைந்து விட்டிருந்தது. மழைக்காலம் சில நினைவுகளைக் கிளறிவிடுவதுபோல சிலவற்றை மறக்கவும் வைத்துவிடும். அந்த நாயை மறந்தேபோனேன். மழையின் தாக்குதல் அதிகரித்துக்கொண்டே சென்றது. `எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு பேய் மழை’ என்று நகரத்தில் பேசிக்கொண்டார்கள். குளங்கள், ஏரிகள் நிரம்பி நகரம் எங்கும் வெள்ளக்காடாக நிரம்பியது. தெருவில் நின்றிருந்த வெள்ளமட்டம் உயர்ந்துகொண்டே போனது. மழை அதிகரிக்க அதிகரிக்க வதந்தியும் ஏதேதோ செய்திகளும், நகரம் எங்கும் பரவிக்கொண்டே இருந்தன. திடீரென மின்சாரத்தை நிறுத்தினார்கள். அலைபேசிகள் வேலைசெய்யவில்லை.  நகர எல்லையில் இருந்த பெரிய ஏரி மழையில் உடைந்துவிட்டதாகவும், நகரமே வெள்ளத்தில் மூழ்கிவிட்டதாகவும் ஆர்.வி சொன்னார்.  நான் நம்பவில்லை. மழை நின்றபோது நானும் முதல் தளத்தில் வசிப்பவரும், ஆர்.வி-யும் நகரத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம். 

பாய் கடை பூட்டிக்கிடக்க ஷட்டர் உள்ளும் வெளியும், மூன்று அடிக்கு மழை நீர் நின்றிருந்தது. குப்பைத்தொட்டிகள் மழையில் படகுபோல நின்றிருந்தன. நகரத்தை சுடுகாடாக மாற்றிவிட்டிருந்தது மழை. குடிசை, பங்களா என்று மழை எந்தப் பாகுபாடும் பார்க்க வில்லை. எங்கும் மரண ஓலம். பிரதான சாலையில் ஆறுபோல வெள்ளம் ஓடியது. தெருக்களில் இருந்து வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட வாகனங்கள், பிரதான சாலைகளில் குப்பைமேடாக ஒதுங்கிக் கிடந்தன. எல்லா தெருக்களிலும் இடுப்பு அளவு நீர் நின்றது. வீடுகளைப் பூட்டிக்கொண்டு மக்கள் ஊரைக் காலிசெய்து போனார்கள். பூனைகள் நீரில் விறைத்துச் செத்துக்கிடந்தன. கடைகளில் எந்தப் பொருட்களும் இல்லை. பால்பாக்கெட், குடிதண்ணீர், காய்கறிகள், டார்ச்லைட்கள், மெழுகுவத்திகள்... எவையும் இல்லை. ஏ.டி.எம் மையங்கள் வேலை செய்யவில்லை. காவல் துறையினர் இல்லை. பேருந்துகள் வரவில்லை. திறந்திருந்த சில கடைகளிலும், கிடைக்கும் சொற்பப் பொருட்களை வாங்க மக்கள் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். எங்களுக்கு எதிரே ஒரு பெரியவர் வெளிறிய முகத்தோடு சென்றார். அவரது தோளில் ஒரு சிறுமி அழுதபடி உட்கார்ந்திருந்தாள். `இந்த நகரம் அழியப்போகிறது. சீக்கிரம் இங்கிருந்து போங்க’ என்று யாரோ சொன்னார்கள்.

p154h.jpg

நாங்கள் எங்கு செல்வது என்று தெரியாமல், இடுப்பு அளவு நீரில் நடந்தோம். ஒரு பல்முனை வளாகம் அருகே நடந்துசென்றபோது, அங்கு நாங்கள் பார்த்த காட்சி திகைக்கவைத்தது. வெள்ளத்தில் எங்கு இருந்தோ அடித்துவரப்பட்ட நாற்பது ஐம்பது நாய்கள் உடல் உப்பி மிதந்தன. வெகுநேரம் நீருக்குள் கிடந்ததால், சடலங்கள் உருமாறிக்கிடந்தன. மனதுக்குள் சின்ன மின்னல் வெட்ட, டால்மேஷன் நாயின் உடல் ஏதாவது தட்டுப்படுகிறதா என்று பார்த்தேன். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நீரில் மிதந்துகொண்டிருந்த எல்லா நாய்களும் ரப்பர் பொம்மைகள்போல கிடந்தன. தெருநாய் எது, வீட்டுநாய் எது என்று அடையாளம் தெரியாமல், எல்லாம் கலந்து அழுகிக்கிடந்தன. துர்நாற்றம் அதிகரிக்க, எல்லாரும் கைக்குட்டையால் முகத்தை மூடியபடி கடந்து சென்றார்கள். அதற்குமேல் அங்கு நிற்பது ஆபத்து என்றும், நோய்த்தோற்று வரும் என்றும் ஆர்.வி சொன்னார். நான் மிகுந்த சோர்வுடன் அங்கு இருந்து சவத்தைப்போல, எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் வீடு திரும்பினேன்.

அடுத்து வந்த சில நாட்களில் வெள்ளம் வடிந்து, நகரம் இயல்பு நிலைமைக்குத் திரும்பியது. ஏசுநாதர் அவதரித்த நாள் வந்தது. வானத்தில் நட்சத்திரங்கள் தோன்றின. பிறகு புத்தாண்டு பிறந்தது. அந்த நாயை மறந்து, நான் எனது அன்றாட அலுவலக வேலைகளில் முழ்க ஆரம்பித்தேன். எங்கள் நகரத்தில் நடந்த வேறு ஏதேதோ பிரச்னைகளில், ஊருக்குள் வெள்ளம் என்று, ஒன்று வந்ததைக்கூட மறந்துபோனார்கள். நான் கேவலம் ஒரு நாயைத்தானே மறந்தேன்?

இந்தக் கதையில் ஒரு விஷயத்தை மட்டும் நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அன்று அந்தப் பெரும் வெள்ளத்தில் அவ்வளவு தெருநாய்கள் இறந்துபோனதைப் பற்றியும், மாநகராட்சியினர் பொக்லைன் வைத்து நாய்களை அள்ளிச் சென்றதைப் பற்றியும், ஒருவரிகூட மறுநாள் வெளியான எந்தச் செய்திப் பத்திரிக்கையிலும் இடம்பெறவில்லை. அவ்வளவு நாய்களையும் அள்ளி, எங்கு சென்று கொட்டினார்கள் என்றும் தெரியவில்லை. நடந்தது எல்லாம் கனவுபோல புகைமூட்டமாகத் தெரிகிறது. இந்தக் கதையை, நான் எங்கேயாவது சொன்னால் யாரும் நம்பக்கூட மாட்டார்கள்!

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வறுமையில் பிறந்து வறுமையில் இறந்து போவது பெரிய விடயமில்லை , வசதியாய் வாழ்ந்து கெட்டு போவதுதான் கொடுமையானது...!  இந்தக் கதா பாத்திரம் கூட அந்த நாய்க்கு உதவக்கூடிய நிலையில் இருந்தும் உதவ முன்வரவில்லை ...., இதுதான் யதார்த்தம்....!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நமலி" என்டால் என்ன அர்த்தம்? நாயா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.